Showing posts with label அனுபவம்/நிகழ்வுகள். Show all posts
Showing posts with label அனுபவம்/நிகழ்வுகள். Show all posts
எனக்கு ஒரு வலைப்பக்கம் இருக்கிறது, அதை நம்பி ஒரு கோடி, சரி, ஒரு லட்சம், அட, சரி ஒரு ஆயிரம், சரிய்யா, ஒரு பத்து பதினஞ்சு பேரு இருக்காங்க என்பதே எனக்கு மறந்து விட்டது. கழுதை தேய்ந்து கடவுள் துகள் ஆன கதையாய் [அட, இன்னும் டச் விட்டு போலியே..!!] மாதத்திற்கு ஒன்று என்று எழுதி கொண்டிருந்தேன். அது வருடத்துக்கு ஒன்று என்கிற ரேஞ்சில் வந்து நிற்கிறது. இந்த நிமிடம் வரை எதை பற்றி எழுதப் போகிறேன் என்று யோசிக்கவில்லை. பாப்போம்...

நான் என்ன நினைக்கிறேன்னா, இப்போ எல்லாம் வீடியோல பெர்பார்மன்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டோமா, கழுதை இனி பிளாக் எழுதி என்ன ஆக போகுது, "அட யாருப்பா அதை அசிங்கமா கைல, கழுத்துல மாட்டிகிட்டு" என்று கவுண்டமணி சொல்வது போல் என் ஆழ்மனம் முடிவுக்கு வந்து விட்டது போல...ஆனா, இதை நெனச்சி அந்த பத்து பதினஞ்சு பெரும் கவலைப்பட வேணாம். வீடியோவில் நடனம் புரிவோம், "கீ போர்டிலும் நடனம் புரிவோம்" [நன்றி: கருந்தேள் ராஜேஷ்]

ஒரு முக்கியமான விஷயம், நான் மொத்தமாய் பெங்களூர் குடி பெயர்ந்து நேற்றோடு ஒரு வருடம், ஒரு மாசம் ஆகிறது. சில வருடத்துக்கு முன், பெங்களூரில் இருந்து சென்னை வந்தேன். இப்போது மறுபடியும் பெங்களூர். விஷயம் ஒன்றுமில்லை. சும்மா ஒரு மாற்றம் தான்.

நான் பெங்களூர் வந்ததிலிருந்து சென்னையில ஒரே மழையும், வெள்ளமும், புயலுமாய் இருக்கிறது. நம் சென்னையை விட்டு வந்தது ஏதோ அபசகுனம் ஆகிவிட்டது போல என்று நினைத்து சற்று பீற்றிக் கொண்டால், சென்னையில் எழும் தன்னெழுச்சிகள் நல்ல சகுனம் தான் என்று காட்டுகிறது. எப்படியோ நல்லா இருந்தா சரி!

எதற்காக சென்னை குடிபெயர்ந்தேனோ, அதை தொடர்ந்து செய்ய ஆரம்பித்த போது, பெங்களூர் வந்துவிட்டேன். என் குறும்படங்களை பற்றி தான் சொல்கிறேன். "நீங்கள் போய் விட்டால், தமிழ் குறும்படங்களின் எதிர்காலம் என்னவாவது?" என்று ஒரு நூறு பேர், இல்லை, ஒரே ஒரு ஆள் மட்டும் கேட்டார். "தமிழை தெலுங்கன் வளர்ப்பது போல் யாராவது அதை வளர்த்து எடுப்பார்கள்" என்று சொல்லி விட்டு வந்து விட்டேன். உண்மை என்னவென்றால், பெங்களூர் வந்து அடுத்த லெவல் போக வேண்டும் என்று தான் என் விருப்பம். சென்னை மாநில லெவல் என்றால் பெங்களூர் தேசிய லெவல். இங்கே தான் ஒருத்தன், ஹிந்தியில் குறும்படம் எடுக்கிறான், ஒருத்தன் ஆங்கிலத்தில் எடுக்கிறான், ஒருத்தன் கன்னடத்தில் எடுக்கிறான். நான் இங்கு வந்து ஒரு ஹிந்தி, ஒரு ஆங்கிலம் மற்றும் ஒரு கன்னட படத்தை முடித்து விட்டேன் என்றால் பார்த்து கொள்ளுங்கள். [அதெல்லாம் யூட்யூபில் வராது!] சென்னை என்ன ஒரு ஆறு மணி நேரம் தானே, வந்துட்டு போனால் போகிறது. என்ன நான் சொல்றது? சோ, வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு போல் கர்நாடகமும் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. பாப்போம்.

அடிக்கடி சந்திக்க முயற்சி பண்றேன், இல்லைனா அடுத்த வருஷம் பாக்கலாம்...

நேற்று இரவு சென்னைக்கு ரயில் ஏற மதுரை ரயில் நிலையத்தை வந்தடைந்தேன். ஆட்டோவில் இருந்து இறங்கியதும் ரயில் நிலையத்தின் வாசலை திரும்பி பார்த்தால் அப்படியே கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல இருந்தது. அத்தனை சுத்தம். ஒரு தூசு, துரும்பு இல்லை. "இந்தியாவில் ஒரு ரயில் நிலையத்தின் வாயில் இத்தனை சுத்தமாய் எங்காவது இருக்குமா?" என்று எண்ணி எண்ணி வியந்தேன்.

ரயில் நிலையத்தின் முன்னால் உள்ள அந்த குட்டி பிள்ளையார் கோயிலை கடந்ததும் வழக்கம் போல அந்த பெரிய மைதானம் போன்ற இடத்தில் பலர் படுத்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? ஏன் சரியான சமயத்தில் ரயில் நிலையத்துக்கு வராமல் இங்கு வந்து படுக்கிறார்கள்? என்று ஒரு முறையாவது விசாரிக்க வேண்டும். ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் புதிதாய் இரண்டு பெரிய "எல் இ டி" போர்டுகளை மாட்டி எந்த ரயில் எப்போது எந்த பிளாட்பாரத்தில் வருகிறது என்று காட்டிக் கொண்டிருந்தார்கள். உள்ளே சென்று முதல் பிளாட்பாரத்துக்குள் நுழைந்தேன். இரண்டு சஃவாரி போட்ட ரயில்வே ஊழியர்கள் குழம்பி நிற்பவர்களுக்கு வழி காட்டிக் கொண்டிருந்தார்கள். ரயில் பிளாட்பாரத்துக்குள் வந்ததும் எந்த பெட்டி எங்கு வரும் என்று டிஜிட்டலில் அழகாய் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். பிளாட்பாரம் மிகவும் சுத்தமாய் இருந்தது. ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள், அதில் சரியாய் போடப்பட்ட கருப்பு குப்பை கவர் என்று என்னை ஒவ்வொரு நொடியும் அங்குள்ள ரயில்வே ஊழியர்கள் ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருந்தார்கள்.

மதுரை போன்ற ஒரு நகரில் இந்த சுத்தம் சாத்தியம் என்றால் ஏன் மற்ற நகரங்களில், ஏன் இந்தியா முழுவதும் சாத்தியம் இல்லை என்ற கேள்வி மறுபடி மறுபடி என்னுள் எழுந்து கொண்டிருந்தது. அப்போது குப்பை பொறுக்கும் ஒரு பெண் தொழிலாளி ரயில்வே பாலத்தில் குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்தார். எனக்கு இருப்பு கொள்ளவில்லை. எழுந்து அவரிடம் சென்றேன்.

மிகுந்த நன்றி உணர்ச்சியுடன், "அக்கா வணக்கம், நான் சென்னையில இருந்து வர்றேன். பல ரயில்வே ஸ்டேஷன் போயிருக்கேன். மதுரை ஸ்டேஷன் தான் ரொம்ப சுத்தமா இருக்கு. ஒரு குப்பை இல்லை. ரொம்ப நல்லா வேலை பாக்குறீங்க..." என்றேன்.

அவர் என்னை ஏற இறங்க பார்த்து விட்டு, ஒரு ரியாக்ஷனும் இல்லாமல், "அப்படியா நல்லா இருக்கா...சரி சரி!" என்று குப்பையை பொறுக்கத் தலைப்பாட்டார்!

நான்: ஞே!

அவருடைய ரியாக்ஷனே இல்லாத ரியாக்ஷனை பார்த்து எனக்கு என்ன தோணுச்சுன்னா...

ஒன்று, "உங்களுக்கு என்ன பாராட்டிட்டு போயிடுவீங்க, பெண்டு கழல்றது எங்களுக்கு தானே தெரியும்!" என்று வேலை அயர்ச்சியில் அப்படி நடந்திருக்கலாம்.
ரெண்டு, "இப்படி நாளைக்கு எத்தனை பேரு பாராட்டை தான் வாங்குறது, கேட்டு கேட்டு காது புளிச்சு போச்சு என்று செலிப்ரிட்டி லெவலுக்கு ஃபீல் செய்து நம்ம வேலைய பாப்போம்." என்று நினைத்து அப்படி சொல்லி இருக்கலாம். [இதுக்கு அதிக சான்ஸ் இல்லை என்றே தோன்றுகிறது!]
மூன்று, "இப்படி எவனுமே இது வரை பாரட்டினதே இல்லையே, சனியன் குடிச்சுட்டு வந்து உளறுது போல!" என்று நினைத்திருக்கலாம்!
நான்கு, "தப்பா இருந்தா தப்பா இருக்குதுன்னு திட்டலாம், கம்ப்ளயின்ட் பண்ணலாம்! அது தான் சகஜம். எவனாவது நல்லா இருக்குறதை நல்லா இருக்குன்னு சொல்லுவானா, ஒரு வேளை, லூசா இருப்பானோ?" என்று நினைத்திருக்கலாம்.
ஐந்து, "மாசக் கடைசி மனுஷனை கொல்லுது, பெருசா பாராட்ட வந்துட்டான்! உன் பாராட்டை வச்சிட்டு பாமாயில் வாங்க முடியுமா?" என்று நினைத்திருக்கலாம்.

உங்களுக்கு ஏதாவது தோணுதா?
வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் ஷாப்பிங் செய்து விட்டு ஞாயிற்றுக் கிழமை இரவு நானும், என் மனைவியும், என் மகள் தருவும் வெளியே வந்தோம். மால் பார்க்கிங் சார்ஜ் ஜாஸ்தி என்பதால் வேளச்சேரி 100 அடி ரோட்டில் ஒரு ஓரத்தில் பைக்கை வைத்திருந்தேன். "ஒரு அம்பது, நூறுக்கு எல்லாம் ஏன் இப்படி பண்றீங்க?" என்ற மனைவியிடம் "அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு என்  எதிர்ப்பை எப்படி தெரிவிப்பது!?" என்று சொல்லி இருக்கலாம், வேண்டாம் கொலை வெறி ஆகி விடுவாள்!

மாலில் இருந்து வெளியே வந்து 100 அடி ரோட்டை நோக்கி நடக்கத் துவங்கினோம். "பைக்கை யாராவது எடுத்துட்டு போயிட்டா என்ன பண்ணுவீங்க?" என்று அவள் கேட்டதெல்லாம் வயிற்றில் லைட்டாய் புளியை கரைத்துக் கொண்டிருந்தது. 100 அடி ரோடில் ஒரு 10 மீட்டர் நடந்தால் போதும், பைக் அங்கு தான் நிறுத்தி இருந்தேன். ஞாயிற்றுக் கிழமை என்பதால் கடைகள் சாத்தி இருந்தார்கள். அதனால் அந்த இடத்தில் வெளிச்சம் வேறு இல்லை. ஏக்கப்பட்ட பைக்குகளும், கார்களும் நின்று கொண்டிருந்தன. இப்படி எல்லாம் கூட்டத்தில் கண்டு பிடிப்பதற்காக தான் நான் சாமர்த்தியமாய் சிவப்பு ஹெல்மட் வாங்கி இருந்தேன். அதை தேடினால் போதும். அந்த கும்மிருட்டில் கருப்பு வண்டி தெரிய வழியில்லை. சிவப்பை எதிர்நோக்கி என் கண்கள் அலைபாய்ந்து கொண்டிருக்கும் போது, காலில் வழு வழுவென்று ஏதோ பட்டது. "அட, பரவாயில்லையே, கார்ப்பரேஷன்ல இவ்வளவு வழவழப்பா டைல்ஸ் எல்லாம் போடறாங்களா?" என்று நான் நினைப்பதற்குள் அது என் காலில் இருந்து நழுவி குறைத்துக் கொண்டே ஓடியது. அது ஒரு கருப்பு நாய்! அதன் வயிற்றிலேயே கால் வைத்திருக்கிறேன். நல்ல வேளை அது என் தொடையில் வாய் வைக்கவில்லை. சுற்றி இருந்தவர்களில் ஒருவர், "அது ஒன்னும் கடிக்காது சார்!" என்றார். யாராவது என் வயிற்றில் கால் வைத்தால் நானே கடிப்பேன். அது நாய், எப்படி கடிக்காமல் இருக்கும். ஏதோ என் அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொண்டேன். வயிற்றில் புளி இன்னும் ஜாஸ்தி ஆனது. நாயின் புண்ணியத்தில் நெஞ்சு வேறு அடித்துக் கொண்டது. இது வரை என் சிவப்பு ஹெல்மட்டும் கண்ணில் படவில்லை, கருப்பு வண்டியும் கண்ணில் படவில்லை.

என் மனைவியிடம், "இங்கே தான் நிறுத்தினேன், காணோம்!" என்றேன். "உங்களுக்கு இது தேவையா, சரி இன்னும் முன்னாடி போயி பாருங்க" என்றாள் பொறுமையாய். இல்லை என்று தெரிந்தும் முன்னால் போனேன். திரும்பி வரும்போது என் மனைவி என்னை அழைத்தாள். "கிடைத்து விட்டதா?" என்று ஆர்வம் போங்க அருகில் சென்றால், "இப்போ தான் போலீஸ் ஒரு 30 பைக்கை எடுத்து போயிருக்காங்களாம், பீனிக்ஸ் மால் பக்கத்துல நிக்கிறாங்களாம், அவங்க சொல்றாங்க!" என்று என் வயிற்றில் கரைந்து கொண்டிருந்த புளியில் கொஞ்சம் பாலை ஊற்றினாள்! நான் அவர்களிடம் "ஏன் சார், ஏன் வண்டியை எடுத்தாங்க?" என்று கேட்டேன். அவர்கள், "இது நோ பார்க்கிங் சார்" என்றார். அந்த இருட்டில் அப்படி எந்த போர்டும் என் கண்ணுக்கு தெரியவில்லை. மாலையில் நான் நிறுத்தும் போது கூட ஒரு தடவை பார்த்து விட்டு தான் நிறுத்தினேன். அந்த நேரத்திலும் அங்கு 100 வண்டி நின்று கொண்டிருந்தது. "என்ன சார், இத்தனை வண்டி நிக்குது" என்றேன். "அவங்க எடுத்து எடுத்துட்டு தான் போறாங்க, அதுக்குள்ளே மறுபடியும் மக்கள் நிறுத்திடறாங்க. அவங்க எத்தனை வண்டிய தான் தூக்கிட்டு போவாங்க பாவம்!" என்றார். நான் என் மனைவியிடம் "இரு" என்று கிளம்பும்போது, "நானும் வர்றேன், குழந்தையோட பாத்தா விட்ருவாங்க!" என்றாள். என்ன ஒரு சாமர்த்தியம்.! "சரி வா" என்று மறுபடியும் அவர்களை மால் வரை நடத்திப் போனேன். வழியெங்கும், "இது உனக்கு தேவையா?" என்ற ஒரே சொல் எனக்குள்ளே ரீங்காரமாய் ஒலித்தது.

பீனிக்ஸ் மால் அருகில் ஒரு காலி இடத்தில் ஒரு பெரிய டோயிங் வேன் நின்றது. அங்கு இரண்டு வெள்ளை சட்டை போலீஸ்கள் இருந்தார்கள். என் வண்டி சிவப்பு தொப்பியுடன் ஜம்மென்று நின்று கொண்டிருந்தது. இரு இளைஞர்கள்  "ஏன் சார் வண்டிய கொண்டு வந்தீங்க" என்று கேட்டு ஒரு போலீஸ் அதிகாரியின் ஈகோவை கிளப்பி விட்டுக் கொண்டிருந்தார்கள். நான் பின்னால் குழந்தையுடன் நிற்பதை பார்த்ததும் இன்னொரு போலீசிடம், "இங்கே பாரு, ஏன் எடுத்தீங்கன்னு கேக்குறாங்க, தம்பி நீங்க இந்த பக்கம் வாங்க, பாவம் குழந்தையோட நிக்கிறாங்க, முன்னாடி வாங்க சார்" என்று அவர்களை தனியாய் ராடு எடுப்பதற்காக ஓரம் கட்டி விட்டு என்னை அழைத்தார்.

கார்ப்பரேட் உலகில் "கஸ்டமர் இஸ் காட்" என்று ஒரு சொல்லாடல் உண்டு. அதை போல் நம்மூரில் "அதிகார வர்க்கம் இஸ் காட்". போலீஸ்களிடம் இந்த மாதிரி நேரடியான கேள்விகளை எல்லாம் கேட்கக் கூடாது. அவர்கள் பதில் சொல்லக் கடமைபட்டிருந்தாலும், அவர்களின் ஈகோ தான் முதலில் தலை எடுக்கும். அவர்களை அடக்க ஒரே வழி அவருக்கு மேலான ஒரு அதிகாரம். அது நம்மிடம் இல்லை. இன்னொன்று பணம். நான் அந்த இளைஞர்களை போல் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. "நோ பார்க்கிங்க்னு தெரியாது சார், தெரியாம நிறுத்திட்டேன். இது தான் சார் என் வண்டி" என்றேன். "ஒருத்தன் சிக்கிட்டாண்டா" என்பது போல், அந்த இளைஞர்களை புறம் தள்ளி விட்டு அந்த மற்ற போலீஸ் வந்தார். எங்களை ஓரம் கட்டினார்.

கையில் ஃபைன் மெஷினுடன்  "260 ஃபைன் கட்டும்மா" என்றார். பரவாயில்லையே, நேர்மையாய் ஃ பைன் தான் கேட்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டேன்.  அதற்குள் என் மகள் ஏதோ பேச "என்ன வயசும்மா ஆகுது?" என்று என் மகளிடம் சகஜமாக பேச ஆரம்பித்தார். நான் "நோ பார்க்கிங் 260 ஃபைனா சார் என்றேன். [பருத்தி வீரன் மாதிரி கேட்கக்கூடாது, பாலக்காட்டு மாதவன் மாதிரி அடக்கமாய், அப்பாவியாய் கேட்கணும். அப்போது தான் பதில் வரும்.] "டோயிங் சார்ஜ் போடுவோம்மா" என்றார்.

"ஆமா, இவ்வளவு வெயிட்டான பைக்கை தூக்கி போட்டு கொண்டு வந்துருக்கான்களே, நியாயம் தான்!" என்று நினைத்து ஐநூறு ரூபாய் நோட்டை நீட்டினேன். அவர் முன்னூறு ரூபாய் திருப்பிக் கொடுத்தார். நானும் வாங்கி வைத்துக் கொண்டேன். இடையில் "எங்க வேலை பாக்குறீங்க?" என்றார், நான் ஒரு நடிகன் சார், குறும்படங்கள் ல, நாடகங்கள் ல நடிக்கிறேன் என்றேன். இப்போதெல்லாம் மாட்டினால் இப்படி தான் சொல்கிறேன். "ஒ, எப்படி போகுது? குடும்பம் நடத்த வருமானம் வருதா? என்றார் அக்கறையாய். நான் "கஷ்டம் தான் சார்" என்றேன். [நமக்கா நடிக்கத் தெரியாது!] "சரி வண்டி எடுத்துக்குங்க" என்றதும் நான், "சார் ரெசிப்ட்" என்றேன். "அப்போ இன்னும் அறுபது ரூபா கொடுங்க!" என்றார். அப்போது தான் அவர் இருநூறு ரூபாயை லஞ்சமாய் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மை எனக்கு புரிந்தது! "செய்றதை சரியா செஞ்சுருவோம்" என்று சொல்லிக் கொண்டே ரூபாயை எடுத்தேன். அவரும் ஆமோதித்து "ஆமாம், ஆமாம், நாங்க க்ளோஸ் பண்ணிட்டு இருக்கோம், அதனால தான்" என்று ஏதோ மழுப்பினார்.

நான் ரெசிப்ட் கேட்டதும் தான் என் பெயர், முகவரி, வண்டி என், லைசன்ஸ் என்று எல்லாவற்றையும் கேட்டார். 260 ரூபாய் ஃபைன், அதற்கு பதிலாய் 200 ரூபாய் லஞ்சம். அந்த 200 ரூபாய் லஞ்ச பணத்துக்காக ஏதோ பத்து வருடம்  பழகிய நண்பர் போல எங்களுடன் ஒரு நட்பு கலந்த உரையாடல்! உண்மையில் அங்கு பார்க்கிங் செய்யக் கூடாது என்று இவர்கள் நினைத்தால் நல்ல நடவடிக்கைகளை எடுக்கலாம். பேரிகேட்ஸ் வைக்கலாம், பெரிய நோ பார்கிங் போர்ட் வைக்கலாம். வார இறுதிகளில் அங்கேயே ஒரு போலீஸ்காரரை நிறுத்தி வைக்கலாம். ஆனால் இவர்கள் செய்வது என்ன? செய்யாத ஒரு தப்பு நம்மை சிக்க வைத்து, அதற்கு ஃபைனும் போட்டு, அதிலிருந்து தப்பிக்க லஞ்சம் என்று இன்னொரு தப்பையும் நம்மை செய்ய வைத்து...இது என்ன மாதிரியான தண்டனை? என்ன மாதிரியான சட்டம்?

"நீ தப்பு பண்ணிட்டே! கட்டு ஃபைன்" என்று சிங்கம் போல் சொல்ல வேண்டியவர்கள் அந்த இருநூறு ரூபாய் பணத்துக்காக நம்மிடம் இல்லாதது பொல்லாதது எல்லாம் பேசி ஒரு நாயை போல் குழைகிறார்கள். ஒருபக்கம் அவர்களை பார்த்து எனக்கு பரிதாபமே மிஞ்சியது. பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்?

வண்டியை எடுக்கும்போது பார்த்தேன், நல்ல துணியில் நான் வைத்திருந்த ஹெல்மெட் கேப், நான் வண்டி துடைக்க வைத்திருந்த மஞ்சள் துணியை காணவில்லை. அவர்களிடமே கண்டு பிடித்து தரச் சொல்லி இருக்கலாம். ஏற்கனவே 200 ரூபாய் போன கடுப்பில் ஓவர் ஸ்பீட் என்று ஐநூறு ரூபாய் ஃபைன் போட்டு அதற்கு முன்னூறு ரூபாய் லஞ்சம் கேட்பார்கள். எதற்கு வம்பு!

கடந்த ஞாயிறு அன்று கிருஷ்ணகிரியில் "தமிழ் கலை இலக்கிய பட்டறை" நடத்திய குறும்பட த் திருவிழாவில் அஜயன் பாலா, விஜய் ஆர்ம்ஸ்ட்ராங், தமிழ் ஸ்டூடியோ அருண் மற்றும் கவிஞர் சாம்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாய் பங்கு பெற்றனர். நான் நடித்த "வலி" குறும்படத்தை சமர்த்திருந்தோம். அங்கு திரையிடப்பட்ட பதினாறு படங்களில் சில படங்களை தேர்ந்தெடுத்து விருதளித்தார்கள். அதில் வலியும் ""சிறந்த குறும்படம்" விருதை வென்றது. சென்ற வாரம் தமிழ் ஸ்டூடியோவின் மூலம் Article 39 படத்துக்கு விருது. இந்த வாரம் இவர்களின் மூலம் "வலி" படத்துக்கு விருது என்று எங்கள் காட்டில் ஒரே விருது மழையாய் இருக்கிறது. மகிழ்ச்சி! 


தமிழ் ஸ்டூடியோ சார்பாக சென்னையில் அருண் இம்மாதிரி விஷயங்களை முன்னெடுப்பதே பெரிய விஷயம் என்று என் முந்தய பதிவில் எழுதியிருந்தேன். அவரை பின்பற்றி கிருஷ்ணகிரியில் இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்ட "சதீஷ்" மற்றும் மற்ற "தமிழ் இலக்கிய பட்டறை" குழுவுக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுக்கள். 

இப்படி ஒரு நிகழ்வை எளிதாய் நடத்தி விட முடியாது. கடந்த ஒரு மாதமாய் இதற்காக இராப்பகலாய் உழைத்து, போட்டியில் கலந்து கொண்டவர்களை அழைத்து, எல்லோரையும் ஒரு ஏ சி ஹாலில் அமர வைத்து, எல்லோருக்கும் நல்ல சாப்பாடு போட்டு, நம் படத்தை திரையிட்டு, கை தட்டி, நெஞ்சார பாராட்டி, மற்ற சக படைப்பாளிகளுக்கு நம் அறிமுகங்களை கிடைக்கச் செய்து, போதாதென்று மேலும் ஒரு விருதளித்து...என்ன கிடைக்கும் இவர்களுக்கு? போட்டியில் ஒரு பங்காளனாக இந்த நிகழ்வின் வெற்றியாக நான் நினைப்பது, பங்கு கொண்ட படங்களில் ஒரு படம் பத்து வயது சிறுவனாலும் [ஒரே நாளில் எடுத்து முடித்தது!], இன்னொரு படம் ஐம்பது வயது கடந்த முதியவராலும் இயக்கப்பட்டிருந்தது. இரண்டுமே முதல் முயற்சிகள்!

வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் சொன்னது போல், சினிமா என்றால் சென்னை என்று இல்லாமல், தமிழ் படம் என்றால் சென்னையை மட்டுமே மையமாக கொள்ளாமல் அந்த அந்த வட்டாரப்பகுதிகளின் கதைகளை முன்னெடுத்து இப்படி குறும்படங்கள் வருமானால் அதை விட ஒரு சிறப்பு இருக்க முடியாது. செல்ல வேண்டிய தூரம் அதிகம். அதற்கான முதல் அடி தான் இது! வாழ்த்துக்கள் விருதளித்த உங்களுக்கும், உங்களின்  விருதுக்குத் தகுதியான எங்களுக்கும் :)
தமிழ் ஸ்டூடியோ நடத்திய "பாலுமகேந்திரா" குறும்பட விருது வழங்கும் விழா நேற்று கோடம்பாக்கத்தில் BOFTA [Blue Ocean Films Technology & Academy] பள்ளியில் மிகச் சிறப்பாக நடந்தது.  என்னை போன்ற ஒரு சினிமா ஆர்வலனுக்கு பாலுவின் பெயரில் விருது வாங்குவதை விட சிறப்பு ஒன்று இருக்க முடியாது.



இந்த விருது அறிவிக்கப்பட்டதும், "இதற்கு தானே ஆசைப்பட்டாய் பிரதீப் குமாரா? என்று ஆர்வம் போங்க, என்னுடைய [என் இயக்கத்தில் உருவான] குறும்படங்களான "விடியல்", "தமிழ் கிஸ்", "பச்சா பையா" ஆகியவைகளை சமர்ப்பித்து விட்டேன். மூணுல ஒன்னாவது தேறாதா என்ற நப்பாசை தான். சமீபத்தில் வெளியிட்ட "Article 39" படமும் தாயாராய் இருந்ததால் அதையும் சமர்ப்பித்தோம். ஆக இந்த போட்டியில் என் படங்கள் மட்டும் நான்கு :-)

எடிட்டர் லெனின் அவர்கள் முதல் சுற்றுக்கான பதினாறு படங்களை தேர்ந்தெடுத்தார். அதில் ஒன்று "Article 39(F)"! சனிக்கிழமையே, முதல் சுற்றுக்கு தேர்வான பதினாறு படங்களில் "Article 39" தேர்வானது குறித்து அலைபேசியில் அழைத்து சொன்னார்கள். ஞாயிற்றுக் கிழமை 1:30 மணிக்கு அந்த பதினாறு படங்களும் சாரு நிவேதிதா, லீனா மணிமேகலை, BOFTA நிறுவனர் தனஞ்செயன், எடிட்டர் லெனின் [ஜூரி] முன்னர் திரையிடப்பட்டது.

ஞாயிற்றுக் கிழமை ஒரு மணிக்கே "Article 39" க்ரூ ஆஜர். ஆனால், ஏதோ சூப்பர் ஸ்டாரின் முதல் நாள் ஷோ போல், தியேட்டர் ஃபுல். !. உள்ளே நிற்க இடமில்லை.  படங்கள் இன்னும் திரையிட ஆரம்பிக்கவில்லை. "என்னடா இப்படி ஆகிவிட்டதே! நம் படத்தை திரையில் பார்க்க முடியாமல் போய் விடுமோ? "என்று ஸ்க்ரீனுக்கு வெளியே நின்று கொண்டிருந்தேன். அப்போது லெனின் அவர்கள் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். அத்தனை கூட்டத்தில் வாசலில் நின்று கொண்டிருந்த என் மீது அவரின் கண்கள் நின்றது. ஒரு புன்முறுவல். "எனக்கு அவரை தெரியும், அவருக்கு என்னை தெரியாதே!" என்று நான் முழித்துக் கொண்டே "வணக்கம் சார்" என்றேன், என் அருகில் வந்து என் தோளில் கை வைத்து நின்று "ரொம்ப நல்ல நடிச்சுருக்கே! அருமையா இருந்தது. ஆமா, இத்தனை படமா எடுப்பே? என்றார்!" எனக்கு ஒரு நிமிடம் தலை கால் புரியவில்லை. "ரொம்ப நன்றி சார்" என்று வாயில் வார்த்தை வராமல் தடுமாறிக் கொண்டிருந்தேன். எனக்கு என்னமோ அங்கேயே அப்போதே அவார்ட் கிடைத்து விட்டது போல் இருந்தது. அவ்வளவு பெரிய மனிதர், இத்தனை படங்களை பார்த்து விட்டு, என்னை அடையாளம் கண்டு வாழ்த்துகிறார் என்றால், இதை விட வேறு என்ன வேண்டும். புளகாங்கிதம் அடைந்து விட்டேன். அவருக்கு பின்னால் வந்த ஒருவர், கை கொடுத்து, "உங்க எல்லா படத்தையும் பாத்தாரு, ரொம்ப நல்லா பண்ணி இருந்தீங்க" என்றார்.


பிறகு தமிழ் ஸ்டூடியோ அருண் என்னை பார்த்து விட்டு, "படத்துல நடிச்சுருக்கீங்களா? சீக்கிரம் வரச் சொன்னேன்ல?" என்று செல்லமாய் கோபித்துக் கொண்டார். அருண், நான் 1:30 நிகழ்ச்சிக்கு 1 மணிக்கே வந்துருக்கேன் என்றேன். "நிகழ்ச்சி காலையில 10 மணியில இருந்து!" என்று புள்ளி வைத்தார். பிறகு அவர் லெனின் ஐயாவை சாப்பிட அழைத்தார். சாப்பிட கீழே இறங்கியவர் என்னை பார்த்து கையால் "வா" என்று சைகை செய்து கொண்டே முன்னால் போனார். நான் நாய்க்குட்டி மாதிரி அவர் பின்னாலேயே போனேன். அவர் அருகில் என்னை அமர வைத்து மறுபடியும் பாராட்ட ஆரம்பித்தார். "எல்லா படங்களும் பாத்தேன், அதெல்லாம் வேற யாரோ டைரக்ட் பண்ணி இருக்காங்க போல, இது தான் சிறப்பா இருந்தது!" என்றார். அதெல்லாம் ஆரம்ப காலத்துல நானே பண்ணதுங்க, இது பாலாஜி டைரக்ட் பண்ணார் என்று அருகில் இருந்த இயக்குனரை கை கட்டினேன். அவ்வளவு நேரம் அவர் அருகில் இருந்ததையே நான் மறந்து விட்டேன். பாலாஜி மன்னிப்பாராக! பிறகு அவரையும் பாராட்டினார். போட்டிக்கு வந்த 65 குறும்படங்களில் 16 தேர்வு செய்ததாக சொன்னார். "65 படம் எப்படி சார் பாத்தீங்க?" என்றதற்கு, "படம் பாக்க தான் நமக்கு எப்பவுமே புடிக்குமே, கின்னஸ் ரெக்கார்டுக்கே கொடுக்கலாம் அத்தனை குறும்படங்களை பாத்துருக்கேன் என்றார்! பிறகு நல்ல குறும்பட போட்டிகளில் கலந்து கொண்டு பல படங்களை பார்க்க வேண்டும் என்று சொன்னார். அத்தனை பேச்சுக்களிடையிலும் "நீங்க சாப்பிட்டீங்களா?" என்று கேட்டார்.

அதோடு விடாமல் உள்ளே சென்று உட்காரும்போது என்னை கையோடு கூட்டி போய் அவர் அருகே அமர்த்திக் கொண்டார். அங்கே மக்கள் நிற்க இடம் இல்லாமல் இருக்கும்போது நான் சொகுசாய் ஒரு சேரில் அமர்ந்து கொண்டது எனக்கே கொஞ்சம் உறுத்தியது. நல்ல வேலையாய் லீனா வந்து விட்டதால், அருண் வந்து விரட்டுவதற்குள், நான் இடத்தை காலி செய்து எழுந்து நின்று கொண்டேன்.

பதினாறு படங்களும் திரையிட்டு முடிந்ததும், மாலை ஆறரை மணிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி. கார்த்திக் சுப்பாராஜ், மாலன், லீனா, சாரு, லெனின் மற்றும் தனஞ்செயன் எல்லோரும் இந்த நிகழ்வை பற்றியும், குறும்படங்களின் முக்கியத்துவங்கள் பற்றியும், அதன் முன்னேற்றங்களை பற்றியும் எடுத்துரைத்து பேசினார்கள்.

சாரு, லீனா, தாங்கள் பார்த்த பதினாறு குறும்படங்களில் இருந்த குறை நிறைகளை மேலோட்டமாய் எடுத்துரைத்தார்கள். வணிக சினிமா சுற்றி இருக்கும் அத்தனையும் அழித்து வேகமாய் முன்னேறிக் கொண்டிருக்கும்போது, குறும்படங்கள் தான் இலக்கியத்துடன் ஒரு நட்பை வளர்த்துக் கொள்கிறது என்பது ஆறுதலாய் இருப்பதாய் லீனா ஒரு கருத்தை முன் வைத்தார். அதோடு குறும்படங்களுக்கே உரிய மெலோட்ராமா, செண்டிமண்ட், க்ளிஷேடாய் இருப்பதையும், இவைகளில் எந்தப் படமும் இன்னும் ஒரு முழுமையான கலை வடிவம் என்று சொல்வதற்குரியதாய் இல்லை என்றும் குறிப்பிட்டார். சாரு, மாற்று சினிமா மேல் தனக்கு உள்ள பயத்தையும், இசையை சரியாய் உபயோகப்படுத்துங்கள், ஐரோப்பிய சினிமாக்களை பாருங்கள் என்றும் கேட்டுக் கொண்டார். அடுத்து பேச வந்த லெனின் அவர்கள் தன் அனுபவங்களை ஆக்கப்பூர்வமான மொழியில் ஒரு கொண்டாட்ட மனநிலையில் பேசி எல்லோரையும் அந்த மனநிலைக்கு கொண்டு சென்றார். வகுப்பில் மாணவனை கேள்வி கேட்டு எழுப்பும் ஆசிரியரை போல் தான் படத்தில் பார்த்து அவர் மனதில் பதிந்த உருவங்களை எழுப்பி எல்லோருக்கும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தார். எங்கள் குழுவினரை எழுப்பி நல்லதாய் சில வார்த்தைகள் பேசி விட்டு, "அதுக்காக அவங்களை தேர்ந்தேடுதேன்னு நெனைச்சுடாதீங்க!" என்றார்.

எந்தப் படம் வென்றது என்று சொல்லாமல், மேலோட்டமாய் எல்லோரும் நிறை குறைகளை சொல்லிச் சென்றது ஒரு புது அனுபவம். "தேவை இல்லாத இடங்களில் இசையை போட்டு ஏன் கொல்கிறீர்கள்?" என்று சாரு சொல்லும்போது அவர் எந்தப் படத்தை பற்றி பேசுகிறார் என்று தெரியாமல், அதை ரசிப்பதா, இல்லையா என்று ஒரே குழப்பமாய் இருந்தது. அது ஒரு பயங்கரமான த்ரில்லிங் அனுபவத்தை கொடுத்தது.

ஒரு வழியாய் அனைவரும் பேசி முடித்து, விருதுக்கான படங்கள் அறிவிக்கப்பட்டது. "கண்காணிப்பின் மரணம்", "ஆயா" ஆகிய படங்கள் முதல் இரண்டு இடத்தையும், "ஞமலி", "Article 39 (F)" சிறப்பு பரிசுகளை வென்றது. எங்களை பொருத்தவரை, பங்கு பெற்றதே முதல் வெற்றி! முதல் சுற்றில் வெற்றி பெற்றது அடுத்த வெற்றி. அதன் பிறகு, லெனின் போன்ற ஒரு ஆளுமை எங்களை அருகில் அமர்த்தி பேசுவது பெரிய வெற்றி. இதற்கு மேல் விருது வேறு கொடுத்தால் அதை போனஸாய் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்! "இதோடு எப்படி உங்களை விடுவது?" என்பது போல், சமீபத்தில் கார்த்திக் சில குறும்படங்களை ஒன்றிணைத்து வெளியிட்ட "பெஞ்சு டாக்கீஸ்" படத்தை போல் வெற்றி பெற்ற நான்கு படங்களையும் ஒன்றிணைத்து வெளியிட இருக்கிறார்கள். மிக விரைவில்; வெள்ளித் திரையில் - Article 39 (F)! இப்படித் திணற திணற...:-)







இத்தனை செலவு செய்து, இத்தனை உழைப்பை சேர்த்து, இப்படி ஒரு விருதை வழங்குவதால் தமிழ் ஸ்டூடியோவுக்கு ஒன்றுமே கிடைக்கப் போவதில்லை. "நாட்டுக்கு உழைக்கிறேன்!" என்றாலே வீட்டில் திட்டுவார்கள்; தமிழ் ஸ்டூடியோ குழுவினர் "நல்ல சினிமாவுக்கு உழைக்கிறேன், அதற்காக இத்தனை பணத்தை செலவழிக்கிறேன்!" என்று இத்தனை வேலைகளை செய்கிறார்கள் அவர்கள் வீட்டில் எப்படி அவர்களுக்கு சோறு போடுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. இதற்கெல்லாம் நன்றி என்ற ஒரு வார்த்தை க்ளிஷேடாய் போய் விடும் :) அதிலும் அருணிடம் சென்று நன்றி என்று என்ன ஆரம்பித்தாலும் மனிதர் சுட்டு பொசுக்கி விடுவதை போல பார்க்கிறார். எதுக்கு வம்பு?

கடைசியாய் ஒன்று சொல்கிறேன்,

பாலுமகேந்திரா நல்ல படங்களையும், நல்ல மாணவர்களையும் சினிமாவிற்கு விட்டுச் சென்றிருக்கிறார்  - உத்தம கலைஞன்! 
நேற்றைய நாளிதழில், மறுபடியும் தீபாவளிக்காக ஒரு சிறப்பு ரயில் விளம்பரம். நாளிதழ் வாங்கியவர்கள் அதில் படித்தார்கள். வாங்காதவர்கள் வாட்ஸ் அப்பில், ஃபேஸ்புக்கில் அந்த செய்தியை படித்தார்கள். நான் இரண்டாவது ரகம். பல வருடம் பசியோடு காத்திருந்த ஒரு விலங்கினை போல் அந்த செய்தியை நான் எதிர் கொண்டேன் என்று தான் சொல்ல வேண்டும். ஏன் என்றால் மூன்று மாதம் முன்பு தீபாவளிக்காக முன்பதிவு தொடங்கப்பட்ட அந்த நாளை ஒரு போர்வீரனை போல் எதிர்கொண்டு மோசமாய் தோற்றுப் போயிருந்தேன். நான் Available லின்க்கை க்ளிக்கும்போது கொத்து கொத்தாய் இருந்த சீட்டுக்கள், பணம் கட்டி திரும்ப வரும்போது என்னை காத்திருப்பு பட்டியலுக்கு தள்ளிவிட்ட சோகம் நடந்தேறியது அன்று. சரி மூன்று மாதம் இருக்கிறதே, கிடைத்து விடும் என்று தான் நினைத்தேன். அது என்னமோ சென்னையில் உள்ள அத்தனை பேரும் இந்த முறை மதுரையில் தான் தீபாவளி கொண்டாடுவோம் என்று முடிவெடுத்து விட்டதை போல இன்று வரை அந்த காத்திருப்பு பட்டியிலில் ஒரு முன்னேற்றத்தையும் காணோம். சென்னை திரும்பி வருவதற்கான டிக்கட் என் பூர்வ ஜென்ம புண்ணிய பலனால் கிடைத்து விட்டது. மதுரை போவதற்கு தான் வழி இல்லை. ரெட்பஸ்காரன் வேறு எனக்கு பெர்சனலாய் மெயில் போட்டுஎன்ன உங்களை ஆளையே காணோம், இந்தாங்க டிஸ்கவுண்ட்!” என்றெல்லாம் என்னை ஆசை காட்டி அழைத்தான். சரி என்று நம்பி உள்ளே போய் பார்த்தால் ஏன் அவன் டிஸ்கவுண்ட் கொடுக்கிறான் என்று அப்போது தான் புரிந்தது. தீபாவளி என்பதற்காக பஸ் டிக்கட் எல்லாம் ப்ளேன் டிக்கட் விலை ஆகி இருந்தது! “அட போங்கப்பா டட்காலே சரணம்!” என்று நான் பதுங்கி இருந்த போது வந்த செய்தி அது!

சும்மா போகும் ரயிலுக்கே கொத்து கொத்தாய் வந்து விழுவார்கள். தீபாவளிக்கான சிறப்பு ரயில் வேறு, ப்ரீமியம் ரயில் விட்டதற்கே  "பண்டிகை டயத்துல ப்ரீமியம் ரயிலாடா விடறீங்க?" என்று பயங்கர காண்டில் வேறு இருக்கிறார்கள்கேள்வியே கிடையாது நாளைக்கு சட்டை கிழியுது என்று நினைத்துக் கொண்டேன்நேற்று இரவே அதை எதிர்நோக்குவதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கிவிட்டேன். நேரத்திற்கு படுக்கைக்குச் சென்று விட்டேன். அப்பா, அம்மாவிடம் டிக்கட் புக் செய்ய காலையில் எழுப்புமாறு சொல்லிவிட்டேன். பத்தாதற்கு மாமனாரிடமும் ஒரு பிட்டு போட்டு வைத்து விட்டோம். எல்லாம் தயார்! காலையில் ஆறு மணியில் இருந்து அலாரம் வைத்து, அதன் தலையில் தட்டி தட்டி, ஒரு வழியாய் ஏழரைக்கு எழுந்தேன்ஒரு ஏழரையை எதிர்நோக்க ஏழரைக்கு எழுவது எத்தனை பொருத்தம்! பல்லை துலக்கி விட்டு, லேப்டாப்பை திறந்தேன்வீட்டில் உள்ள இணையம் மெதுவாய் இருப்பதாய் மனைவி சொன்ன ஞாபகம் வந்தது. என் கம்ப்யுட்டர் மவுஸ் சில நாட்களாய் படு வேகமாய் வேலை செய்கிறது. நான் சிங்கிள் க்ளிக் செய்தால் அது டபுள் க்ளிக் செய்கிறது. நான் டபுள் க்ளிக் செய்தால் அது ட்ருபுள் க்ளிக் செய்கிறது. அதன் க்ளிக் ஸ்பீடை குறித்தும் பார்த்து விட்டேன். அது கண்டுக்கவே இல்லை. வீட்டில் ஒரு மவுஸ் கூட நம்மை மதிக்க மாட்டேன் என்கிறது. எல்லாம் அகராதி புடிச்சுது!

சடாரென்று ஒரு யோசனை! தம்பி உடையான் படைக்கு அஞ்சான் [இது மொத்த வித்தையும் எறக்குன அஞ்சான் இல்லை!]! "என்னையாடா கலாய்கிறீங்க, என் தம்பி ஒருத்தன் இருக்கான்டா!" என்று அவனுக்கு ஃபோனை போட்டேன். பெங்களூர் குளிரில் சுகமாய் தூங்கிக் கொண்டிருந்தான். எந்த பேட் வேர்ட்சும் யூஸ் பண்ணாமல் பரதன் ராமனின் பாதுகையை சுமந்து சென்றதை போல் கடமையே கண்ணாக எழுந்து கொண்டான்! “இப்போ வாங்கடா!” என்று இறுமாந்து அந்த எட்டு மணி ராகு காலத்துக்கு காத்திருந்தேன். அந்த சிறப்பு ரயிலின் நேர் உள்ள SL என்ற லின்க்கில் கையை வைத்துக் காத்திருந்தேன்..பெங்களூரில் என் தம்பி அதே போல் காத்திருந்தான்மணி ஏழு அம்பத்தொம்போது, நான் கிளிக்கே செய்யாமல் என் மவுஸ் க்ளிக் செய்து கொண்டிருந்தது. ராஸ்கல்! பிறகு தான் என் கை நடுக்கம் அது என்று புரிந்தது. மணி எட்டு. பதமாய் க்ளிக்கினேன். “441 Available” என்று சொன்னது. எனக்கு பேராசை இல்லை; இரண்டு டிக்கட் கிடைத்தால் போதும். க்ளிக்கினேன். என் பெயர், என் மனைவி பெயர், என் மகள் பெயர் என்று எல்லாவற்றையும் ஏற்கனவே சேமித்து வைத்த லிஸ்டில் இருந்து காலி டப்பாவில் நிரப்பினேன். சரி பார்த்துக் கொண்டேன். பேங்க்கை தேர்ந்தெடுத்தேன். பணத்தை கட்டினேன். அந்தச் சுட்டி பணத்தை வாங்கிக் கொண்டு திரும்பி எங்கு தொடங்கினோமோ அதே இடத்திற்கு வந்து சேர்ந்தது. கண்ணை விரித்து பார்த்தேன். S6 பெட்டியில் முத்து முத்தாக இரண்டு டிக்கட்டுகள் பதிவாகி இருந்தது. அதற்குள் ஜீடாக்கில் டாக்கிய என் தம்பி S9 கோச்சில் இரண்டு டிக்கட்டுகளை பதிவு செய்து விட்டேன் என்று சொன்னான். வேண்டியது இரண்டு, கிடைத்தது நான்கு! என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. உழைப்பு வீண் போகவில்லை என்று பெருமிதம் அடைந்தேன். என் தம்பி ஃபோன் செய்தான். எதை கான்சல் செய்வது என்று யோசித்தோம். "தாம்பரம் ஸ்டேஷனில் S9 முதலில் வருமா இல்லை S6 முதலில் வருமா?" என்று என்  தம்பியை கேட்டேன். அவன் இப்போது பேட் வேர்ட்ஸ் உபயோகிக்கத் தொடங்கினான். அதற்குள் என் மனைவி, "இரண்டையும் கான்சல் செய்து விடாதீர்கள்!" என்று சீரியசாய் அறிவுரை கூறினாள். ["நான் என்னமோ கிறுக்கன் மாதிரியே பேசுறது"] “சரி நீயே கான்சல் செய்!” என்று என் தம்பியிடம் சொல்லிவிட்டு நிமிர்ந்தேன். அப்போது ஒரு யோசனை, வியர்வை சிந்தி ரத்தம் சிந்தி, காப்பி சிந்தி இந்த டிக்கட்டை வாங்கிய பெருமிதத்தில் இப்போது வெயிட்டிங் லிஸ்ட் நம்பர் என்ன இருக்கிறது என்று பார்ப்போம் என்று அதே ரயிலின் புக்கிங் லிக்கை க்ளிக் செய்தேன்.

128 Available என்றது!

இதை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. கடந்த இரு நாட்களாக மிகுந்த மன உளைச்சலாய் இருக்கிறது. அதை பற்றி சிந்திக்கவே வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், நம்மை சுற்றி உள்ளவர்கள் விட மாட்டேன் என்கிறார்கள். டில்லி உயிரியல் பூங்காவில் நடந்ததை தான் சொல்கிறேன். முதலில் ஒரு செய்தியாய் அதை வாசித்ததாய் ஞாபகம். அதை கற்பனை செய்யவே என்னால் முடியவில்லை. பிறகு அந்த குரூர நிமிடங்களில் அங்கிருந்தவர்கள் கைபேசியில் எடுத்த புகைப்படத்தை இணையம் எங்கும் வெளியிட்டார்கள். அதோடு நின்றால் பரவாயில்லை. இப்போது அந்தப் படத்தை எடிட் செய்து அதோடு சேர்த்து, தாய்லாந்தில் புலிகள் சரணாலயத்தில் வாழும் சாதுப் புலிகளுடன் தாங்கள் எடுத்த செல்பீக்களை  போட்டு, "நான்னா புலியே மிரளும்!" என்று பஞ்ச் ஜோக் அடிக்கிறார்கள். இதில் நம் மீடியாவின் சேவை இருக்கிறதே!!! "பையனை அடித்துக் கொன்ற புலியை காண மக்கள் கூட்டம் அலைமோதுகிறது!" என்று ஒரு செய்தி!! அடப்பாவிகளா! உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா? எல்லாமே உங்களுக்கு ஜோக், நியுஸ் தானா?

முதலில், ஒரு சக மனிதன் சாகும் தருவாயில் இருக்கும்போது எப்படி கைபேசியில் அதை படம் பிடிக்க முடிகிறது என்று யோசித்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.  சரி, ஒரு வெள்ளை புலியை பார்க்கும்போது அங்கிருப்பவர்கள் கையில் கைபேசியை வைத்து படம் பிடித்துக் கொண்டிருந்திருப்பார்கள் அப்போது இந்த சம்பவம் நடந்தவுடன் அதையும் படம் பிடித்திருப்பார்கள் என்று நானே என்னை தேற்றிக் கொண்டேன். ஆனால் நேற்று தான் நான் என்னைத் தேற்றிக் கொண்டது முற்றிலும் தவறு என்று புரிந்து கொண்டேன். மனிதர்கள் நான் நினைத்ததை விட கொடூரமானவர்களாகவே இருக்கிறார்கள். நேற்றிலிருந்து இணையத்தில் அதன் வீடியோ உலா வரத் தொடங்கி இருக்கிறது. அதை ஏதோ புது ரஜினி படம் போல் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதில் அந்தப் பையனை அடித்துக் கொன்ற புலி கொடூரமானதா, அதை வீடியோ எடுத்தவர்கள் கொடூரமானவர்களா, அல்லது அதையும் பார்த்து விட்டு எல்லோருக்கும் பகிர்பவர்கள்  கொடூரமானவர்களா?

வீடியோ எடுக்கும்போதும், அதை பகிரும்போதும், அத்தகையை தருணத்தில் நாம் அவன் இடத்தில் இருந்தால் நம்முடைய மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று யாருக்கும் தோன்றாதா? பத்து நிமிடம் அந்தப் புலி அந்தப் பையனின் அருகில் நின்று அவனை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. பிறகு அங்கிருப்பவர்கள் சத்தம் எழுப்பியதை தொடர்ந்து அது ஆவேசமாகி அந்தப் பையனை கொன்றது என்று படித்தேன். அந்த கொடிய தருணத்தை எப்படி இவர்களால் படம் பிடிக்க முடிகிறது என்று எனக்கு புரியவேயில்லை. சரி இப்போது அதை பகிர்வதால் யாருக்கு என்ன நன்மை, அதில் என்ன கிடைத்து விடப் போகிறது? அப்படி என்ன ஒரு குரூர சந்தோசம்? என் மனதில் ஆயிரம் கேள்விகள். ஒரு வேளை இது ஒரு உப்பு பெறாத  விஷயம், நான் தான் ஓவர் ரியாக்ட் செய்கிறேனா, ஒன்றுமே புரியவில்லை. அணுகுண்டுக்கு வழி சொன்ன ஐன்ஸ்டீன் கூட அன்பையும் மனிதத்தையும் தான் பேசினார். Great Dictator ல் வரும் சாப்ளினின் கடைசி காட்சி நினைவுக்கு வருகிறது.

"I’m sorry, but I don’t want to be an emperor. That’s not my business. I don’t want to rule or conquer anyone. I should like to help everyone - if possible - Jew, Gentile - black man - white. We all want to help one another. Human beings are like that. We want to live by each other’s happiness - not by each other’s misery. We don’t want to hate and despise one another. In this world there is room for everyone. And the good earth is rich and can provide for everyone. The way of life can be free and beautiful, but we have lost the way.

Greed has poisoned men’s souls, has barricaded the world with hate, has goose-stepped us into misery and bloodshed. We have developed speed, but we have shut ourselves in. Machinery that gives abundance has left us in want. Our knowledge has made us cynical. Our cleverness, hard and unkind. We think too much and feel too little. More than machinery we need humanity. More than cleverness we need kindness and gentleness. Without these qualities, life will be violent and all will be lost...."
மறுநாள் ஸ்ரீ நகரை சுற்றிப் பார்க்கத் திட்டம். ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீரின் கோடைகால தலைநகரம். ஜம்மு, ஜம்மு காஷ்மீரின் குளிர் கால தலைநகரம். இப்படியாக இந்த மாநிலத்துக்கு மட்டும் இரண்டு தலை நகரங்கள். ஏன் என்று தெரியவில்லை. நாங்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து ஒரு குன்று தெரிந்தது. அதன் மேல் ஒரு கோவில். அதை தான் முதலில் பார்க்கப் போகிறோம் என்று சன்னி முன் தினமே சொல்லி வைத்திருந்தான். அது சங்கராச்சாரியார் கோவில். ஆதி சங்கரர் ஒரு காலத்தில் அங்கு தவம் செய்த போது உருவான கோவில். கோவில் செல்லும் வழி குறுகலாய் இருந்ததால் சன்னி எங்களை முக்கால் தூரத்தில் இறக்கி விட்டு தரிசித்து வரச் சொன்னான். கையில் காமெரா, உணவு பொருட்கள் என்று எதுவும் கொண்டு செல்ல முடியாது. குழந்தைகளுக்காக மட்டும் கொஞ்சம் எடுத்துக் கொண்டு மலையேறினோம். குன்றின் மேல் இருக்கிறோம் என்று தான் பெயர், வெயில் கொளுத்திக் கொண்டு தான் இருந்தது. இன்னும் கோவில் எவ்வளவு தூரம் என்று வருவோரிடம் கேட்டதும், "இதற்கே இப்படி என்றால் கோவிலுக்கு முன்னூறு படி ஏறனும் என்ன செய்வீர்கள்?" என்று குண்டை தூக்கிப் போட்டார்கள். ஆதி சங்கரர் மேல் எனக்கு கொலை வெறி உண்டானது! கீழே அவ்வளவு இடம் இருக்கு?! இந்த மலை மேல வந்து தான் தவம் பண்ணனுமா? என்று நற நறத்துக் கொண்டே படியேறினேன்.



[விக்கி]
மலையின் உச்சியில் உள்ள அந்தக் கோவிலில் இருந்து ஸ்ரீநகர் மிக அழகாய் தெரிந்தது. எந்த ஒரு இன்பமும் கொஞ்சம் கஷ்டப்பட்டால் தான் கிடைக்கும் போலும்?! அங்கு ஒரு மரத்தடியில் இளைப்பாறிவிட்டு எங்கள் வண்டி உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அடுத்து காஷ்மீர் அரண்மனை ஒன்று பார்ப்பதாக இருந்தது. அந்த வழியில் டிராப்பிக் ஆகி விட்டதால் சன்னி எஸ்கேப் ஆகி எங்களை கீழே கடத்தி வந்து விட்டான். வண்டி அடுத்ததாய் முகல் கார்டனுக்கு சென்றது. நான் முன்னமேயே சொன்னது போல் இந்த மாதிரி கார்டன்களை பார்ப்பதில் எனக்கு விருப்பமில்லை. இருந்தும் குடும்பத்துடன் சென்று விட்டு அதிரடி முடிவகள் எதையும் எடுக்க முடியாது. சன்னி கடிவாளம் கட்டிய குதிரை போல் எங்கு எல்லோரும் வழக்கமாய் போவார்களோ அங்கே தான் போனான். கேட்டதற்கு, "நீங்கள் பல கார்டன்களை பார்த்திருக்கலாம், எங்கள் காஷ்மீரில் கார்டன் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்!!" என்று மார் தட்டினான். அவனை சொல்லி குற்றமில்லை.





சரி என்று முகல் கார்டனுக்குள் நுழைந்தேன். விடுமுறை மற்றும் கோடை காலம் ஆதலால் செம கூட்டம். பல வித இயற்கை வனப்பை ரசித்த பிறகு, இந்த கார்டனில் சரியாய் இலைகள் வெட்டப்பட்ட செடிகள், சமன்படுத்தப்பட்ட புல்தரைகள், நீருற்றுக்கள் என்று எல்லாம் செயற்கை அழகு! இருந்தும் அழகு தானே...அங்கு ஒரு ஊற்று இருந்தது. எல்லோரும் அங்கு வரும் தண்ணீரை பிடித்து குடித்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் காலத்தில் அந்தத் தண்ணீரை தான் ஜவஹர்லால் நேரு குடி தண்ணீராக பயன்படுத்தினாராம். கொஞ்ச நேரம் அங்கே இளைப்பாறிவிட்டு, நிஷாத் கார்டன் என்று இன்னொரு இடத்திற்கு சென்றோம். அதற்குள் மதியம் ஆகிவிட, எல்லோருக்கும் பசித்தது. காஷ்மீரின் ஸ்பெஷல் உணவான மட்டன் ஷோர்பா சாப்பிட்டு பார்க்க வேண்டும், பிறகு நம்கீன் சாய் [அதாவது உப்பு போட்ட டீ!] குடிக்க வேண்டும்  என்று ஆசை. ஆனால் சன்னி, அது கிடைக்கும் ஹோட்டல்  வேறு வழியில் இருப்பதாலும், அவன் கட்டிய கடிவாளத்தில் அந்தப் பாதை தெரியாது என்பதாலும் நாளை கூட்டி செல்கிறேன் என்று கவிழ்த்து விட்டான். எதோ ஒரு தாபாவில் உட்கார்ந்து மதிய உணவு சாப்பிட்டோம்.



பிறகு பொட்டானிக்கல் கார்டன். என் மாமா மகன்  நிறைய பூங்காக்களுக்கு செல்ல இருப்பதால் எதற்கும் இருக்கட்டும் என்று கிரிக்கெட் பேட் கொண்டு வந்திருந்தான். நல்ல புல் தரையில் ஒரு விறுவிறுப்பான ஆட்டத்தை போட்டோம். ரிசார்ட்டில் கிடைத்த அதே அனுபவம், இரண்டு பேர் பால், பேட் வைத்துக் கொண்டு நின்றால் போதும், எங்கிருந்து தான் வருவார்களோ, ஒரு குட்டி கூட்டமே சேர்ந்து விட்டது.  அதில் ஒரு சுள்ளான் பயங்கரமாய் விளையாடினான். இழுத்து இழுத்து அடித்து எங்களை நாக்கு தள்ளி ஓட விட்டான். நாங்கள் போதும் என்று புறப்பட்டதும் அவன் முகம் வாடி விட்டது.


அதை முடித்துக் கொண்டு கிளம்பிய போது வழியில் ஒரு பெரிய பலூன் உயர பறந்து கொண்டிருந்தது. தருவை அதில் ஏற்றினால் சந்தோஷப்படுவாள் என்று நினைத்து உள்ளே போனோம். தரையில் இருந்து கிளம்பி ஒரு இருபது அடி மேலே போய், அங்கே ஒரு நிமிஷம் நின்று விட்டு மறுபடியும் கீழே இறங்கி விடும்.இதற்கு ஒரு ஆளுக்கு ஐநூறு ரூபாய்! இரண்டு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் தான் செல்ல முடியும். சரி வந்தது வந்து விட்டோம், நாமாவது செல்வோம் என்றால் அதற்கும் பெரிய வரிசை. அட போங்கப்பா என்று கிளம்பிவிட்டோம். அந்த பலூன் இருக்கும் இடத்துக்கு அருகில் செல்ல ஆளுக்கு இருபது ரூபாய் டிக்கட் வேறு! இருநூறு ரூபாய் தண்டம்...வெளியே வந்ததும் ஒரு பலூன்காரனிடம் தருவுக்கு ஒரு பலூன் வாங்கிக் கொடுத்தேன். அவளுக்கு அவ்வளவு சந்தோஷம்! பத்து ரூபாயில் முடிந்திருக்க வேண்டியது...ம்ம்ம்ம்!

அங்கிருந்து கிளம்பி ஷாப்பிங் சென்றோம். காஷ்மீர் புகழ் கம்பளங்கள், குர்தாக்கள், புடவைகள், ஸ்வட்டர்கள், பாஷ்மினா ஷால்கள் என்று நிரப்பி வைத்திருந்தான். விளையும் கம்மியாய் தான் தெரிந்தது. நாங்கள் பாஷியான ஷால், புடவை, ஸ்வட்டர், மரத்தால் ஆனா படகு வீடுகள், கீ செயின்கள் என்று முடிந்த வரை அள்ளிக் கொண்டோம். [இந்த வரியை எழுத ஒரு நிமிடம் ஆகவில்லை, ஆனால் அந்த வேலை முடிய...ஷபா!] பாங்க் பாலன்ஸ் இளைத்தது; நெஞ்சு வலித்தது! பட், பேமிலி ஹாப்பி அண்ணாச்சி! அன்றைய நாளை மகிழ்ச்சியோடு முடித்துக் கொண்டோம், தங்கி இருந்த இடத்துக்கு திரும்பினோம். மறுநாள் இடத்தை காலி செய்து விட்டு குல்மார்க் புறப்பட வேண்டும்.

சுற்றுவோம்...
சோன்மார்க்! எங்கும் பசுமை போர்த்திய புல்வெளி; சுற்றிலும் பனி மலை. இதற்கு "தங்கத்தினால் ஆன பசுமை வெளி" என்ற பெயரும் உண்டு. காலை எழுந்து குளித்து முழுகி, காலை உணவை கடித்து முழுங்கி, குழந்தைகளை தயார் செய்து கிளம்ப பத்து மணி ஆகி விட்டது. வழி நெடுக இனிமையான சீதோஷணம். அருமையான இயற்கை வனப்பு. ஓடையின் அருகே சுற்றுலா வந்தவர்கள் ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து தங்கி இருந்தார்கள். அவர்களை பார்க்கவே பொறாமையாய் இருந்தது. சோன்மார்கை, பஹல்காம், குல்மார்க் போல எல்லா காலங்களிலும் பார்க்க முடியாது. குளிர் காலங்களில் இதன் பாதையே அடைபட்டு போய் விடும் என்கிறார்கள்.


நாங்கள் அங்கு போய் சேர மதியம் பனிரண்டு, பனிரெண்டரை ஆகிவிட்டது. அங்கு உள்ள இடங்களை சுற்றிப் பார்க்க குதிரையிலும் செல்லலாம்; காரிலும் செல்லலாம். பயங்கர குழப்பத்துக்குப் பின் சரி முதலில் சாப்பிட்டு விடுவோம் என்று ஒரு மனதாய் முடிவெடுத்து சாப்பிட்டு முடித்தோம். பிறகு எல்லோரும் குதிரையில் வர முடியாது என்பதாலும், பட்ஜெட் கட்டுப்படி ஆகாது என்பதாலும் ஒரு வண்டி பிடித்தோம். சுமோ என்று ஞாபகம். அடக்கி ஒடுக்கி உட்கார்ந்து கொண்டோம். வண்டி வாடகை ஆறாயிரம். அங்கு பனி மலையில் சறுக்கலாம் என்று கூறி பெரிய சப்பாத்துக்களையும் [முத்துலிங்கத்தை அதிகம் படித்தது தப்பாகிவிட்டது!] கால்களில் அணிந்து கொண்டோம். இரண்டு மணி ஆகி விட்டது. இப்போது கிளம்பி எத்தனை இடங்களை பார்க்க முடியுமோ தெரியவில்லை என்று வருத்தப்பட்டோம். வண்டியை கிளப்பிய டிரைவர் கொஞ்ச தூரத்தில் ஏதோ பேச ஆரம்பித்தார். வழியில் உள்ள சில புல் தரைகளை காட்டி இங்கு தான் அமிதாப் நடித்த "சத்தே பே சத்தா" எடுத்தார்கள் என்றார். அமிதாப் இப்போது தெரிவாரா என்பது போல் அந்த இடத்தை பார்ப்பதற்குள் இந்தப் பக்கம் ஒரு புல் தரையை காட்டி வேறு ஏதோ ஹிந்தி படத்தை சொன்னார். இப்படி நான்கு படத்தை சொல்லி முடிப்பதற்கும் நாங்கள் வந்து சேர வேண்டிய இடம் வந்து விட்டது. வழி நெடுக வண்டிகளின் அணிவரிசை. ஜே ஜே என்று இருந்தது. "வண்டி உள்ளே போக முடியாது என்று அங்கேயே இறக்கி விட்டு விட்டார். நீங்கள் பார்த்து விட்டு இங்கேயே வந்து நில்லுங்கள், நான் இங்கு தான் காத்திருப்பேன். ஒன்றும் அவசரமில்லை, போய் மெதுவாய் வாருங்கள்" என்றார். சரி என்று செங்குத்தான சாலையில் ஏற ஆரம்பித்தோம்.

பெற்றோர்களையும், குழந்தைகளையும் அங்கு உள்ள பல டீ கடைகளில் ஒன்றில் உட்கார வைத்து விட்டு, நான் என் மாமா மகனுடன் மலையை ஏற ஆரம்பித்தேன். சிறுவர்களுடன் எப்போதும் இந்த மாதிரி விஷயத்தில் மோதக் கூடாது. அவன் ஏதோ சமதரையில் நடப்பது போல் அந்த மலையில் அநாயசமாய் ஏறிக் கொண்டிருந்தான். நான் கண்ணு, காத்து, மூக்கு, நாக்கு என்று அனைத்தும் தள்ளி கொண்டு மூச்சு வாங்கிக் கொண்டு அவனுக்கு சரி சமமாய் ஏற முயற்சித்து கொண்டிருந்தேன். எந்த வெயிட்டும் இல்லாமல் இருந்தால் தான் மலை ஏற வசதி என்று என் பர்ஸ், கைபேசியையும் வைத்து விட்டு வந்து விட்டேன். ஒரு வழியாய் முக்கால்வாசி ஏறி விட்டேன். அவன் எனக்கு மேலே நின்று கொண்டிருந்தான். சரி அவன் அருகில் வந்து விட்டோம், சேர்ந்து கீழே போய் விடலாம் என்றால் பயபுள்ள மேலே இருந்து சறுக்க ஆரம்பித்து விட்டான். எனக்கும் மேலே இருந்த சறுக்க விருப்பமிருந்தாலும் ஆடை ஈரமாகிவிட்டால் வண்டியில் தருவை மடியில் வைத்துக் கொள்ள வசதியாய் இருக்காது என்று நினைத்தேன். அதனால் சரி அவன் போகிறான் என்று அதே இடத்தில் சற்று ஆசுவாசமாய் அமர்ந்து கொண்டேன். ஆஹா, என்ன ஒரு அருமையான இடம் அது. அந்த குளிர்ந்த சீதோஷணமும், குளிர் காற்றும், ஏறி வந்த களைப்பும், கண்ணுக்கு இதமான இயற்கையும் ஆஹா...சொன்னால் புரியாது! அப்படியே மெய் மறந்து ரசித்துக் கொண்டிருந்தேன்.


அப்போது அருகில் ஒரு குடும்பம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று ஏதோ பிக்னிக் மாதிரி அந்த மலையில் ஏறி வந்திருந்தார்கள். கையில் ஒரு பெரிய பேக். அதில் நிறைய சிப்ஸ், பிஸ்கட் என்று பலவகை ஸ்நாக்ஸ். மொக்கு மொக்கு என்று மொக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை பார்த்ததும், "ஆஹா, செல்போன் கணம்னு" நாம வச்சுட்டு வந்தோமே என்று என்னை நொந்து கொண்டேன். நான் ஏற்கனவே சொன்னது போல் மலை ஏறுவதற்கு அங்கு கைட் இருக்கிறார்கள். ஒரு சிறிய பலகை போன்ற ஒன்றை வைத்துக் கொண்டு மலை ஏற முடியாதவர்களை அதில் அமர வைத்து மேலே இழுத்துக் கொண்டு வருகிறார்கள். என்ன ஒரு கடினமான வேலை பாருங்கள். சரி என்று நான் எழுந்தேன். எங்கு கால் வைத்தாலும் வழுக்கியது. பலகையில் அமர்ந்து சறுக்கிச் செல்ல வேண்டியது தான் என்று முடிவெடுத்தேன். பேரம் பேசத் தொடங்கினேன். அவர்கள் நூற்றி ஐம்பது ரூபாய் சொன்னார்கள். நான் ஐம்பது ரூபாய் கேட்டேன். [என்ன  வேலையை நினைத்து பரிதாபப்பட்டாலும் பேரத்தில் நம்மல மிஞ்ச முடியுமா?] ஒருவன் ஒத்துக் கொண்டான். பலகையில் ஏறி ஜல்லென்று கீழே வந்தேன் என்றெல்லாம் சொல்ல முடியாது, பல தடைகளை கடந்து, ஆட்களை கடந்து, முட்டி மோதி பாதி தூரம் கீழே சேர்த்தான். அதற்கு மேல் கீழே வர முடியாது என்றான். என்னிடம் பணம் வேறு இல்லை, நல்ல வேளையாய் என் மாமா, என் தம்பி அங்கே இருந்தார்கள்.  இல்லை என்றால் அடுத்த க்ரூப்பை மேலே இழுத்துச் செல்ல என்னை உபயோகப்படுத்தியிருப்பான். அவர்களிடம் பணத்தை வாங்கி கொடுத்து விட்டு கீழே இறங்கினோம்.

சூடாய் டீ குடித்தோம். லேசாய் சூறக்காத்து அடிக்கத் தொடங்கியதும், மேகம் இருண்டது, கொஞ்சம் தூறல் போட்டது. குழந்தைகள் பயந்து அழ ஆரம்பித்தன. எங்கள் வண்டியை தேடினால் கிடைக்கவே இல்லை. நல்ல வேளையாய் வண்டியில் இருந்து இறங்கும்போது என் மாமாவிடம் அந்த டிரைவரின் கை பேசி எண்ணை வாங்கச் சொன்னேன். வாங்கியும் பயன் இல்லை. எத்தனை முறை அடித்தாலும் அவர் எடுக்கவே இல்லை. எடுத்தாலும் இடக்கு மடக்காய் பேசிக் கொண்டிருந்தார். ஒன்றுமே புரியவில்லை. திடீரென்று வேறொருவர் வந்து அவர் தான் என்னை அனுப்பினார்,  இந்த வண்டியில் ஏறுங்கள் என்றார். கடைசியில் தான் தெரிந்தது, அவர் எங்களை இறக்கி விட்டு விட்டு வண்டியுடன் அடுத்த டிரிப்புக்கு போய் விட்டார். வந்தால் அவர்களை அழைத்து வாருங்கள் என்று இன்னொருவரிடம் சொல்லி இருக்கிறார். அந்த வண்டியில் எங்களின் பை வேறு ஒன்று இருந்தது. அதெல்லாம் கீழே போய் எடுத்துக் கொள்ளலாம் என்றார் அந்த டிரைவர். சரி, அடுத்து எங்கே என்றதற்கு, இது தான் கடைசி இடம் என்று குண்டை தூக்கி போட்டார். கேட்டால், வழியில் அவர் காண்பித்த நான்கு புல்தரைகளும் நான்கு இடங்களாம்! முதலில் வண்டியை மலையின் அருகில் வரை கொண்டு செல்லவில்லை. திரும்பி வந்தால் வண்டி இல்லை. குழந்தைகளை வைத்துக் கொண்டு மழையில் கஷ்டப்படுகிறோம், போன் அடித்தால் எடுப்பதில்லை. சரி இன்னும் இடங்கள் இருக்கிறது என்று நினைத்தால், இது தான் கடைசி என்கிறார்கள். இதற்கு ஆறாயிரம். அவர்கள் வண்டியில் நாங்கள் பயணம் செய்தது ஒரு அரைமணி நேரம் கூட இருக்காது! "அட நாதாரிகளா!" என்று எரிச்சலாய் இருந்தது.



எங்கே புறப்பட்டோமோ அங்கே வந்து சேர்ந்ததும், யாரும் அவர்களை எதுவும் கேட்க முடியவில்லை. பணத்தை அழுது விட்டு, சப்பாத்துக்களை கழட்டிக் கொடுத்து விட்டு, அதற்கும் பணத்தை கட்டி விட்டு, சன்னியிடம்  சரண் அடைந்தோம். ஒவ்வொரு தரமும் சன்னி நொந்து போய் திரும்பும் எங்களை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்! "இவர்களை ஒன்றும் செய்ய முடியாது. இந்த டயத்தில் இவர்கள் சம்பாதித்தால் தான் உண்டு. வருடம் முழவதுக்கும் சேர்த்து இப்போதே சம்பாதித்து விடுகிறார்கள்!" என்று சன்னி அவர்களுக்கு வக்காலத்து வாங்கினான். ஸ்ரீநகர் நோக்கி வண்டி புறப்பட்டது.

காஷ்மீர் பூமியின் சொர்க்கம் தான், ஆனால் மனிதன் எங்கு இருந்தாலும்...????

சுற்றுவோம்...
மறுநாள் பஹல்காமில் இருந்து ஸ்ரீ நகர் கிளம்ப வேண்டும். சன்னி முன் இரவே, "நாளை மெதுவாய் கிளம்பினால் போதும், நன்றாய் ரெஸ்ட் எடுங்கள்!" என்று சொல்லி விட்டான். ஆற அமர எழுந்து, குளிரை அனுபவித்துக் கொண்டே, குளித்து முடித்து, காலை உணவை முடித்துக் கொண்டு சூடாய் தேநீர் ஒன்றை கையில் எடுத்து சுவைக்கும் போது அருகில் உள்ள பள்ளியில் மாணவிகள் "பிரேயர் சாங்" பாடிக் கொண்டிருந்தார்கள். அது ஒரு சிறிய அரசு பள்ளி. தேநீரி நாவுக்கும், குளிர் உடலுக்கும், அவர்களின் குரல் செவிக்கும் இன்பம் சேர்த்தது. தூரத்தில் தெரியும் பனி மலையை பார்த்துக் கொண்டே அவர்களின் பாடலை மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். சூரியனின் தங்க நிறம் அந்த வெண்பனியில் பட்டுத் தெறிக்கும் காட்சி மனதை ஏதோ செய்தது.


அறைக்கு வந்ததும் ஒரு பிரளயம் காத்திருந்தது. ஒரே நாளில் பெட்டியில் உள்ள அத்தனையும் வெளியில் தான் கிடந்தது. அதை எல்லாம் எடுத்து ஒரு வழியாய் ஒடுக்கி, அடுக்கி வெளியே வந்தோம். வண்டி ஸ்ரீநகர் நோக்கி கிளம்பியது. வழியெங்கும் வனப்பு. ஊருடன் ஓடும் லிட்டர் (liddar) ஆறு. ஆங்காங்கே பள்ளத்தாக்குகள், மலை முகடுகள், வானுயர்ந்த மரங்கள், பனி மலைகள் என்று நாள் வெகு உற்சாகமாய் இருந்தது. நான் சன்னியிடம் கேட்டுக் கொண்டதுபடி ஒரு நல்ல இடம் வந்ததும் "இறங்கி பார்த்து விட்டு வாருங்கள்!" என்று அனுப்பி வைத்தான். அந்த இடத்தில் சாலையை ஒட்டி சலசலக்கும் ஆறு, சுற்றி மலைகள், குளிர்ந்த காற்று, தூரத்தில் தெரியும் பனி மலை என்று ரம்மியமாய் இருந்தது. நான் இப்படி ஒரு ஆற்றில் குளித்து விட வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் தண்ணீரில் கால் வைத்தாலே கால் மறத்துப் போகும் அளவுக்கு அது குளிர்ந்திருந்தது. கை காலை நனைத்துக் கொண்டு, சிறிது குழந்தைகளுடன் விளையாடி விட்டு வண்டி ஏறினோம்.







பஹல்காமில் இருந்து ஸ்ரீநகர் கிட்டத்தட்ட இரண்டு மணி நேர பயணம் தான். அன்று வேறு எதுவும் ப்ளான் இல்லாததால், சன்னி மெதுவாய் ஆற அமர கதை சொல்லியபடி வண்டி ஒட்டிக் கொண்டிருந்தான். உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஜம்மு காஷ்மீரில் பிறக்காத ஒருவனால் அங்கு வீடோ, நிலமோ வாங்க முடியாதாம்! அப்படி ஒரு நடைமுறை அங்கே இருக்கிறது. வெளி மாநிலத்தவர் வாங்க வேண்டும் என்றாலும், அந்த வீடு/நிலம் ஜம்மு காஷ்மீரில் பிறந்த ஒருவனின் பெயரில் தான் இருக்க வேண்டுமாம். சன்னி இதை சொன்னதும், "அது தான் இன்னும் இந்த இடம் சொர்க்கமா இருக்கு!" இல்லைன்னா நம்ம மக்கள் "ஸ்னோ வியூ", "ரிவர் வியூ", "வேலி வியூ" அபார்ட்மென்ட்ஸ் என்று பலவகையில் கட்டி இடத்தை நாறடித்திருப்பார்களே என்று எண்ணிக் கொண்டேன்.

வழியில் ஆப்பிள் தோட்டம் ஒன்றில் இறங்கினோம். ஆப்பிள் உண்மையில் அந்த மரத்தில் இருந்து தான் வருகிறது என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு கிளம்பினோம்.



பிறகு காஷ்மீரின் பிரபலமான "ட்ரை ஃப்ரூட்ஸ்" ["உளர் பழங்கள்/கொட்டைகள்" என்று சொல்லலாமா?] வாங்க ஒரு கடையில் இறங்கினோம். பயங்கர காசு. பகல் கொள்ளை. அங்கே நம் ஊர் புளியம்பழம் மாதிரி ஒன்று வாங்கினேன். பார்ப்பதற்கு கொழ கொழவென்று இருக்கிறது. புளிப்பும், இனிப்பும் கலந்து ஒரு வித்தியாசமான சுவை. அதன் பிறகு வண்டி ஒரு சிதிலமடைந்த கோட்டை ஒன்றில் நின்றது. ஏதோ நூற்றாண்டில், ஏதோ ஒரு மன்னன் கட்டிய கோட்டை. சன்னி ஏதோ சொன்னான். நான் தருவுக்கு டயப்பர், பால், பவுடர் என்று எடுத்துக் கொண்டிருந்ததில் கவனம் செலுத்த முடியவில்லை. அந்தக் கோட்டையில் இருந்த ஒரு கைடு, சிதிலமடைந்த ஒரு தூணில் ஒரு உருவத்தை காட்டி "இவர் தான் உங்க ஊர் ரங்கநாதர்" என்றார். "அவர் எங்க இங்கே வந்தார்? ஒரு வேலை தேனிலவுக்கா இருக்குமோ?" என்று எண்ணிக் கொண்டே, "ஆமாம், அதே முக ஜாடை!" என்று சொல்லி விட்டு வந்து விட்டேன். உங்களுக்குத் தெரிகிறதா?



பிறகு ஸ்ரீநகரை நெருங்கும்போது வழியல் ஒரு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் மாதிரி ஒன்று வருகிறது. சாலையின் இருபுறங்களிலும் கோலிகளும், தோணிகளும் வரவேற்கிறார்கள். ஆமாம், அது தான் ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் பேட் தயாரிக்கும் இடம். அந்த ஊரின் பெயர் சங்காம். ஒரு கடையில் இங்கே "பேட் பாருங்கள்!" என்று சன்னி இறக்கி விட்டான். கீழே தொழிற்சாலை, மேலே ஷோரூம்! தொழிற்சாலை என்றால் பிரம்மாண்டமாக எதையும் கற்பனை செய்து கொள்ளாதீர்கள். ஒரு பத்துக்கு பன்னண்டு அறை தான். அப்படி இரண்டு அறைகள். ஒரு அறையில் எந்த ஸ்டிக்கரும் ஓட்டாமல் சில பேட்டுகள் அம்மணமாய் நின்றன. அடுத்த அறையில் ஒருவர் மெஷினில் ஒரு கட்டையை விட்டு ராவிக் கொண்டிருந்தார். அது பேட்டாய் மாறிக் கொண்டிருந்தது. என் மாமா பையன் அடம் பிடித்து ஒரு பேட் வாங்கிக் கொண்டான். ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்று நினைக்கிறேன். சன்னி ஒன்றை இலவசமாக வாங்கி வந்தான்! சண்டாள சர்தார்! 





ஒரு வழியாய் வண்டி ஸ்ரீநகரை அடைந்தது. ஒரு பெரிய ஹோட்டல் அருகில் வண்டியை நிறுத்தி அதோ அங்கு தெரியும் அந்த சின்ன ஓட்டலில் சாப்பிட்டு வாருங்கள் என்று சன்னி எங்களை அனுப்பி வைத்தான். வாசலில் மசாலா தோசா என்று எழுதி இருந்தது. எச்சிலை துடைத்துக் கொண்டு உள்ளே போய் கொட்டிக் கொண்டோம். வடநாட்டில் மசாலா தோசை எப்படி இருக்குமோ அப்படியே இருந்தது. என் அப்பாவை அர்த்த ராத்திரியில் தூக்கத்தில் இருந்து எழுப்பி "டீ குடிக்கிறீங்களா?" என்றாலும் குடிப்பார். அப்படிப்பட்டவர் சாப்பிட்டவுடன் சும்மா இருப்பாரா? அவரை அழைத்துக் கொண்டு எதிரில் உள்ள கடையில் டீ வாங்கிக் கொடுத்தேன். நம் ஊர் மாதிரி இல்லை. யாராவது வந்து கேட்டால் தான் அடுப்பில் பாத்திரத்தையே வைக்கிறான் மனுஷன். எதிர் கடையில் வேலை பார்க்கும் ஒருவன் அங்கு வந்து நின்று கொண்டு "எங்கிருந்து வருகிறீர்கள்?" என்றான். நான் "சென்னை" என்றேன். "ஒ, கொலவெறி, கொலவெறி!" என்றான்.  அடுத்த நொடியே தென்னிந்தியர்கள் அருமையான மனிதர்கள் என்றான். என்ன ஒரு நகைமுரண்!

வண்டி இந்து இடுக்கில் புகுந்து நாங்கள் தங்க வேண்டிய "ராயல் ஜன்னத்" [ஜன்னத் என்றால் சொர்க்கம்] ரிசார்ட்டுக்கு வந்தது. அதை ரிசார்ட் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒரு இரண்டு மாடி கொண்ட ஒரு பெரிய வீடு. முன்னால் சிறிய தோட்டம். அவ்வளவு தான். அந்த ரிசார்ட்டின் எதிரே நம் கூவம் மாதிரி அழுக்காய் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருந்தது.


மணி அப்போதே நாலு, ஐந்து ஆகிவிட்டது. நல்ல ஒரு தேநீரை பருகினோம். சன்னி என் மாமாவிடம், பாதுகாப்பு கருதி, "பெண்கள் இங்கேயே இருக்கட்டும், நீங்கள் வேண்டுமென்றால் அருகில் நடந்து போய் வாருங்கள்!" என்று சொல்லி இருந்தான். நாங்களும் "தீவிரவாதிகள் இங்கு ஜாஸ்தி, நீங்கள் இருங்கள்!" என்று சால்ஜாப்பு சொல்லி விட்டு நான், என் தம்பி, மாமா மூவர் மட்டும் வெளியே கிளம்பினோம். அரவிந்தசாமியை கடத்தியவர்கள் எங்கள் யாரையும் சீண்டக் கூட இல்லை . ஆற்றை கடந்து அந்தப் பக்கம் செல்ல ஒரு பாலம் இருந்தது. அதைக் கடந்ததும் கடைத்தெரு வந்து விட்டது. சிறிது தூரம் நடந்ததும் நாங்கள் சாப்பிட்ட இடம் வந்து விட்டது. அப்படியே நடந்து கொண்டிருந்தோம். "தால் லேக்கை" பார்த்து வரலாம் என்று போய் கொண்டிருந்தோம். ஒரு அறை மணி நேர நடையில் தால் லேக் கண்ணில் பட்டது. சிறிது நேரம் அங்கு அமர்ந்து விட்டு இருப்பிடம் வந்து சேர்ந்தோம்.

திரும்பி வந்தவுடன் என் மாமா பையன் தான் வாங்கிய புதிய பெட்டில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று அடம்பிடித்தான். நானும் கிரிக்கெட் ஆடி ரொம்ப நாள் ஆகி விட்டது. "சரி வாடா!" என்று அந்த ரிசார்ட்டின் கார் பார்கிங்கில் விளையாடினோம். பேசாமல் கிரிக்கெட்டையே தேசிய விளையாட்டாக மாற்றி விடலாம். நாங்கள் விளையாடத் தொடங்கிய பத்து நொடிகளில், அங்கு வேலை செய்து கொண்டிருந்த நாலு பேர் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். அப்படி ஒரு உற்சாகமான ஆட்டம் பல நாட்களுக்குப் பிறகு. நான் நினைத்ததை விட நன்றாகவே ஆடினேன். இருட்டத் தொடங்கியதும் வேர்க்க விறுவிறுக்க ஆட்டத்தை முடித்துக் கொண்டு, இரவுச் சாப்பாடு சாப்பிட்டு படுத்தோம். மறுநாள் சோன்மார்க்!

சுற்றுவோம்...