அன்று வேலையை முடித்து விட்டு வர சற்று நேரமாகிவிட்டது. பதட்டத்துடன் கதவைத் திறந்ததும் மூத்திர நெடி முகத்தில் அறைந்தது. ரமா அக்கா வரவில்லை என்று புரிந்தது. அம்மா கட்டிலில் படுத்தபடி அரற்றிக் கொண்டிருந்தாள். விளக்கைப் போட்டேன். அவள் கண்கள் கூச இமைகளை நெறுக்கிக் கொண்டாள். அவள் உடையெங்கும் ஈரம். வெகுநேரமாய் ஈரத்தில் கிடந்ததால் கால்கள் சில்லிட்டிருந்தன.
அடுக்களைக்குச் சென்று அடுப்பு மூட்டி ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்தேன். திரும்பி வந்து அவள் உடலில் போர்த்திய துணியை விலக்கினேன். தொப்பலாய் நனைந்திருந்தது. அதை எடுத்து கீழே போட்டேன். அவள் தெம்பில்லாமல் அரற்றிக் கொண்டே இருந்தாள். கவனமாகக் கேட்டால் என்னை வைது கொண்டிருந்தாள். பாவி, பாவி...என்னைக் கொன்னுடு, கொன்னுடு என்றும், ரமா முண்ட என்றும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். அந்தப் பழைய தகரக் கட்டில் கொஞ்சம் தொட்டாலே க்ரீச்சிட்டது.
காலையில் துடைத்துக் காயப்போட்டிருந்த அந்த நைந்து போன லுங்கியை கொண்டு வந்தேன். அவளின் கால்களைத் தூக்கி லுங்கியால் துடைத்தேன். லுங்கி நன்றாக காய்ந்திருந்தால், அது ஈரத்தை உறிஞ்சிக் கொண்டது. அவள் கால்களை சூட பறக்கத் தேய்த்து விட்டேன். வலிக்குதுடா...சண்டாளப் பாவி...என்று சற்று பலமாகவே சொன்னாள். எனக்கு இது பழகிவிட்டது. ஒன்றா, இரண்டா, ஏழு வருடங்களாய் தினமும் அவளின் வசையைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
அம்மா ஒரு வாழ்வாங்கு வாழ்ந்து முடித்தவள். நான்கு பிள்ளைகளைப் பெற்று, கணவனை இழந்து தனியாக அத்தனை பேரையும் ஆளாக்கியவள். என் பதினைந்து வயதில் அண்ணன்கள், அக்கா அத்தனை பேருக்கும் கல்யாணம் செய்து முடித்தவள். அவர்களின் பிள்ளைகள் வளரும் வரை, இங்கே அங்கே என்று போட்டி போட்டுக் கொண்டு உறவு கொண்டாடப்பட்டவள். மரம் தழைத்தோங்கி நிற்கும்போது தானே பறவைகளின் கூடு. அது பட்டுப் போன பிறகு பறவைகளுக்கு அங்கு என்ன வேலை? நடமாடும் வரை அவர்கள் அத்தனை பேரின் பொதி சுமந்தவள் கை கால் விழுந்த போது அவளே பொதியாய் மாறிப் போனாள். அன்று வாழ்வில் ஏதோ புரிந்து கொண்டவள், எல்லோரிடமும் துவேஷத்தை மட்டும் பாராட்டத் தொடங்கினாள். பரிதாபப்பட்டு பார்க்க வருபவர்களையும் வசை மாப் பொழிந்தாள். அவளின் கையறுநிலையின் மீது உள்ள கோபத்தை எல்லோரிடமும் ப்ரயோகித்தாள்.
விசித்திரமாய் இருக்கிறது. நாம் ஒருவரிடம் ஒரு சாதாரண உதவி கேட்க வேண்டும் என்றாலும், அவர்கள் நம்மை என்ன எரிச்சல் படுத்தினாலும், அதை நாம் பொருத்துக் கொண்டு அந்த உதவியைக் கேட்டுப் பெறுவோம். ஆனால் என் அம்மா, அவளின் எல்லாத் தேவைகளுக்கும் முழுவதுமாய் சார்ந்திருக்கும் என்னிடம் தான் அதிக எரிச்சல் அடைகிறார். அதிக வசை பொழிகிறார். நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது.
நான் செய்வதை பெரிய தியாகமாக நான் நினைப்பதில்லை. ஒருவேளை, இப்படி இருக்கலாம். அவள் எனக்கு கல்யாணம் செய்து வைக்கவில்லை. அதனால் எனக்குக் குழந்தைகள் இல்லை, அதனால் அவளை உறவு கொண்டாடவில்லை, அதனால் அவளை உதறத் தேவையில்லாமல் போயிருக்கலாம். அதோடு, சதா துவேஷித்துக்கொண்டே இருக்கும் ஒருவருக்கு பணிவிடை செய்வதில் ஏதோ ஒரு ஞானம் இருக்கிறது. ஓங்கி அறையும் ஒருவரிடம் மறு கன்னத்தைக் காட்டும் அன்பு அது. அதை அன்பு என்று சொல்லும்போதே, உண்மையில் அது அன்பு தானா என்ற கேள்வியும் எழுகிறது.
கட்டிலைத் துடைத்து விட்டு, மின்விசிறியை நிறுத்தினேன். அவள் உடைகளைக் கலைந்தேன். ஒரு வயதான, பட்ட மரம் போல இருந்தாள். உடலெங்கும் எண்பது வயதின் வேர்கள் பரவிக் கிடந்தன. அடுக்களை சென்று வெந்நீரை எடுத்து, கொஞ்சம் மஞ்சள் சேர்த்தேன், கையோடு ஒரு நல்ல துணியை எடுத்து கொண்டேன். துணியை வெந்நீரில் முக்கிப் பிழிந்து மெதுவாய் உடலெங்கும் துடைத்து விட்டேன். அவள் உதடுகள் எதையோ முனுமுனுத்துக் கொண்டிருந்தன. இரண்டு கைகளும், கால்களும் எந்த வித அசைவும் இல்லாமல் கிடந்தன. முழுவதும் துடைத்து விட்டு, துவைத்துக் காய வைத்திருந்த வேறு புடவையை உடலில் சுற்றினேன். இன்னொரு நைந்து போன புடவையை அவளின் முதுகின் கீழ் வைத்துக் கீழ் வரைப் பரப்பினேன். இடையில் கட்டில் ஓயாமல் ஓசை இட்டுக் கொண்டே இருந்தது. மின்விசிறியைப் போட்டு விட்டு, அடுக்களைக்குச் சென்று இருவருக்கும் கொஞ்சம் கருப்பட்டிக் காபி போட்டேன்.
கண்ணை மூடிக் கொண்டிருந்தவளை மெல்ல என் மடியில் கிடத்தி, பதமான சூட்டில் காபியை ஊட்டினேன். ஓவ்வொரு முறை வாயில் ஊற்றி விட்டு நெஞ்சைத் தடவி விட்டேன். இதன் இடையில், சனியனே, மெல்ல என்று ஏதோ சொன்னாள். அவளுக்கு கொடுத்து விட்டு, படுக்க வைத்து, நான் ஒரே மடக்கில் என் பங்கு காபியை வாயில் ஊற்றினேன்.
களைத்து போட்ட உடைகள், துணிகள் அனைத்தையும் அள்ளி எடுத்து சோப்பு பவுடரில் ஊற வைத்தேன். உள்ளே வந்து சாமி படம் அருகில் வைத்திருந்த ஊது பத்தியை ஏற்றினேன். நல்ல மணம் பரவத் தொடங்கியது. மனதுக்குக் கொஞ்சம் உற்சாகமாய் இருந்தது. அடுக்களைக்கு சென்று அரிசி களைந்து சாதம் வைத்தேன். இருந்த இரண்டு தக்காளியை வைத்து, புளியைக் கிள்ளிப்போட்டு ரசம் வைத்தேன். அம்மாவுக்கு சாதம் குழைவாய் இருக்கணும். இல்லைன்னா இறங்காது.
சாதம் நன்றாகக் குழைந்திருந்தது. கொஞ்சம் ஆற வைத்து விட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் தட்டில் எடுத்து வைத்து அம்மாவுக்கு ஊட்டினேன். இருமலும், வசையும் தொடர்ந்தது. ஒரு வழியாய் போராடி ஊட்டி முடித்து, நான் நாலு வில்லல் வாயில் போட்டுக் கொண்டேன். அம்மாவுக்கு மாத்திரைகளை பொடி செய்து கொஞ்சம் கொஞ்சமாய் வாயில் ஊற்றினேன். கசப்பு நாக்கில் ஒட்ட ஒமட்டினாள். அதிக இருமல் வந்துவிட்டால், நெஞ்சு எரிச்சல் அதிகமாகிவிடும். மெது மெதுவாய்க் கொடுத்தேன். மருந்துக் கசப்புக்கு டாக்டரைத் திட்டினாள். விளக்கை அணைத்தேன்.
அவளை ஆசுவாசப்படுத்தி படுக்க வைத்து, ஊறப் போட்டத் துணிகளைத் துவைத்தேன். மணி பதினொன்னரை ஆகி இருந்தது. கட்டிலுக்கு அருகில் பாய் விரித்து, சுவரில் சாய்ந்தபடி அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மாவை எங்காவது சேர்த்து விடும்படி அண்ணன்களும், அக்காவும் சொன்னது ஏனோ ஞாபத்துக்கு வந்தது. அதனால் என்ன ஆகி விடப் போகிறது. அவளுக்கு நான் துணை, எனக்கு அவள் துணை. மனித மனம் எல்லா அலுப்பான வேலைகளிலும் ஒரு கட்டத்தில் ஒருவித களிப்பைக் கண்டடைந்து விடும் என்றே தோன்றுகிறது.
எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை. பயங்கரமான இருமல் சத்தம் கேட்டு எழுந்தேன். விளக்கைப் போட்டு அருகில் இருந்த செம்பில் இருந்து தண்ணீரை எடுத்து அம்மாவை படுக்க வைத்து நெஞ்சைத் தடவிக் கொஞ்சம் கொஞ்சமாய் ஊற்றினேன். தண்ணீரை வழக்கத்தை விட அதிகமாக துப்பினாள். அவள் முகம், சொல்லமுடியாத வலியை, துயரைக் கொண்டிருந்தது. தண்ணீரைக் கீழே வைத்து, நான் அவள் நெஞ்சைத் தடவத் தடவ, அவள் கண்களை அகலமாய் விரித்து வேண்டாம் என்பது போல் ஏதோ செய்தாள். அவளின் முகத்தில் எப்போதும் இருக்கும் துவேஷம் இன்று பூரணம் பெற்றது போல் அவள் கண்களை அகல விரித்திருந்தாள். நோய்ப்பட்ட உடம்பில் இத்தனை துவேஷத்துடன் கண்கள் வெளியே வருவது போல் அவளை அப்படிப் பார்க்க பயங்கரமாக இருந்தது. இது வரை அவள் அப்படிச் செய்து நான் பார்த்ததில்லை. நான் நெஞ்சிலிருந்து கையை எடுத்ததும், கண்களை மூடிக் கொண்டு, மூச்சை இழுத்து இழுத்து விட்டாள். மூச்சு விடச் சிரமப் படுவதைப் பார்த்து, உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்று எழ முயன்றால் அதே துவேஷப் பார்வை. தலையை வெட்டி வெட்டி மறுத்தாள்.
அவளை மடியில் கிடத்தியபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். தலையை வெட்டியபடியே, கண்களை மூடியும், திறந்தும் போராடிக் கொண்டிருந்தாள். ஒரு கணத்தில், மூச்சை இழுத்து ஒரு விதமான விநோத ஒலியுடன் அவள் அடங்கிப் போனாள். அதன்பிறகு உடலில் எந்த அசைவும் இல்லை. அவள் நெஞ்சில் கை வைத்தேன், கண்கள் மூடியபடியே இருந்தது.
அவளின் அந்த அகன்ற பார்வைக்கும், வெட்டிய தலைக்கும் எனக்கு விடை கிடைத்தது போலத் தோன்றியது. அவளின் அத்தனை துவேஷத்துடன் நான் செய்த அன்புக்குக் கைமாறாக அதே துவேஷத்துடன் அவள் எனக்குக் காட்டிய அன்பாக அவளின் முடிவு எனக்குப் பட்டது. போதும் போடா என்று தாய் ஒரு மகனிடம் சொல்வதை போல்.
அவளின் தலையை கட்டிலில் கிடத்தி, அவளையே பார்த்து கொண்டு நின்றேன். இன்னும் முகத்தில் துவேஷம் தீர்ந்தபாடில்லை. அவளின் கால்களுக்கு அருகில் அமர்ந்து, அவளின் கால்களைப் பற்றி "நன்றிம்மா" என்றதும் ஏனோ அழுகை முட்டிக் கொண்டு வந்தது.