நீ ஒரு காதல் சங்கீதத்தையும் மீறி வரிசையில் நின்றவர்களின் அரசியல் விவாதம் காதில் விழுந்து கொண்டிருந்தது. இங்கு அரசியல் பேசக்கூடாது போர்ட் இருக்கிறதா என்று சுற்றும் முற்றும் பார்த்தேன். என்ன அபத்தம், இந்த இடத்தில் பேசா விட்டால் வேறு எந்த இடத்தில் தான் அரசியல் பேசுவது. பேசட்டும்; தகராறு ஏதும் வராமல் இருந்தால் சரி. வெளியே ஆங்காங்கே வெவ்வேறு கட்சிக் கொடிகள் கட்டி அது காற்றில் பறந்து கொண்டிருந்தன. கொடியுடன் அவர்கள் கொள்கைகளும்! எனக்கு எங்கள் தொகுதி பெயர் என்ன? யார் இங்கு நிற்கிறார்கள், இவர்களின் அரசியல் பின்னனி என்ன? ஒன்றும் தெரியாது. நான் ஓ போடத் தான் சென்றேன்! அதாவது, 49 {ஓ}! இந்தப் பட்டியலில் இருக்கும் யாருக்கும் ஓட்டுப் போட பிடிக்கவில்லை என்றால் 49 {ஓ} போடலாம் என்று சில நாட்களாக சாஃப்ட்வேர் இன்சினியர்களுக்கு (மட்டும்!) மெயிலின் மூலம் அறிவூட்டப்பட்டது!
வரிசை நகர்ந்து நான் உள்ளே சென்றேன். என் சீட்டையும், புகைப்பட அட்டையையும் சரி பார்த்தார் ஒரு அதிகாரி. மற்றவர் அதை வாங்கி என்னுடைய பேர் இருந்த ஒரு நோட்டில் என் பெயருக்குக் கீழே அடிக்கோடிட்டு இன்னொருவருக்கு அந்த நம்பரை சொன்னதும் அவர் குறித்துக் கொண்டார். ஒரு சீட்டைக் கொடுத்தார். பக்கத்தில் ஒருவர் என் விரலை நீட்டச் சொல்லி மையிட்டார். இந்த முறை புள்ளிக்கு பதிலாய் கோடு போடப் போவதாக பேப்பரில் படித்தேன். அதே மாதிரி ஒரு கோடு இழுத்து விட்டார். கோடு மட்டும் போடுங்கள்! சரியாய் ரோடு மட்டும் போடாதீர்கள்! என்று நினைத்துக் கொண்டேன். பக்கத்தில் இருந்தவர் நோட்டு ஒன்றில் என் கையெழுத்தை வாங்கிக் கொண்டார். நல்ல வேளை அங்கே பேனா இருந்தது. இந்த முறை யாரும் என் பேனாவை கேட்கவில்லை! அந்தச் சீட்டை கொண்டு போய் அங்கு ஒரு வயதான் பெண்மனி உட்கார்ந்திருந்தார். அவரிடம் கொடுத்ததும், அதை வாங்கிக் கொண்டு பக்கத்தில் உள்ள அட்டைத் தடுப்புக்குள் என்னைப் போய் ஓட்டுப் போடச் சொன்னார்.
உள்ளே சென்று அந்த வோட்டிங் பேடைப் பார்த்தேன். நான் எதிர்பார்த்த 49 {ஓ} இல்லை; சரி அதற்கு ஃபாரம் தான் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து வெளியில் வந்து, அந்த அம்மாவிடம் எனக்கு யாருக்கும் ஓட்டு போட விருப்பமில்லை, எனக்கு 49 {ஒ} ஃபார்ம் கொடுங்கள் என்றேன். அவர் இதில் உள்ளதைத் தான் போட வேண்டும், அந்த நீல நிற பட்டனை அமுத்துங்கள் என்று ஆங்கிலத்தில் சொன்னார். எனக்கு அது தெரியும், எனக்கு இவர்களுக்கு ஓட்டுப் போட விருப்பமில்லை. 49 {ஓ} ஃபார்ம் கொடுங்கள் என்றேன் மெதுவாய். அதற்குள் அந்த அறையில் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டு விட்டது. நீங்க ஆபிஸர்கிட்ட கேளுங்க என்றார். அவர் பக்கத்தில் தான் வரிசை நின்று கொண்டிருக்கிறது. நான் மெதுவாய் சென்று 49 {ஓ} ஃபார்ம் கொடுங்க என்றேன். அவர் அப்படின்னா? என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே விளங்கவில்லை. எல்லோரும் என்னையே பார்க்கிறார்கள். i am really embrassed! சரி என்று சமாளித்துக் கொண்டு, எனக்கு இதில் யாருக்கும் ஓட்டுப் போட விருப்பமில்லை என்று ஒரு ஓட்டுப் போட வேண்டும், அதற்கான ஃபார்மை கொடுங்கள் என்றேன். வரிசையில் சலசலப்பு அதிகமானது. என்ன சொல்றீங்க? ஓட்டு போட விருப்பமில்லைன்னா ஏன் வந்தீங்க? என்றார் ஆபீஸர். வரிசையில் நின்ற ஒரே ஒரு ஜீவாத்மா மட்டும், இல்லை சார் அவர் கேக்குறது சரி தான் என்று அவரிடம் கூறி விட்டு ஆனா அந்த ஃபார்ம் இங்க இல்லை, நீங்க ஏன் ஓட்டை வேஸ்ட் பண்றீங்க? போய் யாருக்காவது போடுங்க என்றார் என்னிடம். எல்லோரும் புலம்பினார்கள். போங்க போய் ஓட்டு போடுங்க என்றார். அப்படியே வெளியே போய் விடலாம் என்று நினைத்தேன். ஆனால் என் நல்ல ஓட்டு கள்ள வோட்டு ஆகாமல் இருக்க உள்ளே சென்று என் மனதில் அடுத்த படியில் இருந்த ஒரு சின்னத்தில் க்ளிக்கி என் முதல் ஓட்டை போட்டேன். [யாருக்குப் போட்டேன் என்பது ரகசியம் என்பது உங்களுக்கே தெரியும்!] எல்லோரும் என்னை பார்த்து சிர்ப்பது போலிருந்தது. அரை ட்ரவுசர் போட்ட அரை லூசு என்று நினைத்திருக்கலாம். உண்மையில் யார் அரை லூசு? மக்கள் ஏன் இவ்வளவு அறியாமையில் இருக்கிறார்கள்? மக்களை விடுங்கள், அந்த அதிகாரிகளுக்கும் அப்படி ஒன்று இருப்பதே தெரியவில்லையா? அல்லது, தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறார்களா? 1960 ஆண்டுகளிலிருந்து இந்த 49 {ஒ} என்பது இருக்கிறது என்றார்களே! பத்திரிக்கைகளில் எத்தனை முறை இதைப் பற்றி வந்திருக்கிறது! யாரும் நமிதாவின் படத்தைத் தாண்டிப் பார்ப்பதே இல்லையா? எனக்கு ஒன்றும் புரியவில்லை.
சரி அரசியல் கட்சிகள் தான் 49 {ஒ} பற்றி பேசமாட்டார்கள். இந்தத் தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது? இந்த விழிப்புணர்வை மக்களுக்கு அது ஏன் சரியாக வழங்கவில்லை. வீடு விடாய் சென்று ஓட்டுக் கேட்கும் அரசியல் கட்சிகளோடு இவர்களும் ஒரு குழு அமைத்து வீடு வீடாய் சென்று இதைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லலாமே? ஏன் செய்யவில்லை? இதை நான் யாரிடம் சொல்ல வேண்டும்? என்ன தான் தீர்வு இதற்கெல்லாம்? ஏன் என் நாடு இப்படி இருக்கிறது? எது தான் சரியாய் நடக்கும் இங்கே? வழக்கம் போல் நிஜம் கேள்விகளின் ரூபத்தில் முகத்தில் அறைகின்றன!
வீட்டிற்கு வந்தவுடன் www.ohpodu.org சென்று ஞாநியின் நம்பர் தேடி, அவருக்கு ஃபோன் போட்டென். ஒரு நம்பர் மாறிவிட்டதாகச் சொன்னது. இன்னொன்று எப்போதும் பிஸியாக இருந்தது. நான் என்ன தான் செய்வது? எல்லா கொடுமைகளையும் பார்த்து பார்த்து இத்தனை கேள்விகளையும் எனக்குள்ளே கேட்டுக் கேட்டு இதோ வலைபதித்துக் கொண்டிருக்கிறேன்! சமயத்தில் எல்லாவற்றையும் எடுத்தெறிந்து விட்டு சமூகத்தைத் திருத்தக் கிளம்பி விடலாம் என்று தோன்றுகிறது! ஆனால் அது அவ்வளவு எளிதானதாக இல்லை. எல்லோரையும் போல என்னால் இந்தியான்னா இப்படித் தான் என்றும் போக முடியவில்லை! கடைசியில் ஆதங்கமே மிஞ்சுகிறது.
என் விரலைப் பார்த்துக் கொள்கிறேன். மை காய்ந்திருந்தது! என் விரலிலும் இன்று முதன் முதலாய் ஜனநாயகக் களங்கம் ஏற்பட்டு விட்டது!
May
08
அதே மாநகராட்சிப் பள்ளி; அதே போன்ற வெவ்வேறு நீண்ட வரிசைகள். ஜனநாயகக் கடனை நிறைவேற்றி விட்டு வந்தவுடன் எழுதுகிறேன். என் வாழ்நாளில் முதன் முதலாய் நான் போடும் ஓட்டு! ஒரு ஜீன்ஸ் ட்ரவுசர், ஒரு டீ-சர்ட்..கூட்டம் அதிகமாயிருந்தால் வரிசையில் ரொம்ப நேரம் நிற்க போர் அடிக்குமே என்று ஐ-பாட் ஐயும் எடுத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டேன். நான் நினைத்த அளவுக்கு கூட்டம் அதிகம் இருக்கவில்லை. இருந்தும் காதில் ஹெட் ஃபோனை மாட்டிக் கொண்டு நீ ஒரு காதல் சங்கீதம் கேட்டுக் கொண்டிருந்தேன். கைலி கட்டிக் கொண்டும், அழுக்கான வேட்டி கட்டிக் கொண்டும், 3 வருடத்திற்கு முன் எடுத்த தீபாவளி சட்டையுடனும், கரை படிந்த பற்களுடனும், வித விதமாய் நின்றிருந்தனர். நான் அவர்களிடம் இருந்து தனித்து தெரிந்தேன். எந்த மடையனும் சொல்லி விடுவான், நான் சாஃப்ட்வேர் இன்சினியர் என்று! சாதாரண மக்களிடம் இருந்து எவ்வளவு விலகி வந்து விட்டேன்? இப்படி விலகச் செய்வது படிப்பா அல்லது பணமா? என்னைப் பற்றி அவர்கள் என்ன நினைத்திருப்பார்கள்? இப்படி பல எண்ணங்கள்! இப்படி எல்லாம் நான் நினைப்பது நியாயமா? அல்லது பேத்தலா? என்னமோ ஒன்றும் புரியவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
நீங்கள் ஓ போட அனுமதிக்காத அந்த அதிகாரிகளின் பெயர்களையும், ஓட்டுச்சாவடி எது என்பதையும் தெரிவித்திருந்தால் நன்றாயிருக்குமே?
ஓட்டுச் சாவடி, சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, ராஜலெக்ஷ்மி நகர், வேளச்சேரி! அதிகாரிகளின் பெயர் தெரியவில்லை. என்னுடைய முதல் அனுபவம் என்பதால், எனக்கு என்ன செய்ய வேண்டும் என்றே புரியவில்லை.
இதையே தான் போன தடவை நான் கேட்டேன்.. இதே நிலமை தான்..
இந்த தடவை நம்ம சகா'க்க 4-5 பேரு presidig officer'ஆ போயிருக்காங்க.. அவுங்களுக்கு போன வாரம் ட்ரெயினிங் இருந்துச்சு, அதுல இதை பத்தி கேளுங்கடான்னு சொன்னேன்.. சொல்றோம்.. சொல்றோம்னு கடைசி வரைக்கும் சொல்லி.. சொல்லாமலேயே அவனுகள பொட்டிய குடுத்து பூத்துக்கு அனுப்பி வச்சுட்டாங்களாம்.. பாவம் இந்த மாதிரி யாராவது போயி கேட்டுட்டு அவனுகள திட்டிட்டு வருவாங்க..
ஒரு தொகுதி அளவுல, ஒரு மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில 2 நாள் நடந்த பயிலரங்குல..இதுக்கு பதில் வாங்க முடியலையாம்.. எங்க போயி சொல்லுவீங்க இதைய..
//வரிசையில் ரொம்ப நேரம் நிற்க போர் அடிக்குமே என்று ஐ-பாட் ஐயும// ஆனா இதெல்லாம் ஓவரு.. யாருப்பா இவுங்களுக்கு சும்மானாச்சுக்கு ஐபாட் எல்லாம் குடுத்தது..? :)
நெசாமாவே அங்க எல்லாம் இருக்குனு நெனைச்சுத்தான் போனீங்களா? :-)
ரஜினி,
எனக்கும் அரசியலுக்கும் கூப்புடு தூரம் இல்லை; ரொம்ப தூரம்! வோட்டிங் பேடில் இருக்காது என்று தெரியும். ஃபார்மாவது இருக்கும் என்று நினைத்தேன்! அதிலும் மண்!
ராசா,
நம்ம நாடு என்னைக்கு திருந்துமோ!
விடுங்க, விடுங்க! என் ஐ-பாடை நினைச்சி உங்க காதுல வர்ற பொகை என் மானிட்டரை மறைக்குதப்பூ!
ஐ-பாடு என்ன வெறும் தகடு! அதாங்க தகடு தகடு!
http://www.keetru.com/ohpodu/index.html ல்
...அதை ஓட்டுச் சாவடி அதிகாரி பதிவு செய்யவேண்டும் என்பதே 49 (ஓ).
வாக்காளர் இதற்காக எந்த விண்ணப்பத்தையும் நிரப்பத் தேவையில்லை. ஓட்டுச் சாவடி அதிகாரியிடம் சொன்னால் போதும். அவர் தன்னிடம் உள்ள பாரம் 17 ஏ என்ற பதிவேட்டில் இதை எழுதிக் கொள்வார். அதில் நாம் கையெழுத்திட்டால் போதும்.
==
நீங்கள் பாரம் 17 ஏ என்ற பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று மேற்கண்ட தகவல் சொல்கிறது.
இருந்தாலும் உங்களின் நிலைமை புரிகிறது. நிஜம் முகத்தில் அறையும் போது , நாம் இங்கே எழுதி, பேசி வரும் வியாக்கியானக்கள் அனைத்தும் நொறுங்கிப் போய் கையாலாகத தனமாய் நான் பல முறை உணர்ந்துள்ளேன்.
நீங்கள் அவர்களிடம் உங்களின் "யாருக்கும் ஓட்டுப்போட விரும்பாத" தகவலைச் சொல்லி அதற்கான நடைமுறையைக் கேட்டதே ஒரு சமூக விழிப்புணர்வின் ஆரம்பம்தான்.
உருப்படாத நாராயணனுக்கும் இதே நிலைமைதான் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் அலுவலகம் களப்பணியில் இறங்க வேண்டும் என்ற உங்களின் யோசனை நல்லது.
அன்பு பிரதிப்,
நானும் உங்களைப்போன்றே சாப்ட்வேர் தான், உங்களுக்கு நடந்ததைப்போன்றே எனக்கும் நடந்தது.. நானும் உங்களைப்போன்றே பாரம் 17 அ கேட்டேன், முதல் தடவை (சென்னையில்) ஆகையால், அடையாள அட்டையில்லை. அதனால் கம்பெனி கொடுத்த அடையாள அட்டையை காண்பித்தேன் அதில் என்னுடைய படம் இருந்தது, அந்த குசும்பு அதிகாரி அதைபார்த்த பின்பும் இது நீங்கள் தானா என்று கேட்டார், பின்னர் இதை ஏற்றுக்கொள்ளலாமா என்று மற்றவரிடம் வினவினார், நான் இது எலக்ட்ரானிக்ஸ் கார்ட் என்றேன், பின்னர் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
நான் மைவைக்கும்பொழுது ஓட்டுப்போட விருப்பமில்லை என்று சொன்னேன், அந்த பெண் அதிகாரி ஓட்டுபோடுவது உங்களுரிமை ஏன் தவற விடுகிறீர் என்றார், மேலும் 17 அ நமுனா என்று இல்லை என்றும் வேண்டுமென்றால் நீங்கள் ஓட்டுப்போடாமல் செல்லலாமென்றும்சொன்னார். நான் பிரதிப் எண்ணியதைப்போன்றே கள்ள வோட்டுப்போட்டுவிடுவார்கள் என்று எண்ணி பிறகு ஓட்டு போட்டேன்.
இதில் ஒரு விசயம் என்னவெண்றால், தேர்தல் அதிகாரிகள் இதைப்பற்றி சரியாக பாடம் எடுக்கவில்லை ஏன்றே தோன்றுகிறது.
நான் 25670390 என்ற தொலைபேசியில் தொடர்புகொண்டு தேர்தல் அதிகாரியிடம் இது பற்றி விளக்கம் கேட்டேன், அவர் அப்பெடியொரு பாரமில்லை நீங்கள் ஓட்டுபோட விருப்பமில்லை என்றால் ஆவர் குறித்துக்கொள்வார், பிறகு யாரும் கள்ள வோட்டு போட முடியாது என்றார்.
நான் கேட்கிறேன், நான் ஓட்டுபோட விரூப்பமில்லை என்பதை ஏன் பகிரங்கப்படுத்த வேண்டும், எப்படி யாருக்கு ஓட்டுப்போடுகிறோம் என்பதை தெரியக்கூடாதோ அதே போல்தானே இதுவும் மதிக்கப்படவேண்டும்.
உங்கள் தொகுதியில் யார் யார் தேர்தலில் வேட்பாளர்களாக் நிற்கிறார்கள் என்று கூட தெரியாமல் எப்படி நீ 49 ஓ க்கு ஓட்டு போட முடிவெடுத்தாய்? அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.
நானும் உன் போல 49 ஓ க்கு தான் முயற்சி செய்து என் மனதில் இருந்த அடுத்த வேட்பாளருக்கு போட்டேன்.
பிரதீப்,
ஒரு நல்ல கடமையை நிறைவேற்றியுள்ளீர்கள். ஆனால் 'ஓ' போட நினைத்தது தவறு என்று எண்ணுகிறேன். யாருக்காவது(சுயேட்சைக்காவது) ஓட்டு போட வேண்டும், என்பது என்னுடைய எண்ணம்.
பரவாயில்லை முதல் முறை உதறல்(stage fear) இருக்கதானே செய்யும்.
வேறு வழியில்லை. நீதிமன்றம் தான் செல்லவேண்டியிருக்கிறது. எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் என்றால், அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? சரி விசயம் இது தான்.
இந்தியஅரசின் அடுத்த சட்டசபைத்தேர்தல் (அது எந்த மாநிலமாயிருந்தாலும் சரி) 'யாரையும் தேர்ந்தெடுக்க விருப்பம் இல்ଡ଼'அ8' என்று ஒரு பொத்தானையும் வாக்களிக்கும் இயந்திரத்தில் வைக்கவேண்டும்.
எனக்கு யாரையும் தேர்ந்தெடுக்க விருப்பமில்லை என்பதை ஏன் நாம் வெளிப்படுத்தவேண்டும். அதுவும் ரகசியமாகவே இருந்துவிட்டு போ கட்டுமே!
Pradeep enna aazhamaan vaarththai
"Jananaayaga Kalangam"..padiththadhum viralai paarththu neengal sonnadhu nijam dhaan ena ninaiththen.
49 ஓ பற்றி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய அளவு, வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு ஏற்படுத்தத் தவறியதுதான் வேதனைக்குரிய விஷயம்!
//எனக்கு யாரையும் தேர்ந்தெடுக்க விருப்பமில்லை என்பதை ஏன் நாம் வெளிப்படுத்தவேண்டும். அதுவும் ரகசியமாகவே இருந்துவிட்டு போ கட்டுமே!//
எப்படி யாருக்கு வாக்களிக்கிறோம் என்பது ரகசியமோ அதே போல் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதும் ரகசியமாக்கப்பட வேண்டும். அதற்குப் போய் தனியே படிவம் வாங்கியோ, அல்லது அதிகாரியிடம் தெரியப்படுத்துதலோ அநாயவசியமான பிரச்னைகளைத்தான் ஏற்படுத்தும்.
ஏனெனில் அங்கு அமர்ந்திருக்கும் ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஏஜெண்ட் வாக்காளருக்கு நெருங்கிய நண்பராகவோ/உறவினராகவோ இருக்கும் பட்சத்தில் தர்ம வாக்காளருக்கு தர்ம சங்கடம்தான்.
strighta century poda try pannirkinga.
vaazhthukal.
Iniyavadu inda maari oru option irukunnu anda therdal adigarigal therinjukollattum.
-karthic
முகம்மத்,
உங்களுடைய கம்பெனி கார்டை எப்படி ஏற்றார்கள் என்றே எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. ஓட்டு போட விருப்பமில்லை என்று சொல்வதற்கா கம்பெனி அடையாள அட்டை எல்லாம் காட்டினீர்கள்? கலக்கியிருக்கிறீர்கள்! சாதனை தான்...
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி, நான் 49 {ஓ} க்கு தான் ஓட்டு போட போகிறேன் என்று அங்கு உள்ள எல்லோருக்கும் தெரிந்து விட்டது!
சிவக்குமார்
முகமது பின் துக்ளக் பார்த்தேன். அதில் ஒரு நிருபர் சோவிடம், எங்கள் இத்தனை கால அரசியலை நீங்கள் எப்படி இவ்வளவு சுலபமாக 4 நாட்களில் தெரிந்து கொண்டீர்கள் என்று கேட்பார். அதற்கு சோ, நீங்கள் இத்தனை ஆண்டுகள் செய்ததை நான் 4 நாட்களில் தெரிந்து கொண்டதிலிருந்து புரியவில்லை, நீங்கள் 4 நாட்களில் செய்ய வேண்டியதை தான் இத்தனை ஆண்டுகள் செய்திருக்கீறீர்கள் என்பார் நகைச்சுவையாய்!!
அதே போல் தான், நம் அரசியல் வாதிகள் யாரும் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள் என்ற ஒரு திடமான நம்பிக்கை! மதுரையிலேயே யார் எப்படி என்று எனக்குத் தெரியாது, இந்த ஊரில் இருக்கும் அரசியல் வாதிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம்! அதான் 49 {ஒ}
சிவமுருகன்,
ஸ்டேஜ் ஃபியர் இருந்திருந்தால், இருந்த பட்டனில் ஏதாவது ஒன்றை க்ளிக் செய்து வந்திருப்பேன். 49 {ஒ} ஃபாரம் கேட்டதே நான் ஒருவன் தான். இவ்வளவு பெரிய புரட்சியை செய்து விட்டு வந்திருக்கிறேன்..நீங்க என்னடான்னா...
நாகு,
இத இதத் தான் நானும் எதிர்பார்க்கிறேன்!
காயத்ரி,
அந்த ஒரு வார்த்தை சிக்கியதால் தான், இந்தப் பதிவையே எழுதினேன். இருங்கள் கொஞ்சம் காலரை தூக்கி விட்டுக் கொள்கிறேன்!! ஹி..ஹி
நாமக்கல் சிபி,
பின்னாடியே ஆளை அனுப்பி அடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. என்னை அடிக்க ஆள் எல்லாம் அனுப்பத் தேவையில்லை தான்...
கார்த்திக்,
வாழ்த்துங்கள்! வளர்கிறேன்!!
Nalla post, pradeep
unga area-la Lok paritran candidate nikkalaya?
avarukku potteengala?
//அதற்கு சோ, நீங்கள் இத்தனை ஆண்டுகள் செய்ததை நான் 4 நாட்களில் தெரிந்து கொண்டதிலிருந்து புரியவில்லை, நீங்கள் 4 நாட்களில் செய்ய வேண்டியதை தான் இத்தனை ஆண்டுகள் செய்திருக்கீறீர்கள் என்பார் //
ஓ...சோ சொன்னதா? அப்படீன்னா நீ(ங்க) சோவோட அடிவருடியா? அந்த ஆளு சொன்னதையெல்லாம் எடுத்து போட்டீங்கன்னா நீங்க ஒரு பார்ப்பான் தானே. அப்படீன்னா நீங்க ஜெயலலிதாவுக்கு தான் ஓட்டு போட்டிருப்பீங்க. - இப்படியெல்லாம் நிறைய பின்னூட்டம் வரலையா?! ஆச்சரியம் தான்!
Nalla post. Vaazhthukkal.
Sariyaana kelvigalai Election boothil kettulai...Ide ponru thodarndu ketukkondirundaal....nichayam oru murai vetri kidaikkum..
Anda oru vetrikkaga pala tholvigalai sandithe theera vendum...nichayam maatram varum..
Vetri nichayam...Maatram nichayam
Balaji K.R.S.
//49 {ஓ} போடலாம் என்று சில நாட்களாக சாஃப்ட்வேர் இன்சினியர்களுக்கு (மட்டும்!) மெயிலின் மூலம் அறிவூட்டப்பட்டது!//
:-))))))))))
//நான் மெதுவாய் சென்று 49 {ஓ} ஃபார்ம் கொடுங்க என்றேன். அவர் அப்படின்னா? என்றார்//
மூன்று வருடம் கழித்தும் இதே நிலைமை தான்