சென்ற வார சனிக்கிழமை இரவு நண்பர்களுடன் அரட்டை கச்சேரி. பீர் சகிதம் அமர்ந்தவர்கள், ஏதாவது படம் பார்க்க வேண்டும் என்று சீ டி கடையில் தேடி துலவி எடுத்த "மூன்று படம்" சேர்ந்த சீ டி எது தெரியுமா? "தர்ம தேவதை", "சிவப்பு மல்லி", புதிய தீர்ப்பு". புரட்சிக் கலைஞரின்  முன்னால் காவியங்கள். நான் தான் "ஏ" சென்டர் ஆளாச்சே! [இப்போ எனக்கே குழப்பமா இருக்கு!] இந்தப் படத்தை எல்லாம் எப்படித்தான் பாக்கிறீங்களோ என்று எகத்தாளம் பேசினேன். அதற்கு நண்பர், "வரலாற்றை அப்புறம் எப்படி தான் தெரிந்து கொள்வது? கரகாட்டக்காரனில் ராமராஜன் "க்யுட்டிகுரா" பவுடர் போடுகிறார். இது தெரியுமா உங்களுக்கு?" என்றார். அடப்பாவிகளா, படத்தை எப்படி எல்லாம் பாக்குறாங்க என்று நினைத்துக் கொண்டேன். "பாஸ், ஏதாவது பாக்யராஜ் படம் இருந்தா பாருங்க, இன்னைக்கும் நம்ம ரசிச்சி பாக்க முடியும்" என்று சொல்லி பார்த்தேன். அப்படி எதுவும் கிடைக்கவில்லை. தளபதி, ஜானி, அண்ணாமலை எல்லாம் இருந்தது. அதை நான் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும்போது அவர் ஜெயித்து விட்டார். சரி இதையும் பாப்போம், என்று நடந்தேன்.

சிவப்பு மல்லி. அவருக்கு டைட்டில் ரொம்ப பிடித்து விட்டது. ராம நாராயணன் படம். எண்பத்தி ஒன்றில் வந்திருக்கிறது. சந்திரசேகர் தான் பிரதானம், "இவர்களுடன் விஜயகாந்த்" என்று எல்லா நடிகர்களையும் போட்டு விட்டு தான் அவர் பெயரை போடுகிறார்கள். டைட்டில் கார்டில் சந்திரசேகர் பெயரை பார்த்தாலே, பாவம் இவர் செத்து போயிருவாறே என்ற நினைப்பு வந்து விடுகிறது. மனிதர் எத்தனை படங்களில் தான் சாவாரோ!

படத்தின் கதை, ஒன்றும் புதிதாயில்லை. ஒரு கிராமம், அங்கு கொடுமை செய்யும் மூன்று பண்ணையார்கள். பக்கத்து கிராமம், அங்கு ஒரு தொழிற்சாலை, நீதி கேட்டுப் போராடும் தொழிலாளர்கள் கூட்டம். விஜயகாந்த் படம் ஆரம்பித்ததும் கண்ணை பெரிதாக்கினார். படம் முடியும் வரை சிரிதாக்கவே இல்லை. ஒரு சிவப்பு சட்டை, ஒரு வெள்ளை பாண்ட். கையில் கம்யுனிச கொடி...கவனிக்கவும், படத்திற்காக தயாரிக்கப் பட்ட கொடி எல்லாம் கிடையாது. கம்யுனிஸ்ட் கட்சியின் அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் கொண்ட கொடி. ஒடுக்கப்பட்ட மக்களின் குரல், "சிவப்பு" மல்லியின் அர்த்தம் புரிந்ததா?

சினிமா மொழி கொஞ்சம் கூட தெரியாமல் எடுத்த படம் தான் இது. இதையெல்லாம் எப்படி தயாரித்தார்கள் என்றே தெரியவில்லை. ஒரு உதாரணம், கிளைமேக்சில் மூன்று பண்ணையார்களும் ஊர் ஜனங்களிடம் தப்பித்து காரில் போகிறார்கள். திடீரென்று காரை நிறுத்தி ஒரு வைக்கப் போருக்குள் புகுந்து கொள்கிறார்கள். மக்கள் சாவகாசமாய் வந்து சுற்றி நின்று எல்லோரையும் எரித்து விடுகிறார்கள். "இப்போ இவங்க எதுக்கு கார்ல இருந்து இறங்கினாங்க?" என்று என் நண்பரிடம் கேட்டேன். அதற்கு அவர், "இராம நாராயணன் ஏதோ சட்டிலா சொல்ல முயற்சி பண்ணி இருக்கார், நமக்குத் தான் புரியலை" என்றார். படத்தில், எந்த ஒரு பிரச்சனையையும் ஆழமாய் தொடாமல் பல பிரச்சனைகளை இஷ்டத்துக்கு அள்ளி தெளித்துக் கொண்டே போகிறார்கள். எங்கும் பசி, பட்டினி. முதலாளிகளின் பகட்டு, தொழிற்சாலை சங்கங்கள், ஸ்ட்ரைக்குகள், ஏழைகளின் கோப தாபங்கள், தொழிலாளியின் மனைவியை முதலாளி வைப்பாட்டியாய் வைத்திருப்பது, தொழிற்சாலை கடிகாரத்தின் முட்களை முன்னே நகர்த்தி தொழிலாளர்களின் வேலை நேரத்தை கூட்டுவது [ஒருத்தன்கிட்டயுமா வாட்ச் இருக்காது!?]  விதவை திருமணம் என்று போகிற போக்கில் கலந்து கட்டி பல விஷயங்களை சொல்லி விடுகிறார்கள். இத்தனை சிவப்புச் சிந்தனை உள்ள இராம நாராயணனா இத்தனை சாமி படம் எடுத்தார் என்று ஆச்சர்யமாய் இருக்கிறது. காலம் தான் ஒரு மனிதனை எப்படி எல்லாம் மாற்றுகிறது.

ஆனால் ஒன்று நிச்சயம், படம் என்ன மொக்கையாக இருந்தாலும், நண்பர் சொல்வது போல் ஏதோ ஒன்று நமக்கு கிடைக்கிறது. "பாத்தியா அப்போவே இப்படி சொல்லி இருக்கான்!" என்பது போல் பல விஷயங்களில் ஆச்சர்யப்பட முடிகிறது. எண்பதுகளில் வாழ்ந்த நமக்கே புதிதாய் ஒன்று கிடைக்கிறதென்றால், எண்பதுகளை பார்க்காதவர்கள் இத்தகைய படங்களை பார்த்தால் நிச்சயம் நிறைய்ய கிடைக்கும். என் நண்பர் சொல்வது போல், வரலாறு முக்கியம்! சரி, அதுக்கு இப்படி ஒரு மொக்கை படம் தான் பாக்கணுமா என்று கேட்டீர்கள் என்றால், எண்பதுகளில் வந்த மணிரத்னம் படத்தை பார்க்கலாம் தான், ஆனால் அவர் உங்களை கதைக்குள் இழுத்து போய் விடுவார். நீங்கள் வரலாற்றை கோட்டை விட்டு விடுவீர்கள். அதனால் இந்த மாதிரி மொக்கை படங்களை பார்க்க வேண்டும். நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டே பார்த்தால் நன்றாய் தான் இருக்கிறது. அதோடு, அப்படி பார்க்கும்போது, அந்தக் காலத்தில் எத்தகைய கதைக் கலங்களை கையாண்டிருக்கிறார்கள், மக்கள் எதற்கு முன்னுரிமை கொடுத்திக்கிரார்கள், எண்பதுகளின் கலாச்சாரம் எத்தகையது  போன்றவை விளங்குவது சுவாரஸ்யம்.

எழுபது, எண்பதுகளில் பெரும்பாலும் வேலை இல்லா திண்டாட்டம், வறுமை தான் கதைக் களங்களாய் இருந்தது. கதாநாயகன் பெரும்பாலும் மக்களின் பிரச்சனைக்காக போராடுவான்.  காதல் எல்லாம் அங்கு தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் போலத் தான் இருக்கிறது. "ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்" ஒரு அருமையான பாடல் வருகிறது இதில். அதற்குப் பிறகு பாடலே வரவில்லை. ஒரே புரட்சி தான்!!

சந்திரசேகர் சங்கிலிமுருகனிடம் உருக்கமான ஒரு வசனம் பேசுகிறார்.
ச: உங்களுக்கு ஏது இவ்வளவு பணம்?
சமு: எங்க அப்பா பணம்,
ச: அவருக்கு யாரு கொடுத்தா?
சமு: அவங்க அப்பா கொடுத்தாங்க,
ச: அவருக்கு?
சங்கிலி முருகன் சற்று தயங்கியதும், சந்திரசேகர்...
ச: காலம் காலமா நாங்க உழைச்சுட்டே இருக்கோம். நீங்க மாடி மேல மாடி கட்டி வாழ்றீங்க...அங்கே இருந்து ஒரு எச்சி இலை விழுகாதான்னு நாங்க பாத்துட்டே இருக்கோம். நாங்க என்ன உங்க பணத்தை எல்லாமா கேட்டோம், உழைச்சதுக்கு கூலி கொடுங்கன்னு தானே கேட்டோம்?
இவ்வளவு பேசினா அவரை உயிரோட விடுவாங்களா? அடுத்த சீன்ல அவுட்டு!

இதை பார்க்கும்போது ஒன்று உணர்ந்தேன். இப்போதெல்லாம் மக்களின் பிரச்சனையை வைத்து ஜனரஞ்சக படங்கள் வருவதே இல்லையோ என்று தோன்றியது. எப்படி வரும்? இப்போது அடுத்தவனுக்கு என்ன கஷ்டம் என்றாலும் யாரும் கவலைப்படுவதில்லை. என் அலுவலகத்தில் ஆள் குறைப்பு நடந்தது. நேற்று வரை என் அருகில் இத்தனை வருடமாய் வேலை பார்த்த ஒருவனை, "இரண்டு மணி நேரத்தில் இடத்தை காலி செய்!" என்று அனுப்பினார்கள். அரசால் புரசலாய் பேசிக் கொண்டோமே தவிர, நாங்கள் யாருமே முதலாளிகளிடம் சென்று நியாயம் கேட்கவில்லை. "அவன் வேலை செய்யலை, எடுத்தாங்க!" என்று நாங்களே சமாதனம் செய்து கொண்டோம். எந்த ஒரு புரட்சியும் வெடிக்கவில்லை. இன்று எனக்கு வேலை இருக்கிறதா, அது போதும் என்று தான் இருக்கிறோம். எத்தனை பேர் ஐ டி துறையில் தற்கொலை செய்து இறக்கிறார்கள். யாருமே கேள்வி எழுப்புவதில்லை, அதற்கு கொடி தூக்குவதில்லை. இப்போது உள்ள மனிதர்களை பார்க்கும்போது ஒரு வித பயம் தொற்றிக் கொள்கிறது. எதன் பேரிலும் நம்பிக்கை இல்லாத ஒரு ஜடங்களாய்  வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது. அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும் ஒரே வித்தியாசம், அந்தக் காலத்தில் உடல் உழைப்பை உறிஞ்சி விட்டு தொழிலாளர்கள் வயிற்றில் அடித்தார்கள். இன்று எங்கள் உழைப்பை உறிஞ்சி எடுத்து பணத்தால் அடிக்கிறார்கள்! அவ்வளவே!!