பாடல்கள், "மாயக் கம்பளங்கள்"! எத்தனை சுலபமாய் நம்மை நம் கடந்த காலத்துக்கு இட்டுச் செல்கின்றன!

இந்தப் பாடல் தமிழ் சினிமாவில், இசையில், மொழியில், காட்சிப்படுத்தலில் ஒரு கவிதை என்று தான் எனக்குத் தோன்றுகிறது. இந்தப் பாடலை நான் முதன் முதலில் ஒளியும் ஒலியுமில் பார்த்ததாய் ஞாபகம். அப்போது நான் ஐந்தாவதோ, ஆறாவதோ படித்துக் கொண்டிருந்தேன். [இப்போ வரைக்கும் நீ அவ்வளவு தானே படிச்சுருக்கே என்ற கேலிப் பேச்சுக்கள் வேண்டாம்!] "மனிதன்" என்ற மாபெரும் காவியத்துடன் "நாயகன்" வந்தது! நான் நாயகனை சீண்டவேயில்லை. காந்தி பீச்சில் தலைவர் ஒரு மஞ்சள் கட்டம் போட்ட சட்டை [இவர் வீட்ல எல்லாம் சட்டை பட்டன் போடலன்னா அடிக்க மாட்டாங்களா?] போட்டு கையில் உள்ளதை தட்டிக் கொண்டே வானத்தை பார்த்தேன், பூமியை பார்த்தேன் பாடலுக்கு நான் அடிமை!! அப்படி ஒரு கலாரசனையில் இருந்த போது நான் பார்த்த பாடல் "நீ ஒரு காதல் சங்கீதம்". மங்கலாய் நினைவிலிருக்கிறது. அந்தப் பாடலை முதலில் பார்க்கும்போதே ஒரு மாதிரி இருந்தது. அது ஒரு தமிழ் படம் மாதிரியே இல்லை. கமலுக்கு மீசை இல்லை, சரண்யா மங்கம்மா கை வைத்த பாவாடை சட்டை போட்டிருக்கிறார், காட்சிகளில் வரும் இடம் பழக்கமானதாய் இல்லை. அடிக்கடி இரண்டு பேர் எங்கேயோ நடந்து போய் கொண்டே இருப்பார்கள். கமல் சரண்யாவை அடிக்கடி கட்டிப் பிடித்துக் கொள்வார். [உவ்வே! அப்போ!!] பாடல் பிடிக்கவில்லை என்றாலும் எனக்கு ஒரே சந்தோஷம், இந்த படமும் ஊத்திகிச்சு! மனிதன் படம் மாதிரி வருமா, நம்ம தலைவரை அடிச்சுக்க முடியுமா என்று என் நண்பர்களிடம் பீற்றிக் கொண்டேன்.

மேல் சொன்ன முதல் வரிக்கு, அதன் கீழ் சொன்ன என் ப்ளாஷ் பேக் தான் அத்தாட்சி! என் ப்ளாஷ் பேக் முடிந்து பார்த்தால், எப்போது இந்த பாடலை மறுபடியும் கேட்டேன், எந்த கணத்தில் அது என்னை இவ்வளவு ஈர்த்தது என்று ஞபகம் இல்லை. ஆனால் அதன் பிறகு இந்த பாடலை எங்கு கேட்டாலும், நான் மெய் மறந்து விடுவேன். இசையை பற்றி ஒன்றும் தெரியாத ஒரு பாமரனாய் இருந்தாலும் சொல்கிறேன், ராஜாவின் இசை மேதைமைக்கு இந்த ஒரு பாடல் போதும்.

பாடல், ஒரு சீரான வயலின்களின் பிரவாகத்தோடு ஆரம்பிக்கிறது. அதன் இசை, காட்டாறு போல பொங்கி வரும் வெள்ளம் ஒன்று ஒரு சின்ன மலை முகடுகளில் சிக்கியது போல் சிக்கி நெளிந்து, குழைந்து, வளைந்து சென்று முடிகிறது. அது முடிந்த இடத்தில் ஒரு தபலா ஆரம்பிக்கிறது. அந்தத் தபலாவின் இசை ஒரு அழகிய சுகமான வீணையின் இசையுடன்  இணைகிறது. ஆஹா, அந்த இசையில் என்ன ஒரு ஆனந்தம். இதை விட ஒரு புதிய உறவின் தொடக்கத்தை எப்படி விளக்க முடியும்?

மனோவின் குரல் வழக்கத்தைக் காட்டிலும் கணம் கூடி வழிகிறது. அவருடன் சித்ராவின் எளிமையான இனிமையான குரல் ஒன்று கலக்கிறது. இந்த பாட்டு மட்டும் இல்லை, இந்த படத்தில் வரும் அத்தனை பாடல்களிலும் குரல் தேர்வு வித்தியாசமானவை. எஸ்.பி.பி, ஜானகியை வைத்து இளையாராஜா பட்டையை கிளப்பிக் கொண்டிருந்த காலம் அது! இவர்கள் இருவரும் பாடாத படங்களே இல்லை எனும்படி இருந்தது அன்று! முதல் படத்தில் அடக்கி வாசித்த மணிரத்னம், அதுவும் மாற்றுச் சினிமாவை விரும்பிய மணி அந்த டெம்ப்ளேட் பாடல்களிலிருந்து வெளி வரத் துடித்திருப்பார் என்று படுகிறது. எஸ்.பி.பி, ஜானகியை ஒத்துப் பார்க்கும்போது, மனோ, சித்ரா புதியவர்கள். அவர்கள் பாடலாம்! ஆனால் கண்டிப்பாய் எஸ்.பி.பி, ஜானகி இந்த படத்தில் இல்லை என்பதில் தெளிவாய் இருந்திருக்கிறார். அதனால் தான், இளையாராஜா, கமல், ஜிக்கி, எம். எஸ். ராஜேஸ்வரி, டி. எல். மகராஜன் என்று இந்தப் படத்தின் ஆல்பமே வேறு ஒரு வண்ணத்தை கொடுத்தது! எல்லாமே வித்தியாசமான பாடல்கள். குறிப்பாய், இந்தப் பாடலை கண் மூடிக் கேட்டாலும் சுகம், கண் திறந்து காட்சிகளை பார்த்தாலும் சுகம். Preluds, Interluds மனதை கொள்ளை கொண்டு விடும். Interlud ல் ஒற்றை வயலினுடன் புல்லாங்குழலை இணைத்து ஒரு இசைக் கொண்டாட்டமே நடத்தி  இருப்பார் ராஜா. வீணையும், தபலாவும், அந்த இருவரின் ஜாலம் முடியும் வரை காத்திருந்து சமத்தாய் வந்து சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து கொள்வதை போல் இருக்கும்.

இந்தப் பாட்டின் காட்சிகளை சொல்லியே ஆக வேண்டும். பாடலின் ஆரம்பத்தில் வீணை தொடங்கும் இடத்தில் திருமணம் ஆகி புதிதாய் வரும் தம்பதியரை வரவேற்க அந்த வட்டாரமே கூடி இருக்கிறது. அது ஒரு மங்கிய மாலை. அப்போது தான் வீடுகளில் விளக்குகள் எரியத் துவங்கி இருக்கின்றன. அந்தக் காட்சியே வேறு ஒரு வடிவத்தையும், மனோநிலையையும் அளிப்பதாய் இருக்கிறது. அதுவரை தமிழ் சினிமா அப்படி ஒரு காட்சியை பார்த்ததில்லை என்றே எனக்குப் படுகிறது. அப்படி ஒரு மங்கிய மாலை வேளையில் அவர்களின் உறவு, அவர்களின் வாழ்வு, அந்த நாயகனின் முதுகில் வேர்வைத் துளியுடன் தொடங்குகிறது. அதோடு பாடலும் துவங்குகிறது. தாம்பத்தியத்தின் லயிப்பில் கிடக்கிறாள் அவள். அவளின் கலைந்த பொட்டு அங்கு ஒரு கதை சொல்கிறது. அவன் முகத்தில் ஒரு காயத்தை வினவுகிறாள் அவள். அவன் எப்படி அது ஏற்பட்டது என்று கூறுகிறான். உடனே அந்த காயத்துக்கு ஒரு முத்தம் வைக்கிறாள். அந்த முத்தம் அவ்வளவு யதார்த்தம்! மறுநாள் அவன் கண் விழித்துப் பார்க்கும்போது அவள் குளித்து முடித்து, கண்ணாடி முன் நிற்கிறாள். புல்லாங்குழல் வழிந்தோடுகிறது அங்கு! அடுத்த காட்சியில் புறாக்கள் சிறகடித்துப் பறக்கின்றன. அதற்கேற்ப வயலின்களும் இசைக்கப்படுகின்றன. இரண்டும் அவ்வளவு இசைவோடு ஒன்று கலக்கிறது. பறந்து போன புறாக்களின் பின்னணியில் அவர்கள் பின்னிப் பிணைந்து நிற்கிறார்கள். கண்ணில் வைத்த எஞ்சிய மையை அவளின் மூக்கில் தேய்க்கிறான் கணவன். இதை விட புது மனத் தம்பதிகளின் அன்னியோன்யத்தை அத்தனை அழகாய் காட்டவே முடியாது! அதை விட, மனைவியை சாப்பிடச் சொல்லி கணவன் வற்புறுத்தும் இடம், ஒழுகும் வீட்டில் மழைக்கு ஒதுங்கும் புறாக்கள், வயிற்றில் இருக்கும் குழந்தையின் குறுகுறுப்பை கணவன் உணரும் தருணம் என்று ஒவ்வொரு காட்சியும் இந்தப் பாடலில் கவிதைகள்! என்ன ஒரு ஒளிப்பதிவு!

இந்தப் பாடலின் பாடல் வரிகளும் நானும் இங்கு இருக்கிறேன் என்று எந்த இடத்திலும் வெளியில் துருத்திக் கொண்டு நிற்கவில்லை! அத்தனை இயல்பாய், எதார்த்தமாய், இசைக்கும், காட்சிகளுக்கும் வழி விட்டு ஒரு தெளிந்த நீரோட்டம் போல நிற்கிறது.

"மணல் வெளி யாவும் இருவரின் பாதம், நடந்ததை காற்றே மறைக்காதே!"
அருமையான வரி..

"தினமும் பயணம் தொடரட்டுமே...." வரியில் வரும் காட்சியை பாருங்கள். என்ன ஒரு ஃபிரேம். என்ன ஒரு டோன்! என்ன ஒரு ஃ பீல்! கணவனுக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் அவளின் முகம் என்னவோ செய்கிறது.

முடிவாக, என்ன உன்னதமான இசையை கொடுத்தாலும், ராஜாவின் பாடல்களை கந்தரகோலமாய் படமாக்கிக் கொண்டிருந்த பெரும்பாலான தமிழ் சினிமா இயக்குனர்களின் மத்தியில் ராஜாவின் இசைக்கு மரியாதை அளிக்கும் விதத்தில் காட்சிப்படுத்திய இயக்குனர் மணிரத்னத்தை பாராட்டியே ஆக வேண்டும்! என்ன சொல்கிறீர்கள்?