31ம் ஆண்டின் புத்தக கண்காட்சிக்கு நேற்று சென்றிருந்தேன்! புத்தக கண்காட்சிக்குப் புறப்படும் உங்கள் எல்லாருடைய மனதிலும் எழுந்த கேள்வி என் மனதிலும் எழுந்தது! அது தான்..."போன புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களை எல்லாம் படித்துக் கிழித்து விட்டாயா?" இதற்கு நீங்கள் செய்ததைத் தான் நானும் செய்தேன்! இந்த வருடமும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றேன். எந்த புத்தகத்தைத் தேடும் நோக்கத்துடனும், வாங்கும் ஆவலுடனும் நான் செல்லவில்லை! இருந்தும் ஒரே ஒரு காந்தி நோட்டு (500) கொடுத்து பல விதமான மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் வாங்கி வந்திருக்கிறேன்...

நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்:

1. மணலின் கதை (கவிதை) - மனுஷ்யபுத்திரன் - உயிர்மை
2. கடவுளுடன் பிரார்த்தித்தல் (கவிதை) - மனுஷ்யபுத்திரன் - உயிர்மை
3. எப்போதும் வாழும் கோடை (கட்டுரை) - மனுஷ்யபுத்திரன் - உயிர்மை
4. கடைசி டினோசர் (கவிதை) - தேவதச்சன் - உயிர்மை
5. பனிமுடி மீது கண்ணகி (சிறுகதை, குறுநாவல்) - எம். வீ. வெங்கட்ராம் - காலச்சுவடு
6. வேள்வித் தீ - எம். வீ. வெங்கட்ராம் - காலச்சுவடு

[இவரின் "காதுகள்" நாவல் கிடைக்கவில்லை]

உயிர்மை பதிப்பகத்தில் கவிதைகளும், கதைகளும், கட்டுரைகளும் குவித்திருந்தார்கள்! மனுஷ்யபுத்திரனின் கவிதைகளில் எனக்கு ஒரு மயக்கம்! பல கவிதைகள் புரிவதில்லை என்றாலும், அவரே சொல்வது போல் புரியாத கவிதைகள் எனக்கான கவிதைகள் அல்ல என்று அடுத்த கவிதைக்குத் தாவி விடுவேன்! "என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்" என்ற அவர் தொகுப்பை வாங்கி விடுவது என்று நினைத்தேன்! என் துரதிருஷ்டம் அது கிடைக்கவில்லை. அது இருந்திருந்தால் அந்த ஒன்றை மட்டும் வாங்கியிருப்பேன். இல்லாததால் நான்கு புத்தகங்களை வாங்கி விட்டேன்.

அதிலும் என் அதிர்ஷ்டம், நான் உயிர்மையில் நுழைந்ததும் மனுஷ்யபுத்திரனும் அங்கு வந்தார். ஏற்கனவே தேசிகனுடன் அவரை அவர் இல்லத்தில் ஒரு முறை சந்தித்திருந்தாலும், அதை அவரிடம் சொல்லி அவர் நினைவுத் திறனை சோதித்து தர்ம சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம் என்று தான் நினைத்தேன்! மறுபடியும் என் அதிர்ஷ்டம், கடையில் இருப்பவர் ஒருவர், அவராய் சமீபத்தில் வெளியான சில புத்தகங்களைப் பற்றி எடுத்துக் கூறி நீங்கள் தேர்ந்தெடுங்கள், இந்த புத்தகத்தில் மனுஷ்ய புத்திரனின் ஆட்டோகிராஃப் வாங்கி வருகிறேன் என்று நான் எடுத்த ஒரு புத்தகத்தை எடுத்துச் சென்று விட்டார். அட, இது நல்லா இருக்கே என்று அவரைப் பின் தொடர்ந்தேன்.

அவர் மனுஷ்யபுத்திரனிடம் என்னைக் காட்டி எனக்கு கையெழுத்திட்டுத் தருமாறு கூறியவுடன், சரி இத்தனை தூரம் வந்து விட்டோம், "என்னைத் தெரியுதா? அன்னைக்கு பஸ்ல கண்டெக்டர் என்னோட இருபத்தைஞ்சு பைசாவையும் சேர்த்து ஐம்பது பைசாவா உங்ககிட்ட கொடுத்து உங்ககிட்ட வாங்கிக்கச் சொல்லிட்டார், ஆக்சுவலி நீங்க எனக்கு கடன் பட்டவர்" என்று ஒரு மறத் தமிழனைப் போல் தேசிகனுடன் அவர் வீட்டுக்கு வந்ததை ஞாபகப்படுத்தி அசடு வழிந்தேன்! நான் எதிர்பார்த்த அளவுக்கு அவர் நெளியாமல் முகம் மலர்ந்தார்! மேலும், எங்கே என் பெயர் என்னன்னு சொல்லுங்க பார்ப்போம் என்றெல்லாம் சொல்லி இன்னும் அவரை கொடுமைப்படுத்தாமல் நான் என் பெயரைச் சொன்னதும் அதை எழுதி ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்தார்!

படுக்கையறையில் ஒளிந்திருப்பவர்களை கண்டுபிடித்தாரோ இல்லையோ தெரியவில்லை...அவரின் கவிதைகளில் இரண்டு சாம்பிள்...

இழந்த காதல்

நின்று சலித்த என் தோட்டத்து மரமொன்று
பின்னிரவில்
என் பிரியத்தின் இதம் வேண்டி
மெல்லப் படியேறி வந்தது

மரங்கள் நடப்பது சாத்தியமில்லையென அறிந்திருந்ததால்
ஒரு விபரீதக் கனவென்று திகைத்து
வரவேற்கத் தாமதித்துவிட்டேன்

ஆயிரம்
இலை நுனிகளால்
வேர் நுனிகளால்

புறக்கணிப்பின் துக்கம் ததும்பி
படியிறங்கிப் போகிறது
என் தோட்டத்து மரம்

அந்த இடம்

போகும்போது
உன்னுடன் கொண்டு
வந்த எல்லாவற்றையும்
எடுத்துக் கொள்கிறாய்

ஆனால்
அந்த இடம் மட்டும்
அப்படியே எஞ்சிவிடுகிறது

நீயும் கொண்டு வராத
ஏற்கனவே இருந்துமிராத
அந்த இடம்.

[coutesy: andhimazhai]

STAND UP!


[courtesy: http://www.taarezameenpar.com/]

இந்தப் படத்திற்கு விமர்சனம் என்ற பெயரில் நான் எந்த அபத்தத்தையும் செய்யப் போவதில்லை. நீங்கள் "ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா" அளவுக்கு இந்தியில் புலமை பெற்றிருந்தாலும் நான் சொல்வது ஒன்றே ஒன்று! "பாருங்கள், தயவுசெய்து கண்டிப்பாய் பாருங்கள்!" உங்கள் பாராட்டுக்களை இங்கே சொல்லுங்கள். [நானும் 4 வருஷமா ப்ளாக் எழுதுறேன், பேசாம அமீர் கானா பொறந்துருக்கலாம், ஸ்வபா, எத்தனை பின்னூட்டங்கள்! ]

இல்லங்களில் பொங்கல் பொங்க
உள்ளங்களில் இன்பம் பொங்க
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!
5 Responses
 1. Anonymous Says:

  Disappointing post; 'எவனோ ஒருவன்' பார்த்தாயா? 'ஒன்பது ரூபாய் நோட்டு' பார்த்தாயா? குறைந்தபட்சம் மக்கள் தொலைக்காட்சியில் ஈரானிய படங்களை ஒளிபரப்பு செய்கிறார்களே? பார்த்தாயா?


 2. வெங்கடேஷ்,

  இதில் டிஸ் அப்பாய்ன்ட் ஆவதற்கு என்ன இருக்கிறது? நீ சொன்ன எல்லாவற்றையும் பார்த்தேன்! எவனோ ஒருவன், என்னை அந்த அளவுக்கு ஒன்றும் பாதிக்கவில்லை...ஒன்பது ரூபாய் நோட்டும் அப்படித் தான்...வாழ்க்கையை படம் எடுப்பது மிக முக்கியமானது தான்..அதை இன்னும் நன்றாய் எடுக்கலாம்! பருத்தி வீரனும் வாழ்க்கை தான்...அப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்...


 3. "Thare zameen par"...there is no words to explain..each and everyone shud see and know thru this movie that all kids are special..


 4. gayathri,

  vaanga vaanga! enga aalaye pakka mudiyalai...i agree! thats why vimarsanam ellam pottu arukkaama makkalukke vittuten :)


 5. Vetirmagal Says:

  It was a touching movie,evoking tender emotions for the child, Amir and the script. Tears welled up in eyes , even though viewed number of times.

  May be I am senti person, but such sentiments do not recur when one watches the recent ( say 8 years) Tamizh/ Telugu movies?