அமெரிக்காவிற்கு வந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்தை பிடித்து தள்ளியாகி விட்டது. அந்த இயந்திர சக்கரத்தினூடே தலையைக் கொடுத்து பயணப்பட ஆரம்பித்தாகிவிட்டது. வங்கிக் கணக்கு நேர்த்தியாகிவிட்டது. சமூக பாதுகாப்பு எண் [சோசியல் செக்யுரிட்டி நம்பரை எப்படி சொல்வது?] வந்தாகிவிட்டது. அபார்ட்மென்ட் செட் ஆகி விட்டது. பாத் டப்பிற்கு ஷவர் கர்ட்டெயின் வாங்கியாகி விட்டது. [இதெல்லாம் ரொம்ப முக்கியமா என்பவர்களுக்கு கீழே விளக்கியிருக்கிறேன்] பிஎஸ் என் எல்லின் தயவில் கொஞ்சம் ஃபோட்டோ, கொஞ்சம் படம் என்றில்லாமல் யு ட்யுப் வீடியோ சரளமாய் வருகிறது. குக்கர் சத்தம் போட்டால் ஸ்மோக் டிடெக்டர் அலறுகிறது! வெஜிடெபிள் கட்டரால் சற்று விசிறி விட்டால் சாந்தமாகி விடுகிறது!

காம்ப்பவுண்ட் சுவரே இல்லாத என் அபார்ட்மென்டின் ஒரு எல்லையிலிருந்து ஏறி அங்கு போகும் ஒரு சின்ன ரோட்டை கடந்தால், காம்ப்பவுண்ட் சுவரே இல்லாத என் அலுவலகத்தின் பின் எல்லையை அடைந்து விடலாம்! எவ்வளவு கஷ்டம் பாருங்கள். நானும் பொறுப்பாய் காலை எட்டரைக்கெல்லாம் அலுவலகத்தைல் ஆஜராகி, ஆஹா இன்றும் நாம் தான் முதலில் வந்தோம் என்று பெருமை பட்டுக் கொண்டேன். பிறகு தான் தெரிந்தது, இங்கு பாதி பேர் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பவர்கள் என்று....எப்போதாவது 2, 3 தலைகள் தென்படுகிறது. மற்ற நாட்களிலெல்லாம் தனிக்காட்டு ராஜா தான்! ரோட்டில் தான் ஆள் நடமாட்டம் இல்லையென்றால் அலுவலகத்திலுமா? அட போங்கப்பா....

இரவு எட்டு எட்டரை வரை வெளிச்சமாகவே இருக்கிறது. வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து, அமெரிக்கா வந்தால் தான் வார நாட்களில் மாலை என்ற ஒரு பொழுதே அனுபவமாகிறது. என் எட்டு வருட மென்பொருள் வரலாற்றில் அதிகம் போனால் வார நாட்களில் 50 மாலைகளை பார்த்திருப்பேன். எப்போதாவது 6 மணிக்கு அலுவலகத்தை விட்டு வெளியே வந்து விட்டால் போதும், ஏதோ ஆயுள் முழுதும் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டு இன்று விடுதலை ஆவதைப் போல் இருக்கும். வெளியே வந்தவுடன் வானத்தையும், அந்திச் சூரியனையும் சற்று நேரம் பார்த்துக் கொண்டே நிற்பேன். அமெரிக்காவில் இதற்கு நேர் எதிர். 5 மணிக்கு பெட்டையை கட்டி விடுகிறார்கள். கலகலவென்று அலுவலகம் இருந்தாலே, சே, எவ்வளவு நேரம் தான் இங்கேயே உட்கார்ந்திருப்பது? வாழ்க்கையே இவ்வளவு தானா என்று தோன்றும், இங்கு என் பக்கத்தில் சுமார் ஒரு 10, 15 இருக்கைகளில் நான் ஒருவன் தான் இருக்கிறேன். எனக்கு எப்படி இருக்கும்? ஏதோ ஒரு ஞாயிற்றுக் கிழமை தேவையில்லாமல் அலுவலகம் வந்து விட்டதை போல் உணர்கிறேன். அதனால் நானும் அதிகபட்சம் 6 மணிக்கு [என்ன இருந்தாலும் இந்தியர்கள், 6 மணிக்கு முன்னாடி போனா உறுத்துதில்லை...]கிளம்பி விடுகிறேன். கேட்க நாதியில்லாததால், என் கூட்டில் போய் ஒடுங்கி விடுவேன், வேறு என்ன செய்ய?

இங்கு யாரும் நடப்பதில்லை. ரோட்டில் ஆள் நடமாட்டமே இல்லை. நல்ல ஒரு கூட்டமான இடத்திலிருந்து வந்ததால் அது ஒரு வித எரிச்சலை தருகிறது. எங்கே மக்கள் மக்கள் என்று மனம் அலைபாய்கிறது. இதே அனுபவம் எனக்கு சண்டிகரிலும் கிடைத்தது. ரோட்டில் அதிகம் ஆள் நடமாட்டமே இருக்காது. என்ன ஊர் இது என்று தோன்றும். அங்கு ரோஸ் ஃபெஸ்டிவல் அன்று தான் கூட்டத்தையே பார்த்தேன். சண்டிகார் என்றால் சர்தார்னிகள் நிறைந்திருக்கும் நகரம். [நம்ம சிம்ரன் லூதியானா பொண்ணு], அவங்கள்லாம் கலகலவென்று வெளியில் தெருவில் நடமாடினால் தானே மனதுக்கு சற்று ஆறுதலாய் இருக்கும்....

கடை கன்னிகள் அருகில் காரை பார்க் செய்து விட்டு கடைக்குள் நடப்பது தான் அமெரிக்கர்களின் நடை. [வீட்டில் த்ரட் மில்லில் எகிறி குதித்து ஓடிக் கொண்டிருப்பதை தவிர்த்து] எனக்கு ரஜினியின் ஞாபகம் வருகிறது. அவரும் இப்படித் தானே இருப்பார், வீட்டிலிருந்து இறங்கியதும் கார், செல்லும் இடம் வந்ததும் இறங்கி உள்ளே ஓடி விடுவார். அதை வைத்து பார்க்கும் போது ஒவ்வொரு அமெரிக்கனும், ஒரு ரஜினிகாந்த் தான்! [இதையே இந்த பதிவுக்கு தலைப்பா வச்சுர்றேன், கூட்டம் கூடிடும்!]

திடீரென்று என் சிந்தனை சிங்கத்தை [எவ்வளவு நாள் தான் குதிரைன்னே சொல்றது? ஆமா சீனாவுக்கு, சீனா தானே சரியா வருது, ஏன் குதிரை உள்ளே கொண்டு வந்தாங்க?...] தட்டி விட்டேன். அதாவது, இங்கு இடம் மிக மிக அதிகமாக இருக்கிறது, மக்கள் மிக மிக குறைவாக இருக்கிறார்கள். இந்தியாவில் இடம் மிக மிக குறைவாக இருக்கிறது, மக்கள் மிக மிக அதிகமாக இருக்கிறார்கள். இதுக்கு நான் என்ன சொல்றேன்னா, ஒரு காண்ட்ராக்ட் மாதிரி போட்டு, இங்கு இருப்பவர்களை எல்லாம் அங்கு ஷிஃப்ட் செய்து விட்டு, அங்கு இருப்பவர்களை இங்கு கொண்டு வந்து விட்டால் என்ன, இவங்க அங்கே போய் நம்ம இந்தியாவை அமெரிக்காவா மாத்திர மாட்டாங்க? என்று தோன்றியது. [இதைச் சொன்னா நம்மளை கிறுக்கன்னு சொல்றாங்க...] இதிலிருந்து என்ன தெரியுது? ஒருத்தன் தனியா இருக்கக் கூடாது, அப்படியே இருந்தாலும், அவன் தமிழனா இருக்கக் கூடாது, அப்படியே இருந்தாலும், அவனுக்கு ஒரு வலைத்தளம் இருக்கக் கூடாதுன்னு புரியுதா? விதி வலியது...

ஷவர் கர்ட்டெயின்:
இது இல்லைன்னா நீங்க குளிக்கவே முடியாது. பாத்ரூம்ல நம்ம ஊர் மாதிரி தண்ணி போக ஓட்டை எல்லாம் இருக்காது, நீங்க காலால வரட்டு வரட்டுன்னு தண்ணியெல்லாம் அதுல விட்றதுக்கு...ஒரு பாத் டப் இருக்கும், அதுக்குள்ள போய் நின்னுட்டு ஷவர் தொறந்து விட்டுக்கணும், அதுக்கு முன்னாடி இந்த கர்ட்டெயினை மூடிக்கனும் [ஒரு கூண்டு மாதிரி ஆயிடும்! குயிலைப் புடிச்சி கூண்டிலடைச்சி பாட்டும், கெணத்தடியில வாளியில மொன்டு மொன்டு ஓடி ஓடி குளிச்சதெல்லாம் ஞாபகம் வந்து படுத்தும்!] இல்லைன்னா தண்ணி தெறிச்சி பாத்ரூம் பூரா சொத சொதன்னு ஆயிடாது...அதனால...நம்ம இங்கிலீஷ் படத்துல எல்லாம் பாத்துருப்போம், ஒரு அழகான ஹீரொயின் ஒரு ட்ரான்ஸ்பெரன்டான ஷவர் கர்ட்டெயினை மூடிட்டு ட்ரஸ் எல்லாம் கழட்டிட்டு குளிக்கப் போவா, [ஹூம்....] அப்ப தான் அந்த கொலைகாரப் பாவி வந்து அவ கழுத்துலையே குத்து குத்துன்னு குத்துவான்...அப்புறம் அந்த டப் ஓட்டை வழியா செவப்பு கலர் தண்ணியை க்ளோஸப்ல காட்டுவானுங்க...அட போங்கப்பா...

மொக்கை பதிவு தான்! மூளைக்குத் தெரியுது, ஆனா இந்த மனசுக்குத் தெரியலையே....யார்ட்டயாவது பொலம்பனும் பாருங்க...

பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே!!!

இந்த வரி தான் எனக்கு இப்போது மனதெங்கும் வியாபித்திருக்கிறது! ஏன் என்று நீங்கள் கேட்டு நான் காரணம் சொன்னால் உங்களில் சிலர் என்னை அடிக்க வரக்கூடும். காரணம் என்னவென்றால், அலுவலகத்தில் அடம் பிடித்து அவசர அவசரமாய் ஒரு அமெரிக்கப் பயணம்! 3 வருடத்திற்கு முன் நான் இங்கு வந்த மூன்று மாதங்களில் சுற்றிப் பார்த்தது 9 மாநிலங்கள். சத்தியமாய் டூரிஸ்ட் விசாவில் வரவில்லை. வேலை செய்யத் தான் வந்தேன். இனிமேல் யார் இவ்வளவு தூரம் வருவது என்ற நினைப்பில் ஒரேடியாய் சுற்றிப் பார்த்து விட்டேன். என்னுடைய அமெரிக்க கட்டுரைகளை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். மறந்தவர்கள் தலையில் கொட்டிக் கொண்டே [உங்க தலையிலங்கானும்] இங்கு க்ளிக்கவும். என்ன செய்வது விதி வலியது என்பதை விட வீடு கட்ட வாங்கிய கடன் வலியதாய் இருக்கிறது. இந்த அழகில் ஒரு நாள் பச்சை கலர் சட்டை, ஒரு நாள் மஞ்சள் கலர் சட்டை போட்டவனை எல்லாம் வேலைய விட்டு தூக்கு என்ற ரேஞ்சில் ஐ.டி. உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. [ஆடிய ஆட்டம் என்ன?] காற்றுள்ள போது தானே தூற்றிக் கொள்ள வேண்டும் என்று கிளம்பி வந்தாகிவிட்டது!

போன முறை குறுகிய கால விசாவில் வந்ததால் ஹாயாக ஹோட்டலில் தங்கி விட்டு ஊர் சுற்ற சரியாய் இருந்தது. இந்த முறை கொஞ்சம் நீண்ட கால விசாவில் வந்துள்ளதால் மண்டை காய்கிறது. அமெரிக்கா ஒரு பெரிய இயந்திரம். மாடர்ன் டைம்ஸில் சார்லி சாப்ளின் நட்டை திருப்பிக் கொண்டே அந்த சக்கரத்தில் மாட்டிக் கொள்வாரே, அது போல்! நீங்கள் அந்த இயந்திர கதியில் எல்லோரைப் போல சகஜமாய் சுற்ற ஆரம்பிப்பது வரை நரகம்! அதிலும் நீங்கள் அந்த இடத்தில் தனியாய் மாட்டிக் கொண்டால் அவ்வளவு தான், அன்பே சிவம் மாதவன் மாதிரி ஜோக் கேட்டால் கூட அழுகையாய் வரும்! சோ, நீங்கள் என்னை இப்போது பார்த்தால் அன்பே சிவம் மாதவனை பார்க்கத் தேவையில்லை.

தற்சமயம் நான் தனித்து இருப்பது க்ளென் ஆலென், [ரிச்மன்ட் அருகில்] விர்ஜினியா. இந்த இடத்திற்கு இன்னொரு பெயரும் இருக்கிறதாம். காதலர்களின் சொர்க்கம் என்று என்னுடன் வந்த ஒரு மேனெஜர் சொல்கிறார். எப்படி இருக்கிறது பாருங்கள்! எல்லா மானேஜர்களும் சேர்ந்து ஒரு இளம் காதலர்களை பிரித்து [சந்தேகமே வேண்டாம்! என்னையும் என் மனைவியையும் சொன்னேன்] குண்டு கட்டாய் என்னை மட்டும் பார்சல் செய்து அனுப்பி விட்டு இப்படி குசும்பு செய்வது அழகாமோ?

தமிழ் கூறும் நல்லுலகில் நிறைய பேர் இங்கு இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். நல்ல சமைக்கக் கூடிய, ஒரு பெரிய காரில் தன்னந்தனியே போய் கொண்டிருக்கும் [ரோட்டில் நான் மட்டும் நடக்க பயம்மா இருக்குப்பா!] ஒரு பேச்சிலர் என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். இந்த வாரம் நான் ஒரு புது வீட்டுக்கு சாராயம் காய்ச்சி கூடியேறப் போகிறேன், சாமான் செட்டு தூக்குவதற்கு, என்னை ஊர் சுற்றிக் காட்டுவதற்கும், வால் மார்ட் கூட்டிப் போவதற்கும், எந்த செல்ஃபோன் வாங்கலாம், எந்த இன்டர்நெட் கனெக்ஷன் வாங்கலாம் என்று வழி காட்டுவதற்கும், பணம் பத்தவில்லை என்றால் க்ரடிட் கார்ட் தேய்க்கவும் செளகரியமாய் இருக்கும். உனக்கு நான் ஏன் செய்யனும்? எக்கேடு கெட்டும் போ என்பவர்கள் மூடிக் கொண்டு போங்கள்![ஐய்யோ, சாருவை நிறைய படித்தது தப்பாகி விட்டதே!]