கிறுஸ்துமஸ் விடுமுறையை பனிச்சறுக்கு விளையாடிக் கொண்டாடினேன். இதப் பார்றா, எப்பவுமே பொலம்புற ஆளு கொண்டாடினதை பத்தி எல்லாம் சொல்றானேன்னு ஆச்சர்யமா இருக்குமே உங்களுக்கு!! எனக்கே இருக்கே...சரி கதைக்கு வருவோம்!! 2 வருஷத்துக்கு முன்னாடி நான் அமேரிக்கா வந்தப்போ பனிச்சறுக்கு முதல் முறையா விளையாடினேன். இது ரெண்டாவது தடவை...2 வருஷம் கழிச்சி விளையாடினா, அது மொதல் தடவை மாதிரி தான்!!

பனிச்சறுக்கு ஆரம்பத்தில் எல்லோருக்கும் பிடித்து விடாது. ஏனென்றால் அது விளையாட நாம் கொஞ்சம் அவஸ்தை பட வேண்டும். நான் இருக்கும் ஊரில் வீட்டை விட்டு வெளியில் வந்தால் போதும், ஒரு அழகான இளம் பெண்ணிடம் ஐ லவ் யு சொல்லி அவள் செருப்பை கழட்டி கன்னத்தில் ஒரு அரை அறைந்தால் எப்படி இருக்குமோ அதை விட மோசமாய் குளிர் அறையும்.!! [எனக்கு எதையும் சுத்தி வளைச்சி பேசத் தெரியாது பாருங்க!!! ஹிஹி] இதில் போக்கிரி விஜய் மாதிரி பல சட்டைகள் போட்டுக் கொண்டு [இந்த ஊர்ல போட்டா அதுக்கு ஒரு நியாயம் இருக்கு!!] அந்த பனி மலையின் உச்சியில் கொண்டு போய் நிறுத்தி என் எடையில் பாதி எடை கொண்ட பூட்ஸ்களை மாட்டி விட்டு [அதை மாட்டி விட்டால் நிலாவில் நடப்பதைப் போலத் தான் நடக்க வேண்டும்!] என் உயரத்திற்கு காலில் இரு கட்டைகளை மாட்டி விட்டு, கையில் அதே சைசுக்கு இரு குச்சிகளை கொடுத்து இப்போ சறுக்கு பாப்போம்னா, நமக்கு பேட் வேர்ட்ஸ் வருமா? வராதா?

அவன் சொல்லிக் கொடுத்தான், தம்பி கால்ல இருக்குற ரெண்டு கட்டைகளையும் பிஸ்ஸா ஷேப்ல கொண்டு வந்தா போதும் அது நின்னுடும்னு....அது அவனுக்கு மட்டும் தான் நிக்கும்னு எனக்குத் தெரியாது...நானும் பிஸ்ஸா, பர்கர்னு என்னோட க்ரியேட்டிவிட்டி எல்லாம் யுஸ் பண்ணி நிப்பாட்டிப் பாத்தேன். ஒரு தடவை சருக்க ஆரம்பிச்சோம்னா பேதி மாதிரி அது பாட்டுக்கு நிக்காம போகும் பாருங்க...அப்புறம் நல்ல வெள்ளக்கார பொண்ணா பாத்து முட்டி மோதி நிப்பாட்ட வேண்டியது தான்! [ஸ்வபா....எவ்வளவு கஷ்டம் பாருங்க!!]

இத்தனைக்கும் கத்துக்குட்டிகளுக்காக தனியாய் ஒரு சின்ன ஸ்லோப் இருப்பது போல் வைத்திருக்கிறார்கள். அதில் தான் கத்துக்கனும். மேலே ஏற்றி விடுவதற்கு ஒரு மெஷின். அலுங்காமல் குலுங்காமல் அந்த சின்ன ஸ்லோப்பின் மேலே சேர்ப்பித்து விடும், பிறகு சறுக்கி கீழே வர வேண்டியது தான். பெரிய மலை உச்சியில் செல்பவர்க்கு விஞ்ச், இரு சீட்டுகளுடன் அவர்களை ஏற்றிச் செல்லும், இரண்டு நிமிடத்தில் சல்லென்று சருக்கி கீழே வந்து விடுகிறார்கள். அந்த மலை உச்சியிலிருந்து அவர்கள் வருவதை பார்த்தாலே பயங்கரமாய் இருக்கிறது. இதில் பொடிசுகள் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அப்பாவுடன் சரிக்கு சமமாக அந்த மலை உச்சியிலிருந்து சல்லென்று சறுக்கிக் கொண்டு வருகிறார்கள். பொறந்தவுடனே கத்துக் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க போல இருக்கே என்று தோன்றுகிறது. இதனால் நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், ஒரு பெரிய மலை உச்சியிலிருந்து சல்லென்று சறுக்கத் தெரியும் வரை, பனிச்சறுக்கை அவ்வளவாய் ரசிக்க முடியாது!!

ராஜ்குமார் ஹிரானி இயக்கிய 3 இடியட்ஸ் பார்த்தேன். முன்னாபாய் அளவுக்கு ரசிக்க இயலவில்லை என்றாலும், பரவாயில்லை. இப்படி ஒரு கல்லூரிக் கதைக்கு அமீர்கான், மாதவன் எதற்கு என்று புரியவில்லை. அமீர்கான் இந்தப் படத்திலும் கல்வி முறையைப் பற்றி விமர்சிப்பது அலுப்புத் தட்டுகிறது. ஹிராணிக்கு தன்னுடையை பார்வையாளர்களை சந்தோஷக் கண்ணீர் விட வைப்பதில் அவ்வளவு பிரியம் என்று நினைக்கிறேன். மனிதர் எல்லா படங்களிலும் அதை பொறுப்பாய் செய்கிறார். சமீபத்தில் நான் மிகவும் ரசிக்கும் ஒரு நடிகர் பொமன் இரானி. எந்த காரெக்டர் என்றாலும் பிய்த்து உதறுகிறார். பேஜ் 3யில் எடிட்டர் காரெக்டரும், லகே ரஹோ முன்னாபாயில் சிங் காரெக்டரும், கோஸ்லா கா கோஸ்லாவில் வில்லன் பாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்தப் படத்திலும் ஒரு கடுமையான கல்லூரி முதல்வராக மிகச் சரியாய் செய்திருக்கிறார். மற்றபடி அமீர்கானுக்கு இந்தப் படமும் ஒரு வெற்றியே என்று தான் சொல்ல வேண்டும்.

சரியாய் ஒரு மாதத்திற்கு ஒரு முறை எனக்கும் ப்ளாக் இருக்கிறது என்று எனக்கு நினைவுக்கு வந்து விடுகிறது. சந்தோஷம்!! கடந்த ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட எல்லா நாட்களுமே மாடாய் உழைத்தேன். மாட்டுக்காவது ஓட்டுபவன் அசந்து விட்டால் விடுதலை தான்! ஆனால் எங்கள் நிலைமை அதை விட மோசம். எவன் இருக்கிறானோ இல்லையோ வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். நாளுக்கு மினிமம் 15, 16 மணி நேரமாவது வேலை பார்த்திருப்பேன். கண்ணாடியில் என்னை பார்க்கும் போதெல்லாம் என் மீதே பரிதாபம் வழிந்து கொட்டியது. என் பத்து வருட மென்பொருள் வாழ்க்கையில் நான் அவ்வப்போது இப்படி மாட்டிக் கொள்வதுண்டு! என்று சொல்வதை விட, அவ்வப்போது தப்பித்துக் கொள்வதுண்டு என்று சொன்னால் சரியாய் இருக்கும். பத்து வருடங்களில் கிட்டத்தட்ட 8 வருடங்களாவது இப்படி பேய் வேலை பார்த்திருக்கிறேன். அது எப்படி என்னை பார்த்ததும் இவர்களுக்குப் புரிகிறது என்று தெரியவில்லை. வடிவேலு சொல்வது போல்
"ஒரே ஒரு தடவை தான் பார்த்தாங்க, கைய கால அமுக்கச் சொல்லிட்டாங்க!"
"இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா, இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க!"

ம்ம்...நானும் வலிக்காத மாதிரியே எவ்வளவு நாள் தான் நடிக்கப் போறென்னு தெரியலை. பாக்கலாம்...

அமேரிக்காவில் முடமாய் வந்திறங்கிய எனக்கு இரண்டு வாரத்திற்கு முன் தான் கால்கள் கிடைத்தன. [என்ன புரியலையா? என்னை ஒரு எலக்கிய வாதியா ஆக விட மாட்டேங்களே...]கார் இல்லாததைத் தான் காலில்லாததாகச் சொன்னேன். அமேரிக்காவில் சில பெரு நகரங்களைத் தவிர்த்துப் பார்த்தால் காரில்லாதவன் காலில்லாதவன் தான்!! இங்கு எந்த இந்தியனை பார்த்தாலும் ஹோண்டா, டொயோட்டா தான் வாங்குகிறார்கள்! இதை தான் நம் ஊரிலேயே வாங்கலாமே என்று நினைத்து நிசான் சென்ட்ரா வாங்கினேன். அங்கிருக்கும் கடனை அடைக்க இங்கு வந்தால் இங்கு ஒரு புது கடன் தொடங்குகிறது! ஒரு வழியாய் தத்தி தத்தி நடக்கத் தொடங்கி விட்டேன். [கார் வாங்கிட்டு ஏன் நடக்கிறீங்கன்னெல்லாம் கேக்கப் படாது!] இங்கு கார் ஓட்டுவது பெரிய கம்பு சூத்திரம் இல்லை. பொம்மை கார் ஓட்டுவது போலத் தான். ஆக்ஸிலேட்டரை அழுத்தினால் வண்டி நகரும், ப்ரேக்கை அழுத்தினால் வண்டி நிற்கும். அவ்வளவு தான்! கியர் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை, க்ளட்ச் மிதிக்க வேண்டிய அவசியமில்லை..கெட்ட வார்த்தைகள் தெரிய வேண்டிய அவசியமில்லை. [..தா! வீட்ல சொல்டு வந்தியாடா!!]ஏனென்றால் நீங்கள் போகும் பாதையில் திடுதிப்பென்று எவனும் வர மாட்டான். இன்னொரு ஆச்சர்யம், லெப்ஃட் இன்டிகேட்டர் போட்டால் லெஃப்ட் தான் திரும்புவான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! ஆனால் நீங்கள் வண்டி ஓட்டும் போது எவனாவது பின்னால் ஹாரன் அடித்தால் "யு ஸ்டுப்பிட் ஆஃப் தி நான்சன்ஸ் ஆஃப் தி இடியட் என்று அர்த்தம்!" அதாவது அவசியமில்லாமல் எவனும் ஹாரனே அடிக்க மாட்டான்! [ஆமா, இதெல்லாம் நான் தான் மொதல்ல சொல்ற மாதிரி சொல்லிட்டு இருக்கேன்! உங்களுக்குத் தெரியாதா என்ன?]

நேற்று அவதார் பார்த்தேன். டைட்டானிக் வந்த சமயத்தில் டிஸ்கவரி சானலில் ஒரு முறை அதன் மேக்கிங் பார்த்தேன். படத்தை விட அது பிரம்மாண்டமாய் இருந்தது! எத்தனை ஆட்கள், எத்தனை வயர்கள், எத்தனை மெஷின்கள், எத்தனை மெனக்கெடல்...இனிமேல் கேமரூனே நினைத்தாலும் இவ்வளவு பிரம்மாண்டமாய் ஒரு படத்தை எடுக்க முடியாது என்று நினைத்தேன். அது நேற்று அவதார் பார்த்த போது சுக்கு நூறாய் உடைந்து போனது!! டைட்டானிக் எல்லாம் எனக்கு சப்பை மேட்டர் என்பது போல் இருக்கிறது இந்தப் படம்! அதிலும் ஐமேக்ஸ் 3டியில் பார்த்தால் சொல்லவா வேண்டும். "இதை டைட்டானிக் படம் வந்தவுடன் எழுதி விட்டேன்; இந்தப்படத்தை எடுப்பதற்கு அப்போதிருந்த தொழில் நுட்பம் பத்தவில்லை!" என்று மனிதர் கூலாய் சொல்கிறார். அடப்பாவிகளா...இப்படியா கற்பனைக் குதிரையை ஓட்றது!! ம்ம்..இந்தப் படம் இன்னொரு ஒரு பத்து வருடத்திற்குத் தாங்கும்! அதற்குப் பிறகு என்ன செய்யப் போகிறாரோ!!!

அமேரிக்காவில் கிறுஸ்துமஸ் கொண்டாட்டம் ஆரம்பித்து விட்டது. 24, 25 இரு நாட்களும், 31, 1 இரு நாட்களும் அலுவலகம் விடுமுறை! சனி ஞாயிறையும் சேர்த்தால் 4, 4 நாட்கள். ஊர் சுற்றிப் பார்க்க வேண்டும். பனிச்சருக்கு விளையாட வேண்டும்! இதற்குள் நான் எழுதிய ப்ரோக்ராமில் பக் வராமல் இருக்க வேண்டும்!
கர்த்தர் என்னை இரட்சிப்பாராக!!
வருகிற 16ம் தேதியுடன் (அதாவது நாளையோடு!) நான் முதன் முதலாய் அழுது, முன் பின் தெரியாத நர்ஸ்கள் எல்லாம் என்னை பப்பி ஷேமாய் பார்த்து முப்பத்தியோரு வருடம் ஆகிறது. ஹிஹி பிறந்த நாளை நான் இப்படி தான் சொல்றது!! ஹிஹி!! நர்சரி பள்ளியில் படித்த போது காலையில் எழுந்து குளித்து பக்கத்து பிள்ளையார் கோயிலுக்கு போய் உக்கி போட்டு [பிள்ளையார்: அட, அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிப் போச்சா?] ஓடி வந்து புது ட்ரஸ் போட்டுக் கொண்டு கேரமில்க் மிட்டாய்களை ஒரு டப்பாவுக்குள் போட்டுக் கொண்டு எங்கள் காம்பவுண்டில் ஒவ்வொரு வீடாய் ஏறி மிட்டாய் கொடுத்தது ஞாபகம் வருகிறது. சிலர் ஒரு ரூபாய் கொடுப்பார்கள். சிலர் ஐம்பது பைசா! எனக்குத் தெரிந்து பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடியதால் பிறந்த ஒரே பயன் அன்றைக்கு பார்த்து டீச்சர் எதையோ கேட்டு எல்லோரையும் அடிக்க, என்னை மட்டும் பர்த்டே பையன் என்று விட்டு விட்டார்கள். அதைத் தவிர ஒன்றுமில்லை!!

கல்கி படத்தில் ஸ்ருதி (எங்கேப்பா இந்த பொண்ணு?) ரகுமானை அறைந்து விட்டு ஒரு கேள்வி கேட்பார். யாருக்குடா பொறந்த நாள் வர்ல? நாய் பன்னிக்கு கூடத் தான் பொறந்த நாள் வருது என்று! பொறந்த நாள் கொண்டாட்றானாம், பொறந்த நாள் என்று! அது தான் ஞாபகம் வருகிறது. அந்தப் படத்தை அப்போ பாத்தப்போ ஆமா, இல்லை கரெக்ட் தான்! என்று தோன்றியது.

இத்தனை வருடம் இந்த உலகில் குப்பை கொட்டியதில் ஒன்றும் பெரிதாய் சாதிக்கவில்லை. அரைகுறை கல்வி அறிவை வைத்துக் கொண்டு ஐ. டி. யின் தயவால் சில லட்சங்களை சம்பாதித்துக் கொண்டு, ஒரு சின்ன ஃப்ளாட் கட்டி கொண்டு, எல்லா இடங்களிலும் வாடகை ஏற்றி விட்ட கூட்டத்தைச் சேர்ந்தவன் என்ற பாவத்தை சுமந்து கொண்டு, அமேரிக்காவில் உயர் ரக குப்பை கொட்டிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பார்க் ஸ்டேஷனில் மின்சார ரயில் நின்றதும் திபு திபுவென்று ஓடும் கூட்டங்களில் ஓடுபவனுக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. நான் ஒரு காமன் மேன்! அதுவே எரிச்சலாய் இருக்கிறது. நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், நான் இதற்க்கா பிறந்தேன் என்ற ஒரு கேள்வி மனதுக்குள் எழுந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ஃப்ளாட்டுக்கு லோன் கட்டனுமே என்ற கவலையில் அது எங்கோ மறைந்து விடுகிறது! முதல்வன் படத்தில் மணிவண்ணன் சொல்வது போல் காலம் பூரா வேலை பாத்து ஒரு சின்ன வீட்டு கட்டி ஹிண்டு பேப்பர் படிப்பதுடன் என் வாழ்க்கை முடிந்து விடுமோ என்று பயமாய் தான் இருக்கிறது!

அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்றார்! நான் கண்டு கொண்டே இருக்கிறேன்; வந்ததற்கு நீங்கள், அது நினைவாகட்டும் என்று வாழ்த்தி விட்டாவது போங்களேன்!!

மக்களே செளக்கியமா? மாசத்துல ஒரு தடவை வந்து போறதுக்கு உனக்கு எதுக்கு ப்ளாக் கருமாந்திரம் எல்லாம்னு கேக்குறது புரியுது! என்ன பண்றது, வேலை அப்படி! அமேரிக்கா வந்து ஒருத்தன் வீடு பாத்து, காரோட்ட கத்துக்கிட்டு, சுத்தி முத்தி நண்பர்களை தேடிப் புடிச்சி சேத்துகிட்டு, நாலு இடம் சுத்தி பாத்துட்டு.. அப்பாடா! இப்போ தான் கொஞ்சம் நல்லா இருக்குன்னு சொல்றதுக்கு குறைஞ்சது ஆறு மாசம் ஆவும்! எனக்கும் அதே கதி தான்! அப்பாடா ல அப்பா நான் சொல்ல என் மேலிடம் மிச்ச டாவை சொல்லி நீ ரிச்மண்ட்ல குப்பை கொட்டினது போதும், கெளம்பு பாய்ஸி, ஐடாஹோக்குன்னு (ஐய்யய்யோ!) சொல்லிடுச்சு! ரிச்மண்ட்ல இருந்தே நான் ஆணி புடுங்குறேனேன்னு சொன்னதுக்கு, ஐடாஹோல இருக்குற ஆணியை ரிச்மண்ட்ல இருந்து எப்படி புடுங்குவே, ஏதோ ரிச்மண்ட்ல பொறந்து வளந்த மாதிரி பேசுறேன்னு கெட்ட வார்த்தையிலேயே திட்டினாங்க! போறாளே பொன்னுத்தாயி பொலபொல வென்று கண்ணீர் விட்டு பாட்டை பேக்ரவுண்ட்ல போட்டு விட்டு தூக்க முடியாத பல பெட்டி படுக்கைகளைத் தூக்கிப் போட்டு வந்துட்டோம்! இதுல உங்களுக்கு டெய்லி ஒரு ப்ளாக் எழுதனுமாக்கும்? அட போங்கப்பா! ஆமா, நானே பேசிட்டு இருக்கேனே, என்னடா இவன் மாசத்துக்கு ஒன்னு எழுதுறான்னு குறைபட்டுக்குற ரெண்டு பேராவது இருக்கீங்களா? இல்ல நானா தான் பெனாத்திட்டு இருக்கேனா? எங்கே, என் ப்ளாக் புடிக்கும்ன்றவங்க கையைத் தூக்குங்க, சரி நீ எழுதுனா என்ன எக்கேடு கெட்டுப் போனா என்னன்றவங்க கையத் தூக்குங்க? சரி, ரெண்டுக்கும் தூக்காதவங்க இப்போ கையைத் தூக்குங்க! தெரியுமே, அங்கேயும் ஒருத்தன் இருப்பானே!

பாய்ஸில இருக்குற சனம் யாராவது மாசத்துக்கு ஒரு தடவை ஒரு இலக்கியப் படைப்பை அளிக்கும் (அதாங்க மொக்கை!!) என் ப்ளாக்கை படிச்சீங்கன்னா இந்த ஊர்ல எப்படி நடந்துக்கனும், என்ன எது வாங்கனும், வால் மார்ட் எங்கே, இந்தியன் ஸ்டோர் எங்கேன்னெல்லாம் கத்துக் கொடுக்க வந்துருங்க!! இது இங்கே தானே இருக்கப் போவுது, மெல்ல பாத்துக்கலாம்னு மட்டும் நெனைக்காதீங்க! அமேரிக்காவுல நெறைய எடத்துல இருக்கு நான் புடுங்க வேண்டிய ஆணி!


உன்னை போல் ஒருவன் பார்த்தேன். கமல் இந்தப் படத்தை எடுக்கிறார் என்று கேள்விப்பட்ட போதே எனக்கு அது சிலாக்கியமாய் படவில்லை. ஜனநாயக நாடு இது. யார் என்ன செய்ய முடியும்? இதோ எடுத்து விட்டார். நானும் பார்த்து விட்டேன். யார் என்ன செய்ய முடியும்?

படத்தின் நிறை

ஸ்ருதியின் இசை. தமிழ் சினிமாவில் பாடல்களை முதலில் தூக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இந்தப் படத்திற்கு இத்தனை பாட்டு வைத்திருக்கிறாரே என்று கமலின் மீது எரிச்சலாய் வந்தது. நல்ல வேலை படத்தில் பாடல்கள் இல்லை. "வானம் எல்லை" என்ற பாடல் அற்புதமாய் இருக்கிறது. ஸ்ருதியின் குரலில் ஏதோ ஒரு அற்புதம். கேட்டு முடிந்த பிறகும் காதுகளில் ரீங்கரித்து கொண்டே இருக்கிறது.



படத்தின் குறைகள்

இந்தப் படம் முதலில் ஹிந்தியில் வந்தது!

காமன் மேன் வேடத்தில் கமல் நடித்தது! அதிலும் அப்படி ஒரு ஸ்டைலிஷான தாடி வேறு. சத்யா தாடியாவது வைத்திருக்கலாம். ஒரே சேரில் உட்கார்ந்து கொண்டு என்ன அற்புதமான நடிப்பு என்று சொல்பவர்கள் ஹிந்தியில் இதை பார்க்க வேண்டும். ஊர்ல இத்தனை இடத்தில பாம் வச்சிருக்கேன் என்று கமல் சொல்வதில் "எப்புடி, நான் யார் தெரியுமா, கண்ல வெரலை விட்டு ஆட்ரோம் ல" என்ற ஒரு ஆணவத் தொனி தெரிகிறது. அது ஹிந்தியில் தெரியவில்லை. அவர் ஒரு காமன் மேன் ஆகவே வாழ்ந்திருந்தார். கமலுக்கு எப்போதும் நஸ்ருதின் ஷா மீது ஒரு பொறாமை. மனுஷன் என்னமா நடிக்கிறார் என்று அவரே சிலாகிக்கும் பேட்டியை பார்த்திருக்கிறேன். அதற்கான சரியான நேரம் பார்த்து வஞ்சம் தீர்த்துக் கொண்டார், அதாவது சிவாஜி ஒன்பது வேஷம் போட்டார், நம்ம பத்து போட்ருவோம் என்பது போல் தான் இதுவும். புதிய பாதை படத்தில் பார்த்தீபன் கமலைத் தான் நடிக்க சொன்னாராம். நான் இதை செய்தால் கமல் என்ன அருமையாய் நடிச்சிருக்கார் என்று சொல்லி விட்டுப் போய் விடுவார்கள். நீங்கள் செய்தால் தான் இயல்பாய் இருக்கும் என்று சொல்லி கமல் ஒதுங்கினாராம். அதே போல் இந்தப் படத்திலும் இவர் ஒதுங்கி இருக்கலாம்.

காமன் மேன் பாத்திரத்துக்கு ஏற்ற நடிகர் தமிழில் யார் என்று யோசிக்கும் போது எனக்குத் தோன்றுவது டெல்லி கணேஷ் தான்! படம் ஓடாது அது வேறு விஷயம்.அனால் அவர் இதற்கு அற்புதமாய் பொருந்துவார், நன்றாகவே நடிப்பார் இதில் சந்தேகமே இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. கோவை தமிழ் பேச சரளாவை ஜோடி சேர்த்துக் கொண்டது போல் இதையும் கமல் செய்திருக்கலாம். சரி வியாபாரத்திற்காக வேண்டுமென்றால் கமலே கமிஷினராக செய்திருக்கலாம். கமிஷினர் வேடத்திற்கு மோகன்லாலை விட மம்முட்டியோ, பிரகாஷ் ராஜோ தான் ஏன் சாய்ஸ். மோகன்லாலை பின்னாலிருந்து பார்த்தால் அவரின் கன்னம் தெரிகிறது. நடிப்பு அவ்வளவாய் தெரியவில்லை. அனுபம் கேரிடம் தெரிந்த ஒரு பதற்றம், மிடுக்கு, சீரியஸ்னஸ் மிஸ்ஸிங் மாதிரி தான் எனக்குத் தோன்றியது. ஹிந்தியில் அந்த வேடத்தை பார்க்கும் போது, அந்தப் பதவியில் இருப்பவர் எவ்வளவு வேகமாக சரியான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது என்று ஆச்சர்யமாய் இருந்தது. அந்த அனுபவம் எல்லாம் இதில் கிடைக்கவில்லை. ஒரு வேலை ஹிந்தியில் பார்க்காமல் இருந்திருந்தால் அந்த அனுபவம் கிடைத்திருக்கலாமோ என்னமோ!

படத்தில் இயக்கம் (அதான் கமலை திட்டியாச்சே!), ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, பின்னணி இசை, படத்தொகுப்பு பற்றியெல்லாம் நல்ல தியேட்டரில் பார்த்தவர்கள் போட்டிருப்பார்கள் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். எனக்கு அவ்வளவு விஷயம் தெரியாது.

மொத்தத்தில் உன்னை போல் ஒருவன் ஒரிஜினல் போல் இல்லை!



குயிக் கன் பார்த்தேன். கொஞ்சம் ஸ்லோ கன் தான். கவ்வைக் காப்பாற்றுவது கவ்பாயின் கடமை லைன் நன்றாய் இருந்தாலும் நான் வெஜ் தோசை எல்லாம் போரடித்தது. வேறு ஏதாவது யோசித்திருக்கலாம். அத்தனை கலர் உடையிலும் மனிதர் எத்தனை சீரியசாய் இருக்கிறார். தென்னை மரத்திலிருந்து எல்லோரும் முருகனைத் தாக்க இவரும் சரமாரியாய் சுடுகிறார். குண்டு தீர்ந்தும் ஆட்கள் மேலே வந்து பாய்ந்து கொண்டே இருக்க, வெறுத்துப் போனவர், "கீழே இறங்குங்கடா கொரங்குகளா!" என்பது சூப்பர்! பம்பாயில் அவர் ராஜு சுந்தரத்திடம் ஒத்தைக்கு ஒத்தை இறங்கும் போது, ஏன்டா உனக்கு வேற இடமே கிடைக்கலையா என்று அவர் சொன்னவுடன் காமெரா மெல்ல ஜூம் அவுட் ஆக பம்பாயின் பரபரப்பான சாலை ஒன்றில் ட்ராஃபிக்கில், இருவரும் ஒரு காரின் மீது ஏறி நிற்கும் இடம் க்ளாஸ்! விருமாண்டி பேய்க் காமனுக்கு இந்தப் படத்தில் தான் யுனிஃபார்மிலிருந்து விடை கிடைத்திருக்கிறது. அதற்காகவே அவர் இந்தப் படத்தை ஒப்புக் கொண்டிருப்பார் என்று தோன்றுகிறது. குயிக் கன் முருகன், ரைஸ் ப்ளேட் ரெட்டி, மேங்கோ டாலி பெயர்கள் அத்தனையும் க்ளாஸ்! ரம்பாவா இது? சுந்தர புருஷன் 2 எடுக்கலாம் போல இருக்கிறதே. அந்தக் கூர்மையான அறிவு இருக்கே...



ஈரம் பார்த்தேன். ஈரமே இல்லாதவர்களை ஈரமே கொல்கிறது என்ற லைன் நன்றாகவே உள்ளது. அது என்னமோ ஷங்கர் தயாரிப்பு என்றால் நம் மக்கள் ஒன்றுக்கு பத்தாக்கி விடுகிறார்களோ என்று தோன்றுகிறது. பல கேடு கேட்ட படங்களுக்கு பரவாயில்லை தான். அட இது நல்லா இருக்கே என்று ஆச்சர்யப்படும்படி ஒன்றுமில்லை என்று தான் தோன்றியது.

சரி படங்களை விடுங்கள். என் விஷயத்திற்கு வருகிறேன். கடந்த ஒரு மாதத்தில் ஒன்று கண்டு பிடித்திருக்கிறேன்! ரைட்டர் பிளாக் ரைட்டருக்கு மட்டும் வருவதில்லை. யாருக்கு வேண்டுமென்றாலும் வரலாம்! கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து இப்படி ஒரு மொக்கையை போட்டிருக்கிறேனே (நான் அப்படித் தான் சொல்வேன், நீங்க இதுவா மொக்கை உங்களுக்கு தன்னடக்கம் என்றெல்லாம் பின்னூட்டம் போடணும், சரியா?) அப்போ என் கண்டுபிடிப்பு சரி தானே? என்ன நான் சொல்றது?

அப்புறம்அவிய்ங்க ராசா நம்ம தோஸ்த் தான்! வலைச்சரத்துல ஒரு வாரத்துக்கு வாத்தியாரா இருந்துட்டு வாலண்டரி சஷ்பன்ஷன் வாங்கிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார். அந்த ஒரு வாரத்தில் பல நல்ல மாணவர்களை அவர் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதில் அடியேனும் ஒன்று! என்னை பாத்து வலைப்பூவை ஆரம்பிச்சதா சொல்லியிருந்தார்! இன்னுமா நம்மளை நம்புறாய்ங்க என்று தான் தோன்றியது. ஏதோ நல்லா இருந்தா சரி!


மலையாளப் படங்களைப் பார்க்க வேண்டும் என்று நெடுநாள் ஆசை. புரியாதோ என்று ஒரு தயக்கம். அந்தப் படங்கள்ல புரிய என்ன இருக்கு, ஜஸ்ட் என் ஜாய் என்று கண்ணைக் காட்டாதீர்கள். நான் சொல்வது "அந்த" மாதிரி படங்களை அல்ல. மலையாள சினிமாவை சிலாகித்து அடிக்கடி பத்திரிக்கைகளில் படிப்பதுண்டு. இப்போது தமிழ் சினிமாவைப் பார்த்து அவர்களும் கெட்டுப் போய் விட்டார்கள் என்ற போதிலும், சீனிவாசன், ப்ளெஸ்ஸி, ஆடூர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் நல்ல படங்களை அவ்வப்போது தந்து கொண்டு தான் இருக்கிறார்கள். நேற்று தற்செயலாய் கமல் (ஹாசன் அல்ல) இயக்கிய கருத்த பக்க்ஷிகள் பார்த்தேன். அந்நியனுக்குப் பிறகோ என்னமோ, விக்ரம் இந்தப் படத்தை ரீமேக் செய்து நடிக்கப் போகிறார் என்று படித்ததாய் ஞாபகம். அது கடைசியில் நடக்கவே இல்லை. அப்போதிருந்தே இதைப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். நேற்று அதற்கான சந்தர்ப்பம் வாய்த்தது. அதிலும் ஆன்லைனில் சப் டைட்டிலோடு இருந்தது மேலும் வசதியானது.



முருகன் தமிழ்நாட்டிலிருந்து பிழைப்புத் தேடி 15 வயதில் கேரளா வந்து தன் மூன்று குழந்தைகளுடன் வீடுகளில் சென்று இஸ்திரி செய்து கொடுத்து பிழைக்கிறான். அதில் கடைசிக் குழந்தை பிறவியிலேயே கண் பார்வை இழந்தவள். அவன் மனைவி வயிற்று வலியால் இறந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. அவன் குடும்பத்தோடு ஒரு ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி உள்ள ஒரு சேரியில் வாழ்கிறான். அவர்களைப் போலவே கஷ்டப்படும் அக்கம் பக்கத்துக்காரர்கள். அங்கே இருக்கும் ஒரு பிச்சைக்காரிக்கு (பூங்கொடி) அந்தக் குழந்தைகளின் மீது ஒரு அலாதிப் பிரியம். ஏழைகளுக்குத் துணை ஏழைகள் தானே! அவன் இஸ்திரி போட்டுக் கொடுக்கும் ஒரு பணக்கார வீட்டில் பம்பாயிலிருந்து சுவர்னா வந்து சேர்கிறாள். அவள் ஒரு தீராத நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள், வாழ்வின் கடைசி காலங்களை தன் சொந்த மண்ணில் கழிப்பதற்காக அங்கு வந்து சேர்கிறாள். அங்கு அவளுக்கு மல்லியின் பரிச்சயம் கிடைக்கிறது. அந்தப் பிஞுக் குழந்தைக்கு இந்த உலகத்தைக் காண வேண்டும் என்ற ஆவலைப் புரிந்து கொண்ட சுவர்னா, தான் இறந்ததும் தன் கண்ணை இவளுக்குக் கொடுக்க வேண்டும் என்று எழுதிக் கொடுக்கிறாள். சுவர்னா சீக்கிரம் செத்துப் போக வேண்டும் என்று மல்லியின் அண்ணன் ஆன்டவனைப் பிரார்த்திக்கிறான். இதற்கிடையில் ஒரு கலவரத்தில், முருகனின் இஸ்திரி பெட்டியையும், தள்ளு வண்டியையும் கும்பல் ஒன்று கொளுத்தி விடுகிறது. வாடிக்கையாய் இஸ்திரி போட்டுக் கொடுக்கும் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளெய்ன்ட் செய்தும் ஒன்றும் நடக்கவில்லை. மூன்று பிள்ளைகளும் பசியால் துடிப்பது பொறுக்காமல் சலவைத் தொழிலாளியிடம் குறைந்த சம்பளத்தில் வேலைக்குப் போகிறான். பூங்கொடி விளையாட்டாய் மல்லியைக் கூட்டிக் கொண்டு, அவளையும் பிச்சை எடுக்க வைத்து எல்லோருக்கும் உணவு கொண்டு வருகிறாள். இதை அறிந்த முருகன் ஆத்திரம் கொண்டு அவளை அடித்துத் துரத்துகிறான். பூங்கொடி மல்லியை கண் பார்வையற்றவள் என்பதால் தான் பிச்சை எடுக்க அழைத்துச் சென்றாள் என்பதை தாங்க முடியாமல் வருந்துகிறான்.


I N T E R V A L


ஏற்கனவே வாங்கிய கடன் சுமை கழுத்தை நெறிக்க அந்த சலவைத் தொழிலில் முதலாளியின் ஆலோசனைப் படி இஸ்திரி வண்டி வைத்துக் கொண்டு அதை வைத்து வேலைக்குப் போகாமல் தண்ணி அடித்துக் கொண்டு ஊர் சுற்றும் ஒருவனிடம் சென்று அந்த வண்டியை வாடகை எடுத்துக் கொண்டு வேலையைத் தொடர்கிறான். ஒரு சமயம் சுவர்னாவின் பிறந்த நாளை முன்னிட்டு முருகனின் குடும்பத்தை அழைத்து விருந்து கொடுக்கிறார்கள். அப்போது சுவர்னா முருகனின் மனைவியைப் பற்றி விசாரிக்கிறாள், அவள் வயிற்று வலியால் இறந்ததாகவும், தமிழ்நாட்டில் சிதம்பரம் பக்கத்தில் ஒரு குகை இருப்பதாகவும், அங்கு சென்று வந்தால் தீராத நோயும் தீரும் என்றும், அவள் அங்கு சென்று வர வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறான். அதை நம்பாததால் தான் தன் மனைவியைப் பறி கொடுத்ததாகவும் சொல்கிறான். சுவர்னாவுக்கு அதில் நம்பிக்கை இல்லாத போதும், அவன் கேட்டுக் கொண்டதற்காக அவனையும் அவன் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு அங்கு சென்று வருகிறாள். ஒரு சமயம், முருகனிடம் தன் வண்டியை வாடகைக்கு விட்ட குடிகாரன், முருகன் வாடகையை தன்னிடம் தராமல் தன் மனைவியிடம் தருவதால் அவர்கள் இருவரையும் சந்தேகித்து முருகனிடம் விசாரிக்கும் போது ஆத்திரத்தில் முருகனை கத்தியால் குத்தி விடுகிறான். இதற்கிடையில், சுவர்னாவின் உடல் நலம் தேறி வருவதாயும், இனி பயப்படத் தேவையில்லையென்றும் அவளின் ரிப்போர்ட் பார்த்த டாக்டர் கூறி விடுகிறார். இதைக் கேட்டு அளவில்லா மகிழ்ச்சியடையும் சுவர்னா, சிறிது நேரத்தில் மல்லிக்குத் தான் கொடுத்த வாக்கை நினைத்தும், அவளுக்கு பார்வை கிடைக்கப் போவதாய் ஆசையை உண்டாக்கியதை நினைத்து குற்ற உணர்வு கொள்கிறாள். முருகனின் நிலையை கேள்விப்பட்டு ஆஸ்பத்திரிக்கு வந்தாலும், அவள் உள்ளே செல்லாமல் அவன் செலவுக்குப் பணத்தை மட்டும் கொடுத்து அனுப்புகிறாள். விஷயத்தைக் கேள்விப்பட்ட முருகன் குணமானதும், நேராய் சுவர்னாவைப் பார்க்க வீட்டுக்கு வருகிறான். ஆனால் அவள் ஏற்கனவே பம்பாய் சென்று விட்டதால் அவனால் பார்க்க முடியாமல் போய் விடுகிறது. அவளின் குற்ற உணர்வை அறிந்த முருகன் அவள் நன்றாய் இருந்தால் போதும், எங்களுக்கு கண் தேவையில்லை என்று சொல்லிச் சென்று விடுகிறான். இந்தக் கத்திக் குத்து சம்பவத்தால் மனமொடிந்த முருகன், இங்கு குழந்தைகளை வைத்துக் கஷ்டப்படுவதை விட, சொந்த நாட்டுக்கே சென்று விடலாம், தனக்கு ஏதாவது கஷ்டம் வந்தாலும் அங்கு சொந்த பந்தங்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று முடிவெடுத்து தன் சொந்த நாட்டிற்குச் செல்லத் தயாராகிறான். இவர்கள் போவதை காணப் பொறுக்காமல் வாடி நிற்கும் பூங்கொடியிடம், நீயும் என்னுடன் வந்து விடு என்றவுடன் அவளும் துள்ளிக் குதித்துக் கொண்டு புறப்படுகிறாள். பேருந்து நிலையம் சென்றவுடன் சுவர்னா வீட்டில் சொல்லாமல் வந்தது ஞாபகம் வர, அவன் மட்டும் அங்கு போகிறான். அங்கே சுவர்னா இறந்து போயிருப்பதைப் பார்க்கிறான். சுவர்னாவின் கணவன் கீழ் சாதிப் பயலுக்கு சுவர்னாவின் கண்ணை தனமாகத் தர முடியாது என்று கூறிவிட்டதாய் அவன் அறிகிறான். ஒன்றும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டுச் செல்கிறான். பேருந்தில் ஏறி அமர்ந்ததும் மல்லி சுவர்னாவைப் பற்றி விசாரிக்கிறாள். முருகன் அவள் செளக்கியமாய் இருப்பதாய் பொய் சொல்கிறான். மல்லி ஜன்னலின் வழியே காற்றைக் கையில் பிடிக்க முயல்வதுடன் படம் முடிகிறது!!

நல்ல கதை தான் ஹீரோக்களும் பேட்டி கொடுத்து விட்டு, மாஸ் என்றும், சினிமா ஒரு வியாபாரம் என்றும் தப்பித்துக் கொண்டு கண்ட கன்றாவிகளில் நடிக்கிறார்களே, அவர்கள் பார்க்க வேண்டும் இந்தப் படத்தை. இத்தனை எளிமையான, ஆத்மார்த்தமான கதையை உருவாக்கிய கமலை பாராட்டியே ஆக வேண்டும்.

இஸ்திரி போட்டுக் கொடுத்து மூன்று குழந்தைகளுடன் சேரியில் வாழும் ஒரு சாதாரண கதாப்பாத்திரத்தில் கிட்டத்தட்ட முப்பது வருடங்களாய் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராய் திகழும் மம்மூட்டி நடிக்கிறார். ஒரு அழுக்கு பிச்சைக்காரியாய் பத்மப்ரியா நடிக்கிறார். நம் ஊரில் ஒரு அருமையான நடிகரை சூப்பர் ஸ்டார் ஆக்கி விட்டு சந்திரமுகியும், சிவாஜியும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதில் குசேலன் படத்தில் கடைசி அரை மணி நேரம் ரஜினி என்ன ஒரு அற்புதமான நடிப்பு என்று சிலாகித்துக் கொள்கிறோம். பூஜாவை பிச்சைக்காரியாய் பால வாழ வைத்திருக்கிறார் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம். மலையாள சினிமாவில் அவர்கள் இதையெல்லாம் போகிற போக்கில் செய்கிறார்கள் என்று எனக்குப் படுகிறது.

படத்தில் ஒரு காட்சியில் முருகனின் மகன் பள்ளியில் ஒரு பையனை அடித்து விடுகிறான். வாத்தியாரின் புகாரைக் கேட்ட முருகன் ஏன் அடித்தாய் என்று பையனை கேட்கிறான். அவன் ரஜினியை திட்டிட்டான்பா என்கிறான் ஆவேசமாய். இதைக் கேட்ட முருகன் வாத்தியாரிடம், ஐய்யோ, ரஜினியை எப்படிங்க திட்டலாம், அவர் எங்களுக்கு சாமி மாதிரி, அதான் என் மகன் அடிச்சுருக்கான் என்று சொல்கிறான். தமிழ்நாட்டில் சினிமா என்பது ஒரு கலாச்சாரம் என்று இயக்குநர் நன்றாய் நக்கலடித்திருக்கிறார்.

படத்தில் சின்ன சின்ன விஷயங்கள் அழகாய் இருந்தன. அப்பா, அப்பா என்றூ சதா அழைக்கும் மல்லிக்கு ஏன் கண்ணு என்று வினவும் முருகனின் பாங்கு, நட்சத்திரம் இருக்கா? என்னை பாக்குதா? என்று ஒரு குழந்தைக்குரிய குறுகுறுப்பு, யார் என்ன கொடுத்தாலும், கூப்பிடாலும், "அப்பா" என்று ஒரு முறை அனுமதி கேட்கும் விதம், சந்திரமுகி படத்திற்குச் சென்று பார்க்க முடியாமல் ரஜினி வேஷ்டியா பேண்டா? ஜோதிகா சேலையா? அழகா இருக்காங்களா என்ற எல்லா அசட்டுக் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் முருகனின் வேடத்தில் ஒரு பாசமுள்ள தந்தையை மம்மூட்டி நம் கண் முன் நிறுத்துகிறார். ஆனால் கண் தெரியாத பெண் என்பதற்காக அவள் எதை தொட்டாலும் புன்னகை புரிந்து கொண்டே இருப்பது உறுத்துகிறது.

பத்மப்ரியாவுக்கு சுட்டித் தனமான பிச்சைக்காரி வேடம். பொருத்தமாய் இருக்கிறார். அடிக்கடி குறும்பாய் சிரிக்கிறார். முருகனை அண்ணா என்று அழைக்கிறார். அவர் கூப்பிட்டதும் வெட்கப்பட்டுக் கொண்டே அவருடன் செல்கிறார். அந்த வெட்கத்திற்கும், அண்ணா என்று அழைத்ததற்கும் சம்மந்தம்மில்லை. அது தான் புரியவில்லை. இருந்தாலும் முருகனின் மேல் பூங்கொடி ஒருதலை காதல் கொள்கிறாள் போன்ற அசட்டுத்தனம் இல்லாதது ஆறுதல்.

சுவர்னாவாய் வரும் மீனா அதிக மிகையில்லாமல் சொன்னதை ஒழுங்காய் செய்திருக்கிறார். நோய்வாய்பட்ட தெளிவில்லாத முகம் சரியாய் இருந்தது. மேக்கப்பா அல்லது இயற்கை அழகா? அவருக்கு என்ன வியாதி என்று சொல்லாமல் விட்டது நன்றாகவே இருந்தது. அவர் கேட்கும் லதா மங்கேஷ்கரின் பாடல்கள் அருமையாய் இருந்தது.

படத்தில் இசையும் ஒளிப்பதிவும் இருந்ததாகத் தெரியவில்லை. இந்த மாதிரி படங்களுக்கு அவைகளின் இருப்பு தெரியவேண்டியதில்லை. அப்படியென்றால் சரியாய் தான் இருக்கிறது.


இந்தப் படம் 2006ம் ஆண்டின் சிறந்த குடும்பப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறது. மம்மூட்டி, பத்மப்ரியாவுக்கு இதற்காக 2007ம் ஆண்டு ஃப்லிம் ஃபேர் அவார்டும் கிடைத்தது.


ஒரு நிறைவான படம்!



இனிமே நான் ரஜினி கட்சி இல்லை. ப்ரூஸ்லீ கட்சி என்று புரியாத ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் என் அண்ணன். நான் ஆடிப்போய்விட்டேன். இத்தனைக்கும் அவர் வீட்டில் போன வருடத்து பைண்டிங் பண்ணிய புத்தகத்தின் ஒரு பக்க அட்டையின் நடுவில் நீளச் சதுரமாய் வெட்டித் துளை போட்டு, அதில் பல விதமான ரஜினி படங்களின் ஃப்லிம்களைச் சொருகி வெயில் விழும் இடத்தில் ஒரு கண்ணாடியை வைத்து (கண்ணாடிய வெயில்ல காட்டினா அதோட பாதரசம் போயிடும் ஏன்டா இப்படி பண்றீங்க...அம்மாவை பொருட்படுத்தாது)அந்த ஃப்லிம் அட்டையை கண்ணாடி முன்பு காட்டி அதற்கு முன் ஒரு 15 பைசா லென்ஸை வைத்தால் எதிரில் இருக்கும் சுவரில் மங்கலாய் ஜெகஜ்ஜோதியாய் ரஜினி தெரிவார். இனிமேல் அந்த படங்களை எல்லாம் ஓட்ட முடியாதா? அவர் வீட்டில் இருக்கும் மூன்று முகம் வசனத்தை டேப்பில் போட்டுக் கேட்க முடியாதா? ரஜினி படம் போட்ட பலவித பொங்கல் வாழ்த்துக்கள் என்ன ஆகும்? ரஜினி போடுவது போலவே அதே டிசைனில் சட்டை போடுவாரே..இனிமேல் அவ்வளவு தானா? இவருக்கு அப்புறம் அந்த சொத்தெல்லாம் எனக்குத் தான் என்று நினைத்தேனே இப்படி அதில் மண்ணள்ளி போட்டு விட்டாரே என்று ஒரே கவலை எனக்கு. இனிமேல் நீயும் உன் தம்பியும் ரஜினி கட்சி இல்லை;ப்ரூஸ்லீ கட்சி தான்! என்ன? என்றார் என்னை பார்த்து. ப்ரூஸ்லீன்னா யாருண்ணே என்றேன். அப்போது அவர் பீரோவின் மேல் ஒட்டியிருந்த ஒரு படத்தை காட்டினார். அதில் ஒருவர் தன் காலைத் தூக்கி நெஞ்சு பூரா முடி உள்ள ஒருவரின் கழுத்தை நோக்கி நீட்டியிருந்தார். அவர் கண்ணில் ஒரு குரூரம். அப்படித் தான் ப்ரூஸ்லீ எனக்கு அறிமுகமானார்.

அப்போது என் அண்ணன் வீட்டில் தான் டீவியும், டெக்கும் இருந்தது. (படம் பார்க்கும் போது அடிக்கடி கோடு வரும், ஹெட்டைத் திறந்து க்ளீன் செய்து செய்து பார்க்க வேண்டும்) மேலுள்ள சம்பவத்திற்குப் பிறகு அவர் பார்த்ததெல்லாம் ப்ரூஸ்லீ படங்கள் தான். ப்ரூஸ்லீ ஒரு கருப்பண்ணசாமி போல் என் அண்ணனுக்குள் வந்து சாமியாடினார். கராத்தே க்ளாஸில் சேர்ந்தார். அந்த கருப்பண்ணசாமியை கொஞ்சம் கொஞ்சமாய் எனக்கும் என் தம்பிக்கும் ஏற்றி விட்டார். ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன் நான் முதலில் பார்த்த ப்ரூஸ்லி படம். அவருடைய ஒவ்வொரு மிரட்டல் அடியில் ரஜினி கொஞ்சம் தள்ளித் தான் போய் விட்டார். அதன் பிறகு நானும் என் தம்பியும் போடும் டிஷ்யும் டிஷ்யும் சண்டைகள் மறைந்து ஊஊஊஊஊஊஊ....ஈஈஈஈஈஈஈ என்று ஊளைச் சத்தம் சேர்ந்தது. அம்மா என் அண்ணனைத் திட்டினாள்.



ப்ரூஸ்லி 1940ம் ஆண்டில் சான் ஃப்ரான்சிஸ்கோவில் பிறந்தார். இருந்தும் அவரின் தந்தையார் சைனீஸ் ஒபேராவில் ஒரு பாடகராய் இருந்தார். அவர் அப்போது ஹாங்காங்கில் சுற்றுப் பயணம் கொண்டதால், அவருடைய வளர்ப்பு அங்கு தொடங்கியது. ப்ரூஸ்லீ ஐந்து வயதிலிருந்தே திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தன்னுடைய 13 வது வயதில் முறையாய் தற்காப்புக் கலைகளை கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். அவருடைய கோபமும், வேகமும் பல வித தெருச் சண்டைகளுக்கு காரணமாய் அமைந்தன. இதனால் பயந்த அவர் பெற்றோர் அவருடைய 18 வயதில் அமேரிக்காவில் வாழும் உறவினரின் உணவு விடுதியில் வேலைக்காக அவரை அனுப்பி வைத்தனர். ப்ரூஸ்லீ சியாடிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தத்துவம் படித்தார். அதே பல்கலைக்கழகத்தில் லின்டாவைச் சந்தித்து காதலித்து மணந்தார். அப்போதே அவர் தனியாய் ஒரு பள்ளி அமைத்து அங்கிருக்கும் மாணவர்களுக்கு தற்காப்புக் கலைகளின் ஒன்றான குங்ஃபு வை கற்றுத் தர ஆரம்பித்தார். சீனாவில் இவையெல்லாம் சீனாவைச் சேர்ந்தவனுக்குத் தான் கற்றுக் கொடுப்பார்கள். ஆனால் ப்ரூஸ்லீ எந்த வித பாரபட்சமும் இல்லாமல் எல்லோருக்கும் சொல்லித் தந்தார். இதனால் அமேரிக்காவில் இருக்கும் பிற தற்காப்புக் கலை நிபுணர்களிடம் ப்ரூஸ்லீ பிரபலமானார். தற்காப்புக் கலைகளுக்கான ஒரு விழாவில் ப்ரூஸ்லி சிறப்பு விருந்தினராய் கலந்து கொண்ட இடத்தில் ஹாலிவுட்டின் ஹேர்ஸ்டைலிஸ்ட் ஜேயின் தொடர்பு கிடைத்தது. அவர் ப்ரூஸ்லீயை ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக சிபாரிசு செய்தார். தி க்ரீன் கார்னெட் என்ற அந்த ஷோவில் ஸ்கிரீன் டெஸ்டில் ப்ரூஸ்லீ தேர்வாகி அந்தத் தொடரில் நடிக்க ஆரம்பித்தார்.

சில பல காரணங்களால் அந்த நிகழ்ச்சி பாதியிலேயே நின்று விட்டது. இதனிடையில் ப்ரூஸ்லீ தன்னுடைய அனுபவத்தைக் கொண்டும், இடைவிடாத பயிற்ச்சியினாலும் பல வித உக்திகளை புகுத்தி ஜீட் குன் டோ என்ற ஒரு புது விதமான யுக்தியை உண்டாக்கினார். அவருக்கு ஹாலிவுட் படங்களில் அவ்வப்போது சிறு சிறு வேடங்களே கிடைத்தன.

அவருடயை நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி தன்னுடைய திறமையை நிரூபிக்கும் விதமாக ஒரு படத்தை எடுத்து வர அவர் ஹாங்காங் சென்றார். அங்கே ப்ரூஸ்லியின் திறமையை பார்த்து வியந்த தயாரிப்பாளர் ஒருவர், அவரை கதாநாயகனாக்கி "பிக் பாஸ்" படத்தை எடுத்தார். மிகச் சிறிய பொருட் செலவில் தாய்லாந்தில் ஒரு கிராமத்தில் அதன் படப்பிடிப்பு நடந்தது. அந்தப் படம் வெளி வந்து அது வரை ஓடிய அனைத்து சீன படங்களின் வசூலையும் முறியடித்தது. ஒரே நாளில் ப்ரூஸ்லீ நட்சத்திர அந்தஸ்தை எய்தினார். அதன் பிறகு வந்த ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி, ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன் ப்ரூஸ்லீயை வெற்றியை பறை சாற்றின. அதன் சத்தம் ஹாலிவுட்டின் காதிலும் லேசாய் விழுந்ததில், ப்ரூஸ்லீயை வைத்து என்டர் தி ட்ராகன் என்ற படத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்தது. படம் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷனில் இரவு பகலாய் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது ப்ரூஸ்லீயின் உடல்நிலை மோசமானது. ஜூலை 20, 1973ம் நாள் தலை வலிக்காக ஒரு மாத்திரை போட்டுக் கொண்டு தூங்கச் சென்றவர், மாத்திரையினால் மூளையில் ஏற்பட்ட அலர்ஜியின் காரணமாக செரிப்ரல் எடீமா உண்டாகி இறந்து போனார். நேதாஜியின் இருப்பைப் பற்றியும், இறப்பைப் பற்றியும் இன்றும் உலவும் வதந்திகளைப் போல் இவருடைய மரணமும் பல விதமான வதந்தைகளைக் கொண்டது. ப்ரூஸ்லியின் மரணத்திற்குப் பிறகு வெளி வந்த என்டர் தி ட்ராகன் ஹாலிவுட்டிலும் பெரும் வெற்றி பெற்றது.

ப்ரூஸ்லியைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்:

ப்ரூஸ்லீயின் உயரம் 5.7, ஆனால் அவர் இறந்த போது அவரின் எடை 58 கிலோ தான்.

ஒரு பயிற்சியின் போது அவருடைய முதுகுத் தண்டில் பயங்கரமான அடி விழுந்தது. இனிமேல் அவர் எழுந்து நடக்க முடியாது என்றும் தற்காப்புக் கலைப் பயிற்சிகளை செய்ய முடியாது என்றும் டாக்டர்கள் சொல்லியும் அதை ஒரு துளி கூட நம்பாமல் தன் சுய முயற்சியாலும், பயிற்சியாலும் மீண்டு வந்து காட்டினார்.

ப்ரூஸ்லீயின் வீட்டில் இருந்த நூலகத்தில் அனைத்து வகையான தற்காப்புக் கலைகளைப் பற்றியும், தத்துவங்களைப் பற்றியும் கிட்டத்தட்ட 2,500 புத்தகங்களை வைத்திருந்தார்.

ப்ரூஸ்லீ ஒற்றைக் கையில் இரண்டே விரல்களை (கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் உபயோகித்து) வைத்து தண்டால் எடுப்பார்.

ப்ரூஸ்லீ அவரின் வேகத்தை மற்றவருக்கு செய்து காட்ட சில யுக்திகளை கையாண்டார். அவரால் எதிராளியின் கையில் இருந்த நாணயத்தை அவர் கையை மூடுவதற்குள் எடுத்து விட முடியும்.

ப்ரூஸ்லீ ஒரு இன்ச் தூரத்தில் இருந்து குத்தும் ஒரு குத்து கூட எதிராளியை நிலை குழையச் செய்யும். (படம் பார்க்க) இத்தனை குறைந்த தூரத்தில் அத்தனை வேகம் ஒரு துப்பாக்கியிலிருந்து புறப்படும் ஒரு குண்டுக்குத் தான் இருக்க முடியும்.

ப்ரூஸ்லீயின் வேகத்தை காமெராவின் 24 ஃப்ரேம்களில் அடக்க முடியாமல் 32 ஃப்ரேம்களைக் கொண்டு படம் பிடித்தனர்.

ப்ரூஸ்லீயின் பிரபலமான தத்துவம்.

Be formless... shapeless, like water. If you put water into a cup, it becomes the cup. You put water into a bottle; it becomes the bottle. You put it into a teapot; it becomes the teapot. Water can flow, or it can crash. Be water, my friend...


ப்ரூஸ்லீ இறந்து இத்தனை ஆண்டுகள் கழிந்தும், உலகின் எந்த மூலையில் இருக்கும் குழந்தைக்கும் அதனுடைய பத்து வயதிற்குள் அவரின் அறிமுகம் எப்படியோ கிடைத்து விடும் என்று தோன்றுகிறது. அந்த வயதில் அவர் ஏற்படுத்தும் தாக்கம் வாழ்க்கை முழுவது தங்கி விடுகிறது. பிறவிக் கலைஞர்களுக்கு நீண்ட ஆயுள் தேவையில்லை என்றே நினைக்கிறேன். அவர்கள் ஒரு புயலென வந்து இந்த உலகுக்குத் தம் பங்கைச் செலுத்தி விட்டு சென்று விடுகிறார்கள். இன்னும் சில காலம் அவர்கள் வாழ்ந்திருக்கலாமே என்று நம்மை ஏங்க விட்டுச் சென்று விடுகிறார்கள். சார்லி சாப்ளீன் 88 ஆண்டுகள் வரை உயிர் வாழாமல், இளம் வயதில் இறந்திருந்தால் அவருடைய பேரும் புகழும் குறைந்திருக்குமா என்ன?