நான் உடலால் முதுமையும், உள்ளத்தால் என்றும் இளமையும் பெற்ற ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் பலதரப்பட்ட பத்திரிக்கைகளில் நிருபராய் வேலை பார்த்தவர். அவர் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை எனக்குச் சொன்னார். அதை நான் மிகவும் ரசித்தேன். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

சாவி என்ற பத்திரிக்கையில் ஒருவர் பலமுறை தன் கதைகளை அனுப்பிக் கொண்டிருந்தார். எந்தக் கதையுமே பிரசூரிக்கப் படவில்லை! கோபமடைந்த அவர், சாவியின் பத்திரிக்கை ஆசிரியருக்கு "என்னைப் போன்றவர்கள் எவ்வளவு தான் நன்றாய் கதை எழுதினாலும், எதையும் நீங்கள் பிரசூரிப்பதில்லை; இதே, சுஜாதா அனுப்பியிருந்தால் அவருடைய லான்ட்ரி பில்லாய் இருந்தாலும் பிரசூரிப்பீர்கள் என்று கார சாரமாக ஒரு கடிதத்தை எழுதினார்.

இதை அந்த ஆசிரியர் எப்படி எதிர் கொண்டிருப்பார் என்று நினைக்கிறீர்கள்? இந்த மாதிரி தினமும் 100 கடிதம் வரும், இதையெல்லாம் அவர் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா என்று நினைத்தால், அது தவறு! அந்த ஆசிரியர் இந்தக் கடிதத்தை படித்து விட்டு, சுஜாதாவிடம் விஷயத்தை சொல்லி அவர் லான்ட்ரி பில்லை வாங்கி பிரசூரித்தார். சுஜாதாவின் லான்ட்ரி பில் கீழ் வருமாறு:

2 டெரிகாட் சட்டை
3 பாண்ட்
2 புடவை
4 கை வைத்த பனியன்
2 கைக்குட்டை, அதில் ஒன்று ரத்தம் படிந்தது!..

இது உண்மையிலேயே நடந்ததா என்றால் அது சுஜாதாவுக்கு கொஞ்சம் வெளிச்சம்; தேசிகனுக்கு தான் எல்லா வெளிச்சமும்! [சுஜாதாவே இவரிடம் தானே தன் கதை எங்கு, எப்போது வந்தது என்று கேட்கிறார்!]

எப்படியோ எழுத்தாளர்களின் திறமையை நான் ரசித்தேன்! நீங்கள்?


நான் முடி வெட்டி 9 மாதங்கள் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். எனக்கு நேருமல்லாத சுருட்டையுமல்லாத முடி. அதாவது, சிறிதாக வெட்டி இருந்தால், நேராக இருக்கும். வளர்ந்து விட்டால் சுருண்டு கொள்ளும். எனக்கு நிறைய முடி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை! உனக்கு ஏன் இந்த விபரீத ஆசை என்று நீங்கள் கேட்டால், கீழ் வரும் அனுபவங்கள் அதற்கு பதில் சொல்லும்!

சென்னையில் இருப்பவர்கள் வெயில் தாழாமல் இருக்கும் கொஞ்ச நஞ்ச முடியையும் வெட்டிக் கொண்டிருக்கும் சமயத்தில் [சில சினிமா நடிகர்களைத் தவிர - இவர்களுக்கு எப்படித் தான் அத்தனை சீக்கிரம் அவ்வளவு முடி வளர்கிறதோ, எனக்குப் புரியவில்லை!] என்னைப் போல சிலரும் சுற்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள். முன்னிருக்கும் முடியை சரியாக இழுத்து விட்டால், என் உதட்டை தொடுகிறது. அதனால் அம்பி மாதிரி மேல் வாரியாக இழுத்து வாரிக் கொண்டு தான் எங்கும் செல்கிறேன். ஏற்கனவே எனக்கு நெத்தி என் உள்ளத்தை போன்றது..அதான்..பரந்து விரிந்தது!

என் முன் வழுக்கை தெரிந்தாலும் பரவாயில்லை என்று நான் எப்போது தூக்கி சீவ ஆரம்பித்தேனோ, அன்று முதல் எனக்கு பல விதமான அனுபவங்கள்.

1. சுஜாதாவை சந்திக்கச் சென்ற அன்று சுரேஷ் என்னிடம், நீங்கள் நாடக நடிகரா? உங்கள் ஹேர்ஸ்டைலைப் பார்த்தால் அப்படித் தெரிகிறது என்றார்.

2. ஆஃபிஸில் லிப்ஃடில் சென்று கொண்டிருந்த என்னிடம், யாரென்றே தெரியாத ஒருவர், "ஸோ யு ஆர் ட்ரையிங் டு பி ரெமோ?" என்றார். தலையை கலைத்துக் கொண்டு சிரித்தேன். நல்ல வேளை அவர் இறங்கும் இடம் வந்து விட்டது.

3. தலையை கலைத்து ஒரு மாதிரி சிரித்தால், சிறு குழந்தைகள் பயந்து தன் அம்மாவைக் கட்டிக் கொள்கிறார்கள். இன்னும் சில நாட்களில் எங்கள் தெருவில் "நீ மட்டும் சாப்பிடலை, பிரதீப் கிட்ட புடிச்சு கொடுத்துடுவேன்" என்று தாய்மார்கள் சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

4. ரோட்டில் அனைவரும் ஒரு தடவைக்கு இரு தடவை என்னைப் பார்க்கிறார்கள். நான் அடிக்கடி தலையை சிலிர்த்து அலட்டிக் கொள்ள வேண்டி இருக்கிறது. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் என்னைக் கடக்கும் போது, ஐ! அந்நியன் போறாருடா என்கிறார்கள். தெருவில் சற்று நேரம் நின்றால், அங்கு விளையாடும் குழந்தைகள் "ஹேய் ரெமோ" என்கிறார்கள்!விக்ரமுக்கு என்னை விட வயது அதிகம். அவரின் பெயரைச் சொல்லி என்னை அழைப்பதால் எனக்கு ஒன்றும் சந்தோஷம் இல்லையென்றாலும் [இது ரொம்ப ஓவர் தான்!], அந்தக் குழந்தைகள் சந்தோஷப்படுகின்றன.

5. அன்று ஒரு கையில் டைரியுடன் ஒரு ப்ரவுசிங் சென்டரில் தேசிகன் வலைப்பதிவை மேய்ந்து கொண்டிருந்தேன். அந்த கஃபேக்கு சொந்தக்காரர் என்னை நெருங்கி, நீங்க எழுத்தாளரா என்று கேட்டார்? எனக்குப் பெருமை தாங்க முடியவில்லை! ஏன் கேட்கிறீர்கள் என்றேன்? இல்லை இந்த மாதிரி சைட் எல்லாம் பாக்குறீங்களே? என்றார். உங்க பேர் என்ன என்றார்? பிரதீப் என்றேன், புனைப்பேர் இல்லையா என்று கேட்டார். சிரிப்பை அடக்கிக் கொண்டேன். தொடர்ந்து, என் கவிதைகள் கனையாழியில் வந்திருக்கிறது என்று ஒரு போடு போட்டார்! உண்மையான எழுத்தாளர்!!

6. ஹோட்டலில் என் தம்பியுடன் சாப்பிடச் சென்றேன். ஆர்டர் வாங்க வந்தவர், நான் சொல்வதைக் கேட்காமல் என்னை இடைமறித்து, உங்களைப் பாத்தா ரயில் பயணங்கள்ல வர்ற சுதாகர் மாதிரி இருக்கு சார் என்றார். உடனே நான் "எப்படி" என்று என் தம்பியை எகத்தாளமாய் பார்த்தேன். அவன் என்னை புழு பூச்சியை விடவும் கேவலமாக பார்த்துக் கொண்டிருந்தான். நானும் சளைக்காமல் ரயில் பயணங்கள்ல சுதாகர் இல்லையே என்று என் சினிமா அறிவை வெளியிட்டுக் கொண்டேன். அவர் அசடு வழிந்து அந்தப் படத்தின் கதையை சொல்ல ஆரம்பித்து விட்டார். நான் நிறுத்தி அது கிழக்கே போகும் ரயில் என்றேன். அவர் அதோடு நிற்காமல், எரியும் நெருப்பிடம், அதாவது என் தம்பியிடம் நீங்க இவர் கூடையே இருக்கிறதால, உங்களுக்கு அப்படித் தெரிய வாய்ப்பில்லை என்று விளக்கம் வேறு. என் தம்பி இனிமே இவன் கூட வரக்கூடது என்று முடிவு கட்டி விட்டான் என்று எனக்குப் புரிந்து விட்டது!

7. என்னுடைய ப்ராஜக்ட் லீடர், என் தலையை பார்த்தே பேசுவார். ஹலோ என் கண்ணைப் பாத்து சொல்லுங்க என்று ரஜினி/விக்ரம் ரேஞ்சில் டயலாக் விடுவேன். அவருக்கும் சிரிப்பு வந்துவிடும்.

8. என் பழைய ஐடி கார்ட்டை பார்த்து நண்பர்கள், இவ்வளவு நல்லா இருந்துருக்கியேடா? என்றால், கொஞ்ச நாள் அசிங்கமா இருக்கலாம்னு பாக்குறேன் என்று பீத்திக் கொள்வேன் [இனிமேல் கேட்பார்கள்?]. இதன் மூலம் நான் கற்ற பாடம், நீங்கள் அழகு என்று யாராவது சொல்ல வேண்டுமா? இருப்பதை விட கேவலமாய் மாறி விடுங்கள்..தோற்றத்தில் மட்டும்!!

இப்போது சொல்லுங்கள்? என் வாழ்க்கையில் கொஞ்சம் சுவாரஸ்யம் கூடியிருக்கிறதா? இல்லையா? ஆண்களால் தான் இப்படி அடிக்கடி முகத்தை மாற்றி கொள்ள முடியும், [அதாவது, விதவிதமாய் அசிங்கப்படுத்திக் கொள்ள முடியும்!] இந்த தாடி தான் வளர மாட்டென் என்கிறது! இந்த வார குமுதத்தில் மதன், நான் ரசிகன் கட்டுரையில், தாடியைப் பற்றி எழுதியிருந்தார். பெரியாரும், தாகூரும் தாடி இல்லாமல் வந்தால் நம்மால் கண்டு பிடிக்க முடியுமா? என்ற கேள்வி என்னை மிகவும் கவர்ந்தது. அந்த மாதிரிக் கட்டுப்பாடுகள் எல்லாம் பெரிய தலைவர்களுக்குத் தான்..எனக்கு என்ன? அடுத்ததாக மொட்டை போட்டுக் கொள்ளலாமா என்று பார்க்கிறேன்? என்ன சொல்கிறீர்கள்?

வெகு நாட்களுக்குப் பிறகு வலைப்பதிகிறேன். சமீபத்தில் ஒரு துர் மரணம் என்னை மிகவும் பாதித்தது. பெங்களூரில் நான் இருந்த போது எனக்குப் பழக்கமான ஒரு நண்பன்; அவனுக்கு வயது ஒரு 22, 23 இருக்கலாம். 'டெல்' லில் நானும் அவனும் ஒன்றாக வேலை பார்த்து வந்தோம்.

சமீபத்தில் அவன் ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டதில் அவனும் அவனுக்கு மட்டுமே தெரிந்த பாஸ்வேர்ட்களும் இறந்தது. ஒரு மரணத்தை வேடிக்கையாகச் சொல்வதாக யாரும் எண்ண வேண்டாம், வேதனையாகத் தான் சொல்கிறேன். இப்படி அவனுக்கு மட்டுமே தெரிந்த எத்தனை ரகசியங்கள், சாதனைகள், சாகசங்கள், சோகங்கள், சந்தோஷத் தருணங்கள் அவனோடு அழிந்து போனதோ.. வாழ்க்கை தான் எத்தனை விசித்திரமானது? இப்படி 22, 23 வயதில் ஒரு சாலையின் பிரிவானத்தில் அடிபட்டு இறக்கவா அவன் அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்தான்? அவனுக்கும் எனக்கும் நிறைய வாக்குவாதங்கள் வருவதுண்டு. நல்ல நிலையில் இருக்கும் நீ நலிந்தவர்களுக்கு உதவ வேண்டும் என்று நான் சொல்வேன்..நான் என்னை பாத்துக்குறேன், சமுதாயம் அது தன்னை பாத்துக்கும் என்பான். சமுதாயம் எனக்கு என்ன செய்தது, நான் அதற்கு செய்வதற்கு என்று சண்டை போடுவான்...அவன் பேசுவதைக் கேட்டால், என்னையும் அவனுடைய கட்சியில் சேர்த்து விடுவானோ எனறு எனக்கு பயமாக இருக்கும். இதை பற்றி நாம் பிறகு விவாதிப்போம் என்று ஒதுங்கி விடுவேன்.

நான் எழுதிய பொதுவுடைமை பற்றிய பதிவுக்கு எதிராக அவனும் வலை பதித்தான். ஆம். அவன் உங்கள் எல்லோருக்கும் அறிமுகம் ஆனவன் தான். விஜயநகர் என்ற பதிவில் பொன்னியின் செல்வன் என்ற பெயரில் வலைப்பதித்து வந்தான். சமீபத்தில் அவனுடைய வலைப்பதிவின் டெம்ப்ளேட்டை மாற்றினான். நீங்களும் பாருங்கள்!ரத்தச் சிவப்பில், காலனை போன்ற ஒரு கரிய உருவம் கையில் ஏதோ ஒரு ஆயுதம் ஏந்தி நிற்கிறது. மரணம் தன்னை நோக்கி வருகிறது என்று அவன் மூளையின் ஓரத்தில் ஒரு நரம்பு சொல்லியதோ என்னமோ?

மரணம் மனிதனை விட வக்கிரம் படைத்தது என்று நினைக்கிறேன். காதலுக்கு கண்ணில்லாதது போல், மரணத்துக்கும் இல்லை போலும். கண்களை விடுங்கள்! இதயமே இல்லை அதற்கு. என்று நட்பின் பிரிவில் நான் புலம்பினாலும், எந்த லஞ்சமும் வாங்காமல், எந்த ஊழலும் செய்யாமல் கடமையை மட்டும் கண்ணும் கருத்துமாய் செய்யும் மரணம் என்னை வியக்கச் செய்கிறது. மரணத்தில் தான் சமத்துவம் இருக்கிறது. அது எல்லோரையும் ஒரு சேர கண்கானித்துக் கொண்டே இருக்கிறது. அதற்க்கு நிறைய கண்கள் இருக்க வேண்டும். என்று நினைக்கிறேன். காற்றுடன் சேர்ந்து அசையும் மரம் போல, மரணத்துடன் சேர்ந்து வாழ்வு அசைந்து கொண்டே இருக்கிறது.

எத்தனையோ பேர் மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் நம் முதுகுக்கு பின்னால் வந்து நம் கழுத்தைப் பிடித்து நம்மை கொண்டு செல்கிறது மரணம்!

மரணமே இல்லாத மரணத்தை யாரால் என்ன செய்ய முடியும்?

பின்குறிப்பு: தயவு செய்து வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள். அவனுக்கு தலையில் அடிபட்டதைத் தவிர உடம்பில் ஒரு சிராய்ப்பும் ஏற்படவில்லை!