நான் பணிபுரியும் அலுவலகத்தில் ஒரு நாள் ஒரு அமேரிக்க நண்பனை வைத்துக் கொண்டு வேர்ட் டாக்குமென்டில் டாக்குமென்டிக் கொண்டிருந்தேன்..தலைப்புக்காக சிலவற்றை அடிக்கோடிட்டேன். அதாவது "கன்ட்ரோல் யு" அடித்தேன். திடீரென்று அவன் பதட்டப்பட்டு, அது எப்படி மெளஸ் இல்லாமல் நீ கோடு போட்டாய் என்று வியந்து கேட்டான்! நான் ஷார்ட் கட் கீ என்று சொல்லி எப்படிச் செய்வது என்று காண்பித்தேன்! "யு ஆர் ஜீனியஸ்" என்றான்! ஆஹா ஒருத்தன் சிக்கிட்டான்டா என்று நானும் சமயம் கிடைக்கும்போதெல்லாம் என்னுடைய ஜீனியஸ் தனங்களை வெளிக்காட்டிக் கொண்டேன். நீ டீ ஆத்தக் கூட லாயக்கில்லை என்று பள்ளியில் என் வாத்தியார் என்னை திட்டியது எனக்கு ஞாபகம் வந்தது!! இதில் பாரட்டப்பட வேண்டிய விஷயம், தெரியாததை தெரியாது என்று ஒத்துக் கொள்வதில் இவர்கள் வெட்கப்படுவதேயில்லை! நம்மைப் போல் எனக்குத் தெரியும், இருந்தாலும் உனக்கு தெரியுதா என்று டெஸ்ட் பண்ணேன் என்று பீலா விடுவதில்லை.என்னை பொறுத்தவரை, பொதுவாகவே இவர்கள் ஒரு நாள் மாங்கு மாங்கு என்று பார்க்கும் வேலையை நாம் ஒரு மணி நேரத்தில் செய்து விடுவோம் என்று தோன்றுகிறது! அதனால் தான் இந்தியர்களுக்கு இங்கு ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒரு மெளசும் நிறைய மவுசும் இருக்கிறது! [மெளஸ், மவுசு எப்படி கனெக்ட் பண்ணேன் பாத்தீங்களா? அப்படி பொங்குதுங்க..சரி சரி!]
அமேரிக்காவின் பெயரை மாற்றி பேப்பரிக்கா என்று வைக்கலாம்! அத்தனை பேப்பர்களை செலவழிக்கிறார்கள்! இன்று ஒரு நாள் யாரும் எந்த வகையான பேப்பரையும் உபயோகிக்கக் கூடாது என்று சொல்லி விட்டால் போதும், பாதிக்கு மேல் தற்கொலை செய்து கொண்டு செத்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்! அலுவலகத்தில் கேட்கவே வேண்டாம்! கம்ப்யுட்டரில் ஒரு ஃபைல் தயாரித்து அதை ஒரு ஃபோல்டரில் போட்டு, அந்த ஃபைலை ப்ரிண்ட் எடுத்து அந்த பேப்பரை ஒரு ஃபைலில் போட்டு அதன் மேல் பத்து பதினைந்து ஸ்டிக் நோட் போட்டு டாக்டர் கையெழுத்தில் ஏதோ கிறுக்குகிறார்கள்! கடைசியில் தேடும்போது எது வேண்டுமோ அதை தவிர ஏகப்பட்ட பேப்பர்கள் இருக்கின்றன..ப்ரிண்டருக்கு வாய் இருந்தால் கதறி அழும்! நான் இந்தியாவில் ஆடிக்கொரு தடவை அம்மாவாசைக்கு ஒரு தடவை ப்ரிண்ட் எடுக்க போவேன், அன்னைக்குன்னு பாத்து பேப்பர் இருக்காது, இல்லைன்னா சோடா புட்டி கண்ணாடி போட்டு பாத்தாலும் தெரியாத அளவுக்கு மங்கலா விழும்! நானும், ஆனியே புடுங்க வேணாம்னு வந்துருவேன்!
நான் இங்கு வந்த அன்று என் ஸீட்டில் ஒரு பெரிய டப்பா கொண்டு வந்து வைத்தார்கள்! முழு மகாபாரதத்தை ப்ரிண்ட் எடுத்து அதற்கு பின் போட எவ்வளவு பெரிய ஸ்டாப்லர் வேண்டுமோ அவ்வளவு பெரிய ஸ்டாப்லர்! ஒரு பெரிய கத்திரிக்கோல், பெரிய பஞ்சிங் மெஷின், நிறைய ஸ்டிக் பேட், நிறைய பேப்பர் க்ளிப்ஸ், சலஃபன் டேப், நிறைய மார்க்கர்ஸ் [மஞ்சள் கலர் சிங்குசா, பச்சை கலர் சிங்குசா...சே சே!], பேனாவில் தப்பாய் எழுதி விட்டால் அழிப்பதற்கு எரேசர் [ப்ளேடால் எப்படி அழிப்பது என்று இவர்களுக்கு இன்னும் தெரியாதா? பென்சில் என்றால் எச்சி தொட்டு அழிப்பது தான் பெஸ்ட்!] எனக்கு சந்தேகமே வந்து விட்டது, எனக்கு கம்ப்யுட்டர் கொடுப்பார்களா இல்லை அரசு அலுவலகம் மாதிரி பெரிய பெரிய பேரெடை கொடுத்து அதில் ப்ரோக்ராம் எழுது என்று சொல்லி விடுவார்களோ என்று! அடப்பாவிகளா..அவர்கள் கொடுத்த ஒன்றை கூட நான் இன்னும் தொடவில்லை, சில பேப்பர் க்ளிப்ஸை தவிர..கனினியின் பயனை இன்னும் இவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று படுகிறது!
NOTE: இந்த பத்தியை சாப்பிட்டுக் கொண்டே படிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்!
அலுவலகத்தில் விடுங்கள், டாய்லட்டில்..அட நம் நாட்டில் தான் தண்ணீர் பஞ்சம் இருந்தும் தண்ணீர் இல்லையென்றால் நாம் வருவதை கூட அடக்கிக் கொண்டு விடுவோம்! இவர்களுக்கு அங்கேயும் பேப்பர் தான்! துடைத்துக் கொண்டு ஒரு அரை மணி நேரம் சோப்பு போட்டு இவர்கள் கை கழுவுகிறார்கள்! [இப்போ என்ன பண்ணிட்டீங்கன்னு இந்த தேய் தேய்க்கிறீங்கன்னு கேக்கலாம் போல இருக்கு!] என் நண்பரிடம் ஏன் இவர்கள் கக்கூஸில் தண்ணீர் உபயோகப்படுத்துவதில்லை என்றதற்கு அவர்கள் கையை அந்த மாதிரி இடங்களிலெல்லாம் உபயோகிக்க மாட்டார்கள் என்றார். எனக்கு ஏனோ நான் பார்த்த ட்ரிபில் எக்ஸ் படமெல்லாம் ஞாபகம் வந்தது! சுத்தக்கார பாப்பாத்திகள்!
இன்னொரு முக்கியமான விஷயம் எப்போது பார்த்தாலும் எதையாவது கொறித்துக் கொண்டே இருக்கிறார்கள்! அலுவலகத்தில் ஒரு பெண் ஒரு மூட்டை பாப்கார்னை [உங்கள் தலை மேல் அடித்து சத்தியம் செய்கிறேன்!] கம்ப்யுட்டரில் வேலை பார்த்துக் கொண்டே ஒரு மணி நேரத்தில் தின்று தீர்த்து விட்டாள்! இருந்த இடத்திலேயே உட்கார்ந்து என்ன வேண்டுமென்றாலும் சாப்பிடலாம் என்பது இவர்களுக்கு மிக்க வசதியாய் இருக்கிறது. நம்மை மாதிரி வத்தக் குழம்பை சாதத்தில் குழைத்தா அடிக்க போகிறார்கள்! வாயில் நுழையாத பெரிய பர்கர் அல்லது சான்ட்விச்..அதில் ஆடு, மாடு, கோழி, பன்னி என்று அடித்து போட்டிருப்பார்கள்! நாளைக்கு ஒரு ஃபுட் ஃபெஸ்டிவல் வந்து விடுகிறது! எப்போதும் ஏதாவது கொறிக்க இருந்து கொண்டே இருக்கிறது! என் அமேரிக்க நண்பன், போ, போய் எடுத்து சாப்பிடு என்று என்னை பிடித்து தள்ளாத குறையாய் தள்ளுவான்! நண்பா, உன் அன்புக்கு ரொம்ப நன்றி நீ ஒன்றை மறந்து விட்டாய், நான் அமேரிக்கன் இல்லை இந்தியன்..உங்களைப் போல என்னால் சாப்பிட்டுக் கொண்டே இருக்க முடியாது என்று மன்றாடினேன்! அவன் விழுந்து விழுந்து சிரித்தான்! சாப்பிட்டுக் கொண்டே இருப்பது எங்கள் வேலைகளில் ஒன்று என்றான்! [அவன் சொல்லும்போது எனக்கு அவ்வளவு புரியவில்லை, வாயில் அவ்வளவு பெரிய பர்கரய்யா..பர்கர்!] நானும் அவ்வப்போது அவர்களை போல் கொறிக்க ஆரம்பித்து விட்டேன் என்று தான் நினைக்கிறேன்! சென்னை போனதும் சாப்பிடாம எப்படி நீங்க எல்லாம் வேலை செய்றீங்கன்னு கேட்டு டின் வாங்கி கட்டிக்க போறேன் என்று தோன்றுகிறது!! am i getting westernized?
- பயணப்படும்