சமீபத்தில் விகடனில் வந்த சாப்ளீனின் தொடர் என்னை மிகவும் கவர்ந்தது. அதன் உந்துதலால் சாப்ளீனின் படங்களாய் பார்க்க ஆரம்பித்தேன். நான் வாங்கும் டிவிடி கடையில் ஆரம்ப காலங்களில் அவர் இயக்கி நடித்த குறும்படங்களே கிடைத்தன. வெகு காலமாய் சாப்ளீன் ஹிட்லரை கேலி செய்து நடித்த படத்தை பார்க்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அது சமீபத்தில் நிறைவேறியது...

"க்ரேட் டிக்டேட்டர்" - இது சாப்ளீன் பேசிய முதல் படம்.

இந்தப் படத்தில் ஒரு யூத சவரத் தொழிலாளியாகவும், ஒரு கொடுங்கோல் சர்வாதிகாரியாகவும் இரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் என்னமாய் நடித்திருக்கிறார். இந்தப் படம் அவர் வழக்கமாய் நடிக்கும் கேலிச் சித்திரம் அல்ல...சர்வாதிகாரிகளையும், போலியான மனித வாழ்வையும் அத்தனை அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். இதற்கு மேல் நான் படத்தைப் பற்றி ஒன்றும் சொல்லப் போவதில்லை. என்னால் சொல்லவும் முடியாது...இந்தப் படத்தின் இறுதியில் சாப்ளீன் தன்னுடைய கதாபாத்திரதிலிருந்து விலகி அசல் சாப்ளீனாகவே மாறி மனிதம் மறந்து போன மனிதர்களை தன் பேச்சு வன்மையால் விளாசித் தள்ளுகிறார்.அந்த உரையை தான் கீழே திரையிட்டுருக்கிறேன்!



பிற்காலத்தில் அந்த சொற்பொழிவின் உன்னதத்தை உணர்ந்து அமேரிக்க அரசாங்கமே அதை வானொலியில் வாசிக்குமாறு அவரை பணித்தது. நியுயார்க் டைம்ஸில் அந்த ஆண்டின் சிறந்த பத்து படங்களில் ஒன்றாக "க்ரேட் டிக்டேட்டர்" தேர்வு பெற்றது.

எனக்கு இரண்டு வருத்தங்கள்!

1. மார்டின் லூதர் கிங் ஆற்றிய பிரபலமான சொற்பொழிவு "ஐ ஹேவ் அ ட்ரீமை" போல் ஏன் இது அத்தனை பிரபலம் அடையவில்லை!
2. பேசும் படங்கள் இன்னும் சற்று முன்னதாகவே வந்திருக்கலாம்!
யாரும் பார்க்காத
வேளையில் - அதைப் பற்றி
எந்தக் கவலையுமில்லாமல்
மொட்டு ஒன்று
மெல்ல பூக்கிறது!

நின்ற நிலை கடந்து
அமர்ந்த நிலை அற்று
தவழ்ந்து வரவும் தெம்பின்றி
தனியே - பசியில்
சாகிறது ஒரு ஜீவன்

ஜாதியின் பெயராலோ
மதத்தின் பெயராலோ
ஒரு அழகிய காதலை
தீயிட்டுக் கொளுத்துகிறது
ஒரு கூட்டம்

எங்கோ ஒரு இடத்தில்
யாரோ ஒரு பெண்ணை வன்புணர
துரத்திக் கொண்டு
ஓடுகிறது ஒரு கூட்டம்!
அவளின் மரண ஓலம்
செவிட்டில் அறைகிறது!!

முந்தானையை பிடித்துக் கதறும்
குழந்தையின் கையை விலக்கிவிட்டு
சத்தமில்லாமல் அழுது கொண்டே
போகிறாள் ஒரு தாய்

கிழக்கே இரவை நோக்கியும்
மேற்கே பகலை நோக்கியும்
நாட்கள் உருண்டோடுகின்றன

தொட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கும்
குழந்தை ஒன்று - சிறிதாக
ஒரு புன்னகை பூக்கிறது...