இன்று மதியம் வைகையில் அம்மா அப்பாவை மதுரைக்கு ரயில் ஏற்றி விட தாம்பரம் சென்றிருந்தேன். காரை [நான் கார் வாங்கி விட்டேன் என்று அறிக!] நிறுத்தி விட்டு, சக்கரம் வைத்த பெட்டியை இழுத்துக் கொண்டு ரயில் நிலையத்தில் நுழைந்தேன். படி ஒரு பக்கம், சறுக்கல் ஒரு பக்கம் இருந்தது. பெட்டி கனமாக இருந்ததால், படி பக்கம் செல்லாமல் சறுக்கல் வழியாய் இழுத்துக் கொண்டு சென்று விடலாம் என்று நினைத்தேன். அருகில் சென்றவுடன் அந்த சறுக்கல் எச்சி துப்பவும், சிறுநீர் கழிக்கவும் அமைக்கப்பட்டது என்று அறிந்தேன். பெட்டியை தூக்கிக் கொண்டு படியில் ஏறினேன்.

ஊருக்குச் செல்லும் ரயில்கள் என்ன என்ன? எந்த இடத்தில் வந்து நிற்கும்? எந்த வித அறிவிப்பு பலகையும் என் கண்ணில் படவில்லை. சரி, எட்டு அல்லது ஒன்பதாவது நடைமேடையில் தானே வரும், தெரிந்தது தானே என்று படியில் ஏறினேன். மடியில் இல்லை என்றாலும், கையில் கணம் வேறு! ஏறி முடிந்ததும் ஒரு குன்றின் மீதே ஏறிவிட்ட அனுபவம்ரயில் நிலையங்களில் உள்ள படிகளுக்கு பயந்தே பலர் ரயிலில் பிரயாணிப்பதில்லை. நம் கனத்தை தூக்கிக் கொண்டு ஏறுவதே கொடுமை, இதில் பெட்டி படுக்கை வேறு!! என்னை போன்ற டி யில் வேலை செய்பவர்களும், வயதானவர்களும் பாவம் தானே? மாற்றுத் திறனாளிகள் எப்படி ரயில் பிரயாணம் செய்வார்கள் என்றே தெரியவில்லை. அதற்கு ஒரு ஏற்பாடும் ரயில் நிலையத்தில் நான் பார்க்கவில்லை. [என் கண்ணில் தான் கோளாறா?] மாடியில் ஏறி பார்த்தால் ஒரு நீண்ட நடைபாதை. நாங்கள் ஒன்னாவது நடைமேடைக்கு அருகில் நிற்கிறோம், எங்கள் வண்டி ஒன்பதாவது நடை மேடைக்கு வரும். சரி இனி கவலையில்லை, பெட்டியை தள்ளிக் கொண்டே செல்லலாம் என்று நினைத்து இழுத்தேன். கர கரவென்று ஒரு சத்தம். என்னடா என்று பார்த்தால், அந்த நடைபாதைக்கு இடைவெளியுடன் கூடிய அழகான தரை அமைத்திருக்கிறார்கள். அதன் அமைப்பு ஒரே சீராய் இல்லாததால் அப்படி ஒரு சத்தம். கடந்து செல்பவர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே போனார்கள். என் நேரம், அந்த நேரத்தில் வேறு எவனும் அப்படி ஒரு பெட்டியுடன் தள்ளிக் கொண்டு வரவில்லை. இல்லையென்றால் எல்லோருக்கும் கரகர ஒழி பழகி இருக்கும். கூட்டத்தோடு கூட்டமாய் நானும் சென்றிருப்பேன். மூணாவது நடைமேடை அருகில் வந்ததும், என்னாலேயே அந்த சத்தத்தை தாங்க முடியவில்லை. கையில் தூக்கிக் கொண்டேன்.

வெயில் அதிகம் என்றாலும், அந்த உயரத்தில் நல்ல காற்று வந்தது. இதமாய் இருந்தது. ஒரு பரதேசி மாதிரி ஒரு நாள் இந்த நடைபாதையில் துண்டு விரித்து படுத்தால் என்ன என்று கூட தோன்றியது. என்ன ஒரு கூட்டம், என்ன ஒரு அவசரம். எத்தனை முகங்கள், எத்தனை வாழ்க்கை. எழுத்தாளனாய் [யாரு, நீயா?] இருப்பது இந்த மாதிரி சமயத்தில் உதவும். எல்லோரையும் ஆராய்ந்து கொண்டு, எதையாவது கற்பனை செய்து கொண்டே நடந்தால், பாதையின் தூரமும், கையில் பாரமும் தெரியாது.

அறிவிப்பாளர் விடாமல் "இரண்டாம் நடைமேடையில் உள்ள வண்டி ஷெட்டுக்கு செல்லும் என்று கூவிக் கொண்டிருந்தார்" வண்டியில் அமர்ந்த எத்தனை பேர் திட்டிக் கொண்டே இறங்கினார்களோ! ஒரு வழியாய் ஒன்பதாவது நடை மேடைக்கு அருகில் வந்தேன். நடைமேடைக்குச் செல்ல படியில் இறங்கலாம் என்று பார்த்தால் நந்தி மாதிரி சில பயணிகள் அமர்ந்து ஊர் கதை பேசிக் கொண்டிருந்தார்கள். அது எப்படி சரியாய் படியின் நடுவில் இடம் பிடிக்கிறார்கள் என்று புரியவில்லை. "வாழு, வாழவிடு" என்ற பழமொழி நம் மக்களின் மனநிலையை வைத்து தான் எழுதி இருப்பார்கள் போலிருக்கிறது.

ஒரு வழியாய் படியில் இறங்கி நடைமேடையில் கால் வைத்ததும் ஒரு பலகையில் "நடைமேடை சீட்டை வாங்கி வாருங்கள்" என்று ஒரு அறிவிப்பு. நான் ரயில் நிலையத்தில் உள்ளே நுழைந்து ஒரு பலகை தேடினேனே, அங்கு இருக்க்க வேண்டிய பலகை இது! ஒன்றரை கிலோ மீட்டர் நடந்த பிறகு வைத்திருக்கிறார்கள். சரி இங்காவது வைத்திருக்கிறார்களே என்று என்னை நானே நொந்து கொண்டு எங்கள் [ரயில்] பெட்டி எங்கு வரும் என்ற பலகையை நோக்கினேன். இது கண்டிப்பாய் முற்ஃபி விதி தான். முற்ஃபி விதி தெரியாதவர்கள இங்கு பார்க்கவும்

"நம்முடையது எந்த பெட்டியை இருந்தாலும், அது நடைமேடையின் கடைசியில் தான் வரும்!" எங்கள் பெட்டி "D2 ", அது பதினேழாம் என் பலகைக்கு அருகில் வரும் என்று போட்டிருந்தார்கள். நாங்கள் ஒன்றாம் எண் பலகையின் அருகில் கூட இல்லை! நான் என் பெற்றோர்களை அதை நோக்கி நடக்கச் சொல்லி விட்டு, நடைமேடை சீட்டு வாங்கி வரக் கிளம்பினேன். இங்கு இன்னொரு முற்ஃபி விதி இருக்கிறது.

"நாம் என்று நடைமேடை சீட்டு வாங்கவில்லையோ, அன்று பரிசோதகர் கண்டிப்பாய் வருவார்!"

புத்திசாலித்தனமாய் முன் பக்க நுழைவாயில் கவுண்டருக்கு செல்லாமல் பின் பக்க நுழைவாயில் கவுண்டருக்கு சென்றேன். கவுண்டருக்கு வெளியே இரண்டு வரிசை நின்றிருந்தது. வெள்ளிக் கிழமை முற்பகல், ஒரு மணிக்கு இத்தனை கூட்டம்! நம் நாட்டில் மக்கள் எங்கேயாவது போய் கொண்டே இருக்கிறார்களா? வேலை வெட்டியே இல்லையா என்று தோன்றியது. எத்தனையோ முறை ரயில் நிலையம் சென்றிருந்தாலும், நடைமேடை சீட்டு எடுத்திருந்தாலும், வரிசையில் முன்னாள் இருப்பவரிடம் ஒரு கேள்வியாவது கேட்க வேண்டி இருக்கிறது! கேட்டேன், சார், பிளாட்பாரம் டிக்கட்டுக்கு எந்த க்யு? அவர் அதாரட்டி மாதிரி பலருக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லாத்துக்கும் ஒரே க்யு தான் என்றார் என்னிடம். அமைதியாய் நின்றேன். இருந்தும், ஒரு சந்தேகம். ஏனென்றால் அரை மணிநேரம் க்யூவில் நின்று விட்டு கவுண்டரில் பணம் கொடுத்தால் அது பக்கத்து கவுண்டர் என்று இரக்கமே இல்லாமல் திருப்பி அனுப்பி விடுவதில் நம் ஆட்கள் வல்லவர்கள். சுற்றி முற்றி பார்த்ததில் "Any Ticket Any Counter" என்று ஒரு வாசகம் கண்ணில் பட்டது. அப்பாடா, இவர் சொன்னது சரி தான்! ஆனால் "Any Ticket Any Counter" என்னும் அந்த முறை எத்தனை சரி என்று தெரியவில்லை. ஊருக்கு போக டிக்கெட் எடுப்பவன், எலெக்ட்ரிக் ட்ரெயினில்பயணம் செய்ய டிக்கட் எடுப்பவன், நடைமேடை டிக்கட் எடுப்பவன் என்று எல்லோருக்கும் ஒரே வரிசை என்பது சரியான முறை அல்ல என்றே பட்டது. நடைமேடை சீட்டு வாங்க எனக்கு ஒரு நிமிடம் ஆகாது, ஊருக்கு போக டிக்கட் எடுப்பவனுக்கு அப்படியா? இதற்காக ஒரு தனி வரிசை இருந்தால் தானே சுலபம் என்று தோன்றியது

நடைமேடை சீட்டுக்கென்று மெஷின் வைத்து பார்த்தார்கள், ஒன்றும் சரிப்படவில்லை. நானும் பொறுமையாய் காத்திருக்க ஆரம்பித்தேன். பெண்களுக்கு தனி வரிசை இல்லை என்று கண்டிப்பாய் சொல்லி இருந்தார்கள். ஏன் என்று தெரியவில்லை. எப்போதும் நடப்பது போல, வெளியே வருபவர்கள், வரிசையில் சரியாய் என் அருகில் வந்து நுழைந்து அந்தப் பக்கம் சென்றார்கள். இது ஏன் என்றே எனக்கு இன்று வரை புரியவில்லை. வழக்கம் போல, "நீங்கள் எந்த வரிசையில் இருக்கிறீர்களோ, அதற்கு அடுத்த வரிசை தான் வேகமாய் நகரும்!" என்ற முற்ஃபி விதி இன்று வேலை செய்யவில்லை. என் வரிசை சற்று வேகமாகவே நகர்ந்தது. ஆச்சர்யமாக இருந்தது! பக்கத்து வரிசையில் ஒருவர் "அந்த ஒரே ஆளு, அரைமணி நேரமா நிக்கிறான்யா" என்று பொறுமை இழந்து கொண்டிருந்தார். இது வரை என் வாழ்க்கையில், வரிசையில் நிற்கும் ஒருவர் எந்த வித சலிப்பும், புலம்பலும் இல்லாமல் நான் பயணச் சீட்டு வாங்கியதாய் எனக்கு நினைவே இல்லை. குறிப்பாக தாம்பரத்தில்!

வழக்கம் போல ஒரு பிரகஸ்பதி கூட்டம் எவ்வளவு இருக்கிறது என்று பார்ப்பதை போல மெல்ல வரிசையில் தன்னை சொருகிக் கொண்டான். சரியாய் என் பின்னால் வந்து தன்னை வரிசையுடன் இணைத்துக் கொண்டான், என் பின்னால் இருந்த மார்வாடி ஒன்றும் சொல்லவில்லை. என் முன்னால் அவன் வந்திருக்க வேண்டும்! நாக்கு என்ன, கண்ணு, காத்து, மூக்கு புடுங்குற கேட்டுருப்பேன். தப்பிச்சிட்டான். நம் மக்களின் மனநிலையே அப்படித் தான் இருக்கிறது. எப்படியாவது அவர்களுக்கு குறுக்கு வழி ஒன்று வேண்டும். அங்கு நிற்கும் நேரத்தை மிச்சம் பிடித்தால் அவன் எதோ, நோபல் பரிசு வாங்கி விடுவது மாதிரி!

என் முறை வந்தது. எவ்வளவு என்று தெரியாமல் என் பையில் உள்ள அத்தனை சில்லறையையும் கையில் வைத்திருந்தேன். ஐந்து ரூபாய் கொடுத்து சீட்டு வாங்கிக் கொண்டு நடந்தேன். படியில் இறங்கி நடைமேடையில் பதினேழாம் என்னை தேடினால் கண்ணிலேயே படவில்லை. ரயிலுக்காக காத்திருக்கும் எல்லோரையும் தாண்டி சென்று கொண்டே இருந்தேன். இதையே நான் ஜி எஸ் டி சாலையில் நடந்திருந்தால் தாம்பரம் சானிட்டோரியம் வந்திருக்குமோ என்று தோன்றியது! பதினேழு தான் கடைசியோ என்று நினைத்தால் அதற்கு மேல் பலகைகள் தொங்கிக் கொண்டிருந்தன. அடக் கடவுளே!  

என் அப்பா, வீட்டில் "D2" கோச் பார்த்ததும் எஞ்சின் அருகில் வரும் என்று சொன்னார். அவருக்குத் தான் முற்ஃபி விதி தெரியாதே!

மதுராபுரி ஒரு அழகான சிற்றூர். ஆறுகளும், மலைகளும், பச்சை போர்வை போர்த்திய வயல்களும் பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியாகத் திகழ்ந்தது. அந்த ஊர் மக்கள் அனைவரும் மிக நல்லவர்கள். யாருக்கும் எந்த வித தீங்கும் செய்யாமல், ஒருவருக்கொருவர் உபகாரமாய் வாழ்ந்து வந்தார்கள். அந்த ஊரை சுற்றி அடர்ந்த காடு ஒன்று இருந்தது. ஒரு முறை, வெகு தொலைவிலிருந்து கள்ளகன் என்ற அரக்கன் அங்கு வந்து சேர்ந்தான். அவன் மதுராபுரியை பற்றி வரும் வழி எல்லாம் நிறைய கேள்விப்பட்டிருந்தான். நெடுந்தூரமாய் பயணம் செய்து வந்த அவன் மிகவும் களைத்து போயிருந்தான். இனிமேல் சில நாட்கள் இங்கே தங்கி ஓய்வெடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அதிலும் மதுராபுரியை சேர்ந்த மக்கள் எல்லாம் செல்வச் செழிப்பாக கொழு கொழுவென்று இருப்பார்கள் என்று அவன் கேட்டிருந்தான். அதை நினைக்கும்போது அவன் நாக்கில் அப்போதே எச்சில் ஊறியது.

அப்போது மதுராபுரியைச் சேர்ந்த வேலப்பன் அந்த வழியாய் பக்கத்து ஊருக்குச் சென்று கொண்டிருந்தான். உடனே இது தான் சமயம் என்று அவன் முன் கள்ளகன் தோன்றினான். வேலப்பன் இத்தனை பயங்கரமான அரக்கனை பார்த்து குலை நடுங்கிப் போனான். கள்ளகன் பயங்கரமாகச் சிரித்தான். வேலப்பனுக்கு மயக்கமே வந்து விடும் போல் இருந்தது. தயவு செய்து என்னை கொன்று விடாதே என்று கெஞ்சினான். அதற்கும் அரக்கன் பலமாகச் சிரித்தான். சிரித்து ஓய்ந்ததும், கள்ளகன் வேலப்பனிடம், "இதோ பார், நான் இப்போது கடுமையான பசியில் இருக்கிறேன். இருந்தும் இப்போது நான் உன்னை கொல்ல மாட்டேன். நான் இந்த வனத்தில் தான் இன்னும் சிறிது காலம் தங்கப் போகிறேன். நான் மதுராபுரியை பற்றி நிறைய கேள்விபட்டிருக்கிறேன். அதன் செல்வச் செழிப்பும் நான் அறிவேன். அதனால் நீ உன் ஊருக்குச் சென்று என்னை பற்றி கூறி தினமும் எனக்கு ஒரு வண்டி சோறு, ஒரு வண்டி குழம்பு, ஒரு வண்டி ரசம், ஒரு வண்டி தயிர், ஒரு வண்டி கூட்டு, ஒரு வண்டி பொறியல், ஒரு வண்டி கோழி முட்டை, ஒரு கோழி, ஒரு ஆடு, ஒரு மாடு, ஒரு மனிதன் ஆகியவற்றை ஏற்பாடு செய். அதனால் தான் உன்னை இப்போது உயிருடன் விடுகிறேன். நாளை முதல் எனக்கு இது வந்து சேர வேண்டும், இல்லையென்றால் நான் ஊருக்குள் புகுந்து ஊரையே அழித்து விடுவேன்." என்றான். இதைக் கேட்ட வேலப்பன் வெலவெலத்துப் போனான். தலை தப்பியது புண்ணியம் என்று நினைத்தாலும், தன் ஊர் மக்களை நினைத்து வருந்தினான்.

ஊருக்கு வந்த வேலப்பன் ஊரில் உள்ள அனைவரையும் கூப்பிட்டு நடந்தவைகளை ஒன்று விடாமல் சொன்னான். இதைக் கேட்ட அனைவருக்கும் கை, கால் ஓட வில்லை. என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. அரக்கன் முன் சாதாரண மனிதர்கள் என்ன செய்ய முடியும் என்று தங்கள் விதியை நினைத்து நொந்தனர். பின்னர், கள்ளகன் கேட்டதை எல்லாம் ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்கள். பெரிய குடும்பத்திலிருந்து, குடும்பத்திற்கு ஒருவரை, அதாவது முதலில் வயதானவர்களை, பிறகு ஆடவர்கள், பிறகு பெண்கள், பிறகு குழந்தைகள் என்று அரக்கனிடம் அனுப்ப முடிவு செய்தார்கள். அதன் படியே மறுநாளிலிருந்து செய்ய ஆரம்பித்தார்கள். சோறு இன்னும் ரெண்டு வண்டி கேட்டாலும் கொடுக்கலாம், இப்படி நாளுக்கு ஒருவரை பலி கொடுப்பது அவர்களால் தாங்க முடியவில்லை. ஆனால் கள்ளகன் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவேயில்லை. அவன் அவனுக்கு தினமும் வரும் விருந்தில் அக மகிழ்ந்து போயிருந்தான். இத்தனை காலம் இந்த ஊரை வந்து சேராதது எத்தனை தவறு என்று தன்னையே நொந்து கொண்டான்.

நாட்கள் செல்லச் செல்ல மதுராபுரியில் மக்கள் தொகை மிகவும் குறைந்து விட்டது. அந்த ஊரே களையிழந்து விட்டது. யாருக்கும் எதிலும் மனம் ஒட்டவில்லை. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று இருந்த ஊரில் சாவுக் கலையே தாண்டவமாடியது. அப்போது அந்த ஊருக்கு ஒரு சாமியார் வந்தார். மக்கள் அவரிடம் நடந்தவைகளை சொல்லி புலம்பினர். சாமியார் அவர்களை ஆறுதல் படுத்தி விட்டு, சிறிது நேரம் நிஷ்டையில் அமர்ந்தார். மக்கள் அனைவரும் அவரை நம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் அவரின் முகம் ஒளிர்ந்தது. மெதுவாய் கண்ணை திறந்த சாமியார் மக்களை பார்த்து புன்னகை பூத்தார். பிறகு திடீரென்று அவர் முகத்தில் இருந்த ஒளி மங்கியது. மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஊர் பெரியவர் ஒருவர் சாமியாரிடம் விசாரித்தார். சாமியார், "கள்ளகனை கொல்ல என்ன வழி என்று என் ஞான திருஷ்டியில் கண்டு கொண்டேன்!" மக்கள் அனைவரும் ஆரவாரத்தால் குதூகளித்தனர். ஊர் பெரியவர், சொல்லுங்கள் சாமி, என்ன கண்டீர்கள் தங்கள் ஞான திருஷ்டியில், எப்படி அவனை கொல்வது, என்று வினவினார். சாமியார், வெகு நாட்களுக்கு முன், ஒரு முறை கள்ளகன் இரை தேடிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு பூனைக் கூட்டத்தை கண்டான். அந்தக் கூட்டம் முழுவதையும் அடித்துச் சாப்பிட்டான். கடைசியில் ஒரு வயதான பூனை ஒடுங்கிப் போய் உட்கார்ந்திருந்தது. அதனை உண்பதற்காக அதை பிடித்து அதனுடைய கழுத்தை அழுத்தும்போது, அதிசயமாய் அந்த பூனை பேசியது. என் கண்ணுக்கு முன்னே என் கூட்டத்தை இரக்கமில்லாமல் ஒழித்த உன்னை நான் சபிக்கிறேன் என்றது. அதைக் கேட்ட கள்ளகன் ஆத்திரம் கொண்டு, சீ, வாயை மூடு கிழப் பூனையே! கேவலம் பூனை நீ, நீயா என்னை கொல்வது? இதோ, நான் உன்னை இப்போது கொன்று விடுகிறேன் பார்" என்று அதன் கழுத்தை மேலும் அழுத்தினான். உடைந்த குரலில் அந்தப் பூனை, இன்னும் சில காலங்களில் என்னை போலவே ஒரு பேசும் பூனையை நீ பார்ப்பாய், அதனிடம் "இதோ, நான் உன்னை இப்போது கொன்று விடுகிறேன் பார்" என்று சொன்னவுடன் உன் தலை வெடித்து சுக்கு நூறாகிவிடும். அதோடு இப்படி ஒரு சாபம் உனக்கு இருப்பதை நீ மறக்கக் கடவது என்றும் சபித்து விட்டது என்றார்.

ஊர் மக்கள் இதை வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்தார்கள். வாய் வரை சென்ற உணவை தட்டிப் பறித்தது போல் ஆகிவிட்டது ஊர் மக்களுக்கு. இந்தப் பேசும் பூனையை எங்கே தேடுவது? பூனை எங்காவது பேசுமா? அப்படி ஒரு பூனை இந்த உலகில் இருக்கிறதா? அப்படி இருந்தாலும் எப்படி அதை தேடிக் கண்டுபிடிப்பது என்று பல வித கேள்விகள், குழப்பங்கள் எழுந்தன. அப்போது கூட்டத்திலிருந்து "இந்த வேலையை நான் செய்கிறேன்" என்று ஒரு குரல் வந்தது. கூட்டத்தை விளக்கி ஒரு சிறுவன் வந்தான். எல்லோரும் அவனை ஆச்சர்யமாய் பார்த்தார்கள். அந்த சிறுவன் பொன்னன். தன் வயதான பாட்டியுடன் அந்த ஊரில் வாழ்ந்து வந்தான். சிறு வயதிலேயே அவனுடைய தாய் தந்தை இறந்து விட்டார்கள். பாட்டி தான் அவனை வளர்த்து வந்தாள். பொன்னன் மிகவும் புத்திசாலி! ஊருக்கே அவன் செல்லப் பிள்ளை. கள்ளகனுக்கு உணவாக அவன் பாட்டி தான் அடுத்து செல்ல வேண்டியிருந்தாள். அதை நினைத்து வருந்திக் கொண்டிருந்த நிலையில் சாமியாரின் இந்த உபாயம் பொன்னனுக்கு கொஞ்சம் நம்பிக்கையை கொடுத்தது. சாமியார் அவனை அருகில் அழைத்து பொன்னனை ஆசிர்வதித்தார். பொன்னன் பூனையை கொண்டு வரக் கிளம்பினான்.

மறுநாள் அதிகாலை எழுந்து பொன்னன் சுத்தமாகக் குளித்தான். அரக்கனுக்கு கொண்டு செல்ல வேண்டிய அனைத்து பொருட்களையும் வண்டியில் ஏற்றிக் கொண்டான். அதோடு தன்னிடம் உள்ள பேசும் பூனையை பெட்டியில் வைத்துக் கொண்டான். அரக்கனின் இடம் நோக்கி விரைந்தான். கள்ளகன் மிகவும் பசியுடன் இருந்தான். உணவின் நறுமணம் அவன் உணர்ந்ததும், அவன் குகை விட்டு வெளியே வந்தான். அவனால் இனிமேலும் பொறுக்க முடியவில்லை. உணவை எடுத்து வாயில் வைக்கும்போது பொன்னன், கள்ளகரே நில்லும், இன்று நீங்கள் உண்ணப் போகும் மானுடன் நான் தான். நீங்கள் உணவை உண்பதற்கு முன் தங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்றான். வயதானவர்களையே தின்று சலித்திருந்த கள்ளகனுக்கு பிள்ளைக் கறி என்றதும் குதூகலமாய் இருந்தது. சரி வேகமாய் சொல், நான் மிகவும் பசியுடன் இருக்கிறேன் என்றான். இது தான் சமயம் என்று நினைத்த பொன்னன், கள்ளகரே, என்னிடம் ஒரு பேசும் பூனை இருக்கிறது. அது பொல்லாத பூனை. நீங்கள் மிகுந்த பலசாலி என்று அதனிடம் சொன்னேன். அந்தப் பூனையோ, தன்னை விட பலசாலி இந்த உலகிலேயே கிடையாது, கள்ளகன் எல்லாம் என் கால் தூசி என்று சொல்லி விட்டது! உங்களை அது இப்படி அவமானப்படுத்தியதால், அதை நான் இங்கு கொண்டு வந்திருக்கிறேன். நீங்களே அதற்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்றான். அதை கேட்ட கள்ளகன் உடலில் உஷ்ணம் பரவியது. காதிலிருந்து புகையாய் வந்தது. எங்கே அந்தத் திருட்டு பூனை காட்டு என் முன்னால் என்று கர்ஜித்தான். பொன்னன் மெல்ல தான் கொண்டு வந்திருந்த பெட்டியின் பூட்டை திறந்தான். அது நின்று கொண்டே தூங்கிக் கொண்டிருந்தது. அதன் தலையில் லேசாய் தட்டினான். பூனை விழித்தெழுந்தது. அதன் முன்னே பிரம்மாண்டமான கள்ளகனை பார்த்து சற்று மிரளாமல் கொட்டாவி விட்டது. கள்ளகனுக்கு ஆத்திரம் பொங்கியது...அடே, நான் யார் தெரியுமா? என்று கத்தினான். பதிலுக்கு பூனையும், அடே, நான் யார் தெரியுமா? என்றது. "நீயா என்னை கொல்வாய், இதோ, நான் உன்னை இப்போது கொன்று விடுகிறேன் பார்" என்றதும், பதிலுக்கு பூனையும் அதையே சொன்னது. சொல்லி முடித்த அடுத்த நிமிஷம், கள்ளகனின் தலை வெடித்து சுக்கு நூறாய் ஆனது.

வெற்றி வாகையுடன் பொன்னன் ஊருக்குள் வந்தான். ஊர்காரர்களால் அவர்கள் கண்ணையே அவர்களால் நம்பமுடியவில்லை. எப்படி அந்த அரக்கனை கொன்றாய் என்று கேட்டார்கள். இதோ, இந்தப் பூனையின் மூலம் தான் என்று பூனையை பெட்டியிலிருந்து காட்டினான். பூனை அனைவரையும் பார்த்து விழித்தது. பிறகு பெட்டியை பூட்டி விட்டான். இந்த பூனையின் பெயர் என்ன என்று ஒருவன் கேட்டான். இதன் பெயர் "டாக்கிங் டாம்" என்றான் பொன்னன்!

"தாண்டவம்" பார்த்தேன். இயக்குனர் என் கையில் கிடைத்தால் "ருத்ர தாண்டவம்" ஆடி இருப்பேன். இந்தக் கதைக்கு சண்டை வேறு! கஷ்டம்!! பார்வையாளர்கள் அத்தனை பெரும் அடி முட்டாள்கள் என்ற நினைப்பில் படம் எடுத்திருக்கிறார் இயக்குனர்.

வெடி குண்டு விபத்தில் தன் மனைவியையும், கண் பார்வையையும் இழந்த ஒருவன் பழி வாங்குவதே கதை. இனி மேல் தமிழ் சினிமாவில் பழி வாங்கும் கதையை எடுக்கும் ஒவ்வொரு இயக்குனரையும் நான் பழி வாங்கப் போகிறேன். போதும் யா...யோவ்! முடியலை...இயக்குனர் விக்ரமுக்கு இப்படி கதை சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன். கூடவே என் மைன்ட் வாய்சும்.

விஜய்: சார், ஓபன் பண்ணா லண்டன்ல ஒரு பாம் பிளாஸ்ட். [ஆரம்பமே பிரம்மாண்ட அதிரடி!] அப்படியே டைட்டில் பறக்குது. சில வருடங்களோ, மாதங்களோ கழிந்ததும் லண்டன்ல ஒரு கொலை நடக்குது [?]. அந்தக் கொலையை பண்றது நீங்க! [படம் முடிஞ்சு போச்சு...பாம் ப்ளாஸ்ட்ல யாரோ செத்துட்டாங்க, பழிக்கு பழி!] அதுல என்ன புதுசுன்னு தானே கேக்குறீங்க [யு தேர்! கமான் டெல் மீ ]..உங்களுக்கு இந்தப் படத்துல கண்ணு தெரியாது [என்னா ட்விஸ்ட்!] அப்புறம் எப்படி கொலை எல்லாம்னு நீங்க கேப்பீங்க...[கெரகம், சொல்லுங்க!] உங்களுக்கு கண்ணு தான் தெரியாது, ஆனா நீங்க வாயை தொறந்தா ஒரு சத்தம் வருது! [எனக்கு இப்போ நல்லா வாயில வருது!] அந்த சத்ததோட எதிரொலி வச்சி எதிரியை கொல்றீங்க...[எதிரியை மட்டுமா கொல்றீங்க!] நீங்க லண்டன்ல ஒரு சர்சுல மணி ஆட்றீங்க...சாரி, பியானோ வாசிக்கிறீங்க [நைஸ்!]. அங்கே இருக்குற எல்லா வெள்ளைக் காரங்களுக்கும் உங்களை அவ்வளவு புடிக்கும். [ஏன்?] அந்த சர்ச்சுக்கு ஏமி வர்றாங்க [வரணுமே!]. அவங்க அந்த ஊர் வெள்ளைக்காரி மாடலை விட பெரிய மாடல் [ம்ம்ம்..]. அப்போ ஒரு குழந்தைய மடியில வச்சிட்டு வாசிக்கிறீங்க சார். இதை விட காதல்ல தொபக்கடீர்னு விழுறதுக்கு ஒரு சந்தர்பம் கிடைக்குமா சார்? அப்படியே லவ், ஒரு சாங்குக்கு ஃபாரின் போறோம். [நாம ஆல்ரெடி பாரின்ல தானேப்பா இருக்கோம்!]

அவங்களோட நீங்க ஒரு பார்க்ல நடந்து போகும் போது பேட் பாய்ஸ் வர்றாங்க. [லண்டன்லயுமா?] நீங்க எமியை கற்பழிக்க வர்றாங்கனு நெனச்சீங்களா, அங்கே தான் ஒரு ட்விஸ்ட் வச்சிருக்கோம்! [அங்கே கொண்டு போயா வச்சீங்க!] அவங்க எமியோட தொழில் ரீதியான எதிரிகள். எமியை அவங்க மெரட்றாங்க..தடுக்கப் போன உங்களை அடிக்க வர்றாங்க! [ஆஹா, இந்த எடத்துல தமிழ் சினிமா ஹீரோ கை, கால் இல்லைனாலே பத்து பேரை அடிப்பானே!] கண்ணை மூடி தொறக்குறதுக்குள்ள சட்டை தொறந்த சல்மானா நிக்கிறீங்க...டொக்கு, டொக்குன்னு சத்தம் போட்டு போட்டு எதிரிகளை சுத்தி சுத்தி அடிக்கிறீங்க...எமி அப்படியே ஷாக் ஆயிடறாங்க...[நாங்களும் தான்! கண்ணு மண்ணு தெரியாம காப்பாத்துற ஆம்பளைகளை எந்த பொண்ணுக்குத் தான் புடிக்காது?] அவங்க லவ்வை ஓபன் பண்றாங்க..ஆஹா, நம்ம நெறைய பேரை க்ளோஸ் பண்ண வேண்டி இருக்கு, இந்த பொண்ணு லவ்வை ஓபன் பண்ணிடுச்சேன்னு வொரி ஆகுறீங்க...அப்போ அந்த லவ்வோட சேத்து உங்க ஃப்ளாஷ் பேக்கையும் ஓபன் பண்றோம்.

சத்தமே போடாம ஒரு பத்து பேரை அடிச்சி உங்க நண்பனை காப்பாத்துறீங்க.[அவன் துரோகியா இருப்பான்னு "ஐக்யு" வே இல்லாதவன் கூட சொல்வான்!]..என்னடான்னு பாத்தா, உங்களுக்கு கண்ணு தெரியுது! நீங்க டெல்லியில ரா ல ஒரு பெரிய உயர் அதிகாரி. திடீர்னு உங்களுக்கு கல்யாணம்! [இன்னுமா ஆகலை?] கட் பண்ணா, பச்சை பசேல்னு ஒரு கிராமம் [வில்லேஜ் ஆடியன்ஸ்!]. நீங்க பொண்ணை பாத்து கல்யாணம் வேணாம்னு சொல்ல போறீங்க...அப்போ தான் வழியில அனுஷ்கா மழையில நனையிறாங்க..[நாங்களும் தான்!] ஐஸ்வர்யா ராயையும், அனுஷ்காவையும் பொண்ணு ரூபத்துல பாத்த எவனாவது கல்யாணம் வேணாம்னு சொல்வானா? [மாட்டன், மாட்டான்!] அவங்க டெல்லியில கண் டாக்டர் [வாட் அன் ஐரணி!] உங்களுக்கு அவங்களை பத்தி தெரியாது, அவங்களுக்கு உங்களை பத்தி தெரியாது! கல்யாணம் பண்ணிட்டு கண்டு புடிக்கிறீங்க. அங்கே ஒரு லவ் எபிசொட்! [ஏன் சார், பிகாசோ, ரவி வர்மன் இப்படி எல்லாமே எங்களுக்கு தெரிஞ்ச பெயராவே இருக்கே, இவங்களைத் தவிர உங்களுக்கு எந்த பெயின்டரும் தெரியாதா? கொடுமை..ஆமா அனுஷ்கா சொன்ன மாதிரி விக்ரமும் உண்மை சொல்லி இருந்தா, அந்த எஸ். ஐ., பிரமோஷன், மொக்கை எல்லாம் கட் பண்ணி இருக்கலாமே! சரி அப்படியே கல்யாணத்துக்கு அப்புறம், எவனோ ஒருத்தன் உன் புருஷன் இங்கே தான் இன்னாரா வேலை பாக்குறான்னு சொன்னா..மனைவிக்கு நல்லாவா இருக்கும்? இதை எந்த விதத்துல க்யுட்டான சீன்ச்னு நினைச்சீங்க. எந்த பொண்டாட்டி சார் புருஷன் எங்க வேலை பண்றான்னே தெரியாம இருப்பா? என்ன லாஜிக்கோ...உங்களோட யாரு சார் டிஸ்கஷன்ல உக்கார்றது?] அனுஷ்காவுக்கு லவ் பொங்கி [நமக்கு ஆத்திரம் பொங்கி!] அவங்க லண்டன் வந்து பாம் வெடிச்சி செத்து போறாங்க. [நாங்க வெடிக்காம...]

அப்புறம் நீங்க லெட்சுமி ராயின் கிசு கிசு க்ளூவின் மூலம் எதிரிகளை பழி வாங்குறீங்க சார் [ஏன் சார், லெட்சுமி ராய்க்கு தான் கண்ணு தெரியுதே, அவங்களே போய் கொல்ல வேண்டியது தானே? அவங்களுக்கும் தான் புருஷன் செத்து போனான்!]

க்ளைமாக்ஸ் ல நீங்க அஞ்சு பேரை எப்படி பழி வாங்குநீங்கன்னு நாசர் அவரோட டேப்லட் ல ஆராஞ்சதுல ஐந்து கொலைகளும் பஞ்ச பூதங்களுக்கு தொடர்பு இருக்குன்னு கண்டு புடிக்கிறாரு. [இது வேறையா..]

ஆனா ஒன்னு சார், உங்களை சொல்லி குத்தமில்லை. நம்ம தமிழ் சினிமா நாயகர்களின் திறமையும் அசாத்தியம் தான் [அஜீத் தவிர, அவர் மட்டும் தான் புத்திசாலி!]. இப்படி ஒரு மொக்கை படத்தை பண்ணிட்டு அதை பத்தி டீவியில ஆஹா, ஓஹோன்னு பேசி நடிக்கிறாங்களே . அது தான் டாப்!

நல்லா எடுக்குறீங்க சார் படம். நீங்க இனிமே ஒரிஜினலா எழுதுறேன்னு எதையும் ட்ரை பண்ணாதீங்க...எத்தனை ஹாலிவுட் படம் வந்துருக்கு...உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை..பாத்து புரிஞ்சு நடந்துக்குங்க!