இன்று மாலை நடைபயிற்சியின் போது தான் அவளைப் பார்த்தேன். இதுவரை அவளை அங்கே பார்த்ததில்லை. எங்கள் அப்பார்ட்மென்டின் வெளியே உள்ள 30 அடி சாலைக்கு அந்தப் பக்கம் நின்றிருந்தாள். அந்த சாலை முட்டுச் சாலை என்பதால் அதிக வாகனங்கள் வருவதில்லை. அவ்வப்போது அருகில் இருக்கும் சந்திலிருந்து பைக்குகள் போகும் வரும். நான் அவளை எங்கள் அப்பார்ட்மென்ட் க்ரில் காம்பவுண்ட் வழியாய் பார்த்துக் கொண்டிருந்தேன். முதலில் நான் கவனிக்காமல் நடந்து கொண்டு தான் இருந்தேன். திடீரென்று "போதை ஏறிப் போச்சு, புத்தி மாறிப் போச்சு" என்று யாரோ பெண் பாட்டுப் பாடும் சத்தம் கேட்டது. ரோட்டில் நின்று கொண்டு எந்தப் பெண் இந்தப் பாடலைப் பாடுகிறாள் என்று தான் பார்த்தேன்.
அவள் கத்தரிப்புக் கலரில் நேர்த்தியாய் புடவை கட்டி இருந்தாள். கருப்பான, ஒல்லியான உருவம். முன் தலையில் நரையின் ஆரம்பம். ஒரு நாற்பது வயது இருக்கலாம். தலையில் கொஞ்சம் பூவை பிய்த்து வைத்திருந்தாள். இடது கையில் சமீபத்தில் வளைகாப்பு முடிந்ததைப் போல் நிறைய வளையல்கள். அது மட்டும் கொஞ்சம் உறுத்தலாய் இருந்தது. "இவளா அந்தப் பாட்டைப் பாடினாள்!?" என்று பார்த்துக் கொண்டிருந்தேன். "சே, சே, இருக்காது!" கார்ப்பரேஷனில் இருந்து கணக்கெடுக்க வரும் பெண்களைப் போல் டீசன்டாக இருந்தாள். ரோட்டில் நின்று கொண்டு அப்படி ஒரு பாட்டு ஏன் பாட வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, அவள் லேசாய் சிரித்து, ஒரு நிலையில்லா பார்வையுடன், "நான் ஒரு மானங்கெட்டவ!" என்றாள். இவள் தான் பாடி இருக்கிறாள்.
நான் நடையை விட்டுவிட்டு சுவரோரமாய் நின்று அவளை கவனிக்க ஆரம்பித்தேன். மனநிலை பிறழ்ந்தவர்களை கவனிப்பது யாரையும் கண்டுகொள்ளாமல் விளையாடும் குழந்தை ஒன்றை கவனிப்பதைப் போல. ஒரே வித்தியாசம், குழந்தையின் செய்கைகள் ஆனந்தத்தைத் தரும். இவர்களின் செய்கைகள் வருத்தத்தைத் தரும். அப்படி மேலோட்டமாய், அழகாய் சொன்னாலும், மனதின் ஆழத்தில் அது ஒரு வகை குரூரம் தான். அப்படி ஒரு மனிதனைப் பார்க்கும்போது, அவன் என்ன செய்வான், எப்படிச் சிரிப்பான், என்ன பேசுவான், யார் மீது மண்ணைத் தூற்றுவான், யார் மீது கல்லெறிவான் என்று காண மனம் ஆசைப்படுகிறது. பெண் என்றால் இன்னும் அசிங்கமாய்.
"ஹே செக்குரிட்டி, செக்குரிட்டி" என்று எங்கோ பார்த்துக் கொண்டு சில முறை சொன்னாள். அவள் எங்கள் அப்பார்ட்மென்ட் செக்யுரிட்டியைப் பார்த்து பேசவில்லை. அதே நிலை கொள்ளாத பார்வையுடன், ஆனால் ஒரு வித உரிமையுடன், வாஞ்சையுடன் செக்குரிட்டி செக்குரிட்டி என்று பேசினாள். அவள் இப்படி அலைவதால், அவர்கள் இவளிடமோ, இவள் அவர்களிடமோ அதிகம் பேசி இருக்கக் கூடும். இவளைப் பார்த்துப் பரிதாப்பட்டு அவர்களின் சாப்பாட்டை பகிர்ந்து கொண்டிருக்கக் கூடும். அவள் சற்று ஓய்ந்து விட்டு, திடீரென்று "கட்டிக் கொடுக்குறது அப்பன் கடமை தானே!" என்றாள். திடீரென்று சிரித்தாள். மனநிலை சரியில்லாதவளா இவ்வளவு சுத்தமாக இருக்கிறாள், இத்தனை நேர்த்தியாக புடவை கட்டி இருக்கிறாள்.
"மயிலாப்புரா?, மைசூரா?...அங்கே தான்!". எந்தக் கோர்வையும் இல்லாமல் பேசினாள். ரொம்ப கொஞ்சமாய் தான் பேசினாள். அடிக்கடி சிரித்தாள். அவளை ஒரு பைக் கடந்து போக அவர்களுக்கு கையசைத்து சிரித்த முகத்துடன் டாட்டா காட்டினாள். பிறகு ஏதோ வாய்க்குள் புலம்பிக் கொண்டிருந்தாள். பிறகு குனிந்து அருகில் இருந்த இரண்டு கட்டைப் பைகளில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள். அப்போது தான் அந்தப் பைகளைப் பார்த்தேன். பைகள் இரண்டும் நிரம்பி இருந்தும் பொருட்கள் மிகச் சரியாய் அடுக்கப்பட்டிருந்தன. சற்று நேரம் துலாவிவிட்டு ஒரு சிறிய நோட்டு புத்தகத்தையும், ஒரு பேனாவையும் கையில் எடுத்துக் கொண்டாள். நான் கற்பனை செய்த மாதிரி, கார்ப்பரேஷன் பெண்கள் வீட்டுக்கு வீடு வந்து கணக்கெடுப்பு செய்வதைப் போல் கொஞ்ச நேரம் எழுதினாள். அவள் அப்படி என்ன எழுதி இருப்பாள் என்று பார்க்க எனக்கு ஆசை. அத்தனை பொருமையாய், பொறுப்பாய் அவள் அதைச் செய்து கொண்டிருந்தாள். அப்போது, இந்தப் பக்கம் சென்ற வண்டியில் இரண்டு பெண்கள் செல்ல, "அம்மா, துப்பட்டா கீழே போகுது பாரும்மா, பாத்து போங்க" என்று சிரித்து வழியனுப்பினாள். அந்தப் பெண்களும் அவளை என்னைப் போலத் தான் எண்ணி இருப்பார்கள். அவள் மனநிலை சரியில்லாதவள் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
யோசித்துப் பார்த்தால், ஒரு வளர்ந்த மனிதன், மனநிலை சரி இல்லாத போது தான் அடுத்தவர்க்கு நன்மை மட்டுமே செய்யும் எண்ணம் கொண்டிருப்பான் போலும். கல்லெறிவதும், தூற்றுவதும் இதில் சேராது. அந்தப் பெண்கள் எத்தனை முறை துப்பட்டாவை அப்படி விட்டுக் கொண்டு அவளை கடந்து போயிருந்தாலும் அவள் ஒவ்வொருமுறையும் அந்த சிரிப்பு குறையாமல் அவள் அதைச் சொல்லி இருப்பாள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. வஞ்சகமில்லா மனதை அடைய மனம் பிறழ வேண்டி இருக்கிறது என்பது எத்தனை பெரிய நகைமுரண்.
அவள் பார்த்த கணக்கை எல்லாம் எழுதி முடித்தது போல், அந்த நோட்டுப் புத்தகத்தை பையில் வைத்து விட்டு, பேனாவை ப்ளவுசில் சொருகிக் கொண்டாள். பிறகு அருகில் இருந்த கல் ஒன்றில் அமர்ந்து கொண்டு மறுபடியும் அந்தப் பையைத் துலாவி ஒரு வட்டமான வெள்ளை டப்பா ஒன்றை எடுத்தாள். ஹோட்டல்களில் பார்சலுக்கு கொடுக்கும் ப்ளாஸ்டிக் டப்பா அது. ஆனால் அதில் எந்த ஹோட்டல் பெயரும் பொறிக்கப்படவில்லை. அது கழுவித் துடைத்து சுத்தமாய் இருந்தது. சாலையின் ஓரத்தில் கிடந்த ஒரு கல்லில் உட்கார்ந்து கொண்டு அந்த டப்பாவைத் திறந்தாள்.
அவள் சாப்பிடப் போகிறாள் என்று நினைத்தேன். ஆனால், அந்த பெரிய வட்ட டப்பாவில் இருந்து சிறிதாய் இன்னொரு வட்டமான வெள்ளை டப்பாவை எடுத்து அதைத் திறந்து பொட்டு மாதிரி ஒன்றை வைத்துக் கொண்டாள். திரும்பத் திரும்ப அதைச் செய்தபடி இருந்தாள். பையிலிருந்து மறுபடியும் துலாவி ஒரு சுத்தமான மஞ்சள் சீப்பை எடுத்து அவள் இடுப்பில் சொருகிக் கொண்டாள். தலையில் பின்னியிருந்த band ஐ அவிழ்த்து ப்ளவுசில் போட்டுக் கொண்டாள். தலைவாரிப் பின்ன ஆயுத்தம் செய்து கொண்டிருந்தாள் போலும்.
எனக்கு அப்போது தான் ஒரு பெண்ணை அப்படி ஒரு இடத்தில் நின்று பார்ப்பது சரியல்ல என்று பிரக்ஞையே வந்தது. அதனால் சற்று நடந்தபடியே அவளை கவனித்தேன்.
அவளைப் பார்க்கப் பார்க்க எனக்கு அதிசயமாய் இருந்தது. இத்தனை சுத்த பத்தமாய் ஒரு மனநிலை தவறிய ஆணையோ, பெண்ணையோ நான் பார்த்ததே இல்லை. உண்மையில் இவள் மனநிலை தவறியவள் தானா? அல்லது இப்படி ஒரு மாலைப் பொழுதில் யாருக்கும் தன்னைத் தெரியாத ஒரு இடத்தில் வந்து இப்படி நடந்து கொண்டு பார்க்கலாம் என்று முடிவெடுத்தாளா? எதனால் இவளுக்கு இந்த நிலை? வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் நாம் அனைவரும் வாழும் வாழ்வில் இவள் வேறு ஒரு தனி வாழ்க்கையை வாழ்கிறாளே? இது எதனால்? வாழ்வின் புதிர்களை நாம் விடுவிக்க விடுவிக்க, வாழ்க்கை மேலும் மேலும் நம் முன் பல புதிர்களைப் போட்டபடியே இருக்கிறது.
நான் இப்படி பலவித யோசனைகளுடனும், அவ்வப்போது அவளைப் பார்த்துக் கொண்டும் நடந்து கொண்டிருந்தேன். ஒரு கணத்தில் அவளின் பார்வை என் பார்வையை சந்தித்து. இத்தனை நேரம் நான் "இவள் யாரைப் பார்த்து சிரிப்பாள், யாரைப் பார்த்து கல்லெறிவாள்?" என்று பார்த்துக் கொண்டிருந்தேனோ, அந்த "யாராய்" நான் மாறக் கூடிய தருணம் அது. அந்த ஒரு கணம், கூசும் பல்லில் ஊசியால் கீறியது போல் ஒரு வலி மிகுந்தது. நான் உடனே, அவளைத் திரும்பிப் பார்க்காமல் அந்த இடத்தை விட்டு வேகமாய் நடந்தேன். ஒருவேளை, அவள் அதே சிரிப்புடன், "பாவம் பைத்தியம்" என்று என்னை நினைத்திருக்கலாம்.