உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப் பட்டது.

உச்சி பொழுது. சென்னையின் மார்கழி வெயில் உக்கிரம். தம்பி என்ற ஒரு குரல் கேட்டுத் திரும்பினேன். ஒரு கான் க்ரீட் தடுப்பு நிழலில் ஒன்றிக் கொண்டிருந்த அந்தப் பெரியவர் நான் வண்டி எடுப்பதை கவனித்து என்னை விளித்தார். ஊன்றுகோலின் வசதியுடன் மெல்ல நடந்து என்னருகில் வந்தார். தொண்டுக் கிழம். நெற்றி நிறைய பட்டை. அரதப் பழசான வேட்டி சட்டை. இத்தனை வயது வரை வாழக் கூடாதென்று முடிவு செய்து கொண்டேன்.

மெயின் ரஸ்தாவுக்குப் போகனும் தம்பி!

"இதோ தெரியுதே" என்று கூப்பிடு தூரத்தில் இருந்த ரஸ்தாவைக் கையைக் காட்டினேன்.

"அந்த ரஸ்தாவுல இருக்குற ஆஸ்பத்திரிக்குப் போகனும்!" என்றார் மெல்ல.

இத்தனை தள்ளாட்டத்துடன் இருப்பவரை எப்படி பைக்கில் கூட்டி செல்வது என்று எனக்கு கொஞ்சம் தயக்கம். இருந்தாலும் பாவமாய் இருந்தது. சரி வண்டியில உக்காந்துருவீங்களா? என்று கேட்டு முடிப்பதற்குள் தட்டுத் தடுமாறி ஏறி அமர்ந்து கொண்டார். நல்லா கெட்டியா புடிச்சுக்கோங்கோ என்று மெல்ல வண்டியை நகர்த்தினேன். "நீங்க போங்கோ, ஆஸ்பத்திரிக்கு நேக்கு வழி தெரியும், நான் சொல்றேன். அந்தத் தாமரை குளத்துக்கு ஒட்டினாப்பல இருக்குற சந்துல இருக்கு. ஆமா...நான் சொல்றேன். வயசாயிடுத்து, நடக்க முடியலை...முட்டி தேஞ்சு வலிக்கிறது. நீங்க நன்னா இருக்கணும். எனக்காக இத்தனை சிரமம் எடுத்துக்குறேள். இந்தக் காலத்துல யாரு இப்படி உபகாரம் பண்றா? வெயில் என்னமா மண்டையை பிளக்கிறது? மரமும் மனுஷாளும் குறைஞ்சுண்டே வர்றா, எப்படி மழை வரும், எப்படி லோகம் செழிக்கும்? இதோ நீங்க இருக்கேள், எப்படி உபகாரம் பண்றேள், இப்படி எல்லாருமா பண்றா...வயசாயிட்டா எல்லாத்துக்கும் ஒரு கேலிப் பொருள் மாதிரி ஆயிட்றோம். உடம்பு பாடாய் படுத்துறது. பகவான் கண்ணைத் தெறக்க மாட்றான். அவன் என்ன செய்வான், லோகத்துல இருக்குற எல்லாருக்காகவும் அவன் கண்ணைத் தொறந்துண்டே இருந்தா, அவன் எப்போ தான் கண்ணை மூடுறது? இந்த லாரிக்காரன் பாருங்கோ, கண்ணுல மண்ணை கொட்டிண்டே போறான். சரியான எமன்...."

எங்கே இவர் புலம்பிக் கொண்டே வழியை மறந்து விடப் போகிறார் என்று தாமரைக் குளத்தை ஆட்டோக்காரர்களிடம் விசாரித்தேன். பேச்சை நிறுத்தி மெல்ல புன்னகைத்து "நான் தான் சொல்றேனே, போங்கோ வந்தா சொல்றேன். நேக்கு தெரியும், தம்பிக்கு நம்பிக்கை இல்லை" என்று அந்த ஆட்டோக்காரர்களிடமும் மன்றாடினார். நான் மெல்ல வண்டியை நகர்த்தியதும், மறுபடியும் ஆரம்பித்து விட்டார்.

"நேக்கு 89 வயசாறது. ஒரே இருமல், சளி!! மூச்சை முட்றது. சின்ன வயசுல நான் அப்படி இருப்பேன். என் ஆம்படையா என்னை முழுங்குற மாதிரி பாப்பா...அது அந்தக் காலம். இப்போ அவ ஆஞ்சு ஓஞ்சு போயிட்டா. அவளுக்கும் ஒரு 80 வயசு இருக்கும். நீங்க யார் பெத்த புள்ளையோ, உங்களை நன்னா வளத்துருக்கா, எல்லா செல்வங்களோட நீங்க நீடூழி வாழனும்!" என்றவுடன் மறுபடியும் அந்த எண்ணம் தோன்றியது. இந்த வயது வரை சத்தியமாய் வாழக் கூடாது! ஒரு வழியாய் ஆஸ்பத்திரியில் இறங்கினோம். "சத்த இருங்கோ, நான் டாக்டரை பார்த்துட்டு வந்துடறேன்" என்று ஆட்டோக்காரரை அமர்த்தி விட்டு செல்வதைப் போல் சொல்லி விட்டு அவர் மெல்ல நடந்தார். கால்கள் தளர்ந்து, உடலை வருத்தி அவர் இறைந்து இறைந்து செல்வதை காணப் பொறுக்கவில்லை. "நீங்க உக்காருங்க, நான் விசாரிக்கிறேன்" என்று அவரை உட்கார்த்தி விட்டு அங்கு இருந்த ஒருவரிடம் விசாரித்தேன். "பதினோரு மணி வரை தான் சார் பாப்பாங்க, இனிமே நாளைக்கு தான்" என்றார். அவருக்கு இறைத்துக் கொண்டிருந்தது. மூச்சு முட்டியது. என்னிடம் சொன்னதையே அவரிடம் சென்று சத்தமாய் இறைந்து சொன்னார். "சார், கொஞ்சம் மருந்தாவது கொடுங்க..டானிக் எதாவது.." என்றேன். "சீக்கிரம் வர்றதுக்கென்ன?" என்று அவரிடம் எரிந்து விழுந்தார். சில மாத்திரைகளையும், ஒரு சிரப்பையும் என்னிடம் கொடுத்தார். "வாங்க" என்று அவரை மெல்ல எழுப்பினேன். அப்போதும் ஏதோ பேசி கொண்டே இருந்தார்.

மிகுந்த சிரமப்பட்டு, "தம்பி என்னை வீட்ல விட்டுடுங்கோ" என்றார். உங்க வீடு எங்கே என்றேன். "இதோ இந்தத் தாமரை குளத்துக்கு அந்தப் பக்கம்" என்றார் இறைந்து கொண்டே! எனக்கு புரியவில்லை. வீடும் இங்கே, ஆஸ்பத்திரியும் இங்கே..இவர் எப்படி அங்கு வந்தார்? அத்தனை தூரத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்? அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சில பயல்களின் உதவியுடன் அவரை மெல்ல வண்டியில் ஏற்றினேன். "தாத்தா நல்லா சாரை புடிச்சுக்குங்க" என்றான் ஒருவன். இருமி கொண்டே புன்னகை செய்தார். "ஆமா, வீடு இங்கே தான் இருக்குன்னா, அவ்வளவு தூரத்துல என்ன பண்ணிட்டு இருந்தீங்கன்னு" கேட்டேன். என் கேள்வியை சிறிதும் சட்டை செய்யாமல், "ஆ! இங்கே தான், நான் தான் சொன்னேனே, தாமரை குளம் பக்கத்துல...இந்த சந்து தான்.. ஏழாம் நம்பர் சந்து...திரும்புங்க" என்றார்! அந்த குண்டும் குழியுமான சாலையின் நடுவில் இருந்தது அவர் வீடு. ஒரு துருப் பிடித்த பழைய கேட்டை அவர் திறப்பதற்கும், அந்த வீட்டின் கதவு திறப்பதற்கும் சரியாய் இருந்தது. உள்ளிருந்து ஒரு வயதான மாமி எட்டி பார்த்தார். நான் ஒரு எட்டு வைத்து அவரிடம் பேச முயல்வதற்குள் அவர் அந்த இரும்பு கேட்டை வேகமாய் சாத்திக் கொண்டார். " தாத்தா, அந்த மருந்து மத்தியானம் சாப்டுட்டு" என்பதற்குள் தலையை ஆட்டிக் கொண்டே ஒரு வித பதட்டத்துடன் உள்ளே சென்றார். நான் மாமியை பார்த்து, "மாமி அந்த மருந்து எப்போ சாப்பிடனும்னா" என்று சொல்வதற்குள் அவர் ஆட்டிய தலையை நிறுத்தாமல் உள்ளே சென்று கதவை தாளிட்டுக் கொண்டார்.

யூ ட்யுபினால் டீவி இல்லாத குறையே தெரிவதில்லை. முதல் நாள் ஒளிபரப்பான நிகழ்ச்சி அடுத்த நாள் சின்ன சின்ன வீடியோவாக எண் பிரித்து போட்டு விடுகிறார்கள். யார், எப்படி இத்தனை பொறுப்புடன் செயல்படுகிறார்கள் என்று ஆச்சர்யமாகவே இருக்கிறது. இதனால் அவர்களுக்கு என்ன லாபம்? புரியவில்லை. நேற்று விஜய் டீவி அவார்ட்ஸ் பார்த்தேன். பாலிவுட்டில் நடக்கும் ஃப்லிம் ஃபேர் அவார்ட் ரேஞ்ச்சுக்கு நடத்துகிறார்கள். அதுவும் கோபி ஒவ்வொரு நாமினியையும் சொல்லும்போது எல்.ஈ.டி ஸ்கிரீனில் அவர்களின் முகம் பளிச்சிடுவது கூடுதல் பளிச்சு! வழக்கமாய் நிகழ்ச்சியை வழங்கும் யூ கி சேதுவை விட்டு விட்டு, நீயா நானா கோபியை அழைத்திருந்தார்கள். சில இடங்களில் நீயா நானா சாயல். இந்த மாதிரி நிகழ்ச்சியை நடத்த நிறைய டைமிங் வேண்டும். ஷாருக்கான் இதில் உண்மையில் கிங் கான் தான். ஒரு சூப்பர் ஸ்டார் இப்படி ஒரு நிகழ்ச்சியை மற்றவர்களை விட சுவாரஸ்யமாய் நடத்துவது பெரிய விஷயம் தான். தமிழ் நாட்டில் இப்படி எல்லாம் நடக்குமா? ரஜினியோ விஜய்யோ இந்த நிகழ்ச்சியை நடத்தினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கவே பயங்கரமாய் இருக்கிறது. அதிலும் நிகழ்ச்சி முழுதும் விஜய்யின் முகத்தில் ஒரு சின்ன புன்னகையை கூட நான் பார்க்கவில்லை. ஏதோ ஒரு உலகத் திரைப்பட விழாவில் மிக மெல்ல நகரும் ஒரு அற்புதமான ஈரானிய திரைப்படத்தை வலுக்கட்டாயமாக அவரை உட்கார்த்தி பார்க்க வைப்பதைப்போல் இருந்தார். கமலஹாசனுக்கு இவர் விருது கொடுக்கிறார். கமலும் அவர் உளறுவதை தேமே என்று பார்த்துக் கொண்டு நிற்கிறார். இதில் இருவருக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடிக்கும், நான் கூட விஜய்யை என் கம்பெனிக்கு நடித்துக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறேன் என்று கமல் காமடி வேறு செய்கிறார். விஜய் அப்படியா, எனக்குத் தெரியாதே, அது எப்போது என்பது போல் ஒரு பார்வை பார்த்தார். என்ன தான் மேடை நாகரீகம் என்றாலும் ரொம்ப அ நாகரீகமாய் இருந்தது போல் தோன்றியது. அதிலும் கமலுக்கு ஏகப்பட்ட அவார்ட்கள். சிவகுமார் சொல்வது போல் கமலை எல்லாம் இந்த ஆட்டையில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அப்படியே சேர்த்துக் கொண்டாலும் அவர் மற்றவர்களுக்கு அவார்ட் கொடுப்பதோடு நின்று விட வேண்டும். மனொரமாவிடம் மைக் கொடுக்காதீர்கள் என்றால் கேட்கமாட்டேன் என்கிறார்கள். இனிமேல் பார்த்தீபனிடமும் மைக்கைக் கொடுக்கக் கூடாது. மனிதர் வித்தியாசமாய் பேசுகிறேன் என்று கொன்று விடுகிறார். அவர் எல்லோரும் பேசுவது போல் சாதரணமாய் பேசினால் ரொம்ப வித்தியாசமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். அவார்ட் வாங்கிய அத்தனை பேருக்கும் என் வாழ்த்துக்கள். [திட்றதெல்லாம் திட்டிட்டு...]

புத்தகங்கள் படிப்பது மிகவும் குறைந்து விட்டது. எஸ். ராமகிருஷ்ணன் பட்டியலிட்டுள்ள நூறு கதைகளையாவது தேடிப் படிக்க வேண்டும். முத்துக்கள் பத்து என்று புத்தக சந்தையில் 8 எழுத்தாளர்களின் கதைத் தொகுப்பை வாங்கியிருந்தேன். அதை எலி கடிப்பது போல் ஆங்கொன்றும் இங்கொன்றும் படித்து வருகிறேன். பிச்சமூர்த்தி கதைகள், ராஜம் கிருஷ்ணன் கதைகளைத் தவிற வேறு கதைகள் அதிகம் ஒட்டவில்லை. ரா.கி. ரங்கராஜன் மொழி பெயர்த்த பட்டாம்பூச்சி நாவலை மறுபடியும் வாசிக்கிறேன். ஏதாவது படிக்க வேண்டும் என்று நான் டெல்லியில் இருந்த போது வாங்கியது. அப்போது யாராவது ரா(க்)கி யைப் பற்றி என்னிடம் கேட்டிருந்தால் சில அழகிய பெண்கள் ஆண்களுக்கு செய்யும் துரோகம் என்று சொல்லியிருப்பேன். ஒரு மொழிபெயர்ப்பை படிக்கிறோம் என்ற உணர்வேயில்லை! அத்தனை எளிதாய் லாவகமாய் செய்திருக்கிறார். இவருடைய நாலு மூலையும் நான் மிகவும் ரசித்த புத்தகம். வாத்தியாரின் சில ஈ புக்குகள் இணையத்தில் கிடைத்தன. இங்கே! ஆ படித்தேன். அத்தனை சிலாக்கியமாய் எனக்குத் தோன்றவில்லை. ஒருவேளை தொடராய் வந்த சமயத்தில் படித்திருந்தால் அற்புத அனுபவமாய் இருந்திருக்குமா (ஆ!)? கணையாழியின் கடைசி பக்கங்களை அலுவலகத்தில் ஆல்ட் டாப் முறையில் படிக்கிறேன்! பெங்களூர் தமிழ் சங்கத்தில் நின்று கொண்டே படித்து, அவரின் எழுத்தை ரசித்து சிரித்தது ஞாபகம் வருகிறது. இன்று ஆல்ட் டாபும் போது, கணையாழியின் கடைசிபக்கத்தில், தோராயமாய் ஒரு நடுப் பக்கத்தில், ஒரு சைனீஸ் கவிதையை எப்படி எழுதுவது என்று அவர்கள் சொல்வதாய் இவர் சொல்கிறார். அதாவது,

சாதரணமாக சைனீஸ் கவிதைக்கு நான்கு வரிகள் உண்டு. முதல் வரி கவிதையை தொடங்குகிறது. இரண்டாம் வரி கவிதையை தொடர்கிறது. மூன்றாம் வரி ஒரு புதிய கருத்தை ஆரம்பிக்கிறது. நான்காவது வரி முதல் மூன்று வரிகளையும் சேர்க்கிறது.

சைனீஸ் சாம்பிள்

கியோட்டாவை சேர்ந்த சில்க் வியாபாரிக்கு
இரண்டு பெண்கள்.
மூத்தவளுக்கு இருபது வயது. இளையவள்
பதினெட்டு.
ஒரு படைவீரன் கத்தியால் கொல்கிறான்.
ஆனால் இந்தப் பெண்கள் ஆண்களை தத்தம்
கண்களால் கொல்கிறார்கள்.

வாத்தியார் முயற்சி

மன்னாரு மெதுவாக வந்து சேர்ந்தான்.
மணி பார்த்தான். உட்கார்ந்தான். படுத்துக் கொண்டான்.
சென்னை விட்டு திருச்சி போகும் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ்
சீக்கிரமே அவ்விடத்தை கடந்து செல்லும்!

அடியேன் முயற்சி

அந்தமான் ஒரு அழகான தீவு.
அங்கு மூசா என்பவன் வாழ்கிறான்.
ஜோலார்பேட்டையில் வசிக்கும் ரசீபு கறாரானவன்.
இந்த இருவருக்கும் எந்த சம்மந்தமுமில்லை!

தொடர் விளையாட்டுக்களில் புத்தக மிமீ ஒன்று தான் எனக்கு பிடித்தது. அது தான் மற்றவருக்கு கொஞ்சமாவது ப்ரயோஜனமாய் இருக்கும். நான் 8 மணிக்கு டெய்லி பல்லு விளக்குவேன் போன்ற சுயதரிசனத்தைக் கொண்டாடும் இந்த மாதிரி தொடர் விளையாட்டுக்களுக்கெல்லாம் நான் அதிகம் போவதில்லை. [கொஞ்சம் அடங்குறியா...] என்னுடைய ஆஸ்தான கமெண்டர் சிவமுருகன் கூட ஏதோ ஒரு விளையாட்டுக்கு என்னை கூப்பிட்டார். ஆளை விடுங்க என்று எஸ்கேப் ஆகிவிட்டேன். இப்போது சுரேஷிடம் வகையாய் மாட்டிக் கொண்டேன். சரி நாளுக்கு 4 வீதம், வாரத்துக்கு 30 பதிவா போட்றோம் [யாருப்பா அது, 4*7=28 தானேன்னு சொல்றது?] இது இப்போ முடியாது என்று அலுத்துக் கொள்வதற்கு! சரி, ஒரு கலாய் கலாய்ச்சிருவோம் என்று முயற்சித்திருக்கிறேன். இனி உங்கள் தலையெழுத்து...எல்லா பழியும், பாவமும், புகழும் சுரேஷ் கண்ணனுக்கே!!

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

நான் என்ன ரஜினிகாந்தா, ரோஜாவா? என் பெயர் காரணம் சுவாரஸ்யமாக இருப்பதற்கு? ஏதோ ஒரு காலத்துல, ஒரு ஊருல ஒரு ராஜாவாம் டைப் கதை கேக்கும்போது பிரதிவிராஜ் என்ற ஒரு ராஜாவைப் பற்றி என் பெற்றோர்களில் ஒருவர் கேட்டிருப்பார்கள் போலிருக்கிறது, அவர் ராணி சம்யுக்தாவை காதலித்து குதிரையில் தூக்கிச் சென்றாராம். நம்ம பையனும் இப்படி வீர தீர செயல்களை எல்லாம் செய்யனும்னு நினைச்சு எனக்கு அந்தப் பெயரின் தழுவலான என் பெயரை சத்தியமாய் என் பெற்றோர் வைக்கவில்லை...ஆனால் அந்தப் பெயர் வைத்ததன் காரணமோ என்னமோ, என் வாழ்க்கையில் கிட்டத்தட்ட அதே போலவே நடந்து விட்டது! [என்ன நடந்ததா? அதை இங்கெ சொல்லிட்டா, அப்புறம் என் ஆட்டோ பயாக்ரஃபில என்னத்தை எழுதுறது? சும்மா இருங்கப்பா]...ஏதோ பேரு வச்சதோடு நிக்காம, சோறு வச்சி இந்த அளவுக்கு வளர்த்து விட்டுருக்காங்களே, அதை நெனைச்சி சந்தோஷப்படுவீங்களா...

என் பெயர் பிடிக்குமா என்று கேட்டால், தெரியவில்லை. பெரிதாய் வருத்தம் ஒன்றும் இருந்ததில்லை. பள்ளியில் படிக்கும் காலத்தில் 3 பிரதீப்கள் இருந்தார்கள். [பாலாஜீக்கள் தனி..], அந்த 3 பிரதீப்புகளில் மிக மட்டமாய் படிக்கும் பிரதீப் நான் தான். ஒவ்வொரு பிரதீப்பாய் கூப்பிட்டு மார்க் ஷீட் கொடுக்கும் போது என் மார்க்கைப் பார்க்கும் போது என் பெயரின் மேல் எனக்கு எரிச்சலாய் வரும். பெயருக்கும் மார்க்குக்கும் என்ன சம்மந்தம் என்று தெரியவில்லை...குழந்தைகளுக்கு என் பெயர் அவ்வளவு எளிதில் வராது. பெடீப் என்று சொல்லும். அப்போது கொஞ்சம் எரிச்சல் வரும். மற்றபடி சின்ன வயதில் தமிழ் துணைப்பாடத்தில் [நான்டீடெயிலில்] படித்த மண்ணாங்கட்டியின் கதை ஞாபகம் வருகிறது. பெயரில் என்ன இருக்கிறது?

2) கடைசியா அழுதது எப்போது?

என் மனைவி இங்கே வருவதற்கு முன். என்னமோ தெரியலை, சென்னையில் கலகலவென்று இருந்து விட்டு, இங்கு சீண்டக்கூட ஆளில்லாமல் இருந்தது ஒரு மாதிரியாய் தான் இருந்தது. இருவரும் டைடல் பார்க்கில் ஒரே தளத்தில் வேலை பார்த்ததால், சேர்ந்தே போவது, சேர்ந்தே வருவது என்று இருந்து விட்டோம். திடீரென்று இத்தனை தூரம் பிரிந்தது என்னவோ போல் தான் இருந்தது..வேலையின் பளு காரணமாய் என் மனைவியிடம் சரியாய் கூட பேச முடியாத நிலை. என்னை மிஸ் பண்றியா என்று அவள் கேட்கும்போதெல்லாம், நான் எப்போதும் யாரையும் மிஸ் பண்ணியது கிடையாது, நான் ரொம்ப ப்ராக்டிகல், எனக்கு நானே போதும் என்றெல்லாம் ஓவராய் பீலா விட்டிருக்கிறேன். அது தான் உண்மை. ஆனால், ஒரு நாள் அவளிடம் பேசும்போது, உன் சட்டையை பக்கத்தில் வைத்துக் கொண்டு தான் தூங்குகிறேன் என்று அவள் சொன்னவுடன் அலுவலகம் என்று கூட பாராமல் அப்படி அழுதேன். மனைவியிடம் காதலை வெளிப்படுத்தக் கூட நாம் எவ்வளவு தயங்கியிருக்கிறோம் என்று அன்று புரிந்து கொண்டேன்..


3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

பிடிக்காமல்! அந்த ஒன்றை வைத்துக் கொண்டு கல்லூரியில் எல்லா பெண்களின் அசைன்மென்ட் நோட்டின் முகப்பில் அவர்களின் பெயர்களை டிசைன் டிசைனாய் எழுதி எத்தனை பசங்களின் வயித்தெறிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன்...பிடிக்காமல் எப்படி?

4) பிடித்த மதிய உணவு?

நான் இங்கு வந்த சமைத்த காலத்தில் தான் உணர்ந்தேன். எந்தக் கேணையன் நாளைக்கு 3 அல்லது 4 தடவை சாப்பிடனும்னு வரையுறுத்தியது? டெய்லி 3 வேளை என்னத்தை தான் சமைக்கிறது? அம்மாக்கள் பாடு எவ்வளவு கஷ்டம் என்று....எனக்கும் சாப்பாட்டுக்கும் உள்ள ஒரே உறவு உயிர் வாழ்தல் தான்...சாப்பிடுவது எனக்கு ஒரு வேலை...அவ்வளவு தான். மற்றபடி இது தான் என்று எதையும் சொல்வதற்கில்லை...

5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

கண்டிப்பாக! மறுகேள்வி இல்லாமல்.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

கேள்வியே அரைகுறை. மொதல்ல குளிக்க பிடிக்குமான்னு கேக்கணும்! ஐய்யோ, என்னை தப்பா நினைச்சிராதீங்க...மத்தவங்களுக்காகச் சொன்னேன். எனக்கு குளிக்க ரொம்ப புடிக்கும். யாருமே இல்லாத அருவியிலும், அலையே இல்லாத கடலிலும் குளிக்கப் பிடிக்கும். மிகவும் பிடித்தது கிணற்றடியில் இறைத்துக் குளிப்பது, ஷவர் பாத்![இல்லை தெரியாம தான் கேக்குறேன், இதனால யாருக்காவது பைசா ப்ரயோஜனம் இருக்கா?]

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

ஆண்களின் பாடி லேங்க்வேஜ், ட்ரஸிங் சென்ஸ், பெண்களின் ....நூற்றுக்கு தொன்னூறு ஆண்களைப் போல்! இதெல்லாம் நான் சினிமாவில் பெரிய ஸ்டார் ஆனவுடன் குமுதம் பேட்டியிலோ, விகடன் பேட்டியிலோ, வண்ணத்திரை பேட்டியிலோ சொல்லலாம் என்று இருந்தேன். அவசரப்பட்டுட்டீங்க...

8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பெற்றோர் தந்த முகம்
முடிந்தவரை நேர்மையாய் இருக்க முயற்சிப்பது
எல்லோரிடமும் சகஜமாய் பழகும் தன்மை
எதிராளியின் பார்வையிலிருந்து நோக்கும் திறன்
நகைச்சுவைத் திறன்
எழுத்து
ஓவியம்
சிந்தனை

சோம்பேறித்தனம்
அசட்டுத்தனம்
மறதி
என் உயரம் [கம்மி என்பதால்]
என் பல்வரிசை [நேர்மையால் இருப்பதால் வரும் பிரச்சனை...இதெல்லாம் எழுத வேண்டியிருக்கிறது! இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன், இல்லையென்றால் நேரில் என்னை பார்த்தால் எங்கே ஈ சொல்லுங்க என்று சொல்லப் போகிறீர்கள்!]

9) உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?

அவளுக்கு என் மீது இருக்கும் அளவு கடந்த காதல்
அவளுடைய அறிவு, சாமர்த்தியம், புத்திசாலித்தனம்
வாடிய பயிரைப் பார்க்கும் போதெல்லாம் வாடும் அவளின் இயல்பு

சோம்பேறித்தனம்
அவளுக்கென்று ஒரு நியாயம் [இது ஒரு வேளை எல்லா பெண்களுக்கும் பொருந்துமோ?]

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

இந்தக் கேள்வியும் குழப்புகிறது, யாராவது என் பக்கத்திலா அல்லது நான் யாருடைய பக்கத்திலாவதா?

முதலாவது, ராகினிஸ்ரீ மாதிரி என் பக்கத்தில் (அதாவது அலுவலகத்தில்) ஒரு பொண்ணில்லையே என்று![என்ன மனைவி திட்டுவாங்களா, அட விடுங்க பாஸ் அவங்க எப்பவுமே இப்படித் தானே...]

இரண்டாவது, (தமிழ்) சினிமாவின் பக்கம் நான் இல்லையே என்று!

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?

கருப்பு வெள்ளை கோடு போட்ட சட்டையும், க்ரே பேண்டும்.[இதுக்கு அந்தரங்கம் அழுக்கானதுன்னே எழுதியிருக்கலாம்...சுரேஷ் எல்லாம் உங்களை சொல்லனும்!]

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

பராக்கு பார்த்துக் கொண்டு...ஆபிஸில் பாட்டு கேட்டால் திட்ட மாட்டார்கள்? [அப்போ பதிவு போட்டால்?]

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

மயில் கழுத்து கலர்ல மாத்துறீங்களா? இல்லை ராமர் பச்சையில மாத்துங்க! இல்லை தெரியாம தான் கேக்குறேன், என்னை ஏங்க பேனாவா மாத்துறீங்க? என்னை நம்பி ஒருத்தி இருக்காளே, அவளை என்ன அப்போ பென்சிலா மாத்துவீங்களா? என்ன, எந்த வர்ண பென்சிலா? அட போங்கப்பா...

14) பிடித்த மணம்?

அப்பாவின் வாசனை
சந்தனம்
அந்துருண்டை
சாம்பிராணி
+ சுரேஷின் பதில்

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?

நான் இந்த மாதிரி தொடர் விளையாட்டுக்களில் யாரையும் இதுவரை குறிப்பிட்டு அழைத்ததில்லை. அதனால் முதல் கேள்வி அவுட்! இரண்டாவது கேள்விக்கு பதில், என்ன எழவைத் தான் எழுதுவது என்று முழி பிதுங்கி நிற்கும் அனைவரும் எழுதலாம். அல்லது உங்களையும் நம்பி ஒருவர் அழைத்தால் எழுதலாம். சோ, எல்லாரும் எழுதலாம்.

16) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

இந்தப் பதிவு என்று ஒன்றை சொல்ல முடியவில்லை. எனக்குப் புரியும் வகையில் அவர் எழுதிய அத்தனை எளிமையான பதிவுகளும் என்று சொல்லலாம். வலையுலகில் நான் தொடர்ந்து வாசிக்கும் மிகச் சிறிய லிஸ்டில் இவரும் ஒருவர்.

17) பிடித்த விளையாட்டு?

அம்மா அப்பா விளையாட்டு! ஹேய் குழந்தைகள் விளையாடுவதப்பா...

18) கண்ணாடி அணிபவரா?

இதற்கு ஆம் என்று பதில் சொன்னால், அடுத்த கேள்வி என்ன? சோடா புட்டியா? என்று கேட்பீர்களா? பதில், இல்லை!

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?

யதார்த்தமான வாழ்வை சுவாரஸ்யமாய் பதிவு செய்த படங்கள் பிடிக்கும். கொஞ்சமாவது லாஜிக் இருக்க வேண்டும். சினிமாவுக்கே உரிய ஃபேன்டஸி பிடிக்கும்...ரஜினி பறந்து பறந்து அடிக்கலாம். ஆனால் தனுஷ் அடிக்கக் கூடாது!

20) கடைசியாகப் பார்த்த படம்?

நேற்று அஞ்சாதே பார்த்தேன். மறுபடியும். நரேனின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு காமடியாய் இருந்தது...

21) பிடித்த பருவ காலம் எது?

என் வலைதளத்தின் பெயரை பார்த்து விட்டும், இப்படி எல்லாம் கேட்பது ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்!

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

ரா.கி.ரங்கராஜனின் பட்டாம்பூச்சி [மறுவாசிப்பு]
சுஜாதாவின் ஆ! [காலில் என்ன ஊர்கிறது, எறும்பா...ஆ]

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

என்னிடம் இருப்பது லேப்டாப்! [ஐய்யோ, என்னா அறிவு!!]

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

அருவியின் இரைச்சல்
நீரோடையின் சலசலப்பு
பலத்த காற்று
அமைதியான காட்டில், குயிலின் ஓசை
புகைவண்டி
மழலையின் அர்த்தமற்ற பேச்சு
எங்கோ ஒரு ரேடியோவில் கேட்கும் ஒரு பழைய பாடல்

போங்கப்பா, இந்த கேள்வி போர்! நெக்ஸ்ட்...

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?

மதுரையில் மஹால் 7வது தெருவில் இருக்கும் வீட்டிலிருந்து நியுதில்லி, சண்டிகார், ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, அமேரிக்கா...எப்போது வேண்டுமென்றாலும், கொடுங்கூற்றுக்கிரையாகலாம்! [அதற்குள் ஏதாவது செய்ய வேண்டும்!]

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

நான் ஒரு பிறவிக் கலைஞன் என்று எனக்கு சின்ன வயதில் இருந்தே ஒரு நினைப்பு. ஸ்ருதின்னா, பக்கத்து வீட்டு பாப்பாவா என்று நீங்கள் கேட்பவர் என்றால், நான் நன்றாய் பாடுவேன்! நான் நடனம் ஆடினால் அது நடனம் போலவே இருக்கும். சுமாராய் ஆடுவேன். அப்படி ஆடி ஒரு குட்டி டீசர்ட் போட்ட டீ.ஜேயிடம் [பேப் என்று தனியாய் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன்!] பரிசு வாங்கியதை இங்கே அளந்திருக்கிறேன். மனுஷ்யபுத்திரன் அளவுக்கு இல்லையென்றாலும், என் அப்பனுக்கு புத்திரன் என்ற அளவுக்கு கவிதைகள் எழுதுவேன். ஒரு அடித்தல் திருத்தல் கூட இல்லாமல் பேனாவினால் படம் வரைவேன். [கல்லூரிக் காலங்களில் செய்தது, இப்போது வருமா என்று தெரியவில்லை...யாரும் டெஸ்ட் வைத்து விடாதீர்கள்! இப்போதெல்லாம் டிஜிட்டல் ஓவியங்கள் தான், என்ன கழுதை கார்ட்டூன் தான் வர மாட்டேன் என்கிறது] நல்ல தாளம் அடிப்பேன் [காட்டுக் குயிலு மனசுக்குள்ள, வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்] எந்த பாட்டு என்று ஈசியாய் கண்டு பிடிக்கும் அளவுக்கு அடிப்பேன். அவ்வப்போது தேவயில்லாமல் ஓவர் ரியாக்ஷன் கொடுப்பேன். அதனால் எனக்கு நடிக்கவும் சுலபமாய் வரும் என்று தோன்றுகிறது...டைமிங் சென்ஸ் உண்டு. [மணி என்ன? பாத்தீங்களா...நான் சொல்லலை?] நேற்று கூட இப்படித் தான் தூங்கப் போகும் போது என் மனைவி ஹால் லைட்டை ஆஃப் செய்யுங்கள் என்றால். அதற்கு நான், ஒரு ஆணை பார்த்து ஆஃப் செய்ய சொல்கிறாய் என்றேன்! அதற்கு அவள் விவேக்கை போல், டேய் நோட் பண்ணுங்கடா..நோட் பண்ணுங்கடா என்று கலாய்த்தாள். தமிழ் சினிமாவைப் பற்றி கொஞ்சம் நிறையவே அறிவு உண்டு. [புதிய படங்களைத் தவிர்த்து!] இதை எல்லாம் விட, நடு சென்டரில் தலை கீழாய் நிற்பேன். இரு புருவத்தையும் தனித் தனியாய் தூக்க முடியும். இரு காதுகளை மட்டும் தன்னிச்சையாய் அசைக்க முடியும். இப்படிப் பல தனித் திறமைகள் உள்ள என்னை பார்த்து உங்களிடம் ஏதாவது தனித்திறமை, நோட் திஸ் பாய்ன்ட், தனித்திறமை என்று ஒருமையில் கேட்கிறீர்கள். வெட்கம்!

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

உலகம்:
இந்த உலகம் எல்லா வளங்களையும் கொண்டிருந்தாலும், ஆறறிவு படைத்த உயிரினம் என்று நம்மை நாமே பீற்றிக் கொண்டாலும், எல்லோருக்கும் எல்லாமும் என்ற எளிமையான ஒரு கோட்ப்பாட்டினை கடைபிடிக்கத் தவறி, எல்லைகள் வகுத்து, அன்பு நெறி தவறி...மனிதனே சக மனிதனை சாப்பிடுவது!!!!

இந்தியா:
எந்த ஒரு தகுதியும், தராதரமும் இல்லாமல் ஜனநாயகத்தின் பேரைச் சொல்லிக் கொண்டு கண்ட கருமாந்திரங்கள் அரசியலில் குதிப்பது [ஏன், நீ குதி என்கிறீர்களா?]
இந்தத் தள்ளாத வயதிலும் விடாமல் பதவியில் அமர்ந்து கொண்டு ஒரு மாநிலத்தையே குடும்பச் சொத்தாக பிரித்துக் கொள்வது
ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் இருக்கும் அந்த கேடுகெட்ட சகிப்புத்தன்மை, எதையும் மறந்து விடும் மனப்போக்கு, சுயஒழுக்கமின்மை இப்படி எத்தனையோ [என்னையும் சேர்த்துத் தான்!]

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

ஏன் இவ்வளவு நேரம் என் இமேஜ் டேமேஜ் ஆனது பத்தாதா? அப்புறம் சாருவுக்கும் எனக்கும் வித்தியாசம் வேண்டாம்...

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

ஸ்விச்சர்லாந்து! இனிமேல் தான் போக வேண்டும். தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால், நீளமான ஜாக்கெட், கணமான பேண்ட், உயரமான பூட்ஸ் எல்லாம் போட்டுக் கொண்டு, ஒரு கர்சீப்பை கட்டிக் கொண்டிருக்கும் ஹீரோயினுடன் அந்த ஊரில் உள்ள ஒரு அழகான, அமைதியான சாலையில் நின்று கொண்டு கேடுகெட்ட ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடலாம்! [ஆமா, அது என்ன மாதிரியான ரசனை?]

30) எப்படி இருக்கணும்னு ஆசை?

எளிமையான வாழ்க்கை. தெளிவான சிந்தனை!

31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

நண்பர்களுடன் நைட் ஸ்டடி...[டேய் அவ நிஜம்மா உன்னை பாக்குறா மச்சான்...]

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க

சூஸ் தி பெஸ்ட் ஆன்சர்!

வாழும் போது மற்றவருக்கு பயனாய்; வாழ்ந்த பிறகு மற்றவருக்குப் பாடமாய்!

வாழும் போதும், வாழ்ந்த பிறகும், வாழ்வது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் எழுதிய மற்ற தொடர் பதிவுகள்:

இந்திரன் கெட்டதும் சந்திரன் கெட்டதும்

பெய்யெனப் பெய்யும் மழை - சிறு குறிப்பு வரைக

கற்றதும் பெற்றதும்

தலைப்பு நல்லா இருக்கா? மழைக்கும் பக்கங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை தான். ஆனால் எழுதப் போவதற்கும் இதற்கும் சம்மந்தம் இருக்கிறதே...எல்லாம் நம்ம வாத்தியார் வழி தான். அவர் டெல்லியில் இருந்த போது அவருக்கு கனையாழியின் கடைசி பக்கங்கள் கிடைத்தது. வகைதொகை இல்லாமால் எழுதினார். [இப்படிச் சொன்னால் திட்டுவதாய் அர்த்தம் இல்லையே?] எனக்கு இந்த வலைதளம் தான் கனையாழி, குமுதம், விகடன், கல்கி எல்லாம்...அது தான் என் வலைப்பக்கங்களிருந்து கொஞ்சம் பக்கங்களை ஒதுக்கி, அதாவது நம் பள்ளி நாட்களில் ஒரு நோட்டை இரண்டு பாடத்திற்கு பயன்படுத்த நோட்டின் மத்தியில் ஒரு பக்கத்தை மடக்கி அம்புக்குறி மாதிரி செய்வோமே, அதே போல் செய்து என் வாழ்வின் அனுபவச் சிதறல்களை எடுத்து கொஞம் மெருகூட்டி, பதப்படுத்தி....அதை ஒரு கோர்வையாக்கி...என்ன புரியலையா? ஒன்னுமில்லை, வந்தது போனது, பூசுனது, பூசாதது இப்படி எல்லாவற்றையும் கலந்து கட்டி அடிக்கடி பலவிதமான மொக்கைகளா போட்டுத் தள்ளலாம்னு பாக்குறேன்!

பின்ன என்னங்க, எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போறார் என்ற கதையாய் எத்தனை நாள் தான் யாருமே வராத டீ கடையை ஆத்திக் கொண்டிருப்பது. இந்த உலகத்துல காலை ஆட்டிட்டே இருக்கணும், இல்லைன்னா சோலி முடிஞ்சி போச்சுன்னு கொண்டு போய் அடக்கம் பண்ணி புடுவாய்ங்க என்று நடிகர் திலகம் எங்கோ சொன்னதாய் ஞாபகம். அவர் சொன்னது போன்ற ஒரு காலாட்டலுக்கான முயற்சி தான் இது. அதுக்காக சார் நேத்து ராத்திரி பூரா தூங்கல, பாத்ரூம் போகல, சரியா சாப்புட்ல என்றெல்லாம் எழுதி மொக்கை போட மாட்டேன். ஆனா நீங்க எல்லாரும், மத்தவங்களுக்கு செய்ற மாதிரி, ஐம் ஃப்ஸ்ட், இதோ பல்லு வெளக்கிட்டு வந்துட்றேன் என்றெல்லாம் பின்னூட்டம் போடணும் சரியா? சரி மேட்டருக்கு வருவோமா?

இந்தப் பரதேசத்தில் தனிமையிலே இனிமை காண முடியுமா என்று யோசித்து வந்த அத்தியாயம் இனிதே நிறைவடைந்து விட்டது. சரியாய் என் மனைவி இங்கு வரும் முதல் நாள் அன்று ஒரு பதிவை போட்டிருக்கிறேன். என்ன? மனைவி வந்தாச்சா, எங்கே சொல்லவேயில்லை என்றெல்லாம் என் முகத்தை பிங்க் கலரில் மாத்தக் கூடாது சொல்லிட்டேன்! அதற்குப் பிறகு இந்தப் பக்கம் கை வைக்கவில்லை. [தலை வைத்துப் படுக்க இது என்ன பாயா?] உடனே, இந்த ஆம்பளைங்களே இப்படித் தான் ஒரு பதிவு போட வக்கில்லைன்னாலும் பொண்டாட்டியை குறை சொல்லலைன்னா இவங்களுக்குத் தூக்கம் வராதே என்று என் இனிய சிநேகிதிகளான நீங்கள் நினைப்பதற்குள் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று தெளிவு படுத்திக் கொள்கிறேன். மாறாக அவள் தான் நான் யு டியுப் பார்க்கும் போதெல்லாம் இதென்ன எப்போ பாத்தாலும் யூ டியுப், ஒழுங்கா ப்ளாக் போட்ற வழியை பாருங்க என்று நச்சரிக்கிறாள். பரிட்சைக்கு படிக்காம அப்படி என்ன டீவி வேண்டிக் கிடக்கு என்று அம்மா திட்டுவது போல் இருக்கிறது.

நானும் இந்த உரைநடை போட்டிக்கு ஒரு சிறு காவியத்தை எழுதிடுவோம்னு பாக்குறேன், அதை பத்தி நெனைக்கும் போது மனசுல கதையா கொட்டுது ஆனா அதை எழுதலாம்னு உக்காந்தா இந்த எழுத்து தான்...வார்த்தை...!!!! பைத்தியக்காரனை [பேரைத் தேடி போட்டுருக்கலாமோ?] நினைத்தால், இல்லை இல்லை நாயகனை நினைத்தால் எனக்கு ஆச்சர்யமா இருக்கு. 30,000 செலவு பண்ணி இப்படி எல்லாம் தமிழை வளர்க்கிறாரே என்று. வீட்டில் திட்ட மாட்டாங்களா சார்?

வெண்ணிலா கபடி குழு பார்த்தேன். எனக்குப் பிடித்தது. என்ன தமிழ் சினிமாவில் ஹீரோ சைக்கிளில் பஸ்சை முந்தினால் காதல் வந்து விடுகிறது. கிஷோர் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த அருமையான நடிகர் என்று தோன்றுகிறது. நெல்லை பாஷையை அருமையாய் பேசி நடித்திருக்கிறார். அதுல் குல்கர்னிக்கு வந்த நிலை இவருக்கு வரக் கூடாது என்று எங்கும் இல்லாத ஆண்டவனை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். சரண்யா கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் போல இருக்கிறார். இசை அருமை. லேசா பறக்குது மனசு மனசு...மனசு லேசாய் பறக்கவே செய்கிறது. செல்வகணேஷை யாரும் கண்டு கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.
பசங்க படம் பார்த்தேன். கை தட்டி அன்புவை பிழைக்க வைப்பதை தவிர்த்தால் மிக அருமையான படம் தான். சுப்ரமணியபுரத்தில் செய்ய ஆரம்பித்தது. பேக்ரவுண்டில் இளையராஜா பாட்டை ஓட விடுவது...[சிறு பொன்மணி அசையும்...] இதிலும் தொடர்கிறது. செல்ஃபோனில் ரிங்டோனாக வித விதமான பாட்டுக்களை வைத்துக் கொண்டு அவர் அலம்பு விடுகிறார். சும்மா சொல்லக் கூடாது, ராஜா என்னமா போட்ருக்காரு...படத்தில் வீட்டில் உள்ள அனைவருக்கும் ஃபோன் செய்து பேசுவது... அதிலும் "என்ன ஜப்பான்ல இருந்தா? புஜ்ஜிமாவா, டேய் அது கொழந்தை டா" சீன் சுப்பர்!

வேலியில் போவதை வேட்டிக்குள் விட்ட கதையாய் கொழுப்பெடுத்துப் போய் யாரடி நீ மோகினி பார்த்தேன். நான் கடவுளில் போலீஸ் பேசும் டயலாக் தான் ஞாபகம் வந்தது. அடுத்து அதே காட்சியில் ரஜினி பேசும் வசனமும் ஞாபகம் வந்ததால் விட்டு விட்டேன். ஒரே இரவில் ஒரு மண்ணும் தெரியாத தனுஷ் ப்ரோக்ரமாய் அடித்துத் தள்ளுகிறார். ஜாவா கன்சோலில் மெசேஜ் பாக்ஸ் வருகிறது. ஒரு மென்பொருள் பொரியாளனாய் மனம் கொதிக்கிறது. ஆள் முக்கால் ஆடை காலாய் இடைவேளை வரை வலம் வரும் நயந்தாரா வீட்டில் ஒரே ஆச்சாரமாம். காலையில் கோழி கூவ எந்திருக்கனுமாம். அருகம்புல் ஜூஸ் குடிக்கனுமாம். எல்லா பொம்மனாட்டிகளும் இழுத்து போத்திட்டு இருக்கனுமாம். இந்த கண்டிஷன் எல்லாம் போட்றவர் யார் என்று பார்த்தால் கே. விஸ்வநாத். அற்புதமான பல படங்களை எடுத்த அவரால் அந்தப் படத்தில் எப்படி நடிக்க முடிந்தது என்று தெரியவில்லை. நெஜம்மா முடியலை...கார்த்திக் எம்.ஜி.ஆர் கலரில் இருக்கிறார். ஆனால் நயந்தாரா, சரண்யா என்று எல்லோரும் துரத்தி துரத்தி தனுஷை லவ் பண்ணுகிறார்கள். எப்படி இவர் விடாமல் இந்த மாதிரி கேரக்டரிலேயே நடிக்கிறார் என்று தெரியவில்லை। அவரைப் பார்த்தாலே பாவமாய் இருக்கிறது. கண்ட நாள் முதலில் இது தான்டா லவ்னு சிரிப்பார். இதில் அழுகிறார், கோபப்படுகிறார். போதும் கார்த்திக் கொல்லாதீங்க... முதலில் தமிழ் சினிமாவில் அமேரிக்க மாப்பிள்ளை, இந்த மாதிரி சொத்தை நண்பன் கேரக்டரை எல்லாம் தடை செய்ய வேண்டும்! சாரு நம்மை எல்லாரையும் திட்டுவது சரி தான்...இந்தப் படம் ஏன் சார் நூறு நாள் ஒடனும்?

இவ்வளவு காண்டாய் பேசும் நானே எல்லாம் கலந்து கட்டி ஒரு மசாலா பதிவைத் தானே போட வேண்டி இருக்கு...விடுங்க விடுங்க! தமிழர் என்று சொல்லுவோம், தறி கெட்டுப் போவோம்!