இந்தச் சினிமா தான்...
மாதத்துக்கு ஒரு பதிவு போடுவதே இப்போதெல்லாம் பெரும்பாடு ஆகிவிட்டது! வலையுலக நண்பர்களும் ரஜினி மீது ரசிகர்கள் நம்பிக்கை இழந்தது போல் என் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள்! என்னடா எழுதுவது என்று முழித்துக் கொண்டிருந்தேன்...இதோ, கிடைத்து விட்டது...பிச்சைப் பாத்திரத்தின் வழியே ஒரு பதிவுப் பிச்சை :)
எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
நான் பார்த்த முதல் படம் ப்ரியா என்றும், அதனால் தான் இப்படி ரஜினி பைத்தியம் பிடித்துத் திரிகிறேனோ என்றும் என் அம்மாவுக்கு அடிக்கடி சந்தேகம் வருவதுண்டு! ப்ரியா வெளி வந்த வருடத்தை வைத்து கணக்கிட்டால் 1 அல்லது 2 வயதில் படம் பார்க்க ஆரம்பித்து விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்!
கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
ரொம்ப கடைசியும் இல்லாமல் ரொம்ப கிட்டத்திலும் இல்லாமல் நடுநாயகமாக உட்கார்ந்து பார்த்தது...ஏகன்! [அஜீத்தே வந்து கூப்பிட்டாலும் போயிடாதீங்கோ மக்கா!]
கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சுப்ரமணியபுரம்! மதுரையிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் இப்படி ஒரு புரத்தை நான் கேள்விப்பட்டதே இல்லை...மதுரையில் இப்படியும் ஒரு இடம் இருக்கிறதா? அங்கு இப்படியும் மக்கள் வாழ்கிறார்களா என்று வியந்தேன்! படத்தை ஆஹா ஓஹோ என்று புகழும் அளவிற்கு பெரிதாய் ஒன்றும் இல்லை என்றே தோன்றியது! ஸ்வேதா தேடிக் கொண்டே வரும்போது ரேடியோவில் ஒலிக்கும் சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும் என்று ரெக்கார்ட் ப்ளேயரில் ஒலிக்கும் இடம் அருமை. அந்தப் பாட்டை அந்த ஒரு காட்சியில் கேட்பதற்குக் கூட எத்தனை அற்புதமாய் இருக்கிறது! ராஜாவுக்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப், அதை சரியாய் படத்தில் பயன்படுத்திக் கொண்ட சசிக்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப்!
2008 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று "கண்கள் இரண்டால்", இப்படி ஒரு பாட்டை இசை அமைத்த ஜேம்ஸ் வசந்தன் அமைதியாய் மக்கள் தொலைக்காட்சியில் தமிழ் பேசு தங்கக் காசு நடத்திக் கொண்டிருக்கிறார்! அவரை பத்திரிக்கைகளும், டீவியும் எப்படி பேட்டி எடுக்காமல் விட்டு வைக்கிறது என்று வியந்தேன்? [ஒருவேளை அவர் கொடுத்தும், நான் தான் பார்க்க தவறி விட்டேனோ?]
உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
பாலுமகேந்திராவின் சந்தியா ராகம்! [இந்த ஒரு படம் தான் மெளன மொழி விளையாடும் போது என் நண்பன் என்னன்னவோ செய்தும் என்னால் சொல்லவே முடியவில்லை!] ஒரு முதியவரின் மகிழ்ச்சி, சோகம், கோபம், விரக்தி, குறும்பு, பயம் அத்தனையையும் ஒரு ஜன்னலின் வழியே நாம் பார்ப்பதை போல பாலு அவர்கள் படத்தை மிக அழகாக நகர்த்தியிருந்தார்! சொக்கலிங்க பாகவதரின் நடிப்பை சொல்லவா வேண்டும்? பாலுவைத் தவிர இவரை ஏன் யாருமே கண்டு கொள்ளவேயில்லை?
1. ஆற்றில் குளித்து விட்டு வரும் வழியில் தெருவில் குழந்தைகள் நொண்டி விளையாடிச் சென்ற கட்டங்களை பார்த்ததும் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அதில் நொண்டி ஆடும் இடத்தில் குறும்பு.
2. பட்டணத்தில் குழந்தை ரோட்டில் விற்கும் பண்டங்களை வாங்கித் தந்து அவளுக்கு நோவு வந்து அர்ச்சனாவிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் இடத்தில் இயலாமை!
3. முதியோர் இல்லத்தில் தன்னை பார்க்க வந்த அர்ச்சனாவை எல்லோருக்கும் அறிமுகம் செய்யும் போது ஒரு பாட்டி "யாரு புதுசா வந்துருக்குற டாக்டர் அம்மாவா?" என்று கேட்டவுடன், என் மருமவ என்னை ஆசையா பாக்க வந்துருக்கு...உனக்கு யாரை பாத்தாலும் டாக்டர் அம்மா தான்...எனும் இடத்தில் பெருமை!
4. அர்ச்சனாவிற்கு இன்னொரு குழந்தை பிறந்திருக்கிறது என்று கேள்விப்பட்டதும் ஓடிச் சென்று அந்தக் குழந்தையின் கையில் தன் விரலை வைத்ததும் அந்த இரு கைகளையும் க்ளோஸப்பில் காட்டும் இடம் கவிதை...
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!படத்தை பார்த்து விட்டு சொல்லுங்கள்!
உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
தமிழ்நாட்டில் சினிமாவின் தாக்கம்! ஒவ்வொரு பயணத்தின் போதும் இதை நான் உணர்கிறேன்! ஏதோ ஒரு குக்கிராமத்தில், ஏதோ ஒரு முட்டுத் தெருவில் "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க" என்ற வாசகம் இன்னும் மிச்சமிருக்கிறது! நேற்று வந்த கதாநாயகன் படம் தீபாவளி அன்று வராததற்காக வருத்தப்பட்ட்டு போஸ்டர் அடிக்கும் கூட்டம் இன்றும் இருக்கிறது!
இன்றும் வருடம் தவறாமல் முரளிக்காக (மன்னிக்க! கடவுள் முரளிக்காக) போஸ்டர் அடிக்கும் கே.கே. பெருமாளை மதுரை வாசிகள் யாரும் மறந்து விட முடியாது! அப்படி என்ன தான் முரளி அவருக்கு செய்திருப்பார் என்று நான் வியந்ததுண்டு!
நேற்று கூட பம்மல் செல்லும் வழியில் ஒரு குறுகிய தெருவில் ஒரு அழுக்கான டெய்லர் கடை போர்டில் பியர்ஸ் ப்ராஸ்னன் சிரிக்கிறார்! அங்கு எத்தனை பேருக்கு அவரை தெரியும்? ஏன் அந்த இடத்தில் அவர் படத்தை வரைய வேண்டும்? பியர்ஸ் ப்ராஸ்னனுக்கும் பம்மலில் இருக்கும் ஒரு குறுக்குச் சந்தில் வாழும் டெய்லருக்கும் என்ன சம்மந்தம்?
இவர்களுக்காக அவர்கள் அப்படி என்ன செய்து விட்டார்கள்?
தன் மேல் வந்து விழுந்தவர்களை தள்ளி விட்டு, "கொஞ்ச நேரம் சிரிக்க வைத்ததற்காகவா இத்தனை அன்பு? இத்தனை ஆர்ப்பாட்டம்? அப்படியென்றால் உலகம் இத்தனை கீழ்த்தரமானதாகவா இருக்கிறது?" என்று சாப்ளீன் எண்ணி வியந்தது எத்தனை உண்மை!
இதை யோசிக்கும் போதெல்லாம் என் அனைத்து கேள்விக்குறிகளும் ஆச்சர்யக்குறிகளாய்த் தான் முடிகிறது!
உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
இளையராஜா! இவர்தான் என்னைத் தாக்கிய மிகப் பெரிய தொழில் நுட்பம்! வள்ளியில் வரும் என்னுள்ளே என்னுள்ளே பாட்டில் சரணத்தில் எத்தனையோ இசையின் மத்தியில் ஒரு சின்ன குழல் ஓசை கேட்கும்! மிக அற்புதமான ஒரு ஒலி அது! இந்த இடத்தில் இதை சேர்க்க வேண்டும் என்று இவருக்கு எப்படித் தோன்றும்? இது இல்லாவிட்டால் பாட்டு கெட்டு விடுமா? இப்படி எத்தனை பல்லவிகள்? எத்தனை சரணங்கள்? எத்தனை படங்கள்? அதுவும் தீபாவளி என்றால் சொல்லவே வேண்டம்! கிட்டத்தட்ட 10 படங்கள் இவர் இசையுடன் வரும், அதில் அத்தனையும் ஹிட்!
எனக்குத் தெரிந்து இளையாராஜா தான் பல்லவிக்கும் முதல் சரணத்திற்கும் நடுவே ஒரு இசையும், பல்லவிக்கும் இரண்டாம் சரணத்திற்கும் இடையே மற்றொரு இசையும் கொடுப்பதில் வல்லவர்! [இதை இசையின் மொழியில் எப்படிச் சொல்வார்கள் என்று தெரியவில்லை, மன்னிக்கவும்!] அந்த இடத்தின் இசையை வைத்தே அது என்ன பாட்டு என்று சொல்லி விடலாம்!
அப்புறம், மணிரத்னம் படங்களின் ஒளிப்பதிவு, அவர் ஒவ்வொரு சீனிலும் ஃப்ரேம் செட் செய்யும் நேர்த்தி! அதே ஒளிப்பதிவாளர்களை செய்த வேறு படங்களில் அந்த நேர்த்தி காணப்படுவதில்லை என்பது என் அபிப்ராயம்! உங்க நாயனத்துல தான் அப்படி சத்தம் வருதா இல்லை எல்லா நாயனத்திலும் அதே சத்தம் தான் வருதாங்கிற மாதிரி...எப்போதுமே ஒரு சந்தேகம்!
ஏ.ஆர். ரகுமானைப் பற்றி நண்பர்கள் சொல்லி விட்டார்கள்! அதனால் அடங்கிக் கொள்கிறேன்...
அது எப்படி சிலர் மட்டும் இப்படி வரம் பெற்றுப் பிறக்கிறார்கள்? எனக்குப் புரியவில்லை!
தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
யாரை மேன் கேட்கிறாய்? [இது என்ன படம் சொல்லுங்க?] கமலாஹாசன் பேட்டியும், கம்ப்யுட்டர் சயின்ஸ் பரிட்சையும் இருந்தால், முதலில் கமலாஹாசன், பிறகு தான் கம்ப்யுட்டர் சயின்ஸ்!
தமிழ்ச்சினிமா இசை?
பாஸ்! [இளையாராஜா பத்தின பத்தியை படிங்க!]
தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
தமிழ்நாட்டில் ஹிந்தி எதிர்ப்பையும் மீறி, என் சுய வெறுப்பையும் மீறி கொஞ்சமாய் ஹிந்தி தெரிந்து கொண்டதால் அந்த படங்களை பார்ப்பதுண்டு. சமீபத்தில் ஹிந்தியில் மிகவும் தாக்கிய படங்கள்,
தாரே ஜமீன் பர்
லகே ரஹோ முன்னா பாய்
கணினிப் பொறியாளர்களின் வீக்யெண்ட் கலாச்சாரத்தில் நானும் கலந்து விட்டதாலும், பசித்தவனுக்கு ரேஷன் கார்டு, ரசிப்பவனுக்கு டிவிடி லைப்ரரி மெம்பர்ஷிப் கார்டு என்று ஆகிவிட்டதால் கொஞ்சமாய் மற்ற மொழிப் படங்களும் பார்ப்பதுண்டு! தாக்கிய படங்கள்...
ஃபோன் பூத்
பதேர் பாஞ்சாலி
சில்ட்ரன்ஸ் ஆப் ஹெவன்
அபோகலிப்டோ
ரன் லோலா ரன்
கேஸ்ட் அவே
தி டெர்மினல்
ஃபாரஸ்ட் கம்ப்
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்...
தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இல்லை! ஒன்றுமில்லை! மிகவும் பிடிக்கிறது! கண்டிப்பாய் செய்வேன்! என்னால் நிச்சயமாய் மேம்படுத்த முடியும். அப்படி மேம்பட உதவினால் என்னை சினிமாவில் சேர்த்து விடுவீர்களா?
அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
தீபாவளிக்கு படம் வராததற்கே போஸ்டர் அடிக்கும் கூட்டம்! இதில் சினிமாவே இல்லையென்றால் ஆந்திராவில் பல விவசாயிகளுக்கு ஏற்பட்ட கதி தான் தமிழர்களுக்கு ஏற்படும் என்று நினைக்கிறேன்!