இன்னொரு பால்வெளியில்
நம் சூரியனின் பெயர் நட்சத்திரம்
தான் இல்லையா?



சில பெண்களுக்கு
தாங்கள் "பெரிய" பெண்கள்
என்று நினைப்பு!



முகம் புதைந்து அழுகிறேன்
சோகத்தில் ஒரு சுகம்.
சோகத்தில் என்ன சுகம் வேண்டி இருக்கிறது?



பரஸ்பர அன்பில் நெகிழ்ந்தேன்
பார்வையை கண்ணீர் மறைக்க
உலகம் தெளிகிறது



"சடசடவென்று" வரியை ஆரம்பிக்க வேண்டும்
"மடமடவென்று" எழுதி முடித்து விடலாம் தான்!
வழக்கமான இரட்டைக் கிளவி கூடாது;
இது அடுக்குமா? ஐயோ ஐயோ!!

அக்கினிப் பிரவேசம்

“இது யாருக்கும் தெரியக் கூடாது கொழந்தே! தெரிஞ்சா அதோட ஒரு குடும்பமே அழிஞ்சு போகும். நம் வீட்டிலேயும் ஒரு பொண் இருக்கே, அவளுக்கு இப்படி ஆகி இருந்தா என்ன பண்ணுவோம்னு யோசிக்கவே மாட்டா. பரம்பரை துவேஷம் மாதிரி குலத்தையே பாழ் பண்ணிடுவா... மத்தவாளைச் சொல்றேனே. இன்னொருத்தருக்குன்னா என் நாக்கே இப்படிப் பேசுமா? வேற மாதிரித்தான் பேசும். எவ்வளவு பேசி இருக்கு!” என்று புலம்பிக் கொண்டே கொடியில் கிடந்த துண்டை எடுத்து அவள் தலையைத் துவட்டினாள். தலையை துவட்டியபின் அவளை முகம் நிமிர்த்திப் பார்த்தாள். கழுவித் துடைத்த பீங்கான் மாதிரி வாலிபத்தின் கறைகள் கூடப் படிவதற்கு வழியில்லாத அந்தக் குழந்தை முகத்தைச் சற்று நேரம் உற்றுப் பார்த்து மகளின் நெற்றியில் ஆதரவோடு முத்தமிட்டாள். “நீ சுத்தமாயிட்டேடி குழந்தே, சுத்தமாயிட்டே. உன் மேலே கொட்டினேனே அது ஜலமில்லேடி, ஜலம் இல்ல. நெருப்புன்னு நெனைச்சுக்கோ. உன் மேலே இப்போ கறையே இல்லே. நீ பளிங்குடீ. பளிங்கு.. மனசிலே அழுக்கு இருந்தாத்தான்டி அழுக்கு. உம் மனசு எனக்குத் தெரியறது. உலகத்துக்குத் தெரியுமோ? அதுக்காகத்தான் சொல்றேன். இது உலகத்துக்குத் தெரியவே கூடாதுன்னு. என்னடீ அப்படிப் பார்க்கறே? தெரிஞ்சுட்டா என்ன பண்றதுன்னு பார்க்கறியா? என்னடி தெரியப் போறது? எவனோடயோ நீ கார்லே வந்தேன்னுதானே தெரியப் போறது? அதுக்கு மேலே கண்ணாலே பார்க்காததெப் பேசினா அந்த வாயைக் கிழிக்க மாட்டாளா? ம்... ஒண்ணுமே நடக்கலேடி, நடக்கலே! கார்லே ஏறிண்டு வந்ததை மட்டும் பார்த்துக் கதை கட்டுவாளோ? அப்பிடிப் பார்த்தா ஊர்லே எவ்வளவோ பேரு மேல கதை கட்ட ஒரு கும்பல் இருக்கு. அவாளே விடுடி.. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். உன் மனசிலே ஒரு கறையுமில்லே. நீ சுத்தமா இருக்கேன்னு நீயே நம்பணும்கிறதுக்குச் சொல்றேன்டி... நீ நம்பு.. நீ சுத்தமாயிட்டே, நான் சொல்றது சத்யம், நீ சுத்தமாயிட்டே....? ஆமா - தெருவிலே நடந்து வரும்போது எத்தனை தட்வை அசிங்கத்தைக் காலிலே மிதிச்சுடறோம்... அதுக்காகக் காலையா வெட்டிப் போட்டுடறோம்? கழுவிட்டு பூஜை அறைக்குக் கூடப் போறோமே; சாமி வேண்டாம்னு வெரட்டவா செய்யறார் - எல்லாம் மனசுதான்டி... மனசு சுத்தமா இருக்கணும்... ஒனக்கு அகலிகை கதை தெரியுமோ? ராமரோட பாத துளி பட்டு அவ புனிதமாயிட்டாள்ன்னு சொல்லுவா, ஆனா அவ மனசாலே கெட்டுப் போகலை. அதனாலேதான் ராமரோட பாத துளி அவ மேலே பட்டுது. எதுக்குச் சொல்றேன்னா... வீணா உன் மனசும் கெட்டுப் போயிடக் கூடாது பாரு.. கெட்ட கனவு மாதிரி இதெ மறந்துடு.. உனக்கு ஒண்ணுமே நடக்கல்லே..”

புதிய வார்ப்புகள்

மனிதனே ரொம்பப் பழமையான உலோகம்தான். காலம்தான் அவனைப் புதிது புதிதாக வார்க்கிறது. வாழ்க்கையின் அந்த நிர்ப்பந்தத்துக்கு முடிந்தவர்கள் வளைகிறார்கள். வளைய முடியாதவர்கள் உடைந்து நொறுங்குகிறார்கள். 

வளைந்தாலும் சரி, உடைந்தாலும் சரி, காலம் புதிது புதிதாய் மனிதனை வார்த்துச் செல்கிறது. அந்தக் குடும்பம் வாழ்க்கையின் வார்ப்புக்கேற்ப வளைந்திருக்கிறதா, உடைந்திருக்கிறதா? அல்லது, இரண்டுமே நிகழ்ந்திருக்கிறதா? 

டாக்டர் வந்தபின் தெரியும்! 

யுகசந்தி

அதோ, காலை இளவெயிலில், சூடில்லாத புழுதி மண்ணில் பாதங்கள் அழுந்தி அழுந்திப் பதிய ஒரு பக்கம் சாய்ந்து சாய்ந்து நடந்துக்கொண்டிருக்கும் பாட்டியின் தோற்றம்.....

வேகமாய் ஆவேசமுற்று வருகின்ற புதிய யுகத்தை, அமைதியாய் அசைந்து அசைந்து நகரும் ஒரு பழைய யுகத்தின் பிரதிநிதி எதிர் கொண்டழைத்துத் தழுவிக்கொள்ளப் பயணப்படுவதென்றால் ?......

ஓ ' அதற்கு ஒரு பக்குவம் தேவை '

சுயதரிசனம்

"அறுபது வருஷமா அர்த்தமில்லாமல் பேத்திண்டே வாழ்ந்திருக்கேன்! என்னைப்போல மனுஷாளாலேதான் பிராம்மண தர்மமே அவமானப் பட்டுடுத்து. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் சந்தியாவதனம் பண்றச்சேயெல்லாம் ஏதோ குத்தம் செய்யறமதிரி ஒரு உறுத்தல். பொய்யாவே வாழ்ந்துட்டமாதிரி ஒரு புகைச்சல்... சாஸ்திரங்கள், வேதங்கள் எல்லாம் இந்தக் காலத்தினாலே மதிப்பிழந்து போயிடுத்துன்னு நான் சொல்லமாட்டேன். அதுக்கு உரிய மதிப்பை, மரியாதையை நாமே உணர்ந்துக்கலேங்கறதுதான் எனக்குத் தெரியற உண்மை. இந்த ஒரு மாசமாத்தான் நானே ஒரு மனுஷன்னு எனக்குத் தெரியறது. இதுக்கு முன்னே நாடகத்திலே வர்ரமாதிரி நான் வேஷம் போட்டுண்டு, யாரோ எழுதிக் கொடுத்த வசனங்களைப் பேசறமாதிரி மந்திரங்களை மனசிலே ஒட்டாம உதட்டிலே ஒட்டிண்டு திரிஞ்சேன். 

... எனக்குத் தெரிஞ்சவா இப்ப யாராவது என்னெப் பார்த்தா அவாளுக்குத் தெரிஞ்ச கணபதிசாஸ்திரி நான்தான்னு சொன்னால் கூட, நம்பவேமாட்டா. எங்கேயாவது கண்ணாடியிலே என் உருவம் திடீர்னு தெரியறப்போ எனக்கே என்னை நம்ப முடியலே. ஆமாம்; என் மனசிலே இருக்கிற என் உருவம் குடுமி வச்சுண்டிருக்கு; பத்தாறு தரிச்சிண்டிருக்கு... அறுபது வருஷ நெனைப்பு அவ்வளவு சீக்கிரம் மாறிடுமா? ம்... நினைப்புத்தான்... 

இப்ப நான் பிராமணனும் இல்லே, சாஸ்திரியும் இல்லே. எனக்கு, என் மனசாட்சிக்குத் துரோகம் செஞ்சுக்காத ஒரு நேர்மையான மனுஷன் நான்! நான் பொறந்த குலத்தை நான் ரொம்பவும் மதிக்கிறேன். ரொம்பப் பெரியவாள் செய்ய வேண்டிய காரியத்தை எல்லாம் போலித்தனமா நான் செஞ்சுண்டு இருக்கறது, அவாளை நான் மதிக்கிறது ஆகாது. எல்லாரும் என்னைக் 'கிறுக்கு'ன்னுதான் சொல்லுவா இப்பவும். சொல்லட்டுமே... அன்னிக்கி, குளத்தங்கரையிலேருந்து வந்த கோலத்தைப் பார்த்தவா எனக்குப் பயித்தியம் பிடிச்சுடுத்துன்னுதான் நெனச்சுண்டு இருப்பா. சுந்தர கனபாடிகள் மாதிரி இருக்கிறவாளுக்கு புரோகிதம் கெளரவமான ஜீவிதம்தான். அவன் என்னை என்னதான் வைதிருந்தாலும், அவரை நினைச்சு நான் நமஸ்காரம் பண்றேன். என் கண்ணைத் திறந்துவிட்ட குரு அவர்தான். இந்த உலகமே அவர் ரூபத்திலே வந்து என்னைப் பிடிச்சுண்டு 'நீ பிராமணனா சொல்லு, இந்த மந்திரத்திற்கு அர்த்தம் தெரியாதவன்... நீ பிராமணனா சொல்லு'ன்னு உலுக்கின மாதிரி இருந்தது... அவர்தான் எனக்கு பிரம்மோபதேசம் செஞ்சு வச்சு பூணூல் போட்டவர்.... அவர் சொல்லிக் கொடுத்ததைத்தான் நான் இத்தனை காலமா சொல்லிண்டு இருந்தேன். அது தப்புன்னு அவரே சொல்லிட்டார். எப்படிப் பார்த்தாலும் அவர்தான் என் குருநாதர். அவரை நான் நமஸ்காரம் பண்றேன். 

இப்போ நான் கிராப்பு வச்சுண்டுட்டேன். சட்டை போட்டுண்டென், செருப்பு போட்டுண்டேன். இதெல்லாம் நன்னாத்தான் இருக்கு. எனக்கு நெனச்சுப் பார்த்தா சிரிப்பு சிரிப்பா வரது. சாஸ்திரிகள்னா செருப்புப் போட்டுக்கப்படாதாமே... ஆனா சைக்கிள்லே மட்டும் போலாமாம். என்னோட சைக்கிள் - நாற்பது ரூபாய்க்கு சிவராமன்தான் வாங்கித் தந்தான். வாங்கும்போதே அது கிழம்... இப்ப யாரு அதை உபயோகப் படுத்திண்டிருப்பா? சிவராமனா? மணியா?... கிழங்களும் உபயோகப்படுமே, சாகற வரைக்கும்." 

அக்ரஹாரத்துப் பூனை

கடா மீசைக்காரன் கிட்டக்கே வந்துட்டான். நான் ஒரு குட் மார்னிங் வச்சேன். அவனும் எனக்கு ஒரு சலாம் போட்டானே! 

அவன் என் பக்கத்திலே வந்து இரண்டு காலையும் தரையிலே ஊணிண்டு சைக்கிள்லேருந்து எழுந்திருக்காமலே நிக்கறான். அம்மாடி... அவன் எவ்வளவு உசரம்! நான் அவனை அண்ணாந்து பார்த்துச் சொல்றேன்: 

"ஒரு சின்ன உதவி..." 

"அதென்ன கோணியிலே?" - அவன் குரல் கிருஷ்ண லீலாவிலே வர்ற கம்சன் குரல் மாதிரி இருந்தது. 

"பூனை... ரொம்ப லூட்டி அடிக்கறது. அதுக்காக அதை கொன்னுடறதுக்காகப் பிடிச்சுண்டு வந்திருக்கேன்." 

"நீயேவா புடிச்சே?" - நான் பெருமையா தலையை ஆட்டறேன். அவன் மண்டபத்திலே ஒளிஞ்சிண்டிருக்கிற பையன்களையெல்லாம் ஒரு தரம் பார்க்கறான். என்னையும் பார்க்கறான். நான் அந்தக் காக்கிப் பைக்குள்ளே இருக்கற கத்தியோட பிடியையே பார்க்கறேன். 

"வெட்டறதுக்குக் கத்தி வேணுமா?"ன்னு அவன் என்னைப் பார்த்துக் கேட்கிறான். 

"ஊஹீம்.... நீங்கதானே ஆடெல்லாம் வெட்டுவேள். அதனாலே நீங்களே இதை வெட்டணும்." 

"ஓ!"ன்னு யோசிச்சிண்டே அந்தக் கத்தியை எடுக்கறான். பெரிய கத்தி! விளிம்பிலே கட்டை விரலை வெச்சு கூர் பார்த்துண்டே அவன் சொல்றான்: 

"பூனையை இதுவரைக்கும் நான் வெட்டினதே இல்லே... ஏன்னா, நாங்க பூனையைச் சாப்பிடறதுமில்லே... நான் வெட்டித் தரேன். நீங்க சாப்பிடுவீங்களா?" 

"உவ்வே!... வெட்டிக் குழியிலே புதைச்சுடலாம்." 

"அப்பத்தான் பாவம் இல்லே. நான் எதுக்கு ஆட்டை வெட்டறேன்? எல்லாரும் அதைத் தின்றாங்க. அவங்க சாப்பிடலேன்னா நான் வெட்டவும் மாட்டேன். நான் ஆடு வெட்டறப்ப நீ பார்த்திருக்கிறியா?" 

"ஓ, பார்த்திருக்கேனே. நீங்க ஏதோ மந்திரம் சொல்லி வெட்டுவீங்க. அதே மந்திரத்தைச் சொல்லி இதையும் வெட்டுங்க. அப்போ பாவமில்லே." 

"மந்திரம் சொல்றது அதுக்கில்லே தம்பி. ஒரு தொளிலை ஆரம்பிக்கறப்ப ஆண்டவனைத் தொளுவறது இல்லையா? அதுதான். வெட்டறது விளையாட்டு இல்லே தம்பி. அதுதான் என் குடும்பத்துக்கெல்லாம் கஞ்சி ஊத்தற தொளில். அதுக்காவ உங்கிட்டே காசு கீசு கேக்கலே. நான் வெட்டறேன். யாராவது சாப்பிட்டா சரி. எதையும் வீணாக்கக் கூடாது. வீணாக்கினா அது கொலை; அது பாவம்! என்னா சொல்றே?" 

"இன்னிக்கு மட்டும் ஒரு தடவை விளையாட்டுக்காக இந்தப் பூனையை வெட்டுங்களேன்." 

அவன் லேசாச் சிரிச்சு, என் மோவாயை நிமிர்த்தி, கையிலே ஏந்திண்டே சொன்னான்: (அவன் விரல் எல்லாம் பிசுபிசுன்னு இருந்தது.) 

"வெளையாட்டுக்குக் கொலை பண்ணச் சொல்றியா, த்சு... த்சு...! வெளையாட்டுக்கு வெட்ட ஆரம்பிச்சா, கத்தி பூனையோட நிக்காது தம்பி. நான் உன்னைக் கேக்கறேன்? விளையாட்டுக்கு உன்னை வெட்டினா என்ன?..." 

எனக்கு உடல் வெடவெடக்கிறது. 

"ம்... அந்தப் பூனை விஷமம் பண்றதே?" 

"நீ வெஷமம் பண்றது இல்லியா? பூனைன்னா வெஷமம் பண்ணும். வெஷமம் பண்ணாத்தான் பூனைன்னு பேரு. அதே மாதிரி நீயும் வெஷமம் பண்ணுவே. சின்னப் பிள்ளைங்கன்னா வெஷமம் பண்ணும்தான். பூனையும் வெஷமம் பண்ணட்டுமே! வீட்டிலே அடுப்பங்கரையைப் பூட்டி வெக்கச் சொல்லு"ன்னு சொல்லிண்டே என் கையிலே இருந்த கோணியைப் பிரிச்சு உதறினான். ஒரே ஜம்ப்! திரும்பிப் பார்க்காமே ஓடிட்டுது பூனை. பையன்களெல்லாம் சிரிச்சாங்க. கடா மீசைக்காரனும் சிரிச்சான். நானும் சிரிச்சேன். 

அன்னிக்கு ராத்திரியெல்லாம் நான் அழுதேன். பூனை தப்பிச்சுப் போயிடுத்தேன்னு இல்லே... நான் விளையாட்டா கொலை செஞ்ச வளையல் பூச்சி, மரவட்டை, தும்பி, ஓணான், பெருச்சாளி, பாவம்! அந்த நாய்... எல்லாத்தையும் நெனைச்சுண்டு அழுதேன்... 

நான் இப்ப அந்த அக்ரஹாரத்திலே இல்லை. இப்பவும் அந்த அக்ரஹாரத்திலே அந்த மாதிரி ஒரு பூனை இருக்கும்! இல்லையா? 

புது செருப்புக் கடிக்கும்

கல்யாணம் முடிந்து தன்னோடு புறப்பட்டபோது அவள் ஆரம்பித்த அழுகையை இன்னும் நிறுத்தவில்லை என்றும், அவளுக்குத் தன்னோடு வாழ்வதில் சந்தோஷமில்லை என்றும், தன்னை அவள் அவமதிப்பதையும், இன்று கூடத் தலையில் அடித்துக் கொண்டதையும் அவன் வாய் ஓயாமல் வத்ஸலாவைப் பற்றிப் பேசித் துயரத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்தான். 

தையல் மிஷினுக்குப் பக்கத்திலிருந்து எண்ணெய் போடுகிற 'ஆயில் கேனை' எடுத்துக் கால் பெருவிரலுக்கும் அடுத்த விரலுக்கும் இடையேயுள்ள புண்ணுக்கு எண்ணெய் விட்டுக்கொண்டே, அவன் புலம்புவதையெல்லாம் மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் கிரிஜா. 

"பாவங்கோ அது. அறியாப் பொண்ணு தானேங்கோ?" என்று அவள் சொன்னதைக் கேட்டு அவன் ஒன்றும் புரியாமல் தலைநிமிர்ந்து அவளைப் பார்த்தான். 

"உங்களைக் கல்யாணம் பண்ணிக்கினதுனாலேயே உங்களுக்குச் சமமா ஆயிடுவாங்களாங்கோ அவுங்க?... அப்பா அம்மாவுக்கு ரொம்பச் செல்லப் பொண்ணுன்னு நீங்க தானேங்கோ சொல்லியிருக்கீங்கோ? எல்லாரையும் விட்டுட்டு வேற ஒரு ஊரிலே தனியா உங்களேட வந்து வாழறப்ப அந்தக் கொழந்தை மனசு எப்படிங்கோ இருக்கும்? அதெப் புரிஞ்சு நீங்கதான் - அட்ஜஸ்ட் பண்ணி நடக்கணும். நீங்க 'டிரெய்ன்ட்' இல்லீங்களா? ஒரு ஆம்பிளைங்கறதே அவுங்களுக்குப் புதுசு இல்லீங்களா? பயமா இருக்கும்ங்கோ; அருவருப்பாகூட இருக்கும்ங்கோ... நான் உங்ககிட்ட அப்படியெல்லாம் இருந்தேன்னா அதுக்குக் காரணம் என்னாங்கோ? நான் 'எக்ஸ்பீரியன்ஸ்ட்' இல்லீங்களா? யாருங்கோ 'வய்·பா' இருக்கிறதுக்கு டிரெய்ன்ட் ஹாண்ட் கேக்கறாங்கோ? இப்ப சொல்றீங்களே - என்னையே கல்யாணம் பண்ணி இருக்கலாம்னு - அப்ப ஏங்க அது தோணலே? நான் ஏற்கனவே 'டிரெய்ன்ட்'ங்கற 'டிஸ்குவாலி·பிகேஷன்' தாங்கோ அதுக்குக் காரணம்! அதனாலே, உங்க வய்·பை விட நீங்க அனுபவஸ்தர்ங்கிறதை நெனைப்பிலே வெச்சிக்கணும். அவுங்க கொழந்தைன்னு புரிஞ்சுக்கணும். நான் உங்ககிட்டே இருந்த மாதிரி நீங்க அவுங்ககிட்டே இருக்கணும். அப்படித்தான் போகப் போக எல்லாம் சரியாப் போயிடுங்கோ..." என்று அவள் எல்லாவற்றையும் லேசாக்கி விட்டதை நினைத்து அவன் ஆச்சரியப்பட்டான். இவளிடம் வரவேண்டுமென்று தான் நினைத்தது எவ்வளவு சரியானது என்று எண்ணினான். 

அவன் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்ததால் நிறுத்தியிருந்த - கால் விரலிடுக்கில் எண்ணெய் விடுகிற - காரியத்தில் மறுபடியும் முனைந்தாள். 

"என்ன காலிலே?" என்று அவள் அருகே நகர்ந்து குனிந்து பார்த்தான் அவன். 

"போன வாரம் புதுசா செருப்பு வாங்கினேன். கடிச்சிடுச்சுங்கோ. மிஷின் தைக்கறதிலே விரல் அசையறதனாலே சீக்கிரம் ஆற மாட்டேங்குது" என்று சொல்லிக் கொண்டே இருந்தவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து ஒரு சிரிப்புடன் சொன்னாள்: "பார்த்தீங்களாங்கோ... செருப்புக்கூடப் புதுசா இருந்தா கடிக்குதுங்கோ... அதுக்காகப் பழஞ்செருப்பை யாராவது வாங்குவாங்களாங்கோ?" 

அவள் சிரித்துக் கொண்டுதான் சொன்னாள். அவன் அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதுவிட்டான். 

அந்தக் கோழைகள்!

“ஒரு உயிரைக் கொல்லக் கூடாது; அதைவிட எனது வைத்திய சாஸ்திரத்துக்கோ உனது பெண்மைக்கோ அவமானம் எதுவுமில்லை. உன் குழந்தைக்கு ஒரு அப்பன் தானே வேண்டும்? அந்த அப்பனின் பெயர் டாக்டர் ராகவன் என்று சொல். எந்த நிலையிலும் நான் இதை மறுக்க மாட்டேன். இது சத்தியம்…” என்று ஒரு ஆவேசத்தில் உதடுகள் துடிக்க அவன் கூறிய போது அவள் வாய் பொத்திப் பிரமித்து நின்றாள். இருவரும் ஒருவரை ஒருவர் மௌனமாய்ச் சில வினாடிகள் பார்த்துக் கொண்டனர். தான் சொன்ன வார்த்தைகளை தான் சொன்ன முறையில் தொனித்த ஆவேச முறையில் – இவளது உணர்வு நம்ப மறுக்கிறது என்று புரிந்து கொண்ட ராகவன், மிகவும் சாதாரணமான முறையில் அவளுக்குத் தன் கருத்தை விளக்கினான்: “இது கருணையோ பச்சாதாபமோ இல்லே. இதிலே கொஞ்சம் சுயநலம் கூட இருக்கு. நாளைக்கு இந்த ஊர் பூரா, என் சிநேகிதர்கள் பூரா உன்னையும் என்னையும் இணைச்சுக் கதை பேசுவாங்க, பேசட்டும். என்னைப்பத்தி நாலு பேரு அப்படிப் பேசறதைக் கேக்கணும்னு எனக்கும் ஆசைதான்…” என்று கூறி வெறித்துப் பார்த்து அந்தக் காட்சிகளைக் கற்பனை செய்தான் ராகவன். தகுதியற்ற தன் மீது இவர் இவ்வளவு அன்பு கொண்டிருப்பதை இத்தனை காலம் அறியாமல் இப்படிக் கெட்டழிந்து போனோமே என்ற ஏக்கத்துடன் விம்மியவாறே அவன் காலடியில் தன்னைச் சமர்ப்பித்துக்கொண்டு அவள் கெஞ்சினாள்: “நீங்கள்தான் என் தெய்வம். உங்க காலடியிலேயே உங்களுக்காக நான் உயிர் வாழ்வேன். இப்படிப் பட்ட ஒரு உத்தமருக்கு எத்தனை கொழந்தை பெத்தாலும் இந்த உடம்பு தாங்கும்…” அவள் வெளியே சொன்ன, தன்னுள் முனகிய அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் முகத்தில் ஊசி தைப்பதுபோல், நாசியும் உதடுகளும் துடிதுடிக்க ராகவன் தொண்டை கரகரக்க குழந்தைபோல் அழுதான். ஒரு ஆணின் கனத்த குரலில் வெடித்து அமுங்கிய அந்தக் குமுறலைக் கேட்டு அவள் தேகாந்தமும் நடுங்கப் பிரமித்து நின்றாள். அவன் முகத்தை மூடிக் கொண்டு திரும்பி நின்று கழுத்து நரம்புகள் புடைக்க, தோளும் புஜங்களும் குலுங்க, சிதறிப்போன தனது உணர்ச்சிகளை எல்லாம் ஒன்று சேர்த்துத் தன்னைத் தானே சாந்தப்படுத்திக் கொண்டு மீண்டும் அவள் எதிரே திரும்பி நின்றான். “ராதா! நிறைவேற முடியாத ஆசையைத் தூண்டி விட்டுட்டேன். மன்னிச்சிடு. இப்ப உன் வயத்திலே இருக்கற குழந்தைக்கு மட்டும்தான் நான் அப்பனாக இருக்க முடியும், நீ நெனைக்கிற மாதிரி எனக்கு…” அதை எப்படிச் சொல்வதென்று தெரியாமல் தவித்து அவள் செவியருகே குனிந்து ‘அதை’ அவன் ரகசியமாய் கூறினான். – அந்த விஷயத்தை… அவனது வழக்கமான சுபாவப்படி – பச்சையாக அவனால் சொல்ல முடியவில்லை. பிறரைப் பற்றிய அவன் கருத்துப்படி, அதில் இப்போது அவனுக்கே தான் என்ற தன்மையும், தன்மயமான நோக்கும், இது இயற்கையின் இயல்பு என்ற பொதுவான எண்ணமும் அற்றுப்போன சுயமான உறுத்தலுமே எஞ்சி நின்றது. தனது செவியில் கூறிய அந்த ரகசியமான உண்மையைக் கேட்டு அவனது முகத்தைச் சேர்த்து அணைத்துக் கொண்டு “இல்லை இல்லை” என்று பிரகடனம் செய்வது போலப் பலமாக முணுமுணுத்தாள் அவள். இருளில் வந்து தன்னோடு உறவு கொண்டு ஒரு மாயைபோல் மறைந்து போன முகமறியாத அந்தக் கோழைகளைப் பற்றி அவள் எண்ணிப் பார்த்தாள்! தன் ஆத்மாவிலே கலந்து தன்னைப் புனிதப்படுத்தித் தன்னோடு நெருங்கி இருக்கும் இந்தப் புதிய உறவின் முகத்தை இரண்டு கைகளிலும் ஏந்தி ஆர்வமுடன் கண்ணெதிரே பார்த்தாள். அந்தக் கோழைகளை எல்லாம் விட இந்தத் தைரியமிக்கவன் மகத்தான ஆண் சிங்கம் என்றே அவளுக்குத் தோன்றியது. தனது இரண்டு கரங்களாலும் ஏந்திப் பிடித்த அந்த முகத்தில் தனது பெண்மை இதுவரை அனுபவித்தறியாத பௌருஷத்தின் தேஜஸைத் தரிசித்த நிறைவில் பெருமிதமும் திருப்தியும் கொண்டு அவனை அவள் ஆரத் தழுவிக் கொண்டாள். ராதாவின் காதோரத்தை ராகவனின் வெப்பமான கண்ணீர் நனைத்தவாறிருந்தது.