"திரும்பி வந்துட்டான்னு சொல்லு...ஏழு மாசத்துக்கு முன்னாடி எப்படி போனானோ, அதே மாதிரி பிளாக் எழுத திரும்பி வந்துட்டான்னு சொல்லு!"

ரஜினியின் அடுத்த படம் ரஞ்சீத்துடன் என்றதும் மெய் சிலிர்த்தேன். ஆஹா, தமிழ் சினிமாவுக்கு நல்லகாலம் வந்துருச்சு போல இருக்கே என்று! டைட்டிலுக்கு, போஸ்ட்டருக்கு என்று கபாலியை பற்றி ஒவ்வொரு செய்திக்கும் தமிழ்நாடே ஆர்ப்பரித்தது..."தளபதி"க்கு பிறகு நான் ரஜினியை அணு அணுவாக ரசித்தது இந்தப் படத்தில் தான். அந்த வெள்ளை தாடி, கோர்ட் சூட்டுடன் மனிதர் அள்ளுகிறார். சிவாஜியை விட, இந்தப் படத்தில் ரஜினியின் உடைகள் ஏ ஒன்! ஏன் சொல்கிறேன் என்றால், படங்களில் பொறுத்தவரை, ரஜினி ஆரம்ப காலங்களில் இருந்தே நம்மை போல் ஒழுங்காய் ஒரு சட்டையை போட மாட்டார். ஒன்று சட்டை பொத்தான்களை போடமாட்டார், அல்லது காலர் தூக்கி வீட்டுக் கொள்வார், சட்டையை டக் இந்த செய்யாமல் அதன் மேல் பெல்ட் போட்டுக் கொள்வார். கோர்ட் போட்டால் குறித்த  கையை போல் மேலே தூக்கி வீட்டுக் கொள்வார். ஏதோ ஒரு கோக்கு மாக்கு இருக்கும். ஒரு பழைய படத்தில் இரண்டு பெல்ட் போட்டிருந்ததை பார்த்தேன்! இந்தப் படத்தில் கூட தலைவர் கோர்ட் சூட் அணிந்து கொண்டு காலரை தூக்கி வீட்டுக் கொண்டு அவர் வந்ததையும் ரஞ்சித் அந்த காலரை மடிக்க பட்ட பாட்டையும் அவரே சொல்லிய விதத்தை மிகவும் ரசித்தேன்.

இது உண்மையில் ஒரு புது அனுபவம் தான். ரஜினி தன்  கெரியரை ஆரம்பிக்கும்போது ரஞ்சித் பிறந்திருப்பாரா என்பதே சந்தேகம். அப்படி ஒருவருக்கு ரஜினி தன் அடுத்த படத்தை கொடுக்கிறார் என்றால் ரஜினிக்கும், ரஞ்சித்துக்கு எவ்வளவு பிரஷர் இருந்திருக்கும். கபாலி படக் குழுவினரின் பேட்டியை பார்த்தால் உங்களுக்குத் புரிந்திருக்கும். ஏதோ கடவுளையே நேரில் கண்டவர்களை போல் ஒவ்வொருவரும் அவரிடம் பணியாற்றியதை பற்றி சொன்னார்கள். படம் தான் எத்தனை பரபரப்பு, எதிர்பார்ப்பு. இதற்கெல்லாம் கபாலி ஈடு கொடுத்ததா என்றால் "இல்லை" என்றே சொல்ல வேண்டி இருக்கிறது.

ரஜினி படத்தின் வழக்கமான பார்முலா கதை தான் இதிலும். நல்லவன், கெட்டவன், அவன் ஒரு முறை, இவன் ஒரு முறை என்று மாறி மாறி ஜெயித்து கடைசியில் நல்லவன் வெற்றி கொடி நாட்ட படம் முடியும். ஆனால் ரஞ்சித் மாஸோடு மட்டும் போகாமல் கொஞ்சம் எமோஷனையும் கையில் எடுத்திருக்கிறார். ரஜினியை நடிக்க வைத்தே தீருவேன் என்று அவர் கங்கணம் கட்டி இறங்கி இருக்கிறார். அதில் அவர் ஜெயித்தாரா என்றால் மறுபடியும் "இல்லை" என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.

ரஜினியை "நடிக்க" வைப்பதில் அவர் காட்டிய விருப்பம், தான் எழுதிய கதையில் ரஜினி என்ற மாஸ் ஹீரோவை புகுத்திய லாவகம், பலவித கதாப்பாத்திரங்கள் என்று மெனக்கெடல் எல்லாவற்றையும் பாராட்டினாலும், கதையிலும், கபாலி உட்பட, மற்ற எல்லா கதாப்பாத்திரங்களிலும், வசனங்களிலும் எந்த ஆழமும் இல்லாமல் இருப்பதால் படம் அம்போ என்று ஆகிவிடுகிறது.

உதாரணத்துக்கு இந்த வசனம்...இது ஒன்னு தான் கொஞ்சம் தேறுச்சு !

கபாலி:நல்லா பறக்க வேண்டியதை கொண்டு வந்து இப்படி கூண்டுல அடைச்சு வச்சுருக்கானே...கூண்டுல அடைபட்டு கெடக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?
வெளிய விட்டா செத்து போயிடும்ணே, மத்த பறவைங்க இதை கொத்திபோட்டுரும்!
கபாலி:பறக்கிறது பறவையோட இயல்பு. அதை பறக்க விடு; வாழ்வா சாவான்னு அது முடிவு பண்ணட்டும். உன்னோட கருணை அதோட சாவைவிட கொடூரமானது!

ஒரு சில தோற்றுப் போன காதல்களை வைத்தும், ஒரே ஒரு சுவற்றை மட்டும் வைத்தும் கதை சொன்ன ரஞ்சித்தா இப்படி என்று தான் தோன்றுகிறது.  ட்ரைலரில் மட்டும் மாஸை காட்டிவிட்டு படம் பொறி பறக்க போகுது என்று எதிர்பார்த்து சென்ற ரசிகனை படம் ஆரம்பித்த பத்து நிமிடத்தில் பொடனியில் அடித்து உட்கார வைத்து விடுகிறார் ரஞ்சித். சரி ரஜினி ரசிகனுக்குத் தான் ஒன்றுமில்லை, ஒரு நல்ல சினிமா ரசிகனுக்கு ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்தால், அதிலும் ஏமாற்றமே. இந்தப் படத்தில் ஒரு அழகான காதல் கதை இருக்கிறது, மூன்று அருமையான பெண் கதாப்பாத்திரங்கள் இருக்கிறார்கள் என்று கலர் கலராய் ரீல் விட்டார்கள். எதுவுமே மனதை ஈர்க்கவில்லை.

ஜான் விஜய் கபாலியின் ஆஸ்தான தொண்டன் என்றால், அவரின் காதல் வாழ்க்கையை அருகில் இருந்து கண்டவர் என்றால், அவர் சிறையில் இருக்கும்போது ஏன் அவர் ஒரு முறை கூட கபாலியின் மனைவியையோ, மகளையோ தேடவேயில்லை?

ஜீவா [தினேஷ்] "43" கேங்கில் என்ன செய்து கொண்டிருந்தான்? திடீரென்று ரஜினியின் அடிமையாக மாறுவது எதனால்?

ஆயிரம் பிரச்சனை இருக்கும், நமக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு, டோனி லீ, வீரசேகரன் வளரவிடக்கூடாது என்று பயங்கர வசனம் எல்லாம் பேசிவிட்டு பொண்டாட்டி புள்ளையை தேடத் தொடங்கிவிடுகிறாரே மனிதர்?!

அவர் நடத்தும் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் இவரின் கதையை கேட்டு "நானும் வர்றேன், ஒருத்தனையும் விடக் கூடாது, போட்டுத் தள்ளுவோம்" என்று ஆவேசம் கொள்பவர்களை இவர் ஏன்  தடுக்கவே இல்லை? கடைசியில் அவர்களையும் ஏன் ஆயுதம் ஏந்த வைத்தார்?

கடைசியில், தங்கள் பிரச்சனை எல்லாம் சொல்லும் மாணவர்களிடம், "என்னிடம் ஏன் இதெல்லாம் சொல்றீங்க?" என்று சொல்பவன் என்ன மாதிரியான தலைவன்?

ரஜினியை தாண்டி கதையை யோசித்தால் கேள்விகளே மிஞ்சுகிறது.

முதல் பத்து நிமிடத்தில் கபாலி கதாப்பாத்திரத்தை அவர் நிலை நிறுத்திய விதம் பார்த்ததும் பாட்ஷா படத்தின் குழாயை பிய்த்து அடிக்கும் காட்சிக்கான தருணத்தை இந்தப் படத்தில் எல்லோரும் எதிர்நோக்கி இருக்க, கடைசி வரை அவர் குழாயை பிய்த்து எறியவே இல்லை என்பதே சோகம். சரி ரஞ்சித் சொன்னது போல் முள்ளும் மலரும் காளியாவது காணக்கிடைக்கிறாரா என்று பார்த்தால் அதுவும் இல்லை. ரஞ்ஜீத் இப்படி ஏமாத்திட்டீங்களே!

இப்போது எனக்கு இருக்கும் ஒரே பயம், இந்தப் படத்தில் நிறை குறைகள் இருந்தாலும், இதை நாம் ஆதரிக்கவில்லை என்றால் ரஜினி மறுபடியும் "பொண்ணுன்னா இப்படித் தான் இருக்கணும்" என்று பன்ச் வசங்கள் பேசிவிட்டு, நாற்பது பேரை பறந்து பறந்து அடித்து விட்டு, தன் மகள்களை விட குறைந்த வயதுடைய பெண்ணுடன் மரத்தை சுற்றி டூயட் பாட ஆரம்பித்து விடுவாரே என்று தான்!

அதை மட்டும் மனசுல வச்சுக்குங்க...

ஆ! கடைசியா ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.

மகிழ்ச்சி !

இதையே தான் இங்கேயும் சொல்லி இருக்கோம். ஒரு புது முயற்சி. உங்கள் மேலான கருத்தை எதிர்நோக்கி..

வெற்றுத்தாள்
ஒரு சொட்டு மை
வேறொரு தாள்

-0-

என் கூரையின் துளை வழியே
ஒரு சிறிய வானம்

-0-

மரவட்டை ஒன்று
மெதுவாய் நடக்கிறது

-0-

மின்சாரம் அணைந்ததும்
மழை சத்தம்

-0-


படத்தை பார்த்து விட்டு இதை படியுங்கள். கொஞ்சமாவது சுவாரஸ்யம் இருக்கும்!


கபாலியின் ஃபஸ்ட் லுக் ; தூங்காவனத்தின் முதல் டிரையிலர்; இதற்கு இடையில் என் ஏழாவது குறும்படம் "சருகு". எங்களுக்கு தைரியம் தான்! ஆனால் அந்த ஜாம்பவான்களோடு போட்டி போடும் விதமாகத் தான் எங்கள் படத்தின் டைட்டில் அமைந்திருக்கிறது. வெறும் "சருகு!"

இதை ஷார்ட் ஃபிலிம் என்று சொல்ல முடியாது; மைக்ரோ ஃபிலிம் என்று தான் சொல்ல வேண்டும். இப்போதெல்லாம் பத்து நிமிடத்துக்கு மேல் நீளும் குறும்படத்தை யாரும் விரும்புவதில்லை. யாருக்கும் அவ்வளவு நேரமில்லை. ஒரு நிமிடத்துக்குள் அந்தப் படம் வசீகரிக்கவில்லை என்றால் நெக்ஸ்ட் வீடியோ! "சருகு" வெறும் மூன்று நிமிடம் தான். ஒரு நிமிடத்துக்குள் அது உங்களை உள்ளிழுத்துக் கொள்ளும் என்று நம்புகிறேன். இது Friends2Support.org என்ற வலைத்தளத்தில் ரத்ததான விழிப்புணர்வுக்காக  நடந்த குறும்படப் போட்டிக்காக எடுத்த படம். போட்டியின் விதிமுறையே குறும்படம் மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மூன்று நிமிடங்களுக்குள், ஆஸ்பத்திரி இல்லாமல், ஊசி குத்தாமல், ரத்தத்தை காட்டாமல் அதாவது எந்த வித செலவுமில்லாமல் இப்படி ஒரு சீரியசான விழிப்புணர்வு விஷயத்தை அழுத்தமாய் எப்படி சொல்லலாம் என்று யோசித்து முயற்சி செய்தோம். நாங்கள் எதிர்பார்த்த மாதிரி"சருகு" போட்டியில் வெல்லவில்லை.

என்னை பொருத்தவரை வெற்றி முதல் மூன்று இடங்களில் வருவதல்ல. போட்டியில் பங்கு பெறுவதே! [பார்றா!] அதில் இந்த முறை நாங்கள் ஜெயித்து விட்டோம். அதற்கு ஒரு படி மேலே போய், முதல் சுற்றில் வந்த எண்ணூறு படங்களில் [எட்டு நாடுகள்; இருபதுக்கும் மேற்பட்ட மொழிகள்] முதல் எண்பது படங்களில் "சருகு" இடம்பெற்றது "மகிழ்ச்சி!" ["கபாலி" ரஞ்சித்தின் பழக்கம் ஒட்டிக் கொண்டது!]

பங்கு பெற்ற அனைத்து வெற்றியாளர்களுக்கும், வென்ற வெற்றியாளர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள். இனி தங்களின்மேன்மையான கருத்துக்களை எதிர்நோக்கி...

நேற்று இரவு சென்னைக்கு ரயில் ஏற மதுரை ரயில் நிலையத்தை வந்தடைந்தேன். ஆட்டோவில் இருந்து இறங்கியதும் ரயில் நிலையத்தின் வாசலை திரும்பி பார்த்தால் அப்படியே கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல இருந்தது. அத்தனை சுத்தம். ஒரு தூசு, துரும்பு இல்லை. "இந்தியாவில் ஒரு ரயில் நிலையத்தின் வாயில் இத்தனை சுத்தமாய் எங்காவது இருக்குமா?" என்று எண்ணி எண்ணி வியந்தேன்.

ரயில் நிலையத்தின் முன்னால் உள்ள அந்த குட்டி பிள்ளையார் கோயிலை கடந்ததும் வழக்கம் போல அந்த பெரிய மைதானம் போன்ற இடத்தில் பலர் படுத்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? ஏன் சரியான சமயத்தில் ரயில் நிலையத்துக்கு வராமல் இங்கு வந்து படுக்கிறார்கள்? என்று ஒரு முறையாவது விசாரிக்க வேண்டும். ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் புதிதாய் இரண்டு பெரிய "எல் இ டி" போர்டுகளை மாட்டி எந்த ரயில் எப்போது எந்த பிளாட்பாரத்தில் வருகிறது என்று காட்டிக் கொண்டிருந்தார்கள். உள்ளே சென்று முதல் பிளாட்பாரத்துக்குள் நுழைந்தேன். இரண்டு சஃவாரி போட்ட ரயில்வே ஊழியர்கள் குழம்பி நிற்பவர்களுக்கு வழி காட்டிக் கொண்டிருந்தார்கள். ரயில் பிளாட்பாரத்துக்குள் வந்ததும் எந்த பெட்டி எங்கு வரும் என்று டிஜிட்டலில் அழகாய் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். பிளாட்பாரம் மிகவும் சுத்தமாய் இருந்தது. ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள், அதில் சரியாய் போடப்பட்ட கருப்பு குப்பை கவர் என்று என்னை ஒவ்வொரு நொடியும் அங்குள்ள ரயில்வே ஊழியர்கள் ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருந்தார்கள்.

மதுரை போன்ற ஒரு நகரில் இந்த சுத்தம் சாத்தியம் என்றால் ஏன் மற்ற நகரங்களில், ஏன் இந்தியா முழுவதும் சாத்தியம் இல்லை என்ற கேள்வி மறுபடி மறுபடி என்னுள் எழுந்து கொண்டிருந்தது. அப்போது குப்பை பொறுக்கும் ஒரு பெண் தொழிலாளி ரயில்வே பாலத்தில் குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்தார். எனக்கு இருப்பு கொள்ளவில்லை. எழுந்து அவரிடம் சென்றேன்.

மிகுந்த நன்றி உணர்ச்சியுடன், "அக்கா வணக்கம், நான் சென்னையில இருந்து வர்றேன். பல ரயில்வே ஸ்டேஷன் போயிருக்கேன். மதுரை ஸ்டேஷன் தான் ரொம்ப சுத்தமா இருக்கு. ஒரு குப்பை இல்லை. ரொம்ப நல்லா வேலை பாக்குறீங்க..." என்றேன்.

அவர் என்னை ஏற இறங்க பார்த்து விட்டு, ஒரு ரியாக்ஷனும் இல்லாமல், "அப்படியா நல்லா இருக்கா...சரி சரி!" என்று குப்பையை பொறுக்கத் தலைப்பாட்டார்!

நான்: ஞே!

அவருடைய ரியாக்ஷனே இல்லாத ரியாக்ஷனை பார்த்து எனக்கு என்ன தோணுச்சுன்னா...

ஒன்று, "உங்களுக்கு என்ன பாராட்டிட்டு போயிடுவீங்க, பெண்டு கழல்றது எங்களுக்கு தானே தெரியும்!" என்று வேலை அயர்ச்சியில் அப்படி நடந்திருக்கலாம்.
ரெண்டு, "இப்படி நாளைக்கு எத்தனை பேரு பாராட்டை தான் வாங்குறது, கேட்டு கேட்டு காது புளிச்சு போச்சு என்று செலிப்ரிட்டி லெவலுக்கு ஃபீல் செய்து நம்ம வேலைய பாப்போம்." என்று நினைத்து அப்படி சொல்லி இருக்கலாம். [இதுக்கு அதிக சான்ஸ் இல்லை என்றே தோன்றுகிறது!]
மூன்று, "இப்படி எவனுமே இது வரை பாரட்டினதே இல்லையே, சனியன் குடிச்சுட்டு வந்து உளறுது போல!" என்று நினைத்திருக்கலாம்!
நான்கு, "தப்பா இருந்தா தப்பா இருக்குதுன்னு திட்டலாம், கம்ப்ளயின்ட் பண்ணலாம்! அது தான் சகஜம். எவனாவது நல்லா இருக்குறதை நல்லா இருக்குன்னு சொல்லுவானா, ஒரு வேளை, லூசா இருப்பானோ?" என்று நினைத்திருக்கலாம்.
ஐந்து, "மாசக் கடைசி மனுஷனை கொல்லுது, பெருசா பாராட்ட வந்துட்டான்! உன் பாராட்டை வச்சிட்டு பாமாயில் வாங்க முடியுமா?" என்று நினைத்திருக்கலாம்.

உங்களுக்கு ஏதாவது தோணுதா?
முப்பது வயதில், என்றும் போல் உதித்த ஒரு சூரிய பொழுதில்

அவனுக்கு ஒரு வித மயக்கம் வருகிறது

மருத்துவம், வாழும் ஒவ்வொரு நாளும் இனி வரமே என்று நாள் குறிக்கிறது

ஜோசியம், மறந்து போன, பொறுப்பேற்றுக் கொள்ள முடியா

முன் ஜென்ம பாவக் கணக்குகளை கணக்கெடுக்கிறது

மனிதம், அவன் இடத்தில் தன்னை இறுத்தி அவனுக்கான ஆறுதல் தேடுகிறது

பாசம், என் ஆயுள் உன்னை சேரும் என்று அவனை உச்சி முகர்கிறது

ஆன்மிகம், கடவுளின் மேல் பாரத்தை போட்டு திருநீறு பூசுகிறது

தத்துவம், சில விசாரங்களை முன் வைத்து அதன் வயிற்றை கழுவிக் கொள்கிறது

எனக்கு

வாழ்வின் அ(ன)ர்த்தம் எப்போதும் ஒரு கேள்வியில் தொடர்கிறது...