கிறுஸ்துமஸ் விடுமுறையை பனிச்சறுக்கு விளையாடிக் கொண்டாடினேன். இதப் பார்றா, எப்பவுமே பொலம்புற ஆளு கொண்டாடினதை பத்தி எல்லாம் சொல்றானேன்னு ஆச்சர்யமா இருக்குமே உங்களுக்கு!! எனக்கே இருக்கே...சரி கதைக்கு வருவோம்!! 2 வருஷத்துக்கு முன்னாடி நான் அமேரிக்கா வந்தப்போ பனிச்சறுக்கு முதல் முறையா விளையாடினேன். இது ரெண்டாவது தடவை...2 வருஷம் கழிச்சி விளையாடினா, அது மொதல் தடவை மாதிரி தான்!!

பனிச்சறுக்கு ஆரம்பத்தில் எல்லோருக்கும் பிடித்து விடாது. ஏனென்றால் அது விளையாட நாம் கொஞ்சம் அவஸ்தை பட வேண்டும். நான் இருக்கும் ஊரில் வீட்டை விட்டு வெளியில் வந்தால் போதும், ஒரு அழகான இளம் பெண்ணிடம் ஐ லவ் யு சொல்லி அவள் செருப்பை கழட்டி கன்னத்தில் ஒரு அரை அறைந்தால் எப்படி இருக்குமோ அதை விட மோசமாய் குளிர் அறையும்.!! [எனக்கு எதையும் சுத்தி வளைச்சி பேசத் தெரியாது பாருங்க!!! ஹிஹி] இதில் போக்கிரி விஜய் மாதிரி பல சட்டைகள் போட்டுக் கொண்டு [இந்த ஊர்ல போட்டா அதுக்கு ஒரு நியாயம் இருக்கு!!] அந்த பனி மலையின் உச்சியில் கொண்டு போய் நிறுத்தி என் எடையில் பாதி எடை கொண்ட பூட்ஸ்களை மாட்டி விட்டு [அதை மாட்டி விட்டால் நிலாவில் நடப்பதைப் போலத் தான் நடக்க வேண்டும்!] என் உயரத்திற்கு காலில் இரு கட்டைகளை மாட்டி விட்டு, கையில் அதே சைசுக்கு இரு குச்சிகளை கொடுத்து இப்போ சறுக்கு பாப்போம்னா, நமக்கு பேட் வேர்ட்ஸ் வருமா? வராதா?

அவன் சொல்லிக் கொடுத்தான், தம்பி கால்ல இருக்குற ரெண்டு கட்டைகளையும் பிஸ்ஸா ஷேப்ல கொண்டு வந்தா போதும் அது நின்னுடும்னு....அது அவனுக்கு மட்டும் தான் நிக்கும்னு எனக்குத் தெரியாது...நானும் பிஸ்ஸா, பர்கர்னு என்னோட க்ரியேட்டிவிட்டி எல்லாம் யுஸ் பண்ணி நிப்பாட்டிப் பாத்தேன். ஒரு தடவை சருக்க ஆரம்பிச்சோம்னா பேதி மாதிரி அது பாட்டுக்கு நிக்காம போகும் பாருங்க...அப்புறம் நல்ல வெள்ளக்கார பொண்ணா பாத்து முட்டி மோதி நிப்பாட்ட வேண்டியது தான்! [ஸ்வபா....எவ்வளவு கஷ்டம் பாருங்க!!]

இத்தனைக்கும் கத்துக்குட்டிகளுக்காக தனியாய் ஒரு சின்ன ஸ்லோப் இருப்பது போல் வைத்திருக்கிறார்கள். அதில் தான் கத்துக்கனும். மேலே ஏற்றி விடுவதற்கு ஒரு மெஷின். அலுங்காமல் குலுங்காமல் அந்த சின்ன ஸ்லோப்பின் மேலே சேர்ப்பித்து விடும், பிறகு சறுக்கி கீழே வர வேண்டியது தான். பெரிய மலை உச்சியில் செல்பவர்க்கு விஞ்ச், இரு சீட்டுகளுடன் அவர்களை ஏற்றிச் செல்லும், இரண்டு நிமிடத்தில் சல்லென்று சருக்கி கீழே வந்து விடுகிறார்கள். அந்த மலை உச்சியிலிருந்து அவர்கள் வருவதை பார்த்தாலே பயங்கரமாய் இருக்கிறது. இதில் பொடிசுகள் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அப்பாவுடன் சரிக்கு சமமாக அந்த மலை உச்சியிலிருந்து சல்லென்று சறுக்கிக் கொண்டு வருகிறார்கள். பொறந்தவுடனே கத்துக் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க போல இருக்கே என்று தோன்றுகிறது. இதனால் நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், ஒரு பெரிய மலை உச்சியிலிருந்து சல்லென்று சறுக்கத் தெரியும் வரை, பனிச்சறுக்கை அவ்வளவாய் ரசிக்க முடியாது!!

ராஜ்குமார் ஹிரானி இயக்கிய 3 இடியட்ஸ் பார்த்தேன். முன்னாபாய் அளவுக்கு ரசிக்க இயலவில்லை என்றாலும், பரவாயில்லை. இப்படி ஒரு கல்லூரிக் கதைக்கு அமீர்கான், மாதவன் எதற்கு என்று புரியவில்லை. அமீர்கான் இந்தப் படத்திலும் கல்வி முறையைப் பற்றி விமர்சிப்பது அலுப்புத் தட்டுகிறது. ஹிராணிக்கு தன்னுடையை பார்வையாளர்களை சந்தோஷக் கண்ணீர் விட வைப்பதில் அவ்வளவு பிரியம் என்று நினைக்கிறேன். மனிதர் எல்லா படங்களிலும் அதை பொறுப்பாய் செய்கிறார். சமீபத்தில் நான் மிகவும் ரசிக்கும் ஒரு நடிகர் பொமன் இரானி. எந்த காரெக்டர் என்றாலும் பிய்த்து உதறுகிறார். பேஜ் 3யில் எடிட்டர் காரெக்டரும், லகே ரஹோ முன்னாபாயில் சிங் காரெக்டரும், கோஸ்லா கா கோஸ்லாவில் வில்லன் பாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்தப் படத்திலும் ஒரு கடுமையான கல்லூரி முதல்வராக மிகச் சரியாய் செய்திருக்கிறார். மற்றபடி அமீர்கானுக்கு இந்தப் படமும் ஒரு வெற்றியே என்று தான் சொல்ல வேண்டும்.

சரியாய் ஒரு மாதத்திற்கு ஒரு முறை எனக்கும் ப்ளாக் இருக்கிறது என்று எனக்கு நினைவுக்கு வந்து விடுகிறது. சந்தோஷம்!! கடந்த ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட எல்லா நாட்களுமே மாடாய் உழைத்தேன். மாட்டுக்காவது ஓட்டுபவன் அசந்து விட்டால் விடுதலை தான்! ஆனால் எங்கள் நிலைமை அதை விட மோசம். எவன் இருக்கிறானோ இல்லையோ வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். நாளுக்கு மினிமம் 15, 16 மணி நேரமாவது வேலை பார்த்திருப்பேன். கண்ணாடியில் என்னை பார்க்கும் போதெல்லாம் என் மீதே பரிதாபம் வழிந்து கொட்டியது. என் பத்து வருட மென்பொருள் வாழ்க்கையில் நான் அவ்வப்போது இப்படி மாட்டிக் கொள்வதுண்டு! என்று சொல்வதை விட, அவ்வப்போது தப்பித்துக் கொள்வதுண்டு என்று சொன்னால் சரியாய் இருக்கும். பத்து வருடங்களில் கிட்டத்தட்ட 8 வருடங்களாவது இப்படி பேய் வேலை பார்த்திருக்கிறேன். அது எப்படி என்னை பார்த்ததும் இவர்களுக்குப் புரிகிறது என்று தெரியவில்லை. வடிவேலு சொல்வது போல்
"ஒரே ஒரு தடவை தான் பார்த்தாங்க, கைய கால அமுக்கச் சொல்லிட்டாங்க!"
"இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா, இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க!"

ம்ம்...நானும் வலிக்காத மாதிரியே எவ்வளவு நாள் தான் நடிக்கப் போறென்னு தெரியலை. பாக்கலாம்...

அமேரிக்காவில் முடமாய் வந்திறங்கிய எனக்கு இரண்டு வாரத்திற்கு முன் தான் கால்கள் கிடைத்தன. [என்ன புரியலையா? என்னை ஒரு எலக்கிய வாதியா ஆக விட மாட்டேங்களே...]கார் இல்லாததைத் தான் காலில்லாததாகச் சொன்னேன். அமேரிக்காவில் சில பெரு நகரங்களைத் தவிர்த்துப் பார்த்தால் காரில்லாதவன் காலில்லாதவன் தான்!! இங்கு எந்த இந்தியனை பார்த்தாலும் ஹோண்டா, டொயோட்டா தான் வாங்குகிறார்கள்! இதை தான் நம் ஊரிலேயே வாங்கலாமே என்று நினைத்து நிசான் சென்ட்ரா வாங்கினேன். அங்கிருக்கும் கடனை அடைக்க இங்கு வந்தால் இங்கு ஒரு புது கடன் தொடங்குகிறது! ஒரு வழியாய் தத்தி தத்தி நடக்கத் தொடங்கி விட்டேன். [கார் வாங்கிட்டு ஏன் நடக்கிறீங்கன்னெல்லாம் கேக்கப் படாது!] இங்கு கார் ஓட்டுவது பெரிய கம்பு சூத்திரம் இல்லை. பொம்மை கார் ஓட்டுவது போலத் தான். ஆக்ஸிலேட்டரை அழுத்தினால் வண்டி நகரும், ப்ரேக்கை அழுத்தினால் வண்டி நிற்கும். அவ்வளவு தான்! கியர் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை, க்ளட்ச் மிதிக்க வேண்டிய அவசியமில்லை..கெட்ட வார்த்தைகள் தெரிய வேண்டிய அவசியமில்லை. [..தா! வீட்ல சொல்டு வந்தியாடா!!]ஏனென்றால் நீங்கள் போகும் பாதையில் திடுதிப்பென்று எவனும் வர மாட்டான். இன்னொரு ஆச்சர்யம், லெப்ஃட் இன்டிகேட்டர் போட்டால் லெஃப்ட் தான் திரும்புவான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! ஆனால் நீங்கள் வண்டி ஓட்டும் போது எவனாவது பின்னால் ஹாரன் அடித்தால் "யு ஸ்டுப்பிட் ஆஃப் தி நான்சன்ஸ் ஆஃப் தி இடியட் என்று அர்த்தம்!" அதாவது அவசியமில்லாமல் எவனும் ஹாரனே அடிக்க மாட்டான்! [ஆமா, இதெல்லாம் நான் தான் மொதல்ல சொல்ற மாதிரி சொல்லிட்டு இருக்கேன்! உங்களுக்குத் தெரியாதா என்ன?]

நேற்று அவதார் பார்த்தேன். டைட்டானிக் வந்த சமயத்தில் டிஸ்கவரி சானலில் ஒரு முறை அதன் மேக்கிங் பார்த்தேன். படத்தை விட அது பிரம்மாண்டமாய் இருந்தது! எத்தனை ஆட்கள், எத்தனை வயர்கள், எத்தனை மெஷின்கள், எத்தனை மெனக்கெடல்...இனிமேல் கேமரூனே நினைத்தாலும் இவ்வளவு பிரம்மாண்டமாய் ஒரு படத்தை எடுக்க முடியாது என்று நினைத்தேன். அது நேற்று அவதார் பார்த்த போது சுக்கு நூறாய் உடைந்து போனது!! டைட்டானிக் எல்லாம் எனக்கு சப்பை மேட்டர் என்பது போல் இருக்கிறது இந்தப் படம்! அதிலும் ஐமேக்ஸ் 3டியில் பார்த்தால் சொல்லவா வேண்டும். "இதை டைட்டானிக் படம் வந்தவுடன் எழுதி விட்டேன்; இந்தப்படத்தை எடுப்பதற்கு அப்போதிருந்த தொழில் நுட்பம் பத்தவில்லை!" என்று மனிதர் கூலாய் சொல்கிறார். அடப்பாவிகளா...இப்படியா கற்பனைக் குதிரையை ஓட்றது!! ம்ம்..இந்தப் படம் இன்னொரு ஒரு பத்து வருடத்திற்குத் தாங்கும்! அதற்குப் பிறகு என்ன செய்யப் போகிறாரோ!!!

அமேரிக்காவில் கிறுஸ்துமஸ் கொண்டாட்டம் ஆரம்பித்து விட்டது. 24, 25 இரு நாட்களும், 31, 1 இரு நாட்களும் அலுவலகம் விடுமுறை! சனி ஞாயிறையும் சேர்த்தால் 4, 4 நாட்கள். ஊர் சுற்றிப் பார்க்க வேண்டும். பனிச்சருக்கு விளையாட வேண்டும்! இதற்குள் நான் எழுதிய ப்ரோக்ராமில் பக் வராமல் இருக்க வேண்டும்!
கர்த்தர் என்னை இரட்சிப்பாராக!!