பக்கத்து ஆத்து தேசிகாச்சாரி "சொன்னா நம்பமாட்டேள்னு" ஆரம்பிச்சா போதும் நேக்கு புரிஞ்சிரும், அவர் மாதவனைப் பத்தி ஏதோ சொல்லப் போறாருன்னு...அவனை பெத்தவா கூட இப்படி அவனை தலையில தூக்கி வச்சுண்டு ஆடியிருக்க மாட்டா, இந்த மனுஷர் அப்படி ஆடுவார்! என்ன பண்றது, நேக்கும் பொழுது போகனுமோன்னோ? இத்தனை காலமும் கவர்ன்மெண்ட்ல குப்பையை கொட்டி ரிடையர்மென்ட்ங்குற பேர்ல என்னையும் ஒரு குப்பையா எடுத்து வெளியே கொட்டிட்டா...நான் என்ன ப்ரஸ்டீஜ் பத்மநாபனா? அதையே நெனைச்சி ஓவர் ஆக்ட் பண்றதுக்கு? அவா வேலையை அவா செய்றா...

பாத்தேளா? இப்படித் தான் பேச வந்ததை விட்டுட்டு வேற ஏதேதோ பேச ஆரம்பிச்சிருவேன், என்ன சொல்லின்டிருந்தேன்? மாதவன்! அவன் எங்க அக்ரஹாரத்துக்கு வந்து ஒரு ஆறு மாசம் தான் ஆறது. சொந்த ஊர் ஸ்ரிரங்கம். வத்தலுக்கு சொக்காய் போட்டது போல ஒரு ஒடம்பு! சார்டர்ட் அக்கவுண்டட் ஆறது தான் அவன் கனவாம்! இங்கே வாடகைக்கு ஒரு அகத்தை எடுத்துண்டு ஏதோ கோச்சிங் சென்டர் போயின்ட்ருக்கான்! எங்க ஆத்துல சின்னது இருக்கே, அவனை ஃப்ரூட்னு தான் சொல்வா! வாண்டு! நாள் தவறாம சந்தியா வந்தனம் பண்றானாம், கீதை படிக்கிறானாம், வேதத்துக்கு அர்த்தம் சொல்றானாம்! பொறுக்கிகளைக் கூட நம்பிடலாம்! ஆனா இந்த மாதிரி ஊமைக் குசும்பன்களை நம்பவே கூடாது...என்ன பண்றது தேசிகாச்சாரி விட்டா அவனுக்கு தன் சொத்து பூராவும் எழுதி வச்சுருவார் போலிருக்கே? நீங்களே சொல்லுங்கோ? இந்த காலத்துல யாரை நம்ப முடியிறது?

அன்னைக்கு மத்தியானம் வானம் கொஞ்சம் மந்தமா இருந்தது! போஜனம் முடிச்சுண்டு வெத்தல பெட்டியை எடுத்துண்டு காத்தாட திண்ணைக்கு வந்தேன்! மணி ஒரு மூணு இருக்கும், தெருவுல ஆள் நடமாட்டம் இல்லை. அப்போதான் மாதவன் புத்தகம் கையுமா அவன் ஆத்துல நுழைஞ்சான். நான் எங்கேயோ பார்த்துண்டே, எதொ யோசனையில் வெத்தலையை கொதப்பின்டே திரும்பி பாத்தா பாரூ எம்பி எம்பி மாதவன் வாசக் கதவைத் தட்றா! வெளியே வந்த மாதவன் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பாத்துட்டு, அவளை உள்ளே அழைச்சுண்டான்! நான் திண்ணையில இருந்தது அவனுக்கு பார்வையில படாது!

பாரூ தேசிகாச்சாரியின் மகள். பாரூக்கு ஒரு இருபது வயதிருக்கும். மூன்று வயதில் மூளைக் காய்ச்சல் வந்து அவளை முடக்கி விட்டது. தத்தித் தத்தித் தான் நடப்பாள். வயதுக்கு மீறிய உடல் வளர்ச்சியிருந்தும், ஐந்து வயதுக்குறிய மூளை வளர்ச்சி தான்! இவ எதுக்கு அவன் ஆத்துக்கு இந்த சமயத்துல போறா? பட்டப் பகல்ல என்ன கர்மம் என்று என் நெஞ்சு அடித்துக் கொண்டது! விசுக்கென்று எழுந்து சென்று பார்க்கவும் திராணியில்லாமல், சத்த நேரம் பித்து பிடித்தாப்ல உக்காந்துட்டேன்! பிறகு கொஞ்சம் ஆஸ்வாசப்படுத்திண்டு மெல்ல எழுந்து சத்தமில்லாமல் அவன் ஜன்னலின் இடுக்கில் நோக்கிய எனக்கு தூக்கி வாரிப் போட்டது!

அந்த எட்டுக்கு எட்டு அறையில் ஒரு ஓரத்தில கிழிஞ்ச பாய் போட்டுன்டு அவ நன்னா தூங்கின்டு இருக்கா!! இவன் இந்த ஓரத்தில் உக்காந்துண்டு படிச்சிண்டு இருக்கான்! அவன் மெல்ல எழுந்து டேபிள் ஃபேனை அவ பக்கமா திருப்பி வச்சுட்டு அவ தலைக்கு கீழே ஒரு தலைகாணியை போட்டுட்டு ஆறுதலா அவ தலையை தடவி விட்டுட்டு மறுபடியும் அவன் இடத்துக்கு வந்து படிக்க ஆரம்பிச்சுட்டான்! நேக்கு கண்ல ஜலமே வந்துடுத்து!

சொன்னா நம்பமாட்டேள்!
ஒரு பெஞ்சில் இரண்டு சிறுவர்களின் கால்கள் ஆடிக் கொண்டிருக்கின்றன! அவர்கள் இருவரும் ஏதோ ஒரு சம்பாஷணையில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது...

சட்டென்று ஒருவனின் கால்கள் ஆடுவது நிற்கிறது! அதைத் தொடர்ந்து மற்றவனின் காலும் நிற்கிறது....

மணி: காட் ப்ராமிஸ்? [கையை நீட்டுகிறான்!]
சிபி: காட் ப்ராமிஸ் [கையில் அடிக்கிறான்]
மணி: உனக்கு எப்படி தெரியும்?
சிபி: எத்தனை சினிமா பாத்துருக்கேன்!
மணி: நான் நம்பலை...
சிபி: நாளைக்கு என் கூட வா, உன்னை இன்ட்ரொட்யுஸ் பண்ணி வைக்கிறேன்!
மணி: சரி

மறுபடியும் கால்கள் ஆடுகின்றன...

மணி: ஏதுடா இந்த ரோஸ்?
சிபி: எங்க தோட்டத்துல பறிச்சேன்...
மணி: எதுக்கு?
சிபி: அன்னைக்கு நான் கோயிலுக்கு பூ கொண்டு போகும்போது என்கிட்ட ஒரு பூ கேட்டாங்க, நானும் குடுத்தேன்! தலையில வச்சிகிட்டு நல்லா இருக்கான்னு கேட்டாங்க...ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னேன்! என் கன்னத்தை கிள்ளி சிரிச்சாங்க
மணி: நீ பொய் சொல்றே
சிபி: நீ தான் பாக்க போறியே...
விட்டுக்கு வெளியே நின்று...
சிபி: ரோஸி
மணி: இதான் அவங்க பேரா?
சிபி: ஆமா, நல்ல இருக்குல்ல! வாசனையா?
ரோஸி: ஹேய் சிபி! குட் மார்னிங்...
சிபி: இது உங்களுக்காக!
ரோஸி: சோ ஸ்வீட்! சார் யாரு?
சிபி: இவன் மணி, என் ஃப்ரண்ட்.
மணி: என் பேர் ஏ. ஐ. மணிகண்டன். நான் சிக்ஸ்த் ஏ செக்ஷன்.
ரோஸி: என் பேர் ரோஸிலினா, காலேஜ்ல பீ.காம் படிக்கிறேன்.
மணி: நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, சிபியை நீங்க லவ் பண்றீங்களா?
ரோஸி: ஆமா அவனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்.
[மணி ஓடுகிறான். சிபி துரத்துகிறான், ரோஸி சிரித்துக் கொண்டே உள்ளே போகிறாள்]

சிபி: டேய் மணி, நில்ரா..டேய் நில்லு
இருவரும் நிற்கிறார்கள். மூச்சு வாங்குகிறது..
சிபி: எப்படி?
மணி: இந்த கல்யாணம் நடக்காதுடா
சிபி: ஏன்?
மணி: அவ எவ்வளவு ஹைட்! நீ இத்துனூன்டு இருக்கே...
சிபி: நானும் ஹைட் ஆயிடுவேன்டா
மணி: கிழிப்பே
சிபி: இப்போ என்னடா செய்றது?
மணி: நீ சீக்கிரம் ஹைட் ஆகனும்
சிபி: அதுக்கு என்ன செய்யனும்?
மணி: எங்க அண்ணன் செம ஹைட்டுடா..அவன்கிட்ட கேப்போம்
சிபி: சரிடா.

மறுநாள்...

மணி: ஹைட்டா வளரணும்னா நிறைய ஸ்கிப்பிங் ஆடனுமாம், நிறைய எக்ஸர்சைஸ் பண்ணனுமாம். நிறைய பால் குடிக்கனுமாம்!
சிபி: அது பால் இல்லைடா! காம்ப்ளான், நான் தான் டெய்லி டூ டைம்ஸ் குடிக்கிறேனே!
[சிபி ஒரு முடிவுக்கு வருகிறான்]

சிபியின் கையில் புது ஸ்கிப்பிங் ரோப்! சிபி குதிக்கிறான்..விழுகிறான், எழுகிறான்! மணி உதவி செய்கிறான்.இரண்டு முறை குதித்து விட்டு தன் உடலை ஜான் போட்டு அளக்கிறான். மணி இவனை விட நன்றாய் ஸ்கிப்பிங் ஆட சிபி அவனை தடுத்து நிறுத்துகிறான்! அவனையும் ஜான் போட்டு அளக்கிறான்!

சிபி: வேணாம்! நீ பண்ணாதே
மணி: ஏன்டா?
சிபி: அப்புறம் நீ விட ஹைட் ஆயிட்டா?
[மணி பேயரைந்து நிற்கிறான்]

மறுநாள் ரோஜாவுடன் இருவரும் ரோஸி வீட்டுக்குச் செல்கின்றனர்! வாசலில் ரோஸி யாருடனோ பைக்கில் போகிறாள்! அவளுடைய அம்மா டாட்டா காட்டுகிறாள்!
சிபி: ரோஸி எங்க போறா?
அம்மா: அவ சினிமாக்கு போறா...சிபி, ரோஸி அக்காக்கு கல்யாணம்டா. உங்க அம்மாகிட்ட சொல்லு என்ன?
சிபி: யாரு கூட?
அம்மா: அந்த பைக்ல போறாரே அவர் கூட [உள்ளே போகிறார்]
மணியும் சிபியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர்!
மணி: நீ ஏன்டா அவங்க அம்மாகிட்ட சொல்லலை?
சிபி: என்னை பாக்கும் போது சிரிச்ச மாதிரி தான்டா அந்த பைக்ல போகும்போது சிரிச்சா!
மணி: இந்த பொண்ணுங்களே இப்படித் தான்டா! அவங்களை நம்பவே கூடாதாம்! எங்க அண்ணன் சொல்வான்!

சிபி கையிலிருக்கும் ரோஜாவை தூக்கி எறிகிறான்!
மணி ஸ்கிப்பிங் ஆடிக் கொண்டே வருகிறான். சிபி எதுவும் சொல்லாமல் நடக்கிறான்...