மூளைக்கு ரொம்ப வேலை கொடுத்து பாத்துட்டேன்! ஹ¤ஹ¤ம்..சார் கண்டுக்கவே மாட்றார்! மூளை சார், மூளை சார் எழுதி ஒரு வாரத்துக்கு மேலே ஆச்சு சார், என்னோட ரசிகர்களுக்கெல்லாம் என்னோட ப்ளாக் படிக்காம [இதையெல்லாம் கண்டிச்சி திட்றவங்க கமெண்ட்ஸ்ல போடாம எனக்கு தனியா மெயில் அனுப்பும்படி இரு கரம் கூப்பிக் கேட்டுக் கொள்கிறேன்!] சோறு தண்ணி இறங்காது சார்..இப்படி என்னன்னவோ சொல்லி பாத்துட்டேன்! நல்லா அடிச்சி போட்ட மாதிரி படுத்துருக்காரு! இதனால் சகல ஜனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், இந்த வாரம் என்னால எதுவும் புதுசா எழுத முடியலை..[யாருய்யா அங்கே கை கொட்டி சிரிக்கிறது?] அப்பாடா! என்று பெருமூச்சு விட்டவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி! புதுசா ஒன்னும் எழுதலையே தவிர, பழசான ஒன்னை புதுசா காப்பி அடிச்சி வச்சிருக்கேன்! பாரதியோட "வீணையடி நீ எனக்கு" பாட்டு..இது ரொம்ப ஈஸியா இருக்கே..நம்மளும் எழுதலாமேன்னு எழுதி பாத்தேன்! நிறைய எழுதலாம்னு நினச்சேன்..ஒன்னும் வர்லை! இது எப்பவோ எழுதுனது..[அதான் உங்களுக்குத் தெரியுமே, இந்த வாரம் மூளை சார் கோமால போயிட்டாருன்னு?] இதுல ஒரு basic concept உனக்கு அவ ஏதாவதா இருக்கனும், நீ அவளுக்கு ஏதாவதா இருக்கனும்! that's it...கவிதை ரெடி!! அகரமடி நீ எனக்கு நிலவடி நீ எனக்கு காமமடி நீ எனக்கு மழையடி நீ எனக்கு வித்தையடி நீ எனக்கு அன்புச் சின்னமடி நீ எனக்கு வானமடி நீ எனக்கு எங்கே யாரையும் காணோம்?
நம்ம ஆள் இப்படி சருக்கிட்டாரே என்று நினைப்பவர்க்கு ஒரு நல்ல செய்தி!!
சூடும் ஆரமடி நானுனக்கு
நீளும் இரவடி நானுக்கு
கொல்லும் காதலடி நானுனக்கு
மண்னின் வாசமடி நானுனக்கு
வீழும் வேட்கையடி நானுனக்கு
ஆசை முத்தமடி நானுனக்கு
சுவாசமடி நானுனக்கு
எச்சரிக்கை: உங்களுக்குத் தலை சுத்தினா நான் பொருப்பல்ல!!
அவன் ரொம்பவே வித்தியாசமானவன். அவனைப் பொருத்தவரை எல்லாவற்றிலும் தன்னை வித்தியாசமாய் காட்டிக் கொள்ள வேண்டும்! எவ்வளவு பெரிய
கூட்டத்திலும் தான் தனித்தன்மை வாய்ந்தவன் என்பதில் அவன் உறுதியாய் இருந்தான். சில சமயம் அவன் கிருக்கனோ என்று கூட உங்களுக்குத் தோன்றும். அப்படி ஒரேடியாய் நாம் முடிவு கட்டி விடவும் முடியாது! உங்களுக்கு எப்படி உணர்த்துவது என்று எனக்குப் புரியவில்லை! சரி அவன் செய்த சில எதிர்பாராத செயல்களை சொன்னால் உங்களுக்கு ஓரளவுக்கு புரியலாம்!
பஸ்ஸில் சென்று கொண்டிருப்பான்! திடீரென்று முன்னே இருப்பவரைக் கூப்பிட்டு ஸாரி சொல்வான். அவர் புரியாமல் விழிப்பார்! இவன் ஜன்னலை நோக்க ஆரம்பிப்பான்! அவர் திரும்பியதும் மறுபடியும் அவரை அழைத்து ஸாரி சொல்வான்! அவர் எதுக்குப்பா ஸாரி என்று பொறுமையிழந்து கேட்பார். அதற்கு அவன் இல்லை சார், உங்களுக்கு என்னை தெரியாது..ஆனா எனக்கு உங்களை நல்லாத் தெரியும். உங்களுக்கே தெரியாம நான் ஒரு தப்பு பண்ணிட்டு இருக்கேன்! எனக்கு அது தப்புன்னு தெரிஞ்சும் பண்றேன்! ஆனா என்னால பண்ணாம இருக்க முடியலை. நீங்க எதையும் மனசுல வெச்சுக்காதீங்க சார் என்பான். அவர்
பையைத் தடவி தன் பர்ஸ் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வார். சே! சே! அந்த மாதிரி சீப்பான தப்பு இல்லை சார், நல்லா யோசிச்சு பாத்து உங்களுக்கு ஞாபகம் வர்றதுக்குள்ள நான் இறங்கிக்கிறேன் சார் என்று சொல்லி அடுத்த ஸ்டாப்பில் இறங்கிக் கொள்வான்! அவர் பாவம் தன் பெண்ணை லவ் பண்றானோ ரேஞ்சுக்கு யோசித்து பாவம் மண்டை காய்ந்து கொண்டிருப்பார்!
இப்படியே அவன் வேறொருவரிடம் பஸ்ஸில் ஸாரி கேட்டுக்கொண்டே இருந்ததில் வெறுத்துப் போய் அவர் சரிப்பா மன்னிச்சி விட்டுட்டேன். போதுமா என்றார். அதற்கு இவன் ஏன் சார் நான் தான் எந்தத் தப்பும் செய்யலையே, நீங்க எதுக்கு என்னை மன்னிக்கனும் என்று கேட்பான்! இப்படி படுத்துரதுக்குன்னே அந்த மாதிரி நோஞ்சான் ஆசாமிகளையே புடிப்பான்! பாவம் அவர்கள்...
இன்னொரு கொடுமையான விஷயம் பஸ்ஸில் யாராவது தூங்கிக் கொண்டே வந்தால் போதும், அவர்களை எழுப்பி ஏன் சார் நீங்க லாஸ்ட் ஸ்டாப்ல இறங்கப் போறீங்களா என்று கேட்பான்! ஆமா ஏன் கேட்குறீங்கன்னு அவர் கேட்டா, இல்லை எனக்கு உட்கார இடம் கிடைக்காதே நான் அடுத்த சீட்டுக்குப் போறேன்! என்று சொல்லி விட்டு அடுத்த சீட்டுக்கு போய் விடுவான், அவர் மறுபடியும் தூங்க ஆரம்பித்தவுடன் மறுபடியும் தட்டி எழுப்பி "தாங்க்ஸ் சார்" என்பான்! அதுக்கப்புறம் அவர் தூங்குவார்னு நினைக்கிறீங்க?
ரோட்டில் போகும் முன்பின் பார்க்காத பெண்ணிடம் உங்க பேர் என்ன என்று ஆரம்பிப்பான். அது உங்களுக்கு எதுக்குன்னு அந்த பொண்ணு கேட்டா "என்னங்க? பேர் தெரியாமயாடா லவ் பண்றேன்னு பசங்க கிண்டல் பண்றாங்கல்ல" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போடுவான்!! அவள் அதிர்வதைப் பார்த்து, ஐய்யய்யோ சும்மா சொன்னேங்க சத்தியமா நான் உங்களை லவ் பண்ணலை, அப்புறம் உங்க friend என்னை சும்மா விடுவாளா என்பான்! அவள் புரியாமல் இவனைப் பார்ப்பாள். என்னங்க இன்னுமா புரியலை, என்ன நீங்க போங்க!! என்பான். அவளும் மாலாவோட.... என்று இழுப்பாள்! அப்பா!!! இவ்வளவு நேரமா என்று
ஒரே போடாகப் போடுவான்! அப்படி அந்த பெண் சொல்லவில்லையென்றால் என்ன செய்வான் என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது..அவன் 10 பெண்களிடம் கேட்டால் ஒரு ரெண்டு பெண் தான் இந்த பதிலைத் தரமாட்டார்களாம்..இப்படியே அவன் பல பேரை friend பிடித்து வைத்திருந்தான்னா பாத்துக்குங்க!
காலேஜில் யாராவது பெண் இவனை ராக்கி கட்ட வந்தால், அவள் வந்து பக்கம் நின்றவுடன் அவள் கண்ணோடு கண் வைத்து ஐ லவ் யு என்பான்!
இப்படிப் பட்ட ஒருவனோட வாழ்க்கையில திடீர்னு ஒர் அதிர்ச்சிகரமான விஷயம் நடந்தது!!
அட வாங்க சார், இவ்வளவு நேரமா வர்றதுக்கு..என்ன கதை முதல்ல இருந்தா..சொல்லிட்டா போச்சு!!
அவன் ரொம்பவே வித்தியாசமானவன்.....அவனைப் பொருத்தவரை எல்லாவற்றிலும் தன்னை வித்தியாசமாய் காட்டிக் கொள்ள வேண்டும்!...................................
எழுத ஆரம்பிக்கும்போது இதன் கரு என்னுடைய ஒரு நொடி எண்ணமாக இருந்தது..அது வளர்ந்து இந்த நிலையை எட்டி உள்ளது!
இது ஒரு வரிக் கதை இல்லை
இது sudden ficationa? இல்லை
இது ஒரு கட்டுரையா? இல்லை
இது சுயசரிதையா? இல்லை
ஒரு கவிதையை உரைநடை படுத்த முயற்சிக்கிறாயா? இல்லை!
நான் எழுதி இருக்கும் இந்த பத்திகளுக்கு என்ன பெயர் வைப்பது என்றே எனக்குத் தெரியவில்லை..அதையும் உங்களிடமே விடுகிறேன்! பல எழுத்தாளர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்!! ஏதாவது எழுதுங்கள் என்று!! அப்படி ஒரு முயற்சி தான் இது..
திடீரென்று அவனுக்கு அந்த பயம் வந்தது..அதை பயம் என்று சொல்ல முடியாது! அதை எப்படி எடுத்துக் கொள்வது என்று அவனுக்குப் புரியவில்லை. காலையில்
எழுந்து கண்ணாடி பார்க்கும் போது முதன்முதலாய் தோன்றியது அது. "அட, நம்ம hero மாதிரி இருக்கோமே" என்ற நினைவைத் தொடர்ந்து வந்தது அந்த நினைவு! அந்த கன நேர நினைவை அவனால் ஏனோ அலட்சியப்படுத்த முடியவில்லை. அதை மறுபடி மறுபடி யோசித்துப் பார்த்தான். அது நடந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொண்டே இருந்ததால் அந்த நினைவு இவனிடம் நெருக்கமாகி இருக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். இப்பொழுது
அதை நினைத்தால் அவனுக்கு எரிச்சல் வருகிறது. அவன் மீதே அவனுக்கு கோபம் வருகிறது..ஏன் தேவையில்லாததைப் பற்றி இவ்வளவு யோசித்தோம் என்று அவனே அவனைத் திட்டிக் கொள்கிறான்! ஏனோ அவன் படும் பாட்டை அவனுடைய மனசாட்சி ரசித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறு எதைப் பற்றியோ யோசித்துக் கொண்டிருக்கும் போது, "இல்லை, நாம் இதைப் பற்றி யோசிப்போம்" என்று எடுத்துக் கொடுத்து அவனை எரிச்சல் படுத்துமா? மனம் ஒரு குரங்கு என்று இதற்குத் தான் சொன்னார்களோ, அவனுக்கு என்னமோ அவன் மனம் ஒரு குரங்கல்ல..ஒரு குரங்குக் குடும்பமே தனக்கு மனமாய் வாய்த்திருப்பதாய் அவனுக்குப் பட்டது! அது தன் தோள்களிலும், தலையிலும் ஏறி உட்கார்ந்து தன்னைப் பார்த்து நகைப்பதாகத் தோன்றியது!
எனக்கு அது உறுதி, எனக்கும் கட்டாயம் அது நடக்கும் என்று தெரியும், ஏதோ நான் தெரியாமல் அதைப் பற்றி யோசிக்க ஆசைப்பட்டேன், என்னை விட்டு விடு என்று கெஞ்சினான். அது அவ்வளவு சீக்கிரத்திலா மசிந்து விடும். மாறாக இவனை நோக்கி எள்ளி நகையாடியது. ஏய், போச்சுடீ, அது உனக்கு நடக்கும்
பாரு..என்று அவனுக்கு பூச்சி காட்டியது. ஐய்யய்யோ அதற்குள் நாம் ஏதாவது உறுப்படியாய் செய்தாக வேண்டுமே என்று அவனுக்கு எண்ணத் தோன்றியது! அது அவனுடைய நிழல் வரை வந்து விட்டதாயும், ஒரு சிறிய காலத்திற்குள் அது அவனைப் பிடித்து விடுவதாயும் அவனுக்குத் தோன்றியது.
இதை 2 வகையாக முடிக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது!!
முடிவு 1:
இனி இதை நம்மால் ஜெயிக்க முடியாது, ஒரு மனோதத்துவ நிபுணரிடம் போவது தான் சரி என்று அவனுக்குப் பட்டது. இதுவும் அந்த குரங்குக் கூட்டத்திலிருந்த ஒரு குரங்கு தான் அவனுக்குச் சொன்னது..அது நல்ல குரங்கு போலும்!! வழியெங்கும் அந்தக் குரங்குகள் கும்மாளம் போட்டுக் கொண்டே வந்தன!! அவன் அந்த
நல்ல குரங்கை அந்த கூட்டத்தில் விடாமல் தேடிக் கொண்டிருந்தான்! ஆனால் அது எப்போதேனும் ஒரு முறை "வழியில் இருக்கும் அழுக்குப் பிச்சைக்காரனைப் பார்த்தோ, சாலை கடக்கும் வயதான கிழவியைப் பார்த்தோ இவனிடம் அவர்களுக்காக பரிதாபப்பட வந்து போய்க் கொண்டிருந்தது!! அது என்ன செய்யும், பாவம் அந்த ஒரு நல்ல குரங்கின் எதிரிகளாய் ஒரு கூட்டமே இருக்கிறதே.. சில சமயங்களில் அவை போடும் இரைச்சலில் நல்ல குரங்கு என்ன சொல்கிறது என்றே அவனுக்குப் புரிவதில்லை!! அவனுக்கு நல்ல குரங்கிடம் பிடிக்காத ஒரு விஷயம் அது சீக்கிரமே தன் தோல்வியை ஒப்புக் கொள்கிறது!! இப்படி எல்லாம் அசை போட்டுக் கொண்டே அங்கு போய் சேர்ந்தவனுக்கு ஒரு ஆச்சர்யாம் காத்திருந்தது...
உங்களுக்கே இன்னேரம் புரிந்திருக்கும்.....ஆம், அந்த மனோதத்துவ நிபுணருக்கும் அது நேர்ந்திருந்தது!!
முடிவு 2:
அவன் அதுகளிடம் பேசிப் பேசி ஓய்ந்து விட்டான்! குரங்குகள் என்றைக்கு மனிதன் பேச்சைக் கேட்டது என்று அவனுக்கும் புரியத் தான் செய்தது..
ஒருநாள் திடீரென்று, ஒரு வேளை நமக்கு பைத்தியம் பிடிக்கிறதோ என்ற சந்தேகமும் அவனுக்கு வந்தது! "இல்லை, இல்லை..இதைப் பற்றி நான் அதிகம் யோசிக்கப் போவதில்லை, இதுவும் அந்த குரங்குகளின் வேலை தான்!!" என்று அவன் நினைத்துக் கொண்டான்! அப்படி அவன் மீறி யோசித்தால் அது அவனை உண்மையிலேயே பைத்தியம் ஆக்கி விடும் என்று அவன் உறுதியாக நம்பினான்! ஆகவே நீங்களும் அதைப் பற்றி நிறைய யோசிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்!
இப்பொழுதெல்லாம், அந்த நினைவு வந்தாலே அவன் மாறாக "சிம்ரனை" யோசித்துக் கொள்வதாய் கேள்வி!!
நள்ளிரவு!
பெரிய மாடு ஒன்று சடசடவென மூத்திரம் பெய்வதைப் போல பெரும் சத்தத்துடன் மழை பெய்கிறது.
வழக்கம் போல் இன்றும் late ஆகி விட்டது. ஒரு வழியாய் சாலையில் என் வண்டியில் வழுக்கிக் கொண்டு என் வீடு சேர்ந்தேன். வண்டியை நிறுத்தியவுடன் தான் அது துல்லியமாய் கேட்டது! நான் என் வீட்டு கேட் நோக்கிப் போகிறேன். அந்த சத்தம் மிக நெருங்கி விட்டதாக உணர்வு. யாரோ ஒரு ப்ரகஸ்பதி நள்ளிரவு 12:00 மணிக்கு அலாரம் வைத்திருக்கிறான். என் வீட்டில் தற்போது கட்டட வேலை நடப்பதால் watch man என் வீட்டின் veranda வில் குடித்தனம் நடத்துகிறார். அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய அருகாமையில் தான் அந்தச் சத்தம் கேட்கிறது. இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. நான் என் கையிலிருந்த tube light ஐ [அதாங்க 2100!!] போடுவதற்கும் என் நண்பன் கதவைத் திறப்பதற்கும் சரியாய் இருந்தது. அவன் மிகவும் எரிச்சலுடன் "டேய் first அதை off பண்றா! அப்போ இருந்து தூங்க விடாம!" அவன் veranda light போட்டவுடன் அந்த குட்டி கடிகாரத்தைக் கண்டு பிடித்தோம். அவன் அதை கையில் எடுத்தவுடன் அது கப்சிப் ஆகி விட்டது. [கவனிக்க: watch man இன்னும் அயர்ந்து தூங்குகிறார்!] அவன் வெறுப்புடன் "நல்ல அலாரம்!" என்று இருந்த இடத்தில் வைத்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தோம்.
அவன் போய் தூங்கப் போய் விட்டான். நான் என் நனைந்த ஆடைகளை மாற்றிக் கொண்டு அப்பாடா என்று தூங்கப் போனேன். தலை சாய்த்ததும், அது வரை காத்திருந்தது போல அந்த சத்தம் மறுபடியும் ஆரம்பித்தது..அடடா, இது நம்மை தூங்க விடாது போலிருக்கிறதே என்று நான் எழுந்தவுடன் என் நண்பனும் எழுந்து விட்டான். மறுபடியும் veranda light போட்டு, அதை இந்த முறை நான் கையில் எடுத்தேன். [கவனிக்க: watch man இன்னும் அயர்ந்து தூங்குகிறார்!] கையில் எடுத்தவுடன் மறுபடியும் அதே போல் சமத்தாய் கப்சிப்!! "இது ஆவுரதில்லை" என்றான் என் நண்பன். நீ உள்ளே கொண்டு வா, என்று சொல்லி இருவரும் சேர்ந்து battery ஐ எடுத்து விட்டோம். ஏதோ ஒரு சாதனை செய்தது போல இருவரும் சிரித்துக் கொண்டே படுக்கச் சென்றோம்! இருட்டில் அந்த கடிகாரம் என்னைப் பார்த்து "என் சத்ததை நிறுத்திட்டே இப்போ இந்த சத்ததை என்ன செய்வே?" என்று கேட்பது போலிருந்தது!! என்ன சத்தமா?
பெரிய மாடு ஒன்று சடசடவென மூத்திரம் பெய்வதைப் போல பெரும் சத்தத்துடன் மழை பெய்கிறது.
இதை நான் எழுத முக்கியமான இரு காரணங்கள்!
1. பேய் மழை தரும் சத்தத்தில் கூட நம்மால் நிம்மதியாய் தூங்க முடிகிறது, ஆனால் ஒரு சின்ன அலாரம் உண்டாக்கும் சத்தம் நம் தூக்கத்தைக் கெடுக்கிறது.
2. அலாரம் watch man க்கு மிக அருகில் இருந்தாலும் அவரால் நிம்மதியாய் தூங்க முடிகிறது! உள்ளே fan சத்தத்துக்கு நடுவே படுக்கும் நம்மால் தூங்க முடியவில்லையே! [Important Note: இந்த வாக்கியத்தை படிக்கும் போது கண்டிப்பாய் சிவாஜி தோரணையில் படிக்கக் கூடாது!!!]
ஒரு மழை நாள்!
ஜன்னலின் வழியே மெல்லிய சாரலோடு ஒரு குளிர் காற்று என் முகத்திலறைந்தது..கையில் சூடான coffee! அடிக்கடி பெயர் மறந்து போகும் வடநாட்டுக் கலைஞரின் சிதார் இசை டேப்பிலிருந்து காற்றில் தவழ்ந்தது. மழையின் பேரிரைச்சலுடன் அந்த சிதார் இசை கலந்தது, வெகு நாட்களுக்குப் பிறகு ஒன்று கூடிய இளம் காதலரை எனக்கு ஞாபகப் படுத்தியது. அது அந்த சூழலை மேலும் ரம்மியமாக்கிக் கொண்டிருந்தது..நான் நாற்காலியை ஆட்டிக் கொண்டே ஜன்னலின் வழியே மழை நனைக்கும் என் தெருவை ரசித்துக் கொண்டிருந்தேன்! "இங்கே நான் சுத்தம் செய்தால் உண்டு" என்று பொருமிக் கொண்டே வீட்டை சுத்தம் செய்யும் அம்மாவைப் போல் மழை பேரிரைச்சலுடன் தெருவை சுத்தம் செய்து கொண்டிருந்தது.. என் வீட்டுக்கு சற்று தள்ளி ஒரு மார்க்கெட் இருப்பதால் ஜன்னல் வழியே வருவோர் போவோரை வேடிக்கை பார்ப்பதே எனக்கு மிகவும் பிடித்தமான பொழுது போக்கு...
எத்தனை விதமான் மனிதர்கள்? ஒருவர் கூட மற்றவரின் சாயலில் இல்லையே..நான் பார்த்த வரை, தனியே செல்லும் பெரும்பாலோர் தனக்குத் தானே பேசிக் கொண்டே போகிறார்கள். ஒரு வேளை அவர்கள் பாடிக் கொண்டே போகிறார்களோ? ஜன்னலிலிருந்து பார்ப்பதால் எனக்கு அப்படித் தெரிகிறதோ என்னவோ? ஜன்னலில் நான் வேடிக்கை பார்க்க உட்கார்ந்து விட்டால் நான் கடவுள் என்று எனக்குத் தோன்றும். ஆண்டவன் நம்மை படைத்து விட்டு மேலே இருந்து நம்மைப் பார்த்துக் கொண்டு இருப்பதைப் போல், அவர்களுக்குத் தெரியாமல் நான் அவர்களைப் பார்த்து கொண்டிருக்கிறேன்..கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு சிலர் மேலே பார்த்து கடவுளே என்பது போல் ஒன்றிரண்டு பேர் நான் பார்ப்பதை பார்ப்பார்கள். அவ்வளவு தான்..இந்த உவமைக்கு மிகப் பொருத்தமான் இடம் மொட்டை மாடி தான்!!
ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் சிரிக்கிறார்கள் என்பது என் தாழ்மையான கருத்து..2 பெண்கள் சேர்ந்து போனால் என் ஜன்னலைக் கடப்பதற்குள் அவர்கள் இரண்டு முறை "கழுக்" கென்று சிரித்து விடுவார்கள்! "இன்னைக்கு என்னடி லேட்டு" என்று கேட்டு விட்டு சிரிப்பார்களோ? எப்படியோ மழை, மழலை, கவிதை, தென்றல், இயற்கை, நிலவு இந்த வரிசையில் வருவது பெண்களின் சிரிப்பு! அது கவித்துவமானது..இந்த சிதார் இசைக்கும் அவர்களின் குறுநகை எழுப்பும் சத்தத்திற்கும் நிறைய வித்தியாசம் இல்லை என்றே நினைக்கிறேன்.
குனிந்து மேலே பார்த்தேன்..வானம் எதிர் வீட்டுக் கண்ணன் வீட்டின் மொட்டை மாடியில் முடிந்து விடுவதைப் போலிருப்பதை நினைத்து எனக்குள் சிரித்துக் கொண்டேன்..அதற்கு வானம் ஒரு இடிச்சிரிப்பு சிரித்து "அடேய் மடையா..நீ ஒரு வட்டத்திற்குள்ளிருந்து என்னைக் காண்கிறாய், நான் விசாலமானவன் என்று உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை" என்றது..மேலும் "கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு" ஸ்டைலில் மேகங்கள் கங்கனம் கட்டிக் கொண்டு மழை ஊற்றிக் கொண்டிருந்தது..
தெருவில் செல்வோரில் பாதிக்கு மேற்பட்டோருக்கு மழையை பிடிக்கவில்லை..சிலர் புலம்பிக் கொண்டும், சிலர் முகத்தை அஷ்ட கோணலாக்கிக் கொண்டும் சென்று கொண்டிருந்தனர்..குழந்தைகள் மட்டும் தான் மழையை அனுபவிப்பதாகத் தோன்றியது. அவர்களின் முகத்தில் தான் மழையைக் கண்டதும் உற்சாகம் தெரிகிறது. மனிதன் தான் வளர்ந்ததும் எவ்வளவு மாறி விடுகிறான்!! எத்தனை தேவை இல்லாத பயங்கள் அவனைத் தொற்றிக் கொள்கிறது..மழையைக் கண்டதும் இவர்கள் நினைவுக்கு முதலில் வருவது VICKS, D-COLD தானோ? இந்தக் கவலையால் குழந்தைகளையும் இவர்கள் நனைய விடுவதில்லை.."டேய் வாடா இங்கே..தலை துவட்டு, அப்புறம் சளி புடுச்சுடும்" குழந்தைகளைக் கண்டால் எல்லோருக்கும் பிடிக்கும்..சளிக்கும் பிடிக்கிறது! எனக்குத் தெரிந்து மழையில் நனைந்ததால் இதுவரை எனக்கு சளி பிடித்ததில்லை..இன்றும் வழக்கம் போல மழையில் தொப்பலாய் நனைந்து தான் வந்தேன்..அம்மாவும் வழக்கம் போல அர்ச்சனை செய்தாள்! வாழ்வில் இப்படி எத்தனையோ எழுதாத சட்டங்கள் எல்லா வீட்டிலும் இருக்கத் தான் செய்கிறது.
மழையைப் பிடிக்காதவர்கள் அதனுடன் சமாதானம் பேசாமல் ஒரு கருப்புக் குடையுடன் மழையை எதிர்த்தால், மழை எப்படி சமாதானமடையும் சொல்லுங்கள்? "மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம், ஒரு கருப்புக் கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்!" என்ற வைரமுத்துவின் கவிதை நினைவுக்கு வந்தது.. மனுஷன் ஒன்னு புதுசா யோசிக்க விட மாட்றாரே..எல்லாத்தையும் இப்படி யோசிச்சி எழுதி வச்சுட்டாரேன்னு அழுத்துக் கொண்டேன்! அட சிதார் இசை நின்னுருச்சே..அதுக்குள்ள "A" side முடிஞ்சுருச்சா என்ன? சரி நான் போய் "B" side வச்சுட்டு வந்த்ர்றேன்! no no..நான் வர்றதுக்குள்ள நீங்க இந்த நாற்காலியிலே உட்கார்ந்துட்டா? idea!! இங்க என்னைத் தவிர யாராவது உட்கார்ந்தா ஆயிரம் பாவம்!! டஸ் புஸ்...[க்ராஸ் போட்டுக் கொண்டே!!]
[computer ல எல்லார் கையெழுத்தும் நல்லா தா ன்டா இருக்கும்..இந்த dialogeம் friend கிட்ட இருந்து சுட்டது தான்..ஹிஹி] இன்று இங்கே நான் வரைந்த படங்களில் சிலவற்றைப் பாருங்கள்!
குறிப்பு: இது அத்தனையும் computer ல் Flash, Photoshop ல் வரைந்த படங்கள்..DIGITAL ART ம்பாங்களே அதே தான்..
colorfulla இருக்கா?
எனக்கு மிகவும் பிடித்த ஓவியம்..
என்ன ஒன்னும் புரியலையா? ஒருத்தி தன் கைல குழந்தை வச்சுட்டு நிக்கிறா, நான் வரைஞ்ச லட்சணம் அப்படி!
online ல் picasso ஓவியங்களைப் பார்த்து copy அடித்தேன்..ஏதோ ஒரு சின்ன குழந்தை கிறுக்கியதைப் போலிருக்கிறது அந்த ஓவியம்! picasso இப்படிப் பட்ட
ஓவியங்களையும் வரைந்திருக்கிறார்!
இது எனக்கு மிகவும் பிடித்த ஓவியம்..ofcourse copy தான்..
எப்படி? படம் காட்டிட்டோம்ல?
காதல் எப்படி நமக்குத் தெரியாமல் உள்ளே சென்று ஒரு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமோ அதே போல் தான் இந்தப் படமும் என்னுள் எனக்கே தெரியாமல் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது!
நான் இங்கு படத்தைப் பற்றி பேசப் போவதில்லை..அதனால் எனக்கு விளைந்த விளைவுகளால் நீங்கள் படத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்!
Disclaimers: இதே போன்று உங்களுக்கும் ஆகுமென்று கட்டாயமில்லை..நான் கொஞ்சம் over தான்..
படம் பார்த்த மறுநாள் வண்டியில் office சென்று கொண்டிருந்தேன்..என் தம்பியை bus stop ல் விட்டுச் செல்வது வழக்கம். படத்தைப் பற்றி யோசித்துக் கொண்டே stop ஐ கடந்து போய்க் கொண்டிருந்தேன்..அவன் பின்னால் உட்கார்ந்து கதறிக் கொண்டிருந்தான்!! சுய நினைவு திரும்பி அவனை இறக்கி விட்டதும், என்னை கை நீட்டி ஏதோ சொன்னான்..நல்லவேளை helmet மாட்டி இருந்ததால் சரியாய் காதில் விழவில்லை!
இன்னொருமுறை வேறு வண்டியில் உட்கார்ந்து கொண்டு சாவி ஏன் உள்ளே போக மாட்டேங்குது என்று முழிக்கும் போது, டேய் நம்ம வண்டி அங்கே இருக்கு, யாராவது பாத்துரப் போறான் எறங்குடா என்றான்.................வேறு யார் சாட்சாத் என் தம்பி தான்..
தம்பியுடையான் படைக்கஞ்சான்!
அந்தப் படம் என்னுள் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்திற்கு இந்த இரண்டு உதாரணம் போதுமென்று நினைக்கிறேன்! இனி நீங்களே படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!!
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமன் போல்..மீண்டும் ஒரு sudden fiction கதை..
சூலமங்களம் சகோதரிகள் பக்கத்து கோயிலிலிருந்து தலையில் தட்டி எழுப்பினார்கள்! விடிந்து விட்டதா? அதற்குள்ளா? இப்போ தானே படுத்தேன்..திடீரென்று
நேத்து ராத்திரி நடந்தது ஞாபகம் வந்தது!! நினைக்கவே குஜாலா இருக்கே..எப்படி நான் இப்படி எல்லாம் பண்ணேன்? நான் சாதுவாச்சே..நேத்து ராத்திரி நீ
பண்ண கூத்தைப் பாத்தா உன்னை யாராவது சாதுன்னு சொல்வாங்களாடா? என்று மனசாட்சி திட்டியது..
மனசாட்சி அன்னாத்தே, இதெல்லாம் உன்னை பக்கத்துல வச்சுட்டு செய்ய முடியாது..நீ கொஞ்சம் ஓரங்கட்டிரு, ஆமாம் என்றேன்!
எல்லாம் அவன் பண்ண வேலை, அவனுக்கு அது தான் வேலையே..தெய்வாதீனமா எனக்கு இப்படி ஒரு friend..திடீர்னு நேத்து evening phone பண்ணி டேய்,
ரொம்ப நாளா ஏங்கிகினு கிடந்தியே, இன்னைக்கு night ஒரு 12:30 க்கு அப்பால அத்தெ ஓட்டிட்டு வர்றேன்..உன்னோட தாகம் எல்லாம் இன்னைக்கோட close
இன்னா? என்றான்..அவனும் அவன் தமிழும்!! எனக்கு தலை கால் புரியவில்லை...office இருந்து சீக்கிரமே கிளம்பி, எல்லாம் ரெடி பண்ணனும்ல? ஹிஹி..
அவனுக்காக wait பண்ணி பண்ணி தூங்கி போயிட்டேன்..கதவு தட்டும் சத்தம்..தூக்கி வாரி போட்டது..அவன் தான்..என்னைப் பார்த்து குறும்பாய் சிரித்தான்..கீழே
தான் நிக்குது..ஜமாய்னான்!!! அப்பாடா, ஒரு 1 மணி நேரம் பெண்டு கழண்ட்ருச்சுப்பா....
சிகெரட் கையை சுட்டது, oh flashback முடிஞ்சுட்டதா என்று பாத்ரூம் நோக்கிப் போனேன்! மனசில் இன்னும் பட்டாம்பூச்சி பறந்தது!!
பாத்ரூமைத் திறந்தேன்..எல்லாவற்றிலும் தண்ணீர் நிரம்பி வழிந்தது!! அந்த ஆண்டவானாப் பாத்து தான் எனக்கு தண்ணி லாரி ஓட்றவனை friend ஆ
அனுப்சிருக்காரு என்று ஒரு கும்பிடு போட்டு, "குத்தால அருவியிலே குளிச்சது போல் இருக்குதா?" ஹிஹி..குஷி வந்துட்டா நான் பாடுவேன்.ஹிஹிஹி...
ஒரு நல்ல கவிதை எழுத
முயற்சிக்கிறேன் - நான்
ஒன்பதாவது படிக்கும் போதிலிருந்து!
கவிதை எழுத சிறந்த களங்கள்
நிலவும், பெண்ணும்!
கவிதையும் பெண்ணும் ஒன்று!
நாம் கேட்கும் போது
அலட்டிக் கொள்வதும்
நாம் கேட்காத போது
அள்ளித் தருவதும்!
நல்ல கவிதை இல்லை என்று
நான் கிழித்துப் போட்டவைகளை
சேர்த்து வைத்திருந்தால்...
எப்படி கவிதை எழுதக் கூடாது
என்று எட்டாங்கிளாஸ்
பாடமாக்கியிருக்கலாம்!
என்னுடைய கவிதைகளை
படித்த தோழிகள், நான்
யாரையோ காதலிக்கிறேனென்றார்கள்!
இல்லை என்று மறுத்தும்...
என்னை யாரும்
காதலிக்கவில்லை!
சரியான வார்த்தைகள்
புணர்வதில் உருவாவது
ஒரு நல்ல கவிதை
நல்ல கவிதைகளை
படிக்கும் போது
வார்த்தைகள் மீது
எனக்கு கோபம் வரும்
வார்த்தைகள் எல்லோர்
பேச்சையும் கேட்பதில்லை
அது மகுடி ஊதும் பாம்பாட்டியிடம்
ஆடும் நாகம் போல் நல்ல கவிஞனிடமே
இசைந்து கொடுக்கிறது!
ஒரு நல்ல கவிதை எழுத
முயற்சிக்கிறேன் - நான்
ஒன்பதாவது படிக்கும் போதிலிருந்து!
என் அழகு காணாமல்
இன்னும் தூங்குகிறார்களே
என்று முகம் சிவந்த வானம்
இதோ இதோ என் வாழ்வு
முடியப் போகிறது என்று
ஏங்கும் பனித்துளி
இதோ பூக்கப் போகிறேன்
என்று கண்ணாமூச்சி
காட்டும் சாலையோர பூக்கள்
carbon monoxide கலக்காத
கற்பு நெறி மாறாத காற்று
சோம்பல் சுருக்கி
சிறகு விரித்து
கூட்டம் கூட்டமாய்
விதவிதமான கோணங்களில்
இரை தேடிப்
பறக்கும் பறவைகள்
ஈரத்தலையை துணியால்
சுற்றி, முகமெலாம் மஞ்சள் பூசி
நெற்றி நிறைய பொட்டிட்டு
மாக்கோலமிடும் என்குலப் பெண்கள்
இத்தனை சுகங்களையும்
ஈடு கட்டிக் கொள்கிறது
இந்த சண்டாளத் தூக்கம்!
silsila என்று ஒரு ஹிந்தி படம்..அமிதாப் பச்சன் நடித்தது!
அதில் ஒரு அற்புதமான பாடலை ஜாவேத் அக்தர் இயற்றியுள்ளார்! அந்த பாடலின் இடையில் அமிதாப்பின் குரலில் கீழ்கண்ட கவிதை ஒலிக்கும்! Just Beautiful!!ஹிந்தியிலிருந்ததை எனக்குத் தெரிந்த வரை மொழி பெயர்த்துள்ளேன்! தவறிருந்தால், நீங்கள் எடுத்துரைத்தால் திருத்திக் கொள்வேன்!!
இதோ அந்தக் கவிதை...
நானும் என் தனிமை அடிக்கடி
இப்படி பேசிக் கொள்வதுண்டு!
நீ இங்கிருந்தால் எப்படி இருக்கும்
நீ இதைச் சொல்வாய்
நீ அதைச் சொல்வாய்
நீ இந்தப் பேச்சைக் கேட்டு ஆச்சிரியப்படுவாய்
நீ அந்தப் பேச்சைக் கேட்டு எவ்வளவு சிரிப்பாய்
நீ இங்கிருந்தால் இது நடந்திருக்கலாம்
நீ இங்கிருந்தால் அது நடந்திருக்கலாம்
நானும் என் தனிமையும் அடிக்கடி
இப்படி பேசிக் கொள்வதுண்டு
இது இரவா - அல்லது
உன் கூந்தல் விரிந்து கிடக்கிறதா?
இது நிலாவெளிச்சமா - அல்லது
உன் பார்வைகளால்
என் இரவு சலவை
செய்யப்பட்டுள்ளதா?
இது நிலவா - அல்லது
உன் வளையலா?
இது நட்சத்திரங்களா - அல்லது
உன் முந்தானையா?
காற்றின் அலையா - அல்லது
உன் மேனியின் நறுமணமா?
இது சருகுகளின் ஓசையானது
நீ ஏதாவது முனுமுனுத்ததுபோலுள்ளது
எத்தனை நாட்களாய் நான்
இதைப் பற்றி யோசிக்கிறேன்
யாருக்கும் தெரியாமல்
எனக்கும் தெரியும் - நீ இல்லை
நீ எங்கும் இல்லை என்று!
ஆனால் இந்த இதயம் சொல்கிறது
நீ இங்கு தான் இருக்கிறாய்
இங்கு எங்கோ தான் இருக்கிறாய்
இதே நிலை இங்கும் உள்ளது
அங்கும் உள்ளது
தனிமையான இரவு - இங்கும் உள்ளது
அங்கும் உள்ளது
சொல்வதற்கு நிறைய உள்ளது - ஆனால்
யாரிடம் சொல்வேன்!
எத்தனை காலம் தான் - இப்படி
அமைதியாய் இருப்பது
இல்லை, இந்த அமைதியை சகிப்பது
இதயம் சொல்கிறது - உலகத்தின்
அத்தனை தடைகளையும்
கலைவோம்
உனக்கும் எனக்கும் இடையில்
உள்ள சுவரை இன்று உடைப்போம்
ஏன் இதயத்தில் வைத்து வெம்ப
வேண்டும்..
எல்லோருக்கும் சொல்வோம் - ஆம்
நாம் காதல் வசப்பட்டுள்ளோம்..
காதல் வசப்பட்டுள்ளோம்
காதல்...!
இப்போது இதே விஷயம் - இங்கும்
உள்ளது அங்கும் உள்ளது!
விஜயநகரத்துக்காரர் தன்னுடைய blogல் நான் எழுதிய பொதுவுடைமையை எதிர்த்து ஒரு நல்ல debate ஐ
தொடங்கி இருக்கிறார்! கலகம் பொறந்தாத் தான் நியாயம் பொறக்கும் என்கிற கதையாய்..
எல்லோரும் சந்தோஷமாய் இருக்கலாம் என்ற கொள்கையை பலர் எப்படி எதிர்க்கிறார்கள் என்றே எனக்கு புரியவில்லை! சரி அவருடைய கேள்விக்கு என்னால்
ஆன பதிலை சொல்கிறேன்! அதோடு என்னுடைய இரண்டாவது பகுதியையும் சேர்த்துக் கொள்கிறேன்!
1. நீங்க சொல்றதை நான் ஒத்துக்குறேன். எல்லாத்துக்கும் மனித உழைப்பு தேவை தான். எல்லோரும் ஒரே சமூகமா இருந்து உழைச்சா எல்லாத்துக்கு எல்லாம்
கிடைக்கும்ன்றது தான் என்னோட வாதம்! இப்போ நிறைய நிலம் சொந்தமா வச்சுருக்குறவங்க நிலத்துல பல பேர் கூலிக்கு வேலை செய்றாங்க! ஒன்னுமே
செய்யாம நிலம் வச்சுருக்குறவன் சந்தோஷமா இருக்கான்! நாள் பூரா கடுமையா வேலை பாக்குறவனுக்கு அதிகமா போனா கூலியா ஒரு 10 ரூபா கொடுப்பானா?
இந்த மனுஷன் அந்த நிலத்துக்கு சொந்தக்காரரை விட எந்த விதத்துல குறைஞ்சு போயிட்டான்? அவனும் 10 மாசம் தான்..இவனும் 10 மாசம் தான்..
2. ஆரம்பத்துல மனுஷனுக்கு என்னோட குடும்பம்னு ஒன்னும் இல்லை! எல்லோரும் ஒரு கூட்டமா சேர்ந்து வாழ்ந்தாங்க.."வால்கா முதல் கங்கை வரை" படிங்க!
அப்போ எல்லாரும் இஷ்டத்துக்கு sex வச்சுக்கிட்டாங்க! ஒருத்தனுக்கு ஒருத்திங்கிற conceptயே இல்லை..அதனால இவன் என் மகன் இவனுக்கு நம்ம சொத்து
சேக்கனும்ன்ற எண்ணமே இல்லை..கிடைச்சதை வச்சு வாழ்ந்தாங்க! ஆனா நீங்க சொல்றபடி ஒரு கூட்டத்துக்கும் அடுத்த கூட்டத்துக்கும் சண்டை இருக்கத்
தான் செய்தது..யார் வலியவர்கள், யார் யாரை அழிப்பது என்று பார்த்துக் கொண்டே தான் இருந்தார்கள். ஆனால் அன்று இருந்த மனித வர்கம் அல்ல
நாம்..நாகரிகம், கலாச்சாரம் என்ற ரீதியில் நாம் நிறைய முன்னேறி விட்டோம்? அப்படித் தானே?
3. இதை நான் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் ராகுல்ஜி சொல்லும்போது, அன்று ஒரு தச்சனுக்கு தன்னுடைய பொருள்கள் சொந்தமாய் இருந்தன..ஒரு
குயவனுக்கு மண்பாண்டம் செய்ய உதவும் கருவிகள் அவனுக்குச் சொந்தமாய் இருந்தன என்று சொல்லி முடித்து விட்டார்! நீங்கள் சொல்வது போல் அப்போதும்
நிலக்கிழார்கள், ஜமிந்தார்கள் இருக்கத் தான் செய்தார்கள். இதை நான் ஒத்துக் கொள்கிறேன்! ஆனால் இயந்திரங்களால் சுதந்திரத் தொழிலாளர்களின் கை
எப்படிக் கட்டப்பட்டது என்பதை நான் விலக்கி இருக்கிறேன்! முதலாளித்துவத்திற்கு தொழில் வளர்ச்சி ஒன்றே காரணம் என்பதை விட, அதுவும் ஒரு முக்கிய
காரணம் என்று கொள்ளலாம் என்று தான் நினைக்கிறேன்!
4. வேலை இல்லாத் திண்டாட்டத்திற்கு மக்கள் தொகையும் ஒரு காரணம் என்று நானே சொல்லி இருக்கிறேனே? மக்கள் தொகையை நீங்கள் கட்டுப்படுத்த
நினைத்தால் நீங்கள் பல மதங்களின் எதிரி ஆக வேண்டி வரும்! மக்களின் பல மூட நம்பிக்கைகளை போக்க வேண்டும்!
5. இதை நான் ஒப்புக்கொள்ளவே முடியாது...இன்றும் அன்றாடத் தேவைகள் கூட இல்லாமல் உலகில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? நம் இந்தியாவையே
எடுத்துக் கொள்ளுங்கள். ராகுல்ஜி இந்த நூல் எழுதும் போது 1946 என்று சொன்னேன்..அப்போது அவர் ஏதோ குஜராத்திலோ, பீகாரிலோ [சரியாய் ஞாபகம்
இல்லை] சில கிராமங்களில் வருடத்திற்கு 2 அல்லது 3 மாதங்கள் [அறுவடை சமயங்களில்..]தான் அந்த மக்களுக்கு தினமும் உணவு கிடைப்பதாகச்
சொல்கிறார்! மற்ற ஆண்டுகளில் அவர்கள் பட்டினியாய்த் தான் கிடந்தார்களாம்..இதை இறந்த காலத்தில் நடந்ததாய் எழுத வேண்டியதில்லை என்று நான்
நினைக்கிறேன்! சுதந்திரம் வாங்கி 50 வருடங்களுக்கு மேல் ஆனாலும் இன்றும் இந்தியாவில் பல கிராமங்கள் இப்படித் தான் இருக்கிறது..
6. அதே தான் நானும் சொல்றேன்! மண்ணாசை, உலக சந்தையில் தன்னுடைய நாடு தான் தன்னிகரற்று விளங்க வேண்டும் என்று ஒவ்வொரு நாடும் போட்டி
போட்டுக் கொள்கின்றன..ஒரு சமயத்தில் அது உலகப் போராய் முடிகிறது!!
7. நல்லதங்காள் காலத்தில் பொதுவுடைமை இல்லை, அதனால் தான் விபச்சாரம் இருந்திருக்கிறது..கொஞ்சம் யோசியுங்கள், எந்தப் பெண் தன் காம
இச்சைக்காகவா விபச்சாரி ஆகிறாள்? அவளுக்குத் தேவை பணம்..எல்லோருக்கும் உணவு, எல்லோருக்கும் இருக்க இடம் என்று வரும்போது எப்படிப்பா
விபச்சாரம் இருக்கும்?
8. மறுபடியும் மறுபடியும் நீங்க நம்ம நாட்டைப் பத்தியே பேசுறீங்க..பொதுவுடைமையைப் பொறுத்த வரை, உலகமே ஒரு கூட்டுக் குடும்பம்..எல்லொரும்
உழைப்பது, தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பை பெறுவது, சந்தோஷமாய் வாழ்வது! எல்லோருக்கும் எல்லாம் சொந்தம்னு சொல்லும்போது எப்படி sir ஊழல்
இருக்கும்?
9. if women becomes financially independent, அப்புறம் எப்படி பெண்ணடிமை இருக்கும்? அவளுக்கும் ஒரு ஆணுக்கு என்ன மரியாதை இருக்கிறதோ, அதே
அளவு மரியாதை தான் தருவோம் என்று கொள்ளும்போது பெண்ணடிமை என்பது கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து விடாதா? ஆணுக்குப் பெண் சலைத்தவளல்ல
என்று வெறும் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையில் வந்து விடாதா?
முடிவாக, இந்தியாவில் எங்கோ (1946)ல் ஒரு மாபெரும் பூகம்பம் வந்தது. நகரமே சுக்கு நூறானது..அதை மறுபடியும் நிர்மாணிக்க ஒரு தலைமுறை காலம்
ஆகும் என்று அரசு சொன்னது..ஏன்? அந்த நாட்டில் வேலை பார்க்க மக்கள் இல்லையா? தனிமங்கள் இல்லையா? TATA வின் ஒரு பெரிய தொழிற்சாலை
பக்கத்தில் தான் இருந்திருக்கிறது! பிறகு ஏன் இவ்வளவு காலம்? இங்கே அதற்கு முக்கிய காரணம் எல்லா சொத்துக்களும் ஒரு தனி மனிதனுக்கு சொந்தமாய்
இருப்பது. அவனுக்கு லாபம் இல்லையென்றால் அவன் எப்படி மற்றவர்க்கு கொடுப்பான்? அதனால் இவ்வளவு காலம் ஆகும்! இதே பொதுவுடைமை
இருந்திருந்தால், அது பொதுச்சொத்தாய் இருந்திருக்கும், அதிகம் போனால் சில மாதங்களுக்கும் இருந்ததை விட அழகான நகரமாய் மாற்றி இருக்க முடியும்!
முதலாளித்துவக் கொள்கை லாபத்தை மட்டுமே நோக்குகிறது என்பதை மேலே உள்ள உதாரணத்தின் மூலம் உங்களுக்குப் புரிந்திருக்கும்! இதற்கு நம்முடைய
அன்றாட வாழ்விலும் ஒரு உதாரணம் உள்ளது!!
உதாரணத்திற்கு உங்களுடைய அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை! மாதா மாதம் உங்களுக்கு 10,000 செலவாகிறது என்று வைத்துக் கொள்வோம்! இப்படி
எத்தனை மாதங்கள் நீங்கள் உங்கள் தாய்க்கு மனமுவந்து செலவு செய்வீர்கள்! ஒரு கட்டத்தில் உங்களுக்கே வெறுப்பு ஏற்படும், இப்படி ஒன்றும் தேறாமல்
செலவு செய்வதற்கு அவர்கள் நிம்மதியாய் போய்ச் சேர்ந்து விடலாம் என்று நிச்சயமாகத் தோன்றும்! அதை நீங்கள் மற்றவரிடம் மறைத்தாலும் உங்கள்
உள்ளத்தில் தோன்றத்தான் செய்யும்! இது உங்கள் தவறல்ல, பணம், லாபம் என்ற அரக்கர்கள் உங்களை அப்படிச் செய்யத் தூண்டுகின்றன! முதலாளித்துவத்தில்
பணம் ஒன்று தான் கடவுளாய் இருக்கிறது! இதே பொதுவுடைமையில் முதியோர்களை அரசே காக்கும்..என்னுடைய பணம், நான் இவ்வளவு செலவழித்தேன் என்ற
பேச்சுக்கே இடம் இருக்காது!
பொதுவுடைமைக் கொள்கை உலகம் அத்தனையும் ஒரு கூட்டுக் குடும்பம் மாற்றி விடுகிறது. இங்கே எனது, உனது என்று இல்லாமல் நமது என்று
மாறிவிடுவதால்..எந்தப் பிரச்சனையுமே இருக்காது என்று நான் சொல்லவில்லை..முதலாளித்துவ சமுதாயத்தை விட பிரச்சனைகள் குறைச்சலாய் தான் இருக்கும்
என்று நம்புகிறேன்!!
சரி எத்தனையோ வெட்டி பேச்சு பேசியாச்சு..கொஞ்சம் உருப்படியா ஏதாவது பேசுவோம்னு நினைக்கிறேன்!
சமீபத்துல ராகுல்ஜியோட பொதுவுடைமை தான் என்ன? படிக்க நேர்ந்தது. 100 பக்கங்கள் கொண்ட புத்தகம் தான்..அதற்குள் எத்தனை விதமான
சிந்தனைகள்! எவ்வளவு ஆழமான கருத்துக்கள்! 1946ல் இந்த புத்தகத்தை எழுதி இருக்கிறார்! ராகுல்ஜி என்பவர் விஞ்ஞானியாக இருந்து பிறகு சமுதாய
ஆராய்ச்சியில் இறங்கி விட்டார் என்று ஞாபகம். அவர் எழுதிய வால்கா முதல் கங்கை வரை படித்தவர்களுக்கு அவரைப் பற்றி நன்றாய் தெரிந்திருக்கும்.
அது ஒரு மனித ஆராய்ச்சி நூல்! வால்கா நதியில் ஆரம்பித்து மனித வாழ்க்கையை சிறுகதைகளாக அற்புதமாய் தந்திருப்பார்!
நிற்க
பொதுவுடைமை தான் என்ன? என்ற புத்தகத்தில் இவர் முதலாளித்துவத்தையும், பொதுவுடைமைக் கொள்கையையும் ஒப்பிட்டு எது சிறந்தது, அது எப்படி என்று
என்னைப் போன்ற பாமரர்களுக்கும் புரியும்படி விளக்கி உள்ளார்!
பொதுவுடைமை தான் என்ன?
இந்த உலகில் எல்லோரும் சமமானவர்கள்! இந்த பூமியில் எல்லோருக்கும் இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை எல்லாம் தாரளமாய் தான்
இருக்கிறது என்பதற்கு மாற்றுக்கருத்து இருக்காது என்று நினைக்கிறேன்! அதனால் எல்லோருக்கும் உணவு, உடை, இடம், கல்வி போன்ற அடிப்படை
உரிமைகள் கிடைக்க வேண்டும்..[இதுல நீங்க cable tv எல்லாம் சேக்கக் கூடாது ஆமாம்..]
சொல்வதற்கு எவ்வளவு சுலபமாய் இருக்கிறது..ஆனால் இது நடப்பதென்பது பகலில் அதுவும் சரியாக 12 மணிக்கு காணும் கனவாக மட்டுமே இருக்கிறது என்பது
வருத்தமான் விஷயம் தான்..
முதலாளித்துவம்?
குறைந்த தகுதி உடையவன், பணம் ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு தன் சொந்த லாபத்திற்காக பிறர் உழைப்பை சுரண்டுவது முதலாளித்துவம்.
முதலாளித்துவம் எங்கே எப்போது தொடங்கியிருக்கும்? மனிதன் வேட்டை ஆடித் திரியும் போது தொடங்கி இருக்க வாய்ப்பில்லை..அப்போது கிடைத்ததை
எல்லோரும் சமமாகவே பகிர்ந்து உண்டார்கள்! பிறகு எங்கே? எப்படி? ஏன்?
என்று நீராவியினால் இயங்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப் பட்டனவோ அன்று தொடங்கியது முதலாளித்துவம்!! அதுவரையில் ஒரு தச்சனுக்கோ, ஒரு
நெசவாளிக்கோ தன்னுடைய மூலப் பொருட்கள் சொந்தமாய் இருந்தது. அதை வைத்துக் கொண்டு அவனால் முடிந்ததை அவன் உற்பத்தி செய்து நிம்மதியாய்
வாழ்ந்து வந்தான்...இயந்திரங்களைக் கையாள மனிதன் கற்றவுடன் 4 பேர் செய்வதை ஒரே ஒருவன் அதே நேரத்தில் சிறப்பாய் செய்ய முடிந்தது!
உதாரணத்திற்கு
1 மனிதன் 4 மணி நேரத்தில் 12 கெஜம் துணி நெய்தால்தகுதி குறைந்த 1 மனிதன் இயந்திரத்தின் உதவியுடன் அதே 4 மணி நேரத்தில் 24 கெஜம் நெய்து விடுகிறான்!
முதலாளித்துவத்தால் வந்த வினைகள்
1. வேலை இல்லாத் திண்டாட்டம்
2. வறுமை
3. உலக மகா யுத்தங்கள்!
4. விபச்சாரம்
5. ஊழல்
6. பெண்ணடிமை
வேலை இல்லாத் திண்டாட்டம் உங்களுக்கு மேல் சொன்ன உதாரணத்திலிருந்து புரிந்திருக்கும்..4 பேர் செய்யும் வேலையை அவர்களை விட தகுதி குறைந்த
மனிதன் இயந்திரத்தின் உதவியால் அவர்களை விட வேகமாய் செய்து முடித்தான்..3 பேரின் வேலையை இயந்திரம் தன் ராட்சச கரங்களால் பறித்துக்
கொண்டது..
அதன் விளைவாய் வறுமை..பசி, பட்டினி!!!
இயந்திர ஆலைகளை இங்கிலாந்து முதலில் நிறுவியது..அப்போது உலக சந்தை மொத்தமும் அதன் கையில் இருந்தது..இங்கிலாந்தின் வளர்ச்சியைக் கண்ட
மற்ற ஐரோப்ப நாடுகள் மெல்ல தொழிற்சாலைகள் தொடங்க ஆரம்பித்தன..முதலில் உலக சந்தையில் நிறைய பொருள்கள் தேவைப்பட்டதால், தொழிற்சாலைகள்
வளர்ந்து கொண்டே இருந்தன..தொழிற்சாலைகள் பெறுகியதால், உற்பத்தி அதிகரித்தது..நாட்கள் செல்லச் செல்ல சந்தைகளின் தேவை குறையத் தொடங்கியது!
பல தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டன..அங்கே வேலை செய்து கொண்டிருந்த அத்தனை பேருக்கும் பசி, பட்டினி ஒன்றே சொந்தமானது!! இதற்கிடையில்
சந்தைகளுக்காக உலக நாடுகளிடையே பெரிய சண்டைகள் நிலவியது. அது உலக யுத்தத்தில் முடிந்தது..
"முதலாளித்துவம் இந்த உலகில் உள்ளவரை மகாயுத்தம் என்ற கத்தி உலகின் தலையில் எப்போதும் தொங்கிக் கொண்டே தான் இருக்கும்!!"
நாம் திரும்பிப் போக முடியுமா?
சரி இயந்திர வளர்ச்சியால் தான் இத்தனை பிரச்சனை.. நாம் இயந்திரங்களே இல்லாத நம் பழைய உலகிற்கே சென்று விடுவோம், அப்போது ஒரு பிரச்சனையும்
இருக்காது என்று சிலர் கருதுகிறார்கள், அது முடியவே முடியாது! ஏன் முடியாது?
1. மனிதன் என்று 4 கால்களால் நடப்பதை விட்டு 2 கால்களால் நடக்கத் தொடங்கினானோ, அன்றே இயந்திர வளர்ச்சி ஆரம்பித்து விட்டது.
2. இயந்திரங்களை 1, 2 நாட்களிலா கண்டு பிடிக்கிறார்கள்? விஞ்ஞானிகள் தம் வாழ்க்கை முழுதும் அர்ப்பணித்து நமக்கு பல அரிய கண்டுபிடிப்புகளை
தருகிறார்கள்! அதை எப்படி சுலபமாய் உதற முடியும்?
3. சரி அப்படிப் பட்ட அறிவாளிகளைக் கொன்று விடலாமா? அதுவும் முடியாது..அது அஹிம்சைக்கு எதிரானது.
4. சரி அவர்கள் கண்டுபிடிக்கட்டும், யாரும் உபயோகிக்க வேண்டாம், பிறகு அவர்களே வெறுத்து கண்டுபிடிப்பதை நிறுத்தி விடுவார்கள்! இங்கே நன்றாக
சிந்திக்க வேண்டும்..விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை அதிகம் யார் உபயோகிக்கிறார்கள்? முதலாளி வர்க்கத்தினர் தானே?
5. அவர்கள் சொல்வது போல் எல்லாம் துறந்து பழைய காலத்திற்கே செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்..அன்று இருந்த மக்கள் தொகை என்ன? இன்று
உள்ள மக்கள் தொகை என்ன? அது ஒரு பெரிய பிரச்சனையாய் இராதா?
இந்த அனைத்துக் காரணங்களைக் கொண்டு பார்க்கும் போது கற்காலத்திற்கு செல்வது இயலாது என்பது தெளிவாகிறது!
இந்த அனைத்திற்கும் பொதுவுடைமைக் கொள்கை எவ்வாறு வழி காட்டுகிறது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்!!
பெயர் பெற்றதாம்!
வீதிக்கு வீதி தெய்வமாம்!
அந்தப் பள்ளிக்கூடத் தெருவில்
கோயில் இல்லையா - அல்லது
தெய்வமே இல்லையா?
பள்ளிக்கூடத்தின் தீ அணைந்து விட்டது - விடாமல்
எரிந்து கொண்டிருக்கிறது
பெற்றோர்களின் வயிறு!
சில நாட்களாய் கருகிய வாசனையையே
சுவாசிப்பதாய் தோன்றுகிறது
அந்தக் கொடிய புகையை
நினைத்தே கண்கள் கலங்குகின்றன
உயிருக்குப் போராடும்
ஓசையே செவிகளில் ஒலிக்கிறது
குழந்தைகளைக் கதறவிட்டு விட்டு
தப்பித்து ஓடும் ஆசிரியர்களே
கண்களுக்குத் தெரிகிறார்கள்
மன்னிப்பது மனிதத் தன்மையாம்!
மன்னிக்கவும்! என்னால் அந்தக் கொடும்
தீயை மன்னிக்கவே முடியாது!
இனி யாரும் என்னிடம் "அக்னி பகவான்"
என்று சொல்லி வராதீர்கள்!
நான் கண் விழிக்கவும், கடிகாரத்தின் குருவி 8 முறை கூவவும் சரியாக இருந்தது. கலைந்த கூந்தலை அள்ளி முடிந்தேன். அவரை விலக்கி என் முந்தானையை எடுத்துக் கொண்டேன், மெல்ல முனங்கினார்..நேத்தும் தூங்க 2 மணி ஆயிடுச்சு, daily இதே கதை தான்..sir க்கு மூடு வந்துட்டா அவ்வளவு தான்...இந்த மனுஷனுக்குத் தான் என் மேல எம்புட்டு பிரியம், எல்லா ஆம்பளங்களும் இப்படியா இருக்காங்க? இவர் தான் office விட்டா வீடு, வீடு விட்டா office னு இருக்காரு..இந்த areaல அந்த மாதிரி பொண்ணுங்களுக்கா குறைச்சல், தலை எடுத்து பாக்க மாட்டாரே..அட இன்னைக்கு சனிக்கிழமையா? அப்போ இன்னைக்கும் இதே கூத்து தான். அப்படி என்னத்தக் கண்டாரோ அவருக்குத் தான் வெளிச்சம்.
ஒரு வழியாய் அவரை எழுப்பி office அனுப்பி வைத்தேன்.."5 மணி, 5 மணி..ரெடியா இரு, ரெடியா இரு..சினிமா போறோம்!" எனக்கு சிரிப்பு தான் வருது. அன்னைக்கு வேலை நல்லா ஓடுச்சி! அவரோட நெனப்பாவே வேலை செஞ்சதாலே அலுப்பே இல்லை..ஒரு வழியாய் 4, 4:30 போல நல்லா ஒரு குளியல் போட்டுகிட்டு [அவருக்கு அவர் வரும்போது குளிச்சி freshஆ இருக்கணும்..ஹிஹி] ஜம்முன்னு ரெடியாகி wait பண்ணிட்டு இருந்தேன்..மணி 5:00 ஆச்சு, காணோம், 6 ஆச்சு காணோம், சரி office ல வேலையா இருப்பாரோன்னு TV ஐ போட்டு உட்கார்ந்தேன்..9 மணி வரை வரவே இல்லை..office போன் போட்டா அவருக்கு பிடிக்காது..சரி வர்றப்ப வரட்டும்னு பேசாம இருந்தேன்..
10 மணி வாக்கில் சொக்கு வந்தான், எக்கோவ், உன் sir க்கு கொஞ்சம் change வேணுமாம், புதுப் பொண்ணு டீனா கிட்ட போயிட்டாரு, பெரியக்கா இந்த பார்ட்டியை அனுப்சுருக்கு..என்று இயந்திரத்தனமாய் சொல்லி விட்டு நகர்ந்தான்..புதுசாய் வந்தவன், சட்டை பொத்தான்களை கழற்றியபடி உள்ளே நுழைந்தான்..
sudden fiction கதையின் இலக்கணமே மொத்த கதையும் கடைசி ஒரு வரியில் தான் இருக்கும்..ஒரு எதிர்பாராத திருப்பம்..அட இதையா சொல்ல வர்றான், எதிர்பார்க்கவே இல்லையேன்னு தோனனும்..
என் கதையில் உங்களுக்கு ஆரம்பத்திலேயே இது தான் என்று புரிந்திருந்தால், என் கதை புட்டுகிச்சின்னு அர்த்தம்..
எழுத்தாணி கொண்டு ஏடு பதித்து, ஐய்யா என்று கதறுவோரை கருதாது..ஒரே மனதுடன் office ல் ஓபி அடித்து
ஒளவை பாடிய தமிழை நானும் பாடி...["ஓள" னாலே ஒளவை தானா? அந்தப் பாட்டிய விட்றுங்கப்பா!!]
இதோ இருக்கிறேன் இன்னும் உங்களின் இரக்கத்தின் விளைவாய், என்னுடைய
25 வது பதிவு!!!!!!!!!!
வாழ்த்துங்கள் வளருகிறேன்!
திட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன்!!
இ·துடன் என் இன்றைய பதிவை முடித்துக் கொள்கிறேன்...
என்னைப் பொறுத்தவரை காய்ச்சல் நம்மை கஷ்டப்படுத்துவதோடு ஒரு சிறு சந்தோஷத்தையும் தரத் தான் செய்கிறது.
குழந்தையாய் இருந்தால் school க்குப் போகத் தேவையில்லை
இளைஞர்கள் college க்குப் போகத் தேவையில்லை [ஆனால் co-ed ல் படிக்கும் மாணவர்களுக்கு இது எந்த அளவுக்கு சந்தோஷத்தைத் தரும் என்று தெரியவில்லை..ஒரு நாள் கடலை மிஸ் ஆகுதுல்லே?]
குடும்பத் தலைவர்கள் office போகத் தேவையில்லை
குடும்பத் தலைவிகள் சமைக்கத் தேவையில்லை, துணி துவைக்கத் தேவையில்லை, பாத்திரம் கழுவத் தேவையில்லை etc.,[அட பெண்களுக்குத் தான் நிறைய வேலை இருக்கிறது!]
எல்லோருக்கும் rest!
நான் இங்கு என்னுடைய பள்ளிப் பருவத்தில் வந்த காய்ச்சல் நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்! எனக்கு எப்போதாவது தான் காய்ச்சலே வரும்..அதிலும் school க்கு லீவு போடுவது மிகவும் குறைவு. அப்படி எப்போதாவது வரும் போது அம்மா "நீ இன்னைக்கு school க்கு போகாதே, போயி படுத்துக்கோ" என்று சொல்வாள்!. என் தம்பி என்னை பொறாமையாய் பார்ப்பான்! வழக்கமாய் school க்கு 9:30 மணிக்கு கிளம்புவோம். இன்று அவன் மட்டும்..
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சிலோன் ரேடியோவில் பாடிக் கொண்டிருக்கும்..அப்பாடா இன்னைக்கு நம்ம school க்கு போக வேண்டியதில்லை..இவன் இப்போ போனா சாயங்காலம் வருவான்! பாவம் என்று நினைப்பேன்! அம்மா அரிசிக் கஞ்சி கொடுப்பாள்..ஆஹா அதை சாப்பிடுவதற்காகவே தினமும் காய்ச்சல் வரலாம்! சாப்ட தட்டை, டம்ளரை அங்கேயே, அப்படியே வச்சுடலாம்..[அன்னைக்கு மட்டும்!]
அப்படியே போர்வை போர்த்திட்டு படுத்தா நம்ம உடம்பு சூடு போர்வை பூரா பரவி கம்முன்னு இருக்கும்.
குக்கர் விசில் போட்டு ஒரு 12 மணிக்கு எழுப்பி விடும்! குழம்பு, ரசம் வாசனை வீடு பூரா பரவி இருக்கும். அம்மா யாரோ பழம் விக்கிற அம்மாகிட்ட கதை அளந்துட்டு இருப்பா! அம்மாக்கு டெய்லி லீவு தான்..ஜாலி, நாள் பூரா கதை அளந்துகிட்டு இருக்காளேன்னு பொறாமையா இருக்கும்..[அவள் ஞாயிற்றுக்கிழமையும் லீவில்லாம சமைக்கனும் என்பதை மறந்து!]
மெல்ல வெளியே எட்டிப் பார்ப்பேன். தெருவில் சூரியனின் ஆதிக்கத்தைத் தவிர வேறு எதுவுமே இருக்காது. ஓஹோ மத்தியானம் 12 மணிக்கு நம்ம தெரு இப்படித் தான் இருக்குமான்னு நினைத்துக் கொள்வேன்!
தூரத்தில் ஒரு பழக்கப் பட்ட குரல்:
ஈயம்பித்தாளைக்குப் பேரிச்சம்பழம் அச்சு வெள்ளம்
நிலக்கடலைப் பருப்பு பட்டானி வேர்க்கடலை
....
இப்படி பாடிக் கொண்டே ஒரு கிழவர் வந்து கொண்டிருப்பார்! சூரியனின் ஆதிக்கத்துடன் அவருடைய ஆதிக்கமும் சேர்ந்து கொள்ளும். அது அந்த 12 மணிக்கு மேலும் அழகு சேர்க்கும். அவர் என்ன தான் சொல்கிறார், என்ன தான் விற்கிறார் என்று எனக்கு ஒன்றும் புரியாது. யாரும் அவரிடம் இது வரை பேரம் செய்து பார்த்ததாய் எனக்கு ஞாபகம் இல்லை.
அதற்குள் அம்மா "டேய் ஏன் டா வெயில்லே நிக்கிற, போயி படு" என்பாள்! அந்த பழம் விக்கிற அம்மா ரொம்ப கரிசனையோடு "ஏன் ராசா காய்ச்சலா? போய் படுத்துக்கோ ராசா" என்பாள். நான் ஒன்றும் பேசாமல் என் கசக்கும் வாயை மறுபடியும் உணர்ந்து பேசாமல் வேடிக்கை பார்ப்பேன்!
அருவா, கத்திக்கு சானை புடிக்கிறது..
அருவா, கத்திக்கு சானை புடிக்கிறது..
பழைய/புதுப் பாத்திரத்துக்கு பேர் வெட்றது..
பழைய/புதுப் பாத்திரத்துக்கு பேர் வெட்றது..
ஐச், ஐச் [அது ice!!]
இப்படி பலர் என்னைக் கடந்து போய் கொண்டிருப்பார்கள். தூரத்தில் மறுபடியும் ஒரு குக்கர் சத்தம் போடும்!! அய்யய்யோ school ல் என்ன நடக்கிறதோ என்று வேண்டாத நினைவும் அடிக்கடி வந்து போகும்! காய்ச்சல் அழுத்தமாய் என்னைத் தள்ளும், கால்கள் சோர்ந்து போகும்..எனக்கு காய்ச்சல் இல்லாத போது எப்படி இருந்தேன் என்று எனக்கு மறந்து போகும்! "டேய் வந்து கஞ்சி
குடிச்சிட்டு படு" என்று அம்மாவின் குரல் அவள் என்னைக் கூப்பிடுகிறாளா இல்லை காய்ச்சலைக் கூப்பிடுகிறாளா என்று எனக்குக் குழப்பம்!!
சாப்பிட்டு படுத்தால், தூக்கத்தில் மதியம் சாப்பிட வந்த அப்பா நெற்றியைத் தொட்டுப் பார்ப்பதை உணர முடியும். இப்போது தான் படுத்த மாதிரி இருக்கும், என் தம்பி school முடிந்து வந்திருப்பான்! சே, நாமும் இன்று லீவு போடாமல் இருந்திருந்தால், இன்னேரம் நாமும் வீட்டுக்கு வந்திருக்கலாமே என்று தோன்றும். நாளைக்கு என்ன என்ன test இருக்கோ, home work
இருக்கோ என்று மனம் கிடந்து அடித்துக் கொள்ளும்.
தெருவெங்கும் நண்பர்களின் விளையாட்டு இரைச்சல் கேட்கும் போதும். . .
அம்மா நான் விளையாடப் போறேன் என்று தம்பி ஓடும் போதும். . .
காய்ச்சல் மீது எனக்கு வெறுப்பு வரும்...முதன் முறையாய்!!
என் உள்ளே இருக்கும் ப்ரதீப் [அதான்பா மனசாட்சி!], நம்ம blog மக்களுக்கு இதைக் காமிடான்னு ஒரே அடம்! சரி தொலையிரான்னு உங்களுக்கு காட்றேன்! கவிதை சுமாரா இருந்தா நீங்க என்கிட்ட கோச்சுக்காம அந்த பயகிட்ட தான் கோச்சுக்கனும்! பாராட்டனும்னா மட்டும் என்கிட்ட சொல்லுங்க ஹிஹி...
அத்துவானக் காட்டில்
எப்போதாவது வரும் ரயிலைப் பார்த்து
கை அசைக்கிறான் அந்தச் சிறுவன் - தன்
கைகளால் பிடித்திருந்த கால்சட்டை
நழுவுவது தெரியாமல்!
இன்னைக்கு தான் இதை எழுதினேன்! ரொம்ப நாளா ஓடிட்டு இருந்தது! இதை எழுதிட்டு ஒரு friend கிட்ட காட்டினேன்! அவங்க இந்தக் கவிதையை புரிஞ்சுகிட்ட விதமே வேற மாதிரி இருந்தது!
இதை எழுதும் போது நான் உணர்ந்தது!
1. வாழ்க்கை எத்தனை சின்ன விஷயங்கள் இப்படி ரசிக்கும்படியாய் இருக்கிறது!
2. அந்த சிறுவனுடைய உற்சாகம், குதூகலம் எல்லாம் நமக்கும் அல்லவா தொற்றிக் கொள்கிறது!
என் friend உணர்ந்தது அவர் எனக்கு சொன்னது
இப்படித் தான் இன்னைக்கு பலர் இருக்கிறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்றாங்க!
இந்தக் கவிதைக்கு மேலும் உள்ளடங்கிய அர்த்தம் கண்டுபிடித்து எனக்கு அனுப்புபவர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, இந்தக் கவிதையின் இன்னொரு உள்ளடங்கிய அர்த்தமே பரிசாக வழங்கப் படும்!!
ல போகும் போது ம் யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்!!!!]
So, asusual Airport road ல Leela Palace கிட்ட signal. Signal ல வேற என்ன பாக்க முடியும் சொல்லுங்க? அதான் இந்த bike கதை! நான் இன்னைக்கு blog எழுத உட்காரும்போது என்கிட்ட இருந்த ஒரே கதை இது தான்!! இதை மட்டும் எப்படி போட்றதுன்னு நினைச்சி சரி இன்னும் கொஞ்சம் கதைகளை யோசிப்போம்னு வந்தது தான் பாக்கி எல்லாம்!! [அதுவா வருதுப்பா!!]
1. (a). Signalல் என் பக்கத்தில் bikeல் நிற்பவனைப் பார்த்து என்னுள் பேசிக் கொள்கிறேன், இவன் bike due கட்டி முடிச்சிருப்பானோ?!!!!!!!
1. (b). Signalல் என் பக்கத்தில் bikeல் நிற்பவன் cell phone ல் சிரித்து சிரித்துப் பேசுகிறான். இவனுக்கு petrol விலை ஏறியது தெரியாதோ? என்று நான் நினைத்துக் கொள்கிறேன்!! [சமிபீத்திய petrol விலை உயர்வை [41.87/ltr] நம் கதையில் புகுத்தினா என்னான்னு புகுத்துனது]!!
2. நான் channel ஐ மாற்றியவுடன் என் நண்பன் எரிச்சலுடன் கத்துகிறான்! இந்த உலகில் எல்லா வளமும் இருந்தும் ஏன் அமைதி இல்லை என்று எனக்கு லேசாய் புரிகிறது!
வீட்டில் சேர்ந்து வாழும் 2 நண்பர்களிடம் ஒரு சாதரண TV க்காக அமைதி குறையும் போது உலகில் அமைதி ஏன் இல்லை என்கிற கேள்விக்கு இடமில்லை!! [ஐய்யோ! கசக்குதே!! அதாம்பா உண்மை கசக்குமாமே?]
3. நான் அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்! அவள் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்! waiter எங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார்!
ஒவ்வொருவரும் உண்மையாய் [??] காதலிப்பதால், யாருக்குக் கஷ்டம் என்பதே கரு!
4. அவள் எல்லாவற்றையும் களைத்து நிற்கிறாள்! எனக்கென்னவோ இன்னும் அவளுடைய கண்களே கவர்ச்சியாய் தெரிகின்றன!
கொஞ்சம் adultary ஆ தான் இருக்கு. but இதுல காமத்தை விட காதலைத் தான் நான் சொல்ல வர்றேன். அவள் பிறந்த மேனியா நின்னாலும் நம்ம ஆளு அவளோட கண்களின் கவர்ச்சியை ரசிக்கிறான்!! [யாருப்பா? யாரெல்லாம் அப்படி இருக்கீங்கோ, கை தூக்குங்க!!]
நான் மதுரையில் மஹால் [திருமலை நாயக்கர் மஹால்] 7 வது தெருவில் வசித்து வந்தேன்..சொந்த வீடு என்பதால் எனக்கும் மஹால் 7 க்கும் ஒரு அழுத்தமான உறவு இருக்கிறது. இன்றும் நான் மதுரை செல்லும்போதும் என்னை முதலில் நலம் விசாரிப்பது மஹால் 7 தான்..
அன்று போல் இன்று குழந்தைகள் வீதியில் விளையாடுவதில்லை, நாம் விளையாடிய பல விளையாட்டுக்கள் இன்று வழக்கழிந்து போய் விட்டதில் எனக்கு ஒரு மிகப் பெரிய வருத்தம். அப்படியே ஒரு சிலர் விளையாடினாலும் cricket தவிர வேறு ஒன்றுமில்லை..இந்த இடத்தில் நான் என்னுடைய பால்ய பருவத்தினை நினைத்துப் பார்க்கிறேன் [frame மங்கலாகிறது..flashbackpa..]
எத்தனை விளையாட்டுக்கள், ஒவ்வொரு விளையாட்டிற்கும் ஒரு season, ஒவ்வொரு season க்கும் ஒரு விளையாட்டு [டேய், ரெண்டும் ஒண்ணு தாண்டா!!]
கண்ணாமூச்சி
ஓடி புடிச்சி
கல்லா மண்ணா
கோலி குண்டு
பம்பரம்
சிகரட் அட்டை, சோடா மூடி
காவியம்,
எரி பந்து
பாட்டி பாட்டி ஒன்னுக்கு!
ராஜா ராணி
கண்ணாமூச்சி:
எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. அதுல தெருவுல ராத்திரி current போனவுடனே விளையாடுவாங்களே!! அது! ice, ice னு தெருவெல்லாம் காட்டுக் கத்தல் தான். பாவம் அந்த பையன் நொந்து போவான்! நான் யாரும் நம்மளை அவ்வளவு சாதரணமா கண்டுபிடிச்சிரக் கூடாதுன்னு என் மூளையை கசக்கி, பிழிஞ்சி ஒரு இடத்துல ஒழிவேன். என் கூட பசங்க வருவாங்க..out ஆனவன் கண்ணை மூடிட்டு 1,2 எண்ணிட்டு இருப்பான். அவன் ready ஆன்னு கேப்பான். என் கூட வர்ற பசங்க ரெட்ட ரெடிம்பான்..எனக்கு
கோவமா வரும்.. ஏண்டா நீ கத்துனா நம்ம இங்கே தான் இருக்கோம்னு easy கண்டுபிடிச்சிருவான்லனு அவனைத் திட்டுவேன்! பல தடவை தனியா போய் ஒழிஞ்சி எவன் கைலயும் சிக்க மாட்டேன்! என்னடான்னு நானே வெறுத்துப் போய் வெளியே வந்தா, out ஆனவனை விட்டு எவனோ ஒருத்தன்..ப்ரதீப் 1, ப்ரதீப் 1 ன்னு கத்துவான்..நான் ஒன்னும் புரியாம என்னடா அவன் தானே out நீ என்னடா பண்றே ன்னு கேப்பேன்!! அதுக்கு அவன் coooooooool ஆ அது போன ஆட்டை நீ இவ்வளவு நேரம் எங்கே இருந்தேம்பான்! அப்புறம் என்ன பலி கடா மாதிரி போய் கண்ணைப் பொத்திட்டு 1,2 எண்ண வேண்டியது தான்..
கல்லா மண்ணா:
பல தடவை போய் நின்னதுக்கப்புறம் confusion வரும். இது கல்லு இல்லைடா இது cement, நீ out தான் என்பான் ஒருவன். ஒவ்வொரு தடவை ஒவ்வொரு rule..ரொம்ப கஷ்டம்பா!
கோலி குண்டு:
கடையில் போய் கோலி வாங்குவதே ஒரு சுவாரஸ்யமான் விஷயம் தான்! கோலி குண்டை வாங்கி கண்ணுக்குப் பக்கத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். ரஜினி தெரிந்தால் வாங்குவோம். [இன்றும் பார்க்கிறேன்..ரஜினியாவது, கமலாவது ஒரு மண்ணும் தெரியவில்லை!] தவறிப் போய் ஒருவனுடைய கோலி இன்னொருத்தனோட கோலியில பட்டுருச்சுன்னா போதும்..ஒரு ப்ரளயமே கிளம்பிடும்! டேய் ஏண்டா என் கோலி மேலே கொத்து வச்ச..ஒழுங்கா நீ ஒரு கொத்து வாங்கிக்கோ!! அவன் ஓட, இவன் தொரத்த..
கோலியில் இருண்டு விளையாட்டு உண்டு. 10,20 & பூந்தா. எனக்கு 10,20 தான் புடிக்கும். கோலி season வந்து விட்டால் போதும், தெருவெங்கும் குழி தான்..ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து கோலியை எறிய வேண்டும், straight ஆ குழியில் விழுந்தா 90 ல் இருந்து ஆடலாம், இல்லையென்றால் 10,20லிருந்து ஆட வேண்டும். கடைசியில் ஜெயித்தவனுக்கு தோற்றவன் பூரி போட வேண்டும்..நம்ம போட போட அவன் நம்ம கோலி குண்டை பதம் பார்ப்பான். ரத்தக் கண்ணீர் வரும்..நான் வழக்கம் போல்
பூரி தின்றதை விட போட்டது தான் அதிகம்!! :((
பம்பரம்:
அபீட்டா!!! கடைக்குப் போய் நல்லா திருப்பி திருப்பி பார்த்து, ஒரு பம்பரம் வாங்கி, ஈ ஆணி மாட்டி அந்த சிவப்பு கயிரால் அப்படி சுண்டி விட்டா..ஆஹா!! ஹெலிகாப்டர் தான் [மட்டைக்கு இன்னொரு பெயர்!] அபீட்டாவில் இரண்டு வகை உண்டு. சுத்தி விட்டு அபீட்டா எடுப்பது, மட்டை அபீட்டா எடுப்பது. ஒவ்வொருத்தனும் அபீட்டா எடுத்துட்டு குதிப்பான் பாருங்க..awesome game!
சிகரட் அட்டை, சோடா மூடி:
இந்த season வந்துட்டா போதும், தெருவுல ஒருத்தனும் வீடு கட்ட முடியாது. எல்லா தட்டைக் கல்லும் பசங்க வீட்டில் தான் இருக்கும். [bero வுக்கு அடியில்] ஒவ்வொரு அட்டைக்கும் ஓவ்வொரு மார்க். berkely தான் அதிகம் என்று நினைக்கிறேன். அதே போல் தான் சோடா மூடியும்..torino மூடி என்றால் 2 அவ்வளவு தான் ஞாபகம் இருக்கிறது..
காவியம்:
இது பல பேருக்குத் தெரியுமோ, தெரியாதோ..நான் படித்த school ல் இது ரொம்ப பிரபலம், இதை எங்கள் தெருவுக்கு கொண்டு வந்ததில் எனக்கும் என் தம்பிக்கும் நிறைய பங்கு உண்டு! இதில் out ஆனவன் குனிந்து கொள்ள வேண்டும், மற்ற எல்லோரும் அவனைத் தாண்டுவோம். தாண்டும்போது சும்மா தாண்டக்கூடாது..கிழ் கண்டவற்றை சொல்லிக் கொண்டே தாண்ட வேண்டும்: [இதற்கெல்லாம் அர்த்தம் என்ன என்று மட்டும் என்னிடம் கேட்காதீர்கள்!]
1. காவியம்
2. மணிக்காவியம்
3. லாகு
4. லாகத்தின் கொக்கு [இதைச் சொல்லும்போது தலையில் கைகளால் கொம்பு போல் வைத்துக் கொள்ளவேண்டும்]
5. லட்சத்தின் மண்வாரி [தாண்டி விட்டு கால்களால் மண் வாரி இறைக்கணும்! இல்லைன்னா outபா!!]
6. சூடா, ஸ்ட்ராங்கா? [இதைச் சொல்வதற்கு முன் குனிந்து நிற்பவனிடம் இதைக் கேட்க வேண்டும், அவன் சூடு என்றால் தாவிக் கொண்டே அவன் பின்னால் எத்த வேண்டும், ஸ்ட்ராங்கென்றால் அவன் மீது உட்கார்ந்து தாவ வேண்டும்..அப்பா! என்ன rule பா]
மற்றபடி வேறு எந்த இடத்திலும் தாவுபவனுடைய கால்கள் குனிந்து இருப்பவன் மேல் படக்கூடாது. பட்டால் out! இது தான் basic rule! என்ன விளையாடுவோமா? ;)
எரிபந்து, cricket :
இந்த மாதிரி விளையாட்டுக்களில் சோலைக் கருது பெரும் பங்கு வகிக்கும்..யார்கிட்ட பந்து வாங்க பணம் இருக்கு சொல்லுங்க..பசங்க நல்லா சுள்ளு சுள்ளுன்னு அடிப்பாங்க..இப்போ நெனைச்சாலும் வலிக்குதுப்பா!!
ராஜா ராணி:
இது indore game பா! எல்லோரும் round ஆ உட்கார்ந்து சீட்டில் ராஜா 10,000, ராணி 5000, போலிஸ் 100, திருடன் 0, மந்திரி, சேனாதிபதி, சேவகன்..எத்தனை பேர் இருக்கிறார்களோ அதற்குத் தகுந்தார் போல் சீட்டு! சீட்டைக் குலுக்கிப் போட்டு ஆளுக்கு ஒன்றை எடுத்து தான் மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும். யார் போலீசோ அவன் திருடனைக் கண்டுபிடிக்கனும். அப்பா, இதுக்கு .net programming எவ்வளவோ easy!! எவனைப் பாத்தாலும் திருட்டுப் பயலாத் தான் தெரிவாங்க!!
இப்படி எத்தனையோ விளையாட்டுக்கள்..எனக்குத் தெரிந்த சிலவற்றை இங்கே எழுதியிருக்கிறேன்! வீதி முழுதும் ice, ice, காவியம், சோடா மூடிகளின் சிதறல்கள், அபீட்டா போன்ற சத்தங்கள் இனி நமக்குக் கிடைக்குமா? அப்படி ஒரு season வரவே வராதா? நம் குழந்தைகள் 5 வயதிலேயே தன் கண்ணாடியை சரி செய்து கொண்டே cartoon network தான் பார்க்குமா? வீடியோ கேம்ஸ் என்ற பெயரில் A K 47ல் பல பேரை சுட்டு வீழ்த்தித் தான் வளருமா?
காலம் மாறுகிறதாம்..இப்படியா மாற வேண்டும்..வாழ்க்கை ஒரு வட்டம் ஆயிற்றே..அது சுழன்று மறுபடியும் இதே இடத்திற்கு வராமல் போய் விடுமா?
எனக்கு இன்று ஒரு உண்மை புரிகிறது..உண்மை பல சமயம் கசக்கத் தான் செய்கிறது!