நான் சென்னையிலிருந்து மதுரை செல்லும் ரயிலைப் பற்றி எழுதப் போவதில்லை. நான் மும்பை எக்ஸ்பிரஸ் பார்த்ததன் விளைவாக இந்தப் பதிவு! இது அதைப் பற்றிய விமர்சனப் பதிவுமல்ல. சமிபகாலங்களில் கமல் நடிக்கும் அனைத்துப் படங்களும் சர்ச்சைக்குள்ளானது நாம் எல்லோரும் அறிந்ததே..அதைப் பற்றிய என் எண்ணங்களும், கேள்விகளும் தான் இந்தப் பதிவு!

படத்திற்கு தமிழில் பெயர் சூட்டுங்கள் என்று சில அரசியல்வாதிகள் கூச்சலிடுவதும், இந்தக் கதைக்கு இப்படித் தான் பெயர் வைக்க முடியும் என்று சினிமாக்காரர்கள் மல்லுக்கு நிற்பதும் இன்று சகஜமாகிவிட்டது. நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன, அதை விட்டு விட்டு, அரசியல்வாதிகள் இதை ஒரு பிரச்சனை என்று பொழுது கழிப்பது சரியாகப் படவில்லை தான்..ஆனால்...

இவர்கள் சொல்வதற்கேற்ப வீம்புக்கென்றே கலைஞர்கள் படத்தின் தலைப்பை தேர்ந்தெடுக்கிறார்களோ என்றும் சில சமயம் தோன்றுகிறது. அரசியலை விட மக்களுக்கு சினிமாவும், சினிமாக் கலைஞர்களையும் பிடிப்பதால் எல்லோரும் சினிமாப் பக்கம் சேர்ந்து விடுகிறார்கள் என்பது என் எண்ணம்.

விருமாண்டி!

சண்டியர் என்ற பெயர் ரவுடியைக் குறிப்பதாகவும், ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்களை வீரமாகக் காட்டி, மற்றவரை கோழையாகச் சித்தரிப்பதாகவும், வன்முறை மேலோங்கி இருப்பதாகவும் பல குற்றங்கள் சாட்டப்பட்டு கமல் ஒரு வழியாக விருமாண்டி என்று மாற்றினார்! இந்தச் சண்டையே அந்தப் படத்திற்குத் தேவையான விளம்பரத்தைத் தேடித் தந்தது. கமல் அந்த அரசியல்வாதிக்கு எதிராகப் பேசும் பொழுது இது தூக்கு தண்டனை தடை செய்ய வேண்டும் என்ற ஒரு நல்ல கருத்தை வலியுருத்தும் படம், இதில் வன்முறை அறவே இல்லை என்று மார்தட்டிச் சொன்னார்! ஆனால் படத்தைப் பார்த்தவர்களுக்குத் தெரிந்துருக்கும் அது எத்தனை பொய் என்று..அந்தப் படத்தில் வன்முறை இல்லை என்றால், கமலுக்கு வன்முறை என்றால் என்னவென்றே தெரியவில்லை என்று அர்த்தம்! அது எனக்குப் பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது. நான் பெரிய கமல் ரசிகனாக இருந்தாலும், என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை. எந்த ஒரு பத்திரிக்கை விமர்சனத்திலும் படத்தில் வன்முறை அதிகம் என்று சொன்னதாய் எனக்கு ஞாபகமில்லை!! தேவர் மகனை விட, ஹேராமை விட இதில் தான் எனக்கு வன்முறை அதிகமாய் பட்டது..

மும்பை எக்ஸ்பிரஸ்!

இப்பொழுது இந்தப் படம்! கமல் வீம்பாக இது கதைக்கேற்ற பெயர், இதை மாற்ற முடியாது என்று படத்தை வெளியிட்டு அதுவும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் என் கேள்வி..

ஒரு குழந்தையைக் கடத்தும் கதைக்கு ஏன் அவர் மும்பையை தேர்ந்தெடுக்க வேண்டும்? அந்தக் கதையை சென்னையில் சொல்ல முடியாதா? கேட்டால், அந்தக் காரெக்டரின் பெயர் மும்பை எக்ஸ்பிரஸாம், ஏன் சென்னையில் இந்தக் காரெக்டர் இருந்து அதற்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ், பாண்டியன் விரைவுவண்டி என்று வைத்தால் என்ன? முதலில் அந்தக் காரெக்டரின் பெயர் மும்பை எக்ஸ்பிரஸ் என்று ஏன் வந்தது? அதைப் பற்றி கமல் படத்தில் ஒன்றும் சொல்லவில்லையே..

என் கேள்வி படத்திற்கு தமிழில் தலைப்பு வைப்பதைப் பற்றி அல்ல, அந்தப் படத்தை மும்பையில் தான் எடுக்க முடியும் என்று அவர் ஏன் தீர்மானித்தார் என்று எனக்கு விளங்கவில்லை..சென்ற வார விகடனில் சுஜாதா அவர்கள் இந்தப் படத்திற்கு சரியான தலைப்பே வைக்கப் பட்டிருக்கிறது என்று சான்றிதழ் தருகிறார்.

என்ன தான் சினிமா என்ற மாய உலகில் நாம் மயங்கிக் கிடந்தாலும், கூச்சலிடும் அரசியல்வாதிகளை விடுங்கள், நியாயம் என்று ஒன்று இருக்கிறதே..ஒரு justification வேண்டாம்?

என்னடா இவன், ரஜினியையும் குறை சொல்றான், கமலையும் குறை சொல்றான், இவன் உண்மையில் யார் ரசிகன் என்றால்; உண்மையில் நான் சினிமாவின் ரசிகன்!

13 Responses
 1. Anonymous Says:

  Every one has the write to put the name for the film in tamil or greek!(dont ask me why you write greek) that's their business not yours or someone els.

  It doesn't mean that Im a fan of him.


 2. Anonymous Says:

  Point is Kamal always wants the finance provided for his Hindi versions - which he cannot get through financiers in tamil. So he ends up making trashes like this, Abhay (aalavandaan) to please his hindi financiers but Hindi audience does not accept Kamal. So his movies never run beyond A center. When he makes Virumandi or Avvai shanmugi or PKS with nativity of tamilnadu those movies run well than these half baked hindi-tamil compromise films. Same fate happened for ManiR's Uyire. He immediately choose to make tamil native Alaipayuthe which was a hit. He then made Ayutha ezuthu to suit tamil locales while made hindi version differently which flopped.

  Kamal ennikku tamil audience-kku padam edukkiraaro annikku thaan padam oodum.


 3. Anonymous Says:

  ‘‘என்னய்யா ராமதாஸ் தப்பா பேசுறார்? ‘ஆங்கிலத்தில் தலைப்பு வைக்காதீங்க’ன்னு சொல்றார். அதில் என்னய்யா தப்பு? ஏதோ ஒன்றிரண்டு வச்சா உறுத்தாது. எல்லாம் ஆங்கிலத்தில் வைக்க நீங்கள் இலண்டனில் பிறந்தவங்களா? நீங்க தமிழன்தானே? ஒருத்தன் மூக்கறுத்தால் எல்லோரும் அறுக்கணுமா? இங்கிலீஷ்காரன் தமிழ்ப் பெயர் வைக்கிறானா? ராமதாஸ் அரசியல்வாதி என்கிறதில் ஆயிரம் கருத்து வேறுபாடு இருக்கு. அவரையே பெயரை மாத்திக்கச் சொல்றாங்க. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் எத்தனை நாள் கழிச்சு நாயக்கரை விட்டார்? காமராஜ் நாடார்னுதானே ரொம்ப காலம் அவர் பெயர் இருந்தது! ராமதாஸ் புல்லைப் புடுங்கினால் உங்க கண்ணுக்கு நெல்லைப் புடுங்கிற மாதிரி இருக்கு. கேட்டால் வியாபாரம்னு சொல்றாங்க. வியாபார உத்திக்காக எதையும் நீங்க பண்ணமுடியுமா? எங்க அம்மாவை நான் விக்க முடியுமா? வயிறு பசி, போராட முடியலைன்னு அம்மாவை வித்துட்டுப் போயிடுவீங்களா? அது மாதிரிதான். மொழி உன் தாய்தான். அதுதான் உன்னைக் காப்பாத்தும். அம்மா செத்துப் போயிட்டா நீ அனாதை. மொழி இல்லாட்டி முகம் கிடையாது. விலாசம் கிடையாது. அதனால் தயவுசெய்து தாய்மீது கை வைக்காதீங்க.’’
  -பாரதிராஜா - குமுதம் (02/02/05)


 4. oh! I totally forgot about the hindi version of Mumbai express! I think Bollywood mostly doesn't recognize our people, irunthalum namma pasanga angeye poi vizhuraanga..

  ya anyonymous well said, kamal should give good films to tamizh audience!!


 5. ஒரு படத்தைத் தமிழிலும் இந்தியிலும் எடுக்கும்போது பொருளாதாரக் காரணங்களுக்காக ஒரே செட்டை உபயோகிப்பார்கள். இதில் என்னத் தவறு? மரணக் கிணறு கலைஞனுக்கு மும்பை எக்ஸ்பிரெஸ் என்றுப் பெயர் வைத்துள்ளனர். அவனைப் பற்றிய கதைக்கு அந்தப் பெயர்தான் வைக்க முடியும். கோடிக் கணக்கில் செலவு செய்து எடுக்கப்படும் படங்களுக்குப் பெயர் வைக்கும் உரிமை ஒரு அரசியல் வியாதிக்கு நிச்சயம் கிடையாது. திருமா மூக்கு உடைபட்டதுதான் மிச்சம். மாலடிமை பைய நழுவி விட்டார். கீரிப்பட்டியில் பற்றி எரிகிறது அதைப் பற்றிக் கவலைப்படாது இங்கு நீட்டி முழக்கிய திருமாவுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.
  அன்புடன்,
  டோண்டு ராகவன்


 6. ஆங்கிலத்தில் பின்னூட்டம் கொடுப்பவர்களைப் பற்றி என்ன கூறுவது? சுரதா தமிழ் எழுத்து மாற்றியின் உரலைத் தருகிறேன். அதை உங்கள் ஃபேவரைட்டில் போட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் முதலில் திருந்துங்கள். கமலுக்கு அப்புறம் உபதேசம் செய்யலாம்.
  http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
  அன்புடன்,
  டோண்டு ராகவன்


 7. டோண்டு ஐயா அவர்களே!

  தங்களுடைய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. மும்பை எக்ஸ்பிரஸ் இந்தியிலும் எடுத்ததால், இந்தப் பெயர் வைத்தது சரி தான்..நானும் அதைத் தானே சொல்கிறேன், நாட்டில் ஆயிரம் பிரச்சனை இருக்கும்போது, பெயர் வைப்பதை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்று..

  கமலுக்கு உபதேசம் செய்யும் அளவிற்கு எனக்கு அறிவும் போதாது, வயதும் கிடையாது..

  உரலைக் கொடுத்ததற்கு நன்றி!

  பிரதீப்


 8. This comment has been removed by a blog administrator.

 9. Anonymous Says:

  kamal ku eppaavaachum oru hit kudukkanumnaa madhurai saarndha makkalin vaazhvayum perumbaalum avargalin saathi chandai allathu avargaladhu kova gunam patriyum padam eduthudrar.avarum vera madhiri padam eduthu thaan paakuraar, aanaa makkal perusaa rasikkaradhilla.thevar magan,virumaandi pondra padangal kannai vitru chithiram vaangiya kathai thaan.rendu padathayum paathuttu thelivu adanchavangala vida thimir adanchavangathaan adhigam.madhuraila andha padangal odunadha vida paamara makkaloda raththam thaan adhigamaa odichu.arasiyal innikku thozhil aayiduchu.adha makkalukum pazhagi pochu.pakkuvam vilaki pochu.arasiyal vaathigal, nalladhu kettadhu edhilum serthi illai.kamal epdi vetri kulir kaaya saatheeya vanmurai theeya eriya vidraro adhu pola thaan avanga cinemaangra kolliya arasiyal theeyila poduraanga.idha pathi namakkullaye mattum thaan pesikka mudiyudhu.adhuvum indha blog padikkara silar kullaye mudinchududhu.vera edhaachum idea irukka pradeep?


 10. Anonymous Says:

  ஒன்னு பண்ணலாம், நான் வேணா சினிமால இறங்கி நல்ல படங்களைத் தர முயற்சிக்கலாம்! என்ன சொல்றீங்க?

  -பிரதீப்


 11. ப்ரதீப்,
  மும்பை எக்ஸ்ப்ரெஸ் படத்தோட கதை ஏன் மும்பையில நடக்குற மாதிரி எடுக்கணும்? கதா நாயகன் பேரு ஏன் 'மும்பை எக்ஸ்ப்ரெஸ்'-ன்னு வைக்கணும்? இதெல்லாம் உங்க கேள்விகள் இல்லையா?
  எனக்கு படம் அவ்வளவா பிடிக்கலைன்னாலும், படத்துல நிறைய தப்புகள் இருந்தாலும், இந்தக் கேள்விகளுக்கு சரியான, நியாயமான பதில் இருக்குன்னு நினைக்கிறேன்.
  இது வெறும் காமெடிப் படம்தான். ஆனா, ஒரு கோடி குடுக்கத் தயாரா இருக்கிற ஆளும், அவ்வளவு தொகையைக் கேட்கக் கூடத் தோணாத கடத்தல்காரனும் இருக்கிற மாதிரி, ஒரு ஏழை-பணக்காரன் இடைவெளி நிறைய இருக்கிற இடம் மும்பை அப்படிங்கறது கமல் தரப்பு வாதம். படத்துல எதையும் வெளிப்படையாச் சொல்லலைங்கிறது ஒரு குறையா இருக்கலாம். கதைக்கருவை எடுத்துக்கிட்டு நகைச்சுவைக்கான விஷயங்களை, காட்சிகளைச் சேர்க்கும்போது கருவிலிருந்த உணர்ச்சிகள் காணாமப் போயிருச்சு அப்படிங்கிறது என்னோட கருத்து.
  ஒரு காவல் துறை அதிகாரி, சின்ன வீடு வச்சுக்கிறது, தன்னோட பேரு கெடாம இருக்க ஒரு கோடி குடுக்கத் தயாரா இருக்கிறது, அப்புறம் அவளை ஒதுக்க வெறும் பதினஞ்சு லட்சம் கொடுக்கிறது இப்படி இருக்க, மரணக் கிணத்துல சுத்திச் சுத்தி வண்டி ஓட்டுற ஒருத்தன், தன்னோட வாழ்க்கைப் பாதை நேரான பாதையில போகணும்னு நினைக்கிறது. இப்படி நிறைய முரண்பாடுகளைக் காட்டணும்னு நினைச்சிருக்காரு கமல். வழியிலே தவறி விழுந்த விஷயங்கள் நிறைய.
  அடிக்கடி விமானம் பறந்து போறதைக் காட்டறது கூட அதுக்கான ஒரு ஏற்பாடுதான்.
  கமல் தவறுகள் இல்லாத ஒரு படம் குடுப்பாருன்னு ரொம்ப நாளாக் காத்துக்கிட்டு இருக்கேன். அன்பே சிவம் கொஞ்சம் கிட்ட வந்துச்சு. மும்பை எக்ஸ்ப்ரெஸ்-ல நிறையத் தவறுகள். அந்த 'finesse' 'delicacy' இல்லாம 'raw'வா அரை வேக்காடா இருப்பதுதான் தப்பு. படத்தோட பேர்ல எந்தத் தப்பும் இல்ல. இது என்னோட கருத்து.


 12. Anonymous Says:

  வித்யாசாகரன்,

  நீங்கள் சொல்வதை நான் முற்றிலும் ஒப்புக் கொள்கிறேன். கமல் இந்தப் படத்தைப் பற்றி பேட்டியில் சொல்லும்போதெல்லாம், பெரிய பெரிய பணக்காரர்கள் இருப்பதும், அதிகமான சேரி வாழ் மக்கள் இருப்பதும் மும்பையில் தான் என்று பல முறை சொன்னார். நானும் அதை படத்தில் தேடிக் கொண்டிருந்தேன்..அது இந்த அளவுக்கு ஒளிந்து கொண்டிருக்கும் என்று நான் நினைக்கவில்லை..

  இப்பொது எனக்கு புரிந்து விட்டது. புரிய வைத்த உங்களுக்கு என் நன்றிகள்!

  -பிரதீப்


 13. Sivakumar Says:

  'மும்பை எக்ஸ்பிரஸ்' பற்றி ப்ரதீப் எழுதப்போய் அதைப்பற்றி இத்தனை பேர் இத்தனை விதமாக அதன் பெயரைப்பற்றி பேசிக்கொள்ளும் அளவுக்கு அதில் பெரிதாக ஒன்றுமில்லை என்பது என் கருத்து.

  'மும்பை எக்ஸ்பிரஸ்' என்று ஏன் முதலில் பெயர் வைக்கவேண்டும், அதை ஏன் மும்பையில் எடுக்க வேண்டும் என்பதற்கான போதுமான விளக்கங்கள் இங்கே பலரும் கொடுத்துவிட்டார்கள். என்னைப் பொருத்தவரை ஒவ்வொருவர் எடுக்கும் படம் அவர்களின் குழந்தைமாதிரி. அது கமலுக்கு அதிகமாகவே பொருந்தும். ப்ரதீப் என்று ஏன் பெயர் வைக்க வேண்டும், ஏன் மாடசாமி முனுசாமி இப்படி எந்த பெயர் வேண்டுமானாலும் வைத்திருக்கலாமே! அது அவனின் பெற்றோரின் விருப்பம். அதற்கு நாம் எதுவும் சொல்ல முடியாது.

  ஆங்கிலத்தில் ஏன் வைக்க வேண்டும், ஏன் தமிழ் படத்திற்கு தமிழில் வைக்ககூடாது என்று பாரதிராஜா அவர்கள் கேட்டிருந்தார். நல்ல கேள்வி தான். தமிழ் நாட்டில் மக்கள் தன் பிள்ளைகளுக்கு தமிழ் பேரையே வைத்து, பெப்ஸி, கோக்கோ கோலாவிற்கு பதிலாக மோர் மட்டுமே சாப்பிட்டு, pizza-விற்கு பதிலாக பழைய கஞ்சி குடித்து, peter england க்கு பதிலாக கைத்தறி ஆடை போட்டுக் கொள்ளவார்கள் என்றால் அந்த கேள்வியை கேட்கலாம். அன்னிய பொருட்களை இங்கே அடிக்கல் நாட்ட அனுமதித்துவிட்டு இங்கே மோர் விற்கவில்லை, கைத்தறி வியாபாரம் முடங்கிக் கொண்டிருக்கிறது, தமிழை மறந்துவிடாதீர்கள் என்று சொல்லி வருத்தப்படுவதில் அர்த்தமில்லை. ஆங்கிலம் என்பது இன்று நம்மோடு ஒன்றுடன் ஒன்றாக கலந்து விட்ட மொழியாகிவிட்டது. ஏன், நம்மில் பல பேருக்கு இன்னும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் கூட தெரியாது. நம் நாட்டிலேயே இருக்கும் நமது அண்டை மாநிலத்திற்கு சென்றால் நம்மில் 90% பேர் தொடர்பு மொழியாக உபயோகிப்பது, ஆங்கிலம் தான். இதை யாராவது மறுக்க முடியுமா? ஏன் நாம் தெலுங்கு, கன்னடம், மலையாளம் படிப்பதில்லை. நம் நாட்டு மொழிகள் தானே அவை. அப்பொழுது மட்டும் ஆங்கிலம் வேண்டும், படத்திற்கு பெயர் வைத்தால் மட்டும் கூடாது என்று சொல்வது நமக்கு ஒரு விதி அடுத்தவனுக்கு ஒரு விதி என்பது போல உள்ளது. ஹிந்தி நம் நாட்டின் தேசிய மொழி தானே, ஏன் அதை எல்லோரும் படிப்பதில்லை. மற்ற மொழிகளை படிப்பதில் தாய் மொழி மறந்து விடும் என்று சொல்வதில் அர்த்தமில்லை. தமிழ் படத்திற்கு தமிழில் பெயர் வைத்தால் மட்டும் தமிழ் வாழும் என்று சொல்பவர்கள் முதலில் convent பள்ளியை அனுமதிருக்க கூடாது, english medium அனுமதிருக்க கூடாது. pizza hut-யையும், pepsi-யையும் அனுமதிருக்க கூடாது. தமிழ் படத்திற்கு தமிழ் பெயர் தான் வைக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நம் நாட்டில் எத்தனையோ பெரிய பிரச்சனைகள் இருக்கும் போது இந்த பெயர் வைக்கும் விஷயத்திற்காக போராட்டம் செய்யப்படும் என்று கூறி அதற்கு தமிழக முதல்வர் தலையிட்டு தீர்க்கும் அளவுக்கு பெரிய பிரச்சனையா என்பது எனக்கு புரியவில்லை. தமிழ் படத்திற்கு தமிழில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று கூறுவது வேறு, அழகான தமிழில் பெயர் வைத்தால் நன்றாக இருக்கும் என்று சொல்வது வேறு. என்னைப் பொறுத்தவரை தமிழில் பெயர் வைத்தால் நன்றாத்தான் இருக்கும் ஆனால் ஆங்கிலத்திலோ பிரஞ்சிலோ பெயர் வைத்தால் தவறு என்று கூற முடியாது.

  படத்தைப்பற்றி.... கூறவேண்டுமானால், மும்பை எக்ஸ்பிரஸை digital-ல் முதன் முதலாக முயற்சி செய்த கமலை பாராட்டவேண்டும். புதிதான விஷயத்தை முயற்சி செய்வதில் கமலுக்கு ஒரு தனி பிரியம் தான். படத்தில் திரைக்கதை சாதரணமாக இருந்தாலும் அதை கோர்த்த விதம் நன்று. கயிற்றில் கமல் தொங்கி கொண்டிருக்கும் போது, குழந்தைகள் பாட்டின் ராகத்தை மாற்றி பாடுவதாக அமைக்கப்பட்டிருக்கும் காட்சி ரசிக்க முடிந்தது. கமலின் வசனங்கள் கிரேஸி மோகன் அளவுக்கு இல்லை என்றாலும், இதே கமல் தான் குருதிப்புனல் படத்திற்கு வசனம் எழுதியிருந்தார் என்பதை நினைத்தால் பிரமிப்பாக தான் உள்ளது. மொத்தத்தில் மும்பை எக்ஸ்பிரஸ் derail ஆகவில்லை.

  சிவகுமார்.