ஒரு ஊரில் பல சிதம்பரங்கள் இருந்தனர். இந்தக் கதை ஒரு சிதம்பரத்தைப் பற்றியது. அதனால் மற்ற அனைவரையும் ஓரம் கட்டி விடலாம். நம் சிதம்பரம் ரொம்ப சாந்தமான பேர்வழி. இந்த ஐப்பசி வந்தால் 40 முடிஞ்சுடும். அவருடைய தர்மபத்தினி சீதாதேவி. சிதம்பரத்தையும் சீதா தேவியையும் முடிச்சு போட்டதுக்காக நாம ஏன் வருத்தப்படனும்? ஹரியும் சிவனும் ஒன்னுன்னா, சீதாவும் பார்வதியும் ஒன்னு தானே? அதான் அவங்க ரெண்டு பேரும் சர்வ சங்கல்பங்களோட செளக்கியமா இருக்காளே, அப்புறம் என்ன? அவருடைய கல்யாணத்தின் போது, 16ம் பெத்து பெறுவாழ்வு வாழனும்னு சொன்னதை அரைகுறையா கேட்டாரோ என்னமோ, 8 பிள்ளைகளோட நிறுத்திட்டார்! அவருக்கு கிடைக்கும் சொல்ப சம்பளத்தை வைத்து இதை அதில் போட்டு, அதை இதில் போட்டு அவர்கள் குடும்பம் நடத்தும் அழகே தனி தான்..

நாள் முழுவதும் அவர் யாருடனும் அதிகம் பேசுவதில்லை. காதில் ரகசியம் சொல்வது போல் தான் அவரிடம் எல்லோரும் பேசுவார்கள். இவரும் அப்படித் தான் பதில் சொல்வார். அவருடைய வேலை அப்படி.

அன்று வெள்ளிக்கிழமை. வீடெங்கும் தேடியும் ஒரு குழந்தையையும் காணோம். என்னடி? ஒருத்தரையும் காணோம், வழியிலே போறவாளுக்கு தத்து கொடுத்துட்டியா என்ன? அதனால ஒன்னும் கெட்டுப் போகலை; நீ மாவை அப்படியே போட்டுட்டு வா, 1 குழந்தைக்கு ஏற்பாடு பண்ணி புடலாம் என்றார் நக்கலாய்.

இப்படி பேசிப் பேசியே ஒரு காம்பவுண்ட் பூரா சேத்தா இருக்க வேண்டிய தொகை நம்ம வீட்ல மட்டும் வாழுது. நேத்தைக்கு இப்படித் தான், ஏம்மா இங்கே நீங்க டியுஷன் ஏதுனா சொல்லித் தரேளா? என் புள்ளை படிக்கவே மாட்டேங்கிறான் என்று ஒரு பொம்மனாட்டி கேட்டுட்டா? அடக் கருமமே, நீங்க இந்தத் தெருவுக்குப் புதுசா? இதெல்லாம் நான் பெத்ததுகள்மா என்று சொல்லும்போது எனக்கு வெக்கம் புடுங்கித் தின்றது..உங்களுக்கென்ன? என்றார் சீதா தேவி.

சரி, சரி கோவ்சுக்காதே, எங்கே கொழந்தைகள்?இன்னைக்கு வெள்ளிக்கிழமைன்னா, பக்கத்து வீட்ல ஒலியும் ஒளியும் பார்க்க போயிருப்பா! இப்போ தான் நான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன், உங்களுக்கு பொருக்காதே..பிள்ளைகளா அது? பிசாசுகள் என்னா கத்து கத்துறதுகள்..உங்களுக்கென்ன நீங்க காலையில போனா ராத்திரி தான் வர்றேள், இதுகளை கட்டிண்டு மாரடிக்கிறது நான் தானே? கொழந்தைகள்னா அப்படி தாண்டி இருப்பா..குழந்தைச் சத்தம் இல்லாத வீடு என்ன வீடுன்னேன்? பேசிக் கொண்டிருந்தவருக்கு திடீரென்று தன் வேலை ஞாபகம் வந்தது..

மெல்லிய குரலில் ஒருவர்:

சார், சித்திரப் பாவை எங்கே இருக்கு?
2வது கப்போட்ல 3வது ராக்ல இருக்கும் பாருங்கோ! அகிலனோடது எல்லாம் அங்கே தான் இருக்கும்.

யாரோ இரண்டு பேரை பாத்து மிரட்றார், அதுவும் மெல்லிய குரலில்! என்ன இது லைப்ரேரியா இல்லை உங்க வீடா? இப்படி எல்லாம் சத்தம் போடக் கூடாது இங்கே! படிக்கிறதுன்னா இங்கே இருங்கோ இல்லை தயவுசெய்து இடத்தை காலி பண்ணுங்கோ!

அப்பா என்று 8 குழந்தைகளும் ஒரே ராகத்தில், அது அவரைப் பொறுத்தவரை ராகம், நம்மைப் பொருத்தவரை காட்டுக் கத்தல் கத்திக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தன..அவருக்கு காதில் தேன் பாய்ந்தது!

3 Responses
 1. Sivakumar Says:

  முக்கால் டஜனுக்கு ஒன்னு கொறச்சலா பெத்தாலும் எதுவும் சளைக்கவில்லை போ!


 2. What a Historical story..!?
  I think this story must be related to the period of 50 to 60 years.

  The way of writting also resemble the style followed by the very old story writters.

  Good... try to write like this.


 3. சிவக்குமார்

  என்ன சொல்றீங்க? புரியலையே..

  சிறகுகள்

  ஒலியும் ஒளியும் எல்லாம் பாத்து சொல்றீங்களா? நன்றி