இந்த இடம் எனக்கு புதுசு தான்..ஒரே கூட்டமா, கசகசவென இருந்தது..நிறைய லைட் போட்ருந்தாங்க! அதான் கொஞ்சம் மனசுக்கு நல்லா இருந்தது. வழக்கம் போல சுத்தி முத்தி பார்க்க ஆரம்பிச்சேன். பொறந்ததுல இருந்தே எனக்கு இந்த பழக்கம். எங்க வந்தாலும், எது எது எப்படி எப்படி இருக்குன்னு கூர்ந்து பாக்குறது என் வழக்கம்.! அப்படி தான் பாத்துட்டு இருந்தேன். ஒரு 2 வரிசை தள்ளி ஒரு பொண்ணு. அவளும் என்னை மாதிரி தான்னு நினைக்கிறேன், முட்டை கண்ணை வச்சுட்டு, அதை உருட்டி உருட்டி அங்கே இங்கே பாத்துட்டு இருந்தா..ரெண்டு பேர் பார்வையும் ஒரு இடத்துல மோதிடிச்சி..மோதித் தானே ஆகனும்! அவ எப்படி இருக்கான்னு சொல்லைலயே..வயசுக்கேத்த உடம்புன்னு சொல்லலாம். முட்டைக் கண்ணு. ஜீன்ஸ் ல டாப்ஸ¤ம் ஸ்கர்ட்டும் போட்ருந்தா..உங்களுக்குத் தான் தெரியுமே, இந்த காலத்து பொண்ணுங்க எப்படி சட்டை போட்றாங்கன்னு..அதே தான்..அவ கைய தூக்கும் போதெல்லாம் தொப்புள் தெரிஞ்சது..இந்த மாதிரி எல்லாம் பாத்தா எனக்கு அப்படி ஒன்னும் ஆறதில்லை..பசங்க ஏன் தான் இதுக்கெல்லாம் அலையிறாங்களோன்னு தோனும்!

என்ன சொல்லிட்டு இருந்தேன், ரெண்டு பேர் பார்வையும் மோதிச்சா, நான் அவளைப் பாக்காத மாதிரி திரும்பிட்டேன். இப்படி எத்தனை நேரம் அவ என்கிட்ட இருந்தும் நான் அவகிட்டயும் தப்பிக்க முடியும் சொல்லுங்க. இந்த தடவை நானும் அவளும் நேருக்கு நேர் பாத்துகுட்டோம். அட என்ன..இது என்னைப் பாத்து சின்னதா சிரிக்கிறாளே..

ஒருவேளை எனக்கு தெரிஞ்ச பொண்ணா, நானே இந்த ஊருக்குப் புதுசு, இவளுக்கு என்னை எப்படி தெரியும்? ஒருவேளை லூசோ? சே, சே..ஆளைப் பாத்தா அப்படி தெரியலையே..லூசா இருந்தா இந்த மாதிரி இடத்துல எல்லாம் எப்படி வர முடியும்?

பதிலுக்கு சிரிக்கிறதா வேணாமா, பொம்பளை சிரிச்சா போச்சு பொகையிலெ விரிச்சா போச்சுன்னு சொல்வாங்களே, இப்போ சிரிப்பா, அப்புறம் பக்கத்துல வந்து உக்காருவா, எனக்கு ரொம்ப போர் அடிக்குது, கொஞ்சம் கம்பெனி கொடுங்கன்னு கேப்பா, அப்புறம் ·போன் நம்பர் கேப்பா, அப்படியே பைக் ல எங்களை எல்லாம் கூட்டிட்டு போக மாட்டீங்களாம்பா, ரிங் ரோட்டுக்கு போவோம் அங்கே தான் யாரும் இருக்க மாட்டாங்கன்னு ஆசை காட்டுவா, அவளோட ஆளுங்க அங்கே ஏற்கனவே வந்திருப்பாங்க, கழுத்துல கை வச்சி என்னோட செயின், ப்ரேஸ்லெட், பணம், செல் ·போன் எப்படி எல்லாத்தையும் புடுங்கிட்டு, மூடு சரியில்லேன்னா கொன்னுட்டும் போயிடுவாங்க, சரி அப்படியே அவ அந்த மாதிரி பொண்ணா இல்லைன்னாலும், நல்லா கொஞ்ச நாள் பேசிட்டு, பைக்ல சுத்திட்டு, நீ இல்லாம என் வாழ்க்கை நிறைவடஞ்சுருக்காதுடா புஜ்ஜி [செல்லமா கூப்பிட்றாளாம்!]ன்னு சினிமா டயலாக் எல்லாம் பேசிட்டு, அமேரிக்கா மாப்பிள்ளை வந்தவுடனே, ஒரு பொண்ணு உங்ககிட்ட சிரிச்சு பேசிறக்கூடாதே, உடனே உங்களையே நெனச்சு உருகுறான்னு நெனச்சுக்குறது, "பாய்ஸ் ஆர் சிக்"னு சொல்லிட்டு போயிட்டே இருப்பா...இந்த பொண்ணுங்களுக்கெல்லாம் இதானே வேலை..நாட்ல எத்தனை நடக்குது, எதுனா நடந்தா அவ அழுதா போதுமே ஊரே கூடிடும், நான் சொல்றதையா கேப்பாங்க..

எனக்கு எதுக்குங்க இந்த வம்பெல்லாம்...னு

அனாவசியமா கண்டதெ நெனைக்காம நானும் அவளைப் பாத்து சிரிச்சேன். அடா, அடா..அவளோட அந்த முட்டை கண்ணுல தான் என்ன ஒரு உற்சாகம், துள்ளல்..அட போங்க நீங்க வேற, நாங்க என்ன உங்களை மாதிரியா, எங்க ரெண்டு பேர் வயசைக் கூட்டினாலே ஒரு 5 அல்லது 6 தான் இருக்கும்..இதுல அவளைப் பாத்து சிரிக்கிறதுக்கு எனக்கு என்ன பயம் சொல்லுங்க?

அன்று வியாழக்கிழமை..அது தான் இத்தனை கூட்டம், .அந்த மசூதியில்! அந்த மசூதியில் மந்திருத்துக் கொண்டால் அனாசின், க்ரோசின், நோவாஜின் இப்படியான அலோபதி மருந்துகள் செய்யத் தவறுவைதை அந்த மந்திரம் செய்யும் என்பது பல தாய்மார்களின், தந்தைமார்களின் நம்பிக்கை. அந்த மந்திரத்தின் மேல் அவ்வளவு நம்பிக்கை இருப்பினும் அவர்கள் அந்த மருந்துகளையும் உட்கொள்ளத் தவறுவதில்லை.. எப்படியோ சொஸ்தமானால் சரி..உடல் தேறியதும் எதனால் தேறியது என்று ஆராய்ச்சி செய்ய அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை..அப்படி ஒரு நம்பிக்கைக்குப் பாத்திரமான தாயின் உந்துதலால் தான் அவன் அங்கு வேண்டா வெறுப்பாய் வந்தான். "திருஷ்டி பட்ருக்கும், கண் பட்ருக்கும் அதனால் தான் உனக்கு உடம்புக்கு முடியாம போகுது..என்ன மாத்திரை சாப்பிட்டாலும் இதெல்லாம் குணம் ஆகாது. மசூதியில் மந்திருச்ச மறுநாள் சரியா போயிடும்" என்று இழுத்து வராத குறையாய் அவனை இங்கு அழைத்து வந்திருந்தாள். வெளியூரில் சாதாரண கிளார்க் வேலை பார்த்து, மாதமானால் சொலையாய் ரூபாய் 1000த்தை வீட்டுக்கு அனுப்புகிறவனாய் இருந்தாலும், யாருமே செய்யாததை அவன் பிறர் திருஷ்டி, கண் படும்படி என்ன செய்து விட்டான் என்ற கேள்வி எழாமல் இல்லை..அப்படி என்றால் சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன், அப்துல் கலாம் தினமும் அல்லவா மந்திரிக்கப் பட வேண்டும் என்பது அவனுடைய சிந்தனை..இந்தக் காலத்துல பசங்க எங்கே பெத்தவங்களை நல்லா கவனிச்சிக்கிறாங்க..இவன் மாசம் ஆனா ஒழுங்கா பணம் அனுப்புறதே போதுமே, அந்த எதிர் வீட்டு மாமியோட கொள்ளிக் கண் ஒன்னு போதாதா என்பது அவனுடைய தாயின் சிந்தனை! அவரவர்க்கு அவரவர் யோசனை..

அந்தத் தெருவே ஏதோ பாகிஸ்தானில் இருப்பது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தியது..அலாவுதீன் மெட்டல்ஸ், மொய்தீன் ·பர்னிச்சர்ஸ் இப்படியான விளம்பரப் பலகைகளும் குர்தா பைஜாமா, குள்ளாய் அணிந்து தாடியுடன் திருபவர்களைப் பார்த்தால் அந்த பிரமை ஏற்படுவது இயற்கை தானே? மசூதியிலிருந்து சாலை வரை வரிசை நீண்டிருந்தது..ஆண்களின் வரிசை தனி, பெண்களின் வரிசை தனி. சொற்பமான ஆண்கள் நிற்பதைக் கண்டவுடன் அவனுக்கு கொஞ்சம் நிம்மதி.

தாய்மார்கள் ஜாதி மதம் தெரியா, யாரைப் பார்த்தாலும் புன்னகை பூக்கும் குழந்தைகளுடன் நின்றனர். குழந்தைகள் பிறரைப் பார்த்து சிரிப்பதைப் பார்த்து குழந்தைகளின் தாய்மார்களுக்குத் தான் எத்தனை குஷி! என்ன ஒரு பெருமை அவர்கள் முகத்தில். இதோ ஆண்களின் வரிசையில் அவனுக்கு முன்னால் நிற்பவரும் கூட ஒரு அழகான குழந்தையுடன் தான் நிற்கிறார். அந்தக் குழந்தை இந்த உலகத்தையே தன்னுள் உள்ளிழுத்துக் கொள்ளும் ஆர்வத்துடனும், ஆவலுடனும் சுற்றும் முற்றும் பார்க்கிறது.. சினிமா தியேட்டருக்குப் போனால் அந்தப் பெண் வரிசையில் நிற்க வேண்டும், மசூதிக்கு வந்தால் அந்த ஆண் வரிசையில் நிற்க வேண்டும் என்று அவர்களுக்குள் ஒப்பந்தம் போலும்! குழந்தையை தன் கணவனிடம் ஒப்படைத்து விட்டு காத்துக் கொண்டிருக்கிறாள். அது முஸ்த·பாவின் கடையை மறைப்பதால் அவர் "இந்தாம்மா ஒரு ஓரமா நில்லுங்க? இப்படி கடைய மறைச்சுட்டு நின்னா நான் எப்படி வியாபாரம் பார்க்கிறது? என்னம்மா, தெனம் உங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கு" என்று சலித்துக் கொள்கிறார். நான் அங்கன நிக்கிறேன் என்று கணவனிடம் ஒரு இடத்தைக் காட்டி அவள் சென்று விட்டாள்.

அந்த இடத்தில் அவன் ஒரு மார்க்கமாய் தான் இருந்தான்..கலைந்த கிராப்பும், ஏதோ ஒரு வித்தியாசமான துணியில் அரைக்கை சட்டையும், இன்றைய நாகரீகத்திற்கு ஏற்ப ஒரு அரை நிஜாரும் அணிந்திருந்தான்.. அவன் ஊரில் ஓய்வாய் இருக்கும்போது இப்படித் திரிவது தான் வழக்கமாம். நல்ல நாகரீகம்! அவனைப் பார்த்தால் யாருமே ஒரு கிளார்க் என்று சொல்ல முடியாது தான். "இந்தாம்மா, இங்கே வரிசையில் நிக்கிறவங்க எல்லாம் மனுஷங்களா தெரியலயா? ஏதோ நேரா போறே! வரிசையில் வாம்ம..6 மணியில இருந்து நிக்கிறோம்!" "நான் ஒன்னும் உள்ளே போலைம்மா சாமி இருக்காறான்னு பாத்தேன்! அவ்வளவு தான்.." தொடங்கி விட்டது தாய்மார்களின் சச்சரவு. அவனுக்கு எரிச்சலாய் வந்தது..தன் அம்மாவைத் தேடி முறைத்தான்..அந்தப் பார்வை "எதுக்கு என்னை இங்கே எல்லாம் கூட்டிட்டு வர்றே" என்பது போல் இருந்தது.. இதற்குள் இன்னொரு பெண் "எனக்கு 2 பஸ் புடிச்சு போகனும்மா, கொஞ்சம் என் பொண்ணை விடுங்களேன்!" என்று கெஞ்சினார். "ஆமா நீ தான் 2 பஸ் புடிச்சி போனும், நாங்க திரும்பினா வீடு வந்துரும்..போம்மா சும்மா!" என்றாள் எரிச்சலுடன்! இந்த முறை அவன் முறைக்க அவள் தாய் அங்கு இல்லை.. கூட்டத்தில் குழந்தைகள் அழத் தொடங்கின.."மாமா பாரு" என்று இவனைக் காட்டி குழந்தைகளின் அழுகையை நிறுத்த முயற்சிகள் நடந்து கொண்டிருந்தன..இவனும் வேண்டா வெறுப்பாய் குழந்தைக்கு சிரிப்புக் காட்ட முகத்தில் கோமாளித்தனம் செய்ய முயற்சித்தான்..பயனில்லை! குழந்தையின் தாய் தான் சிரித்தாள்! குழந்தை பயந்து மேலும் அழுதது..

அதற்குள் உள்ளே போன ஒவ்வொருவரும் முகத்தில் தண்ணீர் வழியவும், சிலர் புது கருப்புக் கயிருடனும் வெளியே வரத் தொடங்கினர். அவனுக்கு முன் 3 ஆண்கள் தான் இருந்தார்கள். அவனுக்கு தான் குழந்தையாய் இருந்த போது, இங்கு வந்ததும், எதிர்பாராமல் முகத்தில் தண்ணீர் அடித்ததும், அதற்காக அழுததும் ஏனோ ஞாபகம் வந்தது. திடீரென அவன் பேரைச் சொல்லி அவன் தாய் அழைத்ததும் திரும்பிப் பார்த்தான்..அவள் "இந்த பொண்ணை உன் பக்கத்துல நிறுத்திக்கிறியா, ரொம்ப தூரம் போகனுமாம்" என்று ஒரு சிறுமியை அனுப்பி வைத்தாள். அவன் "எனக்கென்ன யாரும் ஒன்னும் சொல்லைலன்னா சரி தான்" என்று பெண்கள் பக்கம் பார்த்தான். அவனுடைய கோமாளித்தனத்தைக் கண்டு சிரித்த அந்தப் பெண் அவனுடைய நிலையைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். எல்லோரையும் ஒழுங்காய் வரிசையில் வருமாறு சத்தம் போட்டுக் கொண்டிருந்தவள் அவனை ஏனோ முறைப்பது போல் அவனுக்குத் தோன்றியது.

இப்போது அந்தச் சிறுமி மட்டும் தான் அவனுக்கு முன்னால் இருந்தாள். பெண்கள் வரிசையில் இருப்பவர்களை மந்திருத்துக் கொண்டிருந்தார் அவர். அவரே தான்..தான் சிறுவனாய் இருந்த போது யார் மந்திருத்துக் கொண்டிருந்தாரோ, அவரே தான்..இன்னும் மந்திருத்துக் கொண்டிருக்கிறார். காலம் அவருடைய தாடியை சலவை செய்திருந்தது! அதே மாதிரி கையில் தண்ணீர் எடுத்து எதிர்பார்க்காத போது ஏதோ முணுமுணுத்து விட்டு முகத்தில் அடித்தார். ஆனால் அந்தக் குழந்தை அழவே இல்லை..கொஞ்சம் ஆச்சர்யப்பட்டுப் பார்த்ததோடு சரி! பழக்கப்பட்ட குழந்தை போலும். அந்த சிறுமிக்கு முடிந்தவுடன் அவன் உட்கார்ந்தான். எதுவும் கேட்கவில்லை...கையில் தண்ணீர் எடுத்தார். அவன் எதிர்பார்க்கத் தொடங்கினான். அடுத்த நொடி முகத்தில் தண்ணீர் தெளித்து 1 ரூபாய் என்றார். அவன், தண்ணீருக்கா? மந்திரத்துக்கா என்று புரியாமல் 1 ரூபாய் கொடுத்து விட்டு எழுந்தான். முகத்தை துடைத்துக் கொண்டே வெளியே வந்தான். திருஷ்டியும், பிறர் கண்பட்டதும் துடைத்துக் கொள்வதாய் நினைத்துக் கொண்டான்.

திருஷ்டி கழிப்பதில் மத வேற்றுமை பாராட்ட வேண்டியதில்லை என்று சொல்லி மசூதிப் புறாக்கள் பறந்து சென்றன..இதற்காகவாவது இந்த மாதிரி மூட பழக்க வழக்கங்கள் இருக்கட்டும் என்று அவனுக்குத் தோன்றியது!