கடந்த மூன்று வருடங்களுக்கு மேல் சென்னையில் இருந்தாலும், நேற்று தான் கலாக்க்ஷேத்ரா செல்லும் வாய்ப்பு கிடைத்தது! பல நாள் கனவு நேற்று ஒருவாறு நிறைவேறியதில் சந்தோஷம்! அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு யாராவது பின்னால் வந்து போகும் போது மட்டும் வேலைக்கான விஷயங்களை மேக்ஸிமைஸ் செய்து கொண்டும், யாரும் இல்லாத சமயங்களில் இணையத்தில் மேய்ந்து கொண்டும் இருந்தேன். சரி அப்படி ஒன்றும் பிரமாதமாக வேலை இல்லை என்றால் ஏதாவது ஒரு கச்சேரிக்குப் போகலாமே என்று எண்ணி கூகுளாரிடம் எந்த இடத்தில் என்ன கச்சேரி, எந்த சபாவில் என்ன டிபன் என்று கேட்டதில் கலாக்ஷேத்திராவில் எப்படியோ என்னை கொண்டு போய் நிறுத்தியது! இன்று மாலை 6:30 மணிக்கு வைஜெயந்தி மாலா பாலியின் பரதநாட்டியம் என்று போட்டிருந்தது!

என்ன வைஜெயந்தி மாலா இன்றும் நடனம் ஆடுகிறார்களா என்று சந்தேகம் ஒரு புறம் இருந்த போதிலும் பாலி என்ற அவரின் முழுப் பெயர் கொஞ்சம் ஊர்ஜிதப்படுத்தியது!

கட் செய்தால் கலாக்க்ஷேத்ரா!

அடடா, சென்னையில் அதுவும் ஒருவர் மேல் ஒருவர் நடக்கும் திருவான்மியூரில் இப்படி ஒரு இடமா என்று வியந்தேன்! விசாலமான இடம். சுற்றிலும் மரங்கள். ரம்மியமான சூழல்! ஐ.ஐ.டி கேம்பஸை ஞாபகப்படுத்தியது! ஆங்காங்கே காவி வேட்டியுடனும், தலையில் குடுமியுடனும் வெள்ளைக்காரர்கள். 50 ரூபாய் டிக்கட் இருந்தாலும் முன்னர் பெற்ற அனுபவத்தாலும், [க்ளிக்] எங்கே வைஜெயந்தி மாலா ஆடும் போது என் கால் கையை மிதித்து விடுவாரோ என்று பயந்து 100 ரூபாய் டிக்கட் எடுத்து, பாதுகையை வெளியே விடுத்து, ஒரு இருள் போர்த்திய சபைக்குள் நுழைந்தேன். கேரள சேலை சரசரக்க அம்சமான பெண்களில் ஒருவர் எனக்கு இருக்கை தேடிக் கொடுத்தார்!

அரங்கின் ஒரு ஓரத்தில் மட்டும் கொஞ்சம் வெளிச்சம். ஒரு பெண்மணி [பெயரை மறந்திருப்பேன் என்று உங்களுக்கே தெரியும், நான் சொல்ல வேண்டியதில்லை] அப்போது தான் பாடத் தொடங்கினார்! மேடையில் ஒரு மெல்லிய வெளிச்சத்தின் ஊடே பட்டுப் புடவை சரசரக்க 72 வயது வைஜெயந்தி மாலா பாட்டி சாரி வைஜெயந்தி மாலா பாலி ஆடத் தொடங்கினார்! வாசுதேவராய், தேவகியாய், சக்தியாய், கிருஷ்ணனாய் கிட்டத் தட்ட ஒரு ஒன்றரை மணி நேரம் விடாமல் ஆடினார்! ஆடுவதற்கு முன் அந்த நடனத்தின் சாராம்சத்தை ஆங்கிலத்தில் சொல்லி எனக்குப் புரிந்ததை விட, அவரின் அபிநயம் எனக்கு ஓரளவுக்குப் புரிந்தது! பாடியவரின் குரலும் அற்புதம்! முதலில் சற்று நேரம் அவர் குரலுடன் வயலின் மட்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. அவர்களோடு மிருதங்கமும் சேர்ந்ததும் ஆட்டம் சூடு பிடித்தது! அதோடு ஒரு பகுதிக்கு மட்டும் காயத்ரியின் நட்டுவாங்கம் [இவர் வேறு பெண்!] சேர்ந்து கொள்ள நாங்கள் எல்லோரும் சற்று நேரம் கோகுலத்திற்கே சென்று வந்தோம்! [இப்படி எல்லாம் யாராவது நாட்டியத்தை விமர்சித்திருப்பார்களா?] கிருஷ்ணன் கோவர்தன மலையை தூக்கி எல்லோரையும் மழையிலிருந்து காப்பது வரை நடனம் தொடர்ந்தது!

சுற்றி இருள் சூழ, மேடையில் இருந்த மெல்லிய விளக்கொளியில் அவர் ஆடிய விதம், அது ஒரு அற்புத கனம்! ஆதிசேஷனாய் அவர் வளையும் போதெல்லாம், அர்பணிப்பும், செய்யும் செயலில் ஈடுபாடும் இருந்தால் ஐம்பதென்ன எழுவதும் வளையும் என்று புதுமொழியை நான் கற்றுக் கொண்டேன்! ஒவ்வொரு முத்திரையும் அத்தனை கச்சிதம்! வீரப்பாவும் பத்மினியும் தான் இல்லாமல் போனார்கள்!

இவருக்கு அமைந்திருப்பது என்ன ஒரு வாழ்க்கை? அழகு, பெயர், புகழ், பணம், கலை, என்ன இல்லை இவரிடம்! எழுபது வயதிற்கு மேலும் இவரின் நடனத்தைப் பார்க்க அத்தனை கூட்டம்! அத்தனை ஆவல்!! அத்தனை எதிர்பார்ப்பு!

சிலர் பிறக்கும்போதே வரம் பெற்றுப் பிறக்கிறார்கள் போலும்...

மேன்மக்கள் மேன்மக்களே!!

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
குழந்தைகள் தினமும் முடிந்து விட்டபடியால் இந்தப் பதிவை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை! தோ, ஆரம்பிச்சாச்சே! பலே, பலே!! குழந்தைகள் தினம் என்றதும் நினைவுக்கு வருவது நேரு மாமாவும், குழந்தைகளும். இந்தப் பதிவு நேரு மாமாவைப் பற்றியது அல்ல என்று நான் சொன்னால் அப்படியென்றால் வேறு யாருடையது என்று கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்!

நேரு மற்றும் பல மாமாக்களைப் போல் குழந்தைகள் என்றால் எனக்கும் கொள்ளைப் பிரியம்! அதிலும் குறிப்பாக தாயின் தோள்களில் சாய்ந்து கொண்டு எச்சில் வழிய தன் உருட்டைக் கண்களால் உலகையே உள் வாங்கத் துடிப்பதுகள், தத்தக்கா பித்தக்கா என்று சதா பேசிக் கொண்டும் சப்தம் எழுப்பிக் கொண்டும் நாம் திரும்பிய சமயம் செக்கஸ்லோகியா என்று சொல்லி நம்மை அதிர வைப்பதுகள், சமீப காலமாய் பேச ஆரம்பித்து கத்தால கண்ணாலேயும், டாக்சி டாக்சியையும் அபிநயத்துடன் செய்வதுகள், பள்ளிக்குப் போக ஆரம்பித்து இருப்பதுகள் என்று பட்டியல் நீளூம்!

சாலையில், கடைகளில், பேருந்து நிலையங்களில் என்று எச்சில் ஒழுக தன் தாயின் தோளில் சாய்ந்து கொண்டு முழிக்கும் குழந்தைகளைப் பார்த்தால் போதும், அடுத்த நிமிஷம் நான் ஆயுத்தமாகி விடுவேன்! கையை ஆட்டுவது, முட்டைக் கண்ணாக்கிக் காட்டுவது, முகத்தை அஷ்ட கோணலாக்கிக் காட்டுவது, சிரித்துக் கொண்டே கூப்பிடுவது என்று....என் நண்பன் ஒருவனுக்கு நான் செய்யும் இந்தக் காரியம் பிடிக்காது என்று நினைக்கிறேன்! மனசுல பெரிய ஹீரோ, குழந்தையை சிரிப்பாலேயே அப்படியே கவர்ந்துருவாரு என்று நினைப்பானோ என்னமோ, டேய் நீ அவங்க அம்மாக்கு தானே சிக்னல் கொடுக்குறே என்று அதிரடியாய் கேட்பான்! அப்படியெல்லாம் பப்ளிக்கா கூப்பிடக் கூடாதுடா என்று அட்வைஸ் வேறு செய்வான்! அடப் பாவிகளா....

குழந்தைகளுடன் விளையாடுவதும், உரையாடுவதும் ஒரு கலை...அது எல்லோருக்கும் வருவதில்லை என்று தான் நான் நினைக்கிறேன்! பெரும்பாலானவர்களுக்கு உன் பேர் என்ன? எந்த ஸ்கூல் படிக்கிறே? க்ளாஸ்ல எத்தனாவது ரேங்க் [நான் குழந்தையாய் இருந்த சமயத்தில் இந்தக் கடைசி கேள்வி என்னை மிகவும் எரிச்சல் படுத்துவதுண்டு!] என்ற சம்பிரதாய கேள்விகளோடு குழந்தைகளிடம் செய்யும் சம்பாஷனை முடிந்து விடுகிறது. எனக்கு அப்படியில்லை! பெற்றோர்களைக் காட்டிலும் குழந்தைகளிடம் தான் நான் அதிகம் பேசுவதுண்டு! அதிலும் இந்தக் காலத்துக் குழந்தைகள்...அப்பா அப்பா...இதோ சில சாம்பிள்கள்ள்ள்ள்!

நான் கல்லூரியில் படித்த போது என் வீட்டுக்கு என் நண்பன் ஒருவன் வருவான்! என் வீடு ஒரு காம்பவுன்டில் இருப்பதால் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் எங்கள் வீட்டில் வளர்வதுண்டு! என் நண்பன் அப்படி வரும் குழந்தைகளை மடியில் அமர்த்திக் கொண்டு கீழ் வரிசைப்படி சில கேள்விகளைக் கேட்பான்!

1. உன் பேர் என்ன?

2. எந்த ஸ்கூல்?

3. உன் க்ளாஸ்ல மொத்தம் எத்தனை பேர்?

4. உன் க்ளாஸ்ல எத்தனை பசங்க?

5. உன் க்ளாஸ்ல எத்தனை பொன்னுங்க?

6. நீ யார் மடியில் உக்காருவ?

அட, இது நல்லாயிருக்கே என்று நானும் அதை பழகிக் கொண்டேன்! எனக்குத் தெரிந்த குழந்தைகளிடமும் கேட்க ஆரம்பித்தேன். [கடைசி கேள்வியைத் தவிர! எல்லாம் ஒரு நல்ல எண்ணம் தான்!] என் மாம பசங்களிடம் அடிக்கடி கேட்டுக் கேட்டு, நான் 4வது கேள்வி வரும்போதே அவர்கள் உஷாராகி கொஞ்சம் வெட்கப்பட்டுக் கொண்டே, என்னை பொய்யாய் அடித்து விட்டு, அடுத்து நீ என்ன கேப்பேன்னு எனக்குத் தெரியும் என்று ஓடி விடுவார்கள்! இதற்காகவே சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை என்னிடம் பேசுவதை பார்த்தால் பதறிப் போவதுண்டு!

மற்றொரு முறை என் காம்பவுண்டில் இருக்கும் ஒரு சின்ன பையனுக்கு தங்கச்சி பாப்பா பிறந்தது! நானும் எதேச்சையாய், என்னடா உன் தங்கச்சிக்கு என்ன பேர் வைக்கப் போறேன்னு கேட்டேன், அதற்கு அவன் என் தங்கச்சி பேரு ராஜகாளியம்மன் என்றான் பட்டென்று! அடடா தமிழ் சினிமாவைன் க்ராபிக்ஸ் அட்டகாசங்கள் இந்த பிஞ்சு மனதையும் கவர்ந்து விட்டதே என்று எண்ணி வியந்தேன்! அவன் பேர் வைத்தானோ இல்லையோ, என் கைங்கரியத்தினால் அந்த தங்கச்சிக்கு ராஜகாளியம்மன் என்ற பட்டப் பெயர் நிலைத்து விட்டது!
இப்படித் தான் ஒரு முறை என் உறவினரின் 1வது படிக்கும் குழந்தையுடன் பீச்சுக்குச் சென்றேன். அங்கே நாயை பார்த்ததும் அய்யயோ, லயன் வருது பாரு என்றேன்! அவன் என்னை ஒரு ஈனப் பிறவியாய் பார்த்து விட்டு அது லயனா? அது டாக் என்றான் எரிச்சலுடன்! அவன் சொன்ன விதம், இவனையெல்லாம் நாம் எப்படி கரையேற்றுவது என்பது போல் இருந்தது தான் வேடிக்கை!
என் நண்பர் ஒருவர் வீட்டுக்குப் போயிருந்தேன்! அங்கிருந்த குழந்தையிடம் உங்க அம்மா பேர் என்ன என்று கேட்டேன். அது மழலை கொஞ்சம் வீவா என்றது! உங்க அப்பா பேர் என்ன, போர்ன்வீட்டாவா என்றேன்! அந்தக் குழந்தை சிரித்துக் கொண்டே அடுப்படியை பார்த்தது! உடனெ அவன் அம்மா, நீ போர்ன்வீட்டா என்று சொன்னதால் அதை பார்க்கிறது என்று சொன்ன பிறகு தான் எனக்கு விஷயம் புரிந்தது! அம்மாவுக்குத் தான் குழந்தைகள் சொல்ல நினைப்பதை சரியாய் சொல்ல முடிகிறது!

சமீபத்தில் எங்கள் வீட்டில் எல்லா குழந்தைகளும் விடுகதைகள் சொல்லி விளையாடிக் கொண்டிருந்தோம். என் மாம மகனுக்கு அவனுக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கலாம்! கவனித்துக் கொண்டே இருந்தவன் பெரியவர் சிறியவர் அனைவரையும் பார்த்து நான் ஒன்று கேட்கிறேன் என்று சொல்லி கீழிருக்கும் கேள்வியை கேட்டான்.
3 திருடர்கள் ஒரு வீட்டில் திருட போகிறார்கள்! அங்கு இருக்கும் இரண்டு செக்யூரிட்டிகளும் தூங்கிக் கொண்டிருக்கும் போது மூன்று பேரும் உள்ளே நுழைந்து விடுகிறார்கள்! அவர்கள் திருடி விட்டு வெளியே வரும் போது இரண்டு செக்யூரிட்டிகளும் விழித்து விட்டார்கள்! அவர்கள் மூவரும் எப்படித் தப்புவார்கள்?

அந்தப் பையனின் அக்கா இப்படி ஒரு விடுகதையே இல்லை, இவனாய் ஏதோ உளருகிறான் என்றாள். சரி என்ன தான் சொல்கிறான் பார்க்கலாம் என்று எங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு அவனிடமே பதிலை சொல்லச் சொல்லி பணித்தோம். அவன் தெனாவட்டாய் சொன்ன பதில்...
மூன்று பேரில் ஒருவன் மட்டும் செக்யூரிட்டிகள் பார்க்கும் படி தப்பி ஓடுவான், செக்யூரிட்டிகள் அவனைப் பிடிக்க ஓடும் போது மற்ற இருவரும் தப்பி விடுவார்கள் என்றான்! சரி அந்த ஒருவனின் கதி என்னடா ஆனது என்று எல்லோரும் ஆவலாய் அவனை பார்க்க...அவன் சாவகாசமாய்....அவன் செத்து ஒழிவான்! அதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்றான் புன் சிரிப்புடன்! அதோடு நில்லாமல், ஒன்றை இழந்தால் தான் இன்னொன்றை பெற முடியும்! என்று ஒரு தத்துவத்தை வேறு உதிர்த்தான்! ஐந்தே வயது...நாங்கள் வாயடைத்துப் போனோம்! அம்மா அப்பா வேலைக்குப் போயிருந்த சமயத்தில் இணையத்தில் கேம்ஸ் விளையாடி அந்த மாதம் மட்டும் 2000 ரூபாய்க்கு ஆப்பு வைத்திருக்கிறான்! இது ஒரு புறம் பெருமையாய் இருந்தாலும் மற்றொரு புறம் அவர்களின் வேகத்தைக் கண்டு பயமாய்த் தான் இருக்கிறது! அதனால் என் மாமா அந்த வசதியையே நிறுத்தி விட்டார்!

சிவாஜி படம் வந்த புதிதில், என் நண்பியின் மகன் காக்கா பர பர விளையாடுவோம் என்று அழைத்தான்! உயிருள்ள பொருள்களின் பெயரைச் சொன்னால் இரு கைகளையும் பறப்பது போல் செய்ய வேண்டும்! உயிரற்ற பொருள்களின் பெயர்களைச் சொன்னால் கைகளை ஆட்டாமல் இருக்க வேண்டும்! இது தான் விளையாட்டின் விதிமுறை. உயிருள்ளவற்றின் பெயர்களையும், உயிரற்றவற்றின் பெயர்களையும் மாறி மாறி அவன் சொல்லச் சொல்ல நானும் அதற்கேற்ப கைகளை அசைத்துக் கொண்டிருந்தேன்! திடீரென்று தன் பெயரை சொன்னான்! நானும் கையை ஆட்டினேன்! நான் கையை ஆட்டியதும் சற்றும் எதிர்பார்க்காமால் அவன், "பேரைக் கேட்டா சும்மா அதிருதுல்ல!!" என்றானே பார்க்கலாம்!

சமயம் கிடைத்தால், இல்லை சமயத்தை ஏற்படுத்திக் கொண்டு நீங்களும் கொஞ்ச நேரம் குழந்தைகளிடம் பேசிப் பாருங்களேன்!
எல்லோருக்கும் என் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

காலம் மறுபடியும் தன் கடமையை சரியாய் செய்திருக்கிறது! நம்பியாரிடம் என்றுமே தோற்காத எம்.ஜி.ஆரே மரணத்திடம் தோற்ற போது, மரணத்திற்கு நம்பியார் எம்மாத்திரம்? சினிமாவில் ஒழுக்கமான மனிதர்கள் குறைவு! பணம் இருந்தாலே மனம் கொஞ்சம் ஆட்டம் போடத் தான் செய்யும், அதோடு புகழும் சேர்ந்து விட்டால் கேட்கவே வேண்டாம்! அத்தகைய கூட்டத்தில் எந்த வித கெட்ட பழக்கங்களும் இல்லாமல் தேக ஆரோக்கியத்தோடு 89 வயதில் மதியம் உணவருந்தி விட்டு, தூக்கத்திலேயே நிரந்தர துயிலடைவது எல்லோருக்கும் சாத்தியம் அன்று! மிஸ்டர். நம்பியார் டிசேர்வ்ஸ் இட்!

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்றவர்களைப் பற்றி நாம் நினைக்கும் அளவிற்கு வி.எஸ். ராகவனைப் பற்றியோ, சுந்தரிபாயைப் பற்றியோ, பூர்ணம் விஸ்வநாதனைப் பற்றியோ நாம் அதிகம் நினைப்பதில்லை! அப்படிச் சிறிது நேரம் நாம் நினைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் இறந்து போக வேண்டியிருக்கிறது! இப்படி ஒரு தருணத்தில் நம்பியாரைப் பற்றியும் அவர் படங்களைப் பற்றியும் அவரின் நடிப்பைப் பற்றியும் நான் எண்ணிப் பார்க்கும் போது எந்த ஒரு நடிகருக்கும் அவர் சளைத்தவிரில்லை என்பது விளங்குகிறது! எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதும் போது நம்பியார் தன் தோல்வியையும், தன் கையாலாகத தனத்தையும், அதனால் உண்டாகும் ஆத்திரத்தையும், அப்படி எத்தனையோ வித உணர்ச்சிகளை அவர் முக பாவத்தில் கொண்டு வரும் நேர்த்தியை எம்.ஜி.ஆர் ஓடிச் சென்று கட்டிப் போட்டிருக்கும் தன் தாயை விடுவித்து அம்மா என்று ஆரத் தழுவி கொஞ்சும் போது நாம் அதை கவனிக்கத் தவறி விட்டோம் என்றே தோன்றுகிறது!

அவர் முகம் வில்லனுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது என்று யாரும் எளிதாய் சொல்லி விட முடியாது! அவர் அமைதியாய் நல்லவன் போல நடிக்கும் போது அவரின் முகத்தில் தவழும் சாந்தம் கதாநாயகனின் முகத்தில் கூட இருந்ததில்லை! மிஸ்ஸியம்மாவில் அவர் சாவித்ரியை மணக்கத் துடிக்கும் துடிப்பையும், அதற்கு அவர் படும் பாடுகளையும் பார்த்து நான் வாய் விட்டுச் சிரித்து ரசித்திருக்கிறேன்! அத்தனை சாந்தமான முகத்தில் வாயை கோணிக் கொண்டு, கையைப் பிசைந்து கொண்டு தாடைக்கு கீழே ஒரு 40 வாட்ஸ் பல்ப் வெளிச்சம் பட்டதும் எங்கிருந்து தான் அத்தனை குரூரம் வருமோ என்று ஆச்சரியமாக இருக்கிறது... "மணிமாறா, மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா? என்று அத்தனை கம்பீரமாக முழங்கும் நம்பியாரிடம், எம்.ஜி.ஆர் அமைதியாக, மிருதுவான குரலில் சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும் என்பார்! எம்.ஜி.ஆரை மக்கள் தெய்வமாய் வணங்குவதற்கு நம்பியாரின் பெரும் பங்கு இருக்கிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை!

நம்பியாரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் மூளையில் ஒரு ஓரத்தில் ஒலிக்கிறது "டேய் மாயாண்டி" என்ற ஒரு குரூரக் குரல்! நம்பியாரின் நினைவு இருக்கும் வரை அந்த மாயாண்டிகளும், காட்டு பங்களாக்களும் வாழ்வாங்கு வாழும்!

சட்டம் ஒரு இருட்டறை...
சட்டக் கல்லூரி ஒரு முரட்டறை!

இளகிய மனம் படைத்தவர்கள் இதை பார்க்க வேண்டாம் என்ற எச்சரிக்கையையும் மீறி நேற்று அந்த நியுஸ் சேனலில் அந்தக் காட்சியை பார்த்து விட்டேன்! சென்னை சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் இரு பிரிவினருக்கு நேற்று நடந்த அடிதடி காட்சி அது! ஒரு கூட்டம் கையில் பெரிய தடியுடனும், கத்தியுடனும் ஒரு மாணவனை சகட்டு மேனிக்கு புரட்டி எடுக்கிறது, அதை தடுக்க கையில் கத்தியோ, உருட்டுக் கட்டையோ சரியாய் நினைவில்லை கொண்டு அவனை காப்பாற்ற முற்படும் இன்னொரு மாணவனின் மேல் வெகு ஆக்ரோஷமாய் பாய்கிறது அந்தக் கூட்டம்! அவனை சராமாரியாய் தாக்கியதில் அவன் மயங்கி வீழ்ந்தும் செத்த பாம்பை அடிப்பதைப் போல் கூட்டத்திலிருந்து ஒவ்வொருவனாய் வந்து சகட்டு மேனிக்கு உடலெங்கும் அத்தனை பெரிய தடியால் தாக்கிக் கொண்டே இருக்கிறார்கள்! அவன் கதை முடிந்து விட்டதை போல் இதை விட பரபரப்பாய் என்ன இருக்கிறது என்று ஏங்கும் காமெரா மெல்ல இடது பக்கம் திரும்புகிறது...அங்கு கூட்டமாய் நிற்கும் காவல் துறையினர் கஞ்சி போட்ட சட்டைக்குள் விரைப்பாய் நின்று இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்! பிறகு அந்தக் கல்லூரியின் முதல்வர் சற்று விளக்கம் கொடுக்கிறார். பின்னால் பயந்தபடி நிற்கும் காவல் துறை அதிகாரி ஒருவர் நாங்கள் விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்கிறார்!

மனிதன் உணர்ச்சிப் பெருக்கால் செய்யும் தவறுகளை தண்டிக்கவும், அவனை திருத்தி நல்வழி செலுத்தவும் தான் நாட்டில் இத்தனை சட்டங்கள், நீதிமன்றங்கள், வழக்கறிஞர்கள். நாளை சட்டத்தைக் காக்கப் போகும் இவர்களாலேயே தங்கள் உணர்ச்சிகளை அடக்க முடியாத போது இவர்கள் வாதாடி எந்த நிரபராதியை காப்பாற்ற முடியும்? எந்த குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும்? மாணவர்களை கூட கட்டுப்படுத்த முடியாத காவல் துறையால் நாட்டில் நடக்கும் குற்றங்களை எப்படி கட்டுப்படுத்த முடியும்? இத்தனை கேள்விகள் மனதில் ஓட, அந்தப் பையன் பிழைக்கனுமே என்று நினைத்துக் கொண்டே, என் கையாலாகத தனத்தை நினைத்து வருத்தத்துடனும், எரிச்சலுடனும் என்ன செய்திருப்பேன் என்று நினைக்கிறீர்கள்? வேறு என்ன, என்னால் முடிந்தது...சேனலை மாற்றினேன்! வடிவேலும் விவேக்கும் காமெடி பண்ணிக் கொண்டிருந்தார்கள்!

பின்குறிப்பு: ஒவ்வொரு சேனலும் ஒவ்வொரு அரசியல் கட்சியின் பிரகடனப் பிரதிநிதி என்று ஆகி விட்ட நிலையில் இந்தக் காட்சியை பதிவு செய்த அந்த தொலைக்காட்சியைக் கூட எந்த அளவுக்கு நம்புவது என்று எனக்குப் புரியவில்லை! ஆமா, அந்த பையன் பொழச்சுப்பான்ல?
இந்தச் சினிமா தான்...

மாதத்துக்கு ஒரு பதிவு போடுவதே இப்போதெல்லாம் பெரும்பாடு ஆகிவிட்டது! வலையுலக நண்பர்களும் ரஜினி மீது ரசிகர்கள் நம்பிக்கை இழந்தது போல் என் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள்! என்னடா எழுதுவது என்று முழித்துக் கொண்டிருந்தேன்...இதோ, கிடைத்து விட்டது...பிச்சைப் பாத்திரத்தின் வழியே ஒரு பதிவுப் பிச்சை :)

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

நான் பார்த்த முதல் படம் ப்ரியா என்றும், அதனால் தான் இப்படி ரஜினி பைத்தியம் பிடித்துத் திரிகிறேனோ என்றும் என் அம்மாவுக்கு அடிக்கடி சந்தேகம் வருவதுண்டு! ப்ரியா வெளி வந்த வருடத்தை வைத்து கணக்கிட்டால் 1 அல்லது 2 வயதில் படம் பார்க்க ஆரம்பித்து விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்!

கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

ரொம்ப கடைசியும் இல்லாமல் ரொம்ப கிட்டத்திலும் இல்லாமல் நடுநாயகமாக உட்கார்ந்து பார்த்தது...ஏகன்! [அஜீத்தே வந்து கூப்பிட்டாலும் போயிடாதீங்கோ மக்கா!]

கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

சுப்ரமணியபுரம்! மதுரையிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் இப்படி ஒரு புரத்தை நான் கேள்விப்பட்டதே இல்லை...மதுரையில் இப்படியும் ஒரு இடம் இருக்கிறதா? அங்கு இப்படியும் மக்கள் வாழ்கிறார்களா என்று வியந்தேன்! படத்தை ஆஹா ஓஹோ என்று புகழும் அளவிற்கு பெரிதாய் ஒன்றும் இல்லை என்றே தோன்றியது! ஸ்வேதா தேடிக் கொண்டே வரும்போது ரேடியோவில் ஒலிக்கும் சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும் என்று ரெக்கார்ட் ப்ளேயரில் ஒலிக்கும் இடம் அருமை. அந்தப் பாட்டை அந்த ஒரு காட்சியில் கேட்பதற்குக் கூட எத்தனை அற்புதமாய் இருக்கிறது! ராஜாவுக்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப், அதை சரியாய் படத்தில் பயன்படுத்திக் கொண்ட சசிக்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப்!

2008 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று "கண்கள் இரண்டால்", இப்படி ஒரு பாட்டை இசை அமைத்த ஜேம்ஸ் வசந்தன் அமைதியாய் மக்கள் தொலைக்காட்சியில் தமிழ் பேசு தங்கக் காசு நடத்திக் கொண்டிருக்கிறார்! அவரை பத்திரிக்கைகளும், டீவியும் எப்படி பேட்டி எடுக்காமல் விட்டு வைக்கிறது என்று வியந்தேன்? [ஒருவேளை அவர் கொடுத்தும், நான் தான் பார்க்க தவறி விட்டேனோ?]

உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

பாலுமகேந்திராவின் சந்தியா ராகம்! [இந்த ஒரு படம் தான் மெளன மொழி விளையாடும் போது என் நண்பன் என்னன்னவோ செய்தும் என்னால் சொல்லவே முடியவில்லை!] ஒரு முதியவரின் மகிழ்ச்சி, சோகம், கோபம், விரக்தி, குறும்பு, பயம் அத்தனையையும் ஒரு ஜன்னலின் வழியே நாம் பார்ப்பதை போல பாலு அவர்கள் படத்தை மிக அழகாக நகர்த்தியிருந்தார்! சொக்கலிங்க பாகவதரின் நடிப்பை சொல்லவா வேண்டும்? பாலுவைத் தவிர இவரை ஏன் யாருமே கண்டு கொள்ளவேயில்லை?

1. ஆற்றில் குளித்து விட்டு வரும் வழியில் தெருவில் குழந்தைகள் நொண்டி விளையாடிச் சென்ற கட்டங்களை பார்த்ததும் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அதில் நொண்டி ஆடும் இடத்தில் குறும்பு.

2. பட்டணத்தில் குழந்தை ரோட்டில் விற்கும் பண்டங்களை வாங்கித் தந்து அவளுக்கு நோவு வந்து அர்ச்சனாவிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் இடத்தில் இயலாமை!

3. முதியோர் இல்லத்தில் தன்னை பார்க்க வந்த அர்ச்சனாவை எல்லோருக்கும் அறிமுகம் செய்யும் போது ஒரு பாட்டி "யாரு புதுசா வந்துருக்குற டாக்டர் அம்மாவா?" என்று கேட்டவுடன், என் மருமவ என்னை ஆசையா பாக்க வந்துருக்கு...உனக்கு யாரை பாத்தாலும் டாக்டர் அம்மா தான்...எனும் இடத்தில் பெருமை!

4. அர்ச்சனாவிற்கு இன்னொரு குழந்தை பிறந்திருக்கிறது என்று கேள்விப்பட்டதும் ஓடிச் சென்று அந்தக் குழந்தையின் கையில் தன் விரலை வைத்ததும் அந்த இரு கைகளையும் க்ளோஸப்பில் காட்டும் இடம் கவிதை...

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!படத்தை பார்த்து விட்டு சொல்லுங்கள்!

உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

தமிழ்நாட்டில் சினிமாவின் தாக்கம்! ஒவ்வொரு பயணத்தின் போதும் இதை நான் உணர்கிறேன்! ஏதோ ஒரு குக்கிராமத்தில், ஏதோ ஒரு முட்டுத் தெருவில் "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க" என்ற வாசகம் இன்னும் மிச்சமிருக்கிறது! நேற்று வந்த கதாநாயகன் படம் தீபாவளி அன்று வராததற்காக வருத்தப்பட்ட்டு போஸ்டர் அடிக்கும் கூட்டம் இன்றும் இருக்கிறது!
இன்றும் வருடம் தவறாமல் முரளிக்காக (மன்னிக்க! கடவுள் முரளிக்காக) போஸ்டர் அடிக்கும் கே.கே. பெருமாளை மதுரை வாசிகள் யாரும் மறந்து விட முடியாது! அப்படி என்ன தான் முரளி அவருக்கு செய்திருப்பார் என்று நான் வியந்ததுண்டு!

நேற்று கூட பம்மல் செல்லும் வழியில் ஒரு குறுகிய தெருவில் ஒரு அழுக்கான டெய்லர் கடை போர்டில் பியர்ஸ் ப்ராஸ்னன் சிரிக்கிறார்! அங்கு எத்தனை பேருக்கு அவரை தெரியும்? ஏன் அந்த இடத்தில் அவர் படத்தை வரைய வேண்டும்? பியர்ஸ் ப்ராஸ்னனுக்கும் பம்மலில் இருக்கும் ஒரு குறுக்குச் சந்தில் வாழும் டெய்லருக்கும் என்ன சம்மந்தம்?
இவர்களுக்காக அவர்கள் அப்படி என்ன செய்து விட்டார்கள்?

தன் மேல் வந்து விழுந்தவர்களை தள்ளி விட்டு, "கொஞ்ச நேரம் சிரிக்க வைத்ததற்காகவா இத்தனை அன்பு? இத்தனை ஆர்ப்பாட்டம்? அப்படியென்றால் உலகம் இத்தனை கீழ்த்தரமானதாகவா இருக்கிறது?" என்று சாப்ளீன் எண்ணி வியந்தது எத்தனை உண்மை!

இதை யோசிக்கும் போதெல்லாம் என் அனைத்து கேள்விக்குறிகளும் ஆச்சர்யக்குறிகளாய்த் தான் முடிகிறது!

உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

இளையராஜா! இவர்தான் என்னைத் தாக்கிய மிகப் பெரிய தொழில் நுட்பம்! வள்ளியில் வரும் என்னுள்ளே என்னுள்ளே பாட்டில் சரணத்தில் எத்தனையோ இசையின் மத்தியில் ஒரு சின்ன குழல் ஓசை கேட்கும்! மிக அற்புதமான ஒரு ஒலி அது! இந்த இடத்தில் இதை சேர்க்க வேண்டும் என்று இவருக்கு எப்படித் தோன்றும்? இது இல்லாவிட்டால் பாட்டு கெட்டு விடுமா? இப்படி எத்தனை பல்லவிகள்? எத்தனை சரணங்கள்? எத்தனை படங்கள்? அதுவும் தீபாவளி என்றால் சொல்லவே வேண்டம்! கிட்டத்தட்ட 10 படங்கள் இவர் இசையுடன் வரும், அதில் அத்தனையும் ஹிட்!

எனக்குத் தெரிந்து இளையாராஜா தான் பல்லவிக்கும் முதல் சரணத்திற்கும் நடுவே ஒரு இசையும், பல்லவிக்கும் இரண்டாம் சரணத்திற்கும் இடையே மற்றொரு இசையும் கொடுப்பதில் வல்லவர்! [இதை இசையின் மொழியில் எப்படிச் சொல்வார்கள் என்று தெரியவில்லை, மன்னிக்கவும்!] அந்த இடத்தின் இசையை வைத்தே அது என்ன பாட்டு என்று சொல்லி விடலாம்!

அப்புறம், மணிரத்னம் படங்களின் ஒளிப்பதிவு, அவர் ஒவ்வொரு சீனிலும் ஃப்ரேம் செட் செய்யும் நேர்த்தி! அதே ஒளிப்பதிவாளர்களை செய்த வேறு படங்களில் அந்த நேர்த்தி காணப்படுவதில்லை என்பது என் அபிப்ராயம்! உங்க நாயனத்துல தான் அப்படி சத்தம் வருதா இல்லை எல்லா நாயனத்திலும் அதே சத்தம் தான் வருதாங்கிற மாதிரி...எப்போதுமே ஒரு சந்தேகம்!

ஏ.ஆர். ரகுமானைப் பற்றி நண்பர்கள் சொல்லி விட்டார்கள்! அதனால் அடங்கிக் கொள்கிறேன்...

அது எப்படி சிலர் மட்டும் இப்படி வரம் பெற்றுப் பிறக்கிறார்கள்? எனக்குப் புரியவில்லை!

தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

யாரை மேன் கேட்கிறாய்? [இது என்ன படம் சொல்லுங்க?] கமலாஹாசன் பேட்டியும், கம்ப்யுட்டர் சயின்ஸ் பரிட்சையும் இருந்தால், முதலில் கமலாஹாசன், பிறகு தான் கம்ப்யுட்டர் சயின்ஸ்!

தமிழ்ச்சினிமா இசை?

பாஸ்! [இளையாராஜா பத்தின பத்தியை படிங்க!]

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தமிழ்நாட்டில் ஹிந்தி எதிர்ப்பையும் மீறி, என் சுய வெறுப்பையும் மீறி கொஞ்சமாய் ஹிந்தி தெரிந்து கொண்டதால் அந்த படங்களை பார்ப்பதுண்டு. சமீபத்தில் ஹிந்தியில் மிகவும் தாக்கிய படங்கள்,

தாரே ஜமீன் பர்
லகே ரஹோ முன்னா பாய்

கணினிப் பொறியாளர்களின் வீக்யெண்ட் கலாச்சாரத்தில் நானும் கலந்து விட்டதாலும், பசித்தவனுக்கு ரேஷன் கார்டு, ரசிப்பவனுக்கு டிவிடி லைப்ரரி மெம்பர்ஷிப் கார்டு என்று ஆகிவிட்டதால் கொஞ்சமாய் மற்ற மொழிப் படங்களும் பார்ப்பதுண்டு! தாக்கிய படங்கள்...

ஃபோன் பூத்
பதேர் பாஞ்சாலி
சில்ட்ரன்ஸ் ஆப் ஹெவன்
அபோகலிப்டோ
ரன் லோலா ரன்
கேஸ்ட் அவே
தி டெர்மினல்
ஃபாரஸ்ட் கம்ப்

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்...

தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை! ஒன்றுமில்லை! மிகவும் பிடிக்கிறது! கண்டிப்பாய் செய்வேன்! என்னால் நிச்சயமாய் மேம்படுத்த முடியும். அப்படி மேம்பட உதவினால் என்னை சினிமாவில் சேர்த்து விடுவீர்களா?

அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

தீபாவளிக்கு படம் வராததற்கே போஸ்டர் அடிக்கும் கூட்டம்! இதில் சினிமாவே இல்லையென்றால் ஆந்திராவில் பல விவசாயிகளுக்கு ஏற்பட்ட கதி தான் தமிழர்களுக்கு ஏற்படும் என்று நினைக்கிறேன்!
என் வீட்டிலிருந்து வெளியேறி சிறிது தூரம் நடந்து ஒரு இடது பக்கம் திரும்பி, இன்னும் சிறிது தூரம் நடந்து ஒரு வலது பக்கம் திரும்பி...அதே போல் மற்றொரு முறை செய்தால் நாயக்கர் வீடு! மதுரையில் பிறந்து வளர்ந்த நான், போன முறை மதுரை சென்ற போது என் நினைவு தெரிந்து 3வது முறையோ, 4வது முறையோ நாயக்கர் வீட்டுக்குச் சென்று வந்தேன்! வேலு நாயக்கர் பம்பாயை அல்லவா உலுக்கிக் கொண்டிருந்தார்! அவர் எங்கே இப்படி என்று முழிப்பவருக்கு, நான் சொல்வது வேலு நாயக்கரைப் பற்றி அல்ல, திருமலை நாயக்கரைப் பற்றி! [ஆஹா! என்ன ஹாஸ்யமா எழுதுறான் இந்தப் பையன்!] நான் சென்று வந்தது திருமலை நாயக்கரின் அரண்மனை! அரண்மனை என்ற வார்த்தை பெரிதாய் இருப்பதால் நாம் இந்தப் பதிவிற்காக அதை வீடு என்று வைத்துக் கொள்வோம்! [நாயக்கருக்கு என்ன கஷ்ட காலம் பாருங்கள்!]

அந்த வீட்டில் பல சரித்திரப் புகழ் மிக்க நிகழ்ச்சிகள் நடந்தேறியுள்ளன..அதாவது 1994 ஆம் ஆண்டு பம்பாய் படத்தின் "கண்ணாலனே" பாட்டின் படப்பிடிப்பு நடந்த போது மணிரத்னம் ஒரு முறை என்னை பார்த்தால் போதும், அடுத்த அர்விந்த் சாமி நான் தான் என்று நினைத்தேன்! என் கஷ்ட காலமோ என்னமோ அன்று டியுஷனில் கணக்கு பரிட்சை இருந்ததால் தமிழ்நாடு பிழைத்தது...பிறகு கல்லூரிக் காலத்தில் நேருக்கு நேராய் சிம்ரனை தரிசிக்க முயன்று அந்த வீட்டு மதில் மேல் வந்தியத் தேவனை போல் ஏறிக் குதித்து [நல்ல வேளை அகழியை மூடி விட்டார்கள்!] அருகில் செல்லும்போது சே! ஒரு பெண்ணைப் பார்ப்பதற்கு இத்தனை பாடா என்று கேனத்தனமான ஞானோதயம் பெற்று அந்த சந்தர்ப்பத்தையும் கோட்டை விட்டவன்! இது தான் எனக்கும் நாயக்கரின் வீட்டுக்கும் உள்ள சரித்திரப் பின்னனி!

இதற்கு மேலும் என் சரித்திரத்தைக் கூறி உங்களை சித்தரவதை செய்ய விரும்பவில்லை..எங்கே, என் போட்டோகிராபி திறமையை பார்த்து வாயடைத்துப் போங்கள் பார்ப்போம்!!


இருவர் சேர்ந்தது பிடித்தாலும் முழுதாய் இந்தத் தூண்களை பிடிக்க முடியாது!

மற்றொரு சரித்திர நிகழ்வு...

விண்டோ ஏசீ?


ஒட்டடை அடித்தவன் நிலை என்ன ஆயிருக்கும்?



இது நடன நாட்டிய கலா மண்டபம்!

ஒளியை நிறம் பிரித்திருக்கிறார் நாயக்கர்!

பார்வதி தேவி என்று ஞாபகம்!

தங்கப்ப தக்கம்!














அவோ பா, அஸ்கி பெடான், பொஹ்வ்ன்டின், நத்தா நதினின் அஸ்கி சொம்மர் அவொபா...நொவ்ரா நொவ்ரீ பாயிர் பொடி ஆஸிர்வாத் க்ஹல்லுவோ! ரேய், பாபு, போட்டோ பாபு டக்கு டக்கு கெரி தெஹ்ல்லே ஆவ் சங்குஸ்! [வாங்கப்பா..பசங்க, மாட்டுப் பொண்ணுங்க, பேரன், பேத்தி எல்லாம் முன்னாடி வந்து மாப்பிள்ளை பொண்ணுகிட்ட ஆசிர்வாதம் வாங்குங்க...டேய் போட்டோ புடிக்கிற தம்பி, டக்கு டக்குன்னு எல்லாத்தையும் போட்டொ எடு சொல்றேன்!! என்று ஆணைகளை பறத்திக் கொண்டிருந்தார் லிங்கு மாமா]...

மணமகன் கோபாலாச்சாரி, மணமகள் அம்புஜம் அவர்களின் சஷ்டியப்த பூர்த்தி அன்று அந்த வீடியோ விளக்கின் மஞ்சள் வெப்பத்தில், பட்டு வேஷ்டிகளும், பட்டுப் புடவைகளும் கசகசக்க, உடலெங்கும் வேர்வை ஊற்ற ஒவ்வொருவராக மணமக்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர். பேரன் பேத்திகள் அடிக்கடி குனிந்து எழுந்து விளையாடிக் கொண்டிருந்தனர். திருமணங்கள் ஆகி சில ஆண்டுகள் கடந்து விட்டபடியால் மகன்களுக்கும், மருமகள்களுக்கும் குனிந்து வணங்குவது சற்று சிரமமாகவே இருந்தது. இதில் போட்டோகிராபர் வேறு, தா, பஹவி ஏட் சவோ, உவ்வோ உஞ்சோ சவோ...தா துர போட் அவ்ங்காரிய கலாரஸ் உவ்வோ அசுவோ தா [அண்ணே, அண்ணி கொஞ்சம் இங்கே பாருங்க, கொஞ்சம் மேலே பாருங்க, அண்ணே உங்க வயிறு அழுத்துதுன்னு தெரியுது, கொஞ்சம் சிரிங்க] என்று கலாய்த்துக் கொண்டிருந்தார்.

அன்றைய கூத்துகள் அத்தனையும் ஆடி அடங்கிய பிறகு, வெராண்டாவில் ஈஸி சேரில் அமர்ந்து கையில் ஒரு விசிறியுடன் தன் ஞாபகங்களை விசிறிக் கொண்டிருந்தார். இதோ, நேற்று சொன்னது போல் இருக்கிறது....

சால் காய்தி சினிமா ஜீலி அவெங்கோ! [நட, ஏதாவது சினிமாவுக்கு போயிட்டு வருவோம்!]

பெய், துமீ அங்கோ ஹொராட் கெரி தொவெயோ, ஒப்புலுஸ்! துங்கோ கலய பெட்கி மெனின்னா மொகொ ஹொராட் கெரி தொவெயோ? ஆனா துங்கோ ஹிந்தோ அமீ பொஞ்சு பொவ்னோ பொல்டியோ...[அக்கா, நீங்க தான் எங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க, நான் ஒத்துக்குறேன்..உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணுன்னு தானே எனக்கு கட்டி வச்சீங்க? ஆனா உங்களை இன்னைக்கு பஞ்சாயத்து பண்ண கூப்பிட வேண்டியதாயிடுச்சே...நான் என்ன செய்றது?]

மீ காய் துஸுர தல்லான் சோன் பனி தைலி ஹின்டரியகி, சின்னலின் தொவ்லி ஹின்டரியோ? ஒன்ட தல்லோ, பெல் ஜோல் காய் எதிர் சாய்கி தெல்லேன்னா எதிர் சாரியோ? துமீ சங்குவோ, மொர ஹொல்லோ காய்தி தப்பு சேயா? ஹாத் தொவதி தெட்டி சொடதி மொன்னு கோனொ லவஸ்? எல்லே பூரா மீ கோட் பெய் சங்கி ரொடத்தே? [நான் என்ன மத்த ஆம்பளங்க மாதிரி தண்ணி போட்டுட்டு ஊர் சுத்துறேனா? இல்லா கூத்தியாளை வச்சிருக்கேனா? ஒரு புருஷன் பொஞ்சாதிகிட்ட என்ன எதிர்பார்ப்பானோ அதைத் தானே நானும் எதிர்பார்க்குறேன்? நீங்களே சொல்லுங்க, என்கிட்ட ஏதாவது தப்பு இருக்கா? கைய வச்சாலே தட்டி விட்றதுன்னா மனசுக்கு எப்படி இருக்கும்? இதையெல்லாம் நான் யார்கிட்டக்கா சொல்லி அழுவுறது?]

மொகோ ஒப்பாரனி, பிள்ள ஜெனத்த வர பொருத்தில்டீ, எக மிஞ்சி மொர ஹால் முசுனா...எங்கோ கொங்கதி தொவ்ல்னோ மெனி லயத் தொவ்லந்த பெய்! மீ கொன்னி மென்னா!![எனக்கு புடிக்கலை, புள்ள பொறக்குற வரை பொறுத்துகிட்டேன், இனிமே என்னால முடியாது! இவருக்கு யாரையாவது வச்சுக்கனும்னா தாராளமா வச்சுக்கட்டும் அக்கா! நான் எதுவும் சொல்லலை...]

சியாஸ் பெய் எனோ கெரர்த்தோ வத்தோ, பிள்ள ஜெனத்த வர துனோ தங்கிலி ஹொதிர்த்தே! டாக்டர் கேர் ஆவ் மெனத் தெல்ல கானும் க்ஹல்லத்த நிஹீ! மீ காய் கெரத்தெ எகோ தொஹ்வ்லி...[பாத்தீங்களாக்கா, இவ பேசுற பேச்சை...குழந்தைங்க பொறக்குற வரை வலி தாங்கிட்டு இருந்திருக்கா! டாக்டர் வீட்டுக்கு போகலாம்னாலும் காதுல போட்டுக்குறதில்லை..இவளை வச்சிட்டு நான் என்ன செய்ய?]

நஹாபா, கோபால் இசனி தீ தெனு சொடி தெனாத்தொ வத்தொ கெரதி கொனோபா? [இல்ல கோபால், இப்படி ரெண்டு பேருமே விட்டுக் கொடுக்காம பேசிகிட்ருந்தா எப்படிப்பா?] துங்கோ தீ பிள்ளோ ஹொய்யோ, அத்தொ தீ தெனு செரி ஜிவானா மெனதி சோட் தெக்காரஸ்யா? தெல்ல பிள்ளன் தோன் சன பொல்டரியொநாபா...[உங்களுக்கு ரெண்டு குழந்தைங்க ஆயிடுச்சு, இனிமே ரெண்டு பேரும் சேர்ந்து வாழ முடியாதுன்னு சொன்னா நல்லாயிருக்கா? அந்த குழந்தைங்க முகத்தையும் பாக்கனுமா இல்லையா?]

அடுத்த அரை மணி நேர வாக்கு வாதத்திற்குப் பிறகு கோபாலாச்சாரி ஒரு முடிவுக்கு வந்தவராய் சொன்னார்...

சால் காய்தி சினிமா ஜீலி அவெங்கோ! [நட, ஏதாவது சினிமாவுக்கு போயிட்டு வருவோம்!]
பக்கத்து ஆத்து தேசிகாச்சாரி "சொன்னா நம்பமாட்டேள்னு" ஆரம்பிச்சா போதும் நேக்கு புரிஞ்சிரும், அவர் மாதவனைப் பத்தி ஏதோ சொல்லப் போறாருன்னு...அவனை பெத்தவா கூட இப்படி அவனை தலையில தூக்கி வச்சுண்டு ஆடியிருக்க மாட்டா, இந்த மனுஷர் அப்படி ஆடுவார்! என்ன பண்றது, நேக்கும் பொழுது போகனுமோன்னோ? இத்தனை காலமும் கவர்ன்மெண்ட்ல குப்பையை கொட்டி ரிடையர்மென்ட்ங்குற பேர்ல என்னையும் ஒரு குப்பையா எடுத்து வெளியே கொட்டிட்டா...நான் என்ன ப்ரஸ்டீஜ் பத்மநாபனா? அதையே நெனைச்சி ஓவர் ஆக்ட் பண்றதுக்கு? அவா வேலையை அவா செய்றா...

பாத்தேளா? இப்படித் தான் பேச வந்ததை விட்டுட்டு வேற ஏதேதோ பேச ஆரம்பிச்சிருவேன், என்ன சொல்லின்டிருந்தேன்? மாதவன்! அவன் எங்க அக்ரஹாரத்துக்கு வந்து ஒரு ஆறு மாசம் தான் ஆறது. சொந்த ஊர் ஸ்ரிரங்கம். வத்தலுக்கு சொக்காய் போட்டது போல ஒரு ஒடம்பு! சார்டர்ட் அக்கவுண்டட் ஆறது தான் அவன் கனவாம்! இங்கே வாடகைக்கு ஒரு அகத்தை எடுத்துண்டு ஏதோ கோச்சிங் சென்டர் போயின்ட்ருக்கான்! எங்க ஆத்துல சின்னது இருக்கே, அவனை ஃப்ரூட்னு தான் சொல்வா! வாண்டு! நாள் தவறாம சந்தியா வந்தனம் பண்றானாம், கீதை படிக்கிறானாம், வேதத்துக்கு அர்த்தம் சொல்றானாம்! பொறுக்கிகளைக் கூட நம்பிடலாம்! ஆனா இந்த மாதிரி ஊமைக் குசும்பன்களை நம்பவே கூடாது...என்ன பண்றது தேசிகாச்சாரி விட்டா அவனுக்கு தன் சொத்து பூராவும் எழுதி வச்சுருவார் போலிருக்கே? நீங்களே சொல்லுங்கோ? இந்த காலத்துல யாரை நம்ப முடியிறது?

அன்னைக்கு மத்தியானம் வானம் கொஞ்சம் மந்தமா இருந்தது! போஜனம் முடிச்சுண்டு வெத்தல பெட்டியை எடுத்துண்டு காத்தாட திண்ணைக்கு வந்தேன்! மணி ஒரு மூணு இருக்கும், தெருவுல ஆள் நடமாட்டம் இல்லை. அப்போதான் மாதவன் புத்தகம் கையுமா அவன் ஆத்துல நுழைஞ்சான். நான் எங்கேயோ பார்த்துண்டே, எதொ யோசனையில் வெத்தலையை கொதப்பின்டே திரும்பி பாத்தா பாரூ எம்பி எம்பி மாதவன் வாசக் கதவைத் தட்றா! வெளியே வந்த மாதவன் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பாத்துட்டு, அவளை உள்ளே அழைச்சுண்டான்! நான் திண்ணையில இருந்தது அவனுக்கு பார்வையில படாது!

பாரூ தேசிகாச்சாரியின் மகள். பாரூக்கு ஒரு இருபது வயதிருக்கும். மூன்று வயதில் மூளைக் காய்ச்சல் வந்து அவளை முடக்கி விட்டது. தத்தித் தத்தித் தான் நடப்பாள். வயதுக்கு மீறிய உடல் வளர்ச்சியிருந்தும், ஐந்து வயதுக்குறிய மூளை வளர்ச்சி தான்! இவ எதுக்கு அவன் ஆத்துக்கு இந்த சமயத்துல போறா? பட்டப் பகல்ல என்ன கர்மம் என்று என் நெஞ்சு அடித்துக் கொண்டது! விசுக்கென்று எழுந்து சென்று பார்க்கவும் திராணியில்லாமல், சத்த நேரம் பித்து பிடித்தாப்ல உக்காந்துட்டேன்! பிறகு கொஞ்சம் ஆஸ்வாசப்படுத்திண்டு மெல்ல எழுந்து சத்தமில்லாமல் அவன் ஜன்னலின் இடுக்கில் நோக்கிய எனக்கு தூக்கி வாரிப் போட்டது!

அந்த எட்டுக்கு எட்டு அறையில் ஒரு ஓரத்தில கிழிஞ்ச பாய் போட்டுன்டு அவ நன்னா தூங்கின்டு இருக்கா!! இவன் இந்த ஓரத்தில் உக்காந்துண்டு படிச்சிண்டு இருக்கான்! அவன் மெல்ல எழுந்து டேபிள் ஃபேனை அவ பக்கமா திருப்பி வச்சுட்டு அவ தலைக்கு கீழே ஒரு தலைகாணியை போட்டுட்டு ஆறுதலா அவ தலையை தடவி விட்டுட்டு மறுபடியும் அவன் இடத்துக்கு வந்து படிக்க ஆரம்பிச்சுட்டான்! நேக்கு கண்ல ஜலமே வந்துடுத்து!

சொன்னா நம்பமாட்டேள்!
ஒரு பெஞ்சில் இரண்டு சிறுவர்களின் கால்கள் ஆடிக் கொண்டிருக்கின்றன! அவர்கள் இருவரும் ஏதோ ஒரு சம்பாஷணையில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது...

சட்டென்று ஒருவனின் கால்கள் ஆடுவது நிற்கிறது! அதைத் தொடர்ந்து மற்றவனின் காலும் நிற்கிறது....

மணி: காட் ப்ராமிஸ்? [கையை நீட்டுகிறான்!]
சிபி: காட் ப்ராமிஸ் [கையில் அடிக்கிறான்]
மணி: உனக்கு எப்படி தெரியும்?
சிபி: எத்தனை சினிமா பாத்துருக்கேன்!
மணி: நான் நம்பலை...
சிபி: நாளைக்கு என் கூட வா, உன்னை இன்ட்ரொட்யுஸ் பண்ணி வைக்கிறேன்!
மணி: சரி

மறுபடியும் கால்கள் ஆடுகின்றன...

மணி: ஏதுடா இந்த ரோஸ்?
சிபி: எங்க தோட்டத்துல பறிச்சேன்...
மணி: எதுக்கு?
சிபி: அன்னைக்கு நான் கோயிலுக்கு பூ கொண்டு போகும்போது என்கிட்ட ஒரு பூ கேட்டாங்க, நானும் குடுத்தேன்! தலையில வச்சிகிட்டு நல்லா இருக்கான்னு கேட்டாங்க...ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னேன்! என் கன்னத்தை கிள்ளி சிரிச்சாங்க
மணி: நீ பொய் சொல்றே
சிபி: நீ தான் பாக்க போறியே...
விட்டுக்கு வெளியே நின்று...
சிபி: ரோஸி
மணி: இதான் அவங்க பேரா?
சிபி: ஆமா, நல்ல இருக்குல்ல! வாசனையா?
ரோஸி: ஹேய் சிபி! குட் மார்னிங்...
சிபி: இது உங்களுக்காக!
ரோஸி: சோ ஸ்வீட்! சார் யாரு?
சிபி: இவன் மணி, என் ஃப்ரண்ட்.
மணி: என் பேர் ஏ. ஐ. மணிகண்டன். நான் சிக்ஸ்த் ஏ செக்ஷன்.
ரோஸி: என் பேர் ரோஸிலினா, காலேஜ்ல பீ.காம் படிக்கிறேன்.
மணி: நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, சிபியை நீங்க லவ் பண்றீங்களா?
ரோஸி: ஆமா அவனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்.
[மணி ஓடுகிறான். சிபி துரத்துகிறான், ரோஸி சிரித்துக் கொண்டே உள்ளே போகிறாள்]

சிபி: டேய் மணி, நில்ரா..டேய் நில்லு
இருவரும் நிற்கிறார்கள். மூச்சு வாங்குகிறது..
சிபி: எப்படி?
மணி: இந்த கல்யாணம் நடக்காதுடா
சிபி: ஏன்?
மணி: அவ எவ்வளவு ஹைட்! நீ இத்துனூன்டு இருக்கே...
சிபி: நானும் ஹைட் ஆயிடுவேன்டா
மணி: கிழிப்பே
சிபி: இப்போ என்னடா செய்றது?
மணி: நீ சீக்கிரம் ஹைட் ஆகனும்
சிபி: அதுக்கு என்ன செய்யனும்?
மணி: எங்க அண்ணன் செம ஹைட்டுடா..அவன்கிட்ட கேப்போம்
சிபி: சரிடா.

மறுநாள்...

மணி: ஹைட்டா வளரணும்னா நிறைய ஸ்கிப்பிங் ஆடனுமாம், நிறைய எக்ஸர்சைஸ் பண்ணனுமாம். நிறைய பால் குடிக்கனுமாம்!
சிபி: அது பால் இல்லைடா! காம்ப்ளான், நான் தான் டெய்லி டூ டைம்ஸ் குடிக்கிறேனே!
[சிபி ஒரு முடிவுக்கு வருகிறான்]

சிபியின் கையில் புது ஸ்கிப்பிங் ரோப்! சிபி குதிக்கிறான்..விழுகிறான், எழுகிறான்! மணி உதவி செய்கிறான்.இரண்டு முறை குதித்து விட்டு தன் உடலை ஜான் போட்டு அளக்கிறான். மணி இவனை விட நன்றாய் ஸ்கிப்பிங் ஆட சிபி அவனை தடுத்து நிறுத்துகிறான்! அவனையும் ஜான் போட்டு அளக்கிறான்!

சிபி: வேணாம்! நீ பண்ணாதே
மணி: ஏன்டா?
சிபி: அப்புறம் நீ விட ஹைட் ஆயிட்டா?
[மணி பேயரைந்து நிற்கிறான்]

மறுநாள் ரோஜாவுடன் இருவரும் ரோஸி வீட்டுக்குச் செல்கின்றனர்! வாசலில் ரோஸி யாருடனோ பைக்கில் போகிறாள்! அவளுடைய அம்மா டாட்டா காட்டுகிறாள்!
சிபி: ரோஸி எங்க போறா?
அம்மா: அவ சினிமாக்கு போறா...சிபி, ரோஸி அக்காக்கு கல்யாணம்டா. உங்க அம்மாகிட்ட சொல்லு என்ன?
சிபி: யாரு கூட?
அம்மா: அந்த பைக்ல போறாரே அவர் கூட [உள்ளே போகிறார்]
மணியும் சிபியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர்!
மணி: நீ ஏன்டா அவங்க அம்மாகிட்ட சொல்லலை?
சிபி: என்னை பாக்கும் போது சிரிச்ச மாதிரி தான்டா அந்த பைக்ல போகும்போது சிரிச்சா!
மணி: இந்த பொண்ணுங்களே இப்படித் தான்டா! அவங்களை நம்பவே கூடாதாம்! எங்க அண்ணன் சொல்வான்!

சிபி கையிலிருக்கும் ரோஜாவை தூக்கி எறிகிறான்!
மணி ஸ்கிப்பிங் ஆடிக் கொண்டே வருகிறான். சிபி எதுவும் சொல்லாமல் நடக்கிறான்...
எனக்கு நிச்சயமாய் தெரியும்
நீ சிரித்திருப்பாய்
மேகம் தான் தூறுகிறதே!
-------------------------------------------------------------------------------------------------
நீ வீட்டில் இல்லாத
ஒரு பொழுதில்
நானிருந்தேன்!
சொன்னால் நம்ப மாட்டாய்...
வீடெங்கும் நீ
நிறைந்து கிடக்கிறாய்!
-------------------------------------------------------------------------------------------------
நீ இல்லாத சமயத்தில்
நீ வளர்க்கும் பூனை
உன் கதகதப்பு வேண்டி
மடித்து வைத்திருக்கும்
உன் புடவையில் துயில்கிறது
பாவம்...பூனைக்கு எப்படித் தெரியும்?
புருஷனுக்குத் தான் முதல் உரிமை என்று?
-------------------------------------------------------------------------------------------------
நீ இல்லாத தருணத்தின் மெளனம்
உன்னை விட அதிகம்
தொனதொனக்கிறது!
-------------------------------------------------------------------------------------------------
எதிர்பாராமல் நம் கண்ணைக் குத்தும்
குழந்தை போல் திடீரென்று
வந்து விடுகிறது மழை

நீ இருந்தால்
மழையை விட சடசடத்துக் கொண்டே
கொள்ளையில் காயும் துணிகளை
அள்ளிக் கொண்டு வருவாய்!

மழை வாசனையோடு
மிகக் கொஞ்சமாய் நனைந்து
என் அருகே வந்து அமர்வாய்

ஜன்னலின் வழியே பார்க்கிறேன்!
கொல்லையில் துணிகள் நனைகின்றன...
நான் உள்ளே நுழையவும் "சரி பவி மீ அவுஸ்" [சரி அண்ணி, நான் கெளம்புறேன்] என்று அவள் கிளம்பவும் சரியாய் இருந்தது...

சாந்திக்கு வயது ஒரு 35 இருக்கலாம். அவள் வறுமைக்கும் வயிருக்கும் சம்மந்தமில்லை...நல்ல புஷ்டி! இருட்டில் பிடித்த கொலக்கட்டை போல் கொச கொசவென்று நான்கைந்து, வீடுகள் என்ற பெயரில் இருக்கும் கூடுகள் எங்கள் காம்பவுண்ட்! அந்த கொச கொச கூடுகளில் எங்கள் பக்கத்துக் கூட்டில் வசிப்பவள் இந்த சாந்தி. எல்லோரும் செளராஷ்ட்ரா சமூகத்தைச் சார்ந்தவர்கள். உங்களை பொறுத்த வரை காய்ரா பூய்ரா ஜாதி!

அவள் புருஷன் மகா யோக்கியன். குடிக்காமல் பெண்டாட்டியை கை நீட்டி அடிக்கவே மாட்டான்! அதே சமயம் குடிக்காமல் இருக்கவே மாட்டான்! இந்த இரண்டு வேலையை கண்ணும் கருத்துமாக செய்து வருபவன், எப்படியோ இன்னொரு வேலையும் பொறுப்பாய் செய்துள்ளான். அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள். குடிகாரனின் குழந்தைகளாய் இருந்தாலென்ன, அத்தனை அழகு!

சாந்திக்கு இரண்டு வேலை தெரியும். ஒன்று தைப்பது; இன்னொன்று அழுவது! ஓவியத்தை வரைந்து அதற்குக் கீழ் பெயரை வரைவது போல் சாந்தியும் ஜாக்கட்டை தைத்து தன் பெயரை அதில் வரைந்திருந்தால், மதுரையில் அந்த ஏரியாவில் சந்துக்குச் சந்து இருக்கும் பெண்களின் மேல் அவள் பெயரை பார்க்கலாம்! அவ்வளவு தைத்திருக்கிறாள்! சாதாரண ஜாக்கெட் 30 ரூபாய். பஃப் கை 35! தொட்டி கழுத்து வைத்து பாசி வைக்க 40. ஜன்னல், பால்கனி என்று விதவிதமான டிசைன்கள், விதவிதமான ரேட்டுகள்! எங்கள் கொச கொச காம்பவுண்டில் எங்கள் வீடு ஒரு மாதா கோயில்! மாதா கோயிலின் பாதிரியார் போல் என் அம்மா எல்லோரின் கஷ்ட நஷ்டங்களைக் கேட்டு பாவ மன்னிப்பு கொடுப்பார்! எல்லாவற்றையும் சொல்லி அழுவதில் அவர்களுக்கு ஒரு ஆறுதல்! இன்றும் சாந்தி கண்னைத் துடைத்துக் கொண்டே தான் சென்றாள்!

ககம்பா தூ காய்தி மெல்லே சேத்தே! தெனு சா ரொல்லே ஜாராஸ்! [ஏம்மா நீ ஏதாவது சொல்லிட்டு இருக்கே? பாரு அவங்க அழுதுட்டே போறாங்க] என்று அம்மாவை கலாய்த்தேன்!

ஹாய் மீ தெகோ சசு சா காய்தி மெனத்த..ஜீ பாத் தைலி காரா [ஆமாம், நான் தான் அவ மாமியாரு, ஏதாவது சொல்றதுக்கு! போய் சாப்பிட்றா...]

நான் சாப்பிட ஆரம்பித்ததும், அம்மா ஆரம்பித்து விட்டாள்! சாந்தி சொல்லி அழுததெல்லாம் என்னிடம் சொல்லி அவள் மீது பரிதாபப்பட்டாள்! மாதா கோயிலின் அடுத்த பாதிரியாராக என்னை பாவித்துக் கொண்டேன்! குழந்தைகளுக்கு பள்ளியில் கட்ட வேண்டிய பணத்தை எடுத்து அவன் குடித்து விட்டானாம்! கேட்டதற்கு சிகெரட் நெருப்பை வைத்து கையை சுட்டு விட்டானாம். கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் இப்படி மனம் போன போக்கில் நடந்து கொள்கிறானாம். மூன்று பெண் குழந்தைகளையும் பார்த்து பார்த்து எரிந்து விழுகிறானாம். என் அம்மாவுக்கும் கண் கலங்கித் தான் இருந்தது...மனிதர்கள் ஏன் இத்தனை கேவலமான பிறவிகளாய் இருக்கிறார்கள்? இவர்களுக்கு ஏன் குடும்பம், குழந்தை குட்டி? எப்படி இவ்வளவு நீச்சமாக நடந்து கொள்ள முடிகிறது? எப்படி இருந்தாலும் அந்தப் பெண் பாவம் அவனுடன் தான் காலம் தள்ள வேண்டும் என்பது எத்தனை கொடுமை...எப்படி அவளால் அவனுடன் சிரித்துப் பேச முடியும்? நாள் முழுதும் சண்டை போட்டு விட்டு எப்படி அவன் முகம் பார்த்து வாழப் பிடிக்கும்? என்று ஆயிரம் கேள்விகள் என் மனதில் எழுந்தன...நானும் சாப்பிட்டு விட்டு எழுந்தேன்!

மறுநாள் நான் கல்லூரியிலிருந்து வர நேரமாகிவிட்டது...பாதிரியார் தனியாகத் தான் இருந்தார். எந்தப் பாவியும் மன்னிப்பு கேட்க வரவில்லை போலும். பயங்கர பசி...

காய் அம்பா கெர்ரித்தே ஹிந்தோ? [என்னம்மா செஞ்சிருக்கே இன்னைக்கு?] என்ற என் பார்வையில் அந்த குளோப் ஜாமுன் விழுந்தது! ஒரு அழகான பெண்ணை பார்த்து வழிவதைப் போல் நாக்கு ஜொள்ளு வடித்தது! காய் விஷேஸ் ஹிந்தோ? கோனே எல்லே? [என்ன விஷெசம் இன்னைக்கு? ஏது இது?] என்று வாயில் போட்டேன்!

சாந்தி கெவ்ரார் மெனா! தெனோ அந்திர்தே! [சாந்தி முழுகாம இருக்காளாம், அவ கொடுத்தா!] என்றாள் அம்மா! குளோப் ஜாமூன் நெஞ்சை அடைத்தது!
அலுவலகத்தில் மறுபடியும் கண்டுபிடித்து விட்டார்கள்..."என்ன சொன்னாலும் செய்றான் இவன் ரொம்ப நல்லவன்டா" என்று! எப்படித் தான் கண்டுபிடிக்கிறாய்ங்களோ? ஆமாம். அலுவல் நிமித்தமாக ஒரு மாதம் கோயம்பத்தூருக்கு டெபுட்டேஷனில் அனுப்பி விட்டார்கள். சரி, சென்னைக்கு வந்து மூன்று வருடம் ஆகிவிட்டது, ஒரு மாதம் கோவைக்குத் தான் சென்று வருவோமே, ஒரு எழுத்தாளன் வாழ்க்கையில் இதெல்லாம் ஜகஜம் தானே என்று நானும் கிளம்பி விட்டேன். [இங்கு எழுத்தாளன் யார் என்பதை சரியாய் கண்டு பிடிப்பவரின் வீடு தேடி வந்து நானே கை குலுக்குவேன்!]

உங்க டெசிக்னேஷனுக்கு நீங்க ஏரோப்ளேன்ல போகலாம், நீங்களே புக் செய்து விட்டு பணத்தை ரீஎம்பர்ஸ் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு, பிறகு பணத்தை தராமல் டேக்கா கொடுத்து விடுவார்களோ என்று பயந்தேன். ஏனென்றல் இத்தகைய அனுபவம் எனக்கு ஏற்கனவே ஏற்பட்டிருக்கிறது...ஐந்து வருடத்திற்கு முன்னால் ஹைதராபாத்திலிருந்து பெங்களூருக்கு அனுப்பும் போது நீங்கள் ரயிலில் ஏசி கோச்சில் செல்லலாம், புக் செய்து டிக்கட்டைக் காட்டி பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்கள். நமக்கும் இப்படி ஒரு வழ்வா? என்று நினைத்து ரயிலில் டிக்கட் கிடைக்காததால் வால்வோ பஸில் ஜம்மென்று 700/= கொடுத்து பெங்களூர் போய் பணத்தைக் கேட்டால் உங்க ட்ரான்ஸ்வர் லெட்டர் எங்கே என்று ஏதேதோ சால்ஜாப்பு சொல்லி பணத்தைக் கொடுக்க முடியாது என்று சொல்லி விடார்கள். அது சரி எல்லாம் நல்லா நடக்குதேனு கொஞ்சம் சந்தொஷப்பட்டது என் தப்பு தான்...இவர்கள் சும்மா இருந்திருந்தாலாவது உருளைக் கிழங்கு லாரியைப் பிடித்து போயிருப்பேன். சும்மா இருந்தவனை சொறிஞ்சி விட்டானுங்கடா...ஏதோ நான் பயந்த மாதிரியெல்லம் நடக்காமல் இந்த முறை அவர்களே ரயிலில் புக் செய்து அனுப்பி விட்டார்கள்!

எனக்கு என்னமோ ஏசி கோச் பிடிக்கவில்லை. மனிதர்களின் இரைச்சலே இல்லாமல் ஏதோ ஒரு எழவு வீட்டில் இருப்பது போன்ற உணர்வு. கண்ணாடியின் வழியே ஒன்றும் தெரிவதில்லை. ரயில் போகிறதா நிற்கிறதா என்றே புரிவதில்லை. என்ன ஒரு கம்பளி, ஒரு தலையணை, இரண்டு போர்வை கொடுக்கிறார்கள். செல்லும் இடம் வந்ததும் பொறுப்பாய் எழுப்பி விடுகிறார்கள். தமிழ் தெரிந்திருந்தாலும், ஆங்கிலத்திலேயே பேசுபவர்கள் இதில் பயணம் செய்கிறார்கள். அட்டென்டன்ட் போர்வை ஒன்றை கம்மியாய் கொடுத்து விட்டதாக டீடீஈயிடம் [ஏன் எல்லோரும் டீடீஆர் என்கிறோம்?] ஆங்கிலத்தில் கம்ப்ளயன்ட் செய்கிறார்கள்.

கோவையில் அவிநாசி ரோட்டில் ஒரு பெரிய ஃப்ளாட்டில் தங்கியிருக்கிறேன். மிக அற்புதமய் வீட்டை வடிவமைத்திருக்கிறார்கள். ஒரு ஃப்ளாட் நிச்சயம் 50 லட்சமாவது இருக்கும். நேபாளத்திலிருந்து இங்கு வந்த நான்கு பேர், காலை, மாலை என்று எங்களுக்காக ரொட்டியை சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். கேட்டால் உங்களுக்கு சேவை செய்வது மகிழ்ச்சி என்று பணிவோடு சொல்கிறார்கள். அங்கு தங்கும் சிலரின் அட்டகாசம் தங்கமுடியவில்லை. நான் டீவி பார்த்துக் கொண்டே சாப்பிடுவேன், சாப்பாட்டை இங்கே கொண்டு வா என்று அதிகாரம் செய்கிறார்கள். எனக்குப் பாவமாக இருக்கிறது.
என்ன தான் ராஜ போகம் இருந்தாலும், எனக்கு என்னமோ வசதியான ஒரு ஜெயிலில் அடைத்து வைத்திருப்பது போலவே தோன்றுகிறது. காலை ஆனதும் சாப்பாடெல்லாம் போட்டு ஜெயில் கைதிகளை கோர்ட்டில் ஆஜர் படுத்துவது போல் ஒரு வேனில் ஏற்றி அலுவலகத்திற்கு அனுப்புவதும், இரவு 10 மணிக்கு, 12 மணிக்கு மறுபடியும் வேனில் கொண்டு வந்து வீட்டில் விட்டால் அப்படித் தனே தோன்றும்! இதில் நான் கோவையில் இருந்தாலென்ன கொடைக்கானலில் இருந்தாலென்ன...

ஒரு வேளை சிறையில் இணைய வசதி வந்தால் மறுபடியும் சந்திக்கலாம்!


எல்லோரும் எல்லாமும் சொல்லியாகிவிட்டது. இனி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை

சற்று நேரத்திற்கு மட்டும் என்னை ஒரு மாமுனியாக நினைத்துக் கொண்டு!!!

இதோ பிடி சாபம்....

"அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்கக் கடவாய்!"

புரியாதவர்கள் இந்தக் கற்றதும் பெற்றதை முழுதும் படிக்கவும்!

இது என் நூற்றி ஐம்பதாவது பதிவு! ஆமா, ஆடிக்கொரு தடவை அம்மாவாசைக்கு ஒருதடவை இவர் வலைபதிவாரு, இதுக்கு நாங்க ரெகுலரா வந்து பாத்துட்டு வேற போகனும் என்று நீங்கள் நினைக்கவில்லை என்று எனக்குத் தெரியும்! [பார்ரா...] நான் என்ன செய்வது வலைபதியும் அளவிற்கு மண்டையில் ஒன்றும் ஓட மாட்டேன் என்கிறது...இன்று என்ன கேடு என்று நீங்கள் சொல்வதற்குள் விஷயத்திற்கு வந்து விடுகிறேன்...

இன்று காதலர் தினம்! இன்று நான் அலுவலகம் சென்றவுடன் உள்ளம் பூரித்துப் போகும் அளவிற்கு ஒரு விஷயத்தை கேள்விப்பட்டேன். ரொம்ப சரியாய் தப்பாய் புரிந்து கொண்டீர்கள்! வழக்கம் போல் எந்தப் பெண்ணும் இன்று தங்கள் காதலை என்னிடம் சொல்லவில்லை! "முப்பது வயசுக்கு முன்னாடி கல்யாணம் ஆகவேண்டியவ இன்னும் கோலம் போட்டுட்டு இருக்கா" ரேஞ்சுக்கு நான் இருக்கும் போது, என்னிடமாவது எந்தப் பெண்ணாவது காதலை சொல்வதாவது...இதனால் மனம் வாடித் துன்பமிக உழன்று நானிருப்பதாக யாரும் நினைத்து விட வேண்டாம்.

சரி அதை விடுங்கள், நான் நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன். இன்று எங்கள் அலுவலகத்தில் எங்கள் டீமுக்கு மட்டும் காலை 9லிருந்து மாலை 6 மணி வரை (மட்டுமே) வேலை நேரமாய் கடைபிடிக்கப் பட்டது. நேற்றே மெயில் போட்டு எல்லோருக்கும் சொல்லிவிட்ட போதிலும், நேற்று ஒரு அவசர வேலையாக அலுவலகத்திலிருந்து சீக்கிரம் கிளம்பி விட்டதால் எனக்கு இந்த விஷயம் இன்று காலை தான் தெரிந்தது. நான் டான் என்று காலை 10 மணிக்கு போய் நுழைந்ததும் தான் இந்த விஷயத்தை கேள்விப் பட்டேன், அடடா ஒரு மணி நேரம் தாமதமாக வந்து விட்டோமே என்றெல்லாம் மனது உறுத்தாமல் பார்த்துக் கொண்டேன்.

உங்களுக்கே தெரியும், கணினித் துறையில் வேலை பார்க்கும் எல்லோருக்கும் காலையில் 9 மணிக்கு அலுவலகம் போவது தான் நிச்சயம், மாலையில் எத்தனை மணிக்குத் திரும்புவார்கள் என்பது நிச்சயமில்லை. பெண்டெடுத்து விடுவார்கள்! [இதிலும் எப்போது ஓபி அடிக்கும் ஜென்மங்களும் உண்டு!] ஒரு மனிதனால் அதிகம் போனால் 6 மணி நேரம் தான் உருப்படியாய் வேலை செய்ய முடியும் என்று எங்கோ கேள்விப்பட்டிருக்கிறேன். இருந்தும் இன்னும் கணினித் துறையில் இந்த மாதிரி சட்டங்கள், கெடுபிடிகள் எல்லாம் இல்லாததால் சகட்டு மேனிக்கு வேலை பார்த்து, நிறைய சம்பாதித்து, கண்ட நேரங்களில் கண்டதை தின்று விட்டு, வயிறு போச்சு, கண்ணு போச்சு, கை போச்சு, முதுகு போச்சு என்று டாக்டருக்கு சம்பாதித்த பணத்தை எல்லாம் அழுது கொண்டு, எல்லா ஏரியாக்களிலும் வீட்டு வாடகையை ஏற்றி விட்டதற்காக எல்லோரிடமும் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

என் மேலாளர் நான் சேர்ந்த புதிதில் ஒரு மீட்டிங்கில் 9லிருந்து 6 மணி வரை வேலை நேரமாக கடைபிடிக்க வேண்டும் என்றார். இது என்ன நடக்கக் கூடிய காரியமா என்று எல்லோரும் வியந்ததை பார்த்து, சரி ஆரம்பத்தில் இதை மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், பிறகு மெல்ல பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையும், பிறகு வாரத்திற்கு ஒரு முறையும் என்று கடைபிடித்து முன்னேறலாம் என்றார். அப்படியே முன்னேறி அதை தினக்கடமையாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பது அவர் கனவு! நல்ல கனவு தான்...[மீட்டிங் வேறு பகலில் நடந்ததால் நானும் சீரியஸாய் எடுத்துக் கொள்ளவில்லை..] அவர் சொன்னதை இத்தனை சீக்கிரம் செய்வார்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு இது ஒரு இன்ப அதிர்ச்சி தான்...

இன்று என் டீமில் உள்ள சில பெண்கள் சேலையில் வந்திருந்தனர். காதலர் தினத்திற்கு இத்தனை முக்கியத்துவம் தரத் துவங்கி விட்டதா தமிழகம் என்று குழம்பிவிட்டேன். பிறகு தான் தெரிந்தது இன்று சீக்கிரம் வீட்டுக்கு போகப் போவதால் அதை கொண்டாடவே அவர்கள் சேலையில் வந்திருந்தார்கள். அட! மாலை ஆறு மணி ஆனதும், பெல் அடிக்காத குறையாய் எல்லோரையும் அவரவர் கணினியை நிறுத்தி விட்டு வீட்டுக்கு போகுமாறு அறிவுறுத்தினார்கள். அதிலும் ஒரு மேனேஜர் [கையில் பிரம்பு ஒன்று தான் இல்லை] ம்ம்..கிளம்புங்க, இடத்தை காலி பண்ணுங்க..இங்கே பாம் செட் பண்ணியிருக்கோம் என்று கலாய்த்தல் வேறு...

எல்லோரும் ஒரே நேரத்தில் வெளியில் வருவது ஒரு புது அனுபவமாகவே இருந்தது. சில பிரம்மச்சாரிகளும், வீட்டுத் தொல்லை தாங்காமல் அலுவலகத்திலே தஞ்சம் கொண்ட சிலரும் தலையை குனிந்து கொண்டு வேண்டா வெறுப்பாக வெளியே வந்தனர்! நான் வெளியே வந்து அந்தி வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். பறவைகள் கூடு தேடிப் பறந்து சென்று கொண்டிருந்தன...நானும் பறவையாய் மாறிவிட்ட உணர்வு! அலுவலகத்தை விட்டு வெளியே வந்ததும், ஜனத்திரளை பார்த்து திடுக்கிட்டேன்! இது என்ன இன்று எல்லோருக்கும் 6 மணி வரை தான் வேலையா என்று ஒரு சந்தேகமே வந்து விட்டது. பிறகு தான் புரிந்தது, ஆள் அறவமே இல்லாத எத்தனையோ இரவுகளில் அலுவலகம் விட்டு வந்து பழக்கப்பட்டதால் வந்த உணர்வு அது என்று...

லிப்டில் கீழே இறங்கும் போது அதில் பதிவு செய்யப்பட்ட குரல் ஒலித்தது...
"HAVE A NICE EVENING!"

YES IT IS! என்று நினைத்துக் கொண்டேன் :-)
1. அதிக நெருக்கமில்லை
என்று நான் நினைத்த
நண்பனொருவன்

அவன் சென்ற சுற்றுலாவில்
என் நினைவில்
எனக்காக வாங்கி வந்த
ஏதோ ஒன்றை
எங்கோ தொலைத்து விட்டேன்!

2. நான் இதை
எழுதிக் கொண்டிருக்கும் போது

மாராப்பு விலகிய ஒரு பெண்ணின்
மாரை நீ வெறித்துக் கொண்டிருக்கலாம்

டீ கடையில் ஒரு சிறுவன் கொடுக்கும்
டீயை வாங்கி உறிஞ்சிக் கொண்டிருக்கலாம்

காற்றே இல்லாமல் சில நொடிகள்
தென்னங்கீற்று அசையாமல் இருந்திருக்கலாம்

உன் வாயிலிருந்து ஒரு பருக்கை
கீழே சிந்தியிருக்கலாம்

சுவற்றின் மேலேறிய எறும்பு
காலிடறி விழுந்திருக்கலாம்

இனம்புரியா ஒரு அச்சத்தில்
பறவையின் சிறகுகள் படபடத்திருக்கலாம்

கடல் சற்றே உள் வாங்கியிருக்கலாம்...

எதற்கும் இருக்கட்டும், என்
பேனாவை மூடியே வைக்கிறேன்!
31ம் ஆண்டின் புத்தக கண்காட்சிக்கு நேற்று சென்றிருந்தேன்! புத்தக கண்காட்சிக்குப் புறப்படும் உங்கள் எல்லாருடைய மனதிலும் எழுந்த கேள்வி என் மனதிலும் எழுந்தது! அது தான்..."போன புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களை எல்லாம் படித்துக் கிழித்து விட்டாயா?" இதற்கு நீங்கள் செய்ததைத் தான் நானும் செய்தேன்! இந்த வருடமும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றேன். எந்த புத்தகத்தைத் தேடும் நோக்கத்துடனும், வாங்கும் ஆவலுடனும் நான் செல்லவில்லை! இருந்தும் ஒரே ஒரு காந்தி நோட்டு (500) கொடுத்து பல விதமான மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் வாங்கி வந்திருக்கிறேன்...

நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்:

1. மணலின் கதை (கவிதை) - மனுஷ்யபுத்திரன் - உயிர்மை
2. கடவுளுடன் பிரார்த்தித்தல் (கவிதை) - மனுஷ்யபுத்திரன் - உயிர்மை
3. எப்போதும் வாழும் கோடை (கட்டுரை) - மனுஷ்யபுத்திரன் - உயிர்மை
4. கடைசி டினோசர் (கவிதை) - தேவதச்சன் - உயிர்மை
5. பனிமுடி மீது கண்ணகி (சிறுகதை, குறுநாவல்) - எம். வீ. வெங்கட்ராம் - காலச்சுவடு
6. வேள்வித் தீ - எம். வீ. வெங்கட்ராம் - காலச்சுவடு

[இவரின் "காதுகள்" நாவல் கிடைக்கவில்லை]

உயிர்மை பதிப்பகத்தில் கவிதைகளும், கதைகளும், கட்டுரைகளும் குவித்திருந்தார்கள்! மனுஷ்யபுத்திரனின் கவிதைகளில் எனக்கு ஒரு மயக்கம்! பல கவிதைகள் புரிவதில்லை என்றாலும், அவரே சொல்வது போல் புரியாத கவிதைகள் எனக்கான கவிதைகள் அல்ல என்று அடுத்த கவிதைக்குத் தாவி விடுவேன்! "என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்" என்ற அவர் தொகுப்பை வாங்கி விடுவது என்று நினைத்தேன்! என் துரதிருஷ்டம் அது கிடைக்கவில்லை. அது இருந்திருந்தால் அந்த ஒன்றை மட்டும் வாங்கியிருப்பேன். இல்லாததால் நான்கு புத்தகங்களை வாங்கி விட்டேன்.

அதிலும் என் அதிர்ஷ்டம், நான் உயிர்மையில் நுழைந்ததும் மனுஷ்யபுத்திரனும் அங்கு வந்தார். ஏற்கனவே தேசிகனுடன் அவரை அவர் இல்லத்தில் ஒரு முறை சந்தித்திருந்தாலும், அதை அவரிடம் சொல்லி அவர் நினைவுத் திறனை சோதித்து தர்ம சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம் என்று தான் நினைத்தேன்! மறுபடியும் என் அதிர்ஷ்டம், கடையில் இருப்பவர் ஒருவர், அவராய் சமீபத்தில் வெளியான சில புத்தகங்களைப் பற்றி எடுத்துக் கூறி நீங்கள் தேர்ந்தெடுங்கள், இந்த புத்தகத்தில் மனுஷ்ய புத்திரனின் ஆட்டோகிராஃப் வாங்கி வருகிறேன் என்று நான் எடுத்த ஒரு புத்தகத்தை எடுத்துச் சென்று விட்டார். அட, இது நல்லா இருக்கே என்று அவரைப் பின் தொடர்ந்தேன்.

அவர் மனுஷ்யபுத்திரனிடம் என்னைக் காட்டி எனக்கு கையெழுத்திட்டுத் தருமாறு கூறியவுடன், சரி இத்தனை தூரம் வந்து விட்டோம், "என்னைத் தெரியுதா? அன்னைக்கு பஸ்ல கண்டெக்டர் என்னோட இருபத்தைஞ்சு பைசாவையும் சேர்த்து ஐம்பது பைசாவா உங்ககிட்ட கொடுத்து உங்ககிட்ட வாங்கிக்கச் சொல்லிட்டார், ஆக்சுவலி நீங்க எனக்கு கடன் பட்டவர்" என்று ஒரு மறத் தமிழனைப் போல் தேசிகனுடன் அவர் வீட்டுக்கு வந்ததை ஞாபகப்படுத்தி அசடு வழிந்தேன்! நான் எதிர்பார்த்த அளவுக்கு அவர் நெளியாமல் முகம் மலர்ந்தார்! மேலும், எங்கே என் பெயர் என்னன்னு சொல்லுங்க பார்ப்போம் என்றெல்லாம் சொல்லி இன்னும் அவரை கொடுமைப்படுத்தாமல் நான் என் பெயரைச் சொன்னதும் அதை எழுதி ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்தார்!

படுக்கையறையில் ஒளிந்திருப்பவர்களை கண்டுபிடித்தாரோ இல்லையோ தெரியவில்லை...அவரின் கவிதைகளில் இரண்டு சாம்பிள்...

இழந்த காதல்

நின்று சலித்த என் தோட்டத்து மரமொன்று
பின்னிரவில்
என் பிரியத்தின் இதம் வேண்டி
மெல்லப் படியேறி வந்தது

மரங்கள் நடப்பது சாத்தியமில்லையென அறிந்திருந்ததால்
ஒரு விபரீதக் கனவென்று திகைத்து
வரவேற்கத் தாமதித்துவிட்டேன்

ஆயிரம்
இலை நுனிகளால்
வேர் நுனிகளால்

புறக்கணிப்பின் துக்கம் ததும்பி
படியிறங்கிப் போகிறது
என் தோட்டத்து மரம்

அந்த இடம்

போகும்போது
உன்னுடன் கொண்டு
வந்த எல்லாவற்றையும்
எடுத்துக் கொள்கிறாய்

ஆனால்
அந்த இடம் மட்டும்
அப்படியே எஞ்சிவிடுகிறது

நீயும் கொண்டு வராத
ஏற்கனவே இருந்துமிராத
அந்த இடம்.

[coutesy: andhimazhai]

STAND UP!


[courtesy: http://www.taarezameenpar.com/]

இந்தப் படத்திற்கு விமர்சனம் என்ற பெயரில் நான் எந்த அபத்தத்தையும் செய்யப் போவதில்லை. நீங்கள் "ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா" அளவுக்கு இந்தியில் புலமை பெற்றிருந்தாலும் நான் சொல்வது ஒன்றே ஒன்று! "பாருங்கள், தயவுசெய்து கண்டிப்பாய் பாருங்கள்!" உங்கள் பாராட்டுக்களை இங்கே சொல்லுங்கள். [நானும் 4 வருஷமா ப்ளாக் எழுதுறேன், பேசாம அமீர் கானா பொறந்துருக்கலாம், ஸ்வபா, எத்தனை பின்னூட்டங்கள்! ]

இல்லங்களில் பொங்கல் பொங்க
உள்ளங்களில் இன்பம் பொங்க
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!

வேளச்சேரி ரயில் நிலையத்தின் முகப்பு!



ரயில் நிலையித்திலிருந்து பரங்கிமலை நோக்கி நீளும் பாதை...



ஆள் அரவமற்ற ரயில் நிலையம்!! [அதுவும் சென்னையில்!!]



எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காதது...
  • யானை
  • ரயில்


ரயிலினூடே


இரு கோடுகள் அதனுள் பல கோடுகள்...



ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும் ஒவ்வொரு விதமான மேற்கூரை அலங்காரகள் அமைப்பதாய் கேள்விப்பட்டேன்! அது ஓரளவுக்கு உண்மையென்றும் அறிந்தேன். பின் வரும் படங்களைப் பார்க்க...


மயிலையின் நிலையத்தின் கூரை


கஸ்தூரிபாய் நகர் நிலையத்தின் கூரை


அடையார் ஆறு! [என்று தான் நினைக்கிறேன்!] நான் தமிழகத்தின் முதல்வர் ஆனால்!!!!, சென்னையை இருக்கும் எல்லா கால்வாய்களிலும் லண்டனின் தேம்ஸ் நதியிலும், வெனீஸ் நகரத்திலும் இருப்பது போல் படகுகள் விடுவேன்! [ஆசையே அலை போலே...]


இதுவும் ஒரு புராதானச் சின்னம் தானோ?



உயர் நீதி மன்றத்தின் தலை



வேறு எந்த நாட்டிலும் காண முடியாது என்று நினைக்கிறேன்! ப்ரவீன் ராஜின் இதயத்தை ரத்தம் சொட்டச் சொட்ட குத்தியது யாரோ?


மறுபடியும் தலை...



வழிகாட்டி [இதை அன்னாந்து பார்க்க யாராவது வழி காட்ட வேண்டும்!!]


என்ன செய்வது? வறுமைக்கு என்றுமே வயதாவதில்லை :-(

ஒரு மாதமாக அம்மா சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்! வாஷிங் மெஷின் லீக் ஆகிறதாம்! கிட்சனில் அதை வைத்திருப்பதால், சமையலறை எங்கும் தண்ணீராகி விடுகிறதாம்! ஒரு வழியாய் கஸ்டமர் கேருக்கு ஃபோன் செய்து வீட்டுக்கு வருவதற்குள் சார் சரியா உங்க வீடு எங்க இருக்கு? என்று அங்கிருந்து ஒரு ஃபோன்! வலிக்காமல் கிள்ளி பார்த்துக் கொண்டு அவரை வீட்டுக்கு கூட்டி வந்து வாஷிங் மெஷினை சாய்த்து அடியில் டார்ச் அடித்து, எதோ கார்க்காம், பேரிங்காம் அதெல்லாம் போய் விட்டதாய் கண்டு பிடித்து அடுத்த வாரம் தகுந்த ஆட்களை கூட்டி வந்து சரி செய்வதாகவும், வாரண்டி எக்ஸ்டென்ஷன் என்ற பேரிலும் கிட்டத்தட்ட 3000 ரூபாய்க்கு வேட்டு வைத்து விட்டுப் போய்விட்டார்!

கையாலயே தொவைச்சி போட்ருக்கலாம் போல இருக்கே....

இரண்டு மாத காலமாக அப்பா சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்! இனிமேல் கேஸ் வாங்க வேண்டுமென்றால் ரேஷன் கார்டு வேண்டுமாம்! இல்லையென்றால் கேஸ் சப்ளை அம்பேல்...அப்பாவின் பேரில் கேஸ் இருக்கிறது! அவருடைய ரேஷன் கார்டை மதுரையிலிருந்து மாற்றி இங்கே கொண்டு வர வேண்டும்? தமிழ்நாட்டில் ஒரு நகரத்திலிருந்து ரேஷன் கார்டை இன்னொரு நகரத்திற்கு மாற்றுவது என்ன அவ்வளவு சுலபமான காரியமா? சரி என் பேரில் புதிதாய் வாங்கலாம் என்றால் [அது மட்டும் என்ன சுலபமா?] திருமணம் ஆகாமல் ரேஷன் கார்டு கொடுக்க மாட்டார்களே என்கிறார்கள்! அப்படியா? என்னை மாதிரி எத்தனை பேர் ஊர் விட்டு ஊர் வந்து கூட்டம் கூட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! அத்தனை பேருக்கும் திடீரென்று கேஸ் தீர்வதற்குள் ரேஷன் கார்டு வாங்கி விட முடியுமா? இதெல்லாம் நடக்கிற காரியமா?

படித்த பெண்களும் அடுப்பூதும் நிலை வெகு தூரமில்லை!

இரண்டு மாதங்கள் ஆகின்றன புது வீட்டுக்கு குடி வந்து...ஃப்ளாட்டில் எல்லோருடைய மீட்டரும் சமத்தாய் ஓடுகிறது! நீங்கள் இந்த வலைப்பதிவின் சீறிய வாசகர் என்றால் உங்களுக்கே புரிந்திருக்கும்! என் மீட்டர் ஓடவில்லை! [அது தானே லாஜிக்கு!] கழட்டிக் கொண்டு போன மின்சார வாரியம் அப்படி என்ன கழட்டுகிறார்களோ தெரியவில்லை...இன்னும் புது மீட்டர் வந்தபாடில்லை! சரி சனிக்கிழமை போய் தான் கேட்டுப் பார்ப்போமே என்று கிளம்பி போனால், A. E. இன்னைக்கு வர மாட்டார் சார்! நீங்க திங்க கிழமை காலையில பத்து மணிக்கு மேல வந்து பாருங்க! அதுக்கு நான் அசமஞ்சமாய், நான் ஆபிஸ் போகனுமே!, அதற்கு அவர், அதுக்கு நான் என்ன பண்ணட்டும்? திங்கள் கிழமை வந்து பாருங்க! அவ்வளவு தான்!!

மாதவன் சார், அந்த கிரிக்கெட் பேட்டை கொஞ்சம் கொடுங்க இப்படி...

என் கணினி எப்படி வேலை செய்யும் என்று உங்களுக்கே தெரியும்! தெரியாதவர்கள் இங்கே பார்க்க...இத்தனை நாட்கள் CD DRIVE வேலை செய்யவில்லை! சரி அது பழகிடும் என்று நான் விட்டு விட்டேன்! இப்போது மானிட்டரில் நாம் பொத்தான் அமுக்கினால் வரும் ப்ரைட், கான்ட்ராஸ்ட் மெனுக்கள் என்னை நினைத்ததோ, நிரந்தரமாய் மானிட்டரிலேயே தங்கி விட்டன! அதை ஒரு ஓரத்தில் நகட்டவா முடிகிறது? சர்வ லட்சணமாய் நட்ட நடு சென்டரில் ஜம்மென்று அதுவாக கான்ட்ராஸ்டையும், ப்ரைட்னஸையும் கூட்டியும் குறைத்துக் கொண்டும் இருக்கிறது!

நானும் எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?

ம்ம்ம்ம்ம்........எதையோ சொல்ல மறந்துட்டேன்....

அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

ரொம்ப முக்கியம்! அட போங்கப்பா...