அவோ பா, அஸ்கி பெடான், பொஹ்வ்ன்டின், நத்தா நதினின் அஸ்கி சொம்மர் அவொபா...நொவ்ரா நொவ்ரீ பாயிர் பொடி ஆஸிர்வாத் க்ஹல்லுவோ! ரேய், பாபு, போட்டோ பாபு டக்கு டக்கு கெரி தெஹ்ல்லே ஆவ் சங்குஸ்! [வாங்கப்பா..பசங்க, மாட்டுப் பொண்ணுங்க, பேரன், பேத்தி எல்லாம் முன்னாடி வந்து மாப்பிள்ளை பொண்ணுகிட்ட ஆசிர்வாதம் வாங்குங்க...டேய் போட்டோ புடிக்கிற தம்பி, டக்கு டக்குன்னு எல்லாத்தையும் போட்டொ எடு சொல்றேன்!! என்று ஆணைகளை பறத்திக் கொண்டிருந்தார் லிங்கு மாமா]...

மணமகன் கோபாலாச்சாரி, மணமகள் அம்புஜம் அவர்களின் சஷ்டியப்த பூர்த்தி அன்று அந்த வீடியோ விளக்கின் மஞ்சள் வெப்பத்தில், பட்டு வேஷ்டிகளும், பட்டுப் புடவைகளும் கசகசக்க, உடலெங்கும் வேர்வை ஊற்ற ஒவ்வொருவராக மணமக்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர். பேரன் பேத்திகள் அடிக்கடி குனிந்து எழுந்து விளையாடிக் கொண்டிருந்தனர். திருமணங்கள் ஆகி சில ஆண்டுகள் கடந்து விட்டபடியால் மகன்களுக்கும், மருமகள்களுக்கும் குனிந்து வணங்குவது சற்று சிரமமாகவே இருந்தது. இதில் போட்டோகிராபர் வேறு, தா, பஹவி ஏட் சவோ, உவ்வோ உஞ்சோ சவோ...தா துர போட் அவ்ங்காரிய கலாரஸ் உவ்வோ அசுவோ தா [அண்ணே, அண்ணி கொஞ்சம் இங்கே பாருங்க, கொஞ்சம் மேலே பாருங்க, அண்ணே உங்க வயிறு அழுத்துதுன்னு தெரியுது, கொஞ்சம் சிரிங்க] என்று கலாய்த்துக் கொண்டிருந்தார்.

அன்றைய கூத்துகள் அத்தனையும் ஆடி அடங்கிய பிறகு, வெராண்டாவில் ஈஸி சேரில் அமர்ந்து கையில் ஒரு விசிறியுடன் தன் ஞாபகங்களை விசிறிக் கொண்டிருந்தார். இதோ, நேற்று சொன்னது போல் இருக்கிறது....

சால் காய்தி சினிமா ஜீலி அவெங்கோ! [நட, ஏதாவது சினிமாவுக்கு போயிட்டு வருவோம்!]

பெய், துமீ அங்கோ ஹொராட் கெரி தொவெயோ, ஒப்புலுஸ்! துங்கோ கலய பெட்கி மெனின்னா மொகொ ஹொராட் கெரி தொவெயோ? ஆனா துங்கோ ஹிந்தோ அமீ பொஞ்சு பொவ்னோ பொல்டியோ...[அக்கா, நீங்க தான் எங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க, நான் ஒத்துக்குறேன்..உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணுன்னு தானே எனக்கு கட்டி வச்சீங்க? ஆனா உங்களை இன்னைக்கு பஞ்சாயத்து பண்ண கூப்பிட வேண்டியதாயிடுச்சே...நான் என்ன செய்றது?]

மீ காய் துஸுர தல்லான் சோன் பனி தைலி ஹின்டரியகி, சின்னலின் தொவ்லி ஹின்டரியோ? ஒன்ட தல்லோ, பெல் ஜோல் காய் எதிர் சாய்கி தெல்லேன்னா எதிர் சாரியோ? துமீ சங்குவோ, மொர ஹொல்லோ காய்தி தப்பு சேயா? ஹாத் தொவதி தெட்டி சொடதி மொன்னு கோனொ லவஸ்? எல்லே பூரா மீ கோட் பெய் சங்கி ரொடத்தே? [நான் என்ன மத்த ஆம்பளங்க மாதிரி தண்ணி போட்டுட்டு ஊர் சுத்துறேனா? இல்லா கூத்தியாளை வச்சிருக்கேனா? ஒரு புருஷன் பொஞ்சாதிகிட்ட என்ன எதிர்பார்ப்பானோ அதைத் தானே நானும் எதிர்பார்க்குறேன்? நீங்களே சொல்லுங்க, என்கிட்ட ஏதாவது தப்பு இருக்கா? கைய வச்சாலே தட்டி விட்றதுன்னா மனசுக்கு எப்படி இருக்கும்? இதையெல்லாம் நான் யார்கிட்டக்கா சொல்லி அழுவுறது?]

மொகோ ஒப்பாரனி, பிள்ள ஜெனத்த வர பொருத்தில்டீ, எக மிஞ்சி மொர ஹால் முசுனா...எங்கோ கொங்கதி தொவ்ல்னோ மெனி லயத் தொவ்லந்த பெய்! மீ கொன்னி மென்னா!![எனக்கு புடிக்கலை, புள்ள பொறக்குற வரை பொறுத்துகிட்டேன், இனிமே என்னால முடியாது! இவருக்கு யாரையாவது வச்சுக்கனும்னா தாராளமா வச்சுக்கட்டும் அக்கா! நான் எதுவும் சொல்லலை...]

சியாஸ் பெய் எனோ கெரர்த்தோ வத்தோ, பிள்ள ஜெனத்த வர துனோ தங்கிலி ஹொதிர்த்தே! டாக்டர் கேர் ஆவ் மெனத் தெல்ல கானும் க்ஹல்லத்த நிஹீ! மீ காய் கெரத்தெ எகோ தொஹ்வ்லி...[பாத்தீங்களாக்கா, இவ பேசுற பேச்சை...குழந்தைங்க பொறக்குற வரை வலி தாங்கிட்டு இருந்திருக்கா! டாக்டர் வீட்டுக்கு போகலாம்னாலும் காதுல போட்டுக்குறதில்லை..இவளை வச்சிட்டு நான் என்ன செய்ய?]

நஹாபா, கோபால் இசனி தீ தெனு சொடி தெனாத்தொ வத்தொ கெரதி கொனோபா? [இல்ல கோபால், இப்படி ரெண்டு பேருமே விட்டுக் கொடுக்காம பேசிகிட்ருந்தா எப்படிப்பா?] துங்கோ தீ பிள்ளோ ஹொய்யோ, அத்தொ தீ தெனு செரி ஜிவானா மெனதி சோட் தெக்காரஸ்யா? தெல்ல பிள்ளன் தோன் சன பொல்டரியொநாபா...[உங்களுக்கு ரெண்டு குழந்தைங்க ஆயிடுச்சு, இனிமே ரெண்டு பேரும் சேர்ந்து வாழ முடியாதுன்னு சொன்னா நல்லாயிருக்கா? அந்த குழந்தைங்க முகத்தையும் பாக்கனுமா இல்லையா?]

அடுத்த அரை மணி நேர வாக்கு வாதத்திற்குப் பிறகு கோபாலாச்சாரி ஒரு முடிவுக்கு வந்தவராய் சொன்னார்...

சால் காய்தி சினிமா ஜீலி அவெங்கோ! [நட, ஏதாவது சினிமாவுக்கு போயிட்டு வருவோம்!]