நீண்ட நாட்களாய் அகோரப் பசியோடு இருந்த விக்ரமிற்கு ஒரு ஃபுல் மீல்ஸ் படைத்திருக்கிறார் இயக்குனர் விஜய்! விக்ரம் உயிர்த்தெளிந்து வந்திருக்கிறார். ஆறு வயது மனம் படைத்த வளர்ந்த மனிதனிடமிருந்து அவனது குழந்தையை உரியவர்கள் பறித்துக் கொள்கிறார்கள்.அவளை திரும்பி பெற அவன் நடத்தும் போராட்டமே கதை! கடைசியில் அதில் ஒரு சின்ன ட்விஸ்ட் என்று மிக அழகாய் திரைக்கதை பின்னியிருக்கிறார் விஜய்!

"கிருஷ்ணா, பேர் வைக்காதே! பின்னாடி பிரச்சனை ஆயிடும். எல்லாரும் பேர் சொல்லியே கூப்பிடுவாங்க!" என்ற வசனம் ஜெயகாந்தனின் "குரு பீடம்" கதையில் வரும் "பேரு என்னான்னு ஒரு கேள்வி கேட்டா - ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு பதில் சொல்றான் பாத்தியா? ஒரு கேள்விக்கு எம்மாம் பதில்!" வசனம் நினைவுக்கு வந்தது! இப்படி பல "நச்ச்" கள்!

மரம் ஏன்பா உயரமா இருக்கு?
அதோட அப்பா உயரமா இருக்குல்ல அதான்!

காக்கா ஏன்பா கருப்பா இருக்கு?
அது வெயில்ல சுத்துது இல்லை, அதான்!

யானை ஏன்பா குண்டா இருக்கு?
அது நெறைய சாப்பிடுதுல்ல, அதான்!

இதையும் தாண்டி படத்தில் பல இடங்களில் நெகிழ்ச்சியான சம்பவங்கள். ஒரு உணர்ச்சிப்பூர்வமான மலையாள சினிமா பார்த்த உணர்வு! குழந்தை சாரா ஒரு நல்ல அறிமுகம்! கோர்ட் சீனில் விக்ரமுக்கு இணையாக அசத்துகிறது! அனுஷ்காவையும் அமலா பாலையும் வைத்துக் கொண்டு இந்த மாதிரி ஒரு படத்தை கொடுத்ததற்கே இவரை பாராட்ட வேண்டும். அனுஷ்கா இடுப்பு தெரியாமல் நடித்த ஒரே படம் இதுவே தான் இருக்கும்! சி ஜே பாஸ்கர், சந்தானம் காமெடி களை கட்டுகிறது! தமிழர்கள் சிரிக்கத் தெரியாதவர்கள் என்று யாரும் சொல்ல முடியாது! சமயத்தில் மொக்கை ஜோக்குக்கும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்! அவிலாஞ்சியின் அழகு நல்ல ஒரு ஒளிப்பதிவினால் கண்ணை பறிக்கிறது! பப்பப்பா பா பாடல் காதுக்கு இனிமை.

அடேயப்பா தில், தூள், சாமியில் பார்த்த விக்ரமா இது? என்ன ஒரு மாற்றம்! தலை முடியை சுற்றிக் கொண்டே, கையை தூக்கிக் கொண்டே, விரலை தேய்த்துக் கொண்டே, வாயை திறந்து கொண்டே, அசட்டுத்தனமாய் அட்டகாசமாய் சிரித்துக் கொண்டே என்று மனிதர் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு முறையும் நல்ல ஒரு கதைக்காக, அந்த கதாப்பாத்திரமாய் வார்த்துக் கொண்டு, தன்னையே புதுப்பித்துக் கொள்ளத் துடிக்கும் ஒரு உன்னதமான கலைங்கனுக்கு ஹேட்ஸ் ஆஃப்! 

படத்தில் சில கேள்விகள், சில விமர்சனங்கள்!

படத்தில் வொய். ஜி. மகேந்திரன் கதாப்பாத்திரம் எதற்காக? 
அந்த டாக்டர் அத்தனை ஸ்ட்ரிக்டான ஆசாமி என்றால் விக்ரம் எப்படி ஐ. க்யு டெஸ்டில் தேறினார்?
மூர்த்தி (சீ ஜே பாஸ்கர்) பாஷ்யத்தின் (நாசர்) ஆளாய் இருந்தார், திடீரென்று எப்படி அவர் மனம் மாறினார்?

படம் நன்றாய் இருந்தாலும், சற்று நீளமாய் போய் விட்டது. சில தேவையில்லாத சீன்களை வேட்டி ஒட்டியிருந்தால் க்றிஸ்பாய் இருந்திருக்கும்! அதிலும் கோர்ட்டில் இரண்டு பேர் உட்கார்ந்து கொண்டு அடடடா...அப்பப்பா, தாங்க முடியவில்லை!! திடீரென்று அனுஷ்காவை விக்ரம் கட்டிப் பிடித்ததும் ஒரு கனவுப் பாடல்! குபீலென்று ஆகிவிட்டது!  கொடுத்த காசுக்கு மேல் பிரகாஷ் இசை அமைத்ததால் வந்த உபரி பாட்டு போல! நல்ல வேலை பாட்டோடு அந்தக் காதல் நின்று விட்டது!! படம் தப்பித்தது!!

இயக்குனர் விஜய் ஒரு பேட்டியில் சொன்னது போல், எந்த சூது வாதும் தெரியாமல், யாருக்கும் தீங்கு செய்யாமல், அன்பு ஒன்றே வேதமாய், எத்தனை அவசரத்திலும் விதிமுறைகளை தவறாத ஒருவனை மன நலம் இல்லாதவன் என்று சொல்வது எத்தனை விசித்திரம்!

இந்தப் படம் தெய்வத்திருமகள் அல்ல, தெய்வத்திருமகன் தான்!

மறுபடியும் ஒரு தீவிரவாதத் தாக்குதல்! மும்பையில் மூன்று குண்டு வெடிப்புகள்...ஊரில் உள்ள அத்தனை போலீஸ்களும் அங்கே குடி கொண்டு விட்டனர்.அத்தனை மீடியாவும் கூடாரம் அடித்து தங்கி விட்டது அங்கேயே! மற்றும் அத்தனை சானல்களிலும் கை இழந்து கால் இழந்து கதறும் படங்கள்! ஒருவரையும் விட மாட்டோம்; தீவிரவாதத்தை நூறு சதவிகிதம் ஒழிக்காமல் ஓய மாட்டோம் என்று வாக்குறுதிகள். யார் மீது குற்றம், யாருடைய தோல்வி இது என்று ஏராளமான விடை தெரியா வினாக்கள், நாடெங்கும் இதே செய்தி! உலகெங்கும் வன்மையான கண்டிப்புகள்! பிரதமர் உடனே முதலமைச்சரை தொடர்பு கொள்கிறார், அங்கு உள்ள நிலவரத்தை தனக்கு தெரியப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டுகிறார். பிறகு அவரே விரைகிறார் சம்பவ இடத்தை பார்வையிட!

நம் அரசாங்கத்திடம் [எல்லா நாட்டு அரசாங்கத்திடமும்!] ஒரே பிரச்சனை, பிரச்சனையின் மூலத்தை விட்டு விட்டு பிரச்சனையை பற்றியே பேசிக் கொண்டிருப்பது! இந்த முறை குண்டை எதனால் செய்திருக்கிறார்கள், எப்படி அதை வெடிக்கச் செய்திருக்கிறார்கள் என்பதை ஆராய்ந்தது போக, எப்படி இது இனிமேல் நடக்காமல் செய்வது என்பதை யோசிக்க வேண்டும். இந்த முறை செல்போன் மூலம் வெடிக்கச் செய்தால், அடுத்த முறை காய்கறி கூடையின் வழியே வெடிக்கச் செய்வார்கள். காவலர்கள் என்ன தான் செய்ய முடியும்? எதை என்று சோதனை செய்வது? எத்தனை நாள் செய்வது? யாரை தான் சந்தேகத்தில் பிடிப்பது? காஷ்மீர் பிரச்சனையை கிட்டத்தட்ட 65 ஆண்டுகளாய் வைத்து பேசிக் கொண்டிருக்கிறோம்! நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், நேர்மையான அணுகுமுறையுடன் இரு நாடுகளின் தலைவர்களும் பேச்சு வார்த்தைக்கு அமர்ந்தால் இந்த பிரச்சனையை தீர்க்க ஒரு மாதத்திற்கு மேல் ஆகுமா?

ஆனால் இதெல்லாம் மக்களுக்கு பழகி விட்டது. அரசியல்வாதிகள் இத்தகைய சம்பவத்தை வைத்து அரசியல் செய்து கொள்ளட்டும், ஊடகங்கள் இதை வைத்து பணம் சம்பாதிக்கட்டும், நம் அன்றாடப் பொழப்பை கவனிப்போம் என்று ஆகி விட்டனர். அவரவர்க்கு தெரிந்த தொழிலை அவரவர் செய்கிறார்கள், நாம் நம் வயிற்றுப்பாட்டிற்கு தெரிந்த தொழிலை செய்து பிழைப்போம் என்று மறத்து விட்டார்கள். மழை, வெயில் போல் குண்டு வெடிப்புகளும் பருவ காலங்களுள் சேர்ந்து விட்டது. அன்றாட வாழ்வில் ஒரு நிகழ்வாய் போய் விட்டது. ஒரே வித்தியாசம் மழை, வெயில் காலங்களை போல் இந்தக் காலம் எப்போது வரும் என்று திட்டவட்டமாய் தெரிவதில்லை!

" தி ஜங்கிள் புக்" படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் மோக்லியை அழைத்துச் சென்று நாகரீகப்படுத்த முயற்சி செய்கிறார்கள். அந்த முயற்சியில் ஒருவன் தன்னிடம் உள்ள பல விதமான ஆயுதங்களையும் அதனுடைய கொடூரத் தன்மையையும் மோக்லிக்கு விளக்குகிறான். இந்த ஒரு ஆயுதத்தை வயிற்றில் குத்தினால் போதும், அது வயிற்றில் உள்ளே மூன்றாக விரிவடையும். அதனால் அந்த மனிதன் உடனடியாக செத்து விடுவான் என்று பெருமையாய் சொல்கிறான். அதற்கு மோக்லி ஆர்வமாய், அவனை கொன்று தின்று விடுவாயா என்று கேட்கிறான். அவன் இல்லை என்கிறான். பிறகு மோக்லி அப்படி என்றால் அவன் உன்னை கொல்ல வந்தானா என்று கேட்கிறான். அவன் அதற்கும் இல்லை என்று பதில் சொல்கிறான். மோக்லி புரியாமல் அப்படியென்றால் ஏன் அவனை கொல்கிறாய் என்று கேட்கிறான். மேலும், "எங்களுடைய காட்டு வாழ்வின் விதிப்படி, ஒரு உயிரை கொல்வதற்கு ஒன்று நீ அதை சாப்பிட வேண்டும், அல்லது அது உன்னை கொல்ல வந்திருக்க வேண்டும். இந்த இரண்டு காரணமுமில்லாமல் எந்த உயிரையும் நாங்கள் கொல்ல மாட்டோம் என்கிறான்."

இதை ஏன் சொல்கிறேன் என்றால் காட்டுவாசியாய் திரிந்த போது இருந்த ஒரு கட்டுக் கோப்பு கூட நாகரீகம் அடைந்த நம்மிடம் இல்லை! ஒன்று புரிகிறது! மனிதன் இயற்கையின் சிறந்த ஜீவன். அவனை இனிமேல் அழிக்க இயற்கையாலேயே முடியாது! [ஒருவேளை பூமி வெப்பமாவதால் உலகம் அழிந்து விடும் என்று வைத்துக் கொண்டாலும் விஞ்ஞானம், பணபலத்தின் மூலம் எப்படியோ சிலராவது தப்பி விடுவார்கள் [2012 படத்தில் வருவதைப் போல] என்றே தோன்றுகிறது!] அதனால் மனிதனை மனிதனால் தான் அழிக்க முடியும்! அதற்கான ஆரம்பம் தான் இது! தீவிரவாதம், அரசியல், அதனால் ஊருக்கு ஊர் சண்டை, நாட்டுக்கு நாடு சண்டை என்று ஆரம்பித்து அது உலகப் போர், அணு ஆயுதம், பேரழிவு என்று முடியும்! இனி எத்தனை இயேசுக்களும், புத்தர்களும், காந்திகளும், தெரசாக்களும் பிறந்தாலும் அவர்கள் என்னதான் நன்னெறியை போதித்தாலும் மனிதன் மாறப் போவதில்லை. அவனின் அழிவு அவனால் தான் என்பதே உலக நியதி போலும்! [அப்படி நடந்தால் மனிதனுக்கு ஆறறிவு என்பது எதற்கு?]

மனித இனம் இனி மெல்லச் சாகும்!