குழந்தைகள் தினமும் முடிந்து விட்டபடியால் இந்தப் பதிவை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை! தோ, ஆரம்பிச்சாச்சே! பலே, பலே!! குழந்தைகள் தினம் என்றதும் நினைவுக்கு வருவது நேரு மாமாவும், குழந்தைகளும். இந்தப் பதிவு நேரு மாமாவைப் பற்றியது அல்ல என்று நான் சொன்னால் அப்படியென்றால் வேறு யாருடையது என்று கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்!

நேரு மற்றும் பல மாமாக்களைப் போல் குழந்தைகள் என்றால் எனக்கும் கொள்ளைப் பிரியம்! அதிலும் குறிப்பாக தாயின் தோள்களில் சாய்ந்து கொண்டு எச்சில் வழிய தன் உருட்டைக் கண்களால் உலகையே உள் வாங்கத் துடிப்பதுகள், தத்தக்கா பித்தக்கா என்று சதா பேசிக் கொண்டும் சப்தம் எழுப்பிக் கொண்டும் நாம் திரும்பிய சமயம் செக்கஸ்லோகியா என்று சொல்லி நம்மை அதிர வைப்பதுகள், சமீப காலமாய் பேச ஆரம்பித்து கத்தால கண்ணாலேயும், டாக்சி டாக்சியையும் அபிநயத்துடன் செய்வதுகள், பள்ளிக்குப் போக ஆரம்பித்து இருப்பதுகள் என்று பட்டியல் நீளூம்!

சாலையில், கடைகளில், பேருந்து நிலையங்களில் என்று எச்சில் ஒழுக தன் தாயின் தோளில் சாய்ந்து கொண்டு முழிக்கும் குழந்தைகளைப் பார்த்தால் போதும், அடுத்த நிமிஷம் நான் ஆயுத்தமாகி விடுவேன்! கையை ஆட்டுவது, முட்டைக் கண்ணாக்கிக் காட்டுவது, முகத்தை அஷ்ட கோணலாக்கிக் காட்டுவது, சிரித்துக் கொண்டே கூப்பிடுவது என்று....என் நண்பன் ஒருவனுக்கு நான் செய்யும் இந்தக் காரியம் பிடிக்காது என்று நினைக்கிறேன்! மனசுல பெரிய ஹீரோ, குழந்தையை சிரிப்பாலேயே அப்படியே கவர்ந்துருவாரு என்று நினைப்பானோ என்னமோ, டேய் நீ அவங்க அம்மாக்கு தானே சிக்னல் கொடுக்குறே என்று அதிரடியாய் கேட்பான்! அப்படியெல்லாம் பப்ளிக்கா கூப்பிடக் கூடாதுடா என்று அட்வைஸ் வேறு செய்வான்! அடப் பாவிகளா....

குழந்தைகளுடன் விளையாடுவதும், உரையாடுவதும் ஒரு கலை...அது எல்லோருக்கும் வருவதில்லை என்று தான் நான் நினைக்கிறேன்! பெரும்பாலானவர்களுக்கு உன் பேர் என்ன? எந்த ஸ்கூல் படிக்கிறே? க்ளாஸ்ல எத்தனாவது ரேங்க் [நான் குழந்தையாய் இருந்த சமயத்தில் இந்தக் கடைசி கேள்வி என்னை மிகவும் எரிச்சல் படுத்துவதுண்டு!] என்ற சம்பிரதாய கேள்விகளோடு குழந்தைகளிடம் செய்யும் சம்பாஷனை முடிந்து விடுகிறது. எனக்கு அப்படியில்லை! பெற்றோர்களைக் காட்டிலும் குழந்தைகளிடம் தான் நான் அதிகம் பேசுவதுண்டு! அதிலும் இந்தக் காலத்துக் குழந்தைகள்...அப்பா அப்பா...இதோ சில சாம்பிள்கள்ள்ள்ள்!

நான் கல்லூரியில் படித்த போது என் வீட்டுக்கு என் நண்பன் ஒருவன் வருவான்! என் வீடு ஒரு காம்பவுன்டில் இருப்பதால் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் எங்கள் வீட்டில் வளர்வதுண்டு! என் நண்பன் அப்படி வரும் குழந்தைகளை மடியில் அமர்த்திக் கொண்டு கீழ் வரிசைப்படி சில கேள்விகளைக் கேட்பான்!

1. உன் பேர் என்ன?

2. எந்த ஸ்கூல்?

3. உன் க்ளாஸ்ல மொத்தம் எத்தனை பேர்?

4. உன் க்ளாஸ்ல எத்தனை பசங்க?

5. உன் க்ளாஸ்ல எத்தனை பொன்னுங்க?

6. நீ யார் மடியில் உக்காருவ?

அட, இது நல்லாயிருக்கே என்று நானும் அதை பழகிக் கொண்டேன்! எனக்குத் தெரிந்த குழந்தைகளிடமும் கேட்க ஆரம்பித்தேன். [கடைசி கேள்வியைத் தவிர! எல்லாம் ஒரு நல்ல எண்ணம் தான்!] என் மாம பசங்களிடம் அடிக்கடி கேட்டுக் கேட்டு, நான் 4வது கேள்வி வரும்போதே அவர்கள் உஷாராகி கொஞ்சம் வெட்கப்பட்டுக் கொண்டே, என்னை பொய்யாய் அடித்து விட்டு, அடுத்து நீ என்ன கேப்பேன்னு எனக்குத் தெரியும் என்று ஓடி விடுவார்கள்! இதற்காகவே சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை என்னிடம் பேசுவதை பார்த்தால் பதறிப் போவதுண்டு!

மற்றொரு முறை என் காம்பவுண்டில் இருக்கும் ஒரு சின்ன பையனுக்கு தங்கச்சி பாப்பா பிறந்தது! நானும் எதேச்சையாய், என்னடா உன் தங்கச்சிக்கு என்ன பேர் வைக்கப் போறேன்னு கேட்டேன், அதற்கு அவன் என் தங்கச்சி பேரு ராஜகாளியம்மன் என்றான் பட்டென்று! அடடா தமிழ் சினிமாவைன் க்ராபிக்ஸ் அட்டகாசங்கள் இந்த பிஞ்சு மனதையும் கவர்ந்து விட்டதே என்று எண்ணி வியந்தேன்! அவன் பேர் வைத்தானோ இல்லையோ, என் கைங்கரியத்தினால் அந்த தங்கச்சிக்கு ராஜகாளியம்மன் என்ற பட்டப் பெயர் நிலைத்து விட்டது!
இப்படித் தான் ஒரு முறை என் உறவினரின் 1வது படிக்கும் குழந்தையுடன் பீச்சுக்குச் சென்றேன். அங்கே நாயை பார்த்ததும் அய்யயோ, லயன் வருது பாரு என்றேன்! அவன் என்னை ஒரு ஈனப் பிறவியாய் பார்த்து விட்டு அது லயனா? அது டாக் என்றான் எரிச்சலுடன்! அவன் சொன்ன விதம், இவனையெல்லாம் நாம் எப்படி கரையேற்றுவது என்பது போல் இருந்தது தான் வேடிக்கை!
என் நண்பர் ஒருவர் வீட்டுக்குப் போயிருந்தேன்! அங்கிருந்த குழந்தையிடம் உங்க அம்மா பேர் என்ன என்று கேட்டேன். அது மழலை கொஞ்சம் வீவா என்றது! உங்க அப்பா பேர் என்ன, போர்ன்வீட்டாவா என்றேன்! அந்தக் குழந்தை சிரித்துக் கொண்டே அடுப்படியை பார்த்தது! உடனெ அவன் அம்மா, நீ போர்ன்வீட்டா என்று சொன்னதால் அதை பார்க்கிறது என்று சொன்ன பிறகு தான் எனக்கு விஷயம் புரிந்தது! அம்மாவுக்குத் தான் குழந்தைகள் சொல்ல நினைப்பதை சரியாய் சொல்ல முடிகிறது!

சமீபத்தில் எங்கள் வீட்டில் எல்லா குழந்தைகளும் விடுகதைகள் சொல்லி விளையாடிக் கொண்டிருந்தோம். என் மாம மகனுக்கு அவனுக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கலாம்! கவனித்துக் கொண்டே இருந்தவன் பெரியவர் சிறியவர் அனைவரையும் பார்த்து நான் ஒன்று கேட்கிறேன் என்று சொல்லி கீழிருக்கும் கேள்வியை கேட்டான்.
3 திருடர்கள் ஒரு வீட்டில் திருட போகிறார்கள்! அங்கு இருக்கும் இரண்டு செக்யூரிட்டிகளும் தூங்கிக் கொண்டிருக்கும் போது மூன்று பேரும் உள்ளே நுழைந்து விடுகிறார்கள்! அவர்கள் திருடி விட்டு வெளியே வரும் போது இரண்டு செக்யூரிட்டிகளும் விழித்து விட்டார்கள்! அவர்கள் மூவரும் எப்படித் தப்புவார்கள்?

அந்தப் பையனின் அக்கா இப்படி ஒரு விடுகதையே இல்லை, இவனாய் ஏதோ உளருகிறான் என்றாள். சரி என்ன தான் சொல்கிறான் பார்க்கலாம் என்று எங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு அவனிடமே பதிலை சொல்லச் சொல்லி பணித்தோம். அவன் தெனாவட்டாய் சொன்ன பதில்...
மூன்று பேரில் ஒருவன் மட்டும் செக்யூரிட்டிகள் பார்க்கும் படி தப்பி ஓடுவான், செக்யூரிட்டிகள் அவனைப் பிடிக்க ஓடும் போது மற்ற இருவரும் தப்பி விடுவார்கள் என்றான்! சரி அந்த ஒருவனின் கதி என்னடா ஆனது என்று எல்லோரும் ஆவலாய் அவனை பார்க்க...அவன் சாவகாசமாய்....அவன் செத்து ஒழிவான்! அதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்றான் புன் சிரிப்புடன்! அதோடு நில்லாமல், ஒன்றை இழந்தால் தான் இன்னொன்றை பெற முடியும்! என்று ஒரு தத்துவத்தை வேறு உதிர்த்தான்! ஐந்தே வயது...நாங்கள் வாயடைத்துப் போனோம்! அம்மா அப்பா வேலைக்குப் போயிருந்த சமயத்தில் இணையத்தில் கேம்ஸ் விளையாடி அந்த மாதம் மட்டும் 2000 ரூபாய்க்கு ஆப்பு வைத்திருக்கிறான்! இது ஒரு புறம் பெருமையாய் இருந்தாலும் மற்றொரு புறம் அவர்களின் வேகத்தைக் கண்டு பயமாய்த் தான் இருக்கிறது! அதனால் என் மாமா அந்த வசதியையே நிறுத்தி விட்டார்!

சிவாஜி படம் வந்த புதிதில், என் நண்பியின் மகன் காக்கா பர பர விளையாடுவோம் என்று அழைத்தான்! உயிருள்ள பொருள்களின் பெயரைச் சொன்னால் இரு கைகளையும் பறப்பது போல் செய்ய வேண்டும்! உயிரற்ற பொருள்களின் பெயர்களைச் சொன்னால் கைகளை ஆட்டாமல் இருக்க வேண்டும்! இது தான் விளையாட்டின் விதிமுறை. உயிருள்ளவற்றின் பெயர்களையும், உயிரற்றவற்றின் பெயர்களையும் மாறி மாறி அவன் சொல்லச் சொல்ல நானும் அதற்கேற்ப கைகளை அசைத்துக் கொண்டிருந்தேன்! திடீரென்று தன் பெயரை சொன்னான்! நானும் கையை ஆட்டினேன்! நான் கையை ஆட்டியதும் சற்றும் எதிர்பார்க்காமால் அவன், "பேரைக் கேட்டா சும்மா அதிருதுல்ல!!" என்றானே பார்க்கலாம்!

சமயம் கிடைத்தால், இல்லை சமயத்தை ஏற்படுத்திக் கொண்டு நீங்களும் கொஞ்ச நேரம் குழந்தைகளிடம் பேசிப் பாருங்களேன்!
எல்லோருக்கும் என் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
2 Responses
  1. "kaaka parapara" sema creative.. antha payyan romba sharp.


  2. ellam namma subashini payyan thaan! hope u know her!