ராஜனுக்கு 42 வயதிருக்கும். அவன் மனைவி கற்பகத்திற்கு 39. அவர்களுக்குத் திருமணமாகி 14 வருடங்களில் அவருக்கு அவள் குழந்தை, அவளுக்கு அவர் குழந்தை! ஆம், இருவரும் குழலினிது யாழினிது என்னும் கட்சி! என்னமோ அவர்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை. கற்பகத்தின் கண்களில் அந்த சோகம் நிரந்தரமாய் குடி கொண்டிருந்தது! என்றாவது அதைப் பற்றிய துக்கம் தொண்டை அடைக்கும்பொழுது, "நாம யாருக்கு என்ன துரோகம் செய்தோம், ஏன் நமக்கு ஒரு புள்ள பாக்கியம் கிடைக்க மாட்டேங்கிறது?" என்று கற்பகம் கதறியதுண்டு, ஏன் இன்றும் கதறுவதுண்டு. கதறலின் வீரியம் கொஞ்சம் குறைந்திருந்தது..அவ்வளவுதான்! அவள் இப்படிக் கேட்கும் பொழுதெல்லாம் அவர் அவளுக்குச் செய்யும் பாவமானது, துரோகமானது ராஜனைத் துரத்தும்..

எல்லா பெண்களுமே அழகாய் தெரியும் வயதில் ஏற்பட்ட தொடர்பு அது..இன்று வரை தொடர்கிறது. ராஜி! அவரை விட 3 வயது மூத்தவள். அன்பான கணவன், அழகான குழந்தைகள்..ஒரு ரயில் பிரயாணத்தின் சந்திப்பு, இத்தனை ஆண்டுகள், இத்தனை அந்நியோன்யமாய் மாறி விடும் என்று அவர்களுக்கு அப்போது தெரியாது. மனசாட்சிக்கு பயந்தவர்கள் இருவரும், ஆனால் பயந்து கொண்டே தப்பு செய்தவர்கள், செய்கிறவர்கள் இருவரும்!! ஊருக்கு அது தப்பு; அவர்களுக்கு அது நட்பு!

பல நாட்களுக்குப் பிறகு அவளின் அழைப்பு வந்திருக்கிறது இன்று! காலையில் எழுந்ததிலிருந்து அவளின் நினைவு. இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. இன்று காலையில் அலுவலகத்திற்கு ·போன் செய்து விடுப்பை சொல்லி இருந்தார். கற்பகத்திடம் தன் சினேகிதன் வெளியூரிலிருந்து வந்திருப்பதாகவும், அவனைப் பார்த்து விட்டு சாயங்காலம் வருவதாகவும் சொல்லி ஆகிவிட்டது. அவள் ஏன் எதற்கு என்று அவரை நச்சரிப்பதே இல்லை. வெளியிலே கண்டதை சாப்பிடாதீங்க! உங்களுக்கு ஒத்துக்காது என்கிறாள். ஆண்களுக்கு உலகம் தான் வீடு; பெண்களுக்கு வீடு தான் உலகம்! இவளையா நாம் துரோகம் செய்கிறோம் என்று அவர் நினைக்கவே இல்லை; அது "எல்லாம்" முடிந்த பிறகு இன்று இரவு வர வேண்டிய சிந்தனை. அப்போது இதைப் பற்றி நினைத்து வருந்திக் கொள்ளலாம் என்று ஒத்தி வைத்துக் கொண்டார்! அனுபவிக்கும் வரை சதையே அண்டம்; முடிந்தபின் சதையானது பிண்டம்!

அழைப்பு மணி அழுத்தி விட்டு காத்திருந்தார். அந்த ·ப்ளாட்டின் மயான அமைதி அவரையே கூர்ந்து கவனிப்பதாகப் பட்டது. அது அவரை மேலும் உறுத்தியது. ராஜியை நினைத்துக் கொண்டு மறுபடி மணி அழுத்தக் கை எடுத்த போது, கதவு திறக்கப்பட்டது; ராஜி! தும்பை நிற பூ போட்ட புடவையில் உள்ள பூக்களுடன் அவளும் இன்று தான் மலர்ந்ததைப் போலிருந்தாள்! அவர் வரும்பொழுதெல்லாம் அவள் புடவை அணிவது வழக்கம்! உள்ளே அழைத்து கதவடைத்தாள்! அதற்குப் பிறகு நடந்தது அவர்களுடைய அந்தரங்கம்!

ராஜனின் முகத்தில் தேஜஸ் கூடியிருந்தது..ஆனால் அவர் ஒத்தி வைத்திருந்த கவலை அவரைச் சூழ்ந்தது. கற்பகத்தை நினைத்து வழி நெடுக கண் கலங்கினார். இனி அவர் ராஜியை அடுத்த முறை சந்திக்கும் வரை அந்தக் கவலை அவரை வாட்டும்..அவருக்கு இத்தனை வருஷத்தில் அது பழகி விட்டிருந்தது. அந்தச் சிற்றின்பத்தில் அப்படி என்ன இருக்கிறது? கேவலம் அதற்காக என்னையே நம்பி இருப்பவளை துரோகம் செய்வது..சே! நான் எத்தனை இழிவானவன்! அவருக்கே அவரை நினைத்து அருவருப்பாய் இருந்தது..ஆனால், வாழ்வு முழுவதும் இந்தச் சுமையை அவர் சுமக்கத் தயாராய் இருந்தார்!

நினைவுகளுடன் போராடிக் கொண்டே வீட்டு வாசலில் வந்து நின்றார். சத்தம் செய்யாத கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவர், கண்ணில் பட்டது; அங்கே தன் தம்பி முறை கொண்ட ஒருவனுடன் உதடுடன் உதடு சேர்த்து தன்னை முழுவதுமாய் அவனுக்கு அர்ப்பணிக்க எத்தனிக்கும் கற்பகம்! ராஜி, தான் உள்ளே நுழைந்தவுடன் கதவடைத்தது ஏனோ ஞாபகம் வந்தது.

பதட்டப்படாமல் வெளியே வந்தவர், கதவைத் திறந்தால் சத்தம் வருமாரு ஒரு சிறு பலகையை சத்தம் வராமல் வைத்து விட்டு, இந்தச் சுமையையும் தன் வாழ்வு முழுவதும் சுமக்கத் தயாராகி நடந்தார்! குளிர்ந்த காற்று அடித்தது; இதமாக இருந்தது!!

2 Responses
 1. Sivakumar Says:

  Nalla karpanai.

  But jeeranikka mudiyatha kathapathirangal.

  Mattroruvar (Manaivi) tappu sseigirargal enbatharkkaga thaan (Kanavan) tappu seivathu niyayamagi vidathu.

  Paathi padikkum pothe, meedhiyai ennai yugeekka mudinthathu.


 2. Rajesh Says:

  Good one pradeep. Your Hero character is a good imagination. K.Balachander padam partha tirupthi !!!