தொடர் விளையாட்டுக்களில் புத்தக மிமீ ஒன்று தான் எனக்கு பிடித்தது. அது தான் மற்றவருக்கு கொஞ்சமாவது ப்ரயோஜனமாய் இருக்கும். நான் 8 மணிக்கு டெய்லி பல்லு விளக்குவேன் போன்ற சுயதரிசனத்தைக் கொண்டாடும் இந்த மாதிரி தொடர் விளையாட்டுக்களுக்கெல்லாம் நான் அதிகம் போவதில்லை. [கொஞ்சம் அடங்குறியா...] என்னுடைய ஆஸ்தான கமெண்டர் சிவமுருகன் கூட ஏதோ ஒரு விளையாட்டுக்கு என்னை கூப்பிட்டார். ஆளை விடுங்க என்று எஸ்கேப் ஆகிவிட்டேன். இப்போது சுரேஷிடம் வகையாய் மாட்டிக் கொண்டேன். சரி நாளுக்கு 4 வீதம், வாரத்துக்கு 30 பதிவா போட்றோம் [யாருப்பா அது, 4*7=28 தானேன்னு சொல்றது?] இது இப்போ முடியாது என்று அலுத்துக் கொள்வதற்கு! சரி, ஒரு கலாய் கலாய்ச்சிருவோம் என்று முயற்சித்திருக்கிறேன். இனி உங்கள் தலையெழுத்து...எல்லா பழியும், பாவமும், புகழும் சுரேஷ் கண்ணனுக்கே!!

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

நான் என்ன ரஜினிகாந்தா, ரோஜாவா? என் பெயர் காரணம் சுவாரஸ்யமாக இருப்பதற்கு? ஏதோ ஒரு காலத்துல, ஒரு ஊருல ஒரு ராஜாவாம் டைப் கதை கேக்கும்போது பிரதிவிராஜ் என்ற ஒரு ராஜாவைப் பற்றி என் பெற்றோர்களில் ஒருவர் கேட்டிருப்பார்கள் போலிருக்கிறது, அவர் ராணி சம்யுக்தாவை காதலித்து குதிரையில் தூக்கிச் சென்றாராம். நம்ம பையனும் இப்படி வீர தீர செயல்களை எல்லாம் செய்யனும்னு நினைச்சு எனக்கு அந்தப் பெயரின் தழுவலான என் பெயரை சத்தியமாய் என் பெற்றோர் வைக்கவில்லை...ஆனால் அந்தப் பெயர் வைத்ததன் காரணமோ என்னமோ, என் வாழ்க்கையில் கிட்டத்தட்ட அதே போலவே நடந்து விட்டது! [என்ன நடந்ததா? அதை இங்கெ சொல்லிட்டா, அப்புறம் என் ஆட்டோ பயாக்ரஃபில என்னத்தை எழுதுறது? சும்மா இருங்கப்பா]...ஏதோ பேரு வச்சதோடு நிக்காம, சோறு வச்சி இந்த அளவுக்கு வளர்த்து விட்டுருக்காங்களே, அதை நெனைச்சி சந்தோஷப்படுவீங்களா...

என் பெயர் பிடிக்குமா என்று கேட்டால், தெரியவில்லை. பெரிதாய் வருத்தம் ஒன்றும் இருந்ததில்லை. பள்ளியில் படிக்கும் காலத்தில் 3 பிரதீப்கள் இருந்தார்கள். [பாலாஜீக்கள் தனி..], அந்த 3 பிரதீப்புகளில் மிக மட்டமாய் படிக்கும் பிரதீப் நான் தான். ஒவ்வொரு பிரதீப்பாய் கூப்பிட்டு மார்க் ஷீட் கொடுக்கும் போது என் மார்க்கைப் பார்க்கும் போது என் பெயரின் மேல் எனக்கு எரிச்சலாய் வரும். பெயருக்கும் மார்க்குக்கும் என்ன சம்மந்தம் என்று தெரியவில்லை...குழந்தைகளுக்கு என் பெயர் அவ்வளவு எளிதில் வராது. பெடீப் என்று சொல்லும். அப்போது கொஞ்சம் எரிச்சல் வரும். மற்றபடி சின்ன வயதில் தமிழ் துணைப்பாடத்தில் [நான்டீடெயிலில்] படித்த மண்ணாங்கட்டியின் கதை ஞாபகம் வருகிறது. பெயரில் என்ன இருக்கிறது?

2) கடைசியா அழுதது எப்போது?

என் மனைவி இங்கே வருவதற்கு முன். என்னமோ தெரியலை, சென்னையில் கலகலவென்று இருந்து விட்டு, இங்கு சீண்டக்கூட ஆளில்லாமல் இருந்தது ஒரு மாதிரியாய் தான் இருந்தது. இருவரும் டைடல் பார்க்கில் ஒரே தளத்தில் வேலை பார்த்ததால், சேர்ந்தே போவது, சேர்ந்தே வருவது என்று இருந்து விட்டோம். திடீரென்று இத்தனை தூரம் பிரிந்தது என்னவோ போல் தான் இருந்தது..வேலையின் பளு காரணமாய் என் மனைவியிடம் சரியாய் கூட பேச முடியாத நிலை. என்னை மிஸ் பண்றியா என்று அவள் கேட்கும்போதெல்லாம், நான் எப்போதும் யாரையும் மிஸ் பண்ணியது கிடையாது, நான் ரொம்ப ப்ராக்டிகல், எனக்கு நானே போதும் என்றெல்லாம் ஓவராய் பீலா விட்டிருக்கிறேன். அது தான் உண்மை. ஆனால், ஒரு நாள் அவளிடம் பேசும்போது, உன் சட்டையை பக்கத்தில் வைத்துக் கொண்டு தான் தூங்குகிறேன் என்று அவள் சொன்னவுடன் அலுவலகம் என்று கூட பாராமல் அப்படி அழுதேன். மனைவியிடம் காதலை வெளிப்படுத்தக் கூட நாம் எவ்வளவு தயங்கியிருக்கிறோம் என்று அன்று புரிந்து கொண்டேன்..


3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

பிடிக்காமல்! அந்த ஒன்றை வைத்துக் கொண்டு கல்லூரியில் எல்லா பெண்களின் அசைன்மென்ட் நோட்டின் முகப்பில் அவர்களின் பெயர்களை டிசைன் டிசைனாய் எழுதி எத்தனை பசங்களின் வயித்தெறிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன்...பிடிக்காமல் எப்படி?

4) பிடித்த மதிய உணவு?

நான் இங்கு வந்த சமைத்த காலத்தில் தான் உணர்ந்தேன். எந்தக் கேணையன் நாளைக்கு 3 அல்லது 4 தடவை சாப்பிடனும்னு வரையுறுத்தியது? டெய்லி 3 வேளை என்னத்தை தான் சமைக்கிறது? அம்மாக்கள் பாடு எவ்வளவு கஷ்டம் என்று....எனக்கும் சாப்பாட்டுக்கும் உள்ள ஒரே உறவு உயிர் வாழ்தல் தான்...சாப்பிடுவது எனக்கு ஒரு வேலை...அவ்வளவு தான். மற்றபடி இது தான் என்று எதையும் சொல்வதற்கில்லை...

5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

கண்டிப்பாக! மறுகேள்வி இல்லாமல்.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

கேள்வியே அரைகுறை. மொதல்ல குளிக்க பிடிக்குமான்னு கேக்கணும்! ஐய்யோ, என்னை தப்பா நினைச்சிராதீங்க...மத்தவங்களுக்காகச் சொன்னேன். எனக்கு குளிக்க ரொம்ப புடிக்கும். யாருமே இல்லாத அருவியிலும், அலையே இல்லாத கடலிலும் குளிக்கப் பிடிக்கும். மிகவும் பிடித்தது கிணற்றடியில் இறைத்துக் குளிப்பது, ஷவர் பாத்![இல்லை தெரியாம தான் கேக்குறேன், இதனால யாருக்காவது பைசா ப்ரயோஜனம் இருக்கா?]

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

ஆண்களின் பாடி லேங்க்வேஜ், ட்ரஸிங் சென்ஸ், பெண்களின் ....நூற்றுக்கு தொன்னூறு ஆண்களைப் போல்! இதெல்லாம் நான் சினிமாவில் பெரிய ஸ்டார் ஆனவுடன் குமுதம் பேட்டியிலோ, விகடன் பேட்டியிலோ, வண்ணத்திரை பேட்டியிலோ சொல்லலாம் என்று இருந்தேன். அவசரப்பட்டுட்டீங்க...

8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பெற்றோர் தந்த முகம்
முடிந்தவரை நேர்மையாய் இருக்க முயற்சிப்பது
எல்லோரிடமும் சகஜமாய் பழகும் தன்மை
எதிராளியின் பார்வையிலிருந்து நோக்கும் திறன்
நகைச்சுவைத் திறன்
எழுத்து
ஓவியம்
சிந்தனை

சோம்பேறித்தனம்
அசட்டுத்தனம்
மறதி
என் உயரம் [கம்மி என்பதால்]
என் பல்வரிசை [நேர்மையால் இருப்பதால் வரும் பிரச்சனை...இதெல்லாம் எழுத வேண்டியிருக்கிறது! இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன், இல்லையென்றால் நேரில் என்னை பார்த்தால் எங்கே ஈ சொல்லுங்க என்று சொல்லப் போகிறீர்கள்!]

9) உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?

அவளுக்கு என் மீது இருக்கும் அளவு கடந்த காதல்
அவளுடைய அறிவு, சாமர்த்தியம், புத்திசாலித்தனம்
வாடிய பயிரைப் பார்க்கும் போதெல்லாம் வாடும் அவளின் இயல்பு

சோம்பேறித்தனம்
அவளுக்கென்று ஒரு நியாயம் [இது ஒரு வேளை எல்லா பெண்களுக்கும் பொருந்துமோ?]

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

இந்தக் கேள்வியும் குழப்புகிறது, யாராவது என் பக்கத்திலா அல்லது நான் யாருடைய பக்கத்திலாவதா?

முதலாவது, ராகினிஸ்ரீ மாதிரி என் பக்கத்தில் (அதாவது அலுவலகத்தில்) ஒரு பொண்ணில்லையே என்று![என்ன மனைவி திட்டுவாங்களா, அட விடுங்க பாஸ் அவங்க எப்பவுமே இப்படித் தானே...]

இரண்டாவது, (தமிழ்) சினிமாவின் பக்கம் நான் இல்லையே என்று!

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?

கருப்பு வெள்ளை கோடு போட்ட சட்டையும், க்ரே பேண்டும்.[இதுக்கு அந்தரங்கம் அழுக்கானதுன்னே எழுதியிருக்கலாம்...சுரேஷ் எல்லாம் உங்களை சொல்லனும்!]

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

பராக்கு பார்த்துக் கொண்டு...ஆபிஸில் பாட்டு கேட்டால் திட்ட மாட்டார்கள்? [அப்போ பதிவு போட்டால்?]

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

மயில் கழுத்து கலர்ல மாத்துறீங்களா? இல்லை ராமர் பச்சையில மாத்துங்க! இல்லை தெரியாம தான் கேக்குறேன், என்னை ஏங்க பேனாவா மாத்துறீங்க? என்னை நம்பி ஒருத்தி இருக்காளே, அவளை என்ன அப்போ பென்சிலா மாத்துவீங்களா? என்ன, எந்த வர்ண பென்சிலா? அட போங்கப்பா...

14) பிடித்த மணம்?

அப்பாவின் வாசனை
சந்தனம்
அந்துருண்டை
சாம்பிராணி
+ சுரேஷின் பதில்

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?

நான் இந்த மாதிரி தொடர் விளையாட்டுக்களில் யாரையும் இதுவரை குறிப்பிட்டு அழைத்ததில்லை. அதனால் முதல் கேள்வி அவுட்! இரண்டாவது கேள்விக்கு பதில், என்ன எழவைத் தான் எழுதுவது என்று முழி பிதுங்கி நிற்கும் அனைவரும் எழுதலாம். அல்லது உங்களையும் நம்பி ஒருவர் அழைத்தால் எழுதலாம். சோ, எல்லாரும் எழுதலாம்.

16) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

இந்தப் பதிவு என்று ஒன்றை சொல்ல முடியவில்லை. எனக்குப் புரியும் வகையில் அவர் எழுதிய அத்தனை எளிமையான பதிவுகளும் என்று சொல்லலாம். வலையுலகில் நான் தொடர்ந்து வாசிக்கும் மிகச் சிறிய லிஸ்டில் இவரும் ஒருவர்.

17) பிடித்த விளையாட்டு?

அம்மா அப்பா விளையாட்டு! ஹேய் குழந்தைகள் விளையாடுவதப்பா...

18) கண்ணாடி அணிபவரா?

இதற்கு ஆம் என்று பதில் சொன்னால், அடுத்த கேள்வி என்ன? சோடா புட்டியா? என்று கேட்பீர்களா? பதில், இல்லை!

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?

யதார்த்தமான வாழ்வை சுவாரஸ்யமாய் பதிவு செய்த படங்கள் பிடிக்கும். கொஞ்சமாவது லாஜிக் இருக்க வேண்டும். சினிமாவுக்கே உரிய ஃபேன்டஸி பிடிக்கும்...ரஜினி பறந்து பறந்து அடிக்கலாம். ஆனால் தனுஷ் அடிக்கக் கூடாது!

20) கடைசியாகப் பார்த்த படம்?

நேற்று அஞ்சாதே பார்த்தேன். மறுபடியும். நரேனின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு காமடியாய் இருந்தது...

21) பிடித்த பருவ காலம் எது?

என் வலைதளத்தின் பெயரை பார்த்து விட்டும், இப்படி எல்லாம் கேட்பது ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்!

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

ரா.கி.ரங்கராஜனின் பட்டாம்பூச்சி [மறுவாசிப்பு]
சுஜாதாவின் ஆ! [காலில் என்ன ஊர்கிறது, எறும்பா...ஆ]

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

என்னிடம் இருப்பது லேப்டாப்! [ஐய்யோ, என்னா அறிவு!!]

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

அருவியின் இரைச்சல்
நீரோடையின் சலசலப்பு
பலத்த காற்று
அமைதியான காட்டில், குயிலின் ஓசை
புகைவண்டி
மழலையின் அர்த்தமற்ற பேச்சு
எங்கோ ஒரு ரேடியோவில் கேட்கும் ஒரு பழைய பாடல்

போங்கப்பா, இந்த கேள்வி போர்! நெக்ஸ்ட்...

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?

மதுரையில் மஹால் 7வது தெருவில் இருக்கும் வீட்டிலிருந்து நியுதில்லி, சண்டிகார், ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, அமேரிக்கா...எப்போது வேண்டுமென்றாலும், கொடுங்கூற்றுக்கிரையாகலாம்! [அதற்குள் ஏதாவது செய்ய வேண்டும்!]

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

நான் ஒரு பிறவிக் கலைஞன் என்று எனக்கு சின்ன வயதில் இருந்தே ஒரு நினைப்பு. ஸ்ருதின்னா, பக்கத்து வீட்டு பாப்பாவா என்று நீங்கள் கேட்பவர் என்றால், நான் நன்றாய் பாடுவேன்! நான் நடனம் ஆடினால் அது நடனம் போலவே இருக்கும். சுமாராய் ஆடுவேன். அப்படி ஆடி ஒரு குட்டி டீசர்ட் போட்ட டீ.ஜேயிடம் [பேப் என்று தனியாய் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன்!] பரிசு வாங்கியதை இங்கே அளந்திருக்கிறேன். மனுஷ்யபுத்திரன் அளவுக்கு இல்லையென்றாலும், என் அப்பனுக்கு புத்திரன் என்ற அளவுக்கு கவிதைகள் எழுதுவேன். ஒரு அடித்தல் திருத்தல் கூட இல்லாமல் பேனாவினால் படம் வரைவேன். [கல்லூரிக் காலங்களில் செய்தது, இப்போது வருமா என்று தெரியவில்லை...யாரும் டெஸ்ட் வைத்து விடாதீர்கள்! இப்போதெல்லாம் டிஜிட்டல் ஓவியங்கள் தான், என்ன கழுதை கார்ட்டூன் தான் வர மாட்டேன் என்கிறது] நல்ல தாளம் அடிப்பேன் [காட்டுக் குயிலு மனசுக்குள்ள, வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்] எந்த பாட்டு என்று ஈசியாய் கண்டு பிடிக்கும் அளவுக்கு அடிப்பேன். அவ்வப்போது தேவயில்லாமல் ஓவர் ரியாக்ஷன் கொடுப்பேன். அதனால் எனக்கு நடிக்கவும் சுலபமாய் வரும் என்று தோன்றுகிறது...டைமிங் சென்ஸ் உண்டு. [மணி என்ன? பாத்தீங்களா...நான் சொல்லலை?] நேற்று கூட இப்படித் தான் தூங்கப் போகும் போது என் மனைவி ஹால் லைட்டை ஆஃப் செய்யுங்கள் என்றால். அதற்கு நான், ஒரு ஆணை பார்த்து ஆஃப் செய்ய சொல்கிறாய் என்றேன்! அதற்கு அவள் விவேக்கை போல், டேய் நோட் பண்ணுங்கடா..நோட் பண்ணுங்கடா என்று கலாய்த்தாள். தமிழ் சினிமாவைப் பற்றி கொஞ்சம் நிறையவே அறிவு உண்டு. [புதிய படங்களைத் தவிர்த்து!] இதை எல்லாம் விட, நடு சென்டரில் தலை கீழாய் நிற்பேன். இரு புருவத்தையும் தனித் தனியாய் தூக்க முடியும். இரு காதுகளை மட்டும் தன்னிச்சையாய் அசைக்க முடியும். இப்படிப் பல தனித் திறமைகள் உள்ள என்னை பார்த்து உங்களிடம் ஏதாவது தனித்திறமை, நோட் திஸ் பாய்ன்ட், தனித்திறமை என்று ஒருமையில் கேட்கிறீர்கள். வெட்கம்!

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

உலகம்:
இந்த உலகம் எல்லா வளங்களையும் கொண்டிருந்தாலும், ஆறறிவு படைத்த உயிரினம் என்று நம்மை நாமே பீற்றிக் கொண்டாலும், எல்லோருக்கும் எல்லாமும் என்ற எளிமையான ஒரு கோட்ப்பாட்டினை கடைபிடிக்கத் தவறி, எல்லைகள் வகுத்து, அன்பு நெறி தவறி...மனிதனே சக மனிதனை சாப்பிடுவது!!!!

இந்தியா:
எந்த ஒரு தகுதியும், தராதரமும் இல்லாமல் ஜனநாயகத்தின் பேரைச் சொல்லிக் கொண்டு கண்ட கருமாந்திரங்கள் அரசியலில் குதிப்பது [ஏன், நீ குதி என்கிறீர்களா?]
இந்தத் தள்ளாத வயதிலும் விடாமல் பதவியில் அமர்ந்து கொண்டு ஒரு மாநிலத்தையே குடும்பச் சொத்தாக பிரித்துக் கொள்வது
ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் இருக்கும் அந்த கேடுகெட்ட சகிப்புத்தன்மை, எதையும் மறந்து விடும் மனப்போக்கு, சுயஒழுக்கமின்மை இப்படி எத்தனையோ [என்னையும் சேர்த்துத் தான்!]

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

ஏன் இவ்வளவு நேரம் என் இமேஜ் டேமேஜ் ஆனது பத்தாதா? அப்புறம் சாருவுக்கும் எனக்கும் வித்தியாசம் வேண்டாம்...

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

ஸ்விச்சர்லாந்து! இனிமேல் தான் போக வேண்டும். தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால், நீளமான ஜாக்கெட், கணமான பேண்ட், உயரமான பூட்ஸ் எல்லாம் போட்டுக் கொண்டு, ஒரு கர்சீப்பை கட்டிக் கொண்டிருக்கும் ஹீரோயினுடன் அந்த ஊரில் உள்ள ஒரு அழகான, அமைதியான சாலையில் நின்று கொண்டு கேடுகெட்ட ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடலாம்! [ஆமா, அது என்ன மாதிரியான ரசனை?]

30) எப்படி இருக்கணும்னு ஆசை?

எளிமையான வாழ்க்கை. தெளிவான சிந்தனை!

31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

நண்பர்களுடன் நைட் ஸ்டடி...[டேய் அவ நிஜம்மா உன்னை பாக்குறா மச்சான்...]

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க

சூஸ் தி பெஸ்ட் ஆன்சர்!

வாழும் போது மற்றவருக்கு பயனாய்; வாழ்ந்த பிறகு மற்றவருக்குப் பாடமாய்!

வாழும் போதும், வாழ்ந்த பிறகும், வாழ்வது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் எழுதிய மற்ற தொடர் பதிவுகள்:

இந்திரன் கெட்டதும் சந்திரன் கெட்டதும்

பெய்யெனப் பெய்யும் மழை - சிறு குறிப்பு வரைக

கற்றதும் பெற்றதும்

4 Responses
 1. ப்ரதீப். கலக்கல். உங்களின் வழக்கமான பன்ச்களுடன். நன்றி.


 2. suresh,

  ennayum nambi azhaikkirathukku nandrigal pala...

  pradeep


 3. amazing pradeep .. amazing :) you r such a good writer :)

  Suresh C Nair


 4. Hey Suresh,

  Thanks a lot for ur comments.

  Pradeep