Showing posts with label தரு. Show all posts
Showing posts with label தரு. Show all posts
எனக்கு, என் மனைவிக்கு, தருவுக்கு, மூன்று பேருக்கும் இரண்டு நாளாய் ஜலதோஷம். என் மனைவி நேற்று கண், மூக்கு, வாய் எல்லாம் கழண்டு விழும் ரேஞ்சுக்கு பரிதாபமாய் காட்சி அளித்தாள். இரவு ஒரு ஒன்பது மணி அளவில், வெறுத்து போய், "நீ தருவை  பாத்துக்கோ!!!!!" என்று சொல்லி விட்டு தூங்கப் போய் விட்டாள். போகும்போது  "அவளுக்கு ரசம் சாதம் குடு, அதுல நெய் ஊத்திக் கொடு, அதுல இரண்டு தக்காளி போட்டு பிசைஞ்சி கொடு, அப்புறம் ஒரு அரை மணி நேரம் கழிச்சி மிச்ச சாதத்துல பால் ஊத்திக் கொடு என்று ஒரு ஏழெட்டு  "பிட்"டாய் போட்டுப் போனாள். தரு என்னை பார்த்து தெரிந்தோ தெரியாமலோ ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்துக் காண்பித்தாள். எனக்கு குபீல் என்றது.

அவளை தூக்கிக் கொண்டு கிச்சனுக்கு வந்தேன். சாதம் போட்டுக் கொள்ள ஒரு தட்டை வைத்துக் கொண்டு, அவளை கீழே நிறுத்தி விட்டு, குக்கர் விசிலை அவளிடம் கொடுத்து விட்டு, குக்கரை திறந்தேன். நான் பாத்திரத்தில் இருந்து சாதத்தை எடுப்பதற்குள், குக்கருக்குள் இருக்கும் மிச்ச சொச்ச தண்ணீரில் கையை வைத்தாள். அதை தடுத்து கையை எடுப்பதற்குள் சோற்றில் கையை வைத்தாள். "கண் இமைக்கும் நேரத்தில்..." என்று முழு வாசகத்தை எழுத ஆகும் நேரத்துக்கும் முன்னே அவள் கை ரசம் சாதத்தில் இருந்தது. ஒரு கையில் தட்டை வைத்துக் கொண்டு இன்னொரு கையில் அவளை ஏந்திக் கொண்டு, அவள் கை என் சட்டையில் படாமல் பேசினில் சென்று கழுவிட்டு ஹாலுக்கு வந்தேன். முதுகு லேசாய் வலித்தது!

தரு சுட்டி, ஆனால் சமத்து. அவள் சாப்பிட வேண்டும் என்றால் டீவியில் இசையருவி ஓட வேண்டும். அல்லது யு ட்யுபில் ரைம்ஸ் ஓட வேண்டும். நான் இசையருவியை தேர்ந்தெடுத்தேன். என் மகள் ஒரு அற்புதமான பிறவி. எல்லா தற்கால குத்துப்பாட்டும் அவளுக்குப் பிடிக்கும். இனிமேல் "ஏன் இன்னும் தமிழ் சினிமாவில் பாட்டு வைக்கிறார்கள்" என்று நான் கேட்கமாட்டேன். வீட்டில் குழந்தைகள் சாப்பிடத் தான் என்று நான் நன்றாக புரிந்து கொண்டேன். நிலாவை காட்டி சோறூட்டிய காலம் போய், [சினிமா] நட்சத்திரங்களை காட்டி சோறூட்டும் காலம் வந்து விட்டது.

இசையருவி ஒரு அற்புதமான சானல். குத்துப்பாட்டு, காதல் காதல், இசை அரசர்கள் என்று எந்த நிகழ்ச்சி போட்டாலும், எல்லா நிகழ்ச்சியிலும் "பாக்காத பாக்காத", "கண்டாங்கி கண்டாங்கி", "ஏ பாப்பா, ஏ லூசு பாப்பா மேரேஜ் கலீசுன்னு கஜா சொன்னான்", "என் வீட்டுல நான் இருந்தேனே" இந்த பாட்டுக்களே வரும். அந்த பாட்டு முடியும் வரை தான் தரு அமைதியை இருப்பாள். பெரும்பாலான சமயங்கள் மேல் சொன்ன பாட்டுக்கள் அடுத்து அடுத்து வரும் என்பதால், ஒரு பத்து நிமிடத்துக்குள் என்ன சாப்பாடு ஊட்ட முடிகிறதோ அது தான் அவளின் அந்த வேளை சாப்பாடு!

ஒரு வழியாய் மேல் சொன்ன ஒரு பாடலை காட்டி அவளுக்கு சோறூட்ட ஆரம்பித்தேன். இரண்டு வாய் வாங்கினாள். பிறகு என் மடியில் இருந்து இறங்கி விட்டாள். அவளுக்கு அப்பாவுடன் இருந்தால் விளையாட வேண்டும். ஒரு சுவரோரத்தில் நின்று கொண்டு என்னை துரு துருவென்று பார்த்தாள். அப்படி என்றால், வாப்பா வெளையாடுவோம் என்று அர்த்தம். நான் சீரியசாய் சோறூட்ட போனால் அவள் கெக்கே புக்கே என்று சிரித்துக்கொண்டே கிடந்து ஓடினாள்.  சோற்றுக் கையுடன் ஒரு கையால் அவளை பிடித்தால், "எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ" ரேஞ்சுக்கு பாம்பாய் வளைந்தாள்! கை சுளுக்க அவள் விழாமல் பாதுகாத்து தட்டின் அருகில் கடத்தி வந்தேன். ஒரு வாய் ஊட்டினேன். ரசத்தை அதிகம் ஊற்றி விட்டதால் அது அவள் தேகமெங்கும் கொட்டியது. குழந்தைகளுக்கு ஒரு துளி விழுந்தால் போதும், அதை கையில் எடுத்து, துடைத்து, கழுவி, தேய்த்து அதை பரப்புவது என்றால் அதுகளுக்கு கொள்ளை பிரியம்! அதையே அவளும் செய்தாள். "இரும்மா!", என்று நான் துடைத்து விடுவதற்குள் என் முகத்தில் கொஞ்சம் தேய்த்தாள். இதை தவிர்த்து, அவள் நடக்கும்போது நான் ஊட்டி விட்டதால் தரையெங்கும் கொட்டியது, என் கை அவள் வாய்க்குள் நுழையும் சமயம் அவள் திமிரியதால் அவள் கன்னத்தில் ஒட்டியது, திடீரென்று அவளுக்கு ஒரு ஞானோதயம் வந்து, "ச்சே...இந்த கருமத்தையா சாப்பிடறோம்" என்று அவள் துப்பியது என்று எல்லா வகையிலும் எல்லா இடத்திலும் சாதம் கிடந்தது.

இதன் நடுவே, தரையில் கிடக்கும் தலையணையில் அவளின் தலையை வைக்காமல் தன் முதுகை வைத்து அப்படியே பின்னால் சாய்ந்து அவளின் தலையில் அடிபடாமல் ஃபீல்டிங் செய்து [ஜாண்டி ரோட்சுக்கு எத்தனை குழந்தைகள்?], "அப்பா கொடுக்குற ரசத்துக்கு இதுவே பரவாயில்லை!" என்று அவளே முடிவெடுத்து, அவளின் மூக்கிலிருந்து டைரக்டாய் வாய்க்குள் போவதை தடுத்து, இங்கும் அங்கும் ஓடி ஆடி, அலுத்து, தரையில் கிடக்கும் தலையணை, விளையாட்டு சாமான் ஆகியவற்றில் சிறுநீர் கழித்து, அவளுக்கு ஜட்டி மாற்றி மறுபடியும் அவள் அதில் கால் வைப்பதுற்குள் அதை துடைத்து [கவனிக்க எல்லாம் ஒரு கையில்]....ஸ்வபா....காஜல் அகர்வால் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். டீவியில் "கண்டாங்கி" என்ற ஒரு சொல் தான் காதில் விழுந்தது...ம்ம்ம்ம்ம்ம்!

இத்தனை களேபரங்களுக்கு நடுவில் வெற்றிகரமாய் அவளுக்கு ரசம் ஊட்டி, அடுத்த அரை மணி நேரத்தில் பால் சாதமும் ஊட்டும்போது தான் ஒரு விஷயம் உரைத்தது! என் மனைவி "தரு" முழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் முக்கால்வாசி நேரம் அவளிடம் கேட்கும் ஒரே  கேள்வி..."பசிக்குதாம்மா? சாப்பிடறியா!!!!!!!!!!!!!! MOTHER!

அப்போது, டீவியில் "வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு" பாட்டு ஓடியது. தரு அசையாமல் அந்த பாடலை ரசித்துக் கொண்டிருந்தாள் [அது எப்படி எல்லா பொண்ணுங்களுக்கும் பொண்ணுங்களை திட்ற பாட்டு புடிக்குதுன்னு புரியலை...]! அதில் ஒரு வரி...

மம்மி சொன்ன பொண்ண கட்டினா டார்ச்சர் இல்லைடா - நீயும்
டாவடிச்ச பொண்ண கட்டினா டவுசர் அவுரும்டா...

நான் நினைத்துக் கொண்டேன்....

"மம்மி சொன்ன பொண்ண கட்டினாலும், டாவடிச்ச பொண்ண கட்டினாலும்..... டவுசர் அவுர்றது உறுதி!

"தரு" பிறந்து நேற்றோடு ஒரு வருடம் முடிந்து விட்டது. அவளின் முதலாம் ஆண்டு பிறந்த நாள் நேற்று! வழக்கமான பிறந்தநாள் கொண்டாட்டங்களில் எனக்கு எப்போதும் விருப்பம் இருந்ததில்லை. என்னைக் கேட்டால் பிறந்த நாள் கொண்டாட்டத்தை போல அலுப்பான ஒரு விஷயம் கிடையாது என்றே சொல்வேன். அதன் செலவு ஒரு புறம் இருக்கட்டும், அந்த  நிகழ்ச்சியை நடத்தி முடிப்பதற்குள் இருக்கும் தர்ம சங்கடங்கள் இருக்கிறதே...குடும்பம், நண்பர்கள், உற்றார், உறவினர், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று அனைவரையும் கூப்பிட வேண்டியது, நம் குழந்தைக்கு கச கசவென்று ஒரு ஆடை அணிவித்து அவர்கள் முன்னால் ஒரு ஷோகேஸ் பொம்மை போல நிறுத்தி வைத்து விட வேண்டியது. இத்தனை நாள் தனியாய் தேமேயென்று இருந்த குழந்தை இன்று இவ்வளவு பெரிய கூட்டத்தை பார்த்து அதிர்ச்சியாகி அழும். அதை சமாதானம் செய்ய, அந்த நிகழ்ச்சிக்கு வந்த ஐம்பது பேரும் குழந்தையின் முகத்துக்கு அருகே தங்கள் முகத்தை டைட் க்ளோசப்பில் வைத்துக் கொண்டு ஐநூறு வழிகளை சொல்வார்கள். குழந்தை இன்னும் வீரிட்டு அழும். ஒரு வழியாய் கேக்கை காட்டி, மெழுகுவர்த்தியை காட்டி அதை சமாதானம் செய்து கேக்கை வெட்டச் செய்வோம். "ஹேப்பி பெர்த்டே" பாடுங்கள், பாடுங்கள் என்று கெஞ்சி எல்லோரையும் அபஸ்வரத்தில் பாட வைக்க வேண்டியது. ஒரு வயது குழந்தை, கொஞ்சம் யோசித்து பாருங்கள்! கிலி பிடித்து போயிருக்கும். இதில் போட்டோ எடுத்தோமா, வீடியோ சரியாய் வந்ததா என்று அந்த டென்ஷன் வேறு! ஸ்வபா...

என்னை பொருத்தவரை மேல் சொன்ன அத்தனைக்கும் வித்திடுபவர் முக்கால்வாசி வீட்டு அம்மாவாக தான் இருக்க வேண்டும். கணவர்கள் பெரும்பாலும் சிக்கனமாகவே எல்லாவற்றையும் முடிக்கப் பார்க்கிறார்கள் என்பது என் கணிப்பு! [மகனை/மகளை அரசாங்க பள்ளியில் சேர்க்கலாம் என்று எனக்குத் தெரிந்து ஒரு மனைவியும்/அம்மாவும் சொன்னதில்லை [அவர்களே அரசு பள்ளியில் படித்த பெண்களாய் இருந்தாலும்!]. அதை போல!] குழந்தை பிறந்ததும், பிடிக்கிறதோ இல்லையோ, நாமும் மேல் சொன்னதை எல்லாம் கடந்து தான் போக வேண்டும் என்று நினைத்திருந்தேன். நல்ல வேளையாக என் மனைவி அப்படி ஒரு நிலைக்கு என்னை தள்ளவில்லை. என் மீது உள்ள பிரியம் ஒரு பக்கம் என்றாலும், தருவை படுத்த விரும்பாததே முக்கிய காரணம்! எப்படியோ நான் தப்பித்தேன்!


சரி அப்படி என்ன தான் செய்தோம்? முதலில் நிறைய கூட்டம் சேர்க்க வேண்டாம் என்று முடிவு செய்தோம். நாங்கள், என் பெற்றோர்கள், மனைவியின் பெற்றோர்கள், என் தம்பி குடும்பத்தினர். [என் மனைவி ஒரே பெண்!] அவ்வளவு தான்! மொத்தம் 8 பேர். அதாவது தரு வுக்கு தெரிந்த முகங்கள் மட்டுமே! வீட்டில் கொண்டாடுவதை விட, ஒரு நல்ல அமைதியான இடத்தில் கொண்டாடலாம் என்று ஒரு விருந்தினர் விடுதி ஏற்பாடு செய்தோம். தக்ஷின் சித்ரா! சென்னையில் [ஈ சி ஆர் ரோட்டில்] இப்படி ஒரு இடம் இருக்கிறதென்று பலருக்குத் தெரியாது. தெரியாதென்றால் தெரிந்து கொள்ளுங்கள். http://www.dakshinachitra.net/ தக்ஷின் சித்ரா ஒரு கலாச்சார மையம். தென் இந்திய பகுதிகளின் பாரம்பரியம், கலை, கைத்தொழில் என்று பலவித விஷயங்களை இங்கு காட்சிப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இங்கு நான் ஏற்கனவே சில முறை சென்றிருந்தாலும், அங்கு விருந்தினர் விடுதி எல்லாம் இருக்கிறது என்று தெரியாது. எட்டு பேர், நான்கு அறைகள். அருமையாய் இருந்தது. முதல் நாள் இரவு சென்று தங்கி விட்டோம். காலையில் எழுந்து சரியாய் அவள் பிறந்த நேரமான "பதினொன்று எட்டுக்கு" கேக் வெட்டி அவளின் பிறந்தநாளை கொண்டாடினோம். பிறகு தக்ஷின் சித்ராவை சுற்றி பார்த்தோம். பரந்து விரிந்த இடத்தில் தரு அழகாய் நடை பயின்றாள். அவள் அக்காவுடன் விளையாடினாள். அவள் பிஞ்சு விரல்களால் களி மண்ணில் பானை செய்தாள்! ஊஞ்சல் ஆடினாள். மர நிழலில் இளைப்பாறினாள். பிறகு மதியத்திற்கு மேல் அங்கிருந்து திருவிடந்தை கோயில். அங்கிருந்து கோவளம் பீச்! கடல் அலைகளிடம் ஆசி! அவளின் பிறந்த நாள் இனிதே கழிந்தது.

இதை விட எங்களுக்கு திருப்திகரமாய் இருந்தது, இன்று காலை அவளின் பெயரில் அருகில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ஒரு மரம் நட்டது! முதல் பிறந்தநாளுக்கு மகளுக்கு என்ன பரிசு கொடுப்பது என்று பல நாளாய் குழம்பிக் கொண்டிருந்தேன். திடீரென்று இந்த யோசனை தோன்றியது. சாலையில் வைத்தால் நம்மால் சரியாய் பராமரிக்க முடியாது, சாக்கடை, சாலைப் பணி என்று தோண்டி விடுவார்கள். வீட்டில் வைக்கும் அளவுக்கு வசதி இல்லை. சரி அருகில் உள்ள பூங்காவில் வைக்கலாம் என்று தோன்றியது. இரு வாரத்துக்கு முன் பஞ்சாயத்து அலுவலகம் சென்று கேட்டேன். நான் எதிர்பார்த்ததை விட ஆர்வமாய் பேசினார்கள். "நீங்கள் தேதி மட்டும் சொல்லுங்க, நல்லா செய்துடலாம்!" என்றதும் என்னால் நம்பவே முடியவில்லை. மரக் கன்றுகளையும் அவர்களே கொடுப்பதாய் சொன்னார்கள். நேற்று எதற்கும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த ஏ. ஈ யை அழைத்தேன். "என்ன சார், நம்ம பேசின படி பண்ண முடியுமா என்று கேட்டேன். பதிலுக்கு அவர், "என்னப்பா இப்படி கேக்குறே? திடீர்னு பேக் எடுக்குறே? [!] கண்டிப்பா பண்ணலாம்பா" என்றார். காலை பதினோரு மணி என்று நேரம் குறித்து சென்றோம். அவர் அவரின் உதவியாளர்கள் இருவரை அனுப்பினார். அவர்களே சென்று புங்கை [நல்ல நிழல் தரும்] மரக் கன்று வாங்கி வந்தார்கள். பள்ளம் தோண்டினார்கள். என் "தரு" வின் கையினால் அந்தத் "தரு" மண்ணில் இறங்கியது. அவளே நீர் வார்த்தாள். பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாய் இருந்தது.



அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு இனிப்பு டப்பாவை வழங்கி விட்டு "வழக்கம் போல்" ஏதாச்சும் பண்ணனுமா என்று கேட்டதற்கு "அப்புறம் நாங்க பண்ணதுக்கே அர்த்தம் இல்லாமல் போயிடும் சார், ஒன்னும் வேணாம்! நீங்க கொடுத்ததே போதும்" என்று மறுத்து  விட்டார்கள். [கலிகாலம்!] இனி என் தருவோடு அந்தத் தருவையும் வளர்க்க வேண்டிய பொறுப்பு எனக்கு வந்து விட்டது! என்னை பொருத்தவரை, முதல் பிறந்தாளில் அவளோடு சேர்ந்து ஒரு மரமும் வளர்ந்து பெரிதானால் அதை விட ஒரு சிறந்த பரிசு அவளுக்கோ, இந்த சமூகத்துக்கோ கிடைக்குமா தெரியவில்லை. என்ன சொல்கிறீர்கள்?
என் மகள் பற்றியும், அவளின்  சேட்டைகளை பற்றியும்  நிறைய எழுதுவேன் என்று நினைத்தேன். இந்த ஒரு வருடத்தில் மிகக் குறைவாகவே எழுதி இருக்கிறேன். என் மகள் பிறந்து, இன்னும் இரண்டு வாரங்களில் ஒரு வருடம் ஆகிவிடும். அவளின் பெயர் "தரு"! மிச்ச பாதி எங்கே என்று தானே கேட்கிறீர்கள். பெயரே அவ்வளவு தான். "தரு" என்றால் "மரம்" என்று பொருள். "கல்பத்தரு", "கற்பகத்தரு" என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். கேட்டதெல்லாம் தரும் தேவலோக மரம். இன்பத்தை அள்ளி அள்ளி தரும் ஒரு மரத்தையே என் மகளுக்கு பெயராய் வைத்து விட்டேன். என்ன சரி தானே? பெயரை சொன்னால் ஒரே தடவையில் விளங்க வேண்டும், புதிதாய் இருக்க வேண்டும் என்று  நினைத்து வைத்தேன்.பெரிய தப்பு என்று பிறகு தான் உணர்ந்தேன். "என்ன பேரு? தரூனா? பொண்ணுன்னு சொன்னீங்க"என்று கேட்டு சாகடிக்கிறார்கள். பேசாமல் "மீனாட்சி", "அம்புஜம்" என்று வைத்திருக்கலாம். நாளை வளர்ந்து என் மகள் என்ன சொல்லப் போகிறாளோ?

நான் சொல்ல வந்தது  இதுவல்ல. தரு பத்து மாதத்தில் நடை பயிலத் தொடங்கி விட்டாள். குழந்தைகளின் செயல்களை கவனிப்பதே ஒரு போதை தரும் இன்பம். "பாப்பா யாரு", "சாமி கும்பிடு" போன்ற பல விஷயங்களை நாம் சொல்லி அது செய்யும் போது பார்ப்பதை விட, யாருமே நம்மை கண்டு கொள்ளவில்லை, யாரையும் நான் கண்டு கொள்ளவில்லை என்ற நினைப்பில் அவர்கள் பாட்டுக்கு தங்கள் செயல்களை மும்முரமாய் செய்து கொண்டிருக்கும்போது அவர்களை  கவனிக்க வேண்டும்! அதை விட அழகான ஒரு விஷயம் இந்த உலகில் கிடையாது. எதையோ ஒன்றை உருட்டிக் கொண்டிருப்பார்கள். பொம்மையை பார்த்து கண்ணைச் சுருக்கி சிரிப்பார்கள். பல்லு போன கிழவி ஒன்று எதையோ ஒன்றை புரியாமல் புலம்பிக் கொண்டிருப்பது போல் "தத்தக்க பித்தக்க" என்று பேசிக் கொண்டிருப்பார்கள். திடீரென்று தலையெடுத்து நம்மை பார்க்கும்போது நாம் அதை தான் கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிந்த உடன் அதன் முகத்தில் வரும் வெட்கம் இருக்கிறதே...கிளாஸ்!  அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

அன்று நானும் "தரு"வும் கட்டிலில் விளையாடிக் கொண்டிருந்தோம். அவளுக்கு அன்று விளையாடும் மூட் இல்லை. இன்று எப்படியும் நடந்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு விட்டாள் போலும். கட்டிலில் நடப்பது தரையில் நடப்பதை போல் எளிதல்ல. ஆனால் விழுந்தால் அடிபடாது  என்று அவளுக்குத் தெரிகிறது. மேலும் அப்பாவும் அருகில் இருக்கிறார் என்ற கூடுதல் நம்பிக்கை வேறு. சில சமயம் நல்ல விளையாட்டு மூடில், நின்று கொண்டு வேண்டுமென்றே பின்னால் சாய்வாள், நான் பதறி போய் பிடித்தால் குலுங்கி குலுங்கி சிரிப்பாள்.  ஆனால் அந்த விளையாட்டை கட்டிலில் மட்டும் தான் செய்வாள்!

அன்றும் அப்படித் தான், ஆனால் பின்னால் சாயாமல் ஒழுங்காய் நடந்து கொண்டிருந்தாள். எங்கள் வீட்டில் நல்ல பெரிய கட்டில். அதனால் அவளுக்கு ரொம்ப வசதி. கட்டிலின் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்திற்கும், அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பக்கத்திற்கும் என்று மாறி மாறி நடந்து கொண்டிருந்தாள். அப்போது ஒன்று கவனித்தேன். அவளுக்காக ஒரு சிறிய வெள்ளை தலையணை வைத்திருப்போம். அவளாகவே தனியாய் எழுந்து நிற்பதே பிரம்ம பிரயத்தனம். இதில் அம்மணி ஒரு கையில் அந்த தலையணையை தூக்கிக் கொண்டே எழுந்தாள். அதை ஒரு கையில் வைத்துக் கொண்டே நடந்தாள். அதனால், பல முறை விழுந்து கொண்டே இருந்தாள். "அதை கீழே போடும்மா..நீ நட" என்று நான் அறிவுரை கூறி அந்த தலையணையை அவள் கையிலிருந்து வாங்கிக் கொண்டாலும், மீண்டும் மீண்டும் அதை அவள் கைகளில் வாங்கிக் கொண்டாள். பிறகு தான் எனக்கு ஒன்று புரிந்தது. கார்ப்பரேட் உலகில், "எக்ஸ்ட்ரா மைல்" என்று அடிக்கடி ஒன்றை சொல்வார்கள். அதாவது உங்களால் எவ்வளவு முடியுமோ அதை விட ஒரு படி மேலே உழைப்பது என்று பொருள். குழந்தைகள் அதை வெகு இயல்பாய் செய்கிறார்கள். கட்டிலில் சரியாய் நடப்பதே சிரமம், ஆனால் அதையும் தாண்டி கையில் ஒரு பொருளை வைத்துக் கொண்டு நடந்தால் இன்னும் கடினமாய் இருக்கும். ஆனால், நாளை தரையில் நடக்கும்போது அந்தப் பயிற்சியே அவளுக்கு கை கொடுக்கும்.  அதனால் தரையில் வெகு எளிதாய் நடக்க முடியும்! என்ன ஒரு அறிவு பாருங்கள். நான் ஒன்று புரிந்து கொண்டேன். குழந்தைகள் இயல்பிலேயே புத்திசாலிகளாய் தான் இருக்கிறார்கள். நாம் தான் கண்டதை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து முட்டாளாக்கி விடுகிறோம்!!