ஏர்ப்போர்ட்டிலிருந்து வெளியே வந்தவுடன் நானும் என் நண்பரும் டாக்ஸியில் ஏறி அமர்ந்து கொண்டோம், டிரைவர் அதிர்ச்சி அடைந்து இல்லை, இல்லை நான் தான் ஓட்டுவேன் என்றார். பார்த்தால் என் நண்பர் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தார்! [என்ன? என்ன நக்கல்? எங்களுக்குத் தெரியாதாக்கும், இங்கே லெஃப்ட் ஹேன்ட் ட்ரைவிங்னு..எல்லாம் ஒரு ஆர்வ கோளாறு தான்..]

ஹோட்டலில் எதற்கோ ஃபோன் செய்யப் போய் 911 எண்ணை தெரியாமல் அழுத்தி அது போலீஸுக்கு போய் ஹோட்டல் முதலாளி துடிதுடித்துப் போனார். தெரியாமல் அங்கு ஃபோன் செய்து விட்டால், மன்னித்து விடுங்கள், ராங் நம்பர் என்று வைத்து விடுங்கள் இல்லையென்றால் இங்கு யாரோ இறந்து கிடக்கிறார்கள் என்று போலீஸ் வந்து விடுமாம். கஷ்டம்! [நம் நாட்டிலும் அவசர போலீஸ் 100 எண்ணை அடித்தால் இப்படித் தானா?] பிரச்சனை என்னவென்றால், ஹோட்டல்களில் 9ஐ எஸ்கேப் கீயாக பயன்படுத்துகிறார்கள். 9 அடித்து விட்டு, நாட்டு எண் 1ஐ அடித்து வேறு எண்ணை அடிக்க, தெரியாமல் 1 அழுத்தி விட்டால் கதை முடிந்தது!

தூரத்தை கேட்டால் மயிலில்[இது முருகனோட மயில் இல்லை], எடையை கேட்டால் பவுண்டில், தட்பவெட்பநிலையை கேட்டால் ஃபாரன்ட்ஹீட்டில் என்று சொல்லி அதை கிமீக்கும், கிகிராமுக்கும், செல்சியசுக்கும் மாற்றி மாற்றி பார்த்து எங்கள் நாட்கள் கணக்கு செய்வதிலேயே கழிந்து விடுகிறது. நான் வழக்கம் போல் அந்த மாதிரி கணக்கு செய்வதில் கலந்து கொள்வதில்லை! [வேறு மாதிரி கணக்கு என்றால் பண்ணலாம்!] 40 டிகிரி ஃபாரன்ட்ஹீட்டா என்று என் நண்பர் ஃபார்முலா எல்லாம் ஞாபகப்படுத்தி அதை செல்சியஸில் ஆக்கி பார்த்துக் கொண்டிருப்பார். எப்படியும் செல்சியஸில் வந்தவுடன் இவ்வளவு கம்மியா என்று வாய் பிளக்க போகிறோம், நான் 40 டிகிரி ஃபாரன்ட்ஹீட் என்றவுடன் வாய் பிளந்து விடுவேன்! கதம் கதம்!

அமேரிக்கர்களுடைய வேலையையும், குடும்பத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாத இயல்பு என்னை மிகவும் கவர்கிறது. 8 மணிக்கு அலுவலகம் வந்து, 5 மணிக்கு எல்லோரும் ஜூட்! 5 மணிக்கு மேல் மெயின் கதவு கார்டை காட்டினாலும் திறக்காதாம்! 5 மணி வரை தான் அந்த கார்டுக்கு அனுமதியே வழங்குகிறார்கள்! எனக்கு கார்ட் கொடுக்கும்போது, எதற்கும் இருக்கட்டும் இவர்களுக்கு 24 மணி நேரமும் கொடுத்து விடுங்கள் என்று வாங்கிக் கொடுத்து விட்டார்கள்! [எப்படித் தான் கண்டுபிடிக்கிறாய்ங்களோ?]

கிட்டத்தட்ட மூன்று வார லீவிலிருந்து ஊர் சுற்றி விட்டு வருகிறார்கள்! அடுத்த மூன்று வாரத்திற்கு எங்கு போவது எந்த ஊர் சுற்றுவது என்று கூகுளிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்! விடுமுறையை அவ்வளவு கொண்டாடுகிறார்கள். நம்மில் எத்தனை பேர் இந்தியாவை முழுதும் சுற்றிப் பார்த்திருக்கிறோம்? வாழ்க்கை முழுக்க ஆபீஸே கதியென்று கிடந்து அடித்து பிடித்து சம்பாதித்து ஒரு சின்ன வீடு கட்டிக் கொண்டு, பிள்ளைகளுக்கு அத்தனை சொத்தையும் எழுதி வைத்து விட்டு, போன தடவை 31 நாள் இருந்தீங்களே எங்க கூட, இந்த தடவை 29 நாள் தான் இங்கே இருக்கனும் என்ற ஏச்சுகளையும் பேச்சுகளையும் தான் வாங்கப் போகிறோம்! ஹும், அமேரிக்கர்கள் வாழ்க்கையை வாழத் தெரிந்தவர்கள் என்றே தோன்றுகிறது!

- பயணப்படும்
15 Responses
  1. //ஒரு சின்ன வீடு கட்டிக் கொண்டு//

    ???????????

    :-))))))))))


  2. துளசியக்கா,

    அதை எழுதும்போதே நெனைச்சேன், என்னடா நம்ம தமிழ் வலையுலகுல வில்லங்கம் புடிச்ச ஆளுங்க நெறைய பேர் இருக்காங்களேன்னு..அப்புறம் எப்படியோ மறந்துட்டேன்!

    இருந்தாலும் உங்களுக்கு ஓவர் குசும்புக்கா!


  3. பிரதீப். நீங்கள் முதலில் சொன்ன நிகழ்ச்சி எனக்குச் சென்னையில் நடந்தது. முதல் அமெரிக்கப்பயணத்திற்கு பின் (ஒரு வருடம் தங்கியிருந்தேன் அப்போது) சென்னை சென்ற போது என்னை அழைத்துச் செல்ல ஒரு நண்பர் விமான நிலையத்திற்கு வந்திருந்தார். காரில் ஏறும் போது இங்கே இருந்த வழக்கப்படி ஓட்டுனர் இருக்கைக்குச் சென்றேன். நண்பர் நீங்கள் காரை ஓட்டப் போகிறீர்களா என்று கேட்ட போது தான் உறைத்தது. வழிந்து கொண்டே அடுத்தப் பக்கம் சென்றேன். :-)

    ஹோட்டலில் 9ஐ அழுத்திய பின் இன்னொரு முறை 9 அழுத்தி 11 அடித்தால் தானே 9 - 1 - 1க்கு போகும்? நீங்கள் தங்கியிருந்த இடத்தில் அப்படி இல்லையா?

    //40 டிகிரி ஃபாரன்ட்ஹீட் என்றவுடன் வாய் பிளந்து விடுவேன்! கதம் கதம்!
    //

    :-))

    நீங்கள் சொல்வது போல் விடுமுறை என்பது இங்கே பெரிய விதயமாகத் தான் இருக்கிறது. ஆனால் ஐரோப்பாவில் மூன்று வாரத்திற்கும் மேல் விடுமுறை உண்டென்று கேள்விபட்டிருக்கிறேன். அனுபவிக்கிறார்கள்.

    நீங்கள் சொல்வதென்னவோ உண்மை தான். மதுரையில் நான் பிறந்த, படித்த இடங்களைச் சுற்றியுள்ள இடங்கள் மட்டுமே எனக்குத் தெரியும். மதுரையையே நான் அதிகம் சுற்றிப் பார்த்ததில்லை. இந்தியாவைச் சுற்றிப் பார்ப்பது எங்கே? :-)


  4. குமரன்,

    பரவாயில்லையே, நம்ம தான் இப்படி எல்லாம் இருக்கோம்னு நெனச்சேன், நீங்களும் துணைக்கு இருக்கீங்க!

    அதை ஏன் கேக்குறீங்க? 9 - 1 - 4 அடிக்கிறதுக்கு பதிலா 1 அடிச்சா அங்கே போயிடுது!

    சரியா சொன்னீங்க! இந்தியா போய் இந்த பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பார்க்கிறேன்! பாக்கலாம்!


  5. போன தடவை ஊருக்குப் போயி பழக்க தோஷத்தில் சீட் பெல்ட் போட்டுக் கொள்ள உடனே நம்ம மக்கள் கலாய்த்த கலாய்ப்பு இருக்கிறதே... அடடா!

    //போன தடவை 31 நாள் இருந்தீங்களே எங்க கூட, இந்த தடவை 29 நாள் தான் இங்கே இருக்கனும் என்ற ஏச்சுகளையும் பேச்சுகளையும் தான் வாங்கப் போகிறோம்! //

    ஒரு வரியில் என்னென்னவோ சொல்லிட்டீங்க போங்க. :(


  6. கொத்தனார்,

    நம்ம பசங்க தான் திருந்துறவங்களையும் திருந்த விட மாட்டாங்களே!

    அந்த ஒத்த வரியில பல முதியவர்களின் வாழ்க்கை அடங்கி விடுகிறது நண்பரே! என்ன செய்வது!


  7. ப்ரதீப், பாரன்ஹீட்டிலிருந்து செல்சியஸ்க்கு மாற்ற 32 ஆல் கழித்து 2 ஆல் வகுத்து விடுங்கள் தோரயமாக விடை வந்து விடும்.

    ஆனால் -40 டிகிரி சி யும் -40 டிகிரி எப் உம் ஒன்று தான் தெரியமா?

    குமரன் அண்ட் கொத்ஸ் சும்மா பந்தா விடாதீர்கள். நானெல்லாம் இந்தியாவிற்கு போனால் ஏர்போர்ட்டிலிருந்து நான் தான் வீட்டிற்கு கார் ஓட்டிக்கிடு போவேன் :)


  8. பிறந்த நாள் வாழ்த்துகள் ப்ரதீப்.


  9. //கதம் கதம்!//

    அங்கங்க 'தல' காட்டுதே!

    வாழ்த்துக்கள்.

    பலநாள் வலை பதிவு பக்கம் வரவில்லை. இப்போது தான் ஒவ்வொன்றாக படித்து பின்னூட்டம் இடுகிறேன்.


  10. sivamurugan,

    ungalai mathiri sila per thaan en blogukku comment podraanga..neengalum varlainna eppadi?

    appuram oru periyya ezhuthaalanai thamizh ilakkiyam izhanthu vidum..pathukkunga :) hehee...


  11. அது ஏனோ தெரியவில்லை அமெரிக்கா செல்பவர்கள் எல்லாம் இந்தியாவைப் பற்றி குறைகூறுகிறார்கள்...இது தேசதுரோகம் இல்லையோ...இதைப் பற்றி சிறிது விளக்கம் வேண்டும்.


  12. பிரதீப்

    // வாழ்க்கை முழுக்க ஆபீஸே கதியென்று கிடந்து அடித்து பிடித்து சம்பாதித்து ஒரு சின்ன வீடு கட்டிக் கொண்டு, பிள்ளைகளுக்கு அத்தனை சொத்தையும் எழுதி வைத்து விட்டு, போன தடவை 31 நாள் இருந்தீங்களே எங்க கூட, இந்த தடவை 29 நாள் தான் இங்கே இருக்கனும் என்ற//

    என்ற நிர்ப்பந்தங்கள் எதுவும் அவ்வளவாக இல்லாத கலாசாரத்தில் வளரும் அமெரிக்கர்களை நம்மோடு ஒப்பிடமுடியாது. நம்மோடது 'காசு வரும் போகும். மனுசங்க கெடைப்பாங்களா'? இல்லையா?

    //நம்மில் எத்தனை பேர் இந்தியாவை முழுதும் சுற்றிப் பார்த்திருக்கிறோம்?//

    மதுரையில் இருப்பவர்கள் அடிக்கடி மீனாட்சி கோவிலுக்குப் போவதில்லை - அது மாதிரி தான் இது! :-)

    ஆனாலும் அங்கிட்டு இருந்த வரை எனது பொருளாதாரம் இடங்கொடுத்தவரை முடிந்த அளவிற்கு ஊர் சுற்றியிருக்கிறேன் (தமிழ்நாட்டுக்கு வெளில ஊர் சுத்தறதெல்லாம் பணக்காரவுஹளுக்கு!!).

    பணம் சம்பாதிக்கவேண்டும் என்று நாட்டைவிட்டுக் கிளம்பி வந்ததிலிருந்து மனதில் எரியும் தீயாக, தீராத தாகமாக இருப்பது இந்தியாவை முழுமையாகச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்பது. ஆனாலும் ஒரு மாத விடுமுறையில் வரும்போதும் 'செளக்கியமா? நல்லாருக்கீங்களா?' என்று எல்லாரையும் விசாரித்து, அவர்களால் விசாரிக்பப்படுவதிலேயே கழிந்து போகிறது! 'உன்னையக் கூட்டிக்கிட்டு கோவிலுக்கு வர்றதா ஒரு தடவை "நெனச்சுக்கிட்டேன்"' என்று வேறு ஒரு பட்டியலை நீட்டி - உம்மாச்சி கண்ணைக் குத்திடும் என்று பயந்து மறுக்க முடியாதபடியான நிலைமையும் ஏற்பட்டுவிடுகிறது :-)

    இன்னொரு முக்கிய வித்தியாசம். அங்கிருந்தபோது கண்ணை மூடிக்கொண்டு கோவிலுக்குச் சென்று கும்பிட்டுவிட்டுத் திரும்பிவந்துகொண்டிருந்தேன். ஆனால் இடைவெளி விட்டு விடுமுறையில் இப்போது செல்லும்போது குடும்பத்தினரை சாமி கும்பிட அனுப்பிவிட்டு கோவிலின் ஒவ்வொரு அங்குலத்திலும் மிளிரும் கலைநுணுக்கங்களை, சிற்பங்களை, படித்த வரலாறுகளைப் பொருத்திப் பார்த்து அணுஅணுவாக ரசிக்கமுடிகிறது. கோவில் மட்டும் என்றில்லை. எந்த இடத்திற்குச் சென்றாலும் அந்த இடத்தை முன்பு பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் நமது எண்ணங்களிலும் கண்ணோட்டத்திலும் ஏற்பட்ட வித்தியாசங்களை உணர முடிகிறது. அதே போல 'வண்ட்டான்யா' என்று முன்பு அலுத்த முகங்களை இப்போது கனிவுடன் பார்க்க முடிகிறது.

    நல்ல பதிவு. தொடருங்கள்.


  13. பிரதாப் குமார்

    //அது ஏனோ தெரியவில்லை அமெரிக்கா செல்பவர்கள் எல்லாம் இந்தியாவைப் பற்றி குறைகூறுகிறார்கள்...இது தேசதுரோகம் இல்லையோ...இதைப் பற்றி சிறிது விளக்கம் வேண்டும்//

    ஒரு சிறு விளக்கம். நான் இந்தப் பதிவை எழுதவில்லை என்றாலும் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியன் என்ற முறையில் உங்கள் கருத்துக்கு பதில் சொல்லத் தோன்றியதன் விளைவே இந்தப் பின்னூட்டம்.

    'அதெல்லாம் ஒரு ஊரா, நாடா - மனுசன் வாழ்வானா அங்க?' என்று சொல்வதை குறைகூறுவது, தூற்றுவது என்று சொல்லலாம். எனக்கேற்படும் எண்ணங்கள் அப்படியல்ல.

    கிணற்றுத் தவளைகளாகவே உலக நடப்புகளையும் மற்ற நாடுகளைப் பற்றிய, அவர்களது அரசு இயந்திரங்கள் பற்றிய, அம்மக்களது கலாசாரம், சமூகப் பொறுப்புணர்வு என்பதைப் பற்றிய புரிதல்களில்லாது இருப்பதன் பலனைத்தான் நம்மூர் முதலாளிகளும், அரசியல்தலைவர்களும் எப்போதும் அறுவடை செய்து கொண்டேயிருக்கிறார்கள்.

    ஒரு சிறிய உதாரணம். மதுரையில் வசித்த வரை NH-7 ஐப் பார்த்து 'சே. சூப்பர் ரோடுய்யா' என்று பிரமித்த காலங்கள் உண்டு. ஏனெனில் அதைவிடச் சிறந்த சாலைகளைப் பற்றியும் கட்டமைப்புகள் பற்றியும் அறிந்திராததனால், பார்த்திராததனால். வெளிநாடுகளில் வந்து பார்த்தபோதுதான் உள்கட்டமைப்பில் அவர்கள் அடைந்திருக்கும் பலமடங்கு முன்னேற்றத்தை உணர்ந்து சாலையென்றால் இப்படி இருக்கவேண்டும் என்ற புரிதல் கிடைத்தது. இதுமாதிரி ஏன் நம் நாட்டில் ஒரு ஊரில் கூட ஒரு தெருவில் கூட சாலை போட மாட்டேன் என்கிறார்கள் என்று யோசனை தோன்றியது. போட்ட சாலையும் அடுத்த மழைக்கு ஏன் காணாமல் போய்விடுகிறது என்றும் கேள்வி பிறந்தது.

    இப்படி யோசிக்கும்போதுதான் எவன் கொள்ளையடிக்கிறான். அவனைச் சட்டையைப் பிடித்துக் கேள்விகேட்க வேண்டாமா? என்றும் தோன்றியது. இந்த 'விழிப்புணர்வு' நமக்கு அவசியம் என்று நான் நினைக்கிறேன். இதை நம் நாட்டைப்பற்றி குறைசொல்வதாகக் கருதமுடியவில்லை. சில விஷயங்களில் ஒப்பீடு அவசியம்.

    இது போல பல உதாரணங்களைச் சொல்லலாம். குழந்தைகளைக் கழுதை போல பொதிமூட்டை சுமக்க வைக்காமல் முதலில் அவர்களுக்கு இந்தச் சமூகத்தில் வாழத் தேவையான, ஒரு நல்ல சமூகத்தை ஏற்படுத்தத் தேவையானவற்றைப் போதித்து, பயிற்றுவித்து உருவாக்குவதைச் சொல்லலாம். குப்பையைக் குப்பைத் தொட்டியில்தான் போடவேண்டும் என்று சொல்வதோடு பெரியவர்களும் அதைச் செய்து முன்மாதிரியாக இருப்பதிலிருந்து நம் சுற்றத்தார் யார், நம்மை ஆளுபவர்கள் யார் என்று சுற்றி நிகழும் நிகழ்காலத்தைப் போதித்து அவர்களைச் சமூகத்தை எதிர்கொள்ளத் தயார்படுத்துவதிலிருந்து நிறையச் சொல்லலாம். நாம் பா பா ப்ளாக் ஷீப்பை மட்டும் பிடித்துக்கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறோம்.

    நிறையச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். கோர்வையாகச் சொல்வதற்கு நேரம் தேவை. இன்னொரு நாள்.

    நம் நாட்டைக் குறைசொல்லும் எண்ணம் துளியும் இல்லை. நாளைக்கு ஊருக்கு விடுமுறையில் வந்தால் நகைச்சுவைத் துணுக்குகளில் சொல்வதைப் போல இல்லாமல், விமானநிலையத்திலிருந்து வெளியில் வந்ததும் தெருவில் புளிச்சென்று எச்சில் துப்ப மாட்டேன்! இது போல இன்னும் நிறைய 'மாட்டேன்'களின் பட்டியல் உள்ளது. என்னளவில் நம் நாட்டுக்கு என்னால் செய்ய முடிவது இது. சிறுதுளி பெரு வெள்ளம்!

    நன்றி.


  14. Anonymous Says:

    Unnmai...


  15. Vignesh S R Says:

    Superb ba jhukku chokkat likkiras...

    Vignesh