என்னப்பா, இன்னைக்கு ஹாஃப் டேயா என்று கேட்பவர்களை பொருட்படுத்தாது அன்று இரவு 10:30 மணிக்கெல்லாம் ஆபிஸிலிருந்து கிளம்பினேன். வழக்கம் போல் டைடல் பார்க் கார் பார்க்கிங்கில் வேளச்சேரி கேபிர்க்காக ஒரு அரை மணி நேரம் காத்திருந்தேன். என்னை போல் சிக்கிரம் வீட்டுக்குச் செல்லும் சில பெண்களும் இருந்தனர். எல்லோர் கையிலும் செல்ஃபோன். கிட்டத்தட்ட எல்லோரும் யாரையோ திட்டிக் கொண்டும், அர்த்தமில்லாமல் சிரித்துக் கொண்டும் செல்லில் பேசிக் கொண்டிருந்தனர். 12, 1 மணிக்கு காருக்காக காத்திருக்கும் போதும் பார்த்திருக்கிறேன், பெண்கள் செல்லில் பேசிக் கொண்டே தான் இருக்கிறார்கள். அன்றும் கார் வரும் வரை பேசிக் கொண்டிருந்தனர். நான் ஏறி உட்கார்ந்து கொண்டேன்.


காரில் இரவில் எஃபெம் ரேடியோ கேட்டுக் கொண்டே பயணிப்பது எத்தனை சுகமான அனுபவம் என்று உங்களில் பல பேருக்குத் தெரிந்திருக்கும், நானோ பாட்டு பைத்தியம், அன்றும் வழக்கம் போல் காரில் ரேடியோ இருக்கிறதா என்று பார்த்து திருப்தி பட்டுக் கொண்டேன். பின்னால் மூன்று பெண்கள், நான் டிரைவர் பக்கத்தில்..மூன்றில் ஒரு பெண் மட்டும் செல்லில் பேசிக் கொண்டிருந்தாள். டிரைவர் கொஞ்சம் புதுசு என்று நினைக்கிறேன், அவராய் ரேடியோவை போடுவார் என்று நினைத்தேன், என்னால் அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை...பாட்டு போடுங்க என்றேன், போடலாம் சார், ஆனா மேடம் ஃபோன் பேசுறாங்களே பரவாயில்லையா என்றார்? ஓ,சரி சரி, அவங்க ஃபோன் பேசி முடியட்டும் என்றேன்..


வண்டி திருவான்மியூர், அடையார் என்று சுற்றி குறைந்த பட்சம் ஒரு பத்து கிலோமீட்டர் போயிருக்கும், அந்த பாதகத்தி என் வீடு வரும் வரை பேசிக் கொண்டே இருந்தாள். வெறுத்துப் போய் இறங்கிக் கொண்டேன். யாரோ ஒரு பையனிடம் பேசினாள். அவனும் அவளுடைய டீம் தானோ என்னமோ, அவர்களுடைய ப்ராஜக்ட் பற்றி டீப் டிஸ்கஷன்..அதற்கு நாங்கள் தான் கிடைத்தோமா?


எனக்கு இப்படி பல அனுபவங்கள்! பஸ்ஸில் பயணம் செய்யும்போதும் அந்த இரைச்சலிலும் முதல் ஸ்டாப்பில் ஏறி கடைசி ஸ்டாப் வரும்வரை பேசிக் கொண்டே வருகிறார்கள். அப்படி என்னதான் பேசுவார்களோ, தெரியவில்லை. எனக்கு யாராவது ஃபோன் செய்தால் "நல்ல இருக்கியா?" க்கப்புறம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அன்று மழை பெய்து ரோடெல்லாம் ஒரே தண்ணி; ஒரு பக்கம் மெயின் ரோடு, ஒரு பக்கம் பெரிய குட்டை..ஓரமாய் கொஞ்சம் மணல் இருந்தது. நான் இந்தப் பக்கம், ஒரு பெண் அந்தப் பக்கம், கையில் செல்லுடன். ரோட்டைப் பார்க்காமல் அதில் விளையாடிக் கொண்டே வருகிறாள்,அவள் இந்தப் பக்கம் போவாளா, அந்தப் பக்கம் போவாளா புரியவில்லை. அவளைக் கடக்க நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும். ஒரு பெண் செல்லில் பேசிக் கொண்டே ரயில்வே பாலத்தை கடந்ததில் ரயிலில் அடிபட்டு இறந்தாள் என்று பேப்பரில் படித்தேன். பெண்களுக்கு செல்ஃபோன் என்பது கைக்கு அடக்கமான டெட்டி பியர் மாதிரி ஆகி விட்டது.


4 பெண்கள் நின்றால், அதில் மூன்று பேர் செல்லில் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களால் எப்படி இப்படி நேரில் நின்று பேசுவது போல் ஃபோனில் பேச முடிகிறது என்று எனக்குப் புரியவில்லை; எனக்கு புரியாத இன்னொரு விஷயம் அவர்களால் எப்படி இவ்வளவு மெல்ல பேச முடிகிறது என்பது! நான் பேசும்போது என் தம்பி, நீ பேசுறதுக்கு ஃபோனே தேவையில்லை, அவனுக்கு அப்படியே கேட்ருக்கும், மெதுவா பேசுடா என்று திட்டுவான்.


பெண் நண்பிகளே, எத்தனையோ பேர் எத்தனையோ விதமான அவசர தகவலகளைச் சொல்ல முயற்சி செய்து கொண்டு இருப்பார்கள். ஒரு மிஸ்ட் கால் கொடுத்து அப்புறம், அப்புறம் என்று அந்தப் பையன் வழிவதை ரசிக்காதீர்கள். தொலைபேசி என்பது..வெயிட் வெயிட், வெயிட் எ நிமிட் ஃபார் ஃபைவ் மினிட்!


யாரு இது மிஸ்ட் கால் விட்றது..புதுசா இருக்கு...நம்பரை பாத்தா பொண்ணு நம்பர் மாதிரி ஃபேன்ஸியா இருக்குதே, எக்ஸ்க்கியுஸ் மீ..நான் ஒரு ஃபோன் பேசிட்டு வந்துர்றேன்.. ஹிஹி..

வணக்கம்பா...இன்னா? எல்லாரும் ஷோக்கா கீறீங்களா? ரொம்ப நாள் ஆச்சா ஒங்கள பாத்து, ஒரே ஃபீலிங்கா கீது..அல்லாரும் நல்லா இருந்தா சர்தான்!

என்ன ஒரு மூன்று மாதம் இருக்குமா நான் வலைபதித்து? இந்த இடைபட்ட காலத்தில் என் பதிவுகளைக் காணாமல் கிட்டத்தட்ட 2000, 3000 பேராவது [இங்கு பூஜ்ஜியத்திற்கு மதிப்பில்லை!] யாஹு அணைந்த கோட்டின் வழியே என்னையும் என் பதிவுகளைப் பற்றியும் நலன் விசாரித்திருந்தார்கள். அனைவருக்கும் என் நன்றி! றி! றி!!

சரி சென்னையே மழையால் நனைந்து வாடிக் கொண்டிருக்கும்போது, நாமும் சேர்ந்து ஏன் சொத சொதப்ப வேண்டும் என்று சும்மா இருந்தால், சென்னையில் மழைக் காலம் என்பது நிரந்தரம் ஆகிவிட்டதோ என்ற அளவுக்கு பெய்து கொண்டே இருக்கிறது..அது சரி, எஙலை [இங்கு எங்கள் என்பது என் தம்பியை குறிக்கும்] போல் நல்லவர்கள் இருந்தால் மழை வரத் தானே செய்யும்! சரி ஒரேடியாய் கொட்டுதே என்று நேற்று தான் அவனை அமெரிக்காவுக்கு அனுப்பி விட்டேன்..

சரி விஷயத்துக்கு வருகிறேன்..ஆபிஸில் ஒரே உழைப்பு, உழைப்பு என்று இருந்ததால், எங்கள் மீதும் கொஞ்சம் இரக்கப்பட்டு நேற்று வெளியே [அவுட்டிங்காமா, அட்டகாசம் தாங்கல] கூட்டிச் சென்றார்கள். ம்ம்..அதே தான். ஈசிஆர் ரோடு என்று போட்டாலும் போட்டார்கள், ரோடின் ஒரு பக்கம் எல்லாம் பீச் ரிசார்ட் தான்! களை கட்டுது..நாங்கள் சென்றது ஃபிஷர்மென் கோவ்!

மனநலம் சரி இல்லாதவர்களை எல்லாம் வருடத்திற்கு ஒரு முறை குற்றாலத்திற்கு கூட்டிச் செல்வது போல் எங்களையும் டிசர்ட் யுனிஃபார்ம் மாட்டி கூட்டிச் சென்றார்கள். ஒரே வித்தியாசம் அவர்கள் போவது வேனில், நாங்கள் போவது பர்வீன் ட்ராவல்ஸ் பஸ்ஸில், வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அதிகம் வித்தியாசம் தெரியாது..நல்ல வேளை யாரும் சலபுலசலபுல கும்தலக்கா போடவில்லை! [இதை எல்லாம் எப்படி கண்டுபிடிக்கிறார்கள்!?]

வழக்கம் போல் அடுத்தவர்களை ஓட்டி சிரிப்பு வராமல் சிரித்துக் கொண்டிருந்தோம். டிஜிட்டல் காமெராவிற்கு சிரித்தோம்..இந்த மாதிரி இடத்திற்கு ஒரு டிஜே வந்திருக்க வேண்டுமே என்று நீங்கள் நினைப்பது சரி தான்..அந்த ட்ரூப்பில் ஒரு பெண் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்? அட, என்ன இது? எல்லாம் நீங்க நினைச்சுட்டா நான் என்னத்தை தான் சொல்றது..சரி சரி, கொஞ்சம் ஒன்னும் நினைக்காம ஊ கொட்டி கேளுங்க..

இருந்தா..உடம்போடு ஒட்டிய ஜீன்ஸ், விவேக் ஒரு படத்தில் சொல்வது போல் நாம் உள்ளே போட்டுக் கொள்ளும் ஒரு முன்டா பனியன், அது வேறு ஒரு அங்குலத்துக்கு இடுப்பை காட்டியது..சின்ன முடியில் போனிடெய்ல், என்ன இங்கிலீஷ் பாட்டு போட்டலும் இடுப்பை வெட்டி வெட்டி பாடிக் கொண்டிருந்தாள். அவள் தான் நேற்று நிகழ்ச்சி நடத்த வந்த தொகுப்பாளினி! ஆபிஸில் இருந்தவர்களையே பார்த்து பார்த்து வாடிப் போயிருந்த எங்களுக்கு ஜொள்ளிக் கொள்ள ஒருத்தி கிடைத்தாள்!

முதல் பாதி பல விதமான விளையாட்டுகளை விளையாடி அவுட்டிங் வந்த கடமையில் பாதியை நிறைவேற்றினோம். பிறகு மதிய சாப்பாடில் ஓடுவன, பறப்பன, நீந்துவன என்று ஒரு கட்டு கட்டி விட்டு அப்பாடா என்று உட்கார்ந்தால், மேனேஜர்கள் கையில் மைக்! பிறகென்ன, நாங்கள் இந்த ஆண்டு, இதை செய்தோம், அதை செய்தோம் என்று எங்களை கை தட்டச் சொன்னார்கள்! ஹிஸ்ட்ரி ஜாக்ரஃபி பீரியட் மாதிரி தூங்கி வழிந்து கொண்டே கை தட்டினோம். பிறகு ராப்பகலாய் வேலை பார்த்தவர்களுக்கு அவார்ட் கொடுத்தார்கள். அதில் அடியேனும் ஒருவன். [இப்போ புரியுதா ஏன் வலை பதியலைன்னு?] நீ ரொம்ப நல்ல வேளை பாத்தப்பா, தெனம் ராத்திரி 2 மணிக்கு போற, இப்போ அவார்ட் எல்லாம் கொடுக்குறோம்ல? தெனம் 3 மணிக்கு தான் வீட்டுக்கு போவனும் என்ன? சரியா? என்று ஒரு பேப்பரில் கையெழுத்து போட்டு கொடுத்தார்கள். ஒரு வழியாய் எல்லாம் ஒய்ந்து முடிந்து மைக் எங்கள் நாயகியின் கையில் போனது, ஆட்டம் பாட்டம் ஆரம்பம்!

சரி அவார்ட் வாங்கின சந்தோஷத்தில் நானும் ஒரு குத்தாட்டம் போட்டேன். திடீரென்று மியுசிக்கை நிறுத்தி இந்தக் கூட்டத்தில் மிக அருமையாக ஒருவர் ஆடுகிறார், உங்க பேர் என்ன என்று என்னிடம் கேட்டது அந்த பட்சி! பிரதீப், என்று காத்து தான் வந்தது..மைக் இருந்ததால் கொஞ்சம் கேட்டது..உங்களுக்கு மட்டும் இந்தப் பரிசு என்று கையில் ஒரு டப்பாவை தினித்தாள். ஜோரா ஒரு தடவ கைய தட்டுங்க என்றாள்! இப்போ போட்ற மியுஸிக் உங்களுக்கு மட்டும் என்று ஏக், தோ, தீன் பாட்டை போட்டு என்னை ஆடச் சொன்னாள்! நான் தான் தரையிலையே இல்லையே, சுத்தி ஒன்னும் தெரியலை..இஷ்டத்துக்கு இன்னொரு ஆட்டம்!

வழக்கமாய் இந்த மாதிரி ஆட்டம் பாட்டம் என்றால் யாராவது என்னை இழுத்து விடாமல் நானாய் போய் ஆட மாட்டேன். நேற்று தான் யார் என்ன நினைத்தாலும் நான் ஆட வேண்டும் என்ற ஒரு முடிவுடன் இருந்தேன். அந்த ஆட்டத்திற்கு முன் என்னை அங்கு வந்திருந்தவர்களில் பாதி பேருக்கு கூட தெரியாது. அந்த ஒரு நிமிடத்தில் என்னை அவள் பிரபலமாக்கி விட்டாள். அடுத்த நிமிடம் யாரென்றே தெரியாத பலர் எனக்கு கை கொடுத்தனர். முதுகில் தட்டிக் கொடுத்தனர். எல்லோருக்கும் எப்படியோ, பிரபலமாய் இருப்பதில் எனக்கு எப்போதும் ஒரு மயக்கம் உண்டு! என்னால் அப்படி ஆக முடியும் என்று நம்புகிறேன்.

எனக்கு மிகவும் பிடித்த வரிகள்:

மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்!
ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவன் என்று போற்றிப் புகழ வேண்டும்!!

கலாம் அவர்கள் சொல்வது போல், கனவுகளை நம்புபவன் நான்! நீங்கள்?

நான் உடலால் முதுமையும், உள்ளத்தால் என்றும் இளமையும் பெற்ற ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் பலதரப்பட்ட பத்திரிக்கைகளில் நிருபராய் வேலை பார்த்தவர். அவர் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை எனக்குச் சொன்னார். அதை நான் மிகவும் ரசித்தேன். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

சாவி என்ற பத்திரிக்கையில் ஒருவர் பலமுறை தன் கதைகளை அனுப்பிக் கொண்டிருந்தார். எந்தக் கதையுமே பிரசூரிக்கப் படவில்லை! கோபமடைந்த அவர், சாவியின் பத்திரிக்கை ஆசிரியருக்கு "என்னைப் போன்றவர்கள் எவ்வளவு தான் நன்றாய் கதை எழுதினாலும், எதையும் நீங்கள் பிரசூரிப்பதில்லை; இதே, சுஜாதா அனுப்பியிருந்தால் அவருடைய லான்ட்ரி பில்லாய் இருந்தாலும் பிரசூரிப்பீர்கள் என்று கார சாரமாக ஒரு கடிதத்தை எழுதினார்.

இதை அந்த ஆசிரியர் எப்படி எதிர் கொண்டிருப்பார் என்று நினைக்கிறீர்கள்? இந்த மாதிரி தினமும் 100 கடிதம் வரும், இதையெல்லாம் அவர் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா என்று நினைத்தால், அது தவறு! அந்த ஆசிரியர் இந்தக் கடிதத்தை படித்து விட்டு, சுஜாதாவிடம் விஷயத்தை சொல்லி அவர் லான்ட்ரி பில்லை வாங்கி பிரசூரித்தார். சுஜாதாவின் லான்ட்ரி பில் கீழ் வருமாறு:

2 டெரிகாட் சட்டை
3 பாண்ட்
2 புடவை
4 கை வைத்த பனியன்
2 கைக்குட்டை, அதில் ஒன்று ரத்தம் படிந்தது!..

இது உண்மையிலேயே நடந்ததா என்றால் அது சுஜாதாவுக்கு கொஞ்சம் வெளிச்சம்; தேசிகனுக்கு தான் எல்லா வெளிச்சமும்! [சுஜாதாவே இவரிடம் தானே தன் கதை எங்கு, எப்போது வந்தது என்று கேட்கிறார்!]

எப்படியோ எழுத்தாளர்களின் திறமையை நான் ரசித்தேன்! நீங்கள்?


நான் முடி வெட்டி 9 மாதங்கள் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். எனக்கு நேருமல்லாத சுருட்டையுமல்லாத முடி. அதாவது, சிறிதாக வெட்டி இருந்தால், நேராக இருக்கும். வளர்ந்து விட்டால் சுருண்டு கொள்ளும். எனக்கு நிறைய முடி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை! உனக்கு ஏன் இந்த விபரீத ஆசை என்று நீங்கள் கேட்டால், கீழ் வரும் அனுபவங்கள் அதற்கு பதில் சொல்லும்!

சென்னையில் இருப்பவர்கள் வெயில் தாழாமல் இருக்கும் கொஞ்ச நஞ்ச முடியையும் வெட்டிக் கொண்டிருக்கும் சமயத்தில் [சில சினிமா நடிகர்களைத் தவிர - இவர்களுக்கு எப்படித் தான் அத்தனை சீக்கிரம் அவ்வளவு முடி வளர்கிறதோ, எனக்குப் புரியவில்லை!] என்னைப் போல சிலரும் சுற்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள். முன்னிருக்கும் முடியை சரியாக இழுத்து விட்டால், என் உதட்டை தொடுகிறது. அதனால் அம்பி மாதிரி மேல் வாரியாக இழுத்து வாரிக் கொண்டு தான் எங்கும் செல்கிறேன். ஏற்கனவே எனக்கு நெத்தி என் உள்ளத்தை போன்றது..அதான்..பரந்து விரிந்தது!

என் முன் வழுக்கை தெரிந்தாலும் பரவாயில்லை என்று நான் எப்போது தூக்கி சீவ ஆரம்பித்தேனோ, அன்று முதல் எனக்கு பல விதமான அனுபவங்கள்.

1. சுஜாதாவை சந்திக்கச் சென்ற அன்று சுரேஷ் என்னிடம், நீங்கள் நாடக நடிகரா? உங்கள் ஹேர்ஸ்டைலைப் பார்த்தால் அப்படித் தெரிகிறது என்றார்.

2. ஆஃபிஸில் லிப்ஃடில் சென்று கொண்டிருந்த என்னிடம், யாரென்றே தெரியாத ஒருவர், "ஸோ யு ஆர் ட்ரையிங் டு பி ரெமோ?" என்றார். தலையை கலைத்துக் கொண்டு சிரித்தேன். நல்ல வேளை அவர் இறங்கும் இடம் வந்து விட்டது.

3. தலையை கலைத்து ஒரு மாதிரி சிரித்தால், சிறு குழந்தைகள் பயந்து தன் அம்மாவைக் கட்டிக் கொள்கிறார்கள். இன்னும் சில நாட்களில் எங்கள் தெருவில் "நீ மட்டும் சாப்பிடலை, பிரதீப் கிட்ட புடிச்சு கொடுத்துடுவேன்" என்று தாய்மார்கள் சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

4. ரோட்டில் அனைவரும் ஒரு தடவைக்கு இரு தடவை என்னைப் பார்க்கிறார்கள். நான் அடிக்கடி தலையை சிலிர்த்து அலட்டிக் கொள்ள வேண்டி இருக்கிறது. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் என்னைக் கடக்கும் போது, ஐ! அந்நியன் போறாருடா என்கிறார்கள். தெருவில் சற்று நேரம் நின்றால், அங்கு விளையாடும் குழந்தைகள் "ஹேய் ரெமோ" என்கிறார்கள்!விக்ரமுக்கு என்னை விட வயது அதிகம். அவரின் பெயரைச் சொல்லி என்னை அழைப்பதால் எனக்கு ஒன்றும் சந்தோஷம் இல்லையென்றாலும் [இது ரொம்ப ஓவர் தான்!], அந்தக் குழந்தைகள் சந்தோஷப்படுகின்றன.

5. அன்று ஒரு கையில் டைரியுடன் ஒரு ப்ரவுசிங் சென்டரில் தேசிகன் வலைப்பதிவை மேய்ந்து கொண்டிருந்தேன். அந்த கஃபேக்கு சொந்தக்காரர் என்னை நெருங்கி, நீங்க எழுத்தாளரா என்று கேட்டார்? எனக்குப் பெருமை தாங்க முடியவில்லை! ஏன் கேட்கிறீர்கள் என்றேன்? இல்லை இந்த மாதிரி சைட் எல்லாம் பாக்குறீங்களே? என்றார். உங்க பேர் என்ன என்றார்? பிரதீப் என்றேன், புனைப்பேர் இல்லையா என்று கேட்டார். சிரிப்பை அடக்கிக் கொண்டேன். தொடர்ந்து, என் கவிதைகள் கனையாழியில் வந்திருக்கிறது என்று ஒரு போடு போட்டார்! உண்மையான எழுத்தாளர்!!

6. ஹோட்டலில் என் தம்பியுடன் சாப்பிடச் சென்றேன். ஆர்டர் வாங்க வந்தவர், நான் சொல்வதைக் கேட்காமல் என்னை இடைமறித்து, உங்களைப் பாத்தா ரயில் பயணங்கள்ல வர்ற சுதாகர் மாதிரி இருக்கு சார் என்றார். உடனே நான் "எப்படி" என்று என் தம்பியை எகத்தாளமாய் பார்த்தேன். அவன் என்னை புழு பூச்சியை விடவும் கேவலமாக பார்த்துக் கொண்டிருந்தான். நானும் சளைக்காமல் ரயில் பயணங்கள்ல சுதாகர் இல்லையே என்று என் சினிமா அறிவை வெளியிட்டுக் கொண்டேன். அவர் அசடு வழிந்து அந்தப் படத்தின் கதையை சொல்ல ஆரம்பித்து விட்டார். நான் நிறுத்தி அது கிழக்கே போகும் ரயில் என்றேன். அவர் அதோடு நிற்காமல், எரியும் நெருப்பிடம், அதாவது என் தம்பியிடம் நீங்க இவர் கூடையே இருக்கிறதால, உங்களுக்கு அப்படித் தெரிய வாய்ப்பில்லை என்று விளக்கம் வேறு. என் தம்பி இனிமே இவன் கூட வரக்கூடது என்று முடிவு கட்டி விட்டான் என்று எனக்குப் புரிந்து விட்டது!

7. என்னுடைய ப்ராஜக்ட் லீடர், என் தலையை பார்த்தே பேசுவார். ஹலோ என் கண்ணைப் பாத்து சொல்லுங்க என்று ரஜினி/விக்ரம் ரேஞ்சில் டயலாக் விடுவேன். அவருக்கும் சிரிப்பு வந்துவிடும்.

8. என் பழைய ஐடி கார்ட்டை பார்த்து நண்பர்கள், இவ்வளவு நல்லா இருந்துருக்கியேடா? என்றால், கொஞ்ச நாள் அசிங்கமா இருக்கலாம்னு பாக்குறேன் என்று பீத்திக் கொள்வேன் [இனிமேல் கேட்பார்கள்?]. இதன் மூலம் நான் கற்ற பாடம், நீங்கள் அழகு என்று யாராவது சொல்ல வேண்டுமா? இருப்பதை விட கேவலமாய் மாறி விடுங்கள்..தோற்றத்தில் மட்டும்!!

இப்போது சொல்லுங்கள்? என் வாழ்க்கையில் கொஞ்சம் சுவாரஸ்யம் கூடியிருக்கிறதா? இல்லையா? ஆண்களால் தான் இப்படி அடிக்கடி முகத்தை மாற்றி கொள்ள முடியும், [அதாவது, விதவிதமாய் அசிங்கப்படுத்திக் கொள்ள முடியும்!] இந்த தாடி தான் வளர மாட்டென் என்கிறது! இந்த வார குமுதத்தில் மதன், நான் ரசிகன் கட்டுரையில், தாடியைப் பற்றி எழுதியிருந்தார். பெரியாரும், தாகூரும் தாடி இல்லாமல் வந்தால் நம்மால் கண்டு பிடிக்க முடியுமா? என்ற கேள்வி என்னை மிகவும் கவர்ந்தது. அந்த மாதிரிக் கட்டுப்பாடுகள் எல்லாம் பெரிய தலைவர்களுக்குத் தான்..எனக்கு என்ன? அடுத்ததாக மொட்டை போட்டுக் கொள்ளலாமா என்று பார்க்கிறேன்? என்ன சொல்கிறீர்கள்?

வெகு நாட்களுக்குப் பிறகு வலைப்பதிகிறேன். சமீபத்தில் ஒரு துர் மரணம் என்னை மிகவும் பாதித்தது. பெங்களூரில் நான் இருந்த போது எனக்குப் பழக்கமான ஒரு நண்பன்; அவனுக்கு வயது ஒரு 22, 23 இருக்கலாம். 'டெல்' லில் நானும் அவனும் ஒன்றாக வேலை பார்த்து வந்தோம்.

சமீபத்தில் அவன் ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டதில் அவனும் அவனுக்கு மட்டுமே தெரிந்த பாஸ்வேர்ட்களும் இறந்தது. ஒரு மரணத்தை வேடிக்கையாகச் சொல்வதாக யாரும் எண்ண வேண்டாம், வேதனையாகத் தான் சொல்கிறேன். இப்படி அவனுக்கு மட்டுமே தெரிந்த எத்தனை ரகசியங்கள், சாதனைகள், சாகசங்கள், சோகங்கள், சந்தோஷத் தருணங்கள் அவனோடு அழிந்து போனதோ.. வாழ்க்கை தான் எத்தனை விசித்திரமானது? இப்படி 22, 23 வயதில் ஒரு சாலையின் பிரிவானத்தில் அடிபட்டு இறக்கவா அவன் அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்தான்? அவனுக்கும் எனக்கும் நிறைய வாக்குவாதங்கள் வருவதுண்டு. நல்ல நிலையில் இருக்கும் நீ நலிந்தவர்களுக்கு உதவ வேண்டும் என்று நான் சொல்வேன்..நான் என்னை பாத்துக்குறேன், சமுதாயம் அது தன்னை பாத்துக்கும் என்பான். சமுதாயம் எனக்கு என்ன செய்தது, நான் அதற்கு செய்வதற்கு என்று சண்டை போடுவான்...அவன் பேசுவதைக் கேட்டால், என்னையும் அவனுடைய கட்சியில் சேர்த்து விடுவானோ எனறு எனக்கு பயமாக இருக்கும். இதை பற்றி நாம் பிறகு விவாதிப்போம் என்று ஒதுங்கி விடுவேன்.

நான் எழுதிய பொதுவுடைமை பற்றிய பதிவுக்கு எதிராக அவனும் வலை பதித்தான். ஆம். அவன் உங்கள் எல்லோருக்கும் அறிமுகம் ஆனவன் தான். விஜயநகர் என்ற பதிவில் பொன்னியின் செல்வன் என்ற பெயரில் வலைப்பதித்து வந்தான். சமீபத்தில் அவனுடைய வலைப்பதிவின் டெம்ப்ளேட்டை மாற்றினான். நீங்களும் பாருங்கள்!ரத்தச் சிவப்பில், காலனை போன்ற ஒரு கரிய உருவம் கையில் ஏதோ ஒரு ஆயுதம் ஏந்தி நிற்கிறது. மரணம் தன்னை நோக்கி வருகிறது என்று அவன் மூளையின் ஓரத்தில் ஒரு நரம்பு சொல்லியதோ என்னமோ?

மரணம் மனிதனை விட வக்கிரம் படைத்தது என்று நினைக்கிறேன். காதலுக்கு கண்ணில்லாதது போல், மரணத்துக்கும் இல்லை போலும். கண்களை விடுங்கள்! இதயமே இல்லை அதற்கு. என்று நட்பின் பிரிவில் நான் புலம்பினாலும், எந்த லஞ்சமும் வாங்காமல், எந்த ஊழலும் செய்யாமல் கடமையை மட்டும் கண்ணும் கருத்துமாய் செய்யும் மரணம் என்னை வியக்கச் செய்கிறது. மரணத்தில் தான் சமத்துவம் இருக்கிறது. அது எல்லோரையும் ஒரு சேர கண்கானித்துக் கொண்டே இருக்கிறது. அதற்க்கு நிறைய கண்கள் இருக்க வேண்டும். என்று நினைக்கிறேன். காற்றுடன் சேர்ந்து அசையும் மரம் போல, மரணத்துடன் சேர்ந்து வாழ்வு அசைந்து கொண்டே இருக்கிறது.

எத்தனையோ பேர் மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் நம் முதுகுக்கு பின்னால் வந்து நம் கழுத்தைப் பிடித்து நம்மை கொண்டு செல்கிறது மரணம்!

மரணமே இல்லாத மரணத்தை யாரால் என்ன செய்ய முடியும்?

பின்குறிப்பு: தயவு செய்து வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள். அவனுக்கு தலையில் அடிபட்டதைத் தவிர உடம்பில் ஒரு சிராய்ப்பும் ஏற்படவில்லை!
வலைப்பதிவாளர்கள் யாரும் ஏன் நாடக விழாவுக்கு வருவதில்லை என்ற என் முந்தைய பதிவில் கேட்ட கேள்விக்கு, குவிந்த பின்னூட்டத்தில் வலைப்பதிவாளர்களுக்கு நாடகத்தில் இருக்கும் பற்று எனக்கு புரிந்து விட்டது. சரி எல்லோருக்கும் வேலைப் பளுவின் காரணமாக வர முடியவில்லை என்று நான் நினைத்துக் கொண்டு தொடர்கிறேன்.

நாடகம் - ஹலோ ராஜி
கதை, வசனம், இயக்கம் - அகஸ்டோ
சிறப்பு விருந்தினர்கள் - டி.கே.எஸ். அண்ணாச்சியின் வாரிசுகள், நாடக நடிகை ஷீலா

ஜாதி மதத்தின் மேல் நம்பிக்கை இல்லாத ஒரு முற்போக்கும் எண்ணம் கொண்ட பெண்ணை பெண் பார்க்க நல்ல இதயங்கள் கொண்ட இருவர் வருகிறார்கள். அதில் யாரை அவர் தேர்ந்தெடுக்கிறார் என்பதில் நிகழும் குழப்பங்களே கதை. இந்தக் கால இளஞர்கள் செய்யக்கூடிய நற்காரியம் ஏராளமாக இருக்கிறது, அதை விடுத்து ஜாதி மதம் என்ற பிரிவினையில் சிக்கி தவிக்ககூடாது என்று ஒரு சின்ன மெஸேஜ்!

தமிழ் திரையிலும், விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் வரும் செளந்தர்யா வித விதமான சேலைகளில் கதாநாயகியாக வலம் வந்தார். மற்ற நடிகர்களின் பெயர் எனக்கு மறந்து விட்டது. பொண்ணு பேர் மட்டும் எப்படி ஞாபகம் இருக்கு என்று கேட்காதீர்கள்! ஹார்மோன் திருவிளையாடல்!! அதையன்றி யாமொன்றும் அரியோம் பராபரமே!! எல்லா நடிகர்களும் நன்றாகவே நடித்தனர். பிரகாஷாக வந்தவர் கொஞ்சம் ஓவராக உணர்ச்சிவசப்பட்டு நடிக்கிறாரோ என்று தோன்றியது. மற்றபடி நாடகம் முழுவதும் இழையோடும் நகைச்சுவை மிக அருமை!

"நீ இந்த வெள்ளை சஃவாரி போட்டாலே கல்யாணத்துக்கு போறேன்னு ஊருக்கே தெரியுமேடா!" என்று இன்றும் சஃவாரி அணிபவர்களை கிண்டல் செய்கிறார்கள். கல்யாணம் என்றாலே மாப்பிள்ளை பாம்பே டையிங், ஒன்லி விமல் மாடல்கள் போல் ஒரு சஃவாரி எடுத்துக் கொள்வது ஒரு காலம்.

"இவர்தான் கிருஷ்ணனா என்று கேட்டதற்கு, ஏன் புல்லாங்குழலோட வந்தாதான் ஒத்துக்குவீங்களா என்பது நச் பதில்."

"இதுக்கு தான் நான் என் கல்யாணத்தப்போ பொண்ணே பாக்கலை, போட்டோ மட்டும் அனுப்ச்சேன்! ஃபோட்டோல நான் கொஞ்சம் சுமாராவெ இருப்பேன். தாலி கட்டும் போது அவ என்னை உத்துப் பாத்து ஓன்னு கதறுனா, என்னன்னு கேட்டா, ஃபோட்டோல சிங்கம் மாதிரி இருந்தியேய்யா, நேர்ல அசிங்கமா இருக்கியேன்னா.."

இப்படிப் பல இடங்களில் பல நச் நச் கள்! அந்த நடிகர் மிக இயல்பாய் நடித்தார். பாராட்டுக்கள்.

இந்த நாடகத்தில் இன்னொரு முக்கியமான விஷயம், 3 விநாடிகளில் க்ளைமாக்ஸ்! இதை நாடகத்திற்கு முன்பே சொல்லி எதிர்பார்ப்பை கூட்டினார்கள்! எதிர்பார்ப்பு என்று வந்துவிட்டால் ஏமாற்றத்தை தவிர்ப்பது கஷ்டம் தான். கொஞ்சம் சப்பென்று தான் இருந்தது. நாயகி கடைசியில் தன் கணவனை தேர்ந்தெடுத்ததில் எனக்கு கொஞ்சம் உறுத்தவே செய்தது. ஆனாலும் பாராட்டத்தக்க முயற்சி!

நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். பெரிய மனிதனாய் ஆகக் கூடாது, அப்படியே ஆனாலும் இந்த மாதிரி மேடையேறக்கூடாது, அப்படியே ஏறினாலும் பொன்னாடை போர்த்துவதை தவிர்க்க வேண்டும். எடுத்ததெற்கெல்லாம் பொன்னாடை போர்த்துகிறார்கள். இத்தனையும் கொண்டு போய் என்ன தான் செய்வார்களோ தெரியவில்லை..

நாடகம் : வேகம்
கதை
வசனம் : நாணு
அரங்கம் : வாணி மஹால், மஹாசுவாமிகள் அரங்கம்

ஒரு நடுத்தரக் குடும்பம். குடும்பத்தலைவன், தலைவி, பிள்ளை, தலைவனின் அப்பா. அப்பாவின் பழைய தார்மீகக் கருத்துக்களுடனும், பிடிவாதத்துடனும், பிள்ளையின் புதிய சிந்தனைகளுடனும், பிடிவாதத்துடனும் சிக்கித் தவிக்கும் ஒரு மனிதனின் கதை. வாழ்க்கை மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது, பெற்றோர் ஒரு வேகத்திலும், பிள்ளைகள் ஒரு வேகத்திலும் சென்று கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் இருவருக்காக வாழ்வதே நம் வாழ்க்கை என்று தம்பதிகள் உணர்வதாய் நாடகம் முடிகிறது. இவ்வளவு நுணுக்கமான பிரச்சனையை இவ்வளவு எளிமையாக அழகாக கையாள முடியுமா என்று பிரமிப்பாய் இருக்கிறது. தேவை இல்லாமல் இளைய சமுதாயத்தினருடன் உங்களுடைய பழமையான கருத்தை திணிக்காதீர்கள் என்று வீட்டின் முதியவருக்கும், அதிகமாக பெரியவர்களை உங்கள் இழுப்புக்கு இழுக்காதீர்கள், அவர்கள் உடைந்து விடுவார்கள் என்று இளைய சமுதாயத்தினருக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஆனால் அது நேரடியான அறிவுரையாய் இல்லாமல் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றியது போலிருந்தது பாரட்டுக்குரியது. எல்லோர் வீட்டிலும் இருக்கும் பிரச்சனையை மிக அழகாக கையாண்டிருக்கிறார் நாணு. தேர்ந்த பாத்திரப் படைப்பு. மிக அற்புதமான நடிப்பு. நாடகத்தின் தாக்கம் என்ன என்பதை நேற்று தான் உணர்ந்தேன்.

நேற்று நடந்த நிகழ்ச்சியில் பழம் பெரும் நாடகக் கலைஞர் ராமானுஜம், பழைய நடிகை லீலா, அவர் மகள், நடிகர் ராதாரவி அனைவரும் வந்திருந்தார்கள். அவருடைய பரம்பரைக் குரலில் மிக அழகாகப் பேசினார். கடைசியில் கொஞ்சம் அம்மா புகழ் பாடினார்!

நாடகம் தான் அவருக்கு தாய்வீடு என்றும் சினிமா வெறியர்களை உருவாக்கும்; நாடகம் தான் ரசிகர்களை உருவாக்கும்! என்றும் இது சத்தியத்திற்கு கட்டுப்பட்ட இடம் என்றும் சிலாகித்துப் பேசினார். நாடகத்தில் கர்ணன் வேஷம் போடுவான், அந்தக் காட்சி முடிந்ததும் மேடைக்குப் பின்னால் சென்று யாரிடமாவது டீ வாங்கிக் கொடுக்கச் சொல்லிக் கொண்டிருப்பான் என்று நாடகக்காரனின் பரிதாப நிலையை நகைச்சுவையாகச் சொன்னார். நாடகம் தான் கருத்துக்களை எளிதில் கொண்டு சேர்க்கக்கூடிய சிறந்த ஊடகம் என்றார்.

இத்தைகைய ஒரு நாடக விழாவைக் கொண்டாடும் டிவி. வரதராஜனுக்கு ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அதற்கு வரதராஜன், இந்த இடத்தில் நாடகம் தான் கதாநாயகன், ஆதலால் பாராட்டு விழா நடத்துவதென்றால் ஒரு நாடகம் போடுங்கள் என்றார். 15ம் தேதி இந்த விழா நிறைவு பெறுகிறது. விழா நிறைவு பெறுகிறது என்று சொல்வதை விட, மனம் நிறைவு பெறுகிறது என்று சொல்வது தான் சரி என்று முடித்தார். எத்தனை அழகான பேச்சு!

மன நிறைவோடு நானும் வீடு வந்து சேர்ந்தேன்!

ஒரு விஷயம். இந்த விழாவில் எந்த வலைப்பதிவாளரையும் நான் பார்க்கவில்லை. வருவதில்லையா? அல்லது நான் தான் பார்க்கத் தவறி விட்டேனா? "மீசையானாலும் மனைவி"க்குத் தான் எல்லோரும் வருதாய் உத்தேசமா?

சிங்காரச் சென்னையில் நாடக விழா அமோகமாய் நடக்கிறது. என் பையனை பத்தி ஏன் கேக்குறீங்க, சினிமா, ட்ராமான்னு சுத்துறான் என்று பெற்றோர்கள் அங்கலாய்க்க நான் நேற்று முதன் முறையாய் நாடகம் காணச் சென்றேன். மதுரையில் இப்படி எல்லாம நாடகம் நடந்ததா என்றே எனக்குத் தெரியாது. அது சரி, சண்டேன்னா ரெண்டு, அர்ஜுன் அம்மா யாரு? புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?, திரைப்பட விழா, நாடக விழா எல்லா வித பரபரப்பும் இங்கு தானே இருக்கிறது. பத்திரிக்கைகாரர்கள், சினிமாகாரர்கள், நாடக நடிகர்கள் மக்களை அப்பாடா என்று ஒரு நாளும் இருக்க விட மாட்டார்கள். அதனாலோ என்னமோ சென்னை எனக்கு மிகவும் பிடிக்கிறது.

25ம் தேதி தொடங்கிய விழாவுக்கு நேற்று தான் போக நேர்ந்தது. சும்மா தான் இருந்தேன், தொடங்கிய அன்றிலிருந்தே போயிருந்தால் கொஞ்சம் நாடக அறிவாவது வளர்ந்திருக்கும். நேற்று நாடகம் முன்பு நடந்த பேச்சில் இளைஞர்கள் யாரும் வரவில்லை என்று குறைபட்டுக்கொண்டார்கள். நான் அரங்கில் கடைசியில் நின்றிருந்தாலோ, என் தலை கொஞ்சம் வழுக்கை ஆனதாலோ அவர்களுக்கு நான் இளைஞன் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நேற்று டி.நகரில் உள்ள வாணி மகாலில், ஓபுல் ரெட்டி அரங்கில் மாலி எழுதிய "நம்மவர்கள்" என்ற நாடகத்தை டிவி. வரதராஜனின் யுனைட்டெட் விஷுவல்ஸ் நிறுவனத்தினர் நடத்தினார்கள். விழாவுக்கு பழைய நடிகர் ஸ்ரிகாந்த், ரமணன், மாலி, எஸ்.வி. சேகர் அனைவரும் வந்திருந்தனர். ஸ்ரிகாந்த் அவர் காலத்தில் நாடகங்கள் நடத்த பட்ட கஷ்டங்களை சுவைபடக் கூறினார். எஸ்.வி.சேகர் யாரும் அழைக்காமலே உரிமையோடு மைக்கில் வந்து நகைச்சுவையாய் பேசினார். மனிதருக்கு நல்ல டைமிங் சென்ஸ்.

நான் அந்த அரங்கில் போய் சேர்ந்ததே ஒரு குறு நாடகம் போல் தான் இருந்தது. தரமணியிலிருந்து 5T பேருந்தில் ஏறி [டிக்கட் 3 ரூபாய்] டி.நகர் சென்று அங்கிருந்து 47ஐ பிடித்து [டிக்கட் 2 ரூபாய்] வாணி மகாலில் இறங்கும் போது மணி 7. நம் ஆட்கள் எங்கே அதற்குள் தொடங்கி இருக்கப் போகிறார்கள் என்று நினைத்தால், வெளியே கதவை பூட்டிக் கொண்டு ஒருவர், ஹால் ஃபுல் சார் என்றார். எனக்கு பகீரென்றது. கல்கி அவர்கள் "கர்நாடகம்" என்ற பெயரில் நாடகத்தையும் சினிமாவயும் விமர்சனம் செய்ததை போல் நானும் "ஹிந்துஸ்தானி" என்ற பெயரில் விமர்சனம் செய்து கலை உலகிற்கு சேவை செய்வதாய் இருந்தேனே, இப்படி குண்டை தூக்கி போடுகிறாரே இந்த மனிதர் என்று கலங்கினேன். என்னைப் போலவே நாடகம் பார்க்க வந்திருந்த சிலர் என்ன சார் ரொம்ப தூரத்துல இருந்து வர்றோம், நின்னு பாத்துக்குறோம்..விடுங்க என்றார். நான் தலையை ஆட்டினேன். [நம்ம என்னைக்கு பேசினோம் சொல்லுங்க?] அந்த மனிதர் அதெல்லாம் முடியாது சார். ஏற்கனவே அங்கே பல பேரு நின்னுட்டு தான் இருக்காங்க என்றார் கறாராய்! அவர் அந்தப் பக்கம் கொஞ்சம் நகன்றதும் கதவைத் திறந்து விட்டார் ஒரு தாத்தா..ஒரு ஓரமா நின்னு பாருங்க என்றார். வாழ்க!

இன்னும் நான் விஷயத்துக்கே வரவில்லை. நாடகம்! இந்தியா, பாகிஸ்தான் உறவைச் சொல்லும் வழக்கமான, உருக்கமான கதை. முஸ்லீம்களை நாம் வெறுப்பதில்லை, அவர்களும் நம்மவர்களே என்ற கருத்து. எனக்கு ஒன்று புரியவில்லை. இந்த நாடகத்தை பார்க்க எத்தனை முஸ்லீம் தோழர்கள் வந்திருப்பார்கள்? பாகிஸ்தானில் சென்று இந்த நாடகத்தை போட்டால் அங்கிருப்பவர்கள் நம்மைப் பற்றி புரிந்து கொள்வார்கள் என்று சொல்லலாம். இங்கு வந்திருப்பவர்களோ பெரும்பாலும் 50, 60 வயதைக் கடந்த பிராமணக் கூட்டம். இந்த நாடகத்தை இங்கே போடுவதால் யாருக்கு என்ன பயன்? சரி நல்ல விஷயத்தை யாரு வேண்டுமென்றாலும், எங்கு வேண்டுமென்றாலும் சொல்லலாம் என்று தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.

ஒரு நாடகம் என்பது பார்வை இழந்தவருக்கும், காது கேளாதவருக்கும், பேச முடியாதவருக்கும் புரியும் படி இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இதை காரணமாக வைத்துக் கொண்டே கொஞ்சம் இல்லை அதிகமாகவே மிகைப்படுத்தி நடிக்கிறார்கள். 78ல் பிறந்த என்னால் இந்த வகையான நடிப்பை என்னால் ரசிக்க முடியவில்லை. அதனால் தான் இன்றைய இளைஞர்களுக்கு சிவாஜியின் படங்கள் பிடிப்பதில்லை. ஆனால் நான் சிவாஜியின் படங்களைப் பார்க்கும்போது அந்த காலத்திற்கு ஏற்ப என்னை மாற்றிக் கொண்டு பார்ப்பதால் என்னால் அதை ரசிக்க முடிந்தது. ஆனால் இந்த நாடகத்தில் என்னால் ரசிக்க முடியவில்லை என்பதே உண்மை.

என்னதான் நாம் ஹிந்து முஸ்லீம் ஒற்றுமையை நாம் பலவிதங்களில் மார்தட்டிக் கொண்டாலும், ஹிந்து முஸ்லீம்களுக்கு செய்த கொடுமைகளும், முஸ்லீம் ஹிந்துக்களுக்கு செய்த கொடுமைகளும் எல்லோர் மனதிலும் ஒரு ஆறாத வடுவாகவே இருக்கிறது. மன்னிக்க நாம் என்ன தெய்வப்பிறவியா என்று ஹிந்துவும் கேட்கிறான், முஸ்லீமும் கேட்கிறான்.

கடவுள் இருக்கிறார் என்னும் இவர்கள் மசூதியையும் கோயிலையும் உடைக்கிறார்கள். கடவுளே இல்லை என்னும் நாத்திகவாதி எதையும் உடைப்பதில்லை என்று எப்போதோ யாரோ சொன்னது என் ஞாபகம் வந்தது.

மற்றபடி நாடகத்தில் லைட்டிங் நன்றாக இருந்தது. ரஹீமாக வந்தவர் நன்றாக நடித்தார். பிஸ்மில்லா கானாக வந்தவர் சத்ரியன் படத்தில் வந்த அருமைநாயகத்தை ஞாபகப்படுத்தினார். அவரது நடிப்பும் அருமை. சில இடங்களில் வசனங்கள் பளிச்! அந்த போலிஸாய் வந்தவரை நினைத்தால் எனக்கு சிரிப்பாய் இருக்கிறது. நாடகத்தை முழுமையாக நான் பார்க்கவில்லை. எப்போது முடியும் என்று ஆகிவிட்டது. அரங்கில் உட்கார்ந்திருந்தவர்களும் நெளிந்து கொண்டு தான் இருந்தார்கள். உட்கார இடம் இல்லாமல் நின்று கொண்டே பார்த்ததால் கால் வலித்து 9 மணிக்கு கழன்று கொண்டேன்.

வெளியே வந்து டி.நகர் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். சைக்கிளில் ஒரு குல்லா அணிந்த முஸ்லீம் போய் கொண்டிருந்தார். அவரையே வெறித்துப் பார்த்தேன். அவரும் என்னையே சந்தேகமாய் பார்த்தார். "நம்மவர்கள்" என்று நினைத்துக் கொண்டு நடந்தேன்.

நம் வாழ்வில் பல அழகான தருணங்கள் வருவதுண்டு. அதை எப்போது நினைத்தாலும் ஒரு சிறு புன்னகை நம் முகத்தில் அரும்பும். நான் பெங்களூரில் இருந்த போது அப்படி ஒரு சம்பவம் நடந்தது. என்னை சந்தோஷப்படுத்தும் அளவுக்கு இது உங்களை சந்தோஷப்படுத்துமா என்று தெரியவில்லை..ஆனால் அந்த நிகழ்ச்சியை இன்று நினைத்தாலும் எனக்கு நகைச்சுவையாக இருக்கும்.

அன்பே சிவம் படத்தில் "பூ வாசம் புறப்படும் தென்றல்" என்ற பாடலை நண்பர்கள் நாங்கள் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்தப் பாடலில் ஒரு காட்சியில் ஒரு கூட்டத்தில் கமலும் கிரணும் பேசிக் கொண்டே வரும்போது எதிர்ப்படும் ஒருவருடன் கமல் நின்று பேசுவார், அதை கவனிக்காமல் கிரண் கொஞ்ச தூரம் சென்று பேசிக் கொண்டே திரும்பினால் யாரோ ஒருவர் இருப்பார். திகைத்துப் போய், கமலைத் தேடித் திரும்பும்போது அங்கிருந்து தன் இரு கைகளையும் தூக்கி கமல் சிரிப்பார். அந்தப் பாடல் முடிந்தவுடன் நண்பர்கள் இருவருடன் நான் எங்கேயோ வெளியே கிளம்பினேன். அன்று வழியெங்கும் ஏகத்துக்கு கூட்டம், என் நண்பர்கள் நான் இருப்பதாய் நினைத்து பேசிக் கொண்டே சென்று விட்டார்கள், நான் சாலையைக் கடக்க முடியாமல் நின்று அவர்கள் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பதில் வரவில்லை என்று திரும்பிப் பார்த்த நண்பர்களைப் பார்த்து சாலையின் இந்தப் பக்கத்திலிருந்து என் இரு கைகளையும் தூக்கி கமல் மாதிரி சிரித்தேன். அவர்கள் இருவராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.. பக்கத்தில் சென்றவுடன் தர்ம அடி விழுந்தது என்னவோ வேறு விஷயம்! [மனசுல உனக்கு என்ன பெரிய கமலஹாசன்னு நினைப்பா?]

உலகில் அனைத்து மக்களையும் எடுத்துக் கொண்டால், சினிமாவின் தாக்கம் அதிகம் இருப்பது தமிழனுக்குத் தானோ என்று தோன்றுகிறது! மற்ற நாடு நகர மக்கள் சினிமாவை வெறும் பொழுது போக்காக பார்த்து விட்டு, தங்கள் வேலையில் மூழ்கி விடுகிறார்கள். ஆனால் தமிழன் தான் சினிமாவை தன் வீட்டுக்கும் கொண்டு வருகிறான். அவன் எங்கு சென்றாலும் சினிமா, அவனுடைய சுண்டு விரல் பிடித்துக் கொண்டு ஒரு குழந்தையைப் போல் நடந்து வருகிறது. கலைஞனை தெய்வமாய் பார்ப்பது இங்கு தான் இருக்கிறது. நிலாவைக் காட்டி சோறூட்டும் காலம் மலையேறி, விஜய் அங்கிள் [அங்கிள்!?] பாட்டு வந்தாத் தான் சாப்பிடுவேன் என்று குழந்தைகள் அடம் பிடிக்கின்றன..

குழந்தைகளை விடுங்கள். ஆ·பிஸில், என்ன இது, உங்க ப்ரோக்ராம்ல தப்பு இருக்கேன்னு என் சக ஊழியரிடம் சொன்னால், "வேணாம்! அழுதுருவேன்" என்று வடிவேலுவை துணைக்கழைத்து காமெடி செய்கிறார். இந்த பக் ·பிக்ஸ் பண்ணியாச்சே என்றால், "அது நேத்து, இது இன்னைக்கு" என்று மறுபடியும் வடிவேலு. நான் உங்க ப்ராஜக்ட் மானேஜர்ப்பா என்று பிஎம் சொன்னால், "நீங்க நல்லவரா கெட்டவரா" ....டொண்டடொண்டடொண்டடாய்ன் டொண்டடாய்ன் என்று பிஜிஎம் போடுகிறார்கள்! ஏன் இப்படி எல்லாம் பண்றீங்கன்னு கேட்டா, "நான் ப்ரோக்ராமர் இல்லை; பொறுக்கி"ன்றான். இப்படியே நாம் வேலை பார்க்கும் இடத்தில் எத்தனை வடிவேலுக்கள், எத்தனை விவேக்குகள்! எத்தனை கமல், எத்தனை ரஜினி..சினிமாவைப் பிரிந்து நம்மால் வாழ முடிவதில்லை.

தன் வாழ்வோடு சினிமாவை இணைத்துக் கொண்டதால் தானே 4 முதல்வர்களை கலை உலகிலிருந்து நம்மால் பெற முடிந்திருக்கிறது. எம்.ஜி.ஆர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், படத்தில் ஒரு கிழவியை கட்டி அணைத்து, "உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும் உலகில் நிச்சயம் உண்டு" என்று சொன்னால் புல்லரிக்கத்தான் செய்கிறது.. ஏதோ ஒரு படம், ராஜஸ்ரியுடன் டூயட் பாடுகிறார். பாடல்: "பாடும்போது நான் தென்றல் காற்று"..சரணத்தில் திடீரென்று "நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்" என்கிறார். ராஜ்ஸ்ரிக்கு ஒன்றும் புரியாமல், டூயட் பாட்ல கூட இவர் தத்துவம் சொல்லாம இருக்க மாட்றாரே என்று வெறுத்துப் போகிறார். இன்னொரு பாட்டில் கைகளின் பெருமையைப் பற்றி பாடிக் கொண்டிருப்பார், திடீரென்று "ஒன்று எங்கள் ஜாதி என்று ஓலமிட்டே பாடுவோம்" என்று ஜாதியை சாடுவார். இதை பார்க்கும் போது கொஞ்சம் படித்த எனக்கே இவர் தான் இந்த நாட்டை திருத்த முடியும் என்று தோன்றுகிறது..படிக்காத, பாமர மக்களுக்கு ஏன் தோன்றாது சொல்லுங்க?


நானும் கவிதை போட்டிக்குத் தயார்!

இதோ என் கவிதை..

அன்பை நம்புவோம்; ஆசை அழியும்
இரக்கத்தை நம்புவோம்; ஈகை பெறுகும்
உண்மையை நம்புவோம்; ஊனுக்கு மதிப்பு
எளிமையை நம்புவோம்; ஏக்கம் தணியும்
ஒழுக்கத்தை நம்புவோம்; ஓங்கட்டும் நம் புகழ்

ஒரு பூச்சியின் வாழ்க்கை முடிந்து போயிருந்தது.
போன தடவை ஒரு கதை புடிக்காமல் பட்டென்று
புத்தகத்தை மூடியபோது..

பிடிக்காத கதை படித்து
பட்டென்று புத்தகம் மூடியதில்
சட்டென்று முடிந்தது - ஒரு
பூச்சியின் வாழ்க்கை

பதமான கதையாய் இல்லாவிட்டாலும்
இதமாய் புத்தகம் மூடியிருந்தால்..
வதமாகி இருக்காது ஒரு பூச்சி..

ஒரு பூச்சியின் உதிர்ந்த வாழ்வைப் பார்த்து எனக்கு உதித்த கவிதை இது. எனக்கு இது கவிதையாகப் பட்டது. உங்களுக்கு எப்படியோ தெரியாது. அப்படி
உங்களுக்கு கவிதையாய் பட்டால், இந்த நிகழ்வை மூன்று வடிவங்களில் எழுதி இருக்கிறேன். எந்த வடிவம் சரியானது? இல்லை இதை விட நல்ல வடிவத்தில் எழுதலாமா? கவிதை இப்படித் தான் எழுத வேண்டும் என்று விதிமுறைகள் இருக்கிறதா என்ன?

அந்நியன் : அஞ்சு பேர் விமர்சனம் எழுதுனா தப்பா?

வலை மக்கள் : பெரிய தப்பில்லீங்க

அந்நியன் : அஞ்சு பேர் அஞ்சு தடவை விமர்சனம் எழுதுனா?

வலை மக்கள் : சின்ன தப்பு மாதிரி தாங்க தெரியுது

அந்நியன் : அஞ்சு அஞ்சு பேரு அஞ்சு அஞ்சு தடவை அஞ்சு லட்சம் விமர்சனம் எழுதுனா?

வலை மக்கள் : பெரிய தப்புங்க..

அந்நியன் : அதான் டா இங்கே நடக்குது..

அந்நியனின் நரக தண்டனைக்கு பயந்து, என் விமர்சனத்தை இத்தோடு நிறுத்திக் கொ[ல்]ள்கிறேன்!!
நான் தமிழன் அல்ல. நான் செளராஷ்ட்ரர் குலத்தில் பிறந்தவன். அப்பாடா இனி தமிழ் பிழைத்துக் கொள்ளும் என்று முனகுபவர்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இனி விஷயம் : சரி வலைப்பதிவில் தான் என்னன்னமோ பதிகிறோமே, நம் குலத்தைப் பற்றியும் பதித்து சரித்திரத்தில் இடம் பெறலாம் என்ற என் அவா இதோ இந்தப் பதிவில் வந்து நிற்கிறது.

செளராஷ்ட்ரர் குலம்: [இனிமேல் கொஞ்சம் சுருக்கி செள குலம்]

செள குலத்தார்களின் முதன்மைத் தொழில் நெசவு, பட்டு நூல் விற்பனை..மதுரையில் எல்லோரும் எங்களை "பட்டு நூற்காரர்" என்று தான் அழைப்பார்கள். ஆனால் இன்று அந்தத் தொழில் நலிந்து விட்டதால் அதைச் செய்பவர் மிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும்.

செள குலம் இன்று குஜராத் இருக்கும் செளராஷ்ட்ரா என்ற பகுதியிலிருந்தவர்கள் என்று வரலாறு சொல்கிறது! சரி, தென்னகத்தில், தமிழ்நாட்டில் எப்படி வந்தார்கள்? அது எப்போது நடந்தது என்பதற்கு எந்த வித சான்றும் இல்லை. செள குலம் தமிழ்நாட்டில் வந்ததைப் பற்றி சில கதைகள் உலவுகிறது. அதாகப்பட்டது..

1. கஜினி முகமது வட இந்தியாவில் ஊடுருவிய போது அங்கிருந்த செள குலம் தங்களைக் காத்துக் கொள்ள தென்னாட்டில் தஞ்சம் புகுந்திருக்கலாம்.

2. சத்ரபதி சிவாஜி தென்னகத்தில் படையெடுத்த போது அவருடன் வந்த சிலர் தென்னகத்தில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கலாம்.

3. விஜயநகரப் பேரரசு, வட இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த போது, நாயக்கர்கள், தென்னகத்தின் ஒரு பகுதியை மதுரையை தலை நகரமாகக் கொண்டு ஆண்டு வந்தனர். அப்போது நாயக்கர்களுக்கு உடை நெய்து கொடுப்பதற்காக சில செள குடும்பங்கள் மதுரை வரவழைக்கப்பட்டனர். இன்றும் நீங்கள் மதுரை திருமலை நாயக்கர் மஹாலை சுற்றி செள குடும்பங்களைப் பார்க்கலாம். அப்படியே மஹால் 7வது தெருவுக்குள் வந்தால், அந்த சமயத்தில் நான் மதுரை போயிருந்தால் என்னையும் பார்க்கலாம்! அது உங்கள் அதிர்ஷ்டத்தைப் பொருத்தது. [அது அதிர்ஷ்டமா, துரதிருஷ்டமா அதுவும் உங்களைப் பொருத்தது!] சரி கதைக்கு வருவோம். மஹால் 7வது தெருவில் நான் வசித்ததை வைத்துப் பார்க்கும் போது, இந்த மூன்று கதைகளில் இந்தக் கதை கொஞ்சம் நம்பும்படியாக இருக்கிறது! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்ன முறைப்பு?

இன்று செள குலம் மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் போன்ற நகரங்களில் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். என்னைப் போல் பலர் கணினியியலிலும் கால் வைத்து, மன்னிக்கவும்..கை வைத்து உலகமெங்கும் பறந்து கொண்டிருக்கிறார்கள்! சென்னைத் தமிழ், கொங்குத் தமிழ், மதுரைத் தமிழ் போல செள குலத்திலும் உண்டு.

நான் அலுவலகத்தில் இருக்கும் போது யாராவது செல்·போனில் என்னவர்கள் பேச, நானும் என் தாய்மொழியில் பேச ஆரம்பித்து விட்டால் போதும், பாவம் பக்கத்தில் உள்ளவர்கள்! நான் ·போனை வைத்தவுடன் அவர்கள் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், "நீங்க என்ன பேசுறீங்க? ஒன்னுமே புரியலையே" என்று கலைந்த தலையுடன் [பிச்சிகிட்டு தான்!] பாவமாய் கேட்பார்கள். அதற்குப் பிறகு ஒரு அரைமணி நேரம் நான் எங்கள் வரலாறு, புவியியல் என்று எல்லாம் சொல்ல வேண்டி இருக்கும். யாராவது ஒருவர் என்னை நீங்கள் தமிழா என்று கேட்டு விட்டால், தயங்காமல் ஆமாம் என்று சொல்லி விடுவேன். மறுத்து நான் இல்லை, நான் செள குலத்தை சார்ந்தவன், எங்கள் இனம்.. என்று மறுபடியும் அதே வரலாறு புவியியல் தான் சொல்ல வேண்டி இருக்கும்... வீட்டில் தாய்மொழியில் பேசுவதோடு சரி. செள பாஷை கொஞ்சம் கரடுமுரடானதாக இருக்க வேண்டும். [புரியாதவர்களுக்கு!] "தூத் = பால்", "பானி, பனி = தண்ணீர்", "காய் [GA] = பசு" போன்ற சில வார்த்தைகள் ஹிந்தியுடன் ஒத்துப் போவதுண்டு..நான் பேசும்போது இந்த வார்த்தைகள் வரவில்லை என்றால் உங்கள் தலை கலைவது நிச்சயம். கொங்குனி, மராட்டி கொஞ்சம் கலந்திருப்பதாகச் சொல்கிறார்கள். செளராஷ்ட்ரா மொழிக்கு எழுத்துக்களும் உண்டு. அது வழக்கொழிந்து போய் விட்டன. எழுத்துக்களைப் பற்றியும், சில செளராஷ்ட்ர மஹான்களைப் பற்றியும் செள நண்பர் ஒருவர் வலைபதிந்து இருக்கிறார். அது இங்கே.

செள குலத்தவர் அதிகம் இருப்பது மதுரையில் தான் என்று நினைக்கிறேன். 4 பேரில் ஒருவர் செள இனத்தைச் சேர்ந்தவராக இருப்பார். வட இந்தியாவிலிருந்து வந்ததாலோ என்னவோ, இயற்கை எங்களுக்கு கொஞ்சம் வெள்ளைத் தோலை கொடுத்து விட்டது. தில்லியிலும், சண்டிகரிலும் நான் இருந்த போது என்னை தமிழன் என்று யாரும் ஏற்றுக் கொண்டதில்லை. பெங்களூரிலும், சென்னையிலும் நான் தமிழில் பேசினாலும் ஆங்கிலத்தில், அரைகுறை ஹிந்தியிலும் ஆட்டோகாரர்கள் ஆரம்பித்து விடுகிறார்கள்! [அப்படியே, சலிச்சுக்கிறேனாம்!] தமிழர்கள் ஒரு இனிஷியல் போட்டுக் கொள்வார்கள், எங்களுக்கு இரண்டு இனிஷியல்! வீட்டுப் பேர், அப்பா பேர்! வீட்டுப் பேர் [sur name] கொண்டா, தொகுலுவா, ராமியா, குப்பா, ஈஸ்வரீஸ், லவ்டான், மொல்லின், நாட்டாமை இப்படி பல உள்ளன. ஒரு குடும்பப் பெயர் கொண்டவர்கள் கூடப் பிறந்தவர்களாவர். என் முழுப் பெயர் ஈஸ்வரி சுப்பிரமணியன் பிரதீப் குமார். எனக்கு, உங்களுக்கு தெரிந்த சில செளராஷ்ட்ரக் குல பிரபலங்கள், டி. எம். செளந்தராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா, எம். என். ராஜம், ஏ. எல். ராகவன்..[சினிமாவில் இருந்தால் தான் பிரபலமா? புத்தி போகாதே!]

செளராஷ்ட்ரா மக்கள்:

1. புளியோதரை செய்வதில் எங்களை அடித்துக் கொள்ள ஆளில்லை என்று சொல்லலாம். அவ்வளவு பிரபலம். எங்கு ஊர் சுற்றச் சென்றாலும், எத்தனை பேர் சென்றாலும், யார் போகிறார்களோ இல்லையோ, தூக்குச்சட்டி நிறைய புளியோதரை போகும்.

2. பஸ்ஸில் ஏறும் முன் யார் டிக்கட் எடுப்பது என்று முடிவு செய்திருக்க மாட்டார்கள். ஒவ்வொருவர் ஒவ்வொரு பக்கம் ஏறிக் கொண்டு இங்கிருந்து நான் டிக்கட் எடுத்து விட்டேன் என்று அவர்கள் ஸ்டாப் வரும் வரை பேசிக் கொண்டே வருவார்கள்.

3. தமிழையும் செளராஷ்ட்ராவைப் போல பேசுவது எங்கள் குல பெண்மணிகளுக்கே உரியது. ஸ்டாப் வரும்வரை உட்கார்ந்திருந்து விட்டு, குறிப்பிட்ட நேரத்தில் இறங்காமல் பஸ் எடுத்தவுடன் "என்ன ஆளுய்யா நீ? பிள்ளே இறங்குதுல்லே" என்று செளராஷ்ட்ரா கலந்த தமிழில் காட்டுக் கூச்சல் போடுவார்கள். நகைச்சுவையாக இருக்கும்.

இதே போல், ஒரு மூதாட்டி பஸ்ஸில் ஏறி கண்டெக்டரிடம், ஏம்பா, இந்த பஸ்ஸ¤ பந்தடி 3 போகுமா என்று ஒரு சிறு தெருவின் பெயரைச் சொல்லிக் கேட்டாளாம். அதற்கு கண்டெக்டர், வீட்டு நம்பரையும் சொல்லும்மா, வீட்லையே இறக்கி விட்டுர்றோம் என்றாராம். நான் பள்ளியில் படிக்கும் போது 15 ஐ பைனஞ்சி என்று உச்சரிப்பேன். ஒரு தமிழ் நண்பன், டேய் அது பைனஞ்சி இல்லடா, பதினஞ்சு! அப்படி தான் சொல்லனும்னு சொல்லிக் கொடுத்தான். அதன் பிறகு நானும் திருத்திக் கொண்டேன். எத்தனை மொழிகள் பேசினாலும் தாய்மொழி கலக்காமல் பேச முடியாது என்பது இயற்கை போலும்.

4. "நமக்கு", "எங்களுக்கு" இந்த இரண்டும் எப்போதும் செள மக்களுக்கு குழப்பத்தை தரக்கூடியது என்று நினைக்கிறேன். எதை எங்கே பேச வேண்டும் என்று முழிப்போம். நான் எம். எஸ். சி படித்துக் கொண்டிருந்த போது வழக்கம் போல ஒரு வாயாடித் தமிழ் பெண்ணிடம் கடலை போட்டுக் கொண்டிருந்தேன். எங்களோடு படிக்கும் என் செள நண்பன் அங்கே வந்து, "டேய் எங்களுக்கு 10 தேதி செமஸ்டர் ஆரம்பிக்கப் போகுது" என்றான். அந்தப் பொண்ணு சும்மாவே எல்லாரையும் கிண்டல் செய்வாள்..போதுமே! பதிலுக்கு அவள், "அப்புறம் எங்களுக்கெல்லாம் செமஸ்டர் இல்லையா? உங்களுக்கு மட்டும் தானா?" என்று நக்கலடித்தாள். ஒரே வகுப்பில் இருப்பவர்களுடன் பேசும் போது நமக்கு என்று சொல்ல வேண்டும் என்று என் நண்பனுக்குத் தெரியவில்லை. இதெல்லாம் கடலைல சகஜம்ப்பா!

5. என்னைப் பொறுத்தவரை செள மக்கள் எந்த வம்பு தும்புக்கும் போகாத ஆசாமிகள். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர்கள். செள இனத்தில், இவர் அந்த வீட்டு பையனை வெட்டிட்டு 10 வருஷம் ஜெயிலுக்கு போயிட்டு வந்துருக்காரு என்று நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. துஷ்டனைக் கண்டால் போதும், காத தூரத்துக்கு விலகி நிப்போம். நம்மை ஏன் இவ்வளவு மென்மையாக வளர்த்தார்கள் என்று கூட எனக்கு சில சமயங்களில் சந்தேகம் வருவதுண்டு.

இப்போதைக்கு இவ்வளவு தான்.

நன்றி:

mksarav.blogspot.com
palkar.org
sourashtra.com

என்னையும் இந்த விளையாட்டுக்கு கூப்பிட ஒரு நண்பர் வலைப்பூவில் இருப்பதைக் குறித்த களிப்புடனும், நான் இந்த புத்தக விளையாட்டுக்கு உகந்தவனா என்ற கலவரத்துடனும் இதை எழுதுகிறேன்.

நான் அரை மூச்சாய் [இன்னும் முழு மூச்சாய் ஆரம்பிக்கவில்லை] புத்தகம் படிக்க ஆரம்பித்ததே 2 வருடங்களுக்கு முன் தான். அதற்கு முன் குமுதம், விகடன், அதுவும் எப்போதாவது கையில் மாட்டும் போது. 5 வருடம் கல்லூரியில் கழித்தேன். அந்த மாலை நேரங்களை என்ன செய்தேன் என்று இன்று கவலைப் படுகிறேன். அப்போவே ஒழுங்காய் படித்திருந்தால் இன்னைக்கு தில்லா இந்தப் பதிவுல இறங்கியிருக்கலாம். சரி விளையாட்டை ஆரம்பிக்கிறேன்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது அம்புலிமாமா, சிறுவர் மலர் விரும்பிப் படித்ததுண்டு. அம்புலிமாமாவில் கதைகளை விட படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு அழகான சிறிய குடிசை, ஒற்றையடிப் பாதை, புல் தரைகள், நிறைய மரங்கள், அரசர் கதைகளில் வரும் மாட மாளிகைகள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இங்கு நாம் வாழ்ந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும் என்று நான் நினைப்பதுண்டு. [டாம் அண்ட் ஜெர்ரி, பழைய தமிழ் திரைப்படங்களில் வரும் கிணற்றடி செட்டிங் பார்க்கும் போது இதே உணர்வு எனக்கு ஏற்படுவதுண்டு!]

எண்ணிக்கை!

பொன்னியின் செல்வன் 5 பாகத்தையும், புதுமைப்பித்தனின் 6 புத்தகங்களையும் தனித் தனியான புத்தகங்களாக வைத்துக் கொண்டால் என்னிடம் ஒரு 35 புத்தகம் இருக்கும் என்று நினைக்கிறேன். இதெல்லாம் ரொம்ப ஓவர் தான், என்ன பண்றது புத்தகங்கள் அதிகம் இல்லாத எழைய்யா! அம்மா! [ஐய்யயோ என்ன ராப்பிச்சை ரேஞ்சுக்கு போயிடுச்சே!]

பட்டாம்பூச்சி

எதையாவது படிக்க வேண்டும் என்று நான் வாங்கிய புத்தகம். ரா. கி. ரங்கராஜன் என்றால் எங்கேயோ கேள்விப்பட்ட பெயர் போல் இருந்ததால் இந்த புத்தகத்தை தில்லியில் வாங்கினேன். ஒரு அருமையான ப்ரெஞ்ச் நாவல் [என்று ஞாபகம்] மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருந்தார். அந்தக் கதாநாயகன் ஹென்றி ஷெராயர் செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைபடுகிறான். அவன் அங்கிருந்து தப்பிப்பதே கதை. என் நண்பர்கள் படித்து விட்டு அவனாகவே தன்னை அடிக்கடி உருவகப்படுத்திக் கொண்டு "இங்கிருந்து தப்பிக்க வேண்டும்" என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

விஞ்ஞானச் சிறுகதைகள்

மனிதர் 60, 70 களில் விஞ்ஞானக் கதைகளை பிரித்து மேய்ந்திருக்கிறார். அந்தத் தொகுதியில் முதல் கதை "ஒரு கதையில் இரண்டு கதைகள்" அதிலேயே நான் சாஷ்டாங்கமாய் விழுந்து விட்டேன். ஒரு கதையை "டிட்டோ என்றான்" என்று ஆரம்பிப்பார்! ராகவேனியத்திடம் ஒரு குரங்கு அகப்பட்டுக் கொண்டு அது படாத பாடு படுத்தும். அதை எப்போது படித்தாலும், வயிறு வலிக்க கண்களில் நீர் வழிய சிரிப்பேன். திமிலா, சென்னை கடலில் மூழ்கிய பிறகு ஒரு பயணம், ஜில்லு இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஜெயகாந்தன் சிறுகதைகள்

பெங்களூர் தமிழ் சங்கத்தில் ஆயுள் கால உறுப்பினர் ஆன பிறகு, அங்கிருந்து இவருடைய சிறுகதை தொகுப்பை எடுத்து வந்தேன். அக்னிப் பிரவேசம், குருபீடம், அந்தக் கோழைகள், அக்ரஹாரத்துப் பூனை, ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது, நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ, சுய தரிசனம், சாத்தான் வேதம் ஓதுகிறது, தவறுகள் குற்றங்களல்ல, நான் இருக்கிறேன், நிக்கி, சிலுவை..இப்படி எத்தனை எத்தனை அருமையான கதைகள், இதில் அவருடைய மொழி ஆளுமையும், அவருடைய பாத்திரப் படைப்பும், தன்னைச் சுற்றி நடப்பவைகளில் தன்னுடைய கூர்ந்த பார்வையும் [observation ஐ இந்த சொதப்பு சொதப்பி இருக்கிறேன்!] என்னை வியக்கச் செய்தது. இப்படியாக என்னிடம் அறைகுறையாய் இருந்த சுஜாதாவுடனும், ஜெயகாந்தனும் சேர்ந்து கொண்டார்.

புதுமைபித்தன் சிறுகதைகள்

சிறுகதை உலகில் பல புதுமைகளை புகுத்தியவர் என்று பலர் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். அவருடைய 5, 6 புத்தகங்கள் கொண்ட சிறுகதை தொகுப்பை வாங்கினேன். முதல் கதை "பூசனிக்காய் அம்பி!", ஏதோ ஒரு அம்பியின் செயல்களை சொல்லி விட்டு, அவனைக் கொஞ்ச நாளா காணோம் என்று சொல்லி கதையை முடித்து விடுவார்! இது என்ன கதை, இதில் என்ன புதுமை இருக்கிறது என்று எனக்குத் தோன்றியது. சுஜாதாவையும், ஜெயகாந்தனையும் அரைகுறையாய் படித்தவனுக்கு புதுமைப் பித்தன் அவ்வளவு சீக்கிரம் பிடிபட மாட்டாரோ என்னமோ? படிக்கப் படிக்க அவரின் புதுமைகளை உணர ஆரம்பித்தேன், அநாயசமாக சிறுகதை இலக்கணங்களை உடைத்து எழுதி இருக்கிறார். கதையின் முடிவில், 1937, மணிக்கொடி என்று இருந்தது. 60, 70 களில் சுஜாதா இவ்வளவு யோசித்திருக்கிறாரே என்ற பிரமிப்பு குறைந்து இந்த மனிதர் 1937ல் இப்படி எல்லாம் எழுதி இருக்கிறாரே என்ற பிரமிப்பு ஏற்பட்டது. அவருடைய "நவீன கந்தபுராணம்" நான் மிகவும் ரசித்த கதை. இன்னொரு கதையில் [பெயர் ஞாபகமில்லை] முடிவு சொல்லாமல் இது நான் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது மிதந்து வந்த ஓலையில் இருந்தது. இவ்வளவு தான் கிடைத்தது என்று முடித்து விடுவார். "கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்", ஆற்றங்கரையில் ஒரு பிள்ளையார் படும் பாடு இப்படி எத்தனையோ புதுமைகள்..உண்மையிலேயே புதுமைப் பித்தன் தான்.

பெய்யெனப் பெய்யும் மழை

என்னுடைய வலைப்பதிவுக்கு பெயர் காரணம் உங்களுக்குப் புரிந்திருக்கும். ஒன்று எனக்கு மழை ரொம்பப் பிடிக்கும். இன்னொன்று வைரமுத்துவின் இந்தக் கவிதைத் தொகுப்பு. இதில் காதலைப் பற்றிய கவிதையில்:

உன் பின்னால் ஒளிவட்டம் தோன்றும்
தபால்காரன் தெய்வமாவான்
உன் பிம்பம் விழுந்தே உன் கண்ணாடி உடையும்

ஊழி என்னும் கவிதையில்:

நிமிர்ந்ததெல்லாம் சாய்ந்ததில்
சாய்ந்த ஒன்று நிமிரந்தது
பைசா கோபுரம்!

ஏதோ ஒரு கவிதையில் இரு முத்தான வரிகள்

இயல்பே இன்பம்
ஏக்கம் நரகம்!

இவர் எதைப் பார்த்தாலும் கவிதையாய் தான் பார்ப்பாரோ என்று எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. மிக அழகான தொகுப்பு! இன்னொரு முறை படிக்க வேண்டும், நிறைய மறந்து போய் விட்டேன்.

நான் படித்த மற்ற புத்தகங்கள்

கம்யுனிசம் நேற்று - இன்று - நாளை - ஜெவஹர்
துணையெழுத்து - எஸ். ராமகிருஷ்ணன்
சினிமாவுக்குப் போன சித்தாளு - ஜெயகாந்தன்
விபரீதக் கோட்பாடு - சுஜாதா
இரண்டாம் காதல் கதை - சுஜாதா
திரைக்கதை எழுதுவது எப்படி - சுஜாதா
சத்திய சோதனை - மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
அகிரா குரோசோவா
பொதுவுடைமை தான் என்ன? - ராகுல்ஜி
தண்ணீர் தேசம் - வைரமுத்து

படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள்

பொன்னியில் செல்வன் - 2 பாகம் ஆச்சு![அடப்பாவி, இப்போ தான் பொன்னியின் செல்வனுக்கே வர்றியான்னு கேக்காதீங்க!]
வண்ணநிலவன் கதைகள்
உலக சினிமா - எஸ். ராமகிருஷ்ணன்
தி. ஜானகிராமன் கதைகள்
தாத்தா சொன்ன கதைகள் - கி. இராஜநாராயணன்
அசோகமித்ரன் கதைகள்
மால்குடி டேஸ் - ஆர். கே. நாராயணன் - ஆங்கில புத்தகங்களையும் படிக்க ஆரம்பிக்க வேண்டும் என்று நான் வாங்கிய ஒரு புத்தகம், இரண்டு கதைகளோடு நிற்கிறது.

கற்றது அணுவளவு; கல்லாதது பிரபஞ்சமளவுன்னு சும்மாவா சொன்னாங்க? [ஏதோ மாறினாப்பில இருக்கே?]

ஒஹோ, இன்னும் விளையாட்டு முடியவில்லை, நானும் ஒரு 5 பேரை வழிமொழிய வேண்டுமே. அப்படி நான் யாரையும் சொல்லப் போவதில்லை. அதற்கு பதிலாக யார் இன்னும் இதைப் பற்றி எழுதவில்லையோ அத்தனை பேரும் எழுதலாம், எழுதனும்! ம்ம்.. ஈ கலப்பை எடுங்கோ, ஆரம்பிங்கோ!!

போன வாரம் ஹரன் பிரசன்னா தன்னுடைய பதிவில் ஒரு நவீன நாடகத்திற்கான அழைப்பிதழை பதித்திருந்தார். சென்ற வார சனிக்கிழமை அதைக் காணச் சென்றேன். எனக்கும் நவீன நாடகத்திற்கும் அப்துல் காதருக்கும், அமாவாசைக்கும் உள்ள உறவே. . ஏன் நாடகத்திற்கும் எனக்குமே சம்மந்தம் இல்லை என்றும் கூறலாம். தொலைக்காட்சியில் முன்பு பார்த்த நாடகங்களோடு சரி! எஸ். வி. சேகர், கிரேஸி மோகன், ஒய். ஜி. மகேந்திரன் போன்றவர்களின் நாடகங்களை நான் நேரில் பார்த்தில்லை. சரி அறியாமை தான் இங்கு பேரின்பம் என்பதற்காக துணிந்து சென்றேன். கோபிகிருஷ்ணன் எழுதிய ஒரு சிறுகதையை வெளி. ரங்கராஜன் நாடகமாக்கியிருந்தார். கூத்துப் பட்டரையை சேர்ந்த ஜெயராவ் நடித்திருந்தார். நாடகத்தின் பெயர் "முடியாத சமன்".

கதை:

மிகுதியான காம சிந்தனைகளின் ஆக்கிரமிப்பால் மனநோயால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனின் கதை. அவர் தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தைப் பற்றியும் தனக்குத் தானே பேசிக் கொள்கிறார். அவருடைய தாய் அவரை நினைத்து அழுவதையும், மருத்துவர்கள் அவரை இம்சிப்பதாயும், நண்பர்கள் அவரை பரிகாசம் செய்வதையும், ஏன் இவர்கள் எல்லோரும் இப்படி என்னை வதைக்கிறார்கள்? நான் படிக்கும் காலத்தில் இருந்ததைப் போல இவர்கள் இல்லையே? ஏன் என்னிடம் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தன்னைத் தானே கேட்டுக் கொள்கிறார். அடிக்கடி அம்மா "உனக்கு ஒன்னுமில்லப்பா, நீ நல்லா ஆயிடுவே" என்று சொல்லும்போது நல்லா ஆகுறதுன்னா என்ன அர்த்தம்? இப்போ எனக்கு என்ன ஆயிடுச்சு? என்று பரிதாபமாய் நம்மைப் பார்த்து கேட்கிறார்!

இதன் மூலம், ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சுய சிந்தனைகளை ஒளித்தும், மறைத்தும் எவ்வளவு போலியான வாழ்க்கையை வாழ வேண்டியிருக்கிறது. எந்த வித பயமும் இல்லாமல் சிந்திப்பவனை இந்தச் சமுதாயம் மனநோயாளி பட்டம் கட்டி விடுப்படுகிறது. இது தான் ஆசிரியர் உணர விரும்பிய கருத்தா என்று எனக்குத் தெரியவில்லை..ஏன் என்றால் எனக்குப் புரிந்தது இது தான்.

நவீன நாடகம், புதுக் கவிதை, கலைப் படங்கள் எல்லாம் ஒரே வரிசையில் இருப்பவை என்று நினைக்கிறேன். அவரவர்க்கு புரிந்த்தை எடுத்துக் கொள்ள வேண்டியது. இது மிகச் சிறந்த கவிதை என்று ஒருவர் சொல்லி நாம் படித்தால், அந்தக் கவிதை அவருக்குத் தந்த அனுபவம் நமக்குக் கிடைக்காமல் இருக்கலாம். அதனால் அந்தக் கவிதை நம்மைப் பொறுத்தவரை நல்ல கவிதை கிடையாது! [நம்மைப் பொறுத்தவரை!] அவ்வளவு தான்..

15 வருடமாய் கூத்துப் பட்டரையில் இருப்பவர் ஜெயராவ். தெலுங்கர். நல்ல உயரம், மாநிறம், பாரதி மீசை. நக்கலான சிரிப்பு, நினைத்தபோதெல்லாம் கண்களில் கண்ணீர், திடீர் திடீரென்று மாறும் முகபாவனைகள் கொண்டு ஒரு நிஜ மனநோயாளியை நம் கண் முன்னே நிறுத்திகிறார். குறை என்று சொன்னால், கதைப் படி அந்த மனநோயாளி ஒரு பிராமணர், இவருடைய உடலமைப்பும், தமிழும் கதாப்பாத்திரத்துடன் ஒட்டவில்லை. இவர் தமிழ் பேசியது ரஜினிகாந்த் தமிழ் போன்றதொரு பிரமை எனக்கும், என்னோடு வந்த நண்பருக்கும் ஏற்பட்டது! இவர் ஊனமுற்ற குழந்தைகளுக்காக "தியேட்டர்ஸ்" என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அந்தக் குழந்தைகளும் இது போன்ற பொழுது போக்க நிகழ்ச்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வழி வகை செய்கிறார். வாழ்க!

நவீன நாடகங்களையும், கலைப் படங்களையும் எல்லோரும் பார்ப்பதில்லை; அது எல்லோருக்கும் புரிவதில்லை என்பது என் கருத்து. ஹே ராமைப் பார்த்து விட்டு என் நண்பன் ஒருவன், கமல் என்னடா சொல்ல வர்றாரு? காந்தியும் முஸ்லீம்ன்றாரா? என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான்! எப்படி அப்படிப் பட்ட ஒரு கருத்து அவனுக்கு அந்தப் படத்தில் தோன்றியதோ எனக்குப் புரியவில்லை. ஆனால் ஒரு ஊரில் ஒரு ராஜா என்று ஆரம்பமாகும் கதைகள் என்றோ வழக்கொழிந்து விட்டன. ஒருவேளை இன்று யாராவது அப்படி எழுதினால், அட இது என்ன புதுசா இருக்கே ஆரம்பமே என்று சிலர் படிக்கலாம்.

நான் கவனித்த ஒரு முக்கியமான விஷயம், இந்த மாதிரி நாடகங்களில், படங்களில், கதைகளில் ஒரு சிறு நகைச்சுவை வந்தாலும், கொஞ்சம் அளவுக்கதிகமாகவே சிரிக்கிறார்கள். இதே ஒரு சாதாரண நாடகங்களில், படங்களில், கதைகளில் வந்தால் அவர்கள் இப்படிச் சிரிப்பார்களா என்று சந்தேகம் தான். இதெல்லாம் ஒரு ஜோக்கா என்று ஒரு வரியில் குறை சொல்லிச் சென்று விடுவார்கள். இங்கு சிரிப்பதற்குக் காரணம், நான் இந்த நாடகத்தை உன்னிப்பாகப் பார்க்கிறேன். இந்த நாடகம் எனக்கு மிகச் சுலபமாகப் புரிகிறது என்று பிறருக்குத் தெரியப்படுத்திக் கொள்ளத் தான் போலும். இல்லையென்றால், பக்கத்தில் உட்கார்ந்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கும் சதாசிவம் மாமா, என்னங்கானும்? பையன் என்னமா ஹாஸ்யமா நடிக்கிறான், பேசுறான், நீர் சிரிக்கவே மாட்றீரே? அவன் என்ன பேசினான்னு புரியலையோ என்று இதற்கும் ஒரு பெரிய ஹாஸ்யத்தை சொன்னது போல் சொல்லிச் சிரிப்பார் என்ற பயம் என்று நினைக்கிறேன்.

நாடகத்திற்குப் பிறகு கோபிகிருஷ்ணன் எழுதிய ஒரு நூலின் ஆங்கிலப் மொழிபெயர்ப்பு [தலைப்பு social work, asocial work, anti social work என்று நினைக்கிறேன்] வெளியிடப்பட்டது.

வித்தியாசமான அனுபவம். நன்றி பிரசன்னா!

பின்குறிப்பு:யாரோ ஒரு வலைப்பதிவாளர் மழையில் நனைந்ததைப் பற்றிய பதிவு பிரசன்னாவை ரொம்பவே பாத்தித்திருக்கிறது. நீங்களாவது உருப்படியாய் இந்த நாடகம் பத்தி உங்க பதிவுல எழுதுங்க என்றார். பிரசன்னா நீங்க சொன்னபடி செஞ்சுட்டேன்.

ஒரு ஊரில் பல சிதம்பரங்கள் இருந்தனர். இந்தக் கதை ஒரு சிதம்பரத்தைப் பற்றியது. அதனால் மற்ற அனைவரையும் ஓரம் கட்டி விடலாம். நம் சிதம்பரம் ரொம்ப சாந்தமான பேர்வழி. இந்த ஐப்பசி வந்தால் 40 முடிஞ்சுடும். அவருடைய தர்மபத்தினி சீதாதேவி. சிதம்பரத்தையும் சீதா தேவியையும் முடிச்சு போட்டதுக்காக நாம ஏன் வருத்தப்படனும்? ஹரியும் சிவனும் ஒன்னுன்னா, சீதாவும் பார்வதியும் ஒன்னு தானே? அதான் அவங்க ரெண்டு பேரும் சர்வ சங்கல்பங்களோட செளக்கியமா இருக்காளே, அப்புறம் என்ன? அவருடைய கல்யாணத்தின் போது, 16ம் பெத்து பெறுவாழ்வு வாழனும்னு சொன்னதை அரைகுறையா கேட்டாரோ என்னமோ, 8 பிள்ளைகளோட நிறுத்திட்டார்! அவருக்கு கிடைக்கும் சொல்ப சம்பளத்தை வைத்து இதை அதில் போட்டு, அதை இதில் போட்டு அவர்கள் குடும்பம் நடத்தும் அழகே தனி தான்..

நாள் முழுவதும் அவர் யாருடனும் அதிகம் பேசுவதில்லை. காதில் ரகசியம் சொல்வது போல் தான் அவரிடம் எல்லோரும் பேசுவார்கள். இவரும் அப்படித் தான் பதில் சொல்வார். அவருடைய வேலை அப்படி.

அன்று வெள்ளிக்கிழமை. வீடெங்கும் தேடியும் ஒரு குழந்தையையும் காணோம். என்னடி? ஒருத்தரையும் காணோம், வழியிலே போறவாளுக்கு தத்து கொடுத்துட்டியா என்ன? அதனால ஒன்னும் கெட்டுப் போகலை; நீ மாவை அப்படியே போட்டுட்டு வா, 1 குழந்தைக்கு ஏற்பாடு பண்ணி புடலாம் என்றார் நக்கலாய்.

இப்படி பேசிப் பேசியே ஒரு காம்பவுண்ட் பூரா சேத்தா இருக்க வேண்டிய தொகை நம்ம வீட்ல மட்டும் வாழுது. நேத்தைக்கு இப்படித் தான், ஏம்மா இங்கே நீங்க டியுஷன் ஏதுனா சொல்லித் தரேளா? என் புள்ளை படிக்கவே மாட்டேங்கிறான் என்று ஒரு பொம்மனாட்டி கேட்டுட்டா? அடக் கருமமே, நீங்க இந்தத் தெருவுக்குப் புதுசா? இதெல்லாம் நான் பெத்ததுகள்மா என்று சொல்லும்போது எனக்கு வெக்கம் புடுங்கித் தின்றது..உங்களுக்கென்ன? என்றார் சீதா தேவி.

சரி, சரி கோவ்சுக்காதே, எங்கே கொழந்தைகள்?இன்னைக்கு வெள்ளிக்கிழமைன்னா, பக்கத்து வீட்ல ஒலியும் ஒளியும் பார்க்க போயிருப்பா! இப்போ தான் நான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன், உங்களுக்கு பொருக்காதே..பிள்ளைகளா அது? பிசாசுகள் என்னா கத்து கத்துறதுகள்..உங்களுக்கென்ன நீங்க காலையில போனா ராத்திரி தான் வர்றேள், இதுகளை கட்டிண்டு மாரடிக்கிறது நான் தானே? கொழந்தைகள்னா அப்படி தாண்டி இருப்பா..குழந்தைச் சத்தம் இல்லாத வீடு என்ன வீடுன்னேன்? பேசிக் கொண்டிருந்தவருக்கு திடீரென்று தன் வேலை ஞாபகம் வந்தது..

மெல்லிய குரலில் ஒருவர்:

சார், சித்திரப் பாவை எங்கே இருக்கு?
2வது கப்போட்ல 3வது ராக்ல இருக்கும் பாருங்கோ! அகிலனோடது எல்லாம் அங்கே தான் இருக்கும்.

யாரோ இரண்டு பேரை பாத்து மிரட்றார், அதுவும் மெல்லிய குரலில்! என்ன இது லைப்ரேரியா இல்லை உங்க வீடா? இப்படி எல்லாம் சத்தம் போடக் கூடாது இங்கே! படிக்கிறதுன்னா இங்கே இருங்கோ இல்லை தயவுசெய்து இடத்தை காலி பண்ணுங்கோ!

அப்பா என்று 8 குழந்தைகளும் ஒரே ராகத்தில், அது அவரைப் பொறுத்தவரை ராகம், நம்மைப் பொருத்தவரை காட்டுக் கத்தல் கத்திக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தன..அவருக்கு காதில் தேன் பாய்ந்தது!

கல்லூரி வாசலில் எங்கு பேப்பர், பேனா கிடைத்தாலும், எதையாவது கிறுக்கும் வயதில் கிறுக்கியவை:

மலர்களே..
தலை சாய்த்துக் கொள்ளுங்கள்
என்னவள் பவனி வருகிறாள்

வார்த்தைகள் வயதுக்கு வரவில்லை..
அவளை வர்ணிக்க

அவள் என் நேசத்திற்குரியவள் அல்ல
என் சுவாசத்திற்குரியவள்!

அன்பே! மண்ணில் இரைந்து கிடக்கும்
மலர்களில் நடக்காதே..
பாவம்...

உன் பாதங்கள்!

இரவு 11 மணிக்கு மேல் எ·ப் எம் ரேடியோவில் பழைய பாடலைக் கேட்டுக் கொண்டே தூங்கும் சுகம் இருக்கிறதே..ஆஹா! தேவாம்ருதம்!! நேற்று ஒலிபரப்பான
எனக்கு மிகவும் பிடித்த பாடல்; டி.எம்.எஸ், பி.சுசீலா குரலில்..

ஆண்: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

பெண்: நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்!

ஆண்: நீ வருகின்ற வழி மீது யாருன்னைக் கண்டார்
உன் வளை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்
உன் மலர்க் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்!

பெண்: பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற!

ஆண்: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

பெண்: நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்!

எத்தனை கருத்தாழமிக்க பாடல். காதலன் என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண்ணின் மீது சந்தேகப் படலாமா என்ற கேள்வியெல்லாம் கேட்காமல் பாட்டை
கேட்டால்..[சீதாவையே சந்தேகப்பட்ட ராமன் இருந்த இடம் தானே இது..]

அந்தப் பெண் பாரதியில் புதுமைப் பெண்ணாக இருக்க முடியாது..அப்படி இருந்திருந்தால், போடா நீயுமாச்சு உன் காதலுமாச்சு என்று தூக்கி எறிந்து விட்டு
போயிருப்பாள்! பழைமை ஊறிய பெண்ணாகவும் இருக்க முடியாது..அப்படி இருந்திருந்தால், கண்ணைக் கசக்கிக் கொண்டு காதலனின் காலில் விழுந்திருப்பாள்!
இரண்டு பேருக்கு இடைபட்டவளாய் இருப்பவள் இவள்!

சந்தேகக் கண் கொண்டு நோக்கும் காதலனை நோக்கி சங்கீதமாய் தக்க பதிலளிக்கிறாள் இவள்! இதில் எனக்கு ரொம்பப் பிடித்த வரி "உன் இளமைக்குத்
துணையாக தனியாக வந்தேன்!" ஆஹா! ஒரு வரியில் காதலும் காமமும் இவ்வளவு அழகாகச் சொல்ல முடியுமா என்ன? அவள் தனியாக வருவது அவனுடைய
இளமைக்குத் தானே துணை!!

கவியரசு கவியரசு தான்..ஆமா, பாட்டு நான் புரிந்து கொண்ட கருத்தைத் தானே சொல்கிறது? என் சிறு மூளைக்கு எட்டாத வேறு கருத்திருந்தால், அதை
யாராவது தெரிவித்தால் மகிழ்வேன்!

கொஞ்சம் இருங்க! இந்தக் காலத்து பாட்டு ஒன்னு கேக்குதே?!

கட்டு கட்டு கீரக் கட்டு
புட்டு புட்டு ஆஞ்சுப்புட்டு
வெட்டு வெட்டு வேரவிட்டு
ஓ! பப்பைய்யா?

திருவிளையாடல் செண்பகப் பாண்டியன் ஸ்டைலில்:

ஆஹா! அற்புதமான பாட்டு! ஆழ்ந்த சொற்கள்! தீர்ந்தது சந்தேகம்! யாரங்கே...

[குறிப்பு: நான் இந்தக் காலத்து எல்லா பாட்டுக்களையும் குறை சொல்லவில்லை!]

நான் சென்னையிலிருந்து மதுரை செல்லும் ரயிலைப் பற்றி எழுதப் போவதில்லை. நான் மும்பை எக்ஸ்பிரஸ் பார்த்ததன் விளைவாக இந்தப் பதிவு! இது அதைப் பற்றிய விமர்சனப் பதிவுமல்ல. சமிபகாலங்களில் கமல் நடிக்கும் அனைத்துப் படங்களும் சர்ச்சைக்குள்ளானது நாம் எல்லோரும் அறிந்ததே..அதைப் பற்றிய என் எண்ணங்களும், கேள்விகளும் தான் இந்தப் பதிவு!

படத்திற்கு தமிழில் பெயர் சூட்டுங்கள் என்று சில அரசியல்வாதிகள் கூச்சலிடுவதும், இந்தக் கதைக்கு இப்படித் தான் பெயர் வைக்க முடியும் என்று சினிமாக்காரர்கள் மல்லுக்கு நிற்பதும் இன்று சகஜமாகிவிட்டது. நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன, அதை விட்டு விட்டு, அரசியல்வாதிகள் இதை ஒரு பிரச்சனை என்று பொழுது கழிப்பது சரியாகப் படவில்லை தான்..ஆனால்...

இவர்கள் சொல்வதற்கேற்ப வீம்புக்கென்றே கலைஞர்கள் படத்தின் தலைப்பை தேர்ந்தெடுக்கிறார்களோ என்றும் சில சமயம் தோன்றுகிறது. அரசியலை விட மக்களுக்கு சினிமாவும், சினிமாக் கலைஞர்களையும் பிடிப்பதால் எல்லோரும் சினிமாப் பக்கம் சேர்ந்து விடுகிறார்கள் என்பது என் எண்ணம்.

விருமாண்டி!

சண்டியர் என்ற பெயர் ரவுடியைக் குறிப்பதாகவும், ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்களை வீரமாகக் காட்டி, மற்றவரை கோழையாகச் சித்தரிப்பதாகவும், வன்முறை மேலோங்கி இருப்பதாகவும் பல குற்றங்கள் சாட்டப்பட்டு கமல் ஒரு வழியாக விருமாண்டி என்று மாற்றினார்! இந்தச் சண்டையே அந்தப் படத்திற்குத் தேவையான விளம்பரத்தைத் தேடித் தந்தது. கமல் அந்த அரசியல்வாதிக்கு எதிராகப் பேசும் பொழுது இது தூக்கு தண்டனை தடை செய்ய வேண்டும் என்ற ஒரு நல்ல கருத்தை வலியுருத்தும் படம், இதில் வன்முறை அறவே இல்லை என்று மார்தட்டிச் சொன்னார்! ஆனால் படத்தைப் பார்த்தவர்களுக்குத் தெரிந்துருக்கும் அது எத்தனை பொய் என்று..அந்தப் படத்தில் வன்முறை இல்லை என்றால், கமலுக்கு வன்முறை என்றால் என்னவென்றே தெரியவில்லை என்று அர்த்தம்! அது எனக்குப் பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது. நான் பெரிய கமல் ரசிகனாக இருந்தாலும், என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை. எந்த ஒரு பத்திரிக்கை விமர்சனத்திலும் படத்தில் வன்முறை அதிகம் என்று சொன்னதாய் எனக்கு ஞாபகமில்லை!! தேவர் மகனை விட, ஹேராமை விட இதில் தான் எனக்கு வன்முறை அதிகமாய் பட்டது..

மும்பை எக்ஸ்பிரஸ்!

இப்பொழுது இந்தப் படம்! கமல் வீம்பாக இது கதைக்கேற்ற பெயர், இதை மாற்ற முடியாது என்று படத்தை வெளியிட்டு அதுவும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் என் கேள்வி..

ஒரு குழந்தையைக் கடத்தும் கதைக்கு ஏன் அவர் மும்பையை தேர்ந்தெடுக்க வேண்டும்? அந்தக் கதையை சென்னையில் சொல்ல முடியாதா? கேட்டால், அந்தக் காரெக்டரின் பெயர் மும்பை எக்ஸ்பிரஸாம், ஏன் சென்னையில் இந்தக் காரெக்டர் இருந்து அதற்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ், பாண்டியன் விரைவுவண்டி என்று வைத்தால் என்ன? முதலில் அந்தக் காரெக்டரின் பெயர் மும்பை எக்ஸ்பிரஸ் என்று ஏன் வந்தது? அதைப் பற்றி கமல் படத்தில் ஒன்றும் சொல்லவில்லையே..

என் கேள்வி படத்திற்கு தமிழில் தலைப்பு வைப்பதைப் பற்றி அல்ல, அந்தப் படத்தை மும்பையில் தான் எடுக்க முடியும் என்று அவர் ஏன் தீர்மானித்தார் என்று எனக்கு விளங்கவில்லை..சென்ற வார விகடனில் சுஜாதா அவர்கள் இந்தப் படத்திற்கு சரியான தலைப்பே வைக்கப் பட்டிருக்கிறது என்று சான்றிதழ் தருகிறார்.

என்ன தான் சினிமா என்ற மாய உலகில் நாம் மயங்கிக் கிடந்தாலும், கூச்சலிடும் அரசியல்வாதிகளை விடுங்கள், நியாயம் என்று ஒன்று இருக்கிறதே..ஒரு justification வேண்டாம்?

என்னடா இவன், ரஜினியையும் குறை சொல்றான், கமலையும் குறை சொல்றான், இவன் உண்மையில் யார் ரசிகன் என்றால்; உண்மையில் நான் சினிமாவின் ரசிகன்!

ராஜனுக்கு 42 வயதிருக்கும். அவன் மனைவி கற்பகத்திற்கு 39. அவர்களுக்குத் திருமணமாகி 14 வருடங்களில் அவருக்கு அவள் குழந்தை, அவளுக்கு அவர் குழந்தை! ஆம், இருவரும் குழலினிது யாழினிது என்னும் கட்சி! என்னமோ அவர்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை. கற்பகத்தின் கண்களில் அந்த சோகம் நிரந்தரமாய் குடி கொண்டிருந்தது! என்றாவது அதைப் பற்றிய துக்கம் தொண்டை அடைக்கும்பொழுது, "நாம யாருக்கு என்ன துரோகம் செய்தோம், ஏன் நமக்கு ஒரு புள்ள பாக்கியம் கிடைக்க மாட்டேங்கிறது?" என்று கற்பகம் கதறியதுண்டு, ஏன் இன்றும் கதறுவதுண்டு. கதறலின் வீரியம் கொஞ்சம் குறைந்திருந்தது..அவ்வளவுதான்! அவள் இப்படிக் கேட்கும் பொழுதெல்லாம் அவர் அவளுக்குச் செய்யும் பாவமானது, துரோகமானது ராஜனைத் துரத்தும்..

எல்லா பெண்களுமே அழகாய் தெரியும் வயதில் ஏற்பட்ட தொடர்பு அது..இன்று வரை தொடர்கிறது. ராஜி! அவரை விட 3 வயது மூத்தவள். அன்பான கணவன், அழகான குழந்தைகள்..ஒரு ரயில் பிரயாணத்தின் சந்திப்பு, இத்தனை ஆண்டுகள், இத்தனை அந்நியோன்யமாய் மாறி விடும் என்று அவர்களுக்கு அப்போது தெரியாது. மனசாட்சிக்கு பயந்தவர்கள் இருவரும், ஆனால் பயந்து கொண்டே தப்பு செய்தவர்கள், செய்கிறவர்கள் இருவரும்!! ஊருக்கு அது தப்பு; அவர்களுக்கு அது நட்பு!

பல நாட்களுக்குப் பிறகு அவளின் அழைப்பு வந்திருக்கிறது இன்று! காலையில் எழுந்ததிலிருந்து அவளின் நினைவு. இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. இன்று காலையில் அலுவலகத்திற்கு ·போன் செய்து விடுப்பை சொல்லி இருந்தார். கற்பகத்திடம் தன் சினேகிதன் வெளியூரிலிருந்து வந்திருப்பதாகவும், அவனைப் பார்த்து விட்டு சாயங்காலம் வருவதாகவும் சொல்லி ஆகிவிட்டது. அவள் ஏன் எதற்கு என்று அவரை நச்சரிப்பதே இல்லை. வெளியிலே கண்டதை சாப்பிடாதீங்க! உங்களுக்கு ஒத்துக்காது என்கிறாள். ஆண்களுக்கு உலகம் தான் வீடு; பெண்களுக்கு வீடு தான் உலகம்! இவளையா நாம் துரோகம் செய்கிறோம் என்று அவர் நினைக்கவே இல்லை; அது "எல்லாம்" முடிந்த பிறகு இன்று இரவு வர வேண்டிய சிந்தனை. அப்போது இதைப் பற்றி நினைத்து வருந்திக் கொள்ளலாம் என்று ஒத்தி வைத்துக் கொண்டார்! அனுபவிக்கும் வரை சதையே அண்டம்; முடிந்தபின் சதையானது பிண்டம்!

அழைப்பு மணி அழுத்தி விட்டு காத்திருந்தார். அந்த ·ப்ளாட்டின் மயான அமைதி அவரையே கூர்ந்து கவனிப்பதாகப் பட்டது. அது அவரை மேலும் உறுத்தியது. ராஜியை நினைத்துக் கொண்டு மறுபடி மணி அழுத்தக் கை எடுத்த போது, கதவு திறக்கப்பட்டது; ராஜி! தும்பை நிற பூ போட்ட புடவையில் உள்ள பூக்களுடன் அவளும் இன்று தான் மலர்ந்ததைப் போலிருந்தாள்! அவர் வரும்பொழுதெல்லாம் அவள் புடவை அணிவது வழக்கம்! உள்ளே அழைத்து கதவடைத்தாள்! அதற்குப் பிறகு நடந்தது அவர்களுடைய அந்தரங்கம்!

ராஜனின் முகத்தில் தேஜஸ் கூடியிருந்தது..ஆனால் அவர் ஒத்தி வைத்திருந்த கவலை அவரைச் சூழ்ந்தது. கற்பகத்தை நினைத்து வழி நெடுக கண் கலங்கினார். இனி அவர் ராஜியை அடுத்த முறை சந்திக்கும் வரை அந்தக் கவலை அவரை வாட்டும்..அவருக்கு இத்தனை வருஷத்தில் அது பழகி விட்டிருந்தது. அந்தச் சிற்றின்பத்தில் அப்படி என்ன இருக்கிறது? கேவலம் அதற்காக என்னையே நம்பி இருப்பவளை துரோகம் செய்வது..சே! நான் எத்தனை இழிவானவன்! அவருக்கே அவரை நினைத்து அருவருப்பாய் இருந்தது..ஆனால், வாழ்வு முழுவதும் இந்தச் சுமையை அவர் சுமக்கத் தயாராய் இருந்தார்!

நினைவுகளுடன் போராடிக் கொண்டே வீட்டு வாசலில் வந்து நின்றார். சத்தம் செய்யாத கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவர், கண்ணில் பட்டது; அங்கே தன் தம்பி முறை கொண்ட ஒருவனுடன் உதடுடன் உதடு சேர்த்து தன்னை முழுவதுமாய் அவனுக்கு அர்ப்பணிக்க எத்தனிக்கும் கற்பகம்! ராஜி, தான் உள்ளே நுழைந்தவுடன் கதவடைத்தது ஏனோ ஞாபகம் வந்தது.

பதட்டப்படாமல் வெளியே வந்தவர், கதவைத் திறந்தால் சத்தம் வருமாரு ஒரு சிறு பலகையை சத்தம் வராமல் வைத்து விட்டு, இந்தச் சுமையையும் தன் வாழ்வு முழுவதும் சுமக்கத் தயாராகி நடந்தார்! குளிர்ந்த காற்று அடித்தது; இதமாக இருந்தது!!

புத்தாண்டு பிறந்து 2வது நாளில் புத்தாண்டு பிறந்ததன் பயனடைந்தேன். நீங்கள் யூகிப்பது சரி தான்..சந்திரமுகி பார்த்தாகிவிட்டது! பிறவிப் பயன் இந்த முறையும் எய்தியாகிவிட்டது!

எல்லோரும் படம் பார்த்தால் விமர்சனம் எழுதுகிறார்கள். பிரதம ரஜினி ரசிகனான நான் எழுதா விட்டால் எப்படிஎன்று நீங்கள் வருத்தப்படும் முன்..இதோ!

பி வாசு கதை எழுதி ரஜினிக்கு சொல்வதற்கு முன்னரே தமிழ்நாட்டில் அனைவருக்கும் கதை தெரிந்து விடுகிறது. [ரஜினிக்குத் தெரிகிறதோ இல்லையோ!] இப்படி இருக்கும்போது, படம் வந்து 5 நாள் ஆன பிறகு படத்தின் கதையை சொல்வது சிறுபிள்ளைத்தனம்! இருந்தாலும் அந்த சிறுபிள்ளைத்தனத்தை ஒரு சிறு வரியில் செய்து விடுகிறேன்!

ஜோதிகா மீது வரும் சந்திரமுகி என்ற பேயை சைக்கியாட்ரிஸ்ட் ரஜினி விரட்டுகிறார்!

ஜோதிகா யாரு? ரஜினி ஏன் அவளை பேய்கிட்ட இருந்து காப்பாத்துறார் என்றெல்லாம் நீங்கள் கேட்டால், நீங்க இப்பொவே ஆட்டையில இருந்து விலகிக்கலாம்!

சரி, சரி..விமர்சனத்துக்கு வர்றேன்! முதலில் படத்தின் நிறையை பார்ப்போமா?

ரஜினி, ரஜினி & ரஜினி :

3 வருடங்களுக்குப் பிறகு இளமையாய் திரும்பி இருக்கிறார் ரஜினி. அவருடைய பழைய படங்களின் பாணியில் காலை மட்டும் முதலில் காட்டி சண்டைக் காட்சியில் அறிமுகமாகிறார். மனிதன் படத்தில் முதலில் செந்தில் காலைக் காட்டுவார்கள். ரசிகர்கள் ரஜினி தான் என்று நினைத்து உற்சாக மிகுதியில் கையைத் தட்டுவார்கள், பார்த்தால் செந்தில் வருவார்!! அந்த ஞாபகம் தான் வந்தது..

ரொம்பவும் அடாவடி, ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று வந்து போகிறார்! ரொம்பவே அடக்கி வாசித்திருக்கிறார். தானும் பஞ்ச் டயலாக் பேசினால், எங்கே விஜய் ரசிகர்கள் விஜயை காப்பி அடிப்பதாக சொல்லி விடுவார்களோ என்று நினைத்து விட்டார் போல..

ஜோதிகா :

சாதரண படத்திலேயே முகத்தில் ஏதாவது குறும்புத்தனம் செய்வது ஜோதிகாவின் இயல்பு. இதில் பேய் பிடித்து ஆட்டும் வேடம் என்றால், கேட்கவா வேண்டும்..எல்லோரையும் ஒரு ஆட்டு ஆட்டுகிறார்!

வித்யாசாகர் :

எளிமையான இசையில், ரஜினிக்கே உரிய பாணியில் அற்புதமாய் செய்திருக்கிறார். நிச்சயமாக தேவுடா இவர் பக்கம் சூடுவார்! யாரு எஸ்பிபியா பாடுவது..எத்தனை நாளாச்சு சார்! தத்திந்தோம் பாட்டு பழைய இளையாராஜாவை ஞாபகப்படுத்துகிறது! ரஜினி ரசிகர்கள் இன்னும் இவர் வீட்டை பதம் பார்க்காததிலிருந்தே தெரிகிறதே, பாட்டு சூப்பர்னு!!

ரஜினியின் காஸ்ட்யும்ஸ் : [செளந்தர்யாக்கு ஒரு ஓ போடுங்க!]

குறிப்பாய் யாரும் ரஜினி படத்தில் லாஜிக் பார்ப்பதில்லை..அதேபோல், ஒரு சைக்யாட்ரிஸ்ட் இப்படி எல்லாம் ட்ரஸ் பண்ணுவாரா என்று கேட்காவிட்டால் அமோகமாய் உடை வடிவமைத்திருக்கிறார் செளந்தர்யா!

ரஜினியின் மேக்கப் [லாங், மிட்] :

கவனிக்க! லாங், மிட் ஷாட்டில் ரஜினி அழகாக இருக்கிறார்!

இனி குறைகள் :

ரஜினி வடிவேலு சீப் காமெடி :

காமெடி செய்வதற்கு ரஜினியே போதும், இதில் வடிவேலு வேறு இருக்கிறாரே என்று நினைத்தால், ஒன்றிரன்டு காட்சிகளைத் தவிர மற்ற எல்லாம் கேவலமான இரட்டை அர்த்த வசனங்களாய் இருந்தது பெருத்த ஏமாற்றம்!

அங்கங்கே உதைக்கும் லாஜிக் :

சைக்கியாட்ரிஸ்ட் எப்படி பேய், பிசாசை எல்லாம் நம்புகிறார், நயந்தாராவை எப்போதும் கடுப்படித்திக் கொண்டிருந்தாலும் அவர் ரஜினியை ஏன் விரும்புகிறார், எதற்கு தேவை இல்லாமல் அந்த வில்லி வருகிறார், ஜோதிகாவிற்குத் தான் பேய் பிடித்திருப்பதாக ரஜினி கூறும் போதும் சில காட்சிகள் லேசாக உதைக்கிறது! [யாராவது படத்தைப் பார்த்து விட்டு எனக்கு இந்தக் கேள்விகளுக்கு விடை அளியுங்கள்!]

ரஜினியின் மேக்கப் [க்ளோசப்] :

முகத்தில் பௌடர் பூசலாம், பௌடரிலேயே முகம் இருக்கக் கூடாது. ஜோதிகாவை விட ரஜினிக்குத் தான் அதிகம் லிப்ஸ்டிக் போட்டிருப்பார்களோ என்று தோன்றுகிறது! ரஜினியை க்ளோஸப்பில் காட்டும்போது, மேடைக்கு மேடை [அபிநயா க்ரூப்!] ரஜினி போல் வேடம் போற்று சுற்றுவார்களே, அவர்களைப்போலவே உள்ளது!

படத்தைப் பொறுத்தவரை கடைசி அரை மணி நேரம் தான் விறுவிறுப்பாக இருந்தது! எப்படியோ ரஜினி படம் வந்தால் சரி! என்ன சொல்றீங்க?

தான் யானை இல்லை, குதிரை என்று மறுபடியும் நிரூபித்திருக்கிறார் ரஜினி!! [யானை குதிரை மாட்டர் எல்லாம் உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன்!]

Image hosted by Photobucket.com

மறுபடியும் அவள் தான். அவனுக்கு பெருமை தாங்க முடியவில்லை. இருக்காதா பின்னே, இன்றைய இளஞர்களின் கனவு தேவதை ஒரு நாளைக்கு இத்தனை தடவை இவனுக்கு ஃபோன் செய்தால், யாரா இருந்தாலும் இப்படி ஒரு மிதப்பிலே இருக்கத் தானே செய்வாங்க!

சொல்லு! [கவனிக்க: ஒருமையில வந்து ரொம்ப நாளாச்சு!] என்றான்.
ஒன்னுமில்லை, ஷாட் முடிஞ்சது. சும்மா தான் பண்ணேன். நீ என்ன பண்றே? என்றாள்.
சத்தியமா உன்னை நினைக்கலை, என் வேலைய பாத்துட்டு இருக்கேன்!!
இது தான்டா, எனக்கு உன்கிட்ட புடிச்சதே, எத்தனை பேரு எனக்கு ஃபோன் பண்ணி ஜொள்ளு விட்றான் தெரியுமா?
உன்னால மட்டும் எப்படி இப்படி இருக்க முடியுது? இப்படி இருக்குறவன் எனக்கு ஏன் ஃபோன் பண்ணே?
காதல் படம் பார்த்தேன், நல்லா நடிச்சிருந்தே, உன்னை பாராட்டனும்னு தோனுச்சு!
எப்படியோ உன் நம்பர் கிடைச்சது. சரி பண்ணிப் பாப்போமேன்னு பண்ணினேன். இதை நான் உன்கிட்டா 10789 தடவை சொல்றேன்.
நான் உன்னை ரொம்ப படுத்துறேனோ?
சே, சே! காதல் சந்தியா கிட்ட பேச கசக்குதா என்ன?
உன்கிட்ட பேசுறேன்னா அம்மா கூட ஒன்னும் சொல்ல மாட்றாங்க. அன்னைக்கு நீ வீட்டுக்கு வந்தேல்லே, அம்மாக்கும் உன்னை ரொம்ப புடிச்சு போச்சு! அது எப்பிட்றா, பொண்ணு..அம்மான்னு சகட்டு மேனிக்கு எல்லாத்தையும் மயக்கிட்றே?
எனக்கு என்னமோ நான் பிரபலாமானவன் மாதிரியும் நீ என்னோட ரசிகை மாதிரியும் தோனுது!
நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நான் உன் ரசிகை தான்!
டேய் ஆபிஸுக்கு லேட் ஆகலை?
யாரு க்ராஸ்டாக்? என்றான்.
எனக்கு ஒன்னும் கேக்கலையே என்றாள்.
எந்திரிப்பா, ஆபிஸுக்கு போகனும்ல?
அட இது அம்மாவாச்சே, இங்கே எங்கே வந்தா?

தம்பி டேய்! எந்திரி மணி பாத்தியா? என்று கடிகாரத்தைக் காட்டிக் கொண்டிருந்தாள் அம்மா. அவன் கையில் செல்ஃபோன் இல்லை. 8:30 மணி வெயில் சுல்லென்று முகத்தில் அடித்து உண்மை சுடும் என்றது!!

சந்தியாவின் நம்பரை ஒரு முறை மனதுக்குள் சொல்லிக் கொண்டான்! இன்னைக்கு எப்படியாவது ஃபோன் பண்ணிடனும்!

இரவு மணி 8:37 நிமிஷம், 36 நொடி! நம்பரை அடித்தான். வயிற்றை ஏதோ செய்தது..

கேன் ஐ டாக் டு சந்தியா? சந்தியா இருக்காங்களா?
சந்தியா தான் பேசுறேன்.
[வயிறு ஜிவ்வென்றது!]
எல்லாரும் சொல்றது தான். மேடம் நான் உங்க ரசிகன். என் பேர் கூட முருகன் தான். நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க!
தேங்க்ஸ் ங்க! [சலிப்புடன்!]
நான் ஆர்ஸ்ல மார்க்கெட்டிங் எக்ஸியுக்யுட்டா இருக்கேன்!
ஓ!
என்ன உங்க அடுத்த படம் வரலையா?
மலையாளத்துல ஒரு படம் முடிச்சுட்டு இன்னைக்குத் தான் வந்தேன்.
உங்க அடுத்த படம் யார் கூட?
ரோஜா கம்பைன்ஸ்க்காக ஒரு படம் பண்றேன்!
யார் டைரக்டர்?
சசி!
உங்க வீடு எங்கே மேடம்?
வடபழனி
ஒகே மேடம்! பாய்!
ஓகே!
டொக்..

முதல் முறையே அவளைக் கவர நாள் முழுவதும் பேசிப் பார்த்து வைத்திருந்தது மறந்ததை நினைத்து அவனைத் திட்டிக் கொண்டான்!

இன்னைக்கு 39வது ஜொள்ளு என்று ஃபோனை ஆஃப் செய்தாள் காதல் சந்தியா!

இடம்: லக்கேஜ் செக்ஷன் - பெங்களூர் சிட்டி ஜங்க்ஷன்

நான் - சார், வண்டியை பேக் பண்ணனும்.
அவர் - எங்கே போகனும்?
நான் - சென்னை
அவர் - சென்னைக்கெல்லாம் பேக் பண்ணத் தேவையில்லை. உங்ககிட்ட பணம் நிறைய இருந்தா சொல்லுங்க பேக் பண்ணலாம்.
நான் - அய்யோ அப்படி எல்லாம் இல்லை சார்.
அவர் - அப்போ இந்த ஃபாரத்தை ஃபில் பண்ணி வண்டியை ரயில்ல ஏத்துங்க.

என்ன தான் படித்தவர்களாக இருந்தாலும் அரசாங்க விண்ணப்பத்தை ஒரே முறையில் யாரிடமும் கேட்காமல் பூர்த்தி செய்வது என்பது கஷ்டம் தான் போலும். ஒரு விண்ணப்பத்தில் எழுதி அடித்து, இன்னொரு விண்ணப்பத்தை அந்த அரசாங்க அதிகாரியிடம் வாங்கிக் கொண்டேன். இந்த முறை விண்ணப்பத்துடன் முறைப்பையும் இலவசமாக தந்தார்!

வாங்கி பூர்த்தி செய்து உள்ளே போகும்போது அந்த முறைத்தவர் மட்டும் இருந்தார். அந்த முதல் நபர் இல்லை. அவர் ரிடையர்ட் ஆக இன்னும் 5 நாள் இருக்கும் என்று தோன்றியது. குல்லாய் அணிந்து வெள்ளை தாடி வைத்திருந்தார். நல்ல வாட்டசாட்டமாய் இருந்தார். இப்படி எல்லாம் அவரை வர்ணித்து நேரத்தை வீணாக்கப் போவதில்லை. நேரா விஷயத்துக்கு வர்றேன்.

அவர் - வண்டி மதிப்பு என்ன?
நான் - 46,000 வாங்கினேன்.
அவர் - இந்த பணத்துக்கு இன்சுரன்ஸ் போட்டா நிறைய பணம் கட்ட வேண்டி வரும்.
நான் - இல்லை, நான் போன வருஷம் வாங்கும்போது அந்த விலை.
அவர் - அப்போ, இப்போ ஒரு 10,000 ரூபாய் இருக்குமா?
நான் - நோ, நோ..36,000 இருக்கும்.
அவர் [மறுபடியும்!] - அந்த விலைக்கு கணக்கு போட்டா 650 ரூபாய் வருது. நான் அட்ஜஸ் பண்ணி போட்றேன்.
நான் [சந்தேகத்துடன்!] - இல்லை பரவாயில்லை, என்ன வருதோ போடுங்க, நான் கட்டிர்றேன்.
அவர் [நான் சொல்வதை கேட்காமல்] - 400 ரூபாய் வருது, 450 கொடுங்க!
நான் - ஆனா நீங்க 400 ரூபாய் தானே ரசீத்ல எழுதி இருக்கீங்க?
அவர் - நான் அட்ஜஸ் பண்ணியிருக்கேன்ல?
நான் - நான் உங்களை அட்ஜஸ் பண்ண சொல்லவே இல்லையே சார். என்ன வருதோ அதைப் போடுங்க, நான் பணம் கட்ட தயாரா இருக்கேன். ஸாரி எனக்கு லஞ்சம் கொடுக்க இஷ்டமில்லை. தயவு செய்து லஞ்சம் வாங்காதீங்க!
அவர் - [தலை தாழ்த்திக் கொண்டு] சரி சரி 400 ரூபாய் கொடுத்துட்டு போங்க..[அவரால் என்னை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை!]

ஒரு வழியாய் ரசீதை வாங்கிக் கொண்டு வண்டியில் ஏற்றச் சென்றேன். ரயிலில் வண்டியை ஏற்ற ஒரு பலகை கூட இல்லை..4 பேர் அந்த வண்டியை ஆளுக்கு ஒரு கை தூக்கி ரயிலில் வைத்து விட்டு ம்ம்..கொடுங்க சார் என்று ஏதோ கொடுத்து வைத்தது போல் கேட்டார்கள். தலையெழுத்து என்று ஒரு 20 ரூபாய் நோட்டை நீட்டினேன். என்னா சார், சைக்கிளா தூக்கி வச்சோம், 100 குடு சார் என்றான் ஒருவன், இத்தனை பேரு எப்படி இந்த 20 ரூபாய் எடுத்துக்குறது என்று சட்டம் பேசினான். 4 பேரு கையை கொடுத்துட்டு 100 ரூபா கேட்டா எப்படி என்று சண்டைக்கு போனேன். வேணும்னா இதை வாங்கிக்குங்க என்றேன். அதற்கு அவர்கள் போ சார், போ..என்றார்கள். கடைசி வரை அந்த 20 ரூபாயை அவர்கள் வாங்கவில்லை. மகனே, 20 ரூபாயா நீட்றே, நாளைக்கு உன் வண்டிய பாரு என்பது போல எல்லோரும் ஒரு பார்வை பார்த்தனர்.

இடம் : சென்னை சென்ட்ரல்

ஒரு போலிஸ் தூரத்தில் அமர்ந்திருக்கிறார். யாரோ ஒருவன் நான் அங்கு சென்றவுடன் உங்க வண்டியா, ஒரு 30 ரூபா கொடுங்க என்ட்ரி பாஸ் போடனும் என்கிறான். அவனிடம் ரயில்வே ஊழியன் என்ற எந்த அடையாளமும் இல்லை. வேறு வழியின்றி கொடுத்தவுடன் வண்டியை இறக்கிவிட்டு பெட்ரோல் இருக்கா சார்? ஒரு சொட்டு இருந்தாலும் 2500 ரூபா ஃபைன் என்று பயமுறுத்துகிறான். நானும் பெட்ரோல் ரிசர்வில் இருந்ததால் எடுக்கவில்லை.

வண்டியைப் பார்த்தேன். இடது பக்க கண்ணாடியைக் காணவில்லை. வண்டி ஸ்டார்ட் ஆகாத படி வயரை புடுங்கி விட்டிருந்தார்கள்!! அந்த நேரத்தில் அன்பே சிவம் படத்தில் மாதவன் கமலிடம் பேசும் காட்சி ஞாபகம் வந்தது..

"இப்பொ எல்லாம் மனுஷனுக்கு பசிச்சா மனுஷனையே அடிச்சு சாப்பிட்றான் சார்! எனக்கும் தான் பசிக்குது!" என்பார் அப்பாவியாய்! அதே நிலையில் நானும் நின்று கொண்டிருந்தேன். இதெல்லாம் சும்மா விடாதீங்க, கம்ப்ளயன்ட் பண்ணுங்க என்றார் ஒரு பிராமண பெரியவர். அதற்கு அந்த பையன் சார், நான் சொல்றதைக் கேளுங்க, முதல்ல வெளியே போக பாருங்க..இதுல எல்லாம் மாட்டுனீங்கன்னா தேவையில்லாத பிரச்சனை தான் வரும் என்றான். வண்டியில் பெட்ரோலும், அந்த 2500 ரூபாய் ஃபைனும் என் கண் முன்னே வந்து சென்றது..என் மீதே எனக்கு வெறுப்பாய் இருந்தது..

அந்தப் போலீஸ் அந்தப் பையனிடம் நீயே பார்த்து முடிச்சுடு என்று எஙகளை விட்டு விட்டார். வெளியே வந்தவுடன் அந்தப் பையனுக்கு 300 ரூபாய் அழ வேண்டி இருந்தது! சே! பெட்ரோல் இல்லையென்றால் அவர்களை உண்டு இல்லையென்று ஆக்கி இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டாலும், அப்படி என்ன செய்து விட முடியும் என்னால் என்ற உண்மையும் உணர்ந்தேன். 2500 என்று வரும்போது நானும் என் நேர்மையை கை விட வேண்டி இருக்கிறது. நிச்சயமாக 2500 தானா என்று கூட எனக்குத் தெரியாது. இந்த மாதிரி இடங்களில் நம்மை அறியாமல் ஒரு பயம் வந்து தொற்றிக் கொள்வது இயற்கை ஆகிவிட்டது!

இவர்களைப் பற்றி புகார் கொடுக்கப் போனால் அங்கேயும் ஒரு ஏஜன்ட் வந்து சார், நீங்களா புகார் கொடுக்கனும்னா லேட் ஆகும், எனக்கு ஒரு 50 ரூபா தள்ளினீங்கன்னா காரியம் ஜரூரா நடக்கும் என்று சொன்னால் கூட ஆச்சர்யமில்லை!!

அல்லாருக்கும் வண்க்கம்பா! இன்னாடா இம்மா நாளா இவனக் காணோமேன்னு நீங்க ஜாலியா இருக்கீங்க! வுடுவானா இந்த பிரதீப்பு..தோ! வன்ட்டான்ல வரிஞ்சி கட்டிகினு!! இன்னாடா நல்லா பேசிகினு இருந்த பய இப்படி பாழாப்பூட்டானேன்னு பாக்குறுங்கீளா? சொல்றேன், சொல்றேன்!! அதுக்கு தானே வந்துகுனே இருக்கேன்!

கஜினி முகமது 18 முறை முயன்று வென்றதைப் போல் நானும் பல முறை முயன்று ஒரு வழியாய் சென்னை மண்ணில் விழுந்து விட்டேன்! பட்டணத்தில் பிழைக்க வருவது ஒன்றும் புதிதில்லை. ஆனால், கிராமத்தில் விவசாயம் படுத்து பட்டணத்திற்கு பிழைக்க வரும் ஒரு குடியானவனைப் போலில்லாமல் சாஃப்ட்வேர்கள் செழித்து வளரும் பெங்களூரை விட்டு நான் சென்னைக்கு பிழைக்க வந்தது தான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக்கும்.

நிக்க சொல்ல..[நிற்க தான் சென்னைத் தமிழில்]

இப்போ நான் சென்னை காக்னிஸன்ட் டெக்னாலஜி சொலுஷன்ஸ் ல குப்பை கொட்டிகினு இருக்கேன்! அம்புட்டு தான்ப்பா...

அப்பாடா வேர்க்கிறது!

இந்த இடம் எனக்கு புதுசு தான்..ஒரே கூட்டமா, கசகசவென இருந்தது..நிறைய லைட் போட்ருந்தாங்க! அதான் கொஞ்சம் மனசுக்கு நல்லா இருந்தது. வழக்கம் போல சுத்தி முத்தி பார்க்க ஆரம்பிச்சேன். பொறந்ததுல இருந்தே எனக்கு இந்த பழக்கம். எங்க வந்தாலும், எது எது எப்படி எப்படி இருக்குன்னு கூர்ந்து பாக்குறது என் வழக்கம்.! அப்படி தான் பாத்துட்டு இருந்தேன். ஒரு 2 வரிசை தள்ளி ஒரு பொண்ணு. அவளும் என்னை மாதிரி தான்னு நினைக்கிறேன், முட்டை கண்ணை வச்சுட்டு, அதை உருட்டி உருட்டி அங்கே இங்கே பாத்துட்டு இருந்தா..ரெண்டு பேர் பார்வையும் ஒரு இடத்துல மோதிடிச்சி..மோதித் தானே ஆகனும்! அவ எப்படி இருக்கான்னு சொல்லைலயே..வயசுக்கேத்த உடம்புன்னு சொல்லலாம். முட்டைக் கண்ணு. ஜீன்ஸ் ல டாப்ஸ¤ம் ஸ்கர்ட்டும் போட்ருந்தா..உங்களுக்குத் தான் தெரியுமே, இந்த காலத்து பொண்ணுங்க எப்படி சட்டை போட்றாங்கன்னு..அதே தான்..அவ கைய தூக்கும் போதெல்லாம் தொப்புள் தெரிஞ்சது..இந்த மாதிரி எல்லாம் பாத்தா எனக்கு அப்படி ஒன்னும் ஆறதில்லை..பசங்க ஏன் தான் இதுக்கெல்லாம் அலையிறாங்களோன்னு தோனும்!

என்ன சொல்லிட்டு இருந்தேன், ரெண்டு பேர் பார்வையும் மோதிச்சா, நான் அவளைப் பாக்காத மாதிரி திரும்பிட்டேன். இப்படி எத்தனை நேரம் அவ என்கிட்ட இருந்தும் நான் அவகிட்டயும் தப்பிக்க முடியும் சொல்லுங்க. இந்த தடவை நானும் அவளும் நேருக்கு நேர் பாத்துகுட்டோம். அட என்ன..இது என்னைப் பாத்து சின்னதா சிரிக்கிறாளே..

ஒருவேளை எனக்கு தெரிஞ்ச பொண்ணா, நானே இந்த ஊருக்குப் புதுசு, இவளுக்கு என்னை எப்படி தெரியும்? ஒருவேளை லூசோ? சே, சே..ஆளைப் பாத்தா அப்படி தெரியலையே..லூசா இருந்தா இந்த மாதிரி இடத்துல எல்லாம் எப்படி வர முடியும்?

பதிலுக்கு சிரிக்கிறதா வேணாமா, பொம்பளை சிரிச்சா போச்சு பொகையிலெ விரிச்சா போச்சுன்னு சொல்வாங்களே, இப்போ சிரிப்பா, அப்புறம் பக்கத்துல வந்து உக்காருவா, எனக்கு ரொம்ப போர் அடிக்குது, கொஞ்சம் கம்பெனி கொடுங்கன்னு கேப்பா, அப்புறம் ·போன் நம்பர் கேப்பா, அப்படியே பைக் ல எங்களை எல்லாம் கூட்டிட்டு போக மாட்டீங்களாம்பா, ரிங் ரோட்டுக்கு போவோம் அங்கே தான் யாரும் இருக்க மாட்டாங்கன்னு ஆசை காட்டுவா, அவளோட ஆளுங்க அங்கே ஏற்கனவே வந்திருப்பாங்க, கழுத்துல கை வச்சி என்னோட செயின், ப்ரேஸ்லெட், பணம், செல் ·போன் எப்படி எல்லாத்தையும் புடுங்கிட்டு, மூடு சரியில்லேன்னா கொன்னுட்டும் போயிடுவாங்க, சரி அப்படியே அவ அந்த மாதிரி பொண்ணா இல்லைன்னாலும், நல்லா கொஞ்ச நாள் பேசிட்டு, பைக்ல சுத்திட்டு, நீ இல்லாம என் வாழ்க்கை நிறைவடஞ்சுருக்காதுடா புஜ்ஜி [செல்லமா கூப்பிட்றாளாம்!]ன்னு சினிமா டயலாக் எல்லாம் பேசிட்டு, அமேரிக்கா மாப்பிள்ளை வந்தவுடனே, ஒரு பொண்ணு உங்ககிட்ட சிரிச்சு பேசிறக்கூடாதே, உடனே உங்களையே நெனச்சு உருகுறான்னு நெனச்சுக்குறது, "பாய்ஸ் ஆர் சிக்"னு சொல்லிட்டு போயிட்டே இருப்பா...இந்த பொண்ணுங்களுக்கெல்லாம் இதானே வேலை..நாட்ல எத்தனை நடக்குது, எதுனா நடந்தா அவ அழுதா போதுமே ஊரே கூடிடும், நான் சொல்றதையா கேப்பாங்க..

எனக்கு எதுக்குங்க இந்த வம்பெல்லாம்...னு

அனாவசியமா கண்டதெ நெனைக்காம நானும் அவளைப் பாத்து சிரிச்சேன். அடா, அடா..அவளோட அந்த முட்டை கண்ணுல தான் என்ன ஒரு உற்சாகம், துள்ளல்..அட போங்க நீங்க வேற, நாங்க என்ன உங்களை மாதிரியா, எங்க ரெண்டு பேர் வயசைக் கூட்டினாலே ஒரு 5 அல்லது 6 தான் இருக்கும்..இதுல அவளைப் பாத்து சிரிக்கிறதுக்கு எனக்கு என்ன பயம் சொல்லுங்க?

அன்று வியாழக்கிழமை..அது தான் இத்தனை கூட்டம், .அந்த மசூதியில்! அந்த மசூதியில் மந்திருத்துக் கொண்டால் அனாசின், க்ரோசின், நோவாஜின் இப்படியான அலோபதி மருந்துகள் செய்யத் தவறுவைதை அந்த மந்திரம் செய்யும் என்பது பல தாய்மார்களின், தந்தைமார்களின் நம்பிக்கை. அந்த மந்திரத்தின் மேல் அவ்வளவு நம்பிக்கை இருப்பினும் அவர்கள் அந்த மருந்துகளையும் உட்கொள்ளத் தவறுவதில்லை.. எப்படியோ சொஸ்தமானால் சரி..உடல் தேறியதும் எதனால் தேறியது என்று ஆராய்ச்சி செய்ய அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை..அப்படி ஒரு நம்பிக்கைக்குப் பாத்திரமான தாயின் உந்துதலால் தான் அவன் அங்கு வேண்டா வெறுப்பாய் வந்தான். "திருஷ்டி பட்ருக்கும், கண் பட்ருக்கும் அதனால் தான் உனக்கு உடம்புக்கு முடியாம போகுது..என்ன மாத்திரை சாப்பிட்டாலும் இதெல்லாம் குணம் ஆகாது. மசூதியில் மந்திருச்ச மறுநாள் சரியா போயிடும்" என்று இழுத்து வராத குறையாய் அவனை இங்கு அழைத்து வந்திருந்தாள். வெளியூரில் சாதாரண கிளார்க் வேலை பார்த்து, மாதமானால் சொலையாய் ரூபாய் 1000த்தை வீட்டுக்கு அனுப்புகிறவனாய் இருந்தாலும், யாருமே செய்யாததை அவன் பிறர் திருஷ்டி, கண் படும்படி என்ன செய்து விட்டான் என்ற கேள்வி எழாமல் இல்லை..அப்படி என்றால் சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன், அப்துல் கலாம் தினமும் அல்லவா மந்திரிக்கப் பட வேண்டும் என்பது அவனுடைய சிந்தனை..இந்தக் காலத்துல பசங்க எங்கே பெத்தவங்களை நல்லா கவனிச்சிக்கிறாங்க..இவன் மாசம் ஆனா ஒழுங்கா பணம் அனுப்புறதே போதுமே, அந்த எதிர் வீட்டு மாமியோட கொள்ளிக் கண் ஒன்னு போதாதா என்பது அவனுடைய தாயின் சிந்தனை! அவரவர்க்கு அவரவர் யோசனை..

அந்தத் தெருவே ஏதோ பாகிஸ்தானில் இருப்பது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தியது..அலாவுதீன் மெட்டல்ஸ், மொய்தீன் ·பர்னிச்சர்ஸ் இப்படியான விளம்பரப் பலகைகளும் குர்தா பைஜாமா, குள்ளாய் அணிந்து தாடியுடன் திருபவர்களைப் பார்த்தால் அந்த பிரமை ஏற்படுவது இயற்கை தானே? மசூதியிலிருந்து சாலை வரை வரிசை நீண்டிருந்தது..ஆண்களின் வரிசை தனி, பெண்களின் வரிசை தனி. சொற்பமான ஆண்கள் நிற்பதைக் கண்டவுடன் அவனுக்கு கொஞ்சம் நிம்மதி.

தாய்மார்கள் ஜாதி மதம் தெரியா, யாரைப் பார்த்தாலும் புன்னகை பூக்கும் குழந்தைகளுடன் நின்றனர். குழந்தைகள் பிறரைப் பார்த்து சிரிப்பதைப் பார்த்து குழந்தைகளின் தாய்மார்களுக்குத் தான் எத்தனை குஷி! என்ன ஒரு பெருமை அவர்கள் முகத்தில். இதோ ஆண்களின் வரிசையில் அவனுக்கு முன்னால் நிற்பவரும் கூட ஒரு அழகான குழந்தையுடன் தான் நிற்கிறார். அந்தக் குழந்தை இந்த உலகத்தையே தன்னுள் உள்ளிழுத்துக் கொள்ளும் ஆர்வத்துடனும், ஆவலுடனும் சுற்றும் முற்றும் பார்க்கிறது.. சினிமா தியேட்டருக்குப் போனால் அந்தப் பெண் வரிசையில் நிற்க வேண்டும், மசூதிக்கு வந்தால் அந்த ஆண் வரிசையில் நிற்க வேண்டும் என்று அவர்களுக்குள் ஒப்பந்தம் போலும்! குழந்தையை தன் கணவனிடம் ஒப்படைத்து விட்டு காத்துக் கொண்டிருக்கிறாள். அது முஸ்த·பாவின் கடையை மறைப்பதால் அவர் "இந்தாம்மா ஒரு ஓரமா நில்லுங்க? இப்படி கடைய மறைச்சுட்டு நின்னா நான் எப்படி வியாபாரம் பார்க்கிறது? என்னம்மா, தெனம் உங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கு" என்று சலித்துக் கொள்கிறார். நான் அங்கன நிக்கிறேன் என்று கணவனிடம் ஒரு இடத்தைக் காட்டி அவள் சென்று விட்டாள்.

அந்த இடத்தில் அவன் ஒரு மார்க்கமாய் தான் இருந்தான்..கலைந்த கிராப்பும், ஏதோ ஒரு வித்தியாசமான துணியில் அரைக்கை சட்டையும், இன்றைய நாகரீகத்திற்கு ஏற்ப ஒரு அரை நிஜாரும் அணிந்திருந்தான்.. அவன் ஊரில் ஓய்வாய் இருக்கும்போது இப்படித் திரிவது தான் வழக்கமாம். நல்ல நாகரீகம்! அவனைப் பார்த்தால் யாருமே ஒரு கிளார்க் என்று சொல்ல முடியாது தான். "இந்தாம்மா, இங்கே வரிசையில் நிக்கிறவங்க எல்லாம் மனுஷங்களா தெரியலயா? ஏதோ நேரா போறே! வரிசையில் வாம்ம..6 மணியில இருந்து நிக்கிறோம்!" "நான் ஒன்னும் உள்ளே போலைம்மா சாமி இருக்காறான்னு பாத்தேன்! அவ்வளவு தான்.." தொடங்கி விட்டது தாய்மார்களின் சச்சரவு. அவனுக்கு எரிச்சலாய் வந்தது..தன் அம்மாவைத் தேடி முறைத்தான்..அந்தப் பார்வை "எதுக்கு என்னை இங்கே எல்லாம் கூட்டிட்டு வர்றே" என்பது போல் இருந்தது.. இதற்குள் இன்னொரு பெண் "எனக்கு 2 பஸ் புடிச்சு போகனும்மா, கொஞ்சம் என் பொண்ணை விடுங்களேன்!" என்று கெஞ்சினார். "ஆமா நீ தான் 2 பஸ் புடிச்சி போனும், நாங்க திரும்பினா வீடு வந்துரும்..போம்மா சும்மா!" என்றாள் எரிச்சலுடன்! இந்த முறை அவன் முறைக்க அவள் தாய் அங்கு இல்லை.. கூட்டத்தில் குழந்தைகள் அழத் தொடங்கின.."மாமா பாரு" என்று இவனைக் காட்டி குழந்தைகளின் அழுகையை நிறுத்த முயற்சிகள் நடந்து கொண்டிருந்தன..இவனும் வேண்டா வெறுப்பாய் குழந்தைக்கு சிரிப்புக் காட்ட முகத்தில் கோமாளித்தனம் செய்ய முயற்சித்தான்..பயனில்லை! குழந்தையின் தாய் தான் சிரித்தாள்! குழந்தை பயந்து மேலும் அழுதது..

அதற்குள் உள்ளே போன ஒவ்வொருவரும் முகத்தில் தண்ணீர் வழியவும், சிலர் புது கருப்புக் கயிருடனும் வெளியே வரத் தொடங்கினர். அவனுக்கு முன் 3 ஆண்கள் தான் இருந்தார்கள். அவனுக்கு தான் குழந்தையாய் இருந்த போது, இங்கு வந்ததும், எதிர்பாராமல் முகத்தில் தண்ணீர் அடித்ததும், அதற்காக அழுததும் ஏனோ ஞாபகம் வந்தது. திடீரென அவன் பேரைச் சொல்லி அவன் தாய் அழைத்ததும் திரும்பிப் பார்த்தான்..அவள் "இந்த பொண்ணை உன் பக்கத்துல நிறுத்திக்கிறியா, ரொம்ப தூரம் போகனுமாம்" என்று ஒரு சிறுமியை அனுப்பி வைத்தாள். அவன் "எனக்கென்ன யாரும் ஒன்னும் சொல்லைலன்னா சரி தான்" என்று பெண்கள் பக்கம் பார்த்தான். அவனுடைய கோமாளித்தனத்தைக் கண்டு சிரித்த அந்தப் பெண் அவனுடைய நிலையைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். எல்லோரையும் ஒழுங்காய் வரிசையில் வருமாறு சத்தம் போட்டுக் கொண்டிருந்தவள் அவனை ஏனோ முறைப்பது போல் அவனுக்குத் தோன்றியது.

இப்போது அந்தச் சிறுமி மட்டும் தான் அவனுக்கு முன்னால் இருந்தாள். பெண்கள் வரிசையில் இருப்பவர்களை மந்திருத்துக் கொண்டிருந்தார் அவர். அவரே தான்..தான் சிறுவனாய் இருந்த போது யார் மந்திருத்துக் கொண்டிருந்தாரோ, அவரே தான்..இன்னும் மந்திருத்துக் கொண்டிருக்கிறார். காலம் அவருடைய தாடியை சலவை செய்திருந்தது! அதே மாதிரி கையில் தண்ணீர் எடுத்து எதிர்பார்க்காத போது ஏதோ முணுமுணுத்து விட்டு முகத்தில் அடித்தார். ஆனால் அந்தக் குழந்தை அழவே இல்லை..கொஞ்சம் ஆச்சர்யப்பட்டுப் பார்த்ததோடு சரி! பழக்கப்பட்ட குழந்தை போலும். அந்த சிறுமிக்கு முடிந்தவுடன் அவன் உட்கார்ந்தான். எதுவும் கேட்கவில்லை...கையில் தண்ணீர் எடுத்தார். அவன் எதிர்பார்க்கத் தொடங்கினான். அடுத்த நொடி முகத்தில் தண்ணீர் தெளித்து 1 ரூபாய் என்றார். அவன், தண்ணீருக்கா? மந்திரத்துக்கா என்று புரியாமல் 1 ரூபாய் கொடுத்து விட்டு எழுந்தான். முகத்தை துடைத்துக் கொண்டே வெளியே வந்தான். திருஷ்டியும், பிறர் கண்பட்டதும் துடைத்துக் கொள்வதாய் நினைத்துக் கொண்டான்.

திருஷ்டி கழிப்பதில் மத வேற்றுமை பாராட்ட வேண்டியதில்லை என்று சொல்லி மசூதிப் புறாக்கள் பறந்து சென்றன..இதற்காகவாவது இந்த மாதிரி மூட பழக்க வழக்கங்கள் இருக்கட்டும் என்று அவனுக்குத் தோன்றியது!

அப்படி இப்படி என்று ஒரு மாதம் ஓடி விட்டது மழை நின்று! என் வலைப்பதிவு மழை இல்லா பயிர் போல் தரிசாய் கிடக்கிறது..

இதோ மறுபடியும்...

பெய்யெனப் பெய்யும் மழை!

ஒரு சிறுகதை பெய்வதாய் உத்தேசம் இன்று!

திருக்கடையூரிலிருந்து கடலூர் சென்று கொண்டிருந்தேன். ஞாயிற்றுக் கிழமை அதுவும் பண்டிகைக் காலம் ஆதலால் பேருந்தின் ஏகத்திற்குக்கூட்டம். அந்தக் கூட்டத்தில் நான் நம்ப முடியாத அளவுக்கு ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஆமாம். எனக்கு அடுத்த நிறுத்தத்தில் உட்கார இடம் கிடைத்தது. பேருந்தின் படியின் பக்கத்தில் இருக்கும் இடம். அப்பாடா..கூட்ட நெரிசலான ஒரு பேருந்தில் இடம் கிடைத்து விட்டால் தான் மனதுக்கு என்ன ஒரு நிம்மதி..ஏதொ 5 பெண்களை கல்யாணம் பண்ணிக் கொடுத்த திருப்தி..

என் பின்னால் படியில் சிலர் நின்று கொண்டு வந்தார்கள். நான் பேருந்தில் ஏறியதிலிருந்து ஒருவன் நடத்துனருடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். அவன் தர்க்கம் பண்ணிக் கொண்டிருந்தான் என்று சொல்லலாம். உட்கார இடம் கிடைக்காமல் நான் அசதியாய் இருந்ததால் அவன் பேச்சில் அதிக கவனம் செல்லவில்லை..இப்பொழுது இடம் கிடைத்தவுடன் தான் கவனித்தேன். இன்னும் அவன் நடத்துனரிடம் பேசிக் கொண்டிருந்தான். மன்னிக்கவும், தர்க்கம் பண்ணிக் கொண்டிருந்தான். லேசாய் திரும்பிப் பார்த்தேன். அவன் கண்களும், பற்களும் நல்ல கலர். இன்று தான் சவரக் கடைக்கு போய் வந்திருப்பான் போலும். தாடியை மலுங்க எடுத்து ஒரு அழகான கிராப் தலையுடன் இருந்தான். பச்சைக் கலர் கட்டம் போட்ட சட்டையும், வெள்ளை வேட்டியும் அணிந்திருந்தானா என்று சரியாக சொல்ல முடியவில்லை..அப்படித் தான் என்று வைத்துக் கொள்ளுங்கள்! குடியா முழுகி விடும்..
நடத்துனர் அவனின் பக்கத்தில் நின்றவரிடம் சீட்டு? என்றான்! அதற்கு அவர் முன்னால் எடுப்பார்கள் என்றான். அவர் போய் விட்டார். அதுவரை நடத்துனரிடம் புலம்பிக் கொண்டிருந்தவன், இப்போது இவன் பக்கம் திரும்பி, என்ன அக்கா கூட வந்துருக்கா? முன்னாடி நிக்குதாக்கும்? ஏன்டா நீ ஆமபளை தானே நீ சீட்டு எடுக்காம பொட்டச்சிய சீட்டு எடுக்கச் சொல்றே என்றான்! என் கண்கள் ஜன்னலின் வழி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க என் காதுகள் அவனைப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தன. அந்தக் கேள்வியில் நான் தடுமாறித் தான் போனேன்..

அடப் பாவிகளா பெண்கள் சீட்டு எடுப்பது கூட இவர்களுக்கு எப்படி கெளரவக் குறைச்சல் ஆகிறது என்று வியந்தேன். அதற்கு அந்த நண்பன் பதில் சொல்லவில்லை..
என்னடா நீ சீட்டு எடு, ஆம்பளை தானே நீ, வேட்டி எல்லாம் கட்டிட்டு வந்துருக்கே..சீட்டு எடு, இல்லை பொட்டச்சியா நீ? பொடவை கட்டிக்க..என்று அவனை சீண்டிக் கொண்டே இருந்தான். என்னடா இந்த ஒரு சின்ன விஷயத்திற்காக இவன் ஏன் இந்த அளவுக்குப் பேசுகிறான்..இவன் குடித்து விட்டு வந்திருக்கிறானோ என்று எனக்கு அப்போது தான் லேசாய் உரைத்தது..
அவன் அந்த நண்பனை விடவில்லை..உன்னை பத்தி அந்த சிங்கப்பூர்காரன் போன் போட்டு சொல்றான். நீ தான் சாமி சாமின்னு அலயிறே, ஆயிரம் ஆயிரமா செலவலிக்கிறே..என்னைப் பாரு நான் சாமியே இல்லைன்றேன், ஆனா நானும் சாமி கும்பிடுவேன்..மன சாந்திக்காக! நீ எப்படி இருக்க? நான் எப்படி இருக்கேன்?

எனக்கு புரியவேயில்லை..சாமி இல்லைன்றான்..ஆனா கும்பிட்றான் என்ன தான் சொல்றான்!
அந்த நண்பர் அய்யோ நீ சும்ம இரப்பா என்னை குழப்பாதே என்றான் அப்பாவியாய்..அவனுக்கு அவன் எங்கே தன்னுடைய எல்லா விஷயத்தையும் போட்டு உடைத்து விடுவானோ என்று பயம். அவனா சும்ம இருப்பான்? மது அருந்தியவுடன் மனிதன் சிறு குழந்தையாகி விடுகிறான் போலும். அவனுக்கு கலாச்சாரம், நாகரீகம் எதுவுமே தெரிவதில்லை..ஒரு தியான மண்டபத்தில் எவ்வளவு தான் ஒரு தாய் தன் குழந்தையை அடக்க நினைத்தாலும் ம்மா..ம்மா..தா..யா..என்று குழந்தைகள் உளறுவதைப் போல் அந்த நண்பன் என்ன தான் கெஞ்சினாலும் அவன் அவனை திட்டிக் கொண்டே தான் இருந்தான்.
அடடா, ஸ்டாப் வரட்டும் நான் வேணா முன்னாடி போய் ஏறிக்கிறேன்..ஆளை விடு என்றான் அவன் நிம்மதி இழந்து..அவன் அதற்கும் வம்பிழுத்தான்..அய்யோ இப்பொ குதிக்கத் தான் போறேன் என்றான் அவன் பொறுமை இழந்து..குதி..குதிப்பா..நீ தான் வீரனாச்சே! சாமி உன்னைக் காப்பத்துவாரு, குதி என்றான் பதிலுக்கு..

இதற்கு நடுவில் இன்னொரு குடிகார நண்பன் அட, அவனை விடப்பா சத்த நேரம் என்றான்..நாகரீகம் தெரிந்த குடிகாரன் போலும். ஒரு வழியாய் ஒரு நிறுத்தம் வந்தது தான் தாமதம் அந்த ஆள் ஓடியே விட்டான். அவன் போய் விட்டான் என்று கூட தெரியாமல் இவர்கள் இருவரும் வேறு விஷயங்களைப் பற்றி கலந்தாலோசிக்கத் தொடங்கினர்! ஒரு இடம் யாரும் உட்காராமல் காலியாய் இருந்தது போலும், அதில் யாரோ வாந்தி எடுத்து வைத்திருந்ததனர் போலும். இவர்களுக்குத் தான் அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லையே? அந்த நிரு நண்பர்களில் ஒருவன் அதில் உட்கார்ந்து கொண்டிருந்தான் போலும். நான் அவர்களைப் பின்னால் திரும்பி பார்க்கததால் தான் இந்தப் போலும்..

அந்த நிறுத்தத்தில் ஒரு 3 பெண்கள் ஏறினர். பெண்களைக் கண்டவுடன் அந்தக் குடிகார நண்பர் எழுந்து அவர்களுக்கு இடம் தந்தான். [நாகரீகம் தெரிந்த நண்பர்]. அதில் ஒரு பெண் உட்கார்ந்து கொண்டாள். வாந்தியின் நாற்றம் தாங்காமல் கைக்குட்டையால் தன் மூக்கை மூடி உட்கார்ந்திருந்தாள். எழுந்து இடம் கொடுத்தவன் அவள் பக்கத்தில் நின்றான். கொஞ்ச தூரம் சென்றதும் அந்தப் பெண்..இந்தாங்க, கொஞ்சம் தள்ளி நில்லுங்க..என்றாள்.
நாகரீகம் தெரிந்திருந்தாலும் அது சுர்ரென்றது அவனுக்கு..ஏம்மா பொம்பளையாச்சேன்னு நான் உட்கார்ந்திருந்தா சீட்டையும் கொடுத்தா இப்போ தள்ளி நில்லு தள்ளி நில்லுன்றியே..இதுக்கு மேல எங்கம்மா தள்ளி நிக்கிறது? என்றான். நம் முதல் குடிகார நண்பனும் அந்தச் சண்டையில் கலந்து கொண்டான். உங்களுக்காக தானே சீட்டு விட்டு கொடுத்து எழுந்து நின்னான்..திஸ் இஸ் ராங் என்றான்..மது அறுந்தி இருக்காவிட்டால் இவன் ஆங்கிலத்தில் பேசக் கூடியவனா? மது அருந்தியதும் இவர்களுக்கு எப்படி ஆங்கிலம் வருகிறது என்று நான் வியந்தேன். ஒரு வேளை ஆங்கில சரக்கு அடித்திருப்பானோ என்றும் நினைத்தேன்!

அதற்குள் அந்த இடம் சந்தக்கடை ஆகி இருந்தது..நடத்துனர் வந்து அவர்களின் தாயை திட்டியதும் அவர்கள் அமைதி ஆனார்கள். அந்தப் பெண்ணுக்கும் விளங்கிவிட்டது அவர்கள் எந்த நிலமையில் இருக்கிறார்கள் என்று. அவளும் அந்த இடத்தை தியாகம் செய்து விட்டு எழுந்து போய் விட்டாள்!

அடுத்த நிறுத்தத்தில் அந்த இரு அறிஞர்களும் இறங்கிக் கொண்டனர். பேருந்திலிருந்து அனைவரும் இறங்கிக் கொண்டது போல் ஒரு அமைதி..பேருந்து அந்த நிறுத்தத்திலிருந்து கிளம்பியதும் அவர்கள் இறங்கிக் கொண்டார்களா என்று ஒரு முறைக்கு இரு முறை ஊர்ஜிதம் செய்து கொண்டு என் பக்கத்தில் இருப்பவர் ஆரம்பித்தார்!
இவங்களை எல்லாம் ஏன் சார் பஸ்ல ஏத்துறாங்க..பப்ளிக் என்ன கஷ்டப் படுது..நம்ம நாடு இப்படி இருக்குறதுக்கு காரணமே இது தான் சார்..நானும் ஒரு புன்னகை பூத்து வைத்தேன்..அவர்க்கு நான் பிடி கொடுக்காம இருக்கவே மற்றவரிடம் திரும்பினார்.
இப்படி தான் சார் எங்க ஊர்ல என்று ஒரு கதையை ஆரம்பித்தார்..பேருந்தில் ஆஙாங்கே ஏகப்பட்ட சலசலப்பு..இத்தனை நேரம் எங்கே நாம் வாய் திறந்தால் அவனிடம் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் அடக்கி வைத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள் போலும்..இப்பொழுது எல்லோரும் தங்களால் முடிந்த வரை அவரவர் பக்கத்தில் இருப்பவரிடம் தெளிவாய் உளறிக் கொண்டிருந்தனர்!!

அந்தக் குடிகாரர்களுக்கும் இந்தக் குடிமக்களுக்கும் நிறைய வித்தியாசம் இல்லை என்று என் மனதிற்குப் பட்டது...