அப்படி இப்படி என்று ஒரு மாதம் ஓடி விட்டது மழை நின்று! என் வலைப்பதிவு மழை இல்லா பயிர் போல் தரிசாய் கிடக்கிறது..

இதோ மறுபடியும்...

பெய்யெனப் பெய்யும் மழை!

ஒரு சிறுகதை பெய்வதாய் உத்தேசம் இன்று!

திருக்கடையூரிலிருந்து கடலூர் சென்று கொண்டிருந்தேன். ஞாயிற்றுக் கிழமை அதுவும் பண்டிகைக் காலம் ஆதலால் பேருந்தின் ஏகத்திற்குக்கூட்டம். அந்தக் கூட்டத்தில் நான் நம்ப முடியாத அளவுக்கு ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஆமாம். எனக்கு அடுத்த நிறுத்தத்தில் உட்கார இடம் கிடைத்தது. பேருந்தின் படியின் பக்கத்தில் இருக்கும் இடம். அப்பாடா..கூட்ட நெரிசலான ஒரு பேருந்தில் இடம் கிடைத்து விட்டால் தான் மனதுக்கு என்ன ஒரு நிம்மதி..ஏதொ 5 பெண்களை கல்யாணம் பண்ணிக் கொடுத்த திருப்தி..

என் பின்னால் படியில் சிலர் நின்று கொண்டு வந்தார்கள். நான் பேருந்தில் ஏறியதிலிருந்து ஒருவன் நடத்துனருடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். அவன் தர்க்கம் பண்ணிக் கொண்டிருந்தான் என்று சொல்லலாம். உட்கார இடம் கிடைக்காமல் நான் அசதியாய் இருந்ததால் அவன் பேச்சில் அதிக கவனம் செல்லவில்லை..இப்பொழுது இடம் கிடைத்தவுடன் தான் கவனித்தேன். இன்னும் அவன் நடத்துனரிடம் பேசிக் கொண்டிருந்தான். மன்னிக்கவும், தர்க்கம் பண்ணிக் கொண்டிருந்தான். லேசாய் திரும்பிப் பார்த்தேன். அவன் கண்களும், பற்களும் நல்ல கலர். இன்று தான் சவரக் கடைக்கு போய் வந்திருப்பான் போலும். தாடியை மலுங்க எடுத்து ஒரு அழகான கிராப் தலையுடன் இருந்தான். பச்சைக் கலர் கட்டம் போட்ட சட்டையும், வெள்ளை வேட்டியும் அணிந்திருந்தானா என்று சரியாக சொல்ல முடியவில்லை..அப்படித் தான் என்று வைத்துக் கொள்ளுங்கள்! குடியா முழுகி விடும்..
நடத்துனர் அவனின் பக்கத்தில் நின்றவரிடம் சீட்டு? என்றான்! அதற்கு அவர் முன்னால் எடுப்பார்கள் என்றான். அவர் போய் விட்டார். அதுவரை நடத்துனரிடம் புலம்பிக் கொண்டிருந்தவன், இப்போது இவன் பக்கம் திரும்பி, என்ன அக்கா கூட வந்துருக்கா? முன்னாடி நிக்குதாக்கும்? ஏன்டா நீ ஆமபளை தானே நீ சீட்டு எடுக்காம பொட்டச்சிய சீட்டு எடுக்கச் சொல்றே என்றான்! என் கண்கள் ஜன்னலின் வழி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க என் காதுகள் அவனைப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தன. அந்தக் கேள்வியில் நான் தடுமாறித் தான் போனேன்..

அடப் பாவிகளா பெண்கள் சீட்டு எடுப்பது கூட இவர்களுக்கு எப்படி கெளரவக் குறைச்சல் ஆகிறது என்று வியந்தேன். அதற்கு அந்த நண்பன் பதில் சொல்லவில்லை..
என்னடா நீ சீட்டு எடு, ஆம்பளை தானே நீ, வேட்டி எல்லாம் கட்டிட்டு வந்துருக்கே..சீட்டு எடு, இல்லை பொட்டச்சியா நீ? பொடவை கட்டிக்க..என்று அவனை சீண்டிக் கொண்டே இருந்தான். என்னடா இந்த ஒரு சின்ன விஷயத்திற்காக இவன் ஏன் இந்த அளவுக்குப் பேசுகிறான்..இவன் குடித்து விட்டு வந்திருக்கிறானோ என்று எனக்கு அப்போது தான் லேசாய் உரைத்தது..
அவன் அந்த நண்பனை விடவில்லை..உன்னை பத்தி அந்த சிங்கப்பூர்காரன் போன் போட்டு சொல்றான். நீ தான் சாமி சாமின்னு அலயிறே, ஆயிரம் ஆயிரமா செலவலிக்கிறே..என்னைப் பாரு நான் சாமியே இல்லைன்றேன், ஆனா நானும் சாமி கும்பிடுவேன்..மன சாந்திக்காக! நீ எப்படி இருக்க? நான் எப்படி இருக்கேன்?

எனக்கு புரியவேயில்லை..சாமி இல்லைன்றான்..ஆனா கும்பிட்றான் என்ன தான் சொல்றான்!
அந்த நண்பர் அய்யோ நீ சும்ம இரப்பா என்னை குழப்பாதே என்றான் அப்பாவியாய்..அவனுக்கு அவன் எங்கே தன்னுடைய எல்லா விஷயத்தையும் போட்டு உடைத்து விடுவானோ என்று பயம். அவனா சும்ம இருப்பான்? மது அருந்தியவுடன் மனிதன் சிறு குழந்தையாகி விடுகிறான் போலும். அவனுக்கு கலாச்சாரம், நாகரீகம் எதுவுமே தெரிவதில்லை..ஒரு தியான மண்டபத்தில் எவ்வளவு தான் ஒரு தாய் தன் குழந்தையை அடக்க நினைத்தாலும் ம்மா..ம்மா..தா..யா..என்று குழந்தைகள் உளறுவதைப் போல் அந்த நண்பன் என்ன தான் கெஞ்சினாலும் அவன் அவனை திட்டிக் கொண்டே தான் இருந்தான்.
அடடா, ஸ்டாப் வரட்டும் நான் வேணா முன்னாடி போய் ஏறிக்கிறேன்..ஆளை விடு என்றான் அவன் நிம்மதி இழந்து..அவன் அதற்கும் வம்பிழுத்தான்..அய்யோ இப்பொ குதிக்கத் தான் போறேன் என்றான் அவன் பொறுமை இழந்து..குதி..குதிப்பா..நீ தான் வீரனாச்சே! சாமி உன்னைக் காப்பத்துவாரு, குதி என்றான் பதிலுக்கு..

இதற்கு நடுவில் இன்னொரு குடிகார நண்பன் அட, அவனை விடப்பா சத்த நேரம் என்றான்..நாகரீகம் தெரிந்த குடிகாரன் போலும். ஒரு வழியாய் ஒரு நிறுத்தம் வந்தது தான் தாமதம் அந்த ஆள் ஓடியே விட்டான். அவன் போய் விட்டான் என்று கூட தெரியாமல் இவர்கள் இருவரும் வேறு விஷயங்களைப் பற்றி கலந்தாலோசிக்கத் தொடங்கினர்! ஒரு இடம் யாரும் உட்காராமல் காலியாய் இருந்தது போலும், அதில் யாரோ வாந்தி எடுத்து வைத்திருந்ததனர் போலும். இவர்களுக்குத் தான் அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லையே? அந்த நிரு நண்பர்களில் ஒருவன் அதில் உட்கார்ந்து கொண்டிருந்தான் போலும். நான் அவர்களைப் பின்னால் திரும்பி பார்க்கததால் தான் இந்தப் போலும்..

அந்த நிறுத்தத்தில் ஒரு 3 பெண்கள் ஏறினர். பெண்களைக் கண்டவுடன் அந்தக் குடிகார நண்பர் எழுந்து அவர்களுக்கு இடம் தந்தான். [நாகரீகம் தெரிந்த நண்பர்]. அதில் ஒரு பெண் உட்கார்ந்து கொண்டாள். வாந்தியின் நாற்றம் தாங்காமல் கைக்குட்டையால் தன் மூக்கை மூடி உட்கார்ந்திருந்தாள். எழுந்து இடம் கொடுத்தவன் அவள் பக்கத்தில் நின்றான். கொஞ்ச தூரம் சென்றதும் அந்தப் பெண்..இந்தாங்க, கொஞ்சம் தள்ளி நில்லுங்க..என்றாள்.
நாகரீகம் தெரிந்திருந்தாலும் அது சுர்ரென்றது அவனுக்கு..ஏம்மா பொம்பளையாச்சேன்னு நான் உட்கார்ந்திருந்தா சீட்டையும் கொடுத்தா இப்போ தள்ளி நில்லு தள்ளி நில்லுன்றியே..இதுக்கு மேல எங்கம்மா தள்ளி நிக்கிறது? என்றான். நம் முதல் குடிகார நண்பனும் அந்தச் சண்டையில் கலந்து கொண்டான். உங்களுக்காக தானே சீட்டு விட்டு கொடுத்து எழுந்து நின்னான்..திஸ் இஸ் ராங் என்றான்..மது அறுந்தி இருக்காவிட்டால் இவன் ஆங்கிலத்தில் பேசக் கூடியவனா? மது அருந்தியதும் இவர்களுக்கு எப்படி ஆங்கிலம் வருகிறது என்று நான் வியந்தேன். ஒரு வேளை ஆங்கில சரக்கு அடித்திருப்பானோ என்றும் நினைத்தேன்!

அதற்குள் அந்த இடம் சந்தக்கடை ஆகி இருந்தது..நடத்துனர் வந்து அவர்களின் தாயை திட்டியதும் அவர்கள் அமைதி ஆனார்கள். அந்தப் பெண்ணுக்கும் விளங்கிவிட்டது அவர்கள் எந்த நிலமையில் இருக்கிறார்கள் என்று. அவளும் அந்த இடத்தை தியாகம் செய்து விட்டு எழுந்து போய் விட்டாள்!

அடுத்த நிறுத்தத்தில் அந்த இரு அறிஞர்களும் இறங்கிக் கொண்டனர். பேருந்திலிருந்து அனைவரும் இறங்கிக் கொண்டது போல் ஒரு அமைதி..பேருந்து அந்த நிறுத்தத்திலிருந்து கிளம்பியதும் அவர்கள் இறங்கிக் கொண்டார்களா என்று ஒரு முறைக்கு இரு முறை ஊர்ஜிதம் செய்து கொண்டு என் பக்கத்தில் இருப்பவர் ஆரம்பித்தார்!
இவங்களை எல்லாம் ஏன் சார் பஸ்ல ஏத்துறாங்க..பப்ளிக் என்ன கஷ்டப் படுது..நம்ம நாடு இப்படி இருக்குறதுக்கு காரணமே இது தான் சார்..நானும் ஒரு புன்னகை பூத்து வைத்தேன்..அவர்க்கு நான் பிடி கொடுக்காம இருக்கவே மற்றவரிடம் திரும்பினார்.
இப்படி தான் சார் எங்க ஊர்ல என்று ஒரு கதையை ஆரம்பித்தார்..பேருந்தில் ஆஙாங்கே ஏகப்பட்ட சலசலப்பு..இத்தனை நேரம் எங்கே நாம் வாய் திறந்தால் அவனிடம் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் அடக்கி வைத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள் போலும்..இப்பொழுது எல்லோரும் தங்களால் முடிந்த வரை அவரவர் பக்கத்தில் இருப்பவரிடம் தெளிவாய் உளறிக் கொண்டிருந்தனர்!!

அந்தக் குடிகாரர்களுக்கும் இந்தக் குடிமக்களுக்கும் நிறைய வித்தியாசம் இல்லை என்று என் மனதிற்குப் பட்டது...

4 Responses
  1. ---
    அந்தக் குடிகாரர்களுக்கும் இந்தக் குடிமக்களுக்கும் நிறைய வித்தியாசம் இல்லை என்று என் மனதிற்குப் பட்டது...
    -----

    :)


  2. Anonymous Says:

    சரளமான நடை. சுவாரஸ்யமாயிருந்தது. முடிக்கும் இடத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. Keep the good work up!

    - சத்யராஜ்குமார்


  3. mathy, Sathya and J Sri..

    Thanks for your comments..I also thought of putting some ularals of that makkal..but i thought kathai is izhuthifying. that's y i stopped there.

    I will take care of these things in my next story! :-)

    ungalai pondra vashishtargal vaayal paarattapadugirena illaya paarungal..

    - pradeep


  4. Sivakumar Says:

    Nalla narration. Enakku terinji kuzhanthaikitta kooda solra mathiri sonna kettuduvanga. But kudikaranga no way. Kuzhanthayaiyum Kudigarangalayum oppittathil enakku unadpadu illai.

    Kadhaiyin flow is very good.