வருகிற 16ம் தேதியுடன் (அதாவது நாளையோடு!) நான் முதன் முதலாய் அழுது, முன் பின் தெரியாத நர்ஸ்கள் எல்லாம் என்னை பப்பி ஷேமாய் பார்த்து முப்பத்தியோரு வருடம் ஆகிறது. ஹிஹி பிறந்த நாளை நான் இப்படி தான் சொல்றது!! ஹிஹி!! நர்சரி பள்ளியில் படித்த போது காலையில் எழுந்து குளித்து பக்கத்து பிள்ளையார் கோயிலுக்கு போய் உக்கி போட்டு [பிள்ளையார்: அட, அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிப் போச்சா?] ஓடி வந்து புது ட்ரஸ் போட்டுக் கொண்டு கேரமில்க் மிட்டாய்களை ஒரு டப்பாவுக்குள் போட்டுக் கொண்டு எங்கள் காம்பவுண்டில் ஒவ்வொரு வீடாய் ஏறி மிட்டாய் கொடுத்தது ஞாபகம் வருகிறது. சிலர் ஒரு ரூபாய் கொடுப்பார்கள். சிலர் ஐம்பது பைசா! எனக்குத் தெரிந்து பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடியதால் பிறந்த ஒரே பயன் அன்றைக்கு பார்த்து டீச்சர் எதையோ கேட்டு எல்லோரையும் அடிக்க, என்னை மட்டும் பர்த்டே பையன் என்று விட்டு விட்டார்கள். அதைத் தவிர ஒன்றுமில்லை!!

கல்கி படத்தில் ஸ்ருதி (எங்கேப்பா இந்த பொண்ணு?) ரகுமானை அறைந்து விட்டு ஒரு கேள்வி கேட்பார். யாருக்குடா பொறந்த நாள் வர்ல? நாய் பன்னிக்கு கூடத் தான் பொறந்த நாள் வருது என்று! பொறந்த நாள் கொண்டாட்றானாம், பொறந்த நாள் என்று! அது தான் ஞாபகம் வருகிறது. அந்தப் படத்தை அப்போ பாத்தப்போ ஆமா, இல்லை கரெக்ட் தான்! என்று தோன்றியது.

இத்தனை வருடம் இந்த உலகில் குப்பை கொட்டியதில் ஒன்றும் பெரிதாய் சாதிக்கவில்லை. அரைகுறை கல்வி அறிவை வைத்துக் கொண்டு ஐ. டி. யின் தயவால் சில லட்சங்களை சம்பாதித்துக் கொண்டு, ஒரு சின்ன ஃப்ளாட் கட்டி கொண்டு, எல்லா இடங்களிலும் வாடகை ஏற்றி விட்ட கூட்டத்தைச் சேர்ந்தவன் என்ற பாவத்தை சுமந்து கொண்டு, அமேரிக்காவில் உயர் ரக குப்பை கொட்டிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பார்க் ஸ்டேஷனில் மின்சார ரயில் நின்றதும் திபு திபுவென்று ஓடும் கூட்டங்களில் ஓடுபவனுக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. நான் ஒரு காமன் மேன்! அதுவே எரிச்சலாய் இருக்கிறது. நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், நான் இதற்க்கா பிறந்தேன் என்ற ஒரு கேள்வி மனதுக்குள் எழுந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ஃப்ளாட்டுக்கு லோன் கட்டனுமே என்ற கவலையில் அது எங்கோ மறைந்து விடுகிறது! முதல்வன் படத்தில் மணிவண்ணன் சொல்வது போல் காலம் பூரா வேலை பாத்து ஒரு சின்ன வீட்டு கட்டி ஹிண்டு பேப்பர் படிப்பதுடன் என் வாழ்க்கை முடிந்து விடுமோ என்று பயமாய் தான் இருக்கிறது!

அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்றார்! நான் கண்டு கொண்டே இருக்கிறேன்; வந்ததற்கு நீங்கள், அது நினைவாகட்டும் என்று வாழ்த்தி விட்டாவது போங்களேன்!!