ஒரு நல்ல கவிதை எழுத
முயற்சிக்கிறேன் - நான்
ஒன்பதாவது படிக்கும் போதிலிருந்து!

கவிதை எழுத சிறந்த களங்கள்
நிலவும், பெண்ணும்!

கவிதையும் பெண்ணும் ஒன்று!
நாம் கேட்கும் போது
அலட்டிக் கொள்வதும்
நாம் கேட்காத போது
அள்ளித் தருவதும்!

நல்ல கவிதை இல்லை என்று
நான் கிழித்துப் போட்டவைகளை
சேர்த்து வைத்திருந்தால்...

எப்படி கவிதை எழுதக் கூடாது
என்று எட்டாங்கிளாஸ்
பாடமாக்கியிருக்கலாம்!

என்னுடைய கவிதைகளை
படித்த தோழிகள், நான்
யாரையோ காதலிக்கிறேனென்றார்கள்!

இல்லை என்று மறுத்தும்...
என்னை யாரும்
காதலிக்கவில்லை!

சரியான வார்த்தைகள்
புணர்வதில் உருவாவது
ஒரு நல்ல கவிதை

நல்ல கவிதைகளை
படிக்கும் போது
வார்த்தைகள் மீது
எனக்கு கோபம் வரும்

வார்த்தைகள் எல்லோர்
பேச்சையும் கேட்பதில்லை
அது மகுடி ஊதும் பாம்பாட்டியிடம்
ஆடும் நாகம் போல் நல்ல கவிஞனிடமே
இசைந்து கொடுக்கிறது!

ஒரு நல்ல கவிதை எழுத
முயற்சிக்கிறேன் - நான்
ஒன்பதாவது படிக்கும் போதிலிருந்து!

0 Responses