முக்கியமான ஒருவரை மறந்து விட்டேன். ஓவியா! கமல் படம் என்றது ஆசையாய் வந்திருப்பார் என்று நினைக்கிறேன். ஒரு துணை நடிகை கூட நடிக்க ஒப்புக் கொள்ளாத ரோல். பாவம் அவர். நான் இந்தப் பதிவை போட்ட பிறகு இவரின் ஞாபகம் வந்தது, அதனால் மறுபடியும் பதிகிறேன்.
படம் பார்த்து விட்டு கடைசியில் எனக்குத் தோன்றியது, மன்மதன் அம்பு போன்ற படங்களை எடுக்க ஆயிரம் பேர் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். ஒரு உலக நாயகனாய் இருந்து கொண்டு, ஒரு மணி நேரத்துக்குள் ஒன்பது கதைகள் சொல்லும் தன்மை கொண்ட கமலஹாசன் உலகத் தரமாய் ஒரு தமிழ் படத்தை தருவது எப்போது?
என்று கேட்டேன்.
தூங்கி கொண்டிருந்தார்கள் :-)
போன வார விடுமுறையில் (இந்த வாரம் என்ன செய்தேன் என்று அடுத்த வாரம் வரும், ஓகே? நான் ரொம்ப பிசி....) நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்கை வாக் மாலுக்குச் சென்றிருந்தேன். நுங்கம்பாக்கம் ரயிலடியில் இறங்கி கொஞ்சம் நடந்து ஷேர் ஆட்டோவில் ஏறினால் ஐந்து ரூபாயில் மால். பார்த்தவுடன் பெங்களூர் ஃபாரம் மால் நினைவுக்கு வந்தது. மாலுக்குள் நுழைந்து யாரை நிறுத்தி கேட்டாலும் ஐடியில் பணி புரிவதாகத் தான் சொல்வார்கள் என்று நினைக்கிறேன். நாங்கள் வரி கட்டுவதற்கு நல்ல ரோடு போடுகிறார்களோ இல்லையோ நிறைய்ய மாலை திறக்கிறார்கள். அங்கும் கொள்ளை கொள்ளையாய் விலை வைத்து ஒட்டு மொத்தமாய் ஐடிகாரர்களிடமிருந்து கொள்ளை அடிக்கிறார்கள்! பைக் பார்க்கிங் இருபது ரூபாய்! நிறைய்ய குழி உள்ள ஒரு தட்டில் காக்காய்க்கு வைப்பதை போல் பல வித பதார்த்தங்களை படைத்து இருநூறு ரூபாய்! ஒரு சினிமா நூற்றி இருபது ரூபாய். ஆனால் நூற்றி இருபது ரூபாய்க்கு எந்த வஞ்சனையுமில்லாமல் அப்படியே அமெரிக்காவில் உள்ள தியேட்டர்களை போலவே வடிவமைத்திருக்கிறார்கள். பாப்கார்ன்களின் சைஸ் உட்பட.
நான் மகான் அல்ல
கார்த்தி இருந்தால் போதும், காமெடிக்கு தனியாய் ஆள் எடுக்கத் தேவையில்லை. அவர் வந்தாலே தியேட்டரில் சிரிக்கிறார்கள். மனிதர் சிரிப்பிலும் முறைப்பிலும் பிரமாதப்படுத்துகிறார். இவர் அடியாட்களின் கால்களை பிடித்து சுழற்றி அடித்தால் நம்ப முடிகிறது. என்னை பொறுத்துவரை அவர் பேட்டியில் எப்படி பேசுகிறாரோ அப்படியே தான் படங்களிலும் இருக்கிறார். அதனால் அவரின் நடிப்பு மிக இயல்பாய் தெரிகிறது என்று தோன்றுகிறது. அவருக்கு சம்மந்தமேயில்லாத ஒரு குணநலன் கொண்ட கேரக்டரில் அவர் நடிக்க வேண்டும். எப்படியோ தமிழ் சினிமாவிற்கு ஒரு மாஸ் ஹீரோ கிடைத்து விட்டார்.
காஜல்
நான் கவனித்த வரை காஜலுக்கு மிகவும் பெரிய்ய.....பற்கள்! சீ, யு பேட் பாய்ஸ்! இடைவேளைக்கப்புறம் ஹீரோயினே வராத ஒரு படம் இது தான் என்றேன், ஒரு கனவு பாட்டு கூட இல்லை என்றேன், அப்புறம் தான் தெரிந்தது நான் பாபகார்னுக்கு க்யூவில் நிற்கும் போது வந்து போய் விட்டார் என்று! வேறு என்ன சொல்ல, வழக்கமாய் நடிகைகள் சொல்லும் மூன்றாம் பிறை ஸ்ரீ தேவி ரோலா? இதைப் பற்றி அரை பக்கத்துக்கு பேச? எப்போ தான் தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் தேவதைகளாய் இல்லாமல் மனிதர்களாய் நடமாடப் போகிறார்களோ!
சுசீந்திரன்
ரெண்டு படம் ஓடி விட்டது. இன்னும் வாங்கவில்லை என்றால் இப்போதே போய் ஒரு புது கூலிங் கிளாஸ் வாங்கிக் போட்டுக் கொள்ளலாம்! அதை கழட்டாமல் பேட்டி தரலாம்! அதற்கான சகல தகுதியும் இருக்கிறது!
படம் முடிந்து விட்டது, சீட்டிலிருந்து வெளியே வரும்போது கவனித்தேன். அரங்கெங்கும் கொட்டிக் கிடக்கும் மிச்ச சொச்ச நொறுக்குத் தீனிகள். நம் மக்கள் வாங்கி சாப்பிடுகிறார்களா அல்லது கீழே கொட்டுகிறார்களா தெரியவில்லை. அடுத்த காட்சிக்குள் அத்தனை பெரிய அரங்கை சுத்தம் செய்ய வேண்டும். பணியாளர்களுக்கு கஷ்டம் தான்!
படத்தை விட எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அந்த மாலில் இருந்த பெரிய லேண்ட்மார்க்! போய் உட்கார்ந்து ரெண்டு சின்ன புத்தகத்தை முடித்தேன். அதிலே ஒன்று சுஜாதாவின் சினிமா உலக கட்டுரைகள்! அதில் எனக்கு ஞாபகம் (கவனிக்க, என்னுடைய ஞாபகம்!) இருக்கும் சில வாத்தியார் முத்துக்கள்!
"நடிகை ஷோபா ஓடி வந்து அங்கிள் என்று பாலுமகேந்திராவின் கழுத்தை கட்டிக் கொண்டாள்! அது அங்கிளுக்கான பழக்கமில்லை என்று என் மனைவி வீட்டுக்கு வந்ததும் சொன்னார். "
"சுந்தரராஜன் என்னிடம் கேட்டார். அது நீங்க எழுதின கதையா, கதை என்னன்னு தெரியாம நடிச்சேன். ஆமா அதுல நான் யார்? கதைப்படி நீங்க செத்த பொணம் என்றேன்!"
"மணிரத்னம் என்னை அந்த சின்ன ஸ்டூடியோவுக்குள் கூட்டிக் கொண்டு போனார். அந்தப் பையனிடம் புகழுக்குத் தயாராகுங்கள் என்று சொன்னேன்" அவர் தான் ஏ. ஆர். ரகுமான்!
இன்னொரு ஆங்கில சுய முன்னேற்ற புத்தகம் ஒன்றையும் படித்தேன். அதிலிருந்து, என் ஞாபகத்திலிருந்து,
................................................................................
(நான் எப்படி முன்னேறுவேன் சொல்லுங்க?!)
ஒரு கேள்வி:
இன்று கேப்டன் டீவியில் முரளியின் பேட்டியை பார்க்கும்போது, அடுத்த மாதம் பெங்களூர் வருவதாக நண்பனிடம் சொன்னது ஞாபகம் வந்தது, எந்த நம்பிக்கையில் அப்படி சொல்கிறோம்? என்று தோன்றியது!
இருவரில் யார் யாரை அதிகம் நேசிக்கிறோம் என்று!
சண்டையின் விதிப்படி இன்று முழுவதும்
அவளிடம் பேசாமல் மேலும் அதிகமாய் காதலிக்க வேண்டும்!!
அதிகக் கூட்டமில்லாத பேருந்தில்
ஒவ்வொரு இருக்கை தேடி
அமர்கின்றனர் ஒவ்வொருவரும்!
உள்ளபடி சொன்னால் நான் பார்க்க விரும்பும் சென்னை பழைய தமிழ் படங்களிலும், ஜெயகாந்தன் நாவல்களிலும் இருக்கிறது. எந்தப் பழைய படத்தின் அவுட்டோர் காட்சிகளில் சென்னையை பார்க்கும் போதெல்லாம், சென்னை எத்தனை காலியா இருக்கு பாரு என்று என்னையும் அறியாமல் புலம்புவேன். எம்ஜியார் காரோட்டிக் கொண்டே ஏதாவது வயல் வெளியை கடந்தால், யாருக்குத் தெரியும் இது வேளச்சேரியா இருக்கலாம் என்றும் புலம்பியிருக்கிறேன். மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் என்று நாகேஷ் பாடிக் கொண்டே வருவாரே, அந்த மெட்ராஸ்! அதுதான் நான் பார்க்க விரும்பிய சென்னை. அகலமான, விசாலமான சாலைகள், அங்கொன்றும் இங்கொன்றுமாய் செல்லும் பேருந்துகள், வாகனங்கள், மாட்டு வண்டிகள்! அந்தக் கூட்டத்திற்கும் ஓட்டத்திற்குமே அவர் அன்று அந்த அலுப்பு காட்டுவார். இன்று மவுண்ட் ரோட்டில் நின்று கொண்டு நாம் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் வேண்டாம், "மெட்" என்று வாய் திறந்தால் போதும் இன்னோவா வந்து இடித்து வீட்டில் உள்ளவர்களை ட்ரைவர் நலம் விசாரிப்பார்! (ஒங்கம்மாகிட்ட சொல்லிட்டு வந்தியா?) ம்ம்ம்...அறுபதில் வாழ வேண்டியவனை 2010ல் நிறுத்தியிருக்கிறது காலம்!
சரி மதுரைக்கு வருகிறேன். மதுரையில் சாலைகள் அகலமாய் தெரிகின்றன. ப்ளாட்பாரங்கள் நன்றாக ஏற்றம் கண்டு விட்டன. சென்னையை கம்பேர் செய்தால் சுற்றுப்புறம் சுத்தமாகவே இருக்கிறது. ஆனால் முன்பு போல் சினிமா போஸ்டர்கள் காணக் கிடைப்பதில்லை. சினிமா ரசிகர்கள் என்றால் அது மதுரையாகத் தான் இருக்க வேண்டும். முன்பு போல் இல்லாமல் மதுரையில் இப்போதெல்லாம் சென்னையில் ரிலீஸ் ஆவதைப் போல் ஒவ்வொரு படமும் 4, 5 தியேட்டர்களில் ஒரு காட்சி, இரு காட்சிகள் என்று வர ஆரம்பித்து விட்டன. என் நினைவுக்குத் தெரிந்து ஒரு படம் இரண்டு தியெட்டர்களுக்கு மேல் ரிலீஸானது "எஜமான்" தான்! அந்தப் படம் தான் முதன் முதலாய் மூன்று தியேட்டர்களில் ரிலீஸானது என்று நினைக்கிறேன்! [மதுரையில் ரஜினி படம் என்ன மொக்கையாக இருந்தாலும் 150 நாட்களுக்கு குறையாமல் ஓடும்] எந்த படமாய் இருந்தாலும் சரி, படம் வந்த அடுத்த வாரத்தில் வெற்றிகரமான இரண்டாவது வாரம் அல்லது பட்டையை கிளப்பும் பத்தாவது நாள் போஸ்டர் ஒட்டி விடுவார்கள். 3 வாரத்தில் படம் படுத்து விட்டால் அதை வேறு தியேட்டரில் ரிலீஸ் செய்து இணைந்த 3வது வாரம் என்று மிரட்டுவார்கள்! அப்படி என்றால் அந்த படம் இன்னும் களத்தில் இருக்கிறது என்று பொருள். இன்று வரை தளபதி படத்தின் பத்தாவது நாள், இருபத்தைந்தாவது நாள், முப்பத்தைந்தாவது நாள் என்று எல்லா நாட்களின் போஸ்டர்களும் எனக்கு நினைவில் இருக்கிறது. (இதை ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேனா என்பது தான் மறந்து விட்டது! ஹிஹி) தமிழ் படத்தை விடுங்கள், கமேண்டோ, ரங்கீலா, தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே போன்ற படத்திற்கே 50வது நாள், நூறாவது நாள் போஸ்டர்கள் ஒட்டினார்கள்! ஹம் ஆப்கே ஹைன் கோன் படம் ஹரிதாஸ் படத்தை போல் ஒரு வருடத்திற்கு மேல் ஓடியது! சில சமயம் ஷகீலா படத்திற்குக் கூட பத்தாவது நாள் போஸ்டர் பார்த்ததாய் ஞாபகம்! இன்றும் படங்களின் போஸ்டர்கள் இருந்தாலும், ஒரு 2வது வார போஸ்டரை கூட காண முடியவில்லை. திருட்டு விசிடி (டிவிடி?), கேபிள் டீவி, யு ட்யுப் என்று வளர்ந்து விட்ட நிலையில் ஒரு படம் இரண்டு வாரம் ஓடி போஸ்டர் ஒட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பதெல்லாம் ஓவர் தான்!
அப்புறம், திருமலை நாயக்கர் மகாலை நல்ல முறையில் பராமரித்து வருகிறார்கள் போலிருக்கிறது. அதோ, அந்த மகால்ல தான் ஐஸ்வர்யா ராய் ஆடினார் என்று தான் இன்றைய இளவட்டங்கள் அந்த மகாலை அடையாளம் காட்டுகிறார்கள்! சிம்ரன், மனீஷா கொய்ராலா, ஐஸ்வர்யா, அனுஷ்கா என்று அந்த மகால் பாரம்பரியம் மிக்கதாய் தான் ஆகி விட்டது! ஆனால் என்னை மிகவும் உறுத்திய ஒன்று, அரண்மனை மதில் சுவரில் "இங்கு சிறுநீர் கழிக்கக் கூடாது, இலவசக் கழிப்பறை அருகில் உள்ளது" என்று அம்புக்குறியுடன் ஒரு பலகை தொங்குகிறது. அந்த பலகையின் அடியில் ஈரப்பட்டுக் கிடக்கிறது. என்ன தான் இலவசம் என்றாலும் அரண்மனை மதில் சுவற்றில் சிறுநீர் கழிக்கிற பெருமை வருமா என்று அந்த பிரகஸ்பதி நினைத்திருப்பானோ என்னமோ? அதே போல் பெரியார் பஸ் ஸ்டாண்டில் ஆம்னி பஸ் நிறுத்தத்தில் அநியாயம் செய்கிறார்கள். அந்த தம்மாத்துண்டு இடத்தில் வெளியூர் போகும் பேருந்தும் நிற்கிறது, உள்ளூர் பேருந்தும் வந்து செல்கிறது. பக்கத்திலேயே கழிவறை இருந்தாலும் வெளியூர் பேருந்து ஒன்றை ஒன்று ஒட்டி நிற்கும் இடத்தில் அந்த பேருந்துகளை மறைவாய் வைத்துக் கொண்டு சிறுநீர் கழிக்கிறார்கள். அந்த பேருந்தில் ஏற வேண்டியவன் அந்த இடைபட்ட இடத்தில் கால் வைத்துத் தான் ஏற வேண்டியிருக்கிறது. ஆடு மாடுகளுக்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஐந்து ரூபாயை சிகிரெட்டுக்காக பொத்திக் கொண்டு கொடுக்கும் ஜனம் (ஜடம்!!) சிறுநீர் கழிக்க ஒரு ரூபாய் செலவழிக்க மறுக்கிறது!! இப்படி பொறுப்பில்லாமல் பெய்பவர்களை கண்டால் கண்ட இடத்தில் இழுத்து வைத்து அறுக்க வேண்டும். [சிம்ரன் சொல்வது போல் நாக்கை அல்ல!]
பெய்யெனப் பெய்யும் மழை
2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
இல்லை. தமிழ் சினிமா ஹீரோயின் மாதிரி மழை என்றால் மிகவும் பிடிக்கும். அந்த நாட்களில் நான் படித்த பெய்யெனப் பெய்யும் மழை - வைரமுத்து கவிதைத் தொகுப்பு மிகவும் பிடித்துப் போனதால் இந்தப் பெயரை வைத்தேன்.
3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?
என்ன சொல்வது? குஷ்பு திமுகவில் சேர்ந்தது, புவனேஸ்வரி அரசியலில் குதித்தது, டி. ராஜேந்தரை நாம் பொருத்துக் கொள்வது...இவையெல்லாம் நம் கையிலா இருக்கிறது? இப்படி எத்தனையோ டார்ச்சர்களை போல் தான் நான் வலை பதிய ஆரம்பித்தது! விதி வலியது!
4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?
எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்களின் இடையே ஏ.வி.எம். ராஜன், ரவிச்சந்திரன் போன்றவர்களும் காலம் தள்ளியதை போல் தான் நானும் என் வலைப்பதிவும். என் வலைப்பதிவு பிரபலமாக இதுவரை ஒன்றும் செய்யவில்லை. அதனால் அத்தனை பிரபலமும் ஆகவில்லை என்பது என் எண்ணம்.
5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
உண்டு! சொந்தச் சரக்கு அல்லாமல் நன்றாக எழுதத் தெரிந்தால் நான் எழுத்தாளன் ஆகியிருப்பேனே! வலைப்பதிவில் ஏன் எழுதிக் கொண்டிருக்க போகிறேன்? "இப்படித்தான்டா அன்னைக்கு நான்" என்று எதெற்கெடுத்தாலும் தன்னைச் சுற்றியே கதை பின்னும் மரபு நம் தமிழ் மரபு! அதிலிருந்து நான் மட்டும் தப்ப முடியுமா?
விளைவு சாதகாமாயும் இல்லை; பாதகமாயும் இல்லை!
6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
சம்பாதிக்கும் நோக்கம் அறவே இல்லை. மனதிற்குப் பிடிக்கிறது, செய்கிறேன்.
7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு?
ஒன்னே ஒன்னு! கண்ணே கண்ணு!
8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன் ?
சில மொக்கை பதிவுகளுக்கு ஐம்பது, நூறு என்று கமெண்ட்டை பார்த்தால் பொறாமையாய் இருக்கும். அது உண்மை. பிறகு சாரு போல், தமிழ்நாட்டில் எழுத்தாளனை யார் மதிக்கிறா? என்று என்னை தேற்றிக் கொள்வேன்! (இப்போ சாருவுக்கு எப்படி இருக்கும்?)
9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?
நான் பெங்களூரில் இருந்த போது ஒருவர் என் பதிவுகளை படித்து விட்டு என்னை சந்திக்க வேண்டும் என்று விரும்பினார். நானும் என் எல்லா எழுத்துப் பணிகளையும் ஒத்தி வைத்து விட்டு (டேய், டேய்!!) அவரை அன்று மாலையே சந்தித்தேன்! என்னுடன் பேசிய அந்த கொஞ்ச நேரத்தில் அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ஒரு வலைபதிவை ஆரம்பித்தார். அதில் எல்லா உண்மைகளையும் போட்டு உடைப்பேன் என்றார். பாருங்கள்! நீங்களே மிரண்டு விடுவீர்கள்! இங்கே
10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் கூறுங்கள்.
அப்புறம் என் சுய சரிதை எப்படி விற்கும்? போங்க சார்!
கொசுறு: நான் ஏற்கனவே எழுதிய சில சுய குறிப்புகள் இங்கே!
அலுவலகத்தில் இப்போ தான் வந்திருக்கான், கொஞ்சம் விட்டு புடிப்போம் என்று வைத்திருக்கிறார்கள். அலுவலகத்தில் ஆர்குட், ட்விட்டர் என்று எதுவுமே வருவதில்லை. ட்விட் செய்து பழகி விட்டதால் கை அரிக்கிறது! கடந்த சில தினங்களில் என் சென்னை அனுபவங்களை இங்கேயே ட்விட்டுகிறேன். 140 எல்லை இங்கு இல்லை!
நண்பன் வீட்டிலிருந்து கிளம்பும்போது எல்லாம் எடுத்துக் கொண்டேனா என்று சரிபார்த்துக் கொண்டேன். பாதி வழியிலேயே மழை சட்டையை மறந்தது ஞாபகம் வந்தது! பாதி தூரத்திலயே!!! ஆஹா என்னே என் ஞாபக சக்தி!!
நான் உனக்கு முன்னால் சென்று கோணலானவைகளை செவ்வையாக்குவேன் - ஏயாசா
எனக்கு முன்னால் கோணலாக சென்று நின்ற ஆட்டோவில் இருந்த வாசகம்!
"என்ன வர்றீங்களா?" ஒரு மாமி, ஆட்டோகாரரிடம்! அரைகுறையாய் காதில் விழுந்தால் எத்தனை ஆபாசம்!
"சாக்லேட் லைம்ஜூஸ் ஐஸ்க்ரீம் டாஃப்பியான்" என்று ஹம் ஆப்கே ஹைன் கோன் படத்தில் ஒரு பாடல் வரும். குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப் பருவத்தை நான் அடைந்து விட்டேன், எனக்கு இனிமேல் குழந்தைகள் ரசிக்கும் விஷயங்களில் உள்ள மோகங்கள் குறைந்து விட்டன என்று! அற்புதமான பாடல். அதே போல் நான் வளர்ந்து விட்டேன் என்று சொன்னாலும் என் மனைவி வளராததால் பொம்மை படங்களுக்கு கூட்டிச் செல்ல வேண்டியிருக்கிறது! ஷ்ரக் 4 வரும்போதே நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள், ஏதோ சாக்கு போக்கு சொல்லி அதை கடந்தால் டாய் ஸ்டோரி 3 வந்து விட்டது. இனியும் தப்பிக்க முடியாது என்று சொல்லி அதை அனுபவிக்கத் தயாரானேன். ஆனாலும் ஒவ்வொரு தடவையும் அவளின் நச்சரிப்பு தாங்காமல் நான் பொம்மை படம் பார்க்கும் போதெல்லாம் மிக அற்புதமான அனுபவம் தான் எனக்கு வாய்க்கிறது. ஆனாலும் அடுத்த முறை இன்னொரு படத்தை பார்க்கும் ஆவல் பிறப்பதில்லை. ராவண் போன்ற படங்களின் மீதே ஆவல் பிறக்கிறது! அது சரி என் மனைவியாவது அவளின் உள்ளே உள்ள குழந்தையை தக்க வைத்திருக்கிறாளே அது வரை சந்தோஷமே! அதனால் எனக்கும் இத்தகைய சந்தர்ப்பங்கள் வாய்க்கிறது. இனி டாய் ஸ்டோரி 3 !
ஆண்டி (தமிழ் ஆண்டி அல்ல!) என்ற சிறுவனிடம் வித விதமான பொம்மைகள் இருக்கின்றன. வூடி என்ற கவ்பாய் பொம்மை, ஜெஸ்ஸி என்ற ஒரு கவ் கேள், பஸ் என்ற விண்வெளி வீரன், ஒரு ஜோடி உருளைக்கிழங்கு பொம்மைகள், ஒரு பன்றி இப்படி வித விதமாய்! இவைகளைக் கொண்டு அவன் கற்பனை உலகத்தில் வித விதமான விளையாட்டுக்களை விளையாடுகிறான். அவனுக்கு இந்த பொம்மைகள் என்றால் உயிர். அதே போல் அந்த பொம்மைகளுக்கும்! (பொம்மைகளுக்கு ஏது உணர்ச்சி என்று நீங்கள் சொன்னால் பேசாமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டு சன் பிக்சர்சாரின் அடுத்த வரவு என்ன என்ற டார்ச்சரை அனுபவிக்கலாம்!) அவனின் சந்தோஷம் தான் அவர்களின் சந்தோஷம். காலம் செல்ல செல்ல ஆண்டி வளர்ந்து பெரியவனாகி விடுகிறான். (எந்த சைக்கிள் சக்கரமும் சுற்றாமல்!) அதன் காரணமாக அவன் பொம்மைகளிடம் விளையாடி வெகு நாட்கள் ஆகின்றன. அவன் இவைகளுடன் விளையாடவில்லை என்றாலும் எல்லாவற்றையும் பத்திரமாக ஒரு பெட்டியில் பூட்டி பாதுகாப்பாக வைத்திருக்கிறான். பெட்டிக்குள் எல்லா பொம்மைகளும் சேர்ந்து இனிமேல் ஆண்டிக்கு தாங்கள் தேவையில்லை, அவன் எப்படியும் தங்களோடு விளையாடப் போவதில்லை என்று புலம்புகின்றன. ஆனால் வூடி அதை மறுக்கிறது. ஆண்டிக்கு குழந்தை பிறந்தால் அதனை சந்தோஷப்படுத்தலாம், ஆண்டி நம்மிடம் விளையாடினாலும், இல்லாவிட்டாலும் அவன் தான் நம் எஜமானன், அவனிடம் தான் நாம் இருக்க வேண்டும் என்று வாதம் செய்கிறது.
ஒரு கட்டத்தில் ஆண்டி கல்லூரியில் சேர வேறு ஊருக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அவன் அம்மா அவன் போவதற்கு முன் அவனுடைய அறையை காலி செய்ய விரும்புகிறாள். தேவையற்றவைகளை ஒரு மூட்டையாகவும், பரண் மேல் போட வேண்டியவைகளை இன்னொரு மூட்டையாகவும் கட்டச் சொல்கிறாள். அவனின் பொம்மைகளை நல்ல ஒரு குழந்தைகள் காப்பகத்தில் கொடுத்து விடலாம் என்று கூறுகிறாள். அவனுடைய பொம்மையை இழக்க ஆண்டி விரும்பவில்லை. அதனால் எல்லா பொம்மைகளையும் ஒரு சாக்கில் கட்டி பரணில் போட முடிவு செய்கிறான். வூடி அவனுக்கு நெருங்கிய நண்பன். அதனால் அதை மட்டும் தன் கல்லூரிப் பெட்டியில் வைத்து விட்டு மற்ற அனைத்தையும் ஒரு சாக்கில் போட்டு கட்டிக் கொள்கிறான். தவறுதலாக அது குப்பை மூட்டைகளுடன் சேர்ந்து விடுகிறது. வூடி இதை கண்டு கொள்கிறது. தன் நண்பர்கள் தவறுதலாய் குப்பைகளில் சேர்ந்து விட்டதை பார்த்து அவைகளை காப்பாற்ற வூடி களம் இறங்குகிறது. ஆனால் மற்ற பொம்மைகள் அதிலிருந்து தந்திரமாய் தப்பித்து காப்பகத்திற்குப் போய் மற்ற குழந்தைகளை மகிழ்விக்க காப்பகத்திற்காக உள்ள பெட்டியில் உட்கார்ந்து கொள்கின்றன. இதைக் கண்ட வூடி அவர்களை கண்டிக்கிறது. ஆனால் யாரும் அதனுடைய பேச்சை மதிக்கவில்லை. அந்த வாக்கு வாதத்தில் ஆண்டியின் அம்மா காரை கிளப்பிக் கொண்டு அந்த காப்பகத்திற்கு வந்து விடுகிறாள். வூடியும் இதில் மாட்டிக் கொள்கிறது. அந்த காப்பகத்தில் ஒரு கரடி பொம்மை இருக்கிறது. அது எல்லா பொம்மைகளின் தலைவனாக விளங்குகிறது. புது பொம்மைகளை வரவேற்று வாரத்திற்கு ஐந்து நாட்கள் குழந்தைகள் உங்களிடம் விளையாடுவார்கள்; சந்தோஷமாய் இருங்கள் என்று வாழ்த்தி விட்டுப் போகிறது. இப்படி ஒரு இடமா என்று ஆண்டியின் அனைத்து பொம்மைகளும் குதூகலிக்கின்றன. ஆனால் வூடி மட்டும் உங்களுக்கு விருப்பமிருந்தால் இங்கேயே இருங்கள் ஆனால் நான் ஆண்டியிடம் செல்கிறேன் என்று கிளம்பி விடுகிறது. போகும் வழயில் அடிபட்டு ஒரு குழந்தையின் கையில் சிக்கி விடுகிறது. அந்தக் குழந்தை வூடியை தன் வீட்டிற்கு கொண்டு சென்று விடுகிறது. அங்கு இருக்கும் மற்ற பொம்மைகளிடமிருந்து காப்பகத்தில் இருக்கும் கரடி பொம்மை பொல்லாதது என்றும் அது எல்லா பொம்மைகளையும் மிரட்டி வைத்திருக்கிறது என்ற உண்மையை தெரிந்து கொள்கிறது. அந்த கரடி பொம்மை ஏன் அப்படி ஆனது என்று ஒரு ப்ளாஷ் பேக்! வழக்கமான தமிழ் சினிமா பாணியில் கேட்பவரின் முகத்தை பார்க்காமல் ஜன்னலை பார்த்துக் கொண்டே ஒரு பொம்மை கதை சொல்கிறது. வூடி எப்படி தன் நண்பர்களை அந்தக் கரடியிடமிருந்து காப்பாற்றி ஆண்டியிடம் சேர்ந்தது என்பதே மீதிக் கதை. அதகளப்படுத்தியிருக்கிறார்கள் (கேபிள் சங்கரை அதிகம் படித்தது தப்பாய் போய் விட்டதே!)
பொம்மைகளை வைத்துக் கொண்டு என்ன மாதிரியான ஒரு உணர்ச்சிப் பூர்வமான கதை. ஹாஸ்யம், சோகம், காதல், வஞ்சம், கோபம், தந்திரம்...அப்பப்பா! ஒரு பொழுது போக்குச் சித்திரத்திற்கான அனைத்து அம்சங்களும் அம்சமாய் பொருந்தியிருக்கிறது. இதில் ஐ மேக்ஸ் 3 டி அனுபவம் வேறு! கேட்கவா வேண்டும். பட்டையை கிளப்பி இருக்கிறார்கள் (நான் சொல்லலை? கேபிளாரே தான்!) இந்தப் படத்தின் கதையை ஒரு வீக்கெண்டில் எழுதியதாக விக்கி சொல்கிறது. எப்படி இந்த அளவு பிரமாதப்படுத்துகிறார்கள் என்ற ஆச்சர்யத்திலிருந்து நான் இன்னும் மீளவில்லை. ஏதோ ஒரு சுவிட்சை தட்டியதால் பஸ் (விண்வெளி வீரன்) செய்யும் காதல் அளப்பறைக்கே கொடுத்த காசு சரியாகி விடும். கண்டிப்பாக குழந்தைகளை கூட்டிச் சொல்லுங்கள்! தலை தனியாய் உடல் தனியாய் இருக்கும் பொம்மையை பற்றி ராமகிருஷ்ணன் துணையெழுத்தில் எழுதியிருந்தார். இந்தப் படத்தை பார்த்தால் உங்கள் குழந்தைகள் இனிமேல் கண்டிப்பாய் அப்படி செய்யாது என்று நினைக்கிறேன்.
கொசுறு:
நேற்று ஒரு பொம்மை கடைக்கு என் மனைவியுடன் போயிருந்தேன். ஒரு பெரிய குரங்கு பொம்மையை பார்த்து இது எப்படி இருக்கிறது என்று கேட்டேன். அவளுக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என்று சொன்னாள். இதை நம்ம வாங்கிட்டு போயிட்டா அதோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வருத்தப்படுமே என்றேன்? என் மனைவி சிரித்தாள்! பொம்மை வாங்காமல் திரும்பினோம். வாட் எ கிரேட் எஸ்கேப்!!
ராகினி மரணத்திற்கு பயப்படவில்லை, மலையிலிருந்து குதித்து விடுகிறாள். உடனே பீராவுக்கு காதல் வருகிறது, அப்போது ஒரு பாடல் என்று மணி சிச்சுவேஷன் சொல்லியிருப்பாரா? இத்தனை அபத்தமாகவா மணி யோசிக்கிறார்? குல்ஸாரும் வைரமுத்துவும் உருகி உருகி எழுதிய பாடலுக்கு இது தான் சிச்சுவேஷனா? இதனால் எப்படி காதல் வரும் என்று யாரும் மணியிடம் வாதாடி இருக்கா மாட்டார்களா? இதெல்லாம் தமிழ் படத்தில் சகஜம், இதெல்லாம் கேட்க கூடாது என்கிறீர்களா?
தமிழில் விக்ரம் அடிக்கடி சிரிக்கிறாரா தெரியவில்லை. அபிஷேக் எதெற்கெடுத்தாலும் கண்ணை உருட்டி உருட்டி சிரிக்கிறார். காமெடியாய் இருக்கிறது. பிளஃப் மாஸ்டரில் அபிஷேக்கின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்தது. அந்த மாதிரி எந்த வித அலட்டலும் இல்லாத காரெக்டர் தான் இவருக்கு சரியாய் இருக்குமென்று நினைக்கிறேன். ராவணில் விக்ரமும் ப்ரியாமணியும் அழகாய் ஹிந்தி பேசியிருக்கிறார்கள். எந்த இடத்திலும் உருத்தவேயில்லை. விக்ரமின் அஜானபாகுவான உடல் அவரின் பாத்திரத்திற்கு மிகச் சரியாய் இருக்கிறது. மீசை கொஞ்சம் தூள் விக்ரமை நினைவு படுத்துகிறது. விக்ரமிற்கு பிரசாந்தின் ராசி அடித்து விட்டது என்று நின்னைக்கிறேன். பிரசாந்த் நடிக்காத பெரிய இயக்குனர்களே இல்லை. ஆனால் அவர் இன்னும் மேலே வரவேயில்லை. அதே போல் லிங்குசாமி, சுசி கணேசன், மணிரத்னம் என்று இவரும் என்னனமோ செய்து பார்க்கிறார். படம் தான் ஓட மாட்டேன் என்கிறது. ஆனால் படம் எப்படி இருந்தாலும் நான் இருக்கிறேன் என்று தன்னை நிரூபித்துக் கொள்ளத் தவறவுதே இல்லை. இவரின் "வெடி"யாவது சரியாய் வெடிக்கிறதா பார்க்கலாம்! ப்ரியாமணிக்கு அவரின் கட்டை குரலே ஒரு ப்ளஸ்! ஐஸ்வர்யாவைப் பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதோ எனக்கு வயதாகப் போகிறது என்பது போல் இருக்கிறது அவரின் தோற்றம்.
பிரம்மாண்டமான விஷ்ணு சிலை, மலைகள், அருவிகள், கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சிகள் எல்லாம் இருக்கிறது ராவணில், இந்த கதை தான்.... திரைக்கதை! இப்படி ஒரு மொக்கை படம் எடுக்க ஏன் இத்தனை மெனக்கெடல் என்று புரியவில்லை. இத்தனை அமெச்சூர்த்தனமான ஒரு மணிரத்னம் படத்தை நான் இது வரை பார்த்ததில்லை. அவரே சொல்வது போல் பேசாமல் அவர் கோல்ப்ஃ விளையாட போய் விடலாம்!
"பத்து தலை ராவணன்" - விக்ரம்; "ஒரே தலை! தலைவலி!!" - பிரதீப்
கொசுறு:
"நான் உன்னை போல் அல்ல வளர்ந்து விட்டவன்" என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், என் மனைவியின் வற்புறுத்தலால் நேற்று தான் டாய் ஸ்டோரி 3 பார்த்தேன். அதுவும் 3 டியில. அது கதை. அது படம். விருப்பமே இல்லாத ஒருவனையும் சுண்டி இழுத்து விடுகிறார்கள். எத்தனை அற்புதமான உழைப்பு. என்ன ஒரு கற்பனை வளம். கண்டிப்பாய் பாருங்கள்!
நான் பள்ளியில் படித்த போது என் நண்பன் ஒருவன் இருந்தான். அவன் அவனுடைய ரெனால்ட்ஸ் பேனாவை எப்போது மூடினாலும் அதன் மூடியின் கீழ் நுனி அந்தப் பேனாவின் உடம்பு பகுதியில் எழுதப்பட்டிருக்கும் ரெனால்ட்ஸ் என்ற எழுத்தை நோக்கியே இருக்கும். யாராவது அவன் பேனாவை கடன் வாங்கி திருப்பித் தந்தாலும் மூடியை அதன் திசையில் சரியாக திருப்பிக் கொள்வான். அது அவனுடைய அனிச்சையான ஒரு செயல்! அவனிடம் இருந்து அப்போது எனக்கும் அந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டது! அவன் பன்னிரண்டாவது வகுப்பில் அத்தனை கணக்குகளையும் ஒரு நோட்டில் அச்சடித்த மாதிரி எழுதி வைத்திருந்தான். ஒரு அடித்தல் திருத்தல் இருக்காது! அந்த நோட்டுக்கு ஏகப்பட்ட கிராக்கி! நானும் அந்த நோட்டை கடன் வாங்கி, அதனுடைய நேர்த்தியில் மயங்கி கணக்கை கோட்டை விட்டிருக்கிறேன்! "உங்க நாயனத்துல தான் அப்படி சத்தம் வருதா?" என்று தில்லானா மோகனாம்பாவில் மனோரமா சிவாஜியிடம் கேட்பதைப் போல் அவனிடமும் அவன் பேனாவைப் பற்றிக் கேட்டு, அதை வாங்கி ஆராய்வோம்! என்ன தான் உடம்பில் எண்ணை தடவி புரண்டாலும் ஒட்ற மண்ணு தானே ஒட்டும்?
பத்தாவது படிக்கும் போது மை பேனாவின் ஆதிக்கம்! மை பேனாவில் குண்டு குண்டு, பட்டை படையாய் எழுதினால் நிச்சயம் 400 க்கு மேல் வாங்கி விடலாம் என்று ஒரு கருத்து இருந்தது! அதற்காக கூர்மையான நிப்பை பிளேடால் கீறி பட்டை ஆக்குவோம்! ஹீரோ பேனாவை சீண்டவே மாட்டோம்! அந்த மாதிரி பட்டையாய் எழுதும் பேனா ஒன்று என் வீட்டுக்கு அருகில் உள்ள பலசரக்கு கடையில் கிடைத்தது. அண்ணா நகரில் உள்ளவன் கூட என் வீட்டுக்கு அருகில் உள்ள கடையில் தான் அந்த பேனாவை வாங்கினான். விலை மூன்று ரூபாய்! இத்தனை உழைத்தும் (!) மார்க் வந்ததும் தான் புரிந்தது எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல் என்று! "நம்ம குண்டு எழுத்தை பார்த்து பேப்பர் திருத்துறவருக்கு சண்டை போட்டு வந்த தன்னோட குண்டு பொண்டாட்டி ஞாபகம் வந்துருக்குமோ?" என்று சிலர் சந்தேகப்பட்டார்கள்!
சாஃப்ட்வேர் இஞ்சினியர் ஆன பிறகும் ஏதாவது டூர் போகும்போதும் பேனா கொண்டு போவது எனக்கு பழக்கம் ஆகி விட்டது. அது என்னவோ தெரியவில்லை, பேனா எப்போது வேண்டுமென்றாலும் பயன் படும் என்று ஒரு எண்ணம். எங்காவது காத்திருக்க உட்கார்ந்தால் ஒரு பேப்பர் கிடைத்தால் ஏதாவது கிறுக்க ஆரம்பித்து விடுவேன். நான் எதற்கெடுத்தாலும் கிறுக்குவதை பார்த்த என் நண்பன் என்னிடம் "நீ கொலை எதுவும் செய்யாதே உன்னை எளிதாய் கண்டுபிடித்து விடுவார்கள்" என்று எச்சரித்திருக்கிறான். கல்லூரியில் படிக்கும் போது ஒரு முறை வாத்தியார் பேனா கேட்டதற்கு மூடியை வைத்துக் கொண்டு பேனாவை மட்டும் கொடுத்தேன். ரொம்ப வெவரமா இருக்கியே என்றார். அது பாராட்டா இல்லை திட்டா என்று தெரியவில்லை. அதே போல் எல்லா பெண் நண்பர்களுக்கும் அசைன்மென் நோட்டில் வித விதமாய் பேர் எழுதித் தந்து பல மாணவர்களின் (கவனிக்க: பெண் நண்பர்கள், ஆண் மாணவர்கள்!) வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன். ஒரு பெண்ணின் ஸ்டாம்ப் புக் கிடைத்து விட்டால் போதும், "ஒரு சொல் கேட்டால் ஓராயிரம் சொற்பொழிவுகள் நடத்தும் என் பேனா இன்று ஏனோ மௌனப் போராட்டமே நடத்துகிறது!" என்று பிரிவின் சோகத்தை கசக்கிப் பிழிந்திருக்கிறேன்! சாஃப்ட்வேர் இஞ்சினியர் ஆன பிறகு மேனஜர் பேசுவதை நோட்ஸ் எடுப்பதற்காக வேக வேகமாய் எழுத ஆரம்பித்து இன்று என் கையெழுத்து கோழி என்ன சேவல், டைனோசர் கிறுக்கல்களை விட மோசமாய் இருக்கிறது!
அவளின் நினைவுகள் தொலைவதில்லை
அடிக்கடி தொலையும் பேனாக்களைப் போல்!
உன்னை பார்த்தேன்
குடைக்குள்ளிருந்தே நான் நனைந்தேன்
உன்னை நான்
கற்றது
கண்ணளவே
வாழ்வின்
நெளிவு சுழிவுகளையும்
மேடு பள்ளங்களையும்
எனக்கு விளக்கியது...
உன் தேகம்
உன்னை சந்தனத்தில்
அழகு பிடித்து
எத்தனை சிவராத்திரிகள்
ஆயிற்று?
ஆச்சர்யம் தான்!
இரு மனிதர்களால்
எப்படி ஒரு
தேவதையை செய்ய முடிந்தது!
ஆரம்பிச்சிட்டியா நீயும்?
சும்மா சொல்லு
எல்லாம் ஒரு சோஷியல் சர்வீஸ் தான்!
எது? இதுவா? அய்யே! இதுக்கு பேரு சோஷியல் சர்வீசா?
பின்ன நீ செய்றதா சோஷியல் சர்வீசு?
நானா சொன்னேன், நீ தான் சொன்னே?
ஆமா, நான் சொன்னேன். சொல்றேன். அதுக்கு என்ன?
இது எப்படி சோஷியல் சர்வீஸ்?
என்ன நீ புஸ்தகம் கிஸ்தகம் படிக்கிறதில்லையா?
இது சோஷியல் சர்வீஸ்னு எந்த புஸ்தகத்துல போட்ருக்கான்?
எங்களை மாதிரி பொம்பளைங்க இருக்குறதால தான் இன்னைக்கு குடும்ப பெண்கள் மிச்சமிருக்காங்க! அதை தெரிஞ்சுக்கோ நீ!
இது உனக்கே ஓவரா இல்ல?
அட யார்ரா இவன்? சரி, எங்க சர்வீசே இல்லைன்னு வச்சுக்கோ, 15 வயசுல வயசுக்கு வந்த நீ 35 வயசாகியும் ஒண்ணுமே பண்ணலைன்னா வெறி புடிச்சி போய் ரோட்ல போற பொண்ணை கை புடிச்சி இழுப்பியா மாட்டியா? எங்களை மாதிரி பொண்ணுங்க இருக்கும்போதே உங்க அட்டூழியம் சீரழியுது, பேப்பர் படிக்கலை? இதுல நாங்க இல்லைன்னா இந்த சொசைட்டி என்ன கதிக்கு ஆகும்? ஒரு இத்துப் போன டையையும், அந்த பாழடைஞ்சு போன மேன்சனையும் கட்டிட்டு அழற? உன் தங்கச்சிங்க 3 பேருக்கு உன் மெடிக்கல் ரெப் வேலையுல சம்பாதிச்சி பவுன் சேத்து கட்டிக் கொடுத்து கல்யாணம் பண்ண நீ இன்னொரு ஜென்மம் தான் எடுக்கணும்! இவ்வளவு கேள்வி கேக்குற அப்போ நீ ஏன்டா இங்கே வர்றேன்னு நான் உன்னை கேக்க முடியாது, ஏன்னா நீ வந்தா தான் என் பொழப்பு ஓடும்! அதுவுமில்லாம உன்ன சொல்லி குத்தமில்லை..., உனக்கு பசி! பசிச்சா சாப்டு தான் ஆகணும்? உங்களுக்கு பசிக்கிற வரை நாங்க பரிமாறிட்டே இருக்க வேண்டியது தானே?
எம்மாடி, என்னா மெசேஜ்! உன்கூட படுத்தவங்ககிட்ட துட்டு மட்டும் வாங்காம அவங்களோட உலக அறிவையும் வாங்கி இருப்பே போல! சூப்பர்! ஆமா, நீ ஏன் அரசியல்ல குதிக்கக் கூடாது? பெரிய ஆள் ஆயிடுவே!
பெரிய ஆள் ஆகி?
உன் பொது நலத் தொண்டை நல்லா செய்யலாம்ல?
நான் காந்தி மாதிரி, பெரியார் மாதிரி பதவியில இல்லாம என் சேவையை தொடர்ந்துக்குறேன்!
நல்லா வேலை இதெல்லாம் கேக்க அவங்க உயிரோட இல்லை! உன்னோட ஜெனரல் நாலேஜ் என்னால தாங்க முடியலை! என்ன படிச்சிருக்கே நீ?
பத்தாங் கிளாஸ்ல எங்க ஊர்ல நான் தான் பஸ்ட் மார்க் தெரியுமா?
அடங்க கொக்கமக்கா! அப்படியே படிச்சி டாக்டர் இஞ்சினியர்னு ஆயிருக்கலாம்ல? கை நிறையா சம்பாதிச்சிருக்கலாம்!
கை நெறையவா? ஹஹஹா, இப்போ தான் உடம்பு நெறைய சம்பாதிக்கிறேனே! உனக்கு புடிக்கலையா?
இது ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்! என்ஜினீயர், டாக்டர், வக்கீல் இவங்க சம்பாதிக்கிறதும், நீ சம்பாதிக்கிறதும் ஒண்ணா?
அவங்களுக்கு நான் என்னடா குறைஞ்சு போயிட்டேன். சொல்ல போனா அவங்களை விட நான் எவ்வளவோ மேல்!
நீ ஃபிமேல் ஆச்சே!
அடச்சீ சொல்றதை கேளு! இஞ்சினியருங்க பாலம் கட்றேன், அபார்ட்மென்ட் கட்றேன்னு அரைகுறையா கட்டி பணத்தை கொள்ளை அடிச்சி அநியாயம் பண்றாங்க! டாக்டருங்க ஒரு கிட்னி சரி செஞ்சா இன்னொரு கிட்னியை டிப்ஸா எடுத்துக்குறானுங்க! அப்புறம் என்ன சொன்ன? வக்கீலா? இப்போ எவன்டா வக்கீளுகெல்லாம் படிக்கிறான்? நான் என்ன சொல்ல வர்றேன்னா, அவங்களை மாதிரி கஸ்டமர்களை நாங்க ஏமாத்துறதில்லை! கையில காசு, வாயில தோசை! ஆமா... இன்னொன்னு சொல்றேன் கேட்டுக்கோ, என்ஜினீயர் அறிவை விக்கிறான், வக்கீல் வாயை விக்கிறான். நான் என் உடம்பை விக்கிறேன்! அவனவன்கிட்ட இருக்குறதை அவனவன் விக்கிறான்! அவங்க எல்லாரையும் விட நாங்க சரியா விக்கிறோம்! பாத்துக்க...இவங்களோட எல்லாம் என்னை சேத்து வச்சி இன்சல்ட் பண்ணாத! சொல்லிட்டேன்.
சரி ஒத்துக்குறேன், உன் தொழிலை பத்தி இவ்வளவு பெருமையா பேசுறியே எந்த பொண்ணாவது இந்த தொழிலை புடிச்சி செய்வாளா? பொண்ணுங்களுக்கு லவ் தான் முக்கியம், அப்புறம் தான் மத்ததெல்லாம் அப்படீன்னு பேசிக்கிறாங்க! எப்படி மடக்குனேன் பாத்தியா?
அடடடா..அறிவு வழியுது தொடச்சுக்கோ! நீ சொல்றது என்னமோ கரெக்ட் தான்! எந்தப் பொம்பளையும் இந்த தொழிலை புடிச்சி செய்ய மாட்டா! ஆனா, நீயே சொல்லு இன்னைக்கு எத்தனை என்ஜினீயர் புடிச்சி போய் என்ஜினீயரா இருக்கான் இங்கே? உன்னையே எடுத்துக்கோ, கொளுத்துற வெயில்ல டையை போட்டுட்டு நாயா சுத்துறியே, உனக்கு புடிச்சா நீ செய்றே? எத்தனை பேருக்கு புடிச்சது கெடைக்குது? கெடைச்சதை எடுத்துக்க வேண்டியது தான்! அதானே வாழ்க்கை!
பிலாசபி ஓவரா இருக்கே! இதுக்கு பதில் சொல்லு, நீ செய்ற தொழில் சட்டப்படி குற்றமாச்சே? இதுக்கு என்ன சொல்லப் போறே?
சட்டமா? அட ஏன்டா நீ ஒரு வெவரம் புரியாதவன்! இந்தா புடி, இது என்னோட வக்கீல் கஸ்டமர் எனக்கு சொன்னது!
வக்கீலே கஸ்டமரா? கஷ்டம்!! சொல்லு..சொல்லு!!
ஒரு பொண்ணுக்கு 18 வயசு ஆனா அவளுக்கு புடிச்சவன் கூட போகலாம்! இது சட்டம். ஆனா அவளை பெத்தவங்க, எங்க பொண்ணுக்கு நாளைக்கு தான் 18 வயசு ஆகுது இன்னைக்கு இவ மைனர் தான்னு அவளை தர தரன்னு இழுத்துட்டு போகலாம். சட்டப்படி அது சரி! ஆனா கொஞ்சம் யோசிச்சி பாரு; இன்னைக்கு அது ஓடி வந்தது தப்பு, நாளைக்கு ஓடி வந்திருந்தா அது சரி! எப்படி இருக்கு உங்க சட்டம்?
சட்டம் ஒரு இருட்டரைன்னு எனக்கு இன்னைக்குத் தான்க்கா வெளங்கியிருக்கு! ரைட்டு, உங்களால தான் எய்ட்ஸ் வந்துச்சு! அது உங்க சர்வீஸ்ல ஒண்ணுன்னு வச்சுக்கலாமா?
வச்சுக்கோ! உன்னை யாரு வேணாம்னா? கண்ணு, ரோட்ல ஆக்சிடெண்ட்ல டெய்லி நூறு பேர் சாவுறான், அதுக்காக ரோட்ல போகாமயா இருக்கோம்? ஹெல்மட் போட்டுட்டு வண்டியை ஒட்டு! அப்போ கூட சில அடிகள் படத் தான் செய்யும்! அவ்வளவு பயம் இருந்தா ஒருத்தியோட போதும்னு பொத்திட்டு இருக்க வேண்டியது தானே? ஏன் ஊர் மேயிறீங்க? அதெல்லாம் ஒத்துக்க முடியாதுன்னா , மக்கள் தொகையை கொறைக்குறதுக்கு நாங்க கவர்மெண்டுக்கு செய்ற சர்வீஸ்னு வச்சுக்கோயேன்!!
யப்பா, நீ கட்சி ஆரம்பிச்ச எங்கேயோ போயிடுவே! என்னாமா பேசுற நீ?! அப்போ நீ செய்றது தப்பே இல்லைன்ற?
தப்பேயில்லை, இப்போ எல்லாம் கால் கேள்ஸ் மாதிரி கால் பாய்சே இருக்காங்க, தெரியுமா? உங்க ஜென்மத்துக்கு தான் லவ்வே தேவையில்லையே! நீ தான் வேலையே புடிச்சி செய்யனும்னு சொல்றியே? செய்றியா? உனக்கு ஒரு சான்ஸ் வாங்கி தர்றேன்!
ஆள விடு ஆத்தா நீ!
ஹஹஹா..வந்துட்டான் பேட்டி எடுக்க!!
ஒரு கவிதை எழுத முயற்சிக்கிறேன்
என் மேஜை எங்கும் வார்த்தைகள்
நட்சத்திரங்களாய் கொட்டிக் கிடக்கின்றன!
நீ எனக்காக வடிக்கும்
கண்ணீரில் எல்லாம்
எனக்கான உன்
காதல் வழிகிறது
நீ கண்ணை மூடிக் கொண்டாய்
என் உலகம இருண்டு விட்டது!
எந்த ஜென்மத்தில் நான்
என்ன புண்ணியம் செய்தேனோ
நீ என் தெருவில் வசிக்கிறாய்
நீ வெட்கப்படுவதற்கும்
மழை ஆரம்பிப்பதற்கும்
சரியாய் இருக்கிறது!
உனக்கான என் காதல்
உன்னை சாதாரணப்
பெண்ணிலிருந்து
தேவதை ஆக்குகிறது!
நீ தூரத்தில் எங்கோ பேசுவது கேட்கிறது...
தேனீக்கள் என் காதுகளை
வட்டமடிக்கின்றன!
நீ என்னை ஓரக் கண்ணால் பார்
அடிக்கடி என்னை கடந்து செல்
உன் தோழிகளுடன் கூடிச் சிரி
என் கனவுகளில் வந்து போய்க் கொண்டிரு
நான் காதலில் திளைக்கிறேன்
வேறெதுவும் வேண்டாம் எனக்கு!
இக்கணம் இப்படியே இருக்கட்டும்
1. காக்கா எங்கே என்று அதுவும் கேட்கவில்லை,