"தரு" பிறந்து நேற்றோடு ஒரு வருடம் முடிந்து விட்டது. அவளின் முதலாம் ஆண்டு பிறந்த நாள் நேற்று! வழக்கமான பிறந்தநாள் கொண்டாட்டங்களில் எனக்கு எப்போதும் விருப்பம் இருந்ததில்லை. என்னைக் கேட்டால் பிறந்த நாள் கொண்டாட்டத்தை போல அலுப்பான ஒரு விஷயம் கிடையாது என்றே சொல்வேன். அதன் செலவு ஒரு புறம் இருக்கட்டும், அந்த  நிகழ்ச்சியை நடத்தி முடிப்பதற்குள் இருக்கும் தர்ம சங்கடங்கள் இருக்கிறதே...குடும்பம், நண்பர்கள், உற்றார், உறவினர், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று அனைவரையும் கூப்பிட வேண்டியது, நம் குழந்தைக்கு கச கசவென்று ஒரு ஆடை அணிவித்து அவர்கள் முன்னால் ஒரு ஷோகேஸ் பொம்மை போல நிறுத்தி வைத்து விட வேண்டியது. இத்தனை நாள் தனியாய் தேமேயென்று இருந்த குழந்தை இன்று இவ்வளவு பெரிய கூட்டத்தை பார்த்து அதிர்ச்சியாகி அழும். அதை சமாதானம் செய்ய, அந்த நிகழ்ச்சிக்கு வந்த ஐம்பது பேரும் குழந்தையின் முகத்துக்கு அருகே தங்கள் முகத்தை டைட் க்ளோசப்பில் வைத்துக் கொண்டு ஐநூறு வழிகளை சொல்வார்கள். குழந்தை இன்னும் வீரிட்டு அழும். ஒரு வழியாய் கேக்கை காட்டி, மெழுகுவர்த்தியை காட்டி அதை சமாதானம் செய்து கேக்கை வெட்டச் செய்வோம். "ஹேப்பி பெர்த்டே" பாடுங்கள், பாடுங்கள் என்று கெஞ்சி எல்லோரையும் அபஸ்வரத்தில் பாட வைக்க வேண்டியது. ஒரு வயது குழந்தை, கொஞ்சம் யோசித்து பாருங்கள்! கிலி பிடித்து போயிருக்கும். இதில் போட்டோ எடுத்தோமா, வீடியோ சரியாய் வந்ததா என்று அந்த டென்ஷன் வேறு! ஸ்வபா...

என்னை பொருத்தவரை மேல் சொன்ன அத்தனைக்கும் வித்திடுபவர் முக்கால்வாசி வீட்டு அம்மாவாக தான் இருக்க வேண்டும். கணவர்கள் பெரும்பாலும் சிக்கனமாகவே எல்லாவற்றையும் முடிக்கப் பார்க்கிறார்கள் என்பது என் கணிப்பு! [மகனை/மகளை அரசாங்க பள்ளியில் சேர்க்கலாம் என்று எனக்குத் தெரிந்து ஒரு மனைவியும்/அம்மாவும் சொன்னதில்லை [அவர்களே அரசு பள்ளியில் படித்த பெண்களாய் இருந்தாலும்!]. அதை போல!] குழந்தை பிறந்ததும், பிடிக்கிறதோ இல்லையோ, நாமும் மேல் சொன்னதை எல்லாம் கடந்து தான் போக வேண்டும் என்று நினைத்திருந்தேன். நல்ல வேளையாக என் மனைவி அப்படி ஒரு நிலைக்கு என்னை தள்ளவில்லை. என் மீது உள்ள பிரியம் ஒரு பக்கம் என்றாலும், தருவை படுத்த விரும்பாததே முக்கிய காரணம்! எப்படியோ நான் தப்பித்தேன்!


சரி அப்படி என்ன தான் செய்தோம்? முதலில் நிறைய கூட்டம் சேர்க்க வேண்டாம் என்று முடிவு செய்தோம். நாங்கள், என் பெற்றோர்கள், மனைவியின் பெற்றோர்கள், என் தம்பி குடும்பத்தினர். [என் மனைவி ஒரே பெண்!] அவ்வளவு தான்! மொத்தம் 8 பேர். அதாவது தரு வுக்கு தெரிந்த முகங்கள் மட்டுமே! வீட்டில் கொண்டாடுவதை விட, ஒரு நல்ல அமைதியான இடத்தில் கொண்டாடலாம் என்று ஒரு விருந்தினர் விடுதி ஏற்பாடு செய்தோம். தக்ஷின் சித்ரா! சென்னையில் [ஈ சி ஆர் ரோட்டில்] இப்படி ஒரு இடம் இருக்கிறதென்று பலருக்குத் தெரியாது. தெரியாதென்றால் தெரிந்து கொள்ளுங்கள். http://www.dakshinachitra.net/ தக்ஷின் சித்ரா ஒரு கலாச்சார மையம். தென் இந்திய பகுதிகளின் பாரம்பரியம், கலை, கைத்தொழில் என்று பலவித விஷயங்களை இங்கு காட்சிப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இங்கு நான் ஏற்கனவே சில முறை சென்றிருந்தாலும், அங்கு விருந்தினர் விடுதி எல்லாம் இருக்கிறது என்று தெரியாது. எட்டு பேர், நான்கு அறைகள். அருமையாய் இருந்தது. முதல் நாள் இரவு சென்று தங்கி விட்டோம். காலையில் எழுந்து சரியாய் அவள் பிறந்த நேரமான "பதினொன்று எட்டுக்கு" கேக் வெட்டி அவளின் பிறந்தநாளை கொண்டாடினோம். பிறகு தக்ஷின் சித்ராவை சுற்றி பார்த்தோம். பரந்து விரிந்த இடத்தில் தரு அழகாய் நடை பயின்றாள். அவள் அக்காவுடன் விளையாடினாள். அவள் பிஞ்சு விரல்களால் களி மண்ணில் பானை செய்தாள்! ஊஞ்சல் ஆடினாள். மர நிழலில் இளைப்பாறினாள். பிறகு மதியத்திற்கு மேல் அங்கிருந்து திருவிடந்தை கோயில். அங்கிருந்து கோவளம் பீச்! கடல் அலைகளிடம் ஆசி! அவளின் பிறந்த நாள் இனிதே கழிந்தது.

இதை விட எங்களுக்கு திருப்திகரமாய் இருந்தது, இன்று காலை அவளின் பெயரில் அருகில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ஒரு மரம் நட்டது! முதல் பிறந்தநாளுக்கு மகளுக்கு என்ன பரிசு கொடுப்பது என்று பல நாளாய் குழம்பிக் கொண்டிருந்தேன். திடீரென்று இந்த யோசனை தோன்றியது. சாலையில் வைத்தால் நம்மால் சரியாய் பராமரிக்க முடியாது, சாக்கடை, சாலைப் பணி என்று தோண்டி விடுவார்கள். வீட்டில் வைக்கும் அளவுக்கு வசதி இல்லை. சரி அருகில் உள்ள பூங்காவில் வைக்கலாம் என்று தோன்றியது. இரு வாரத்துக்கு முன் பஞ்சாயத்து அலுவலகம் சென்று கேட்டேன். நான் எதிர்பார்த்ததை விட ஆர்வமாய் பேசினார்கள். "நீங்கள் தேதி மட்டும் சொல்லுங்க, நல்லா செய்துடலாம்!" என்றதும் என்னால் நம்பவே முடியவில்லை. மரக் கன்றுகளையும் அவர்களே கொடுப்பதாய் சொன்னார்கள். நேற்று எதற்கும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த ஏ. ஈ யை அழைத்தேன். "என்ன சார், நம்ம பேசின படி பண்ண முடியுமா என்று கேட்டேன். பதிலுக்கு அவர், "என்னப்பா இப்படி கேக்குறே? திடீர்னு பேக் எடுக்குறே? [!] கண்டிப்பா பண்ணலாம்பா" என்றார். காலை பதினோரு மணி என்று நேரம் குறித்து சென்றோம். அவர் அவரின் உதவியாளர்கள் இருவரை அனுப்பினார். அவர்களே சென்று புங்கை [நல்ல நிழல் தரும்] மரக் கன்று வாங்கி வந்தார்கள். பள்ளம் தோண்டினார்கள். என் "தரு" வின் கையினால் அந்தத் "தரு" மண்ணில் இறங்கியது. அவளே நீர் வார்த்தாள். பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாய் இருந்தது.



அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு இனிப்பு டப்பாவை வழங்கி விட்டு "வழக்கம் போல்" ஏதாச்சும் பண்ணனுமா என்று கேட்டதற்கு "அப்புறம் நாங்க பண்ணதுக்கே அர்த்தம் இல்லாமல் போயிடும் சார், ஒன்னும் வேணாம்! நீங்க கொடுத்ததே போதும்" என்று மறுத்து  விட்டார்கள். [கலிகாலம்!] இனி என் தருவோடு அந்தத் தருவையும் வளர்க்க வேண்டிய பொறுப்பு எனக்கு வந்து விட்டது! என்னை பொருத்தவரை, முதல் பிறந்தாளில் அவளோடு சேர்ந்து ஒரு மரமும் வளர்ந்து பெரிதானால் அதை விட ஒரு சிறந்த பரிசு அவளுக்கோ, இந்த சமூகத்துக்கோ கிடைக்குமா தெரியவில்லை. என்ன சொல்கிறீர்கள்?


"ரயில்வே ஆண்டி" என்ற ஒரு கில்மா கதை. அதை தான் பி ஏ பாஸ் என்ற பெயரில் படமாக்கி இருக்கிறார்கள். "ஒரு அப்பாவி ஆண் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் எப்படி மிகப் பெரிய ரவுடியாகிறான்" என்று தமிழ்பட இயக்குனர்கள் தங்களின் படங்களை பற்றி சொல்வதை பல பேட்டிகளில் கேட்டிருப்போம். அதே போல் தான் இந்தக் கதையும். ஒரே வித்தியாசம் இந்தப் படத்தின் கதாநாயகன் ரவுடிக்கு பதிலாக விபச்சாரனாகிறான் [இந்தப் பதம் சரிதானா?!]

கதாநாயகனின் (முகேஷ்) பெற்றோர்கள் ஒரு விபத்தில் இறந்து விடுகிறார்கள். அவனுக்கு இரண்டு தங்கைகள். இனி அவர்கள் மூவரையும் யார் பார்த்துக் கொள்வது என்று உறவினர் மத்தியில் ஒரு குழப்பம். முகேஷை தில்லியில் அத்தை வைத்துக் கொள்வதாயும், அவன் தங்கைகளை தாத்தா வைத்துக் கொள்வதாயும் முடிவாகிறது. முகேஷ் பி. ஏ. படித்துக் கொண்டிருக்கிறான். அவன் தலையெடுத்துத் தான் அந்தக் குடும்பத்தை இனி காப்பற்ற வேண்டும்.

தில்லியின் ஒரு ரயில்வே காலனியில் அத்தையின் வீட்டில் முகேஷ் வேறு வழியில்லாமல் ஒண்டிக் கொள்கிறான். அந்த வீட்டில் ஒரு வேலைக்காரனை போல் இருக்கிறான். இயல்பாய் சதுரங்கத்தில் உள்ள ஆர்வத்தின் காரணமாய் முகேஷ் அங்கு சவப்பெட்டி செய்யும் ஒருவனை நட்பாக்கிக் கொள்கிறான். அந்த நண்பனுக்கு மொரீஷியஸ் போக வேண்டும் என்பது கனவு. கையில் காசில்லாததால் கனவை புதைத்து விட்டு, பிறரை புதைக்க சவப்பெட்டி செய்து வாழ்கிறான். ஒரு முறை, அத்தையின் தோழிகள் சிலர் வீட்டுக்கு வருகிறார்கள். முகேஷ் வழக்கம் போல் எல்லோருக்கும் எடுபுடி வேலைகளை செய்கிறான். அதில் ஒரு பெண் சாரிகா. முகேஷை பார்த்ததும், "என் வீட்டுக்கும் வந்து வேலை செய்து கொடு" என்று அவனை கூப்பிடுகிறாள். அத்தையின் வற்புறுத்தலின் பேரில் அவள் வீட்டுக்கு செல்கிறான். அங்கே சாரிகா அவனை வற்புறுத்தி அவனிடம் உறவு கொள்கிறாள். நல்ல உடைகள் வாங்கிக் கொள்ளச் சொல்லி அதற்கு பணமும் தருகிறாள். அதுவே அவர்களிடையே நாளடைவில் பழக்கமாகிறது. புது உடைகளை பார்த்து கேள்வி கேட்கும் அத்தையிடம் டியுஷன் எடுப்பதாக பொய் சொல்கிறான்.

ஒரு நாள் ஊரில் உள்ள தாத்தா இறந்து விடுகிறார். தங்கைகள் மீண்டும் அநாதை ஆகிவிடுகிறார்கள். அத்தை மற்றும் உறவினர்கள் எல்லோரும் அவர்கள் இருவரையும் ஒரு ஹோமில் சேர்த்து விடுகிறார்கள். இதை எல்லாம் அறிந்த சாரிகா, அதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு ஒரு நம்பர் கொடுத்து முகேஷை அங்கு போக சொல்கிறாள். அங்கிருக்கும் ஒரு ஆண்டி இவனை வற்புறுத்தி உறவு கொள்கிறாள். அதற்கு பணமும் தருகிறாள். சாரிகாவிடம் முகேஷ், தான் அப்படிப் பட்ட பையன் இல்லை, இப்படி பணம் சம்பாதிக்க விரும்பவில்லை என்று சொல்கிறான்.  பதிலுக்கு சாரிகா, "பி. ஏ. படித்து முடித்ததும் ரயில்வே போர்ட்டில் பெரிய பதவியா உனக்குக் கிடைக்கப் போகிறது? உனக்கு பணம் தேவை, அதற்கு தான் உதவி செய்கிறேன்,  உன் தங்கைகளின் நிலையை நினைத்து பார்"  என்று சொல்லி அவளின் தந்திரத்துக்கு மசிய வைக்கிறாள். ஆண் துணை தேவைப்படும் அவளுக்குத் தெரிந்த எல்லா பெண்களின் நம்பரையும் அவனுக்கு தருகிறாள். வேறு வழி தெரியாமல், பணத்தின் காரணமாக அவனும் அதில் தீவிரமாய் ஈடுபடத் தொடங்குகிறான்.

தங்கைகள் இருக்கும் அந்த ஹோமில், வார்டனும், மற்ற  சில பெண்களும் ஒழுக்கம் கெட்டவர்களாய் இருக்கிறார்கள். அதனால் அவன் தங்கைகளுக்கும் பிரச்சனையாய் இருக்கிறது. தான் சம்பாதிக்கும் பணத்தில் அவர்களுக்கு ஒரு ஃபோன் வாங்கித் தருகிறான். எப்படியாவது அவர்களை ஒரு தனி வீட்டுக்கு குடித்தனம் வைத்து விட வேண்டும் என்று முனைகிறான். அதற்காக தன் நண்பனிடம் சொல்லி ஒரு வீடும் பார்த்து விடுகிறான். அத்தையின் வீட்டில் பணம் இருப்பது பல கேள்விகளை எழுப்பும் என்பதை புரிந்து கொண்டு, சாரிகாவிடம் பணத்தை கொடுத்து வைக்கிறான். அப்போது அவர்கள் உறவு கொள்ளும்போது அவள் கணவன் அவர்களை கையும் களவுமாக பிடித்து விடுகிறான். சாரிகாவின் கணவன் முகேஷின் அத்தையிடம்  இல்லாதது பொல்லாததை சொல்லி, முகேஷை வீட்டில் சேர்க்க வேண்டாம் என்று சொல்லி விடுகிறான். இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும், முகேஷின் அத்தையை ஒரேடியாய் வில்லியாக காட்டாமல் இயல்பான ஒரு கதாப்பாத்திரமாக வடித்ததற்கு ஒரு சபாஷ்! முகேஷ் வீட்டில் இருந்து விரட்டி அடிக்கப்படுகிறான். நண்பனின் வீட்டில் தஞ்சம் அடைகிறான். சாரிகாவிடம் பணம் மாட்டிக் கொண்டு விட்டதால், தான் முன்பு சென்று வந்த அத்தனை பெண்களுக்கும் வேலைக்காக மீண்டும் ஃபோன் செய்கிறான். எல்லோரும் ஃபோனை துண்டித்து விடுகிறார்கள். சாரிகா எல்லாவற்றையும் தடுத்து விட்டால் என்று புரிகிறது.

எப்படியாவது சாரிகாவிடம் இருக்கும் தன் பணத்தை வாங்கியாக வேண்டும், ஆனால் இத்தனை பிரச்சனைக்குப் பிறகு அங்கு போகவும் முடியாது என்று நினைத்து என்ன செய்வதென்று தெரியாமல், தன் நண்பனை சென்று வாங்கி வரச் சொல்கிறான். போனவன், அவள் "என்னை உள்ளேயே விடவில்லை, பணம் எல்லாம் இல்லை என்று சொல்லி விரட்டி விட்டுவிட்டாள்" என்று சொல்கிறான். ஆத்திரம் கொண்ட முகேஷை அவன் நண்பன் தேற்றுகிறான். தங்கைகள் முகேஷை தங்கள் பிரச்சனை சொல்லி நெருக்குகிறார்கள். அவர்கள் வார்டன் தொல்லை தாங்காமல் தப்பித்து வெளியே வந்து விட்டதாக சொல்கிறார்கள். மறுநாள் ரயில்வே நிலையத்தில் வந்து தங்களை கூட்டிச் செல்லும்படி கெஞ்சுகிறார்கள். ரயில்வே நிலையம் வந்ததும் தனக்காக காத்திருக்கச் சொல்லிவிட்டு அன்று இரவு அதே கட்டடத்தில் விபச்சாரனாய் இருக்கும் ஒருவனின் துணையோடு விபச்சாரத்துக்குச் செல்கிறான். சாலையில் கிராக்கிக்காக காத்திருக்கிறான் [ஆணாய் இருந்தாலும் சரி!]. ஒரு காரில் குடித்து விட்டு வரும் மூன்று ஆண்கள் அவனை வலுக்கட்டாயமாய் தூக்கிச் சென்று வன்புணர்வு செய்து அனுப்பி விடுகிறார்கள்.

மிகவும் நொந்து போன தருவாயில் வேறு வழியே இல்லை என்று நினைத்து மறுநாள்  நேராய் சாரிகாவின் வீட்டுக்கு போகிறான். பூட்டிய வீட்டை திறந்து பணத்தை தேடுகிறான். அப்போது சாரிகா வெளியில் சென்று விட்டு வீட்டுக்குள் வருகிறாள். அவளிடம் பணத்தை கொடுக்கச் சொல்லி கத்தியை காட்டி மிரட்டுகிறான். அவளோ, அவன் நண்பனிடம் கொடுத்து விட்டதாய் சொல்கிறாள். நண்பனின் மேல் மிகுந்த நம்பிக்கை உள்ள முகேஷ் அவள் பொய் சொல்கிறாள் என்று வாக்குவாதம் செய்கிறான். அந்த வாக்குவாதத்தில் அவளின் பிடியில் தன்னை போல் பல இளைஞர்கள் சிக்கி இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்கிறான். இந்த சமயத்தில் சாரிகாவின் கணவன் வந்து விடுகிறான். அவன் கதவை தட்டிக் கொண்டே இருக்கும்போது, சாரிகா, தன் வயிற்றின் மீது கத்தியை வைத்து மெல்ல அழுத்து என்று சொல்கிறாள். மறுபடியும் ஒரு நாடகம் ஆடுகிறாள் என்று நினைத்த முகேஷ், இந்த முறை நீ மட்டும் தப்பிக்க நான் மாட்ட மாட்டேன் என்று அவள் வயிற்றை குத்தி கிழித்து விடுகிறான். அங்கிருந்து ஓட்டம் பிடித்து நண்பனை பார்க்க செல்கிறான். அவன் அறையை காலி செய்து விட்டு மொரீஷியஸ் போய் விட்டதை தெரிந்து கொள்கிறான். ஒரு பக்கம் போலீஸ் இவனை துரத்துகிறது, மறுபக்கம் தங்கைகள் ரயில்வே நிலையத்தில் இவனுக்காக காத்திருக்கிறார்கள். போலீசிடம் இருந்து தப்பித்து ஓடும்போது ஒரு கட்டடத்தின் மாடியில் மாட்டிக் கொள்கிறான். தங்கைகளின் அழைப்பை துண்டித்து விட்டு அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறான்!!
அதோடு படம் முடிகிறது.

ஒரு கில்மா கதையை என்ன ஒரு அருமையான வாழ்வனுபவமாக பதிவு செய்திருக்கிறார்கள். இந்த மாதிரி கதைக்கு மிக அழகான ஒரு மாமியை (ஆண்டி!) தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், அப்படி எல்லாம் இல்லாமல் கதைக்கு பொருத்தமாய் ஷீபாவை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.  படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் அருமையான தேர்வு. குறிப்பாக, ஷதாப் கமல் (முகேஷ்), அந்த பாட்டி, அத்தை, முகேஷின் நண்பன்! எல்லோரும் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அந்த மாதிரி படம் பார்த்த உணர்வே இல்லை. படம் முடியும்போது அது நமக்குள் பல வித கேள்விகளை எழுப்பிச் செல்கிறது. இந்தப் படம் பார்க்கும்போது எனக்குத் தோன்றிய சில எண்ணங்கள் இவை...

விபச்சாரிகளை போல் அவர்கள் ஏன் சமூகத்தில் அவ்வளவு பிரபலமாய் இல்லை? மும்பையை போல், கொல்கத்தாவை போல் ஒரு சிவப்பு விளக்கு பகுதி சென்னையிலும் வேண்டும் என்று பாலியல் தொழிலாளர்கள் கொடி பிடித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையிலும் விபச்சாரன்கள் ஏன் சமூகத்தில் மறைந்து வாழ்கிறார்கள்? விபச்சாரன்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? பொதுவாய் ஆண்களுக்கு பல பெண்களிடம் உறவு கொள்ள ஆசை தான்! அது Genetical Defect. அப்படி இருக்கும்போது அதுவே தொழிலாய் செய்து வருமானமும் வந்தால்? அதோடு பெண்களுக்கு ஆண்களால் வரும் அளவுக்கு பாலியல் துன்பங்கள் வரவும் வாய்ப்பு அதிகமில்லை. ம்ம்ம்....அப்படியும் சொல்ல முடியாது, இதை படித்துப் பாருங்கள். http://meetmerighthere.wordpress.com/2011/01/30/busted/

Jokes apart, படத்திற்கு வருவோம். ஒரு சொற்ப சம்பளத்தில் வேலை பார்க்கும் ஒரு அப்பா திடீரென்று விபத்தில் இறந்து விட்டால், அந்த விபத்து உண்மையில் அவர் குடும்பத்துக்குத் தான் இல்லையா?! பொதுவுடைமை பற்றி பேசும்போது சொல்வார்கள், முதலாளித்துவத்தில், வயதான, நமக்கு உதவி செய்ய முடியாத அம்மாவும் ஒரு சுமை தான் என்று! இந்தக் கதையே எடுத்துக் கொள்ளுங்கள், முகேஷும் அவன் இரு தங்கைகளும் தங்களின் பெற்றோர்களின் மரணத்தால் என்ன என்ன கஷ்டங்கள் அனுபவிக்கவில்லை? ரயில் நிலையத்தில் காத்திருக்கும் அந்த பெண்களின் அழைப்பை துண்டித்து விட்டு அவன் விழுந்து சாகிறான். அந்த இடத்தில் அவனின் பெற்றோர்களை போல அவனுக்கும் விடுதலை கிடைத்து விட்டது. ஆனால் அவர்களின் தங்கைகளுக்கு இனி தான் தண்டனை காத்திருக்கிறது. இப்படி நம் நாட்டில் எத்தனை முகேஷ்களும் அவன் தங்கைகளும் இருப்பார்கள்? இத்தனை பெரிய நகரத்தில் ஒரு சக மனிதனின் துயர் துடைக்க ஒருவர் கூட இல்லை என்று நினைக்கும்போது பயமாய் இருக்கிறது. துணை இல்லாதவர்களுக்கு நகரத்தை போன்ற ஒரு நரகம் கிடையாது என்றே நினைக்கிறேன். நம் குடும்பத்தை ஒரு முறை கட்டி அணைத்துக் கொள்ளத் தோன்றுகிறது.
என் மகள் பற்றியும், அவளின்  சேட்டைகளை பற்றியும்  நிறைய எழுதுவேன் என்று நினைத்தேன். இந்த ஒரு வருடத்தில் மிகக் குறைவாகவே எழுதி இருக்கிறேன். என் மகள் பிறந்து, இன்னும் இரண்டு வாரங்களில் ஒரு வருடம் ஆகிவிடும். அவளின் பெயர் "தரு"! மிச்ச பாதி எங்கே என்று தானே கேட்கிறீர்கள். பெயரே அவ்வளவு தான். "தரு" என்றால் "மரம்" என்று பொருள். "கல்பத்தரு", "கற்பகத்தரு" என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். கேட்டதெல்லாம் தரும் தேவலோக மரம். இன்பத்தை அள்ளி அள்ளி தரும் ஒரு மரத்தையே என் மகளுக்கு பெயராய் வைத்து விட்டேன். என்ன சரி தானே? பெயரை சொன்னால் ஒரே தடவையில் விளங்க வேண்டும், புதிதாய் இருக்க வேண்டும் என்று  நினைத்து வைத்தேன்.பெரிய தப்பு என்று பிறகு தான் உணர்ந்தேன். "என்ன பேரு? தரூனா? பொண்ணுன்னு சொன்னீங்க"என்று கேட்டு சாகடிக்கிறார்கள். பேசாமல் "மீனாட்சி", "அம்புஜம்" என்று வைத்திருக்கலாம். நாளை வளர்ந்து என் மகள் என்ன சொல்லப் போகிறாளோ?

நான் சொல்ல வந்தது  இதுவல்ல. தரு பத்து மாதத்தில் நடை பயிலத் தொடங்கி விட்டாள். குழந்தைகளின் செயல்களை கவனிப்பதே ஒரு போதை தரும் இன்பம். "பாப்பா யாரு", "சாமி கும்பிடு" போன்ற பல விஷயங்களை நாம் சொல்லி அது செய்யும் போது பார்ப்பதை விட, யாருமே நம்மை கண்டு கொள்ளவில்லை, யாரையும் நான் கண்டு கொள்ளவில்லை என்ற நினைப்பில் அவர்கள் பாட்டுக்கு தங்கள் செயல்களை மும்முரமாய் செய்து கொண்டிருக்கும்போது அவர்களை  கவனிக்க வேண்டும்! அதை விட அழகான ஒரு விஷயம் இந்த உலகில் கிடையாது. எதையோ ஒன்றை உருட்டிக் கொண்டிருப்பார்கள். பொம்மையை பார்த்து கண்ணைச் சுருக்கி சிரிப்பார்கள். பல்லு போன கிழவி ஒன்று எதையோ ஒன்றை புரியாமல் புலம்பிக் கொண்டிருப்பது போல் "தத்தக்க பித்தக்க" என்று பேசிக் கொண்டிருப்பார்கள். திடீரென்று தலையெடுத்து நம்மை பார்க்கும்போது நாம் அதை தான் கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிந்த உடன் அதன் முகத்தில் வரும் வெட்கம் இருக்கிறதே...கிளாஸ்!  அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

அன்று நானும் "தரு"வும் கட்டிலில் விளையாடிக் கொண்டிருந்தோம். அவளுக்கு அன்று விளையாடும் மூட் இல்லை. இன்று எப்படியும் நடந்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு விட்டாள் போலும். கட்டிலில் நடப்பது தரையில் நடப்பதை போல் எளிதல்ல. ஆனால் விழுந்தால் அடிபடாது  என்று அவளுக்குத் தெரிகிறது. மேலும் அப்பாவும் அருகில் இருக்கிறார் என்ற கூடுதல் நம்பிக்கை வேறு. சில சமயம் நல்ல விளையாட்டு மூடில், நின்று கொண்டு வேண்டுமென்றே பின்னால் சாய்வாள், நான் பதறி போய் பிடித்தால் குலுங்கி குலுங்கி சிரிப்பாள்.  ஆனால் அந்த விளையாட்டை கட்டிலில் மட்டும் தான் செய்வாள்!

அன்றும் அப்படித் தான், ஆனால் பின்னால் சாயாமல் ஒழுங்காய் நடந்து கொண்டிருந்தாள். எங்கள் வீட்டில் நல்ல பெரிய கட்டில். அதனால் அவளுக்கு ரொம்ப வசதி. கட்டிலின் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்திற்கும், அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பக்கத்திற்கும் என்று மாறி மாறி நடந்து கொண்டிருந்தாள். அப்போது ஒன்று கவனித்தேன். அவளுக்காக ஒரு சிறிய வெள்ளை தலையணை வைத்திருப்போம். அவளாகவே தனியாய் எழுந்து நிற்பதே பிரம்ம பிரயத்தனம். இதில் அம்மணி ஒரு கையில் அந்த தலையணையை தூக்கிக் கொண்டே எழுந்தாள். அதை ஒரு கையில் வைத்துக் கொண்டே நடந்தாள். அதனால், பல முறை விழுந்து கொண்டே இருந்தாள். "அதை கீழே போடும்மா..நீ நட" என்று நான் அறிவுரை கூறி அந்த தலையணையை அவள் கையிலிருந்து வாங்கிக் கொண்டாலும், மீண்டும் மீண்டும் அதை அவள் கைகளில் வாங்கிக் கொண்டாள். பிறகு தான் எனக்கு ஒன்று புரிந்தது. கார்ப்பரேட் உலகில், "எக்ஸ்ட்ரா மைல்" என்று அடிக்கடி ஒன்றை சொல்வார்கள். அதாவது உங்களால் எவ்வளவு முடியுமோ அதை விட ஒரு படி மேலே உழைப்பது என்று பொருள். குழந்தைகள் அதை வெகு இயல்பாய் செய்கிறார்கள். கட்டிலில் சரியாய் நடப்பதே சிரமம், ஆனால் அதையும் தாண்டி கையில் ஒரு பொருளை வைத்துக் கொண்டு நடந்தால் இன்னும் கடினமாய் இருக்கும். ஆனால், நாளை தரையில் நடக்கும்போது அந்தப் பயிற்சியே அவளுக்கு கை கொடுக்கும்.  அதனால் தரையில் வெகு எளிதாய் நடக்க முடியும்! என்ன ஒரு அறிவு பாருங்கள். நான் ஒன்று புரிந்து கொண்டேன். குழந்தைகள் இயல்பிலேயே புத்திசாலிகளாய் தான் இருக்கிறார்கள். நாம் தான் கண்டதை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து முட்டாளாக்கி விடுகிறோம்!!
இதற்கு விரிவாய் விமர்சனம் எழுதி என் பொழுதை வீணாக்க விரும்பவில்லை. [அப்படி ஒன்றும் உருப்படியாய் செய்யவில்லை என்றாலும்!]. சுருக்கமாய் ஆரம்பம் ஏன் "பாடாவதி" என்பதை சொல்லிவிடுகிறேன். இடைவேளைக்கு முன்: ஒரு கதாநாயகன் வில்லன் வேலைகளை செய்கிறார். இடைவேளைக்கு பின்: அவர் ஏன் அப்படி செய்கிறார்? அதற்கான விளக்கம். இதே மாதிரி படங்கள் பல இருக்கின்றன. தமிழில் என் மனதில் உடனே தோன்றுவது "சிகப்பு ரோஜாக்கள்". கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அந்த படம் வந்தது 1978 ல். அந்த காலத்துக்கு என்ன ஒரு புதுமையான கதைக்களம் அது. என்ன ஒரு சுவாரஸ்யமான திரைக்கதை. அவன் ஏன் கொலையாளி ஆனான் என்பதற்கு என்ன ஒரு அழுத்தமான பின்னணி. இன்று வரை, "இந்த பொண்ணுங்களே இப்படி தான்! குத்துங்க எஜமான் குத்துங்க" டயலாக்கை நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.  "ஆரம்பம்" படம் வெளியாவது 2013 ல். அப்படி என்றால் இந்த மாதிரி ஒரு கதைக்கு எத்தனை சுவாரஸ்யத்தை கூட்டியிருக்க வேண்டும். அவன் அப்படி ஆனதற்கு எத்தகைய ஒரு அழுத்தமான பின்னணியை கொடுக்க வேண்டும்? படத்தோட டயலாக்ஸ், சுபா? ஷபா!!

முதல் காட்சியில் அஜீத் மும்பையில் குண்டு வைக்கிறார். அடுத்த காட்சியில் ஒரு வடநாட்டு [?] கோயிலில் பாட்டு பாடுகிறார். அடுத்த காட்சியில் சென்னை ஏர்போர்ட்டில் இருக்கிறார். என்ன ----------- சிச்சுவேஷன் சொல்லி இசையமைப்பாளரிடம் பாட்டு கேட்பார்கள் என்று தெரியவில்லை. ஹீரோ இன்ட்ரொடக்ஷன் சாங் அப்படி தான் இருக்கும் என்று சால்ஜாப்பு சொல்லாதீர்கள். எனக்குத் தெரிந்து ரஜினி தான் ஹீரோ இன்ட்ரொடக்ஷன் சாங் ட்ரெண்டை ஆரம்பித்தார் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் ஏன் அந்த பாட்டு பாடுகிறார் என்று ஒரு மொக்கை காரணமாவது இருக்கும். உதாரணம், "வந்தேண்டா பால்காரன்" மாட்டுப் பொங்கல்! "நான் ஆட்டோக்காரன்" ஆயுத பூஜை. இப்போது அது கூட இல்லாமல் படம் எடுக்கிறார்கள்.

அதிலும் இந்த அஜீத் ரசிகர்கள் இருக்கிறார்களே! முடியலை...விஷயம் என்னவென்றால் இப்போதெல்லாம் யாரை கேட்டாலும் அவர் அஜீத் ரசிகராய் தான் இருக்கிறார். இவர்களுக்கு அவரின் மேல் உள்ள அளவிட முடியாத பக்தி என்னை புளகாங்கிதம் அடையச் செய்கிறது. ஒத்துக்குறேன். அஜீத் அழகா இருக்கார். நல்லா நடக்கிறார். அழகா சிரிக்கிறார். எல்லாம் சரி! ஒழுங்கா கதை கேக்க மாட்டேன்றாரே, அதானே என் கவலை!! கொத்து ஹீரோக்களை வைத்து சூப்பர் கமர்சியல் படம் எடுக்குறோம், இவரை வச்சி எப்படி எடுக்கணும்?! அஜீத்தின் நெருங்கிய நண்பர்கள் யாராவது இதை படிச்சா, அவர்கிட்ட சொல்லுங்க, அவரோட அடுத்த பட கதையை நான் தேர்ந்தெடுக்கிறேன்!

பாண்டிய நாடு. இது படம். என்ன ஒரு விறு விறு திரைக்கதை. என்ன ஒரு அழுத்தமான பாத்திரப்படைப்பு. பாரதிராஜாவா அது? "சிறு பொன்மணி" பாட்டில் அவர் நடிப்பதை பார்த்தால் எனக்கு பயமாய் இருக்கும். ஆனால் இந்த படத்தில்...அடடா...நான் பாரதிராஜாவை பாக்கலை, ஒரு பாதிக்கப்பட்ட தகப்பனைத் தான் பார்த்தேன்.! பின்னிட்டீங்க...அப்புறம் "ஃபை ஃபை ஃபை பாட்டு" சூப்பரோ சூப்பர். ரம்யா நம்பீசனா இப்படி பாடினது? லட்சுமி மேனன் - பத்தாவது பாஸ் பண்ண பொண்ணா இது? நான்  எல்லாம் பத்தாவது பாஸ் பண்ணும்போது "பால் குடிச்சுட்டு பள்ளிக்கூடத்துக்கு வந்த பாலகன்" மாதிரி இருப்பேன்!! சோ, நான் சொல்ல வர்றது என்னன்னா சுசீந்திரன் எப்போதுமே எனக்கு விருப்பமான ஒரு கமர்சியல் டைரக்டர் [ராஜபாட்டை பட்ட பாட்டை தவிர்த்து சொன்னால்!]. Now Ajeeth sir, you should work with these kind of directors!! அம்புட்டு தான்!