நாடெங்கும் தலைநகர் தில்லியில் நடந்த கற்பழிப்பு பற்றியே பேச்சாய் இருக்கிறது. தில்லியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று ஒரு கூட்டம் கொடி பிடிக்கிறது. கற்பழித்தவர்களை உடனே கொல்லுங்கள் என்று ஒரு கூட்டம் கொடி பிடிக்கிறது. தில்லியில் நடந்தால் தான் அது கொடுமையா தினம் தினம் இலங்கையில் பல ஆயிரம் பெண்களும் இந்தியாவில் எங்கும் பல இடங்களில் கீழ் சாதிப் பெண்கள் இதே கொடுமைக்கு பலியாகிறார்களே அதை பற்றியும் விசாரியுங்கள் என்று மற்றொரு கூட்டம் கொடி பிடிக்கிறது. பார்வை வெவ்வேறு என்றாலும் பிரச்சனை ஒன்று தான். "பெண்கள் கற்பழிக்கப்படுவது!"

ஏன் ஆண் ஒரு பெண்ணை கற்பழிக்கிறான்? அதன் உளவியல் ரீதியான காரணங்களை ஆராய்ந்தால் இத்தகைய நிகழ்வுகள் காமத்தின் விளைவால் நடப்பதை விட கோபத்தின் விளைவால் தான் பெரும்பாலும் நடக்கின்றன என்று தெரிகிறது. உலகெங்கும் நடக்கும் கற்பழிப்புகளை ஆராய்ந்தவர்களும் இதை தான் சொல்கிறார்கள். இது ஆணிடம் இயற்கையிலேயே உள்ள ஒரு பிரச்சனை! என்ன தான் பெண் விடுதலை, ஆணுக்குப் பெண் சமம் என்று பேசினாலும், ஆணின் உள்மனதில் பெண்ணை விட தான் தான் வலிமையானவன் என்று ஒரு எண்ணம் எப்போதும் குடி கொண்டிருக்கிறது! அதனால் தான் அவன் பெண்ணை ஆரம்பத்திலிருந்தே weaker sex என்று சொல்லி வந்தான். உடல் வலிமையை பொறுத்தவரை அது ஒரு வகையில் உண்மை என்றே தோன்றுகிறது. அதனால் தான் இன்று வரை ஆணையும், பெண்ணையும் வைத்து எந்த குத்துச்சண்டையும் விளையாட்டுக்களில் இடம்பெறவில்லை என்று நினைக்கிறேன். எந்த ஒரு விஷயத்திலும் ஒரு பெண் தன்னை தோற்கடிக்கிறாள் என்று தெரிந்த அடுத்த நிமிடம் ஆண் வேறு மாதிரி மாறி விடுகிறான். அவனுள் இருக்கும் அந்த ஆணாதிக்க மிருகம் தலை தூக்கி விடுகிறது. அந்த ஆணின் வளர்ப்புக்கேற்ப, சமூக நிலைக்கு ஏற்ப அவன் அங்கு அசிங்கத்துடன் நடந்து கொள்கிறான். ஒன்று அவளை மட்டம் தட்டியோ, அவளின் அந்தரங்கத்தை கேலி செய்தோ அல்லது அவளை வன்கொடுமை செய்தோ அந்தப் பெண்ணை அழ வைத்து தான் தான் பலசாலி என்பதை அந்த ஆண் அங்கு பதிவு செய்து கொள்கிறான். நம் வீட்டிலேயே கூட இத்தகைய வீரியம் குறைந்த சண்டையை நம் குடும்ப ஆண்கள், பெண்கள் இடையில் நாம் பல முறை பார்த்திருக்கிறோம். ஆணிடம் அங்கு நியாயமே இருக்காது என்றாலும், அவன் அங்கு பிடிவாதமாய் பெண் சொல்வதை மறுப்பதை பார்க்கலாம். தன்னை காத்துக் கொள்ள அந்த இடத்தில் தேவையே இல்லாத ஒரு விஷயத்தை சொல்லி அந்த பெண்ணை அழ விடுவான். 

நம் திரைப்படங்களில் கூட அத்தகைய கேவலமான எடுத்துக்காட்டுகளை காட்டலாம். தமிழ் சினிமாவில் முக்கால்வாசி ஆணாதிக்க படங்கள் தான், பெரும்பாலான ரஜினி படங்கள் அப்படி தான்! உதாரணத்துக்கு, தங்க மகன் படத்தில் "பூ மாலை" பாடல். அந்தப் பாடலில் ரஜினிக்கும், பூர்ணிமாவுக்கும் இடையில் நடனப் போட்டி நடக்கும். ரஜினிக்கு ஒரு மண்ணும் ஆடத் தெரியாது! ஆனால் அவர் ஹீரோ, அவர் தான் வெல்ல வேண்டும், என்ன செய்வது, ஒவ்வொரு உடையாக கழட்டி போடுவார். பூர்ணிமா ஒரு கட்டத்துக்கு மேல் திகைத்து நிற்க ரஜினி அங்கு வெல்வார். அதை எழுதியது ஒரு ஆண், இயக்கியது ஒரு ஆண், நடித்தது ஒரு ஆண். சரி, ரஜினி படத்தில் எல்லாம் இதை பார்க்க கூடாது என்பவர்களுக்கு "விக்ரம்" படத்தில் கமல் லிசியுடன் ஒரு வசனம் பேசுவார். லிசி தான் ஆண்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை, நீங்கள் செய்யும் எதையும் என்னாலயும் செய்ய முடியும் என்றதற்கு, கமல், அப்படியா, நான் வெயில் காலத்துல சட்டை இல்லாம வெறும் உடம்பா திரிவேன், நீ எப்படி என்று மடக்குவார். How Cheap? இவையெல்லாம் வீரியம் குறைந்த கற்பழிப்புகள் தான்! இப்படி தினம் தினம் நம் பெண்களுக்கு வீடுகளில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
உள்ளபடி சொன்னால், உடல் வலிமையில் ஆணிடம் பெண் போட்டி போட முடியாது, மன வலிமையில் பெண்ணிடம் ஆண் போட்டி போட முடியாது! உதாரணமாக, ஒரு பெண் ஒரு ஆணின் கன்னத்தில் அறைந்தால், அவளை திருப்பி அடிப்பதை விட, அவளின் அங்கங்களை தொடுவதோ, அவளை வன்கொடுமை செய்வாதோ தான் அவளை பழி வாங்க சிறந்த வழி என்று ஆண் நினைக்கிறான். அப்படி நடக்கும் போது, பெண்ணின் இயல்பிற்கேற்ப அவள் சுக்கு நூறாய் உடைந்து விடுகிறாள். அவளிடம் ஒட்டிக் கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச தைரியம் அவளை விட்டு ஓடி விடுகிறது. ஒரு பெண் கற்பழிப்புக்கு முன்னும், கற்பழிப்புக்குப் பின்னும் முற்றிலும் மாறி விடுகிறாள். முன் பார்த்த ஆசை, சிரிப்பு, சந்தோசம், தைரியம் நிறைந்த பெண்ணாய் அவளால் இருக்க முடிவதில்லை. ஒரு கற்பழிப்பு அவளின் வாழ்க்கையை முற்றிலுமாக குலைத்து போடுகிறது. அந்த நிகழ்வுக்குப் பிறகு அவள் எந்த ஆணை பார்த்தாலும் மிரட்சியுடனே பார்க்கிறாள், யாரோ அவளை பின் தொடர்வது போலவே அவளுக்குத் தோன்றுகிறது. அது அவளை மட்டுமல்ல அவளைச் சார்ந்தவர்களையும் ரொம்பவே பாதிக்கிறது. Open Window என்ற திரைப்படத்தில் அப்படி ஒரு பெண்ணின் மன நிலையை மிக அழகாக காட்டி இருந்தார்கள்.

ஒரு கற்பழிப்பு, உடலளவிலும், மனதளவிலும் ஒரு பெண்ணுக்கும் அவளைச் சார்ந்தவர்களுக்கும் எத்தகைய துன்பத்தை அவர்கள் வாழ்க்கை முழுவதும் தந்து விடுகிறது என்று நினைத்துப் பார்க்கவே பயமாய் இருக்கிறது. இதற்கு தண்டனைகள் கடுமையாக்கப் பட வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை, என்றாலும், அதே சமயம், இந்த மாதிரி நிகழ்வுகள் நடக்காமல் இருக்க முழு முதற் காரணமான மது/போதை பொருட்களை ஒழிக்க வேண்டும். ஏற்கனவே ஆண் பெண்ணிடம் இவ்வளவு கொடுமையாய் நடந்து கொள்கிறான். இதில் மதுவை வேறு அருந்தி விட்டால், கேட்கவே தேவையில்லை. மதுவை அறவே ஒழித்தால் நல்லது. வேறு வழியே இல்லையென்றால், பார்களை மட்டுமாவது அகற்றி விட்டு, வீட்டில் மட்டும் தான் குடிக்க வேண்டும், குடித்திருந்தால் வீட்டை விட்டே வெளியே வரக்கூடாது என்றாவது ஒரு சட்டம் வரலாம். தப்பித் தவறி, இந்த மாதிரி சட்டம் எல்லாம் வந்தாலும், நம் நாட்டில் சட்ட திட்டத்தின் நிலை என்னவென்று நமக்கே தெரியும்.  தில்லியில் நடந்த குற்றத்தில் ஓட்டுனர் ராம் சிங் மது அருந்தி விட்டு ஒரு பேருந்தையே எடுத்துக் கொண்டு தில்லி முழுவதும் ஒரு பெண்ணை கற்பழித்துக் கொண்டே சுற்றுகிறான், யாரும் கேட்பாரில்லை. தலைநகரத்திலேயே இந்த நிலைமை என்றால் மற்ற இடத்தில் கேட்கவே வேண்டாம்.

நாட்டின் நிலையை நினைத்தால் அயர்ச்சியாய் இருக்கிறது .

ஒரு ஆணாய் நான் எல்லா பெண்களிடமும், இப்படிப் பட்ட ஆண் வர்க்கத்திடம் நீங்கள் வாழ வேண்டிய கட்டாயத்தை நினைத்து மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்

ஒரு ஆணாய் மற்ற ஆண்களிடம், நீங்கள் வலிமையானவராய் இருக்கலாம் அதை மற்றொரு ஆணிடம் காட்டுங்கள், பெண்ணை மானபங்கப்படுத்தாதீர்கள் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன்

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்விமர்சனம்
என்னாச்சி...என்னாச்சி...
கிரிக்கெட் வெளையாண்டோம்...படம் பாத்தேன்...
பால் மேல போச்சுசிரிச்சி கண்ணு கலங்கி போச்சு
நீ தானே அடிச்சேபாலாஜி தரணீதரன் தானே இயக்கியிருந்தாரு?
கேட்ச் விட்டேனா?விழுந்து விழுந்து சிரிச்சேனா?
கீழே விழுந்துட்டேனா?கீழேயே விழுந்துட்டேனா?
இங்கே அடி பட்டதா?மூச்சு முட்டுச்சா?
இங்கே தான் மெடுலா ஆப்லங்கேட்டா இருக்குஇங்கே தான் தமிழ் சினிமா இருக்கு
டெம்பரரி மெமரி லாஸ் இருக்கும்இந்தப் படம் நம்ம மெமரி லாஸ்ல போயிட கூடாது
அது ஒன்னும் பயப்பட வேணாம்...அது ஒன்னும் பயப்பட வேணாம்...
கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்இந்த மாதிரி படம் வந்தா தமிழ் சினிமா சரியாயிடும்

"நீங்க எப்படி சார்? அவருக்கு லெட்டர் எல்லாம் எழுதி இருக்கீங்களா? பதில் எதுனா வந்துருக்கா?" என்று அந்த நண்பர் கேட்டதும் தான் எனக்கே அது உரைத்தது. அட, இத்தனை ஆண்டுகளாய் அவரின் தீவிர ரசிகனாய் இருந்து விட்டு அவருக்கு ஒரு லெட்டர் கூட எழுதவில்லையே என்று! ரூமுக்குள் வந்த பிறகும் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். ஒன்றா, இரண்டா, முப்பத்தேழு வருட காலமாய் அவரின் ரசிகனாய் வாழ்கிறேன். அவரின் முதல் படம் வந்த போது எனக்கு பதினைந்து வயது. அன்றிலிருந்து இன்று வரை, ஒருவரை விடாமல் நேசிக்கிறேன் என்றால் அது தலைவர் தான். "ரஜினி" என்ற ஒரே ஒரு மந்திரம் என்னை இன்று வரை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. தலைவர் சொல்வதெல்லாம் எனக்கு வேதவாக்கு. அவரின் ரசிகனாய் இருந்த போதும், மன்றம், அபிஷேகம் என்றெல்லாம் நேரத்தை பாழக்கியதில்லை. அவருக்கும் அது பிடிக்காது என்று தெரியும். அவரின் படங்களுடனே வளர்ந்து நானும் இன்று ஒரு மெடிக்கல் ரெப் ஆகி விட்டேன். அடுத்த முறை நீங்கள் திருவல்லிக்கேணி வந்தால் ராமா மேன்ஷன் முன் ஒருவன் ரஜினியை பற்றி சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தால், நீங்கள் நேராய் என்னிடம் வந்து கை கொடுத்து, எப்படி இருக்கீங்க ஆர். ஆர்  [அதாவது "ரஜினி" ராஜசேகர் என்பதன் சுருக்கம்] என்று கேட்கலாம். அந்த ஏரியாவில் நான் அத்தனை பிரபலம். தலைவரை போற்றும் எனக்கே இப்படி என்றால், தலைவருக்கு?

அப்படிப்பட்டவன் தலைவருக்கு இது வரை ஒரு லெட்டர் கூட எழுதவில்லை என்று உணரும்போது எப்படி இருக்கும்? எனக்கு தூக்கமே வரவில்லை. எப்படி இப்படி இருந்து விட்டேன்? ஏன் இதை நான் யோசிக்கவே இல்லை. எனக்கு படிப்பு கம்மி தான் என்றாலும், இதை நான் எப்படி மிஸ் செய்தேன் என்று பல கேள்விகள். எதற்கும் பதில் தான் கிடைக்கவில்லை. ஆயிரம் கேள்விகளை என் மனத்திடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அது திரும்ப என்னை ஒரே கேள்வி கேட்டது. "ஏன் இப்போது எழுதக் கூடாது?". அவ்வளவு தான், நாளெல்லாம் வெயிலில் சுற்றி அலைந்த களைப்பு எங்கே போனது என்று தெரியவில்லை. துள்ளி எழுந்து, கையில் பேப்பர், பேனா சகிதம் எழுத உட்கார்ந்தேன். ரூம் மேட் என்ன சார் இந்த நேரத்துல லைட்டை போட்டுக்கிட்டு என்று புலம்பினார். நான் கண்டு கொண்டால் தானே? இப்போது எழுதுவதும் ஒரு வகையில் நல்லது தான். எண்பதுகளில், அவருக்கு எங்கே படிக்க நேரமிருந்தது. இப்போது வரும் கடிதங்களை தான் அவருக்கு படிக்க நேரமிருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். அவர் படிப்பாரா என்று கூடவே ஒரு சந்தேகம் வந்தது. நம் லெட்டர் அப்படி இருக்க வேண்டும், அவர் உதவியாளரே படித்தாலும் நேரே தலைவரிடம் கொண்டு போய் கொடுத்து படிக்கச் சொல்ல வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

"அன்புள்ள தலைவருக்கு" என்று ஆரம்பித்து எனது முப்பத்தேழு வருட விசுவாசத்தை எழுதி முடிப்பதற்குள் விடிந்தே விட்டது. அவரை நான் எப்போது முதலில் பார்த்தேன், அவரின் மேல் எனக்கு எப்படி பிரியம் உண்டானது, எந்தப் படத்தை நான் மிகவும் ரசித்துப் பார்த்தேன், தலைவர் படத்தில் போட்ட சட்டைகளை போலவே என்னிடம் இருந்த சட்டைகள், அவரின் ரசிகன் என்பதால் எனக்கு நேர்ந்த சங்கடங்கள், அதை நான் எதிர் கொண்ட விதங்கள், கமல் ரசிகரை எல்லாம் ரஜினி ரசிகன் ஆக்கிய பங்கு, அவரின் அத்தனை படங்களையும் முதல் நாள், முதல் ஷோவில் பார்த்தது, அப்போது நடந்த கலாட்டா ஒன்றில், ஒரு நாள் இரவு முழுதும் லாக்கப்பில் இருந்தது என்று எழுதித் தள்ளி விட்டேன். படித்து பார்க்க சுவாரஸ்யமாகவே இருந்தது. தலைவர் இதை படித்தால் எவ்வளவு சந்தோஷப்படுவார் என்று எண்ணி எண்ணி பூரித்தேன். அவரே படித்து சிரிப்பது போல கற்பனை செய்யச் செய்ய இன்னும் எழுத வேண்டும் போல் இருந்தது. இந்தக் கடிதம் பிடித்துப் போய், ஒருவேளை என்னை அவர் கூப்பிட்டு அனுப்பினால் என்ன செய்வது என்ற எண்ணமே எனக்கு மிகுந்த கிளர்ச்சியை தந்தது. ஒரு வழியாய் கடிதத்தை முடித்து, கவரில் போட்டுக் கொண்டேன். காலையில் முதல் வேலையை அதை போஸ்ட் செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.

எனக்கு இருப்பு கொள்ளவில்லை. அன்று சீக்கிரமே குளித்து முடித்து விட்டு, என் பிரியமான வெள்ளைச் சட்டை, ரெட் டை, க்ரீம் பேன்ட் அணிந்து கொண்டேன். என் மருந்து சாம்பிள் பையுடன், ஒன்பது மணிக்கே போஸ்ட் ஆபிஸ் வாசலில் இருந்தேன். அவர்கள் சாவகாசமாய் பத்து, பத்தரைக்கு ஆபிசை திறந்தார்கள். ஒரு வழுக்கை, கவுண்டரில், இன்னொருவர் சற்று ஓடிசலானவர்.

என்ன சார், என்று என்னை கேட்டார்,
இதை போஸ்ட் செய்யணும், ஸ்டாம்பு, எடை? என்றேன்...

அவர் கவரை வாங்கி பார்த்து விட்டு,

லோக்கலா, வெளியூரா என்றார்.
சென்னை தான் என்றேன்.

அவர் கவரை ஆராய்ந்து

முதல்ல கவரை ஓட்டுங்க, கவர்ல அட்ரஸ் எழுதுங்க, அப்போ தான் எடை போட முடியும் என்றார்.
நான், ஒட்டிட்டேன் சார் என்றேன்.

அவர் அதை பிரித்துக் காட்டி,
இங்கே பாருங்க [திறந்தே கிடந்தது]
சரியா ஓட்டுங்க சார். அட்ரஸ் எழுதுங்க மொதல்ல என்றார்.

எனக்கு எரிச்சலாய் வந்தது. எடை போட அட்ரஸ் எதுக்கு? என்று நினைத்துக் கொண்டேன்.

உண்மையில் கவரில், திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு என்று எழுதி, இவரிடம் எடை போடக் கொடுக்க எனக்கு கூச்சமாய் இருந்தது. இந்த வயதில் ரஜினிகாந்துக்கு இவர் லெட்டர் எழுதுறாரா, என்று எண்ணி சிரிப்பாரோ என்று ஒரு சந்தேகம். அதற்குள் அங்கு கூட்டம் வேறு சேர்ந்து விட்டது. இதென்னடா வம்பு, சூப்பர் ஸ்டாருக்கு எப்படி தான் லெட்டர் எழுதுவது என்று யோசித்தேன். இத்தனை வருடம், இத்தனை பேர் எப்படி லெட்டர் எழுதுகிறார்கள்? அவர்கள் எல்லாம் எப்படி எழுதுகிறார்கள்? எனக்குத் தோன்றுவது போல் தான் எல்லோருக்கும் தோன்றுமா? ஒரே குழப்பமாய் இருந்தது. நான் அங்கும் இங்கும் உலாத்திக் கொண்டே முழிப்பதை பார்த்த அவர்,

என்ன சார், அட்ரஸ் எழுதிட்டீங்களா என்றார். அங்கு இருந்த மொத்த பேரும் என்னையே பார்த்தார்கள்.
இல்லை சார், அட்ரஸ் தெரியாது, என் பிரண்ட் ஃ போன் பண்ணி அட்ரஸ் சொல்றேன்னு சொல்லி இருக்கான், நீங்க சொன்ன மாதிரி ஒட்டிட்டேன், எடை போட்டு கொடுத்துருங்க, நான் ஸ்டாம்ப் ஒட்டி, போஸ்ட் பண்ணும்போது அட்ரஸ் எழுதிக்கிறேன் என்றேன்.

அவர் என்னை ஒரு மாதிரி பார்த்தார். நம்பவில்லை என்று தெரிந்தது. கையில் கவரை வாங்கி எடை போட்டு சொன்னார். திடீரென்று என்ன நினைத்தாரோ,

ரொம்ப முக்கியமான கவரா? ரெஜிஸ்டர் போஸ்ட் பண்ணுங்களேன், சாதாரண போஸ்டுக்கும், அதுக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை. ரெஜிஸ்டர் போஸ்ட்டுன்னா நாளைக்கே போயிடும், நீங்க சரியா போயி சேர்ந்துதான்னு ட்ராக் கூட பண்ணிக்கலாம், சாதாரண போஸ்ட்ல அது முடியாது என்றார்.

இல்லை அவ்வளவு அவசரம் இல்லை என்றேன்.
இல்லை உங்க நல்லதுக்கு சொல்றேன். ரெஜிஸ்டர் போஸ்டுன்னா இந்த சாக்குல போட்ருங்க, நீங்களும் ஷுயரா இருக்கலாம் இல்லை, அதனால சொன்னேன்! அப்புறம் உங்க இஷ்டம் என்று கை கழுவினார்.

அங்கு இருந்த அத்தனை பேருக்கும், நான் ஏதோ இத்தனை நாள் உள்ளே இருந்து விட்டு, வாழ்வில் முதன் முதலில் போஸ்ட் ஆபிஸ் வந்தவன் மாதிரி தெரிந்தேன். எனக்கு அங்கிருந்து ஓடிடணும் என்று தோன்றியது. தலையாட்டிக் கொண்டே,அவர் சொன்ன விலைக்கு ஸ்டாம்ப் வாங்கிக் ஒட்டிக் கொண்டேன். அவர் என்னையே பார்த்தார், நான் என் மொபைலையே பார்த்தேன்.

ஒரு வழியாய் அவர் பார்வையிலிருந்து தப்பி வெளியே வந்து போஸ்ட் பாக்ஸை தேடி ஓடினேன். என் மொபைலில் நான் சேமித்து வைத்திருந்த அட்ரசை எழுதினேன். ரஜினிகாந்துக்கே அட்ரஸ் தேவையா, "ரஜினிகாந்த், சென்னை" போட்டால் போதாதா, அவருக்கு என்ன விலாசம் வேண்டி இருக்கு என்று பட்டது. அட்ரசை எழுதி, அந்த பெரிய கவரை மடக்கி, தலைவரை நினைத்துக் கொண்டு அந்த சிவப்பு டப்பாவில் கருப்பு காந்தத்துக்கு ஒரு லெட்டரை போஸ்ட் செய்தேன். லெட்டரை கலெக்ட் செய்யும்போது அவர் என் கவரை எடுத்து அட்ரசை பார்த்து விடுவாரோ என்று ஒரு கணம் தோன்றியது. பார்த்தால் பார்க்கட்டும் என்று எரிச்சலில் நானே என்னை சமாதான படுத்திக் கொண்டேன். நாம் ஜெனுய்னாய் ஒரு உதவி கேட்கும்போது ஒருத்தனும் வர மாட்டான் தலைவருக்கு லெட்டர் எழுதும்போது எல்லா அட்வைசும் கொடுப்பார்கள். இந்தக் காலத்தில் மனிதர்கள் நல்ல விதமாய் நடந்து கொண்டாலே சந்தேகமாய் தான் இருக்கிறது. 

லெட்டர் போட்டு ஒரு வாரம் ஆன போதும் ஒரு பதிலும் இல்லை. தலைவரிடமிருந்து ஃபோனும் இல்லை! இரண்டு நாள் முன்பு, அந்த போஸ்ட் ஆபிஸ் பிரகஸ்பதி என்னை கடந்து சென்றான். அப்போது அவன் முகத்தில் லேசான குறுகுறுப்பு ஒன்று ஒட்டிக் கொண்டிருந்தது போல எனக்குப் பட்டது. என் கவரை எடுத்து பார்த்திருப்பானோ?

உலக சினிமா பேருரைகளில் நேற்று திரு. இராமகிருஷ்ணன், சத்யஜித் ரேயின் ஆளுமையை கொண்டு சொற்பொழிவாற்றினார். நான் சற்று தாமதாமாகத் தான் சென்றேன். நான் போன போது, 'ரே'வின் ஜல் சாகர் படத்தை பற்றி விளக்க ஆரம்பித்தார்.

காலம் காலமாய் ஜமிந்தாராய் இருந்து, இன்று நொடித்துப் போய், கடனாளி ஆன பிறகும், அதே கெளரவத்தை காப்பாற்ற பாடு படும் ஒரு ஜமிந்தார் பற்றிய கதை. இது தான் ரே எடுத்த படங்களிலேயே ஆகச் சிறந்தது என்றார் இராமகிருஷ்ணன். காரணம், இந்த ஒரு படத்தை உலகில் உள்ள யாருக்கு போட்டு காட்டினாலும், இந்திய இசை பற்றியும் அதன் உன்னதத்தை பற்றியும் எளிதாக உணரலாம். அதோடு, இந்தியா என்றவுடன், மாட மாளிகை, வண்ணக் கோலங்கள், மிராசுதார்கள், நிலச் சுவான்தார்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு வெள்ளைக்காரன் வந்து கொள்ளையடித்துப் போன ஒரு உண்மையான இந்தியாவை அறிமுகப்படுத்த சரியான படமாய் இது இருக்கும் என்றார். அதோடு மட்டுமில்லாமல், இந்தப் படத்தின் திரைக்கதை, நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, அரங்க வடிவமைப்பு என்று எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறது. இந்தப் படத்தை பார்த்த மறுநாள், குருதத்தின் "சாப், பீபி அவ்ர் குலாம்" படத்தையும் பார்க்கச் சொன்னார். காரணம், அது ஒரு பெண்ணின் பார்வையில் சொல்லப் பட்ட இதே கதை என்றார்.

ரே வின் ஒவ்வொரு கதையும் ஒரு வாழ்க்கையின் திரையிடல். அவர் போல வங்காளத்தின் நடுத்தர வர்க்க மக்களை யாரும் இந்தியா சினிமாவில் காட்டவில்லை. ஒவ்வொரு கதைக் கருவையும் பார்த்தாலே, ரே வை ஏன் இவ்வளவு தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்று புரிகிறது. இந்தியாவின் வறுமையை காட்டி காசு சம்பாதித்தவர் ரே என்று ஒரு பெரிய குற்றச்சாட்டு அவர் மேல் உண்டு என்றும், அதை மறுத்த இராமகிருஷ்ணன் ரே வை போல இந்தியாவை காட்டியவர்கள் யாரும் இல்லை. வங்காளிகள் ரே வின் படத்தை மட்டும் பார்த்தால் போதும், வங்காளத்தை பற்றி அவர்கள் அத்தனையும் அறிந்து கொள்ளலாம் என்றார். சாதிக் கொடுமைகளை, மத மூட நம்பிக்கைகளை ரே வை போல சாடியவர் யாரும் இல்லை என்பதை அழுத்தமாய் பதிவு செய்தார்.

இராமகிருஷ்ணன் ஒரு தேர்ந்த கதை சொல்லி. தான் பார்த்த படத்தை அடுத்தவர்களுக்கு அப்படியே சொல்வது ஒரு கலை. [நான் இதை நன்றாய் செய்வேன், அது தான், கொஞ்சம் தூக்கி வைத்து பேசுகிறேன்!] அவர் ஒரு படத்தின் கதையை சொன்ன பிறகு [எந்த வித தங்கு தடையுமில்லாமல்] நாம் அந்தப் படத்தை பார்க்கவே வேண்டியதில்லை. அவர் சொல்வதிலேயே நமக்கு அந்த படம் பார்த்த உணர்வு வந்து விடுகிறது. எனக்கு நினைவில் தெரிந்து, நேற்று மட்டும் அவர் ரே யின் ஜல்சாகர், நாயக், பதேர் பாஞ்சாலி, அபு டிரயாலஜி, மகாநகர், ஆரண்யத்தின் ராத்திரி, சாருலதா, தேவி, சத்கதி ஒன்பது படங்களை கண் முன் காட்டினார். அதன் சாரம் இங்கே...

நாயக் - விமானத்தில் சீட்டு கிடைக்காத காரணத்தால், இரயிலில் பயணம் செய்யும் ஒரு நடிகன். ஒரு நடினை பொது இடத்தில் பார்த்தால் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்.

மகாநகர் - ஒரே நகரத்தில் அப்பா மாமா வேலை செய்கிறார், மகள் வேசியாகிறாள். நகரம் ஒரு எளிமையான குடும்பத்தை எப்படி சீர் குழைக்கிறது.

சாருலதா - தன் தனிமையை, வெறுமையை போக்க ஒரு அறிவுத் துணையை தேடும் ஒரு குடும்பப் பெண், அந்தத் துணியை தன கொழுந்தனிடம் காண்கிறாள்.

தேவி - ஒரு சாதாரண பெண்ணை தேவியாக்கி மக்கள் பூஜிக்கிறார்கள். அவளின் உளவியல் கூப்பாடுகள்.

ஆரண்யத்தின் ராத்திரி - நகர வாழ்வை வெறுத்து ஆரண்யம் புகும் நான்கு இளைஞர்கள். சத்கதி - நல்ல நாள் குறிக்க பிராமணர் வீட்டுக்கு வந்த சூத்திரன் ஒருவன் இறந்து போவது. அதை அந்த பிராமணன் எப்படி எதிர் கொள்கிறான்.

எத்தனை விதமான கதைக் கருக்கள். எத்தனை விதமான வாழ்க்கை.  என்ன ஒரு தரிசனம். ரே வின் படங்களை காட்சி வாரியாக இராமகிருஷ்ணன் சொல்லும்போது, அவரையும் அறியாமல் அவரிடம் இருக்கும் எழுத்தாளனும் விழித்துக் கொள்கிறான் என்று தோன்றுகிறது. அவ்வப்போது அவர் அவரின் சொந்த அனுபவங்களை இணைத்து கதை சொல்லும் பாங்கு மிக அருமை. ஜல் சாகர் கதையை கேட்டதும், போலி கெளரவத்துக்காக இப்படியுமா இருப்பார்கள் என்று நினைத்தேன். இன்றும் அப்படி இருக்கிறார்கள் என்று தான் பார்க்கப் போன ஒரு நொடித்துப் போன ஜமின்தாரை பற்றி இராமகிருஷ்ணன் சொன்னார். ஒன்றுமே இல்லையென்றாலும், அது தர்பார், இன்றும் அவரை வேலையாட்கள் மகாராஜா என்று தான் அழைக்கிறார்கள். மேலே சட்டை கூட இல்லாதவன் அங்கு திவான். ராஜா இன்றும் தன வீட்டில் குளிக்கப் போகும்போது அவர் முன் ஒருவர் வாளோடு நடந்து செல்வது, வந்தவருக்கு விருந்து உபச்சாரம் என்றால், பக்கத்து பெட்டி கடையில் அக்கவுண்ட் என்று அவர் சொன்ன நிஜ வாழ்வு வியப்படையச் செய்தது. உண்மை சில சமயங்களில் கற்பனையை விட புதிராய் இருக்கிறது!

இராமகிருஷ்ணன் தான் ஒரு பெரிய ஊர் சுற்றி என்றார், அதோடு இந்தியா முழுவதும் நான் அலைந்து திரிந்திருக்கிறேன். நாம் இப்போது நடப்பதே இல்லை, அப்படியே நடந்தாலும் ஒரு இருக்கையிலிருந்து இன்னொரு இருக்கை. அவ்வளவு தான் நம் நடை. உலகத்திலேயே அபத்தமான நகைச்சுவை "நான் இப்போ வாக்கிங் போறேன் சார்" என்பது தான்! நடக்கத் தானே கால்கள் இருக்கின்றன. நடக்கவே முடியாதவன் நடந்தால் தான் அவன் அப்படிச் சொல்லலாம், உனக்கு கை கால்கள் நல்லா தானே இருக்கு. நான் ரயிலில் நிறைய சுற்றி இருக்கிறேன். ரயிலின் வெளியே தெரியும் உலகத்தை விட, உள்ளே இருக்கும் உலகம் விநோதமானது. உடனே சிநேகம் பிடித்துக் கொள்கிறார்கள், காதலிக்க தொடங்கி விடுகிறார்கள். அதை பார்ப்பதே அலாதி அனுபவம். நானும் ரயில் பயணத்தின் பொது அதை கவனிப்பதுண்டு. ஒவ்வொருவரும் எப்படி உணவு எடுத்து வருகிறார்கள், அவர்களின் பொருள்கள் எப்படி பேக் செய்திருக்கிறார்கள் என்பதை கவனிப்பது ஒரு சுவாரஸ்யம்.

இராமகிருஷ்ணன், பதேர் பாஞ்சாலியின் மிட்டாய்காரன் காட்சியை விவரிக்கும்போது, தன்னுடைய கிராமத்தில் வரும் மிட்டாய்காரனை பற்றி சொன்னார். அப்போது கையில் காசு இருக்காது, கண்ணாடி வழியே லட்டு, மிக்சர் எல்லாம் தெரியும். சும்மாவேனும், அந்த கண்ணாடியில் கை வைத்து லட்டு எடுத்து சாப்பிடுவது போல் பாவனை செய்வோம். நான் நாலு லட்டு சாப்ட்டேன்டா என்பான் ஒருவன், அவனை வெல்ல இன்னும் வேக வேகமாய் லட்டு எடுத்து சாப்பிடுவது போல் பாவனை செய்வோம் என்றார். இதை இந்தியாவில் உள்ள அத்தனை குழந்தைகளும் செய்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.

இப்படி எழுதிக் கொண்டே போகலாம். மனிதர் கொஞ்ச நஞ்சமா பேசுகிறார்!! இத்தனை திரைப்படங்கள், இத்தனை கதைகள், இத்தனை சுவையான தகவல்கள்..கேட்க கேட்க பரவசமாய் இருந்தது. என்ன தான் நான் நினைவில் உள்ளதை எழுதினாலும், நேரில் எனக்கு உண்டான அனுபவம் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. எப்படியும் இதையும் டீவிடியாய் போடுவார்கள். பார்க்க முடியாதவர்கள் அதையாவது வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அப்படியாவது சினிமாவை கொஞ்சம் கற்றுக் கொள்ளுவோம்!



இந்த மாதம், தி. நகரில் உள்ள சர். பி. டி. தியாகராய ஹாலில் எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள் வெவ்வேறு உலக சினிமா ஆளுமைகள் பற்றி ஒரு வாரத்துக்கு பேருரை ஆற்றுகிறார். இந்த நிகழ்வை உயிர்மை பதிப்பகம் நடத்துகிறது. சென்ற வருடம் ரஷ்ய கலாச்சார மையத்துடன் சேர்ந்து ஏழு இலக்கிய பேருரைகள் இவர்கள் நிகழ்த்தினார்கள். இந்த வருடம் உலக சினிமா ஆளுமைகள். இராமகிருஷ்ணனின் வலைப்பக்கத்தில் இதை பற்றிய அறிவிப்பை பார்த்தவுடன், என் கால/நேரத்தில் ஒரு கைக்குட்டையை போட்டு வைத்து விட்டேன்! கடந்த செவ்வாய் கிழமை அகிரா குரோசவாவுடன் இந்த நிகழ்வை தொடங்கினார்கள்.

அலுவலக வேலை காரணமாக ஏழு நாளும் போக முடியாது என்றாலும், கூடிய மட்டும் போய் விடுவது என்று தீர்மானித்துக் கொண்டேன். சென்ற முறை இலக்கியத்திற்கே வந்த கூட்டத்தை பார்த்ததும், சரி, இந்த முறை சினிமா வேறு, கேட்கா வேண்டும், அதனால் பெரிய ஹாலாய் புக் செய்திருப்பார்கள் என்று நினைத்தேன். ரஷ்ய கலாச்சார அரங்கை காட்டிலும் சிறிதாய் இருந்தது ஏமாற்றம் அளித்தது. நிகழ்ச்சியின் முதல் நாள் என்பதால் வழக்கமான தொடக்க உரைகள் இருந்தன. முதலில் மனுஷ்ய புத்திரன் பேசினார். மழை நாளில் இத்தனை பேர் வந்தது மகிழ்ச்சி என்றார். பிறகு இயக்குனர் பாலுமகேந்திரா பேசினார். வயதாகிவிட்டது. சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார். உலக சினிமா என்பது இப்போது தூரமில்லை. நமக்கு மிக அருகில் இருக்கிறது, எந்தப் படம் வேண்டுமென்றாலும் டீவிடி கிடைக்கிறது. இப்படித் தான் நான் காய் கரி வாங்கச் சென்று, அரைக்கிலோ தக்காளியும், நூறு கிராம் பச்சை மிளகாயுடன், சிட்டிசன் கேனும் வாங்கி வந்தேன் என்றார். ஒரு சாதாரண விஷயம், ஒரு கலைஞனின் பார்வையில் எத்தனை சுவாரஸ்யமாய் மாறி விடுகிறது என்று தோன்றியது. நல்ல சினிமாவை பற்றி பேசும் அதே தருணத்தில், நல்ல ரசனை கொண்ட பார்வையாளர்களையும் உருவாக வேண்டியது நம் கடமை, அதனால் Film Appreciation என்ற ஒரு பாடத்திட்டத்தை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். இதை இவர் எல்லா மேடைகளிலும் வைப்பதாகவும், யாரும் கண்டு கொள்ளவில்லை என்றும் ஆதங்கப்பட்டார். அத்தியாவசிய தேவைகளையே அரசு பூர்த்தி செய்ய முடியாமல் முழிக்கிறது, இதை எல்லாம் எப்படி செய்யும் என்று எனக்குத் தோன்றியது. பாலுவை பார்த்து பரிதாபமாய் இருந்தது. சரி, அப்படியே வைத்துக் கொள்வதாய் இருந்தாலும், அப்படி என்ன மாற்றம் வந்து விடப் போகிறது, உலக சினிமாக்கள் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தி விடப் போகிறது என்று நினைத்தேன். அதற்கு இராமகிருஷ்ணன் அவர்கள் அவரின் உரையில் மிக அழகாய் பதில் சொன்னார். அவர் அகிராவின், ஒவ்வொரு படத்தை விளக்கும் போதும், ஒரு நல்ல சினிமா என்பது என்னவெல்லாம் சொல்ல முடியும், செய்ய முடியும், அகிராவின் படங்கள், ஏன் இன்றளவும் உலக சினிமாக்களில் முதன்மையாய் இருக்கிறது என்பதற்கு உதாரணமாய், ரஷோமொன் திரைப்படத்தில் "உண்மை என்பது ஒன்றில்லை, அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். உண்மை என்ற ஒன்றை நேருக்கு நேராய் யாராலும் புரிந்து கொள்ளவே முடியாது. அதோடு, மனிதன் எப்போதுமே சுயநலம் உள்ளவன் தான். அவனால் அந்த இயல்பை மாற்றிக் கொள்ளவே முடியாது. வேண்டுமென்றால் அதை குறைத்துக் கொண்டு வாழ முயற்சிக்கலாம்" என்றும், டெர்சு உசாளவில் "மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழப் பழக வேண்டும், அவன் இயற்கையை வணங்க வேண்டும், அவன் பின் வரும் சந்ததியினருக்கு நல்ல உணவு, குடிதண்ணீர் இவைகளை விட்டுச் செல்ல வேண்டும். போன்ற செய்திகள் பொதிந்து இருப்பதையும் விளக்கிச் சொன்னார். இந்த இரு உதாரணங்கள் என் ஞாபக அடுக்குகளிலிருந்து தான் சொல்கிறேன், இதற்கு மேலும் நிறைய விஷயங்களை அந்த இரு மணி நேர உரையில் அவர் பகிர்ந்து கொண்டார். அவர் இத்தனை நுணுக்கங்களையும் சொன்ன பிறகு தான், இத்தகைய சினிமாக்கள் பார்வையாளனின் ரசனையை உயர்த்த மட்டும் அல்ல, அவனுடைய வாழ்வையே மேம்படுத்தவும், அதனால் ஒரு நல்ல சமுதாயம் அமையவும் இவைகள் உதவும் என்று புரிந்தது.

மன்னிக்கவும், பாலுவிலிருந்து ராமகிருஷ்ணனுக்கு தாவி விட்டேன். பாலுவிற்குப் பிறகு, முருகதாஸ் பேசினார். அவர் நெடுங்குருதி படித்திருப்பது அறிந்து மகிழ்ச்சியை இருந்தது. அத்தகைய நாவல்களை படித்த பிறகும், எப்படி துப்பாக்கி எடுக்கிறார்? என்று தான் புரியவில்லை.

பிறகு வந்த வசந்த பாலன் எது நல்ல சினிமா? ஏன் "நல்லவனுக்கு நல்லவன்" நல்ல சினிமா இல்லை [அதானே, ரஜினி வேறு இருக்கிறார்!], என்று தெரிந்து கொள்வதற்காகவே உங்களை போல நானும் வந்திருக்கிறேன் என்றார். என் அருகில் இருந்த நண்பன், ரஜினி எல்லாம் வர மாட்டாரா என்று கேட்டார். அதற்கு நான், ரஜினியே ஒரு உலக சினிமா, அவர் எதற்கு இதற்கெல்லாம் வர போகிறார் என்று பதில் சொன்னேன்.

அதன் பிறகு இறையன்பு [ஐ.ஏ.எஸ் போடாமல் இருந்தால் இவரை தெரியாதா?] பேசினார். ரத்தினச் சுருக்கமாக, சொல்ல வந்ததை மிக அருமையாய் சொன்னார். மனுஷ்ய புத்திரன் மழையில் இத்தனை பேர் வந்தது சந்தோசம் என்றதை சுட்டிக் காட்டி, இவர்கள் மழைக்கு ஒதுங்கியவர்கள் அல்ல, இங்கு பெய்யவிருக்கும் உலக சினிமா என்னும் மழையில் நனைய வந்தவர்கள் என்று டைமிங் பஞ்ச் வைத்தார். சிறந்த பேச்சாளர்!

பிறகு எஸ். இராமகிருஷ்ணன் தன உரையை ஆரம்பித்தார். எத்தனையோ தலை சிறந்த இயக்குனர்கள் இருந்தும், இந்த ஏழு பேரை தான் தேர்ந்தெடுத்ததற்கு காரணாம், இவர்கள் அனைவரும் உலக இலக்கியங்களை படங்கள் ஆக்கியவர்கள் என்றும், இந்த விஷயத்தில் நானும் கொஞ்சம் சுயநலம் உள்ளவனாய் இருக்கிறேன், அதனால் தான் இலக்கியம் சார்ந்த படங்களை எடுத்தவர்களை தேர்ந்தெடுத்தேன் என்றார். உரையின் பிற்பகுதியில் "சுயநலம் இல்லாமல் மனிதன் வாழ முடியாது, அதை குறைத்துக் கொண்டு வாழப் பழகலாம்" என்று அகிராவின் ரஷோமான் செய்தியை அவரே அழுத்திச் சொன்னது அருமையான முரண்! அடுத்த முறையாவது, இலக்கியம் சாராத இயக்குனர்களை அவர் அறிமுகப்படுத்த வேண்டும். அதே போல, பைரசி சீடிக்களை இத்தகைய நிகழ்ச்சியில் விற்கக் கூடாது என்ற யு. டீ.வி தனஞ்செயனுக்கு மனுஷ்யபுத்திரனும், இராமகிருஷ்ணனின் பதிலும் உண்மை என்பது ஒன்றில்லை, அது அவரவர்க்கு மாறுபடும் என்பதை விளக்கியது :-)

இராமகிருஷ்ணன் இந்தியாவில் கலை அரங்ககளே இல்லை, ஒரு உலக சினிமாவை பார்க்க வேண்டும் என்றால், நீங்கள் ஏதாவது ஒரு சங்கத்தில் உறுப்பினராய் இருக்க வேண்டும். வருடத்து ஒரு முறை அவர்கள் போடும் படங்களை தான் பார்க்க வேண்டும், ஐரோப்பாவில் அப்படி இல்லை, எப்போதுமே அங்கு உலக சினிமாக்கள் ஓடிக் கொண்டே இருக்கும், நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் பார்க்கலாம் என்றார். நினைக்கும்போதே அருமையாய் இருந்தது. சென்னையில் ஒரு அரங்கத்தில் வெவ்வேறு உலக சினிமாக்கள் மட்டுமே வருடம் முழுவதும் ஓடும் என்றால் எப்படி இருக்கும். சென்னையில் கூட இதை செய்யவில்லை என்றால் வேறு எங்கும் செய்ய முடியாது!!

உரையை தொடர்ந்த அவர், அகிராவின் குழந்தைப் பருவம், அவர் எப்படி இயக்குனர் ஆனால், அவருக்கு ஆசான்கள் யார், அவர் எப்படி ஒரு படத்தை உருவாக்கினார், சினிமாவின் மீது எத்தகைய மோகம் அவருக்கு இருந்தது என்று இரண்டு மணி நேரம் தண்ணீர்க் கூட குடிக்காமல் பேசினார். அகிராவை வியப்பதா, அவரை இத்தனை நுணுக்கமாய் ஆராய்ந்து, தேடித் தேடித் படித்து, படங்கள் அத்தனையும் பார்த்து, அத்தனை படங்களையும் உணர்ந்து இந்த இரண்டு மணி நேரத்தில் கொஞ்சம் கூட தொய்வில்லாமல் இவர் ஆற்றிய உரையை வியப்பதா என்று புரியவில்லை. இறையன்பு சொன்னது போல், இவர் 45 வயதுக்குள், 450 வருடம் வாழ்ந்து விட்டவர். இவரை போல ஒரு ஆசிரியர் இருந்தால், மணாவர்களுக்கு இலக்கியம் ஏன் கசக்கப் போகிறது? இவரை நம் கல்லூரிகள், பல்கலைகழகங்கள் நல்ல முறையில் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ஒரு கெளரவப் பேராசிரியராக வைத்துக் கொள்ளலாம். ஏதோ, அவர் சொன்னதில் இருந்து, எனக்கு நினைவில் உள்ளதை இங்கே தூவப் பார்க்கிறேன். பெரும்பாலும் விட்டுப் போயிருக்கும் என்று தான் நம்புகிறேன்.

அகிரா தன் குழந்தை பருவத்தில் ஓவியம், வாழ் சண்டை தவிர வேறு எதிலும் நாட்டம் கொள்ளவில்லை. எல்லோரும் அவரை உதாசீனப்படுத்திய போதும், அவரை மீட்டெடுத்தது ஒரு ஆசிரியர்.

இவரின் கதையை அடிப்படையாய் வைத்துத் தான் "தாரே ஜாமீன் பர்" என்ற ஹிந்தி படம் தொடங்கியது.

இவர் எமொசனிடம் 17 படங்கள் உதவி இயக்குனராய் இருந்தார். அத்தனை படங்களில் வேலை செய்தால் தான் படத்தை இயக்கம் கலை உங்களுக்குப் பிடிபடும் என்பது அகிராவின் கருத்து.

முதல் படத்தில் எமோசன் அகிராவை எடுபிடியாய் வைத்திருந்தார், இரண்டாவது படத்தில் அரங்கை கவனிக்கச் சொல்வார். மூன்றாவது படத்தில் அரங்கை இவர் தான் தீர்மானித்தார். நான்காவது படத்தில் அந்த அரங்கில் நடிகர்களுக்கு இவர் தான் நடிப்பு சொல்லிக் கொடுப்பார். ஐந்தாவது படத்தில் எமொசான் இடத்தில் இவர் தான் இருப்பார்!
அகிரா படப்பிடிப்புத் தளத்தில் ஒரு பைத்தியக்காரனை போல் திரிவார். காலையிலேயே உதவி இயக்குனர்களை கூப்பிட்டு இன்று என்னால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு திட்டுவேன், பொறுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விடுவார்.

அகிராவின் பார்வை கூர்மையானது. எவ்வளவு சிறப்பாய் அந்தக் காட்சியை/அரங்கை வடிவமைத்திருந்தாலும், ஒரு சிறு குறை அவருக்குத் தெரிந்து விடும். அதை சரி செய்யச் சொல்வார். சீன மொழியே தெரியாமல், காட்சிக்காக வைக்கப்பட்ட சீன மொழியில் எழுதப்பட்ட ஒரு பலகையில் தவறிருப்பதை சரியாகச் சுட்டிக் காட்டினார்.

நல்ல சினிமா என்பது திரைக்கதை மேஜையிலும், படத்தொகுப்பு மேஜையிலும் தான் உருவாகிறது என்பார்.

ஒரு மோசமான திரைக்கதையை வைத்துக் கொண்டு எவ்வளவு நல்ல இயக்குநராலும், நல்ல படத்தை அளிக்க முடியாது. அதே சமயம், ஒரு நல்ல திரைக்கதையை வைத்துக் கொண்டு ஒரு மோசமான இயக்குநராலும் நல்ல படத்தை அளிக்க முடியும் என்பார்.

பிற்கால வயதில் அகிரா, தான் நினைத்த படி படத்தை எடுக்க விட மாட்டேன் என்கிறார்கள், நான் இருந்து என்ன பயன் என்று வருந்தி தற்கொலைக்கு முயற்சித்தார்.

ஒளிப்பதிவாளரையும், இசையமைப்பாளரையும் அகிரா அடிக்கடி மாறுவதில்லை. நாங்கள் மணம் புரிந்தவர்கள், எங்களுக்குள் சண்டை வரலாம், ஆனால் சேர்ந்து தான் வாழ்வோம் என்பார்.

அகிராவின் எல்லா படங்களிலும் ஒரு ஆசான், மாணவன் உருவகம் இருந்து கொண்டே இருக்கும்.

அகிரா ஒரு படம் தொடங்கும்போது, தன் திரைக்கதை ஆசிரியர்களுடன் சுடு நீர் இருக்கும் ரிசார்ட்டுக்கு சென்று விடுவார். அங்கு அனைவரும் வட்டமாய் அமர்ந்து கொண்டு, ஒரே சீனை எல்லோரும் தனித் தனியே எழுதுவார்கள். பிறகு ஒரு மணி நேரம் அதை வைத்துக் கொண்டு எது செறிந்த சீன் என்று சண்டை போடுவார்கள். இறுதியாக ஒன்றை தேர்ந்தெடுப்பார்கள். அப்படி இவர்கள் சண்டை போட்டு தேர்ந்தெடுக்கும் சீன்களை அகிரா தான் ரெப்ரீ என்று அழைக்கும் ஒகுனியிடம் காட்டுவார். அவர் சுத்த நான்சென்ஸ் என்று கிழித்துப் போட்டு விடுவார். பிறகு மறுபடியும் ஒரு அமர்வு, மறுபடியும் ஒரு விவாதம். இப்படி தான் அகிராவின் படத்துக்கு திரைக்கதை உருவாகும்.

அகிராவின் படங்கள் உலகப் படங்களாய் இருப்பதன் காரணாம், அது வாழ்க்கையை பிரதிபலிக்கிறது, மனிதனின் குணாதிசியங்களை கேள்வி கேட்கிறது, ஆய்வு செய்கிறது.

அவர் தூவியதிலிருந்து, நானும் என்னால் முடிந்ததை தூவி இருக்கிறேன். மொத்தத்தில் நல்ல ஒரு அனுபவம்.

இந்த மாதம் 29ம் தேதி ஒரு அழகிய [அழகில்லாத குழந்தை என்று ஒன்று உண்டா என்ன?] பெண் குழந்தைக்கு அப்பாவானேன். சென்ற வருடம் இதே மாதத்தில் பெரியப்பா ஆனதை தொடர்ந்து இந்த வருடம் அப்பா ஆகியிருக்கிறேன். இப்போது எனக்கு இரு மகள்கள். எந்தக் குழந்தையாய் இருந்தாலும் சந்தோசம் என்றாலும் ரகத்துக்கு ஒரு மிட்டாயை கையில் எடுக்கும் குழந்தையை போல, ஒரு பெண் இருக்கிறாள், இனி ஒரு பையன் வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் மனைவியிடம் இப்படி பாட்டுப் பாடி மிரட்டிக் கொண்டிருந்தேன்! 

எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னை போலவே இருப்பான் [இது ஒன்று போதாது?]
தனக்கொரு பாதையை வகுக்காமல் தறு - 
தலையை போலவே திரிவான்!

அவள் கிலி பிடித்துப் போயிருந்தாள். நல்லவேலையை அப்படி எதுவும் நடவாததால் நம் சமூகம் தப்பியது! 

எனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று நான் நினைத்தாலும்,  என் ஆழ் மனது அந்த சாபத்தை எனக்கு நினைவு படுத்திக் கொண்டிருந்தது. அது என்னவென்றால்..[இருங்க ஒரு  பொசிஷன்ல போய் நின்னுக்குறேன்...]

ஒரு பதினாறு, பதினேழு வருடம் இருக்கும். பஸ் பாஸ் வாங்க நண்பர்கள் புடை சூழ போயிருந்தேன். என் பாசை வாங்கிக் கொண்டு பாக்கி சில்லறைக்காக காத்திருந்தேன். பாஸ் கொடுப்பவர், சில்லறை இல்லை என்றார். சரி பாக்கி சில்லறையை என் பின்னால் வரும் நண்பனின் கணக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள், அவனிடம் பைசா கம்மியாக இருக்கிறது என்றேன். அவர் கடுப்புடன் என்னை பார்த்து விட்டு, வயிறு முதல் நெஞ்சு வரை எறிந்து, இந்தா பிடி சாபம் என்பது போல் "உனக்கு அஞ்சு போட்ட புள்ள பொறக்கும் போ" என்றார். ஒன்றுமில்லை, பாஸ் விலை, ஏதோ கால் ரூவாயில் முடியும் என்று ஞாபகம். என்னிடம் முப்பது காசு இருந்தது. கால் ரூவாய் போக, ஐந்து பைசாவுக்காக காத்திருந்தேன். சில்லறை இல்லை என்றவுடன், நான் விட்டு விட்டு சென்று விடுவேன் என்று நினைத்திருக்கிறார் அவர்! என் பின்னால் வந்தவனிடமோ இருபது பைசா தான் இருந்தது. அதை அங்கே அட்ஜஸ்ட் செய்து கொள்ள ஒரு உபாயம் சொன்னேன். அந்த பரதேசிக்காக நான் வாதாடப் போய் விமோசனமே இல்லாத ஒரு சாபத்தை பெற்றுக் கொண்டேன்! அவர் சாபம் பலிக்கத் தான் ஆரம்பித்து விட்டது போலும்! இன்னும் நாலு பாக்கி இருக்கு!! பாக்கலாம்..

பெண் குழந்தை என்றால் சாபமா என்று நீங்கள் என்னை கேட்கலாம். அரசு வேலையில் சொற்ப சம்பளத்தில் வேலை பார்க்கும் அவரை பொறுத்தவரை பெண் குழந்தைகள் என்றால் சாபம் தானே? அதனால் அவர் என்னை அப்படி சபித்திருக்கலாம், சபித்திருக்கலாம் என்று சொல்லே தவறு! சொல்லியிருக்கலாம்!! அதிலும் எனக்கு ஐந்து பெண் குழந்தைகள் என்று சொன்னார். [என்னா ஒரு வில்லத்தனம்!!] ஒரு ஐந்து பைசா மனிதனை எந்த அளவுக்குத் தள்ளுகிறது! என்னை பொறுத்தவரை அவர் என்னை வயிறெரிந்து சபித்ததாக நினைத்து கொண்டு என்னை அளவுக்கு மீறி ஆசிர்வதித்து விட்டார் என்று தான் தோன்றுகிறது. பாக்கலாம்...

அப்பாவுக்கும், மகளுக்குமான உறவு என்றுமே அலாதி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதை இனி நானே என் சொந்த அனுபவத்தில் உணரப் போகிறேன். ஏனோ தெரியவில்லை, ஆண் குழந்தையை நல்லவனாய் வளர்க்கத் தோன்றுகிறது பெண் குழந்தையை பாதுகாப்பாய் வளர்க்கத் தோன்றுகிறது.  இப்போதே என் மகளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். குழந்தை பிறந்து ஐந்து நாள் ஆகிவிட்ட போதும், என் பார்வைக்கு அவள் தீர்ந்து போகவே இல்லை. அவ்வளவு மெல்லிய, கறைபடியாத, தூய்மையான ஜீவன் பரிசுத்தமாய் என் முன்னே உறங்குகிறது.  உறங்கும் குழந்தையை நீங்கள் சிறிது நேரம் பார்த்ததுண்டா? அதை விட ஒரு அற்புதமான கணம் இந்த உலகில் உண்டா? ஒரு குழந்தையை அவ்வளவு அருகில் தொடர்ந்து பார்க்கும்போது நாமும் குழந்தையாய் மாறி விடுகிறோம் என்று தோன்றுகிறது. இல்லையென்றால்  குழந்தை சோம்பல் முரிப்பதையும், கொட்டாவி விடுவதையும் தூக்கத்தில் சிரிப்பதையும் கண்டு நாம் அத்தனை ஆச்சர்யப்பட மாட்டோம். குழந்தைகள் எப்படி சின்ன சின்ன விஷயத்தை ஆச்சர்யமாய் பார்க்கிறதோ, அதே போல், நாமும், ஒரு குழந்தை இயல்பாய் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் கண்டு சிலாகிக்கிறோம். 

அபியும் நானும் படத்தில் சொன்னதை போல,

ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போது ஒரு தகப்பனும் பிறக்கிறான்.
குழந்தைகள் வளர்ந்து விடுகின்றன, ஆனால் சில தகப்பன்கள் வளர்வதே இல்லை!

அப்படி நடக்காமல் நானும் என் மகளுடன் சேர்ந்து வளரப் போகிறேன். இனி வரும் காலங்களில் என் மகளிடம் நான் கற்ற பாடங்களை இங்கு பதிவு செய்வேன் என்பதில் சந்தேகமில்லை.

"எந்தன் வாழ்க்கையில் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே
நானும் வாழ்ந்தது கொஞ்சம் அந்த வாசத்தில் வந்துதித்து உயிரில் கலந்தாய் என் உயிரே"

மற்றொரு பிறந்தநாள். வருடம் தவறாமல் என்னை வாழ்த்த வந்து விடுகிறது. இப்போதெல்லாம் பிறந்த நாள் வந்தாலே, எனக்குள் ஒரு பயம் வந்து விடுகிறது. அந்த நாள் முடிவதற்குள் உலகம் அழியாமல் இருக்க வேண்டும்,பூகம்பம் வராமல் இருக்க வேண்டும், சுனாமி சுழற்றி அடிக்காமல் இருக்க வேண்டும், தீவிரவாதிகள் எந்த கோபுரத்தையும் தகர்க்காமல் இருக்க வேண்டும், எந்த ரயிலும் கவிழாமல் இருக்க வேண்டும், சாதிக் கலவரங்கள், மதக் கலவரங்கள் வெடிக்காமல் இருக்க வேண்டும், எந்தக் குழந்தையும் பேருந்தின் ஓட்டையில் விழுந்து சாகாமல் இருக்க வேண்டும்...இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்! இப்படி ஒரு பயம் எனக்கு.அப்படி ஏதேனும் நடந்தால் காலத்துக்கும் அந்த வடுவை யார் சுமப்பது? பிறகு பிறந்த நாளை கொண்டாட மனம் வருமா? செப்டம்பர் 11 அல்லது டிசம்பர் 6 ல் எனக்கு பிறந்தநாள் என்று யாராவது உங்களிடம் சொன்னால் உங்களுக்கு அவரை வாழ்த்தத் தோன்றுமா? அந்த நாளில் மரித்த ஆயிரம் ஆயிரம் பேர் தானே நினைவுக்கு வருவார்கள்? ரொம்ப நெகட்டிவாய் யோசிக்கிறேன் என்று தெரிகிறது, உங்களுக்கு இப்படி எல்லாம் யோசனை வருமா? இது வரை வரவில்லை என்றாலும் இனிமேல் வரும் என்று நம்புகிறேன், ஏதோ என்னால் முடிந்தது!

எனக்கு பெர்த்டே பார்ட்டி என்றால் அலர்ஜி. அலுவலகத்தில் மாதத்திற்கு ஒரு முறை அந்த மாதத்தில் பிறந்த அத்தனை பேரையும் வரிசை கட்டி நிறுத்தி வைத்து கேக் வெட்டச் சொல்வார்கள். அதை பார்த்து எல்லோரும் கை கொட்டி சிரிப்பார்கள். தேவையே இல்லாமல் பேசுவார்கள், மொக்கை போடுவார்கள். செல்போனில் சுற்றி சுற்றி படம் எடுப்பார்கள், பிறகு அந்த படத்தை நீங்கள் பார்க்கவே முடியாது! கொஞ்சம் நெருங்கிய நண்பர்களாய் இருந்தால் கன்னத்தில் கேக்கை தடவி விடுவார்கள். அப்புறம் ட்ரீட் என்று அன்று பிறந்தவனை படுத்தி எடுப்பார்கள். என்னிடம் கேட்டால் எதுக்கு ட்ரீட் என்பேன்? நீ பொறந்ததுக்கு நாங்க என்ஜாய் பண்றோம்ல என்பார்கள். நான் பொறந்ததுக்கு நானும் என்ஜாய் பண்ணணும்ல, இத்தனை பேருக்கு ட்ரீட் கொடுத்தா நான் எப்படி என்ஜாய் பண்றது என்று எஸ்கேப் ஆகிவிடுவேன்.

என் மனைவிக்கு பிறந்த நாள் என்றால் கொள்ளை பிரியம். அது என்னவோ, ஆண்களை விட பெண்களுக்கு இதிலெல்லாம் கொஞ்சம் இஷ்டம் அதிகம் போலும். நேற்றே எனக்குத் தெரியாமல் கேக் எல்லாம் ஆர்டர் செய்து திடீரென்று இரவு என்னை வெட்டச் சொல்லி ஆச்சர்யப்படுத்தினாள். வீட்டில் உள்ளவர்கள் அபஸ்வரமாய் பாட வேறு செய்தார்கள்! எனக்கு கூச்சமாய் இருந்தது!! வெளியில் தெரிந்தால் சங்கட்டமா இருக்காது?

இன்று பொழுது வழக்கம் போலவே புலர்ந்தது. மனைவியுடன் நங்கநல்லூர் வரை போக வேண்டிய வேலை இருந்தது. காரில் செல்லும்போது வேகத்தடைக்கு வேகம் குறைத்தால் பின்னால் காரில் வருபவன் ஹார்ன் அடிக்கிறான். கண்ணாடி வழியாய் பார்த்து என் நிலையை சொன்னேன்.அவர் கையை ஆட்டி ஆட்டி தான் வீட்டில் போட முடியாத சண்டை எல்லாம் அந்த இரண்டு நொடியில் போட்டார். எனக்கு இன்று பிறந்தநாள் என்று சைகை எல்லாம் செய்தேன், அவருக்கு புரிந்தது என்று தான் நினைக்கிறேன். அவரின் சைகையை பார்த்தால் அவ்வளவு அசிங்கமாய் திட்டவில்லை என்று தான் எனக்குப் பட்டது. ஒரு வழியாய் போகும் இடம் சென்று சேர்ந்தோம். ஆளில்லாத செருப்பு ரேக்கில் செருப்பை பார்க் செய்து விட்டு நேராய் ஆஞ்சிநேயர் கோவிலுக்கு போனோம். இந்தப் பாழும் மனம், ஆஞ்சிநேய தரிசனத்தை விட, அந்தக் கோயிலின் வடையின் தரிசனத்தையே எதிர் நோக்கி இருந்தது. ஆஞ்சிநேயர் நல்ல ஜிம்பாடியுடன் விஸ்வரூபக் காட்சி அளித்தார். திவ்ய தரிசனம். கோயிலின் அந்தப் பக்கம் பிரசாத வரிசை ஆரம்பித்து விட்டது. அடித்து பிடித்து போய் நின்றால் இன்று வடையை காணவில்லை, ஒரு தொன்னையில் வெண்பொங்கல் கொடுத்தார்கள்! இந்த இடத்தில் கட்டாயமாய் இதை சொல்லி ஆக வேண்டும்..."வடை போச்சே!" பொங்கல் சுவையாய் தான் இருந்தது. என்னமோ,என் பிறந்த நாளின் காரணமாக என்றும் வடை சுட்டு எண்ணையில் காய்ந்தவனுக்கு இன்று ஒய்வு போலும், வாழ்க என்று நினைத்து பொங்கலை சுவைத்தேன். கை கழுவி விட்டு செருப்பை தேடினேன். புதிதாய் வித விதமாய் செருப்புக்கள் இருந்ததே தவிர என் செருப்பை மட்டும் காணோம்! என் மனைவி செருப்பு பக்கத்தில் போட்டது போட்டபடி இருக்கிறது, என் செருப்பை காணோம்! எனக்கு சிரிப்பாய் வந்தது. பிறந்த நாள் அதுவுமா இப்படியா ஒரு மனுஷனுக்கு சோதனை? ரோட்டில் போற வர்றவன் எல்லாம் நோட்டம் விட்டேன். யாரிடமும் என் செருப்பு இல்லை. எனக்கு இன்று பிறந்த நாள் என்று தெரிந்து தான் இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று மட்டும் புரிந்தது. அந்த இடத்தில் மூன்று பேருக்குத் தான் எனக்கு இன்று பிறந்தநாள் என்று தெரியும். ஒன்று எனக்கு, நானே என் செருப்பை திருட வாய்ப்பில்லை. இன்னொன்று என் மனைவிக்கு, அவள் திருடி என்ன செய்யப் போகிறாள் பாவம்...மூன்றாவது ஆஞ்சினேயருக்கு, எனக்கு என்னமோ அவர் மேல தான் மைல்டா ஒரு டவுட்டு...சரி ஒருத்தனுக்கு இன்று செருப்பு தானம் கொடுத்தேன் என்று நினைத்துக் கொண்டேன்.

எது எப்படியோ, பூகம்பம் வரவில்லை, சுனாமி வரவில்லை, உலகம் அழியவில்லை! இந்த மாதத்தின் பதிவு வேறு போட்டு விட்டேன். இதை விட வேறு என்ன விசேஷம் வேண்டி இருக்கிறது? பிறந்த நாள் இனிதே நிறைவுற்றது!!




இன்று மதியம் வைகையில் அம்மா அப்பாவை மதுரைக்கு ரயில் ஏற்றி விட தாம்பரம் சென்றிருந்தேன். காரை [நான் கார் வாங்கி விட்டேன் என்று அறிக!] நிறுத்தி விட்டு, சக்கரம் வைத்த பெட்டியை இழுத்துக் கொண்டு ரயில் நிலையத்தில் நுழைந்தேன். படி ஒரு பக்கம், சறுக்கல் ஒரு பக்கம் இருந்தது. பெட்டி கனமாக இருந்ததால், படி பக்கம் செல்லாமல் சறுக்கல் வழியாய் இழுத்துக் கொண்டு சென்று விடலாம் என்று நினைத்தேன். அருகில் சென்றவுடன் அந்த சறுக்கல் எச்சி துப்பவும், சிறுநீர் கழிக்கவும் அமைக்கப்பட்டது என்று அறிந்தேன். பெட்டியை தூக்கிக் கொண்டு படியில் ஏறினேன்.

ஊருக்குச் செல்லும் ரயில்கள் என்ன என்ன? எந்த இடத்தில் வந்து நிற்கும்? எந்த வித அறிவிப்பு பலகையும் என் கண்ணில் படவில்லை. சரி, எட்டு அல்லது ஒன்பதாவது நடைமேடையில் தானே வரும், தெரிந்தது தானே என்று படியில் ஏறினேன். மடியில் இல்லை என்றாலும், கையில் கணம் வேறு! ஏறி முடிந்ததும் ஒரு குன்றின் மீதே ஏறிவிட்ட அனுபவம்ரயில் நிலையங்களில் உள்ள படிகளுக்கு பயந்தே பலர் ரயிலில் பிரயாணிப்பதில்லை. நம் கனத்தை தூக்கிக் கொண்டு ஏறுவதே கொடுமை, இதில் பெட்டி படுக்கை வேறு!! என்னை போன்ற டி யில் வேலை செய்பவர்களும், வயதானவர்களும் பாவம் தானே? மாற்றுத் திறனாளிகள் எப்படி ரயில் பிரயாணம் செய்வார்கள் என்றே தெரியவில்லை. அதற்கு ஒரு ஏற்பாடும் ரயில் நிலையத்தில் நான் பார்க்கவில்லை. [என் கண்ணில் தான் கோளாறா?] மாடியில் ஏறி பார்த்தால் ஒரு நீண்ட நடைபாதை. நாங்கள் ஒன்னாவது நடைமேடைக்கு அருகில் நிற்கிறோம், எங்கள் வண்டி ஒன்பதாவது நடை மேடைக்கு வரும். சரி இனி கவலையில்லை, பெட்டியை தள்ளிக் கொண்டே செல்லலாம் என்று நினைத்து இழுத்தேன். கர கரவென்று ஒரு சத்தம். என்னடா என்று பார்த்தால், அந்த நடைபாதைக்கு இடைவெளியுடன் கூடிய அழகான தரை அமைத்திருக்கிறார்கள். அதன் அமைப்பு ஒரே சீராய் இல்லாததால் அப்படி ஒரு சத்தம். கடந்து செல்பவர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே போனார்கள். என் நேரம், அந்த நேரத்தில் வேறு எவனும் அப்படி ஒரு பெட்டியுடன் தள்ளிக் கொண்டு வரவில்லை. இல்லையென்றால் எல்லோருக்கும் கரகர ஒழி பழகி இருக்கும். கூட்டத்தோடு கூட்டமாய் நானும் சென்றிருப்பேன். மூணாவது நடைமேடை அருகில் வந்ததும், என்னாலேயே அந்த சத்தத்தை தாங்க முடியவில்லை. கையில் தூக்கிக் கொண்டேன்.

வெயில் அதிகம் என்றாலும், அந்த உயரத்தில் நல்ல காற்று வந்தது. இதமாய் இருந்தது. ஒரு பரதேசி மாதிரி ஒரு நாள் இந்த நடைபாதையில் துண்டு விரித்து படுத்தால் என்ன என்று கூட தோன்றியது. என்ன ஒரு கூட்டம், என்ன ஒரு அவசரம். எத்தனை முகங்கள், எத்தனை வாழ்க்கை. எழுத்தாளனாய் [யாரு, நீயா?] இருப்பது இந்த மாதிரி சமயத்தில் உதவும். எல்லோரையும் ஆராய்ந்து கொண்டு, எதையாவது கற்பனை செய்து கொண்டே நடந்தால், பாதையின் தூரமும், கையில் பாரமும் தெரியாது.

அறிவிப்பாளர் விடாமல் "இரண்டாம் நடைமேடையில் உள்ள வண்டி ஷெட்டுக்கு செல்லும் என்று கூவிக் கொண்டிருந்தார்" வண்டியில் அமர்ந்த எத்தனை பேர் திட்டிக் கொண்டே இறங்கினார்களோ! ஒரு வழியாய் ஒன்பதாவது நடை மேடைக்கு அருகில் வந்தேன். நடைமேடைக்குச் செல்ல படியில் இறங்கலாம் என்று பார்த்தால் நந்தி மாதிரி சில பயணிகள் அமர்ந்து ஊர் கதை பேசிக் கொண்டிருந்தார்கள். அது எப்படி சரியாய் படியின் நடுவில் இடம் பிடிக்கிறார்கள் என்று புரியவில்லை. "வாழு, வாழவிடு" என்ற பழமொழி நம் மக்களின் மனநிலையை வைத்து தான் எழுதி இருப்பார்கள் போலிருக்கிறது.

ஒரு வழியாய் படியில் இறங்கி நடைமேடையில் கால் வைத்ததும் ஒரு பலகையில் "நடைமேடை சீட்டை வாங்கி வாருங்கள்" என்று ஒரு அறிவிப்பு. நான் ரயில் நிலையத்தில் உள்ளே நுழைந்து ஒரு பலகை தேடினேனே, அங்கு இருக்க்க வேண்டிய பலகை இது! ஒன்றரை கிலோ மீட்டர் நடந்த பிறகு வைத்திருக்கிறார்கள். சரி இங்காவது வைத்திருக்கிறார்களே என்று என்னை நானே நொந்து கொண்டு எங்கள் [ரயில்] பெட்டி எங்கு வரும் என்ற பலகையை நோக்கினேன். இது கண்டிப்பாய் முற்ஃபி விதி தான். முற்ஃபி விதி தெரியாதவர்கள இங்கு பார்க்கவும்

"நம்முடையது எந்த பெட்டியை இருந்தாலும், அது நடைமேடையின் கடைசியில் தான் வரும்!" எங்கள் பெட்டி "D2 ", அது பதினேழாம் என் பலகைக்கு அருகில் வரும் என்று போட்டிருந்தார்கள். நாங்கள் ஒன்றாம் எண் பலகையின் அருகில் கூட இல்லை! நான் என் பெற்றோர்களை அதை நோக்கி நடக்கச் சொல்லி விட்டு, நடைமேடை சீட்டு வாங்கி வரக் கிளம்பினேன். இங்கு இன்னொரு முற்ஃபி விதி இருக்கிறது.

"நாம் என்று நடைமேடை சீட்டு வாங்கவில்லையோ, அன்று பரிசோதகர் கண்டிப்பாய் வருவார்!"

புத்திசாலித்தனமாய் முன் பக்க நுழைவாயில் கவுண்டருக்கு செல்லாமல் பின் பக்க நுழைவாயில் கவுண்டருக்கு சென்றேன். கவுண்டருக்கு வெளியே இரண்டு வரிசை நின்றிருந்தது. வெள்ளிக் கிழமை முற்பகல், ஒரு மணிக்கு இத்தனை கூட்டம்! நம் நாட்டில் மக்கள் எங்கேயாவது போய் கொண்டே இருக்கிறார்களா? வேலை வெட்டியே இல்லையா என்று தோன்றியது. எத்தனையோ முறை ரயில் நிலையம் சென்றிருந்தாலும், நடைமேடை சீட்டு எடுத்திருந்தாலும், வரிசையில் முன்னாள் இருப்பவரிடம் ஒரு கேள்வியாவது கேட்க வேண்டி இருக்கிறது! கேட்டேன், சார், பிளாட்பாரம் டிக்கட்டுக்கு எந்த க்யு? அவர் அதாரட்டி மாதிரி பலருக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லாத்துக்கும் ஒரே க்யு தான் என்றார் என்னிடம். அமைதியாய் நின்றேன். இருந்தும், ஒரு சந்தேகம். ஏனென்றால் அரை மணிநேரம் க்யூவில் நின்று விட்டு கவுண்டரில் பணம் கொடுத்தால் அது பக்கத்து கவுண்டர் என்று இரக்கமே இல்லாமல் திருப்பி அனுப்பி விடுவதில் நம் ஆட்கள் வல்லவர்கள். சுற்றி முற்றி பார்த்ததில் "Any Ticket Any Counter" என்று ஒரு வாசகம் கண்ணில் பட்டது. அப்பாடா, இவர் சொன்னது சரி தான்! ஆனால் "Any Ticket Any Counter" என்னும் அந்த முறை எத்தனை சரி என்று தெரியவில்லை. ஊருக்கு போக டிக்கெட் எடுப்பவன், எலெக்ட்ரிக் ட்ரெயினில்பயணம் செய்ய டிக்கட் எடுப்பவன், நடைமேடை டிக்கட் எடுப்பவன் என்று எல்லோருக்கும் ஒரே வரிசை என்பது சரியான முறை அல்ல என்றே பட்டது. நடைமேடை சீட்டு வாங்க எனக்கு ஒரு நிமிடம் ஆகாது, ஊருக்கு போக டிக்கட் எடுப்பவனுக்கு அப்படியா? இதற்காக ஒரு தனி வரிசை இருந்தால் தானே சுலபம் என்று தோன்றியது

நடைமேடை சீட்டுக்கென்று மெஷின் வைத்து பார்த்தார்கள், ஒன்றும் சரிப்படவில்லை. நானும் பொறுமையாய் காத்திருக்க ஆரம்பித்தேன். பெண்களுக்கு தனி வரிசை இல்லை என்று கண்டிப்பாய் சொல்லி இருந்தார்கள். ஏன் என்று தெரியவில்லை. எப்போதும் நடப்பது போல, வெளியே வருபவர்கள், வரிசையில் சரியாய் என் அருகில் வந்து நுழைந்து அந்தப் பக்கம் சென்றார்கள். இது ஏன் என்றே எனக்கு இன்று வரை புரியவில்லை. வழக்கம் போல, "நீங்கள் எந்த வரிசையில் இருக்கிறீர்களோ, அதற்கு அடுத்த வரிசை தான் வேகமாய் நகரும்!" என்ற முற்ஃபி விதி இன்று வேலை செய்யவில்லை. என் வரிசை சற்று வேகமாகவே நகர்ந்தது. ஆச்சர்யமாக இருந்தது! பக்கத்து வரிசையில் ஒருவர் "அந்த ஒரே ஆளு, அரைமணி நேரமா நிக்கிறான்யா" என்று பொறுமை இழந்து கொண்டிருந்தார். இது வரை என் வாழ்க்கையில், வரிசையில் நிற்கும் ஒருவர் எந்த வித சலிப்பும், புலம்பலும் இல்லாமல் நான் பயணச் சீட்டு வாங்கியதாய் எனக்கு நினைவே இல்லை. குறிப்பாக தாம்பரத்தில்!

வழக்கம் போல ஒரு பிரகஸ்பதி கூட்டம் எவ்வளவு இருக்கிறது என்று பார்ப்பதை போல மெல்ல வரிசையில் தன்னை சொருகிக் கொண்டான். சரியாய் என் பின்னால் வந்து தன்னை வரிசையுடன் இணைத்துக் கொண்டான், என் பின்னால் இருந்த மார்வாடி ஒன்றும் சொல்லவில்லை. என் முன்னால் அவன் வந்திருக்க வேண்டும்! நாக்கு என்ன, கண்ணு, காத்து, மூக்கு புடுங்குற கேட்டுருப்பேன். தப்பிச்சிட்டான். நம் மக்களின் மனநிலையே அப்படித் தான் இருக்கிறது. எப்படியாவது அவர்களுக்கு குறுக்கு வழி ஒன்று வேண்டும். அங்கு நிற்கும் நேரத்தை மிச்சம் பிடித்தால் அவன் எதோ, நோபல் பரிசு வாங்கி விடுவது மாதிரி!

என் முறை வந்தது. எவ்வளவு என்று தெரியாமல் என் பையில் உள்ள அத்தனை சில்லறையையும் கையில் வைத்திருந்தேன். ஐந்து ரூபாய் கொடுத்து சீட்டு வாங்கிக் கொண்டு நடந்தேன். படியில் இறங்கி நடைமேடையில் பதினேழாம் என்னை தேடினால் கண்ணிலேயே படவில்லை. ரயிலுக்காக காத்திருக்கும் எல்லோரையும் தாண்டி சென்று கொண்டே இருந்தேன். இதையே நான் ஜி எஸ் டி சாலையில் நடந்திருந்தால் தாம்பரம் சானிட்டோரியம் வந்திருக்குமோ என்று தோன்றியது! பதினேழு தான் கடைசியோ என்று நினைத்தால் அதற்கு மேல் பலகைகள் தொங்கிக் கொண்டிருந்தன. அடக் கடவுளே!  

என் அப்பா, வீட்டில் "D2" கோச் பார்த்ததும் எஞ்சின் அருகில் வரும் என்று சொன்னார். அவருக்குத் தான் முற்ஃபி விதி தெரியாதே!