நான் பார்த்த வரை அமேரிக்கர்கள் மந்த புத்திக்காரர்களாகத் தான் இருக்கிறார்கள்! [நான் பார்த்த வரை!] கடிவாளம் போட்ட குதிரை போல, தான் இத்தனை வருடங்கள் எப்படி ஒரு வேலையை செய்தோமோ, அது எத்தனை சுற்றி வளைத்து செய்ய வேண்டி இருந்தாலும் அதையே செய்கிறார்கள்! ஏன் இதற்கு இத்தனை கஷ்டப்பட வேண்டும்? இதற்கு வேறு வழி இல்லையா என்று யோசிக்கவே மாட்டார்களோ என்னமோ?

நான் பணிபுரியும் அலுவலகத்தில் ஒரு நாள் ஒரு அமேரிக்க நண்பனை வைத்துக் கொண்டு வேர்ட் டாக்குமென்டில் டாக்குமென்டிக் கொண்டிருந்தேன்..தலைப்புக்காக சிலவற்றை அடிக்கோடிட்டேன். அதாவது "கன்ட்ரோல் யு" அடித்தேன். திடீரென்று அவன் பதட்டப்பட்டு, அது எப்படி மெளஸ் இல்லாமல் நீ கோடு போட்டாய் என்று வியந்து கேட்டான்! நான் ஷார்ட் கட் கீ என்று சொல்லி எப்படிச் செய்வது என்று காண்பித்தேன்! "யு ஆர் ஜீனியஸ்" என்றான்! ஆஹா ஒருத்தன் சிக்கிட்டான்டா என்று நானும் சமயம் கிடைக்கும்போதெல்லாம் என்னுடைய ஜீனியஸ் தனங்களை வெளிக்காட்டிக் கொண்டேன். நீ டீ ஆத்தக் கூட லாயக்கில்லை என்று பள்ளியில் என் வாத்தியார் என்னை திட்டியது எனக்கு ஞாபகம் வந்தது!! இதில் பாரட்டப்பட வேண்டிய விஷயம், தெரியாததை தெரியாது என்று ஒத்துக் கொள்வதில் இவர்கள் வெட்கப்படுவதேயில்லை! நம்மைப் போல் எனக்குத் தெரியும், இருந்தாலும் உனக்கு தெரியுதா என்று டெஸ்ட் பண்ணேன் என்று பீலா விடுவதில்லை.என்னை பொறுத்தவரை, பொதுவாகவே இவர்கள் ஒரு நாள் மாங்கு மாங்கு என்று பார்க்கும் வேலையை நாம் ஒரு மணி நேரத்தில் செய்து விடுவோம் என்று தோன்றுகிறது! அதனால் தான் இந்தியர்களுக்கு இங்கு ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒரு மெளசும் நிறைய மவுசும் இருக்கிறது! [மெளஸ், மவுசு எப்படி கனெக்ட் பண்ணேன் பாத்தீங்களா? அப்படி பொங்குதுங்க..சரி சரி!]

அமேரிக்காவின் பெயரை மாற்றி பேப்பரிக்கா என்று வைக்கலாம்! அத்தனை பேப்பர்களை செலவழிக்கிறார்கள்! இன்று ஒரு நாள் யாரும் எந்த வகையான பேப்பரையும் உபயோகிக்கக் கூடாது என்று சொல்லி விட்டால் போதும், பாதிக்கு மேல் தற்கொலை செய்து கொண்டு செத்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்! அலுவலகத்தில் கேட்கவே வேண்டாம்! கம்ப்யுட்டரில் ஒரு ஃபைல் தயாரித்து அதை ஒரு ஃபோல்டரில் போட்டு, அந்த ஃபைலை ப்ரிண்ட் எடுத்து அந்த பேப்பரை ஒரு ஃபைலில் போட்டு அதன் மேல் பத்து பதினைந்து ஸ்டிக் நோட் போட்டு டாக்டர் கையெழுத்தில் ஏதோ கிறுக்குகிறார்கள்! கடைசியில் தேடும்போது எது வேண்டுமோ அதை தவிர ஏகப்பட்ட பேப்பர்கள் இருக்கின்றன..ப்ரிண்டருக்கு வாய் இருந்தால் கதறி அழும்! நான் இந்தியாவில் ஆடிக்கொரு தடவை அம்மாவாசைக்கு ஒரு தடவை ப்ரிண்ட் எடுக்க போவேன், அன்னைக்குன்னு பாத்து பேப்பர் இருக்காது, இல்லைன்னா சோடா புட்டி கண்ணாடி போட்டு பாத்தாலும் தெரியாத அளவுக்கு மங்கலா விழும்! நானும், ஆனியே புடுங்க வேணாம்னு வந்துருவேன்!

நான் இங்கு வந்த அன்று என் ஸீட்டில் ஒரு பெரிய டப்பா கொண்டு வந்து வைத்தார்கள்! முழு மகாபாரதத்தை ப்ரிண்ட் எடுத்து அதற்கு பின் போட எவ்வளவு பெரிய ஸ்டாப்லர் வேண்டுமோ அவ்வளவு பெரிய ஸ்டாப்லர்! ஒரு பெரிய கத்திரிக்கோல், பெரிய பஞ்சிங் மெஷின், நிறைய ஸ்டிக் பேட், நிறைய பேப்பர் க்ளிப்ஸ், சலஃபன் டேப், நிறைய மார்க்கர்ஸ் [மஞ்சள் கலர் சிங்குசா, பச்சை கலர் சிங்குசா...சே சே!], பேனாவில் தப்பாய் எழுதி விட்டால் அழிப்பதற்கு எரேசர் [ப்ளேடால் எப்படி அழிப்பது என்று இவர்களுக்கு இன்னும் தெரியாதா? பென்சில் என்றால் எச்சி தொட்டு அழிப்பது தான் பெஸ்ட்!] எனக்கு சந்தேகமே வந்து விட்டது, எனக்கு கம்ப்யுட்டர் கொடுப்பார்களா இல்லை அரசு அலுவலகம் மாதிரி பெரிய பெரிய பேரெடை கொடுத்து அதில் ப்ரோக்ராம் எழுது என்று சொல்லி விடுவார்களோ என்று! அடப்பாவிகளா..அவர்கள் கொடுத்த ஒன்றை கூட நான் இன்னும் தொடவில்லை, சில பேப்பர் க்ளிப்ஸை தவிர..கனினியின் பயனை இன்னும் இவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று படுகிறது!

NOTE: இந்த பத்தியை சாப்பிட்டுக் கொண்டே படிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்!

அலுவலகத்தில் விடுங்கள், டாய்லட்டில்..அட நம் நாட்டில் தான் தண்ணீர் பஞ்சம் இருந்தும் தண்ணீர் இல்லையென்றால் நாம் வருவதை கூட அடக்கிக் கொண்டு விடுவோம்! இவர்களுக்கு அங்கேயும் பேப்பர் தான்! துடைத்துக் கொண்டு ஒரு அரை மணி நேரம் சோப்பு போட்டு இவர்கள் கை கழுவுகிறார்கள்! [இப்போ என்ன பண்ணிட்டீங்கன்னு இந்த தேய் தேய்க்கிறீங்கன்னு கேக்கலாம் போல இருக்கு!] என் நண்பரிடம் ஏன் இவர்கள் கக்கூஸில் தண்ணீர் உபயோகப்படுத்துவதில்லை என்றதற்கு அவர்கள் கையை அந்த மாதிரி இடங்களிலெல்லாம் உபயோகிக்க மாட்டார்கள் என்றார். எனக்கு ஏனோ நான் பார்த்த ட்ரிபில் எக்ஸ் படமெல்லாம் ஞாபகம் வந்தது! சுத்தக்கார பாப்பாத்திகள்!

இன்னொரு முக்கியமான விஷயம் எப்போது பார்த்தாலும் எதையாவது கொறித்துக் கொண்டே இருக்கிறார்கள்! அலுவலகத்தில் ஒரு பெண் ஒரு மூட்டை பாப்கார்னை [உங்கள் தலை மேல் அடித்து சத்தியம் செய்கிறேன்!] கம்ப்யுட்டரில் வேலை பார்த்துக் கொண்டே ஒரு மணி நேரத்தில் தின்று தீர்த்து விட்டாள்! இருந்த இடத்திலேயே உட்கார்ந்து என்ன வேண்டுமென்றாலும் சாப்பிடலாம் என்பது இவர்களுக்கு மிக்க வசதியாய் இருக்கிறது. நம்மை மாதிரி வத்தக் குழம்பை சாதத்தில் குழைத்தா அடிக்க போகிறார்கள்! வாயில் நுழையாத பெரிய பர்கர் அல்லது சான்ட்விச்..அதில் ஆடு, மாடு, கோழி, பன்னி என்று அடித்து போட்டிருப்பார்கள்! நாளைக்கு ஒரு ஃபுட் ஃபெஸ்டிவல் வந்து விடுகிறது! எப்போதும் ஏதாவது கொறிக்க இருந்து கொண்டே இருக்கிறது! என் அமேரிக்க நண்பன், போ, போய் எடுத்து சாப்பிடு என்று என்னை பிடித்து தள்ளாத குறையாய் தள்ளுவான்! நண்பா, உன் அன்புக்கு ரொம்ப நன்றி நீ ஒன்றை மறந்து விட்டாய், நான் அமேரிக்கன் இல்லை இந்தியன்..உங்களைப் போல என்னால் சாப்பிட்டுக் கொண்டே இருக்க முடியாது என்று மன்றாடினேன்! அவன் விழுந்து விழுந்து சிரித்தான்! சாப்பிட்டுக் கொண்டே இருப்பது எங்கள் வேலைகளில் ஒன்று என்றான்! [அவன் சொல்லும்போது எனக்கு அவ்வளவு புரியவில்லை, வாயில் அவ்வளவு பெரிய பர்கரய்யா..பர்கர்!] நானும் அவ்வப்போது அவர்களை போல் கொறிக்க ஆரம்பித்து விட்டேன் என்று தான் நினைக்கிறேன்! சென்னை போனதும் சாப்பிடாம எப்படி நீங்க எல்லாம் வேலை செய்றீங்கன்னு கேட்டு டின் வாங்கி கட்டிக்க போறேன் என்று தோன்றுகிறது!! am i getting westernized?

- பயணப்படும்
தேன்கூட்டிற்காக



1995 - செளராஷ்ட்ரா காலேஜ், மதுரை.

ஒரு மலையை நோக்கிச் செல்லும் அந்தப் பாதையில் தொடங்கியது என் வாழ்வின் வசந்த காலம். நாம் நடந்து வந்த அந்த வசந்த காலங்களை சற்றே திரும்பிப் பார்க்கும்போதெல்லாம் நம்மையறியாமல் நம் முகத்தில் ஒரு புன்னகை அரும்பும். இன்று என் முகத்திலும் அதே புன்னகை. என் கல்லூரிக் நாட்களை பற்றி வலை பதிய வேண்டும் என்று வெகு நாட்களாய நினைத்துக் கொண்டிருக்கிறேன், அது சிறில் அலெக்ஸ் மூலம் குறும்பு என்ற தலைப்பின் மூலமும் இன்று நிறைவேறுகிறது. அதற்கு நான் முதலில் அவருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்! எத்தனை இனிமையான நாட்கள்? எதிர்காலத்தைப் பற்றி எந்த பயமும் இன்றி, எந்தக் கவலையும் இன்றி பாடித் திரிந்த அந்த நாட்களை அசை போடுவது எனக்கு கசக்கவா செய்யும்? அதிலும் கரும்பு தின்ன கூலி போல் அதற்கு தேன்கூட்டில் பரிசு வேறு கொடுக்கிறார்கள். கல்லூரி வாழ்வில் இல்லாத குறும்புகளா? பேச்சுகளா? கேலிகளா? கிண்டல்களா? [அப்பாடா பில்டப் ஓவர்!]



சீனியர்: பஸ்ட் இயரா?
நான்: ஆமா
சீனியர்: எந்த க்ரூப்?
நான்: பி.எஸ்.எஸ்ஸி. பிசிக்ஸ்
சீனியர்: ஓ, ராணி க்ளாஸா? [பெயர் மாற்றப்படவில்லை]
நான்: இல்லை, ராணி தான் என் க்ளாஸ்!
சீனியர்: ???!!! [வலை நாகரீகம் கருதி அவர் சொன்னது சென்ஸார் செய்யப்படுள்ளது..ஹிஹி]



மாமா கூப்பிட்றாருன்னு அந்த அக்காவை கூப்பிடு என்று என்னை கேர்ள்ஸ் பார்க்குக்குள் அனுப்பி வைத்தார்கள். [பெண்களுக்காக தனியாக ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும், அதற்கு நாங்கள் வைத்த பெயர் ஜுராஸிக் பார்க்] அங்கெல்லாம் போகக்கூடாது என்று தெரியாமல் ஐ, கேர்ள்ஸ் பார்க் ஆச்சே, ராக்கிங் என்றால் இப்படி இல்ல இருக்கனும் என்று குடு குடுவென ஓடிய என்னை தடுத்து நிறுத்த படாத பாடு பட்டுப் போனார்கள் சீனியர்கள்!



நான் போன ஜென்மத்தில் செய்த புண்ணியமோ என்னமோ, காலேஜே சைட் அடிக்கும் ஒரு பெண் என் க்ளாஸில் இருந்தது. பசங்க எல்லாம் சேந்து என்னை அவளிடம் முதலை கதை சொல்லச் சொன்னார்கள். முதலை கதை உங்கள் எல்லாருக்கும் தெரிந்திருக்கும், தெரியாதவர்களுக்கு கதையாகப்பட்டது என்னவென்றால்...

முதலை இருக்கும் ஒரு குளத்தில் நீங்கள் இறங்குகிறீர்கள், அது உங்கள் காலை பிடித்துக் கொள்கிறது நீங்கள் என்ன சொன்னால் அந்த முதலை உங்கள் காலை விடும்? இது கேள்வி, நீங்கள் பதில் சொல்ல வேண்டும். நீங்கள் என்ன பதில் சொன்னாலும் அப்படி சொன்னா விட்ருமா? என்று கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இது தான் விஷயம்.

தெரியலை நீயே சொல்லு என்றாள்.

தெரியலை நீயே சொல்லுன்னா விட்றுமா? என்றேன்

என்ன சொல்றது என்று சிரித்தாள்

என்ன சொல்றதுன்னா விட்றுமா?

ஐய்யோ, ஆளை விடு பிரதீப்

ஐய்யோ, ஆளை விடு பிரதீப்ன்னா விட்ருமா?

ஒன்றும் சொல்லாமல் அவள் சிரித்துக் கொண்டிருந்தாள்

இப்படி ஒன்னும் சொல்லாம சிரிச்சுட்டே இருந்தா விட்ருமா?

அவள் சிரிப்பில் மயங்கி..நான் பசங்களை பார்த்தேன். டேய் ஒரு வேளை இவ சிரிச்சா முதலை விட்ருமோன்னேன்! யாரும் இதை எதிர்பார்க்கவில்லை, எல்லோரும் மிகவும் ரசித்து சிரித்தார்கள்!



சீனியர் பெண்களிடம் கடலை போடுவது என் தலையாய கடமை. அதிலும் இந்த சேம் சேம் ஸ்வீட் விளையாட்டு இருக்கே..இரண்டு பேர் ஒரே கலரில் ட்ரஸ் போட்டிருந்தால் யார் முதலில் சேம் சேம் ஸ்வீட் சொல்கிறார்களோ அவருக்கு இன்னொருவர் சாக்லேட் வாங்கித் தரணும். அதிலும் காலேஜ் பெண்களுக்கு காட்பெரீஸுக்கு கீழ் மிட்டாய்கள் இருப்பதே தெரியாது. நான் அதற்கு மசியவே மாட்டேன். ஜீரக மிட்டாய் ஒரு பாக்கெட் வாங்கி ஆளுக்கு 2 தர்றேன் வாயில போட்டுக்குங்க என்று நழுவி விடுவேன். இன்னொரு முறை இப்படித் தான் ஒரு பெண் சேம் சேம் ஸ்வீட், கிவ் மீ எ ஸ்வீட் என்றாள், நானே ஸ்வீட், என்கிட்ட போய் வேற ஸ்வீட் கேக்குறியே என்றேன், அவளுக்கு குமட்டிக் கொண்டு வந்திருக்க வேண்டும்! [இனிமே ஸ்வீட் கேப்பியா? கேப்பியா?]



ஜீனியர் நானே இப்படி இருந்தால் என் சீனியர்ஸ் எப்படி இருப்பார்கள்! என் தம்பியும் என் காலேஜில் என் க்ரூப்பில் என் ஜீனியராய் சேர்ந்தான்! ஒரு செமஸ்டர் முடிந்து ரிசல்ட் வந்ததும் என் சீனியர் ஒருவர், என்ன உன் தம்பி எப்படி மார்க் எடுத்துருக்கான் என்று கேட்டார். நானும் தெனாவட்டாய், சூப்பர் மார்க், அள்ளிட்டான்ல யாரு ட்ரைனிங் எல்லாம் ஐய்யா தான் என்று என் காலரை உயர்த்தி பீத்திக் கொண்டிருந்தேன். அவர் அமைதியாய், நல்ல வேளை உன் தம்பி நீ சொல்லித் தந்ததை கவனிக்கலைன்னு நினைக்கிறேன் என்றார். சீனியர் சீனியர் தான்!



காலேஜில் மாடல் எக்ஸாம் என்று ஒன்று வைப்பார்கள். செமஸ்டர் வருவதற்கு முன் ஒரு தடவை மாதிரி பரிட்சையாம்! செமஸ்டருக்கு படித்து பாஸாவதே பெரிய விஷயம், இதில் மாடல் எக்ஸாம் வேறு. மாதிரி பரிட்சை என்றாலே எல்லோருக்குள்ளும் ஒரே போட்டி தான்..பரவாயில்லையே, படிப்புன்னா போட்டி இருக்கனும் என்று புருவம் உயர்த்தாதீர்கள், போட்டி, யார் முதலில் எக்ஸாம் ஹாலில் இருந்து வெளியே வருவது என்று! இதற்கு நைட் ஸ்டடி வேறு போட வேண்டும், அப்பா எத்தனை வேலைடா..என் நண்பனின் பாட்டி விட்டிற்கு கூட்டமாக கிளம்பி விடுவோம். பக்கத்தில் தான் அலங்கார் தியேட்டர். அப்போது அங்கே தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே [இதை படிக்கவே உங்களுக்கு இவ்வளவு கஷ்டமா இருக்கே, நான் அடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன்?] என்ற ஹிந்திப் படம் ஓடிக் கொண்டிருந்தது. பரிட்சை நடந்த அத்தனை தினங்களும் நைட் ஸ்டடி அங்கு தான்..ராத்திரி கண் விழித்து படம் பார்த்து விட்டு, பரிட்சை ஹாலில் தூங்காமல் முதல் ஆளாய் வெளியே வருவதில் இருக்கும் கஷ்டம் அனுபவித்தால் தான் தெரியும். ஹாலில் பசங்க அநியாயம் பண்ணுவாங்க. கேள்வித் தாளை தரும்போது, சிலர் இது எதுக்கு சார் என்று வந்தவரை கலாய்ப்பார்கள்.ஒரே ஒரு பேப்பர் தான் வாங்குவார்கள். அதில் முதல் 2 வரி தான் எழுதப் பட்டிருக்கும். அதுவும் கேள்வியாய் தான் இருக்கும். அந்த ஒரு பேப்பருக்கு சார் நூல் என்று ஒருத்தன் எழுந்து நிப்பான். வாங்குவது ஒரு பேப்பர், அதையும் பின்னால் இருப்பவனுக்கு பார்த்து எழுத கொடுத்து விட்டு வெறும் மேஜையில் தலை கவிழ்ந்து படுத்திருந்தான் ஒருவன். சூப்பர்வைசர் அவனை பார்த்து அதிர்ந்து பேப்பர் எங்கே என்றார், அவன் மெல்ல அழுகும் குரலில், இவன் பாத்து எழுத வாங்கிட்டு தர மாட்றான் சார் என்றான். அவருக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. அவர் காப்பி அடித்துக் கொண்டிருந்தவனிடம், பேப்பரை வாங்கி பார்த்து அதிர்ந்து கேட்டார், ஏன்டா அவனே 2 வரி எழுதியிருக்கான். அதை நீ வேற பாத்து எழுதுறியா குட்றா அவன் பேப்பரை என்று கடிந்து கொண்டார். இது எப்படி இருக்கு?



ஒரு நாள் லஞ்ச் முடிந்து எல்லோரும் தூங்கி வழிய ஏதோ ஒரு வகுப்பு நடந்து கொண்டிருந்தது. வகுப்பில் அவரவர் பெஞ்சில் தலை சாய்த்து படுத்திருந்தோம். ப்ரொஃபஸருக்கோ பரந்து விரிந்த தலை..வழுக்கை சார்! திடீரென்று எனக்கு ஒரு சந்தேகம். என் பக்கத்தில் சுகமாய் தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பினேன். அவன் தூக்கத்தை கெடுத்த கடுப்பில் என்னடா, சொல்லித் தொலை என்றான். நான் மெல்ல அவனிடம், டேய் மாப்ளே..இந்த ஆளு எப்பிட்றா முகம் கழுவுவாரு? ரொம்ப தூரம் கழுவ வேண்டி இருக்கும்ல..ரொம்ப கஷ்டம்டா..என்றேன்! அவன் சிரிப்பை அடக்க முடியாமல் அடிவயிற்றை பிடித்துக் கொண்டு பெஞ்சுக்கு அடியில் சரிந்து விட்டான்.



இப்படித் தான் ஒரு வாத்தி போர்டில் ட்ரான்ஸிஸ்டர் [இது 98.3 FM ட்ரான்ஸிஸ்டர் இல்லை, பிசிக்ஸ் ட்ரான்ஸிஸ்டர்பா..] படத்தை போட்டார். நாங்களும் தூக்கம் வராம இருக்க ரொம்ப பொறுப்பா அதை நோட்ல வரஞ்சோம். அவர் வெறுத்து போய் இந்த படத்தை தான் நான் டெய்லி போட்றேன், இதை ஆயிரம் தடவைக்கு மேல போட்டாச்சு என்றார்! [எல்லாம் ஒரே கட்டம் கட்டமா தான் இருக்கு...யாரு கண்டா!] ஒரு வேளை இது தான் வாத்தி குறும்பா?



கெமிஸ்ட்ரி லேப் என்றாலே டெஸ்ட் ட்யூப்களும், பியுரட்டுகளும், பிப்பட்டுகளும் வைத்து ஜிமிக்ஸ் வேலை காட்டுவது தானே..அங்கு இருந்த வாத்தியாருக்கு பசங்க என்ன பேர் வச்சுருப்பாங்கன்னு நினைக்கிறீங்க? ஜீபூம்பா! [ஹைட் ஆஃப் க்ரேயேடிவிட்டி!] சால்ட் அனாலிஸிஸ் என்று ஒன்று உண்டு. ஏதாவது ஒரு உப்பை கொடுத்து அதற்கான பல சோதனைகள் செய்து அது சோடியம் க்ளோரைடா, கால்சியம் கார்பனைட்டா இப்படி எத்தனையோ வகையறாக்களில் எது என்று கண்டு பிடிக்க வேண்டும்! ஒரு உப்பை வாங்கிப் பார்த்து அதன் தன்மைக்கேற்ப சோதனைகள் செய்தால் அது என்ன உப்பு என்று தெரியும், எனக்குப் பிடித்த பெண் எங்கே போகிறாளோ, என்ன செய்கிறாளோ அதையே செய்து கொண்டிருந்தால், உப்பை எங்கேயிருந்து கண்டு புடிக்கிறது. ஒரு மண்ணும் வராது..நேரா ஜீபூம்பாகிட்ட போவேன், அவர் ஒரு பெரிய நோட்டை வச்சிருப்பார். அதில் என் பெயருக்கு நேரே எனக்கு என்ன உப்பு கொடுக்கப் பட்டது என்று எழுதியிருக்கும். நான் செய்த சோதனைகளை வைத்து அது எந்த உப்பு என்று சொல்ல வேண்டும். நான் சொன்னதும் நோட்டில் உள்ளதும் ஒன்றாக இருந்தால் பெருசா என்ன செஞ்சிடுவாரு, இன்னொரு உப்பை தூக்கி கொடுப்பாரு! நான் போனவுடன் அந்த நோட்டை எட்டிப் பார்ப்பேன், அவர் கொஞ்சம் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு நோட்டை மறைத்து கொள்வார்...அடடா இன்ஸல்ட் ஆகிப் போச்சே!..இப்போ என்ன செய்றதுன்னு தெரியாம நான் முழிப்பேன்..அவர் ம்..என்ன உப்பு சொல்லும்பார். நான் காப்பர் சல்ஃபேட் சார் என்பேன்! அவர் நோட்டைப் பார்த்து இல்லையேப்பா என்பார். சார், இல்லை சார், இது அம்மோனியம் சல்ஃபேட் என்பேன்..இல்லையே என்பது போல் தலையசைப்பார். அவர் வெறுத்து போய் இது மக்னீசியம் க்ளோரைட் பா என்பார். கரெக்ட் சார் என்று நான் வந்து விடுவேன்! நம்ம தப்பா சொன்னா அவர் சரியா சொல்றாரே, இவர் ரொம்ப நல்லவர்டா என்று பசங்களிடம் அவர் பெருமை வளர்த்து விட்டேன்!அதற்குப் பிறகு நான் சோதனை செய்வதையே நிறுத்திக் கொண்டேன்....



இந்தக் கடைசி புள்ளிகளில் தொத்திக் கொண்டு நிற்கின்றன என் எஞ்சி இருக்கும் கல்லூரி நாட்கள், இன்னும் எத்தனையோ குறும்புகளுடனும், கும்மாளங்களுடனும்! [இன்னா ஓபனிங்! இன்னா பினிஷிங்!! ஹார்ட் டச் பண்டியே கண்ணு!]
தேங்க்ஸ் கிவ்விங் நீண்ட விடுமுறையில் லாஸ் வேகஸ் சென்றிருந்தேன். அந்த நகரத்தை பார்த்த வியப்பில் ஒரு வாரம் என்னால் சரியாக வாயை மூடவே முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! [எதாவது விபரீதமா நினைச்சுக்காதீங்க] ! அத்தனை ஆச்சர்யங்கள், அத்தனை அதிசயங்கள்!! இப்படியும் ஒரு ஊரா என்று வியப்பே மிஞ்சுகிறது.

ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்! இந்த தடவை நான் பேசப் போவதில்லை, என் படங்கள் பேசும்![பேசிட்டாலும்]

நியுயார்க் நியுயார்க்



பாரீஸ் பாரீஸ்



சீசர்ஸ் பாலஸ்











அமெரிக்காவில் பிரை நிலவு இந்தப் பக்கம் திரும்பி இருப்பதை கவனித்திருக்கிறீர்களா?













இயற்கைக்கு முன்னால் மனிதன் தான் எத்தனை சிறியவன்!









ஹூவர் டாம், அரிசோனா







அனைத்து படங்களும் இந்தக் காமிராவினால்...



நான்.. நானே தான் எடுத்தேன் [பின்ன வேற யாராவது மண்டபத்துல கொடுத்தா எடுத்து வந்தேன்..நான் நானே தான் எடுத்தேன் ஐயா!] :-)



- பயணப்படும்