ஹே!!! எல்லாம் ஜோரா கை தட்டுங்க. அண்ணன் ஒரு போஸ்ட் போட போறேன்!! ம்ம்ம்.... சென்ற வருடம் மார்ச் மாதம் பத்தொன்பதாம் தேதி நான் வலைப்பதிவு ஆரம்பித்து 6 வருடங்கள் ஆகி விட்டதென எழுதி என்னுடைய சின்னத்தையும் சற்று மாற்றி அமைத்திருந்தேன். இந்த வருடம் அதை ஒரு பதிவிட்டுக் கூட என்னால் கொண்டாட முடியவில்லை. போகிற போக்கை பார்த்தால் ஒவ்வொரு மார்ச் மாதம் பத்தொன்பதாம் தேதி மட்டும் தான் பதிவே போடுவேன் என்று நினைக்கிறேன். நான் பதிவிடாததால் உலகம் ஒன்றும் அழிந்து விடவில்லை. ஜப்பான் மற்றும் கொஞ்சம் அழிந்தது! காலையில் ஒரு செய்தி படித்தேன். முற்றிலும் சேதமடைந்த ஒரு சாலையை பத்து நாட்களில் சரி செய்து விட்டார்கள். அசகாய சூரர்களாய் இருக்கிறார்கள். இப்படியே போனால், ஒரு மாதம் கழித்து அப்படி ஒரு பேரழிவு அங்கு நடந்ததா என்றே நமக்கு சந்தேகம் வந்து விடும். நம் நாட்டைப் பற்றி முன்னே தெரிந்து தான் இயற்கை நமக்கு எரிமலைகளையும், பூகம்பங்களையும், சுனாமிகளையும் அதிகம் தரவில்லை என்று நினைக்கிறேன்.

சரி கதைக்கு வருவோம். இதைப் பற்றி இத்தனை நாட்கள் வரை எழுதாமல் இருப்பது எனக்கே ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. முயலாமல் இல்லை. என்ன தான் யோசித்தாலும் அத்தகைய ஒரு படைப்பாற்றலுக்கு, கலை நேர்த்திக்கு அணி சேர்க்கும் வகையில் என்னால் எழுத முடியவில்லை. அது தான் உண்மை! பீடிகை பலமாய் இருக்கிறதோ! சொல்லி விடுகிறேன். இந்தப் பதிவு உலகறிந்த ஒரு தொலைக்காட்சி நாடகத்தைப் பற்றியது. இதை நாடகம் என்று சொல்வது சரியாய் இருக்குமா என்று தெரியவில்லை. ஆங்கிலத்தில் இதை சிட்காம் என்று கூறுகிறார்கள். 

இது அமெரிக்காவின் தொலைக்காட்சிகளில் வந்த ஒரு நெடுந் தொடர் பற்றியது.  நெடுந்தொடர் என்றால் உண்மையிலேயே நெடுந்த்த்த் தொடர். 1994 லிருந்து 2004 வரை பத்து ஆண்டுகள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி அமெரிக்காவின் அத்தனை பேரையும் கட்டி வைத்திருந்த ஒரு காமெடி தொடர்.  ஃ ப்ரெண்ட்ஸ்! ஆறு நண்பர்களை கொண்டு அவர்களின் வாழ்வினூடே ஒரு உணர்ச்சிப் பூர்வமான கதைக் களத்தை வைத்துக் கொண்டு பார்வையாளர்களுக்கு எந்த விதத்திலும் சலிப்பூட்டாமல் சிரிக்கச் சிரிக்கப் பத்து வருடங்கள் ஜமாய்த்திருக்கிறார்கள்! நண்பர்களின் பேச்சிலர் நாட்களில் உள்ள அத்தனை குதூகலங்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், ஒரு வழியாய் படித்து முடித்து, அதற்கு ஒரு கும்பிடு போட்டு, நமக்கு ஏற்ற ஒரு வத்தல் தொத்தல் வேலை சிக்கியதும் (முக்கியமாய் சொந்த ஊரிலிருந்து தொலைவில்) அந்த இருபத்தி மூன்றிலிருந்து இருபத்தி ஆறு, இருபத்தி ஏழு வயது வரை (மெல்ல வீட்டில் கல்யாண பேச்சு எடுக்கும் வரை) நண்பர்களுடன் அறை எடுத்துத் தங்கி, பெண்கள், சினிமா, கிரிக்கெட் என்று கழியும் பொன்னான பொழுதுகள் எத்தனை அருமையானவை. அப்படி ஒரு நண்பர்களைப் பற்றிய கதை தான் ஃபிரெண்ட்ஸ். இதை பார்த்தால் போதும், அமெரிக்காவின் கலாச்சாரம், நாகரிகம், வேலை, காதல், வாழ்வியல் தரம் அத்தனையும் உங்களுக்கு ஓரளவுக்கு புரிந்து போகும் என்று நினைக்கிறேன். அதுவும் வயிறு வலிக்க சிரித்துக் கொண்டே! 

சாம்பிளுக்கு சில

இது....மெகா சீரியல்! நம் நாட்டிலும் எடுக்கிறார்களே!! அடுத்தவன் குடியை கெடுக்க வேண்டுமா? பாருங்கள் மெகா சீரியல்ஸ்! திங்கள் முதல் வெள்ளி வரை....தினமும்!! நம் தமிழ் சீரியல்களை பார்த்து விட்டு நம்மால் நிம்மதியாய் தூங்க முடியுமா? க்ளோசப் என்ற பெயரில் கண் இமையில் உள்ள ஒரு முடியை மட்டும் ஐந்து நிமிடம் காட்டுகிறார்கள்! அதற்கு பேரிரைச்சலாக ஒரு பின்னணி இசை(!!??) சாரி, இம்சை வேறு!! நம் நாட்டின் மெகா சீரியல்களை கிண்டலடித்து விவேக் செய்த காமெடி பிரசித்தம்! இதோ பாருங்கள்...


பத்து வருடங்கள் ஒரு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துவது சாதரணமான விஷயமில்லை. ஏதாவது டாக் ஷோ என்றாலும் பரவாயில்லை, சமாளித்து விடலாம்! இதில் வருவது போல் பல வித திருப்பங்களுடனும், கதைகளுடனும் கொஞ்சம் கூட "சுவாரஸ்யம் குறையாமல்" தொடர்ந்து பத்து வருடங்களை சமாளித்தது என்னை பொறுத்த வரை மிகப் பெரிய ஆச்சர்யம். இதில் ஆறு நண்பர்களில் ஒருவராக (ஃபீபி) நடித்த பெண் உண்மையில் கர்ப்பமடைந்து விட்டார். அதற்கேற்றார் போல் மிகச் சுவாரஸ்யமாக கதையை அமைத்தார்கள். இதனுடைய பிரபல்யத்தை பார்த்து விட்டு, ஒரு காட்சியாக இருந்தாலும் சரி என்று எத்தனையோ ஹாலிவுட் நடிகர்கள் நடிக்க வந்தனர்!  நானும் இதை பார்த்து விட்டு, இதை போல் நாமும் ஒரு எபிசோட் எழுதி பார்க்கலாமே என்று பார்க்கிறேன். ம்ஹும்! சீரியஸ் சீரியல் மொக்கைகள் பத்தாதென்று காமெடி என்ற பெயரில் மொக்கைகள் போட்டு தமிழ்நாட்டு ஜனங்களை நான் சைக்கோவாக மாற்ற விரும்பவில்லை.

ம்ம்ம்....என்னுடைய அனுபவத்தில் இது ஒரு மிகச் சிறந்த ஸ்ட்ரெஸ் பஸ்டர்! என்ன கவலையில் இருந்தாலும் அந்த ஆறு பேரையும் அவர்களின் வாழ்க்கையையும் யோசித்தால் போதும், எனக்கு ஒரு ரிலீஃப் கிடைக்கும். நகைச்சுவை தான் எத்தனை சிறந்த மருந்து! அதே சமயம் இவர்கள் நேரத் திருடர்கள்! நேரம் காலம் போவது தெரியாமல் பார்க்கத் தொடங்கி விடுவீர்கள், ஜாக்கிரதை!! இதன் டிவிடிக்கள் ஒன்றிலிருந்து பத்து சீசன் வரை கிடைக்கிறது (சப் டைட்டிலுடன் தான்!) வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். நிதானமாய் பாருங்கள். you will really enjoy it!


பிறை நிலவை பார்க்கிறேன்
அதனுடைய தற்போதைய நிலை...
அமாவாசையை நோக்கியா, 
பௌர்ணமியை நோக்கியா?

விளம்பரப் படத்திற்கு ஸ்க்ரிப்ட் எழுதி வெகு நாட்கள் ஆகி விட்டது. யோசித்துப் பார்க்கலாமே என்று தோன்றியது. எனக்கு வள வளவென்று பேச்சும் பாட்டும் கூச்சலும் (ஓரம்போ விலகு விலகு ஓரம் போ வகையறாக்கள்) உள்ள விளம்பரங்கள் பிடிப்பதில்லை. (சினேகா, ஸ்ரேயா வரும் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்கள் இதில் சேர்த்தியில்லை :)  சாமர்த்தியமாய், அழகாய் ஒரு கவிதையாய் கொண்டு வந்து விஷயத்தை பொட்டில் அடித்த மாதிரி சொல்ல வேண்டும் (வோடோஃபோன் வகையறாக்கள்). அப்படி ஒரு யோசனையை ஓட விட்டதில் சிக்கியது: ஒரே சிந்தனை தான்; ஆனால் இரு வேறு வகைகளில் அளிக்கிறேன். இது எதைப் பற்றிய விளம்பரம் என்று நான் வெளிப்படையாய் சொல்லப்போவதில்லை. நீங்களே யூகியுங்களேன். என் பின்னூட்டப் பெட்டி இருக்கவே இருக்கு! 

Presentation 1:

திரையில் கீழ் காணும் வாசகம் தோன்றி மறைகிறது.

Scene 1: These people are lucky...
Scene 2: சிறுவர் முதல் குமரர் வரை வெவ்வேறு மனித முகங்கள், அவர்களின் மகிழ்ச்சியான தருணங்கள், மெல்லிய புன்னகைகள், அட்டகாசமான சிரிப்புக்கள், ஆச்சர்யம் கலந்த பார்வைகள் என்று திரையில் தோன்றி மறைகிறது. [should be classic captures...]
Scene 3: And they are not! என்ற வாசகம் தோன்றி மறைகிறது.
Scene 4: பச்சிளம் குழந்தைகள், மிகவும் வயதான முதியவர்களின் சிந்தனை கலந்த அல்லது சோகம் பொதிந்த முகங்கள் தோன்றி மறைகிறது. 
Scene 5: விளம்பரப் பொருளின் படம். விளம்பர வாசகத்தோடு திரையில் தோன்றுகிறது.

Presentation 2:

Scene 1: ஒரு பெரிய பல் பொருள் அங்காடி! ஒரு குறிப்பிட்ட பொருள் கிடைக்கும் இடம். ஒரு தள்ளாத வயதானவர் அந்த இடத்தை நோக்கி அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டே வருகிறார். திடீரென அவரின் பார்வை அந்தப் பொருளில் நிலை குத்தி நிற்கிறது. 
Scene 2: அவரின் முகத்தில் கவலையின் ரேகை! டைட் க்ளோசப்பில். அவரின் கண்களில் கண்ணீர். அடக்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறார். 
Scene 3: ஒரு தாய் கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு அதே இடத்திற்கு வருகிறாள். அந்தக் குழந்தை அந்தப் பொருளைப் பார்த்ததும் அதை கை காட்டி கதறி அழுகிறது.
Scene 4: அந்த முதியவரும், குழந்தையும் பார்த்த இடம் திரையில் காட்டப்படுகிறது. விளம்பர வாசகம்!

என்ன புரிந்ததா? இப்போது சொல்லுங்கள், இந்த விளம்பரம் எதைப் பற்றியது என்று! விடையை கமண்டுங்கள்! தெரியவில்லை என்றால் அடுத்த பத்தியில் பதில் உள்ளது, வெள்ளை எழுத்துக்களில்...மௌசினால் செலக்ட் செய்து பாருங்கள்!

இது ஒரு பற்பசை விளம்பரம். கண்டுபிடித்தீர்களா? இதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்ததும் பற்களே காட்டாமல் பற்பசை விளம்பரம் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். முடியவில்லை! இருந்தாலும் முடிந்தவரை முயற்ச்சித்திருக்கிறேன். கமண்டுங்கள்!

சில நாட்களாய் ஒரு யோசனை. நாமும் ஒரு வலைப்பூ ஆரம்பித்தால் என்ன? சத்தியமாய் எனக்கு நானே கேட்டுக் கொண்ட கேள்வி இது! நாம் தான் கதை, கட்டுரை, கவிதை என்று எழுதாத விஷயமே இல்லையே. கரகாட்டக்காரன்ல கவுண்டமணி காரை மைசூர் மகாராஜா முதல் சொப்பன சுந்தரி வரை வச்சிருந்த மாதிரி, நாட்ல எல்லாரும் ஒரு செல்போனையும் வலைப்பூவையும் வச்சிருக்கன்; நாமும் ஏன் ஒரு வலைப்பூவை வச்சிக்க கூடாது என்று ஒரு கேள்வி? ஒரு வலைப்பூ ஆரம்பிச்சி, அதுல வந்தது போனது எல்லாம் எழுதி, கிடைக்கிற எடுத்துள்ள எல்லாம் பின்னூட்டமிட்டு, எல்லா வலைப்பதிவர்களின் சந்திப்பிலும் கலந்துட்டு, புத்தக விழாக்களுக்கு தலை காட்டி, அப்படியே நாலு பதிப்பாளர்களை கையில் போட்டுக் கொண்டு, நாமும் நாலு புஸ்தகம் எழுதி, அப்படியே முதலமைச்சராயிட்டா [இதானே ஒவ்வொரு தமிழனோட லட்சியம்!?] என்ன? அப்படி ஒன்னை ஆரம்பிச்சிட்டா, அப்புறம் கூகுலாரிடம் சென்று "espradeep" என்று டைப் அடித்தால் போதுமே, நம்முடைய வலைப்பதிவு முன்னால் வருமே அது எத்தகைய வளர்ச்சி, எத்தகைய கிளர்ச்சி [சி, சீ] என்று ஒரு எண்ணம். அதெல்லாம் சரி இப்போது கூகுலாரிடம் என் பேரைக்  கேட்டுப் பார்த்தால் என்ன தான் வருகிறது என்று பார்ப்போம் என்று பார்த்ததில் தான் தெரிந்தது, எனக்கு ஏற்கனவே ஒரு வலைப்பூ இருக்கிறது அதை நான் அடிக்கடி மறந்து விடுகிறேன் என்பது! [எப்படி ட்விஸ்ட்டு?]


சத்தியமா, சொல்றதுக்கு ஒன்னுமில்லீங்க! மாசத்துக்கு ஒண்ணுன்னு ஆகிப் போச்சு நம்ம எழுத்து. முந்தி வாரத்துக்கு ஒரு தடவை இதை பத்தி ஒரு பதிவைப் போட்றனும்னு தோணும், அப்படியே அது படிப் படியா குறைந்து மாசத்துக்கு ஒண்ணுனு வந்து நிக்குது. அது என நிக்குது, நானா புடிச்சி இழுக்க வேண்டியிருக்கு. அதான் மேலே சொன்னாப்புல சில பல ட்விஸ்ட்டுகளை எல்லாம் கொடுக்க வேண்டி இருக்கு. இப்போ வரைக்கும் அடுத்த பத்தியில என்ன எழுதப் போறேன்னு தெரியாது! "அண்ணன் எந்த புள்ளையும் பாத்து இப்படி எல்லாம் ஆப் ஆனதில்லைடா..." எத்தனை தடவை பாக்குறீங்க? அதை விடவா இதெல்லாம் ஒரு சோதனை? மேலே...


ஆ! புடிச்சிட்டேன். படிங்க...."எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம்" என்று டீவியில் ஒரு விளம்பரம் பார்த்திருப்பீர்கள்! நீங்களும் என்னை போல் சினிமா விரும்பி, அதிலும் பழைய சினிமா வரலாற்றைப் பற்றி அறிய ஆவலாய் உள்ளவர் என்றால் இந்நேரம் இந்த டீவிடீயை வாங்குவதற்கு கட்டம் கட்டி வைத்திருப்பீர்கள். உங்களுடைய இருநூற்றி ஐம்பது ரூபாயை காத்த பெரும் பேரு எனக்கு கிடைக்கட்டும். தயவு செய்து வாங்காதீர்கள்! "எம்.ஜி.ஆர், சத்தியபாமா என்ற புனிதவதிக்கு கடைசி மகனாகப் பிறந்தார்!" இது செய்தி. உடனே ஒரு பாட்டு, தாயில்லாமல் நானில்லை, தானே எவரும் பிறந்ததில்லை! பாட்டு போடட்டும், இரண்டு வரி போதாதா? பாடல் முழுவதும் வருகிறது. இதற்கு எம்.ஜி.ஆரின் தத்துவப்பாடல் சீடியை வாங்கி இருந்தால் 20 ரூபாயில் முடிந்திருக்கும். கந்தரகோலம்! இப்படி எடுத்ததுக்கெல்லாம் பாட்டாய் போட்டு எம்.ஜி.ஆரின் கலையுலக வாழ்க்கையை முடித்து விட்டார்கள்.  அரசியல் இரண்டாம் பாகம் என்று டைட்டில் போட்டு முடித்து விட்டார்கள். அது இதிலேயே வருகிறதா அல்லது அதற்கு இன்னொரு டீவிடீயை வாங்க வேண்டுமா என்று நான் பார்க்கவில்லை. அடப் பாவிகளா, ஃபிலிம் நியுஸ் ஆனந்தனிடம் சொல்லியிருந்தால் அக்கு வேறு ஆணி வேறாய் எம்.ஜி.ஆரின் சினிமா விஷயங்களை பிரித்துக் கொடுத்திருப்பார். அது ஒரு அற்புதமான கலவையாய் பார்க்க சுவாரஸ்யமாய் இருந்திருக்கும். உண்மையை சொல்லப் போனால் ராஜ் டீவியின் எந்த சீடிக்களும் எனக்கு திருப்தி அளித்ததில்லை. முன்பு ஒரு முறை மகாநதி வாங்கினேன். பிரிண்ட் கூவம் நதியை விட மோசம். க்ளைமேக்ஸ் இல்லை. படமும் ஆங்காங்கே நின்று விடுகிறது. தரமே இல்லை. எல்லாம் தெரிந்திருந்தும் அதையும் மீறி விளம்பரங்களில் எம்.ஜி.ஆரின் மேக்கப்பில்லாத அந்த பொலிவான முகத்தைப் பார்த்து இந்த முறையும் ஏமாந்து விட்டேன். வாத்தியார் சொன்ன மாதிரி  "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?"


நல்ல வெயிலில் செம்மொழிப் பூங்கா சென்று வந்தேன். தேசிகனுடனும், மற்ற வலைபதிவர்களுடனும் 2005 ல் அது வுட்லேண்ட்ஸ் ஆக இருந்த போது சுஜாதாவை சந்தித்தது ஞாபகம் வந்தது. அது ஒரு நிலாக்காலம்! எனக்கு என்னமோ பூங்காவை விட டிரைவின் தான் பசுமையாய் இருந்தது போலத் தோன்றியது! ஒரு வேளை அன்று நான் சென்றது மாலையில் என்ற காரணத்தினால் அப்படித் தெரிந்திருக்க வாய்ப்புண்டு! செம்மொழிப் பூங்காவை விட ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் மிகப் பழமையான மரங்களைப் பார்த்தேன். அது தான் காடு போல் காட்சி அளித்தது என்று சொல்ல வேண்டும். அந்த மாதிரி சில ஏரியாக்களில் தான் பழைய சென்னை காணக் கிடைக்கிறது என்பது என் அபிப்ராயம்!


நீண்ட நாட்களுக்குப் பிறகு மைனா பார்த்தேன். இன்று லோக் சபாவில் "எக் துஜே கே லியே" பார்த்தேன். பின்னதில், க்ளைமேக்ஸ் இயற்கையாய், புதுமையாய் இருந்தது. முன்னதில், க்ளைமேக்ஸ் செயற்கையாய் புகுத்தியது போல் இருந்தது. கமலுக்கு ரதி குட்! விதார்த்துக்கு அமலா பால்!? நான் ஹீரோ ஆகியே தீர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் போலும்! [ஆண்டவா, இந்தியாவை காப்பாத்து! [உபரித்தகவல்: எனக்கு ஹிந்தியும் தெரியும்!]] மந்திரப் புன்னகை [மீனாட்சியை மட்டும்] பார்த்தேன். சமயத்தில் அவரின் எடுப்பான....பல் வரிசை ஸ்ரேயாவை ஞாபகப்படுத்துகிறது.

புது வருடத்தில் எல்லோருக்கும் என் புது வணக்கம். வழக்கமாய் புது வருடத்தின் முதல் செய்தியே முந்தைய இரவு டாஸ் மார்க்கின் வியாபாரம் என்ன என்பது தான்! ["குடி உயர அரசுயரும்" என்று வள்ளுவர் சரியாய் தான் சொல்லியிருக்கிறார்!!] அப்புறம், எல்லோரும் முறிப்பதற்காகவே ஒரு தீர்மானம் மேற்கொண்டிருப்பீர்கள். இல்லை, தீர்மானமே இனி எடுப்பதில்லை என்ற ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கிறேன் என்று அதிமேதாவி ரேஞ்சுக்கு ஃ பீல் செய்திருப்பீர்கள்! [நாங்க எவ்வளவு பண்ணியிருப்போம்!] வருடத்தின் முதல் நாள் என்ன செய்கிறோமோ, அதையே வருடம் முழுவதும் செய்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது! அந்த நம்பிக்கை உண்மையா பொய்யா, பலிக்குமா, பலிக்காதா என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது, அது நம்பிக்கை! அவ்வளவு தான். அந்த முடிவோடு நேற்றே ஒரு பதிவை எழுதினாலாவது வருடம் முழுதும் பல பதிவுகள் எழுதுவோமோ என்னமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நேற்று முடியவில்லை. அதனால் நீங்கள் எல்லோரும் என்னுடைய தொடர் மொக்கைகளிளிருந்து தப்பித்து விட்டீர்கள் என்று வழக்கமான ஒரு மொக்கையை போட நான் விரும்பவில்லை. 

சத்தியமாய் இப்போது வரை என்ன எழுதப் போகிறேன் என்று எனக்கே தெரியாது. இப்படியெல்லாம் இவன் எழுதுவான், இதை நான் படிக்கணும், எனக்கு என்ன தலையெழுத்தா என்றெல்லாம் நினைக்காதீர்கள். நீங்கள் சாருவை படிப்பவர் என்றால் அப்படி எல்லாம் நினைக்க மாட்டீர்கள் என்று எனக்கே தெரியும். அதனால் தொடருங்கள்!

உறவினர் ஒருவரின் குழந்தை (கிட்டத்தட்ட 3 வயது) அதனுடைய உயரம் அளவிற்கு ஒரு மெடல் சுமந்து வந்து காட்டியது. சில்வர் கலரில் இருந்தது. அவன் அம்மா ஓட்டப்பந்தயத்தில் ஜெயித்தான் என்றார்கள். இத்துனூண்டு குழந்தைக்கு ஒரு ஓட்டப்பந்தயம் அதற்கு ஆள் உயரத்துக்கு ஒரு மெடல் வேறா என்று நான் வியந்து கொண்டிருந்தேன். அதற்கு அவர்கள், அதை என் கேட்கிறீர்கள், ஃ பஸ்ட் ப்ரைஸ் வாங்க வேண்டியது, செகண்ட் தான் கிடைத்தது என்றார்கள். ஏன் வேகமா ஓடலையா என்றேன். இல்லை இல்லை, நல்லா ஓட்டிட்டு இருந்தான், கிட்ட வந்ததும் எல்லாரும் கை தட்றதை பார்த்து அவனும் நின்னு கை தட்ட ஆரம்பிச்சுட்டான் என்றார்கள். சோ க்யுட்!

ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு சுவாரஸ்யமான ஆசாமி. ஒன்வேயில் செல்லும்போது போலீஸ் உங்களை பார்த்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கினார். போலீசின் கண்களும் உங்கள் கண்களும் மோதியதும் (என்ன கவித்துமான தருணம்!) அவர் உங்களை அழைக்க கை ஓங்குவதற்கு முன் நீங்கள் உங்கள் கையை காட்டி நான் உங்களிடம் தான் வருகிறேன் என்று அவரை நோக்கி செல்ல வேண்டும். அவர் உங்களை கேள்வி கேட்பதற்கு முன் சார், இந்த ரோட்டுக்கு எப்படி போகணும்? இந்த தெருவுக்கு எப்படி போகணும் என்று ஒரு பிட்டை போட வேண்டும். அவர் டென்ஷன் ஆகி "யோவ், அது அந்த பக்கம் போகணும்யா, போய்யா அட்ரஸ் தெரியாம ஒன்வேல வந்துட்டு..." என்று சத்தம் போட்டு அனுப்பி விடுவார், விடுவாராம்! முயற்சித்து பாருங்கள். அவர் சைடில் ஏதாவது கேட்டால் நீங்கள் நேராய் கமெண்ட்டில் வந்து என்னை கேட்காதீர்கள்!

ஆமாம், இந்த சென்னைக்கு என்ன ஆகிவிட்டது? எப்போது பார்த்தாலும் மேக மூட்டமாய், குளிர் காற்றுமாய், சாரலைத் தூவிக் கொண்டு கண்றாவியாய் அல்லவா காட்சி தருகிறது! ஒரு வேளை அடுத்த கிருஸ்த்துமசுக்கு பனி பெய்யுமோ? க்ளோபல் வார்மிங்கானால், சென்னை கூளிங்காமோ?  புது வருடமும் அதுவுமாய் இப்படி ஒரு மொக்கையை நான் இதுவரை போட்டதே இல்லை! என்னாலேயே தாங்க முடியவில்லை! வருகிறேன். 

வானுயர்ந்த கண்ணாடி கட்டிடங்கள் - வாழ்க்கை
தொலைந்து போகும் கருஞ் சிறைகள்

வயிறு வரை தொங்கும் கழுத்துபட்டை கெளரவம் - ஒரு
நாள் மறந்தால் உள்ளே அனுமதி மறுக்கும் கேவலம்

சுற்றிலும் பராமரிக்கப்படும் அழகு - பார்வை
கணினியைத் தாண்டாது, பிறகு?

சுழலும் நாற்காலியின் சொகுசு - முதுகுத்
தண்டை பதம் பார்க்கும் பிறகு

இணையத்தினால் கைக்குள் உலகம் - ஆனால்
பக்கத்தில் இருப்பவனுக்கு மின்னஞ்சல்

உடல் உழைப்பின் அசதியில்லை - நெஞ்சு
சட்டென்று நின்று போகும் வரை, பயமில்லை

வேண்டிய மட்டும் பணம் - அள்ளி 
அள்ளிக் கொடுத்தாலும் திரும்பாத காலம்

ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்குச் சட்டை - முப்பத்தைந்து 
வயதில் தலை முழுதும் சொட்டை

ஐம்பது லட்சத்தில் வசதியாய் வீடு - படுக்கை
அறை தெரியாது, அசதியாய் வரும்போது

வெள்ளைக்காரனின் பெயர்கள் மனப்பாடம் - மனைவி
மக்களின் பெயர் மறந்து போகும் 

விலையேற்றத்துக்கான பிரதான காரணமென்று தூற்றும் - இருந்தும் 
ஒட்டு மொத்த சமுதாயமும் கூடிச் சுரண்டும்


மன் என்ற மன்னாருக்கும், மதன் என்ற மதனகோபாலுக்கும், அம்பு என்ற அம்புஜாக்ஷிக்கும் நடக்கும் இல்லை மிதக்கும் காதல் கலாட்டாகளின் கலவை மன் மதன் அம்பு! ஒரு சேஞ்சுக்கு வலையுலகின் எந்த விமர்சனமும் படிக்காமல், கதை தெரியாமல், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் பார்த்தால் நன்றாகத் தான் இருக்கிறது. நங்கநல்லூர் வெற்றிவேல் தியேட்டர் தமிழ்நாடு மாதிரி, வந்தவருக்கெல்லாம் டிக்கட் கிடைக்கும். ஆனால் என்ன, சங்கூதுற வயசுல சங்கீதா மாதிரி ஒட்டடை பிடித்த அந்த பாழடைந்த கட்டிடத்திற்கு டீடிஎஸ், ஏசி என்று கொஞ்சம் அரிதாரம் பூசி விட்டிருப்பார்கள். முதுகு வலிக்காரர்கள் அமர ஏதுவான நாற்காலி. கொஞ்சம் கூட முன்னும் பின்னும் நகராது, சாயாது!  கொடுமை என்னவென்றால் இங்கு  ஃ பஸ்ட் கிளாஸ் 80/, பால்கனி 100/, பாக்ஸ் 120/ ரொம்ப ஓவர். ஃ பஸ்ட் கிளாசுக்கு கீழ் கிளாசே இல்லை. முன் இருக்கைகள் அத்தனையும் காலியாய் கிடக்கின்றன. நாட்டில் எல்லோரையும் ஃ பாஸ்ட் கிளாஸ் சிட்டீசனாக நடத்துவதே இது போன்ற சில தியேட்டர்கள் தான்!

படத்தின் முதல் பாதி திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வாவை அப்படியே வாயில் போட்டுக் கொண்டால் எப்படி வழுக்கிக் கொண்டு போகுமோ அப்படி வழிந்து செல்கிறது. அழகான அடக்கமான கதை. அதற்கேற்ற கச்சிதமான திரைக்கதை. ஆங்காங்கே சில நச் வசனங்கள். ரம்மியமான ஒளிப்பதிவு ...முதல் பாதி! ஆனால் அப்படியே ஒரு அழகான நீரோடை போல செல்ல வேண்டிய கதை இடைவேளைக்குப் பிறகு கமலிடம் உள்ள கிரேசி மோகன் பாதிப்பினால் தடம் மாறி விடுகிறது. தசாவாதராத்திலும் தேவையில்லாமல் கிரேசி மோகன் டைப் சீன்களையும், வசனகளையும் வைத்திருந்தார். அதே போல் இதிலும்! இந்த ஆள் மாறாட்டக் குழப்பங்களிலிருந்து தமிழ் சினிமா மீள வேண்டும். அதிலும் முக்கியமாய் கமல் படங்களில். போதும் சார்!

மாதவனின் குடிகார நடிப்பு அற்புதம். அவரின் அந்த நடிப்பை "பார்த்தாலே பரவசம்" படத்திலேயே கவனித்திருக்கிறேன். (டேய், என்னடா பேர் எல்லாம் சொல்லி கூப்பிடறே?அவன் எவ்வளவு கருப்பு தெரியுமாடா? என் பக்கத்துல நிக்க முடியுமாடா அவன்?), அவர் நன்றாய் குடிகாரராய் நடிப்பார் என்பதற்காக, வெனீஸ் வந்த பிறகும் அவர் தண்ணீரிலேயே மிதப்பது போல் காட்டியது எல்லாம் ரொம்ப ஓவர். தன் காதலி அடுத்தவனிடம் ஊர் சுற்றுகிறார்,  இதனால் அவருடனான தன் திருமணத்தை முறித்துக் கொள்ள வரும் ஒருவர் இப்படி போதையிலா உழல்வார்? டூ மச்! அதிலும் ஒரு கன்னிப் பெண்ணின் மேல் சந்தேகப்படும் அந்த கேரக்டர், மணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள ஒரு டைவர்சியிடம் அவள் இரண்டு பாடல்கள் பாடி விட்டார் என்பதற்காக காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். சேட்டை தானே? ஆனால் அதை எல்லாம் நம்மை யோசிக்க விடாமல் அதையெல்லாம் சாமர்த்தியமாய் காமெடியால் மறைத்து விடுகிறார் எழுத்தாளர் கமல். (அப்புறம் நீ எப்படி கண்டுபுடிச்சேன்னு கேக்க கூடாது!! ஆமா!)

த்ரிஷாவுக்கு நிறைய்ய வேலை இல்லை. இருந்தாலும், சென்னையில் வளர்ந்த தமிழ் நடிகை, அதிலும் தமிழில் கவிதை எழுதும் நடிகையின் பாத்திரத்தை நடிப்பது, சென்னையில் வளர்ந்தும் தமிழே அதிகம் பயன்படுத்தாத த்ரிஷாவுக்கு கஷ்டமாய் தான் இருந்திருக்கும். குஷ்புவை காட்டி கமல் த்ரிஷாவுக்கு தமிழ் கற்றுக் கொடுத்திருப்பதாகச் சொன்னார்! நல்ல எடுத்துக் காட்டு, ஆனால் காலக் கொடுமை. வித விதமாய் உடை அணிந்து கொண்டு அங்கும் இங்கும் நடந்து கொண்டு நடிகையின் பாத்திரத்தை கச்சிதமாகவே செய்திருந்தார். ஒரு நடிகையின் கார் மோதியிருக்கும் வேளையிலும் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் ஒரு நடிகையாய் இருப்பதற்கான விலையை அழகாய் எடுத்துக் காட்டுகிறது. த்ரிஷாவின் குரல் நன்றாய் தான் இருக்கிறது. ஏன் அவர் டப்பிங் செய்வதில்லை என்று புரியவில்லை. அவரின் குரலில் பேசும் (பாடும்?) கமலின் கவிதையின் பின்னணி ஒரே இரைச்சல்! ஒரு வேலை தியேட்டரின் கோளாறாக இருக்கலாம். பாடல்களும் ஒன்றும் மனதில் நிற்கவில்லை. இன்னும் அதிகம் கேட்கவில்லை என்பதே உண்மை. (எல்லாம் இந்த இளையராஜாவை சொல்ல வேண்டும், மனிதர் எந்த புது பாடல்களையும் கேட்க விட மாட்டேன் என்கிறார்). அது தவிர இந்தக் கவிதை இந்தப் படத்திற்கு எழுதியதா, அல்லது கோர்த்ததா என்று தெரியவில்லை. கமலின் இந்தக் கவிதையை விட அவர் தீபாவளி அன்று காஃபி வித் அணுவில் பாடிய வெண்பா(க்கள்) என்னை ஆச்சர்யப்படுத்தியது! 

சங்கீதாவைப் பற்றி சொல்லாமல் மன்மதன் அம்பு நிறைவடையாது. இரண்டு குழந்தைகளுக்குத் தாயாய், ஒரு டைவர்சியாய், ஒரு ஹை ஃபை சொசைட்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணாய் மிக கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். கொடுத்த பாத்திரத்தை அனாயாசமாய் செய்திருக்கிறார் என்று தோன்றியது. மாதவன் பாத்ரூம் போக வேண்டும் என்றதும், ஒண்ணா, ரெண்டா என்று கேட்பதும், பிறகு நிலைமையை உணர்ந்து, என் பையன்கிட்ட கேட்டு கேட்டு, உங்க கிட்டயும் அப்படியே கேட்டுட்டேன் என்று வழிவதும், சோ ஸ்வீட்! த்ரிஷாவின் பாடிகாட்டும் கலக்கியிருந்தான். 

முக்கியமான ஒருவரை மறந்து விட்டேன். ஓவியா! கமல் படம் என்றது ஆசையாய் வந்திருப்பார் என்று நினைக்கிறேன். ஒரு துணை நடிகை கூட நடிக்க ஒப்புக் கொள்ளாத ரோல். பாவம் அவர். நான் இந்தப் பதிவை போட்ட பிறகு இவரின் ஞாபகம் வந்தது, அதனால் மறுபடியும் பதிகிறேன்.

படம் பார்த்து விட்டு கடைசியில் எனக்குத் தோன்றியது, மன்மதன் அம்பு போன்ற படங்களை எடுக்க ஆயிரம் பேர் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். ஒரு உலக நாயகனாய் இருந்து கொண்டு, ஒரு மணி நேரத்துக்குள் ஒன்பது கதைகள் சொல்லும் தன்மை கொண்ட  கமலஹாசன் உலகத் தரமாய் ஒரு தமிழ் படத்தை தருவது எப்போது? 

ஒரு தெளிவான நீரோடையின் ஒரு பகுதியில் திரைப்படம் ஆரம்பிக்கிறது. ஒரு ஆரம்பப் பள்ளியின் வாசலில் தலை குனிந்த படி நிற்கும் சிறுவனை முழுதாய் இரண்டு நிமிடம் காட்டுகிறார்கள். அவன் மெல்ல தலை நிமிர அடுத்த காட்சிக்கு நகர்கிறது திரைப்படம். காட்சியின் இத்தனை சாவகாசமான நகர்த்தல்களை பல பாலு மகேந்திராவின் படங்களில் பார்த்திருந்தாலும் மிஷ்கினின் காட்சிபடுத்துதல் சற்று வித்தியாசமாகவே உள்ளது! பாலுமகேந்திராவின் படங்களில் மெல்ல நகரும் காட்சிகளில் கொஞ்சம் ஆசுவாசம் இருக்கும், அமைதி இருக்கும். ஆனால் மிஷ்கினின் அமைதிக்குப் பின்னால் எப்போதும் ஒரு எதிர்பாராத மிரட்டல் ஒன்று இருக்கிறது. ஒரு அற்புதமான படத்தை இயக்கி முடித்து விட்டு அதை வெளியிட முடியாத கையறு நிலையைப் பற்றி பத்திரிகைகளில் படித்தேன். ஏன் நாம் மிஷ்கினின் அலுவலகம் சென்று, உங்கள் படத்தை வாங்கி வெளியிடும் அளவுக்கு எனக்கு பண வசதி இல்லை, அனால்  நான் நந்தலாலாவை பார்க்க ஆவலாக உள்ளேன். எனக்கு படத்தை போட்டுக் காட்ட முடியுமா? என்று கேட்கக் கூடாது என்ற ஒரு விபரீதமான எண்ணம் கூட எனக்குத் தோன்றியதுண்டு! நல்ல வேலையாக அத்தகைய ஒரு நிகழ்ச்சி நடப்பதற்கு முன் படம் வெளி வந்து விட்டது. 

நாட்டில் என்ன என்ன கொடுமைகள் நடக்கின்றன, எத்தனை வித விதமான வன்முறைகள் நிகழ்கின்றன என்று விளக்கிக் கட்டி எச்சரிக்கும் பல படங்கள் வருகின்றன. அனால் மிஷ்கின் அதே இருண்ட வாழ்வையும், கதை மாந்தர்களையும் தன் கதைக் களத்திற்காக எடுத்துக் கொண்டாலும், இத்தனை அக்கிரமங்களுக்கு நடுவிலும் சில நேரங்களில், சில மனிதர்கள் இருக்கத் தான் செய்கின்றனர் என்று எடுத்துக் காட்டுகிறார். இன்னும் மனிதம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பதை நமக்குச் சொல்லி வாழ்வின் மீது நாம் இழந்து கொண்டிருக்கும் நம்பிக்கையை மீட்டு வருகிறார். சினிமாவினால் சமுதாயம் சீரழிகிறது என்று இன்று பலருடைய கருத்து. இத்தகைய சூழ்நிலையில், சினிமாவின் மூலம் இப்படி ஒரு நல்ல ஆற்றலை (பாசிடிவ் எனர்ஜி) சமுதாயத்துக்கு பாய்ச்சுவது என்னை பொறுத்தவரை ஒரு மிக நல்ல விஷயம், அதே சமயம் இன்றைய அவசிய தேவையும் கூட என்று தான் நினைக்கிறேன். அந்த ஒரு நல்ல விஷயம் தான் படத்தில் எனக்கு பிடித்தது. படங்களில் பல நெகிழ்வான தருணங்கள் வந்தபடியே இருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விஷயம், நான் பல தமிழ் படங்களில் பார்த்திருக்கிறேன், கதை படி கதாநாயகன் யாரையாவது அடித்துப் போட்டு விட்டு அவன் துணிகளை எடுத்து மாட்டிக் கொண்டால் கனகச்சிதமாய் பொருந்திக் கொள்ளும். அதிலும் அந்த அடியாள் இரண்டு ஆள் உருவம் இருப்பான். கதாநாயகன் வத்தல் போல் இருப்பான். இருந்தாலும் அது சரியாய் பொருந்திப் போகும். அந்த ஒரு மகா அபத்தத்தை மிஷ்கின் இந்தப் படத்தில் சரி செய்திருக்கிறார். முக்கால்வாசி படம் அவர் பேண்டை இருக்கப் பிடித்தபடி வருகிறார். பிறகு, படமாக்கப்பட்ட இடங்கள் அத்தனை அருமை. தமிழ்நாடு இவ்வளவு அழகா என்று வியப்பாய் இருக்கிறது. ஒளிப்பதிவு அருமை. ஒரு பெரிய தார் சாலையில் ஒரு சிறிய கம்பிளி பூச்சி ஊர்ந்து செல்வதை பார்க்க அருமையாய் இருந்தது. இப்படி நிறைய்ய சின்ன சின்ன விஷயங்கள் படமெங்கும் வியாபித்திருக்கிறது.அதையெல்லாம் நான் இங்கு சொல்ல விரும்பவில்லை. படத்தை பற்றி முன்னமையே அதிகம் தெரியாமல் சென்று பார்த்தால் இந்தப் படம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பது என் அபிப்ராயம்.

மிஷ்கின் நடிக்கும் போது தான் தெரிகிறது ஏன் நரேன் சித்திரம் பேசுதடி, அஞ்சாதேயில் அப்படி கத்தினார் என்று! மிஷ்கினின் வசன உச்சரிப்பு அப்படியே அஞ்சாதே குருவி கதாப்பாத்திரத்தின் உச்சரிப்பை ஒத்திருந்தது. அஞ்சாதேயில் கீழிருந்து மேலாக சில ஷாட்டுகளை வைத்திருப்பார். இந்தப் படத்தில் மேலிருந்து கீழாக நிறைய்ய ஷாட்டுகளை வைத்திருக்கிறார். காலுக்கே காமெராவை வைப்பது இந்தப் படத்திலும் தொடர்கிறது. (தியேட்டரில் கமென்ட்: முகத்தை காட்டி படம் எடுங்கப்பா!) அப்படியே முகத்தை காட்டினாலும் அவர்கள் தங்கள் கால்களைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஹோமோ சாப்பியன்ஸ் போல் ஒரு நடை. பாலச்சந்தரின் படங்களில் கதாப்பாத்திரங்களின் க்ளோசப், பாரதிராஜாவின் நாயகிகள் பூக்களுக்கு முன் நின்று சிரிக்கும் அபத்தச் சிரிப்பு போல் இவைகளை மிஷ்கினின் ட்ரேட் மார்க் என்று எடுத்துக் கொண்டேன். மிஷ்கின் இந்தப் படத்தை இளையராஜாவுக்காகவே எடுத்திருப்பார் என்று தோன்றுகிறது. டைட்டிலில் முதலில் அவர் பெயர். படம் முழுவதும் ராஜ இசையை இழைத்திருக்கிறார். அனால் அது சில சமயங்களில் படத்தையும், காட்சியையும் மீறி இதோ நானிருக்கிறேன் பார் என்பது போல் ஆகி விடுகிறது. படத்தின் க்ளைமேக்சும் சரியாய் எனக்குப் புரியவில்லை. தன்னை மனநல காப்பகத்தில் சேர்த்து விட்டதற்காக தன் தாயின் மீது அத்தனை கோபப்பட்டவர் அப்படியா செய்வார்? புரியவில்லை. நீங்கள் பார்த்து விட்டு பதில் சொல்லுங்கள்!
உன் பேர் என்ன?
சொல்லியது குழந்தை.
உன் பேர் என்ன என்றது என்னை பார்த்து!
சொன்னேன்.
வண்டியில வந்தீங்களா கார்ல வந்தீங்களா என்றது!
கார்ல தான் என்றேன்.
பேச்சை வளர்ப்பதற்காக, உனக்கு கார் ஓட்டத் தெரியுமா?
என்று கேட்டேன்.
ஓ! நல்லா தெரியும் என்றது.
உனக்கு காலே எட்டாதே, அப்புறம் எப்படி ஓட்டுவே என்றேன்.
செருப்பு போட்டுட்டு தான் என்றது!

ரைம்ஸ் ஒன்று சொல் என்றேன்...
தெரியாது என்றது குழந்தை!
டீவியில் ரஜினியைக் காட்டி யார் என்று கேட்டேன்,
அதற்கும் தெரியாது என்றது குழந்தை!!
இந்தக் குழந்தை எதைக் கேட்டாலும் தெரியாது
என்று தான் சொல்லும் என்று நான் என்னை
சமாதானம் செய்து கொண்டேன்

முக்கியமான பொருட்களை எங்கே வைக்கிறேன்
என்று மறக்காமல் இருக்க அட்டவணை தயாரிக்கிறேன்
அதை எங்கே வைப்பது?

ஆன் டியூட்டி போட்டு ஒரு அரசு வாகனம் என்னை கடந்து சென்றது...
வண்டியில்(லும்) எல்லோரும்
தூங்கி கொண்டிருந்தார்கள் :-)

காலில் மாவுக் கட்டு போட்டுக் கொண்டு
வண்டியின் பின்னால் அமர்ந்து செல்லும்
அந்தக் குழந்தை - தன் அப்பாவை 
சற்று கூடுதலாய் இறுக்கிப் பிடித்துச் செல்கிறது!

இன்று ஒரு வேலை காரணமாக அலுவலகத்திற்கு விடுப்பு எடுக்க வேண்டியிருந்தது. வேலை மதியமே முடிந்து விட்டது. நங்கநல்லூரில் இருக்கும் வெற்றி வேல் தியேட்டரில் எந்திரன் திரையிடப்பட்டிருப்பதை பார்த்து சும்மா பார்த்து வரலாம் என்று கிளம்பினேன். நான் போனது மதியம் 2;40 க்கு. மதிய காட்சிக்கு டிக்கட்டுகள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கீழ் டிக்கட் இருநூறு ரூபாய், பால்கனி இருநூற்றி ஐம்பது; பாக்ஸ் முன்னூறு! திரும்பி பார்க்காமல் (வீட்டுக்கு!) நடையை கட்டினேன்!

அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குச் சென்றிருந்தேன். இன்னும் வேலைகள் நடந்து கொண்டு தானிருக்கின்றன. முதல் தளம் மட்டுமே இயங்குகிறது. ஜனவரியிலிருந்து மெம்பர்ஷிப் ஆரம்பமாகும் என்று சொன்னார்கள். குழந்தைகள் பிரிவில் நுழைந்ததும், இது குழந்தைகளுக்காக மட்டும்! குழந்தைகள் அல்லாது வரும் பெற்றோர்களுக்கு அனுமதி இல்லை என்று சொல்லி விட்டார்கள்! அடக் கொடுமையே என்று பெரியவர்கள் பக்கம் போனேன்! பீரியாடிகல்ஸ் பிரிவில் for women என்று தனி இடம் ஒதுக்கி இருந்தார்கள். அங்கு தான் எல்லீ, ரிட்ஸ், ஸ்டார் டஸ்ட் எல்லாம் இருந்தது! சரி என்று ஒன்றை எடுத்து பொம்மை படம் பார்க்க ஆரம்பித்தேன். அதற்குள் ஒருவர் வந்து "சார், போர்ட் பாக்கலையா இது பெண்களுக்கு மட்டுமான பிரிவு, உங்களுக்கு அனுமதி இல்லை" என்றார்! நான் சாவகாசமாய் அந்த புத்தகத்தின் அட்டையை அவருக்கு காட்டி, "இந்த புக் ல பொண்ணுங்க மட்டும் தான் படிக்கணும்னு எதுவும் போடலையே சார்!" என்றேன். அதை நீங்க ரிசப்ஷன்ல தான் கேக்கணும் என்று வழிந்தார். கண்டிப்பா கேக்குறேன் என்று சொல்லிவிட்டு எங்கே மேலும் ஏதாவது புக்கை எடுத்து புரட்டினால் அங்கே இன்னொருவர் வந்து "சார் வெள்ளை சட்டை போட்டவங்க எல்லாம் இந்த செக்ஷனில் வர கூடாது!" என்று சொல்லி விடுவாரோ என்று அஞ்சி நடையை கட்டினேன். கீழே வந்ததும் ரிசப்ஷன் சென்று நடந்ததை கூறி, ஒரு புகார் அட்டை எழுதிக் கொடுத்தேன். நூலகத்தைச் சேர்ந்த ஒருவர் விஷயத்தை அறிந்து "அப்படி இல்லை சார், எல்லா செக்ஷன்லையும் எல்லாரும் போகலாம், அது என்னன்னா எல்லாரும் கிட்ஸ் செக்ஷன்ல போனா கூட்டம் அதிகம் ஆயிடுது, அதான் அப்படி சொன்னோம், உள்ளே விட மாட்டோம் என்று அர்த்தமில்லை, தாரளமாக நீங்கள் பார்க்கலாம்" என்றார். மேலே உள்ளவர்கள் குழந்தைகள் இல்லாமல் வருபவர்களை உள்ளேயே அனுப்ப மறுக்கிறார்கள், கொஞ்சம் அவர்களிடம் தெளிவாகச் சொல்லிப் புரிய வையுங்கள் என்று கூறிக் கிளம்பினேன்! நீங்கள் இன்னும் அம்புலிமாமா ரசிகர் என்றால், ஒரு குழந்தையை வாடகைக்காவது எடுத்துச் செல்வது உத்தமம்!


சென்ற வார இறுதியில் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு சென்றிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும்போதே (அமெரிக்காவிலிருந்து வந்தவர்கள் எல்லோரும் வந்து ஒரு வருடத்திற்கு எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை இழுப்போம். சற்று பொறுத்துக் கொள்ளவும்!) இப்படி ஒன்று தொடங்கப் படவிருக்கிறது என்ற செய்தியை படித்தேன். அதுவும் கோட்டூர்புரத்தில் என்றதும் மகிழ்ச்சியாய் இருந்தது, காரணம் என் வீட்டுக்கு சற்று அருகில்! (சென்னையில் வீட்டிலிருந்து பத்து பதினைந்து கிலோ மீட்டருக்குள் இருக்கும் எல்லா இடங்களும் அருகில் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!) ஏன் சொல்லுகிறேன் என்றால் நான் சென்னை வந்ததற்கு பல காரணங்களில் கன்னிமாரா நூலகமும் ஒரு காரணம். வார இறுதியில் அங்கேயே தவமிருந்து பல விஷயங்களை கற்றுத் தேர்ந்து, ஜோல்னா பை, சோடா புட்டி கண்ணாடி, பத்து நாள் தாடி சகிதமாக என்னை நான் பல முறை கற்பனை செய்திருக்கிறேன். உங்கள் அதிர்ஷடமோ என் துரதிருஷ்டமோ அப்படி எதுவும் நேரவில்லை. இந்த ஐந்து வருடத்தில் இரண்டே முறை தான் அங்கு சென்றிருக்கிறேன். வேளச்சேரியிலிருந்து அங்கு செல்வதற்குள் தாவு தீர்ந்து விடும் என்று நானே முடிவு கட்டிக் கொண்டேன். (படிக்கிற புள்ளைன்னா போயிருக்கும்!) அதனால் என்னையும் சேர்த்து ஐந்து பேர் வந்து போகும் வேளச்சேரி நூலகத்தில் தஞ்சம் புகுந்து கொண்டேன். "வாப்பா பிரதீப்" என்று அங்கு நூலகர் கேட்டதும் மேலும் பிடிப்பு ஏற்பட்டுவிட்டது! இப்போது அந்தக் கனவு மீண்டும் வரத் துவங்கி இருக்கிறது!!!

காந்தி மண்டபம் சாலையில் காந்தியின் எளிமைக்கு எந்த சம்மந்தமுமில்லாமல் ஒரு பெரிய மென்பொருள் அலுவலக கட்டடம் போல் எட்டு ஏக்கருக்கு பரந்து விரிந்து பிரம்மாண்டமாய் பளபளக்கிறது நூலகம்! 3.75 லட்சம் சதுரடிக்கு எட்டு மாடி கட்டிடத்தை எழுப்பி இருக்கிறார்கள். பனிரண்டு லட்சம் புத்தகங்களை கொள்ளும் வசதியுடன் முற்றிலும் குளிரூட்டப்பட்ட உலகத் தரம் வாய்ந்த நூலகம். இதை தவிர்த்து, 1 2 8 ௦ பேர் அமரக்கூடிய அரங்கம், 8 ௦ ௦ பேர் அமரக்கூடிய சுற்று மாளிகையரங்கம் (தமிழ்ல சொல்லனும்னா amphitheatre!) என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. சமீபத்தில் தான் திறப்பு விழா முடிந்ததால் இன்னும் அனைத்தும் இயங்க ஆரம்பிக்கவில்லை. தரை தளத்தையும், முதல் தளத்தையும் மட்டுமே மக்கள் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். தரை தளத்தில் பார்வை அற்றவர்களுக்காக ப்ரைலி புத்தகங்கள் உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கான அத்தனை வசதிகளும் உள்ளன. இது மிகப் பெரிய விஷயம் தான். நம் நாட்டில் தான் அவர்களை கண்டு கொள்வதே இல்லையே?

முதல் தளம் முழுவதும் குழந்தைகளுக்காக ஒதுக்கியிருக்கிறார்கள். ஜே ஜே என்று கூட்டம். எப்போதும் பீச், கோயில், சினிமா போய் போரடித்து இங்கு வந்த கூட்டமோ என்று நினைத்தேன். "லைப்ரரி இஸ் வெரி குட்!" என்று ஒரு குழந்தை தன் தந்தையிடம் சொல்லி என் வயிற்றில் ஜிகர் தண்டாவை ஊற்றியது! (நமக்கு மதுரை பக்கம் ஹிஹி...) குழந்தைகளுக்கான புத்தகங்கள், ரைம்ஸ் சீடீக்கள், விளையாட்டுக்கள்! அடுத்த செக்க்ஷனில் பத்திரிகைகள், சஞ்சிகைகள், ஆங்கில ஜெர்னல்கள் இருந்தன. வண்ணத் திரையும், திரை விருந்தும், சினிக் கூத்தும் இருந்தது, இது என்னடா கூத்து என்று அதுகளை எடுத்து புரட்டினேன். முழுவதும் படித்து விட்டு, பச்சை தமிழனாய், "கருமம், கருமம், நாடு உருப்படுமா" என்று நினைத்துக் கொண்டேன்! 1௦௦ எம்பி பீ எஸ் வேகம் கொண்ட இணையக் கணிப்பொறிகள் வேறு! அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட சலவை கற்கள், முதியவர்களுக்காக சாய்வு நாற்காலி, மாணவர்களுக்காக பெரிய மேஜை நாற்காலிகள் என்று மொத்தமாய் நூலகத்தை பார்த்தால் அமெரிக்காவில் (ஆரம்பிச்சிட்டான்யா!) இருப்பது போலவே உணரவே, கழிவறைக்குச் சென்றேன். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பது போல், கழிவறையின் நிலையில் இந்தியாவை கண்டேன்!

வெளியே வந்ததும் பறவைகளுக்காக ஒரு புத்தம் புதிய விசேஷ கழிப்பிடம் பார்த்தேன்! அறிஞர் அண்ணாவின் சிலையை தான் சொல்கிறேன். இந்த நாட்டில் தலைவராய் மட்டும் ஆகி விடக் கூடாது என்று முடிவு செய்து கொண்டேன்! அந்த சிலையின் அடியில் அண்ணாவின் வாசகம்:

"வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம், புத்தகச் சாலைக்கு தரப்பட வேண்டும்!"

எத்தனை சரியான வாசகம்!

போன வார விடுமுறையில் (இந்த வாரம் என்ன செய்தேன் என்று அடுத்த வாரம் வரும், ஓகே? நான் ரொம்ப பிசி....) நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்கை வாக் மாலுக்குச் சென்றிருந்தேன். நுங்கம்பாக்கம் ரயிலடியில் இறங்கி கொஞ்சம் நடந்து ஷேர் ஆட்டோவில் ஏறினால் ஐந்து ரூபாயில் மால். பார்த்தவுடன் பெங்களூர் ஃபாரம் மால் நினைவுக்கு வந்தது. மாலுக்குள் நுழைந்து யாரை நிறுத்தி கேட்டாலும் ஐடியில் பணி புரிவதாகத் தான் சொல்வார்கள் என்று நினைக்கிறேன். நாங்கள் வரி கட்டுவதற்கு நல்ல ரோடு போடுகிறார்களோ இல்லையோ நிறைய்ய மாலை திறக்கிறார்கள். அங்கும் கொள்ளை கொள்ளையாய் விலை வைத்து ஒட்டு மொத்தமாய் ஐடிகாரர்களிடமிருந்து கொள்ளை அடிக்கிறார்கள்! பைக் பார்க்கிங் இருபது ரூபாய்! நிறைய்ய குழி உள்ள ஒரு தட்டில் காக்காய்க்கு வைப்பதை போல் பல வித பதார்த்தங்களை படைத்து இருநூறு ரூபாய்! ஒரு சினிமா நூற்றி இருபது ரூபாய். ஆனால் நூற்றி இருபது ரூபாய்க்கு எந்த வஞ்சனையுமில்லாமல் அப்படியே அமெரிக்காவில் உள்ள தியேட்டர்களை போலவே வடிவமைத்திருக்கிறார்கள். பாப்கார்ன்களின் சைஸ் உட்பட.

நான் மகான் அல்ல

கார்த்தி இருந்தால் போதும், காமெடிக்கு தனியாய் ஆள் எடுக்கத் தேவையில்லை. அவர் வந்தாலே தியேட்டரில் சிரிக்கிறார்கள். மனிதர் சிரிப்பிலும் முறைப்பிலும் பிரமாதப்படுத்துகிறார். இவர் அடியாட்களின் கால்களை பிடித்து சுழற்றி அடித்தால் நம்ப முடிகிறது. என்னை பொறுத்துவரை அவர் பேட்டியில் எப்படி பேசுகிறாரோ அப்படியே தான் படங்களிலும் இருக்கிறார். அதனால் அவரின் நடிப்பு மிக இயல்பாய் தெரிகிறது என்று தோன்றுகிறது. அவருக்கு சம்மந்தமேயில்லாத ஒரு குணநலன் கொண்ட கேரக்டரில் அவர் நடிக்க வேண்டும். எப்படியோ தமிழ் சினிமாவிற்கு ஒரு மாஸ் ஹீரோ கிடைத்து விட்டார்.

காஜல்

நான் கவனித்த வரை காஜலுக்கு மிகவும் பெரிய்ய.....பற்கள்! சீ, யு பேட் பாய்ஸ்! இடைவேளைக்கப்புறம் ஹீரோயினே வராத ஒரு படம் இது தான் என்றேன், ஒரு கனவு பாட்டு கூட இல்லை என்றேன், அப்புறம் தான் தெரிந்தது நான் பாபகார்னுக்கு க்யூவில் நிற்கும் போது வந்து போய் விட்டார் என்று! வேறு என்ன சொல்ல, வழக்கமாய் நடிகைகள் சொல்லும் மூன்றாம் பிறை ஸ்ரீ தேவி ரோலா? இதைப் பற்றி அரை பக்கத்துக்கு பேச? எப்போ தான் தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் தேவதைகளாய் இல்லாமல் மனிதர்களாய் நடமாடப் போகிறார்களோ!

சுசீந்திரன்

ரெண்டு படம் ஓடி விட்டது. இன்னும் வாங்கவில்லை என்றால் இப்போதே போய் ஒரு புது கூலிங் கிளாஸ் வாங்கிக் போட்டுக் கொள்ளலாம்! அதை கழட்டாமல் பேட்டி தரலாம்! அதற்கான சகல தகுதியும் இருக்கிறது!

படம் முடிந்து விட்டது, சீட்டிலிருந்து வெளியே வரும்போது கவனித்தேன். அரங்கெங்கும் கொட்டிக் கிடக்கும் மிச்ச சொச்ச நொறுக்குத் தீனிகள். நம் மக்கள் வாங்கி சாப்பிடுகிறார்களா அல்லது கீழே கொட்டுகிறார்களா தெரியவில்லை. அடுத்த காட்சிக்குள் அத்தனை பெரிய அரங்கை சுத்தம் செய்ய வேண்டும். பணியாளர்களுக்கு கஷ்டம் தான்!

படத்தை விட எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அந்த மாலில் இருந்த பெரிய லேண்ட்மார்க்! போய் உட்கார்ந்து ரெண்டு சின்ன புத்தகத்தை முடித்தேன். அதிலே ஒன்று சுஜாதாவின் சினிமா உலக கட்டுரைகள்! அதில் எனக்கு ஞாபகம் (கவனிக்க, என்னுடைய ஞாபகம்!) இருக்கும் சில வாத்தியார் முத்துக்கள்!

"நாடோடித் தென்றலுக்காக பாரதிராஜா ரஞ்சிதா என்ற ஒரு உயரமான பெண்ணை அறிமுகப்படுத்தினார். சரியாய் நடிக்க வராததால் அடித்து விட்டாராம். மேலும் கேட்டால் எனக்கும் ரெண்டு விழும்!"

"நடிகை ஷோபா ஓடி வந்து அங்கிள் என்று பாலுமகேந்திராவின் கழுத்தை கட்டிக் கொண்டாள்! அது அங்கிளுக்கான பழக்கமில்லை என்று என் மனைவி வீட்டுக்கு வந்ததும் சொன்னார். "

"சுந்தரராஜன் என்னிடம் கேட்டார். அது நீங்க எழுதின கதையா, கதை என்னன்னு தெரியாம நடிச்சேன். ஆமா அதுல நான் யார்? கதைப்படி நீங்க செத்த பொணம் என்றேன்!"

"மணிரத்னம் என்னை அந்த சின்ன ஸ்டூடியோவுக்குள் கூட்டிக் கொண்டு போனார். அந்தப் பையனிடம் புகழுக்குத் தயாராகுங்கள் என்று சொன்னேன்" அவர் தான் ஏ. ஆர். ரகுமான்!

இன்னொரு ஆங்கில சுய முன்னேற்ற புத்தகம் ஒன்றையும் படித்தேன். அதிலிருந்து, என் ஞாபகத்திலிருந்து,

................................................................................

(நான் எப்படி முன்னேறுவேன் சொல்லுங்க?!)

ஒரு கேள்வி:

இன்று கேப்டன் டீவியில் முரளியின் பேட்டியை பார்க்கும்போது, அடுத்த மாதம் பெங்களூர் வருவதாக நண்பனிடம் சொன்னது ஞாபகம் வந்தது, எந்த நம்பிக்கையில் அப்படி சொல்கிறோம்? என்று தோன்றியது!


நேற்று எனக்கும் என் மனைவிக்கும் சண்டை...
இருவரில் யார் யாரை அதிகம் நேசிக்கிறோம் என்று!
சண்டையின் விதிப்படி இன்று முழுவதும்
அவளிடம் பேசாமல் மேலும் அதிகமாய் காதலிக்க வேண்டும்!!

அதிகக் கூட்டமில்லாத பேருந்தில்
ஒவ்வொரு இருக்கை தேடி
அமர்கின்றனர் ஒவ்வொருவரும்!
மதுரைக்குப் போயிருந்தேன். சென்னையில் இருந்து விட்டு மதுரைக்கு சென்றால் ஏதோ எல்லோரும் ஊரை காலி செய்து விட்டு போய் விட்டது போன்றதொரு உணர்வு. அத்தனை காலியாக இருக்கிறது. இதுவா காலி, எவ்வளவு கூட்டம் பார் என்று மதுரை மக்கள் என் வயித்தெரிச்சலை கொட்டிக் கொண்டார்கள்! அவர்களை ஒரு முறை சென்னை வந்து போகச் சொல்லியிருக்கிறேன். அதிகாலையில் பஸ்ஸிலிருந்து தாம்பரத்தில் இறங்கி மின்சார ரயிலில் டிக்கட் எடுக்க வரிசையில் நின்றால் போதும், வந்த வழியே, அப்படியே ஊருக்குக் கிளம்பி விடுவார்கள்! பெங்களூரில் நான் இருந்த போது அலுவலகத்தில் எத்தனை கன்னடக்காரன் இருக்கிறான் என்று எண்ணி (வலை வீசி தேடி) பார்ப்போம்.ஒன்று அல்லது இரண்டு பேர் சிக்குவார்கள்!இன்று அது போல் ஆகிவிட்டது; சென்னையில் பிறந்து வளர்ந்தவனை தேடுவது! மேற்கில் கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் வசிப்பவர்கள் எப்படி மும்பையை நோக்கி படையெடுக்கிறார்களோ, அதே போல் தெற்கில் இருப்பவர்கள் சென்னையை நோக்கி படையெடுக்கிறோம். இதனால் கூட்டம் ஒரே இடத்தில் குவிந்து கிடக்கிறது. பேசாமல் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, கல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் நுழைய விசா வழங்க வேண்டியது தான்! (இதைச் சொன்னா நம்மளை பைத்தியம்னு சொல்றாங்க!) முதல் கட்டமாக வெளியிலிருந்து வந்தவர்களை வெளியேற்ற வேண்டும். அடியேன் அதில் மாட்டுவேன் என்பதால் சென்னைக்கு வந்து ஐந்து வருடம் ஆகியிருந்தால் அவர் அப்படியே இருக்கலாம் என்று ஒரு அட்ஜஸ்மென்ட்டை செய்து கொள்ளலாம்!

உள்ளபடி சொன்னால் நான் பார்க்க விரும்பும் சென்னை பழைய தமிழ் படங்களிலும், ஜெயகாந்தன் நாவல்களிலும் இருக்கிறது. எந்தப் பழைய படத்தின் அவுட்டோர் காட்சிகளில் சென்னையை பார்க்கும் போதெல்லாம், சென்னை எத்தனை காலியா இருக்கு பாரு என்று என்னையும் அறியாமல் புலம்புவேன். எம்ஜியார் காரோட்டிக் கொண்டே ஏதாவது வயல் வெளியை கடந்தால், யாருக்குத் தெரியும் இது வேளச்சேரியா இருக்கலாம் என்றும் புலம்பியிருக்கிறேன். மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் என்று நாகேஷ் பாடிக் கொண்டே வருவாரே, அந்த மெட்ராஸ்! அதுதான் நான் பார்க்க விரும்பிய சென்னை. அகலமான, விசாலமான சாலைகள்,
ங்கொன்றும் இங்கொன்றுமாய் செல்லும் பேருந்துகள், வாகனங்கள், மாட்டு வண்டிகள்! அந்தக் கூட்டத்திற்கும் ஓட்டத்திற்குமே அவர் அன்று அந்த அலுப்பு காட்டுவார். இன்று மவுண்ட் ரோட்டில் நின்று கொண்டு நாம் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் வேண்டாம், "மெட்" என்று வாய் திறந்தால் போதும் இன்னோவா வந்து இடித்து வீட்டில் உள்ளவர்களை ட்ரைவர் நலம் விசாரிப்பார்! (ஒங்கம்மாகிட்ட சொல்லிட்டு வந்தியா?) ம்ம்ம்...அறுபதில் வாழ வேண்டியவனை 2010ல் நிறுத்தியிருக்கிறது காலம்!

சரி மதுரைக்கு வருகிறேன். மதுரையில் சாலைகள் அகலமாய் தெரிகின்றன. ப்ளாட்பாரங்கள் நன்றாக ஏற்றம் கண்டு விட்டன. சென்னையை கம்பேர் செய்தால் சுற்றுப்புறம் சுத்தமாகவே இருக்கிறது. ஆனால் முன்பு போல் சினிமா போஸ்டர்கள் காணக் கிடைப்பதில்லை. சினிமா ரசிகர்கள் என்றால் அது மதுரையாகத் தான் இருக்க வேண்டும். முன்பு போல் இல்லாமல் மதுரையில் இப்போதெல்லாம் சென்னையில் ரிலீஸ் ஆவதைப் போல் ஒவ்வொரு படமும் 4, 5 தியேட்டர்களில் ஒரு காட்சி, இரு காட்சிகள் என்று வர ஆரம்பித்து விட்டன. என் நினைவுக்குத் தெரிந்து ஒரு படம் இரண்டு தியெட்டர்களுக்கு மேல் ரிலீஸானது "எஜமான்" தான்! அந்தப் படம் தான் முதன் முதலாய் மூன்று தியேட்டர்களில் ரிலீஸானது என்று நினைக்கிறேன்! [மதுரையில் ரஜினி படம் என்ன மொக்கையாக இருந்தாலும் 150 நாட்களுக்கு குறையாமல் ஓடும்] எந்த படமாய் இருந்தாலும் சரி, படம் வந்த அடுத்த வாரத்தில் வெற்றிகரமான இரண்டாவது வாரம் அல்லது பட்டையை கிளப்பும் பத்தாவது நாள் போஸ்டர் ஒட்டி விடுவார்கள். 3 வாரத்தில் படம் படுத்து விட்டால் அதை வேறு தியேட்டரில் ரிலீஸ் செய்து இணைந்த 3வது வாரம் என்று மிரட்டுவார்கள்! அப்படி என்றால் அந்த படம் இன்னும் களத்தில் இருக்கிறது என்று பொருள். இன்று வரை தளபதி படத்தின் பத்தாவது நாள், இருபத்தைந்தாவது நாள், முப்பத்தைந்தாவது நாள் என்று எல்லா நாட்களின் போஸ்டர்களும் எனக்கு நினைவில் இருக்கிறது. (இதை ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேனா என்பது தான் மறந்து விட்டது! ஹிஹி) தமிழ் படத்தை விடுங்கள், கமேண்டோ, ரங்கீலா, தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே போன்ற படத்திற்கே 50வது நாள், நூறாவது நாள் போஸ்டர்கள் ஒட்டினார்கள்! ஹம் ஆப்கே ஹைன் கோன் படம் ஹரிதாஸ் படத்தை போல் ஒரு வருடத்திற்கு மேல் ஓடியது! சில சமயம் ஷகீலா படத்திற்குக் கூட பத்தாவது நாள் போஸ்டர் பார்த்ததாய் ஞாபகம்! இன்றும் படங்களின் போஸ்டர்கள் இருந்தாலும், ஒரு 2வது வார போஸ்டரை கூட காண முடியவில்லை. திருட்டு விசிடி (டிவிடி?), கேபிள் டீவி, யு ட்யுப் என்று வளர்ந்து விட்ட நிலையில் ஒரு படம் இரண்டு வாரம் ஓடி போஸ்டர் ஒட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பதெல்லாம் ஓவர் தான்!

அப்புறம், திருமலை நாயக்கர் மகாலை நல்ல முறையில் பராமரித்து வருகிறார்கள் போலிருக்கிறது. அதோ, அந்த மகால்ல தான் ஐஸ்வர்யா ராய் ஆடினார் என்று தான் இன்றைய இளவட்டங்கள் அந்த மகாலை அடையாளம் காட்டுகிறார்கள்! சிம்ரன், மனீஷா கொய்ராலா, ஐஸ்வர்யா, அனுஷ்கா என்று அந்த மகால் பாரம்பரியம் மிக்கதாய் தான் ஆகி விட்டது! ஆனால் என்னை மிகவும் உறுத்திய ஒன்று, அரண்மனை மதில் சுவரில் "இங்கு சிறுநீர் கழிக்கக் கூடாது, இலவசக் கழிப்பறை அருகில் உள்ளது" என்று அம்புக்குறியுடன் ஒரு பலகை தொங்குகிறது. அந்த பலகையின் அடியில் ஈரப்பட்டுக் கிடக்கிறது. என்ன தான் இலவசம் என்றாலும் அரண்மனை மதில் சுவற்றில் சிறுநீர் கழிக்கிற பெருமை வருமா என்று அந்த பிரகஸ்பதி நினைத்திருப்பானோ என்னமோ? அதே போல் பெரியார் பஸ் ஸ்டாண்டில் ஆம்னி பஸ் நிறுத்தத்தில் அநியாயம் செய்கிறார்கள். அந்த தம்மாத்துண்டு இடத்தில் வெளியூர் போகும் பேருந்தும் நிற்கிறது, உள்ளூர் பேருந்தும் வந்து செல்கிறது. பக்கத்திலேயே கழிவறை இருந்தாலும் வெளியூர் பேருந்து ஒன்றை ஒன்று ஒட்டி நிற்கும் இடத்தில் அந்த பேருந்துகளை மறைவாய் வைத்துக் கொண்டு சிறுநீர் கழிக்கிறார்கள். அந்த பேருந்தில் ஏற வேண்டியவன் அந்த இடைபட்ட இடத்தில் கால் வைத்துத் தான் ஏற வேண்டியிருக்கிறது. ஆடு மாடுகளுக்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஐந்து ரூபாயை சிகிரெட்டுக்காக பொத்திக் கொண்டு கொடுக்கும் ஜனம் (ஜடம்!!) சிறுநீர் கழிக்க ஒரு ரூபாய் செலவழிக்க மறுக்கிறது!! இப்படி பொறுப்பில்லாமல் பெய்பவர்களை கண்டால் கண்ட இடத்தில் இழுத்து வைத்து அறுக்க வேண்டும். [சிம்ரன் சொல்வது போல் நாக்கை அல்ல!]

இந்திய வலையுலகில் முதன் முறையாக
திரைக்கே இன்னும் வரவே வராத...!!!
(இன்னும் சன் டீவியில் ட்ரைலர் டார்ச்சரே ஆரம்பிக்காத!!)
சூப்பர் ஹிட் திரைப்படம்
எந்திரன் விமர்சனம்
உங்கள் பெய்யெனப் பெய்யும் மழையில்...



விஞ்ஞானி (குறுந்தாடி மஸ்ட்!) ரஜினி (வசீகரன்) தன் பத்து வருட அயராத உழைப்பால் (நிறைய்ய தாடி = அயராத உழைப்பு!) மனிதனைப் போலவே சிட்டி என்ற பொய் பித்தலாட்டம் தவிர்த்த ஒரு அருமையான மனித ரோபோவை உருவாக்குகிறார். அதற்கு உணர்ச்சிகளை முடுக்கி விட்டதும் தொடங்குகிறது அழிச்சாட்டியம். ஐஸ்வர்யா ராயை கண்டதும் காதல் கொள்கிறது. அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யத் துணிகிறது. அதனால், வேண்டாத சில சமூக விரோதிகளிடம் சிக்கி உலகையே அழிக்கப் புறப்படுகிறது. சிட்டியை வசீகரன் எப்படி அடக்கினார்? அவர் எப்படி இந்த உலகத்தை காப்பாற்றினார்? சிட்டியின் காதல் கை கூடியதா? அதை அவரவர் வசதிக்கேற்ப வெள்ளித் திரையிலோ, திருட்டு டிவிடியிலோ (சொன்னா கேக்கவா போறீங்க!) பார்த்துக் கொள்ளவும்.

ரஜினிக்கு சரியான பெயரை தான் ஷங்கர் வைத்திருக்கிறார். வசீகரன்! 60 வயதிலும் மனிதர் பின்னிப் பெடலெடுக்கிறார். அவரின் வசீகரம் துளியும் குறையவில்லை. ஷங்கர் இந்த வயதிலேயே ரஜினியை இந்த அளவுக்கு காட்டுகிறார், இன்னும் ரஜினி பரட்டைத் தலையுடன் இளமையாய் இருக்கும் காலத்தில் ஷங்கர் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணி ஏங்க வைத்து விடுகிறார். விஞ்ஞானியாய் உறைவதும், ஐஸ்வர்யாவிடம் காதலில் உருகுவதும் என்று ரஜினி பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார். வழக்கமாய் ரஜினி படங்களில் கதாநாயகி தான் ரஜினியிடம் உருகுவார். இவர் பாவம் பார்த்து காதலிப்பார். படையப்பாவில் செளந்தர்யாவிடம் உருகும் ரஜினியை பார்க்க எனக்கு பாவமாய் இருந்தது. குஷ்புவே தலைவர் பின்னாடி சுத்தும், இந்த பொண்ணுகிட்ட போய் தலைவரை உருக வச்சிட்டாங்களே என்று! அந்த மாதிரி எந்த ஏக்கமும் இந்தப் படத்தில் வரவில்லை. அழகின் உட்சபட்சம் ஐஸ்வர்யா ராய் என்று ஆகி விட்ட நிலையில் தலைவர் அவர் பின்னாலே அலைவது ஒன்றும் பெரிதாய் இடரவில்லை. ஐஸ்வர்யாவிடம் ரஜினியின் நெருக்கத்தை பார்க்கும் போது, ரஜினியே சொன்னது போல் "அமிதாப் நிலையில் இருந்து "கபர்தார்!" என்று சொல்லத் தோன்றுகிறது.

சிட்டி! பாடலில் வருவதை போல் இனி இது தான் பட்டி தொட்டி எல்லாம் பட்டயை கிளப்பப் போகிறது. ஆறறிவு ரஜினியே இத்தனை ஸ்பீடுடன் இருக்கும்போது நூறறிவு ரஜினி எத்தனை ஸ்பீடாய் இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். சும்மா இல்லை, நிஜமாகவே அதிருகிறது! எந்திரனின் காதலில் வசீகரனின் காதல் தொலைந்தே போய் விடுகிறது. ஐஸ்வர்யா ராயை கவர அது பண்ணும் ஜிமிக்ஸ் வேலைகள் அற்புதம். இப்படி நிஜமாகவே ஒரு ரோபோ காதலன் வந்து விட்டால் பெண்கள் நம்மளை எல்லாம் மதிப்பார்களா என்பது சந்தேகம் தான்! ஆனால் ஐஸ்வர்யா தான் "இரவில், நடுவில் பாட்டரி தான் தீரும்!" (என்ன கவலை பாருங்கள்!) என்று ஒதுங்கி விடுகிறார். நிஜமாகவே ஏதோ ஒரு ஆக்ஸிலரேட்டரை உள்ளே வைத்து தைத்ததைப் போல் ரோபோ ரஜினியிடம் அத்தனை வேகம். 60 வயதில் இப்படி ஒரு அதகளம், அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்! ரஜினி தன்னுடைய 35 வருட சினிமா வாழ்க்கையில் இந்த அளவுக்கு எந்த படத்திலும் உழைத்திருக்க மாட்டார் என்பது நிச்சயம். ஷங்கர் பெண்டு எடுத்திருக்கிறார். ரஜினியே சொன்னது போல் ஷங்கர் என்ற குதிரையை கெட்டியாய் தான் பிடித்து உட்கார்ந்திருக்கிறார். சிட்டியின் ஜொள்ளு மனிதர்கள் புரிந்து கொள்ள இது மனித ஜொள்ளு அல்ல என்ற ரேஞ்சுக்கு பன்மடங்காய் இருக்கிறது. சிட்டி ஐஸ்வர்யாவை பார்க்கும்போதெல்லாம் தியேட்டர் அல்லோல கல்லோலப் படுகிறது. தூள் பறத்துகிறார் ரஜினி.

சனாவாக ஐஸ்வர்யா. ஷங்கர் என்ன வீடு படமா எடுக்கிறார், ஐஸ்வர்யா ராய்க்கு நிறைய்ய வேலை கொடுக்க! நல்ல வித விதமா ட்ரெஸ் போட்டுக்கோ, ரகுமான் 6 பாட்டு போட்டுக் கொடுத்திருக்காரு, யாருமே பாக்காத இடத்துக்கு கூட்டிட்டு போறேன் (யூனிட் பூராவும் தாம்மா! நல்லா வேலைய கெடுத்த போ!), நல்லா பாடி, ஆடு...அப்புறம் அப்போ அப்போ இந்த பக்கம் அந்த பக்கம் வந்து போம்மா என்று விட்டு விட்டார். அதை அவரும் செவ்வனே செய்திருக்கிறார். எனக்குத் தெரிந்து, ரஜினி ஐஸ்வர்யாவை படையப்பாவில் நீலாம்பரி கேரக்டரில் நடிக்க வைக்க நினைத்தார். நல்ல வேலை அது கை கூடவில்லை. ரம்யா தான் அதற்கு சரியானவர் என்பது என் அபிப்ராயம். ஐஸ்வர்யா என்ன தான் நடித்தாலும் அவரின் அழகும் பொலிவும் அதை மறைத்து விடும் என்றே தோன்றுகிறது! ஆனால் என்ன தான் மேக்கப் போட்டாலும், ஆணின் 60 வயது எளிதாய் மறைந்து விடுகிறது, ஆனால் பெண்ணின் 35 வயதை மறைப்பது கொஞ்சம் கஷ்டம் தான் போலும்!

பாடல்களை கேட்டதும் உங்களுக்கே புரிந்திருக்கும், எது எங்கு வரும் என்று. எஸ் பி பி பாடி விட்டாலே அது முதல் பாடலாய் தான் இருக்க வேண்டும். புதிய மனிதாவில் படம் தொடங்குகிறது, ரோபோவை கண்டுபிடித்தது போக, வாங்க பழகலாம் டைப்பில் ஐஸ்வர்யாவை லவ்வடிக்கும் போது காதல் அணுக்களும், கிளிமாஞ்ஜாரோ இடைவேளைக்குப் பிறகும் வருகிறது! அரிமாவும், இரும்பிலேயும் ரோபோ ரஜினிக்கு! ஷங்கருக்கு பாடலுக்கு முன் வரும் காட்சியில் ஒரு பானை வந்தால், பாடலில் அதுவே ஒரு 10,000 வேண்டும். ரோபோவை பற்றி கேட்ட்க வேண்டுமா? 1000 ரோபோ ரோபோ ரஜினியுடன் ஆடுகிறது. அந்த வேஷம் கட்டி ஆடுபவர்கள் பாவம் (கருமம் எங்கெங்கெயோ வேர்க்குதே!!)

டானி வில்லன். ரோபோ ரஜினியை தன் சொல்படி எல்லாம் ஆட்டுவிக்க முயற்சிக்கிறார். இறுதியில் ஒரு பெரிய ஹைடெக் குடவுனில் பரிதாபமாய் சாகிறார். மற்றபடி படத்தில் வேறு யாருக்கும் அதிக வேலையில்லை என்றே சொல்ல வேண்டும். சிட்டியிடம் சந்தானமும், கருணாஸும் படும் பாடு சில இடங்களில் கல கல! மற்றபடி நாங்களும் ஷங்கர் படத்தில் நடிச்சிருக்கோம் என்பது போல் வந்து போகிறார்கள்.
ரஜினி ரசிகர்களுக்கு ஒரு ஃபுல் மீல்ஸ் ரெடி! மற்றபடி ஷங்கரிடம் இருந்து மற்றொரு பிரம்மாண்ட இரைச்சல்! சங்கர் சார், ஒரு சேஞ்சுக்கு உங்கள் "அழகிய குயில்" ஃபைலை தூசி தட்டி எடுங்களேன்! ஒரு அமைதியான, அடக்கமான, ஆழமான படம் என்றால் எப்படி எடுக்கிறீர்கள் என்று பார்ப்போம்!

டிஸ்க்ளைமர்: கவலைபடாதீங்க, நான் எந்த பிரீமியர் ஷோக்கும் போகலை! ஜக்கு பாய் மாதிரி எந்திரனுக்கு திருட்டு வீசிடியும் வரலை. எல்லாம் ஒரு ஆற்றாமை தான்! பின்ன என்ன? படம் வந்ததும் என்னமோ பண்ணி நீங்க எல்லாம் மொதோ நாள் பாத்துட்டு வந்து கலந்து கட்டி விமர்சனம் போட்ருவீங்க! நான் படம் பாத்துட்டு விமர்சனம் எழுதும்போது ஷங்கரே அடுத்த படம் எடுத்து முடிச்சிடுவாறு! அப்புறம் நான் சிவாஜிக்கு எழுதின மாதிரி தான் விமர்சனம் எழுதணும்! இது தேவையா? அதான் இன்னும் வெளி வராத தலைவர் படத்துக்கு விமர்சனம் எழுதி எஸ்டிடில (எஸ்டிடின்னா? வரலாறு தான்!) இடம் புடிச்சிட்டேன்! உண்மையிலேயே படம் பார்த்த பிறகு நான் மேல் சொன்ன விஷயங்களில் எத்தனை வேறுபட்டு இருக்கின்றன என்று பார்க்க வேண்டும்! அதுவும் இல்லாம ஷங்கர்/ரஜினி படம் எல்லாம் ஒரே மெனு தானே! எதை எவ்வளவு எங்கே போடணும்னு தெரிஞ்சா போதாது! என்ன நான் சொல்றது?

1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

பெய்யெனப் பெய்யும் மழை

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இல்லை. தமிழ் சினிமா ஹீரோயின் மாதிரி மழை என்றால் மிகவும் பிடிக்கும். அந்த நாட்களில் நான் படித்த பெய்யெனப் பெய்யும் மழை - வைரமுத்து கவிதைத் தொகுப்பு மிகவும் பிடித்துப் போனதால் இந்தப் பெயரை வைத்தேன்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?

என்ன சொல்வது? குஷ்பு திமுகவில் சேர்ந்தது, புவனேஸ்வரி அரசியலில் குதித்தது, டி. ராஜேந்தரை நாம் பொருத்துக் கொள்வது...இவையெல்லாம் நம் கையிலா இருக்கிறது? இப்படி எத்தனையோ டார்ச்சர்களை போல் தான் நான் வலை பதிய ஆரம்பித்தது! விதி வலியது!

4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?

எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்களின் இடையே ஏ.வி.எம். ராஜன், ரவிச்சந்திரன் போன்றவர்களும் காலம் தள்ளியதை போல் தான் நானும் என் வலைப்பதிவும். என் வலைப்பதிவு பிரபலமாக இதுவரை ஒன்றும் செய்யவில்லை. அதனால் அத்தனை பிரபலமும் ஆகவில்லை என்பது என் எண்ணம்.

5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

உண்டு! சொந்தச் சரக்கு அல்லாமல் நன்றாக எழுதத் தெரிந்தால் நான் எழுத்தாளன் ஆகியிருப்பேனே! வலைப்பதிவில் ஏன் எழுதிக் கொண்டிருக்க போகிறேன்? "இப்படித்தான்டா அன்னைக்கு நான்" என்று எதெற்கெடுத்தாலும் தன்னைச் சுற்றியே கதை பின்னும் மரபு நம் தமிழ் மரபு! அதிலிருந்து நான் மட்டும் தப்ப முடியுமா?
விளைவு சாதகாமாயும் இல்லை; பாதகமாயும் இல்லை!

6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

சம்பாதிக்கும் நோக்கம் அறவே இல்லை. மனதிற்குப் பிடிக்கிறது, செய்கிறேன்.

7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு?

ஒன்னே ஒன்னு! கண்ணே கண்ணு!

8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன் ?

சில மொக்கை பதிவுகளுக்கு ஐம்பது, நூறு என்று கமெண்ட்டை பார்த்தால் பொறாமையாய் இருக்கும். அது உண்மை. பிறகு சாரு போல், தமிழ்நாட்டில் எழுத்தாளனை யார் மதிக்கிறா? என்று என்னை தேற்றிக் கொள்வேன்! (இப்போ சாருவுக்கு எப்படி இருக்கும்?)

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?

நான் பெங்களூரில் இருந்த போது ஒருவர் என் பதிவுகளை படித்து விட்டு என்னை சந்திக்க வேண்டும் என்று விரும்பினார். நானும் என் எல்லா எழுத்துப் பணிகளையும் ஒத்தி வைத்து விட்டு (டேய், டேய்!!) அவரை அன்று மாலையே சந்தித்தேன்! என்னுடன் பேசிய அந்த கொஞ்ச நேரத்தில் அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ஒரு வலைபதிவை ஆரம்பித்தார். அதில் எல்லா உண்மைகளையும் போட்டு உடைப்பேன் என்றார். பாருங்கள்! நீங்களே மிரண்டு விடுவீர்கள்! இங்கே

10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் கூறுங்கள்.

அப்புறம் என் சுய சரிதை எப்படி விற்கும்? போங்க சார்!

கொசுறு: நான் ஏற்கனவே எழுதிய சில சுய குறிப்புகள் இங்கே!
ஒரு வழியாய் அமெரிக்காவிற்கு ஒரு தற்காலிக (கவனிக்க) கும்பிடு போட்டு விட்டு வந்தாகி விட்டது! முப்பது வருடங்கள் வாழ்ந்த இந்தியாவை ஒரு வருடம் வாழ்ந்த அமெரிக்கா வெறுக்கச் சொல்கிறது! இது தான் நம் இடம் என்று மனதை தேற்றிக் கொண்டிருக்கிறேன். அது அப்படி ஒன்றும் கடினமாக இல்லை. அமெரிக்காவிலிருந்து வந்ததும் தண்ணீரினால் வரும் எந்த வித உபத்திரவங்களும் எனக்கு நேராததை வைத்துப் பார்க்கும் போது நான் இன்னும் அமெரிக்கா வாழ் இந்தியன் ஆகிவிடவில்லை என்று தோன்றுகிறது. ஒரு வருடத்தில் நிறைய காம்ப்ளான் குடித்து வளர்ந்திருப்பது விலைவாசி தான்! ஒரு செவ்வெழனி 28 ரூபாயா என்று வாய் பிளந்து கேட்டேன். இத்தனை நாள் உள்ள இருந்தியா என்று கேட்காமல் விட்டானே அது வரை சந்தோஷம்!

அலுவலகத்தில் இப்போ தான் வந்திருக்கான், கொஞ்சம் விட்டு புடிப்போம் என்று வைத்திருக்கிறார்கள். அலுவலகத்தில் ஆர்குட், ட்விட்டர் என்று எதுவுமே வருவதில்லை. ட்விட் செய்து பழகி விட்டதால் கை அரிக்கிறது! கடந்த சில தினங்களில் என் சென்னை அனுபவங்களை இங்கேயே ட்விட்டுகிறேன். 140 எல்லை இங்கு இல்லை!

சென்னையில் மழை காலத்தில் சாலையில் வண்டியை பார்த்து ஓட்ட வேண்டும்!நீங்கள் அதிர்ஷ்டசாலியாய் இருந்தால் சாலையில் மேடும் இருக்கும்!

நேற்று மழையில் நனைந்ததால் இன்று காலை மழை சட்டை (செம்மொழியான தமிழ் மொழியாம்!) போட்டுக் கொண்டேன்.கதையில் ஒரு ட்விஸ்ட்? மழை பெய்தது!

நண்பன் வீட்டிலிருந்து கிளம்பும்போது எல்லாம் எடுத்துக் கொண்டேனா என்று சரிபார்த்துக் கொண்டேன். பாதி வழியிலேயே மழை சட்டையை மறந்தது ஞாபகம் வந்தது! பாதி தூரத்திலயே!!! ஆஹா என்னே என் ஞாபக சக்தி!!

பறக்கும் ரயிலில் பயணிக்கும்போது சென்னையில் பல இடங்கள் அற்புதமாய் தெரிகிறது! உடனே இறங்கி அந்த இடத்திற்குப் போக வேண்டும் என்று தோன்றுகிறது. உங்களுக்கு?

நான் உனக்கு முன்னால் சென்று கோணலானவைகளை செவ்வையாக்குவேன் - ஏயாசா
எனக்கு முன்னால் கோணலாக சென்று நின்ற ஆட்டோவில் இருந்த வாசகம்!

"என்ன வர்றீங்களா?" ஒரு மாமி, ஆட்டோகாரரிடம்! அரைகுறையாய் காதில் விழுந்தால் எத்தனை ஆபாசம்!



"சாக்லேட் லைம்ஜூஸ் ஐஸ்க்ரீம் டாஃப்பியான்" என்று ஹம் ஆப்கே ஹைன் கோன் படத்தில் ஒரு பாடல் வரும். குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப் பருவத்தை நான் அடைந்து விட்டேன், எனக்கு இனிமேல் குழந்தைகள் ரசிக்கும் விஷயங்களில் உள்ள மோகங்கள் குறைந்து விட்டன என்று! அற்புதமான பாடல். அதே போல் நான் வளர்ந்து விட்டேன் என்று சொன்னாலும் என் மனைவி வளராததால் பொம்மை படங்களுக்கு கூட்டிச் செல்ல வேண்டியிருக்கிறது! ஷ்ரக் 4 வரும்போதே நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள், ஏதோ சாக்கு போக்கு சொல்லி அதை கடந்தால் டாய் ஸ்டோரி 3 வந்து விட்டது. இனியும் தப்பிக்க முடியாது என்று சொல்லி அதை அனுபவிக்கத் தயாரானேன். ஆனாலும் ஒவ்வொரு தடவையும் அவளின் நச்சரிப்பு தாங்காமல் நான் பொம்மை படம் பார்க்கும் போதெல்லாம் மிக அற்புதமான அனுபவம் தான் எனக்கு வாய்க்கிறது. ஆனாலும் அடுத்த முறை இன்னொரு படத்தை பார்க்கும் ஆவல் பிறப்பதில்லை. ராவண் போன்ற படங்களின் மீதே ஆவல் பிறக்கிறது! அது சரி என் மனைவியாவது அவளின் உள்ளே உள்ள குழந்தையை தக்க வைத்திருக்கிறாளே அது வரை சந்தோஷமே! அதனால் எனக்கும் இத்தகைய சந்தர்ப்பங்கள் வாய்க்கிறது. இனி டாய் ஸ்டோரி 3 !

ஆண்டி (தமிழ் ஆண்டி அல்ல!) என்ற சிறுவனிடம் வித விதமான பொம்மைகள் இருக்கின்றன. வூடி என்ற கவ்பாய் பொம்மை, ஜெஸ்ஸி என்ற ஒரு கவ் கேள், பஸ் என்ற விண்வெளி வீரன், ஒரு ஜோடி உருளைக்கிழங்கு பொம்மைகள், ஒரு பன்றி இப்படி வித விதமாய்! இவைகளைக் கொண்டு அவன் கற்பனை உலகத்தில் வித விதமான விளையாட்டுக்களை விளையாடுகிறான். அவனுக்கு இந்த பொம்மைகள் என்றால் உயிர். அதே போல் அந்த பொம்மைகளுக்கும்! (பொம்மைகளுக்கு ஏது உணர்ச்சி என்று நீங்கள் சொன்னால் பேசாமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டு சன் பிக்சர்சாரின் அடுத்த வரவு என்ன என்ற டார்ச்சரை அனுபவிக்கலாம்!) அவனின் சந்தோஷம் தான் அவர்களின் சந்தோஷம். காலம் செல்ல செல்ல ஆண்டி வளர்ந்து பெரியவனாகி விடுகிறான். (எந்த சைக்கிள் சக்கரமும் சுற்றாமல்!) அதன் காரணமாக அவன் பொம்மைகளிடம் விளையாடி வெகு நாட்கள் ஆகின்றன. அவன் இவைகளுடன் விளையாடவில்லை என்றாலும் எல்லாவற்றையும் பத்திரமாக ஒரு பெட்டியில் பூட்டி பாதுகாப்பாக வைத்திருக்கிறான். பெட்டிக்குள் எல்லா பொம்மைகளும் சேர்ந்து இனிமேல் ஆண்டிக்கு தாங்கள் தேவையில்லை, அவன் எப்படியும் தங்களோடு விளையாடப் போவதில்லை என்று புலம்புகின்றன. ஆனால் வூடி அதை மறுக்கிறது. ஆண்டிக்கு குழந்தை பிறந்தால் அதனை சந்தோஷப்படுத்தலாம், ஆண்டி நம்மிடம் விளையாடினாலும், இல்லாவிட்டாலும் அவன் தான் நம் எஜமானன், அவனிடம் தான் நாம் இருக்க வேண்டும் என்று வாதம் செய்கிறது.

ஒரு கட்டத்தில் ஆண்டி கல்லூரியில் சேர வேறு ஊருக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அவன் அம்மா அவன் போவதற்கு முன் அவனுடைய அறையை காலி செய்ய விரும்புகிறாள். தேவையற்றவைகளை ஒரு மூட்டையாகவும், பரண் மேல் போட வேண்டியவைகளை இன்னொரு மூட்டையாகவும் கட்டச் சொல்கிறாள். அவனின் பொம்மைகளை நல்ல ஒரு குழந்தைகள் காப்பகத்தில் கொடுத்து விடலாம் என்று கூறுகிறாள். அவனுடைய பொம்மையை இழக்க ஆண்டி விரும்பவில்லை. அதனால் எல்லா பொம்மைகளையும் ஒரு சாக்கில் கட்டி பரணில் போட முடிவு செய்கிறான். வூடி அவனுக்கு நெருங்கிய நண்பன். அதனால் அதை மட்டும் தன் கல்லூரிப் பெட்டியில் வைத்து விட்டு மற்ற அனைத்தையும் ஒரு சாக்கில் போட்டு கட்டிக் கொள்கிறான். தவறுதலாக அது குப்பை மூட்டைகளுடன் சேர்ந்து விடுகிறது. வூடி இதை கண்டு கொள்கிறது. தன் நண்பர்கள் தவறுதலாய் குப்பைகளில் சேர்ந்து விட்டதை பார்த்து அவைகளை காப்பாற்ற வூடி களம் இறங்குகிறது. ஆனால் மற்ற பொம்மைகள் அதிலிருந்து தந்திரமாய் தப்பித்து காப்பகத்திற்குப் போய் மற்ற குழந்தைகளை மகிழ்விக்க காப்பகத்திற்காக உள்ள பெட்டியில் உட்கார்ந்து கொள்கின்றன. இதைக் கண்ட வூடி அவர்களை கண்டிக்கிறது. ஆனால் யாரும் அதனுடைய பேச்சை மதிக்கவில்லை. அந்த வாக்கு வாதத்தில் ஆண்டியின் அம்மா காரை கிளப்பிக் கொண்டு அந்த காப்பகத்திற்கு வந்து விடுகிறாள். வூடியும் இதில் மாட்டிக் கொள்கிறது. அந்த காப்பகத்தில் ஒரு கரடி பொம்மை இருக்கிறது. அது எல்லா பொம்மைகளின் தலைவனாக விளங்குகிறது. புது பொம்மைகளை வரவேற்று வாரத்திற்கு ஐந்து நாட்கள் குழந்தைகள் உங்களிடம் விளையாடுவார்கள்; சந்தோஷமாய் இருங்கள் என்று வாழ்த்தி விட்டுப் போகிறது. இப்படி ஒரு இடமா என்று ஆண்டியின் அனைத்து பொம்மைகளும் குதூகலிக்கின்றன. ஆனால் வூடி மட்டும் உங்களுக்கு விருப்பமிருந்தால் இங்கேயே இருங்கள் ஆனால் நான் ஆண்டியிடம் செல்கிறேன் என்று கிளம்பி விடுகிறது. போகும் வழயில் அடிபட்டு ஒரு குழந்தையின் கையில் சிக்கி விடுகிறது. அந்தக் குழந்தை வூடியை தன் வீட்டிற்கு கொண்டு சென்று விடுகிறது. அங்கு இருக்கும் மற்ற பொம்மைகளிடமிருந்து காப்பகத்தில் இருக்கும் கரடி பொம்மை பொல்லாதது என்றும் அது எல்லா பொம்மைகளையும் மிரட்டி வைத்திருக்கிறது என்ற உண்மையை தெரிந்து கொள்கிறது. அந்த கரடி பொம்மை ஏன் அப்படி ஆனது என்று ஒரு ப்ளாஷ் பேக்! வழக்கமான தமிழ் சினிமா பாணியில் கேட்பவரின் முகத்தை பார்க்காமல் ஜன்னலை பார்த்துக் கொண்டே ஒரு பொம்மை கதை சொல்கிறது. வூடி எப்படி தன் நண்பர்களை அந்தக் கரடியிடமிருந்து காப்பாற்றி ஆண்டியிடம் சேர்ந்தது என்பதே மீதிக் கதை. அதகளப்படுத்தியிருக்கிறார்கள் (கேபிள் சங்கரை அதிகம் படித்தது தப்பாய் போய் விட்டதே!)



பொம்மைகளை வைத்துக் கொண்டு என்ன மாதிரியான ஒரு உணர்ச்சிப் பூர்வமான கதை. ஹாஸ்யம், சோகம், காதல், வஞ்சம், கோபம், தந்திரம்...அப்பப்பா! ஒரு பொழுது போக்குச் சித்திரத்திற்கான அனைத்து அம்சங்களும் அம்சமாய் பொருந்தியிருக்கிறது. இதில் ஐ மேக்ஸ் 3 டி அனுபவம் வேறு! கேட்கவா வேண்டும். பட்டையை கிளப்பி இருக்கிறார்கள் (நான் சொல்லலை? கேபிளாரே தான்!) இந்தப் படத்தின் கதையை ஒரு வீக்கெண்டில் எழுதியதாக விக்கி சொல்கிறது. எப்படி இந்த அளவு பிரமாதப்படுத்துகிறார்கள் என்ற ஆச்சர்யத்திலிருந்து நான் இன்னும் மீளவில்லை. ஏதோ ஒரு சுவிட்சை தட்டியதால் பஸ் (விண்வெளி வீரன்) செய்யும் காதல் அளப்பறைக்கே கொடுத்த காசு சரியாகி விடும். கண்டிப்பாக குழந்தைகளை கூட்டிச் சொல்லுங்கள்! தலை தனியாய் உடல் தனியாய் இருக்கும் பொம்மையை பற்றி ராமகிருஷ்ணன் துணையெழுத்தில் எழுதியிருந்தார். இந்தப் படத்தை பார்த்தால் உங்கள் குழந்தைகள் இனிமேல் கண்டிப்பாய் அப்படி செய்யாது என்று நினைக்கிறேன்.

கொசுறு:
நேற்று ஒரு பொம்மை கடைக்கு என் மனைவியுடன் போயிருந்தேன். ஒரு பெரிய குரங்கு பொம்மையை பார்த்து இது எப்படி இருக்கிறது என்று கேட்டேன். அவளுக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என்று சொன்னாள். இதை நம்ம வாங்கிட்டு போயிட்டா அதோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வருத்தப்படுமே என்றேன்? என் மனைவி சிரித்தாள்! பொம்மை வாங்காமல் திரும்பினோம். வாட் எ கிரேட் எஸ்கேப்!!
அபிஷேக்கின் (அல்லது அவரது டூப்பின்) முதுகில்ஆரம்பிக்கிறது படம். உயரமான மலையிலிருந்து விழுகிறார். க்ளைமாக்சிலும் அதே போல் விழுகிறார். இந்த முறை முகத்தை காட்டிக் கொண்டே! முதுகில் ஆரம்பித்து முகத்தில் முடிகிறது படம். ஆரம்ப காட்சிகள் ராகினியை கடத்துவது தான் என்றால் அவர் பாட்டுக்கு தனியாய் ஒரு படகில் போய் கொண்டிருக்கிறார். அபிஷேக் தனி ஆளாய் போய் கடத்தியும் விடுகிறார்.. பிறகு ஏன் அந்த போலீஸ்காரர்களின் வாகங்களை வழி மறித்து தீ வைத்தார்கள்? ஏன் ஒரு பெண் போலீஸ்காரர்களை மயக்கி கூட்டிச் சென்றார்? ஏன் மூன்று போலீஸ்காரர்கள் கம்பில் கட்டி வைத்து தீ வைத்தார்கள்? ஒன்றும் புரியவில்லை...நான் தான் ஏதாவது கோட்டை விட்டு விட்டேனா? தெரிந்தால் சொல்லுங்கள்!

ராகினி மரணத்திற்கு பயப்படவில்லை, மலையிலிருந்து குதித்து விடுகிறாள். உடனே பீராவுக்கு காதல் வருகிறது, அப்போது ஒரு பாடல் என்று மணி சிச்சுவேஷன் சொல்லியிருப்பாரா? இத்தனை அபத்தமாகவா மணி யோசிக்கிறார்? குல்ஸாரும் வைரமுத்துவும் உருகி உருகி எழுதிய பாடலுக்கு இது தான் சிச்சுவேஷனா? இதனால் எப்படி காதல் வரும் என்று யாரும் மணியிடம் வாதாடி இருக்கா மாட்டார்களா? இதெல்லாம் தமிழ் படத்தில் சகஜம், இதெல்லாம் கேட்க கூடாது என்கிறீர்களா?

தமிழில் விக்ரம் அடிக்கடி சிரிக்கிறாரா தெரியவில்லை. அபிஷேக் எதெற்கெடுத்தாலும் கண்ணை உருட்டி உருட்டி சிரிக்கிறார். காமெடியாய் இருக்கிறது. பிளஃப் மாஸ்டரில் அபிஷேக்கின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்தது. அந்த மாதிரி எந்த வித அலட்டலும் இல்லாத காரெக்டர் தான் இவருக்கு சரியாய் இருக்குமென்று நினைக்கிறேன். ராவணில் விக்ரமும் ப்ரியாமணியும் அழகாய் ஹிந்தி பேசியிருக்கிறார்கள். எந்த இடத்திலும் உருத்தவேயில்லை. விக்ரமின் அஜானபாகுவான உடல் அவரின் பாத்திரத்திற்கு மிகச் சரியாய் இருக்கிறது. மீசை கொஞ்சம் தூள் விக்ரமை நினைவு படுத்துகிறது. விக்ரமிற்கு பிரசாந்தின் ராசி அடித்து விட்டது என்று நின்னைக்கிறேன். பிரசாந்த் நடிக்காத பெரிய இயக்குனர்களே இல்லை. ஆனால் அவர் இன்னும் மேலே வரவேயில்லை. அதே போல் லிங்குசாமி, சுசி கணேசன், மணிரத்னம் என்று இவரும் என்னனமோ செய்து பார்க்கிறார். படம் தான் ஓட மாட்டேன் என்கிறது. ஆனால் படம் எப்படி இருந்தாலும் நான் இருக்கிறேன் என்று தன்னை நிரூபித்துக் கொள்ளத் தவறவுதே இல்லை. இவரின் "வெடி"யாவது சரியாய் வெடிக்கிறதா பார்க்கலாம்! ப்ரியாமணிக்கு அவரின் கட்டை குரலே ஒரு ப்ளஸ்! ஐஸ்வர்யாவைப் பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதோ எனக்கு வயதாகப் போகிறது என்பது போல் இருக்கிறது அவரின் தோற்றம்.

பிரம்மாண்டமான விஷ்ணு சிலை, மலைகள், அருவிகள், கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சிகள் எல்லாம் இருக்கிறது ராவணில், இந்த கதை தான்.... திரைக்கதை! இப்படி ஒரு மொக்கை படம் எடுக்க ஏன் இத்தனை மெனக்கெடல் என்று புரியவில்லை. இத்தனை அமெச்சூர்த்தனமான ஒரு மணிரத்னம் படத்தை நான் இது வரை பார்த்ததில்லை. அவரே சொல்வது போல் பேசாமல் அவர் கோல்ப்ஃ விளையாட போய் விடலாம்!

"பத்து தலை ராவணன்" - விக்ரம்; "ஒரே தலை! தலைவலி!!" - பிரதீப்

கொசுறு:

"நான் உன்னை போல் அல்ல வளர்ந்து விட்டவன்" என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், என் மனைவியின் வற்புறுத்தலால் நேற்று தான் டாய் ஸ்டோரி 3 பார்த்தேன். அதுவும் 3 டியில. அது கதை. அது படம். விருப்பமே இல்லாத ஒருவனையும் சுண்டி இழுத்து விடுகிறார்கள். எத்தனை அற்புதமான உழைப்பு. என்ன ஒரு கற்பனை வளம். கண்டிப்பாய் பாருங்கள்!
கடைசியாக நீங்கள் உங்கள் பேனாவில் எப்போது புது ரீஃபில் போட்டீர்கள்? சில கேள்விகள் ஏன் எதற்கு என்று தெரியாமல் மனதில் வந்து விடுகின்றன! அப்படித் தான் இதுவும் வந்தது. அதைப் பற்றி நினைக்க நினைக்க சுவாரஸ்யமாய் இருந்தது (எனக்கு!). நான் 4 வது படிக்கும்போது முதன் முதலாய் பேனா உபயோகித்தேன். வெறும் 50 பைசா தான்! ஆரம்பத்தில் அடக்கமாய் இருக்கும்; போகப் போக தமிழ் சினிமாவில் அளவுக்கு மீறி பேசும் குழந்தைகளைப் போல் அளவுக்கு மீறி மை கொட்டும்! மணி மணியாய் கையெழுத்து இருந்தால் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம். மை கொஞ்சம் மூக்கில் ஒட்டிக் கொள்ளும்! வீட்டுப் பாடம் எழுதி முடித்து விட்டுப் பார்த்தால் கையில், காதில், முகத்தில் எல்லாம் மையின் கரை படிந்திருக்கும். அந்த ஐம்பது பைசா பேனாவை ஒரு நாள் தொலைத்து விட்டு கதறி அழுதது இன்றும் நினைவிருக்கிறது! அந்த ஐம்பது பைசா பேனாவுக்கும் நான் ரீஃபில் போடுவேன். ரீஃபில் நாலணா என்று ஞாபகம்! அன்று ஜாமேட்றி பாக்ஸ் இருந்ததாலோ என்னமோ பேனாக்கள் அதிகம் தொலையவில்லை. ஓரிரு முறை ரீஃபில் மாற்றும் வரை தாக்கு பிடித்தது. இன்று ஒரு பேனாவை பாதுகாப்பது பிரம்ம பிரயத்தனமாக இருக்கிறது! நேற்று என் பேனாவை இங்கே விட்டு விட்டேன், பார்த்தீர்களா என்று கேட்டால் இன்று சிரிப்பார்கள்! பெரியவர்கள் தான் பேனாவை இப்படித் தொலைக்கிறோமா? குழந்தைகள் பத்திரமாய் வைத்துக் கொள்கிறார்களா? ரீஃபில் தீர்ந்தால் ரீஃபில் போடுகிறார்களா? கடைகளில் ரீஃபில் மட்டும் கிடைக்கிறதா? இன்றும் குழந்தைகள் ரீஃபில் தீர்ந்து போகும்போது கையை உதறியும், வாயில் வைத்து ஊதியும் எழுதுகிறார்களா?

நான் பள்ளியில் படித்த போது என் நண்பன் ஒருவன் இருந்தான். அவன் அவனுடைய ரெனால்ட்ஸ் பேனாவை எப்போது மூடினாலும் அதன் மூடியின் கீழ் நுனி அந்தப் பேனாவின் உடம்பு பகுதியில் எழுதப்பட்டிருக்கும் ரெனால்ட்ஸ் என்ற எழுத்தை நோக்கியே இருக்கும். யாராவது அவன் பேனாவை கடன் வாங்கி திருப்பித் தந்தாலும் மூடியை அதன் திசையில் சரியாக திருப்பிக் கொள்வான். அது அவனுடைய அனிச்சையான ஒரு செயல்! அவனிடம் இருந்து அப்போது எனக்கும் அந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டது! அவன் பன்னிரண்டாவது வகுப்பில் அத்தனை கணக்குகளையும் ஒரு நோட்டில் அச்சடித்த மாதிரி எழுதி வைத்திருந்தான். ஒரு அடித்தல் திருத்தல் இருக்காது! அந்த நோட்டுக்கு ஏகப்பட்ட கிராக்கி! நானும் அந்த நோட்டை கடன் வாங்கி, அதனுடைய நேர்த்தியில் மயங்கி கணக்கை கோட்டை விட்டிருக்கிறேன்! "உங்க நாயனத்துல தான் அப்படி சத்தம் வருதா?" என்று தில்லானா மோகனாம்பாவில் மனோரமா சிவாஜியிடம் கேட்பதைப் போல் அவனிடமும் அவன் பேனாவைப் பற்றிக் கேட்டு, அதை வாங்கி ஆராய்வோம்! என்ன தான் உடம்பில் எண்ணை தடவி புரண்டாலும் ஒட்ற மண்ணு தானே ஒட்டும்?

பத்தாவது படிக்கும் போது மை பேனாவின் ஆதிக்கம்! மை பேனாவில் குண்டு குண்டு, பட்டை படையாய் எழுதினால் நிச்சயம் 400 க்கு மேல் வாங்கி விடலாம் என்று ஒரு கருத்து இருந்தது! அதற்காக கூர்மையான நிப்பை பிளேடால் கீறி பட்டை ஆக்குவோம்! ஹீரோ பேனாவை சீண்டவே மாட்டோம்! அந்த மாதிரி பட்டையாய் எழுதும் பேனா ஒன்று என் வீட்டுக்கு அருகில் உள்ள பலசரக்கு கடையில் கிடைத்தது. அண்ணா நகரில் உள்ளவன் கூட என் வீட்டுக்கு அருகில் உள்ள கடையில் தான் அந்த பேனாவை வாங்கினான். விலை மூன்று ரூபாய்! இத்தனை உழைத்தும் (!) மார்க் வந்ததும் தான் புரிந்தது எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல் என்று! "நம்ம குண்டு எழுத்தை பார்த்து பேப்பர் திருத்துறவருக்கு சண்டை போட்டு வந்த தன்னோட குண்டு பொண்டாட்டி ஞாபகம் வந்துருக்குமோ?" என்று சிலர் சந்தேகப்பட்டார்கள்!

சாஃப்ட்வேர் இஞ்சினியர் ஆன பிறகும் ஏதாவது டூர் போகும்போதும் பேனா கொண்டு போவது எனக்கு பழக்கம் ஆகி விட்டது. அது என்னவோ தெரியவில்லை, பேனா எப்போது வேண்டுமென்றாலும் பயன் படும் என்று ஒரு எண்ணம். எங்காவது காத்திருக்க உட்கார்ந்தால் ஒரு பேப்பர் கிடைத்தால் ஏதாவது கிறுக்க ஆரம்பித்து விடுவேன். நான் எதற்கெடுத்தாலும் கிறுக்குவதை பார்த்த என் நண்பன் என்னிடம் "நீ கொலை எதுவும் செய்யாதே உன்னை எளிதாய் கண்டுபிடித்து விடுவார்கள்" என்று எச்சரித்திருக்கிறான். கல்லூரியில் படிக்கும் போது ஒரு முறை வாத்தியார் பேனா கேட்டதற்கு மூடியை வைத்துக் கொண்டு பேனாவை மட்டும் கொடுத்தேன். ரொம்ப வெவரமா இருக்கியே என்றார். அது பாராட்டா இல்லை திட்டா என்று தெரியவில்லை. அதே போல் எல்லா பெண் நண்பர்களுக்கும் அசைன்மென் நோட்டில் வித விதமாய் பேர் எழுதித் தந்து பல மாணவர்களின் (கவனிக்க: பெண் நண்பர்கள், ஆண் மாணவர்கள்!) வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன். ஒரு பெண்ணின் ஸ்டாம்ப் புக் கிடைத்து விட்டால் போதும், "ஒரு சொல் கேட்டால் ஓராயிரம் சொற்பொழிவுகள் நடத்தும் என் பேனா இன்று ஏனோ மௌனப் போராட்டமே நடத்துகிறது!" என்று பிரிவின் சோகத்தை கசக்கிப் பிழிந்திருக்கிறேன்! சாஃப்ட்வேர் இஞ்சினியர் ஆன பிறகு மேனஜர் பேசுவதை நோட்ஸ் எடுப்பதற்காக வேக வேகமாய் எழுத ஆரம்பித்து இன்று என் கையெழுத்து கோழி என்ன சேவல், டைனோசர் கிறுக்கல்களை விட மோசமாய் இருக்கிறது!

அவளின் நினைவுகள் தொலைவதில்லை
அடிக்கடி தொலையும் பேனாக்களைப் போல்!