கேங்க்ஸ் ஆஃப் வசைபூர் பார்த்தேன். அற்புதமான படம். ஹிந்தி சினிமா இஷ்க், பியார், மொஹப்பத்திலிருந்து வெகு தூரம் வந்து விட்டது. கரண் ஜோஹர், யஷ் சோப்ரா வகையறாக்கள் இருந்தாலும், விஷால் பரத்வாஜ், அனுராக் காஷ்யப், திபாகர், போன்ற இளம் இயக்குனர்கள் கவனம் கவர்கிறார்கள். எந்த வித அசிங்கத்தை காட்சிப்படுத்தவும் இவர்கள் தயங்குவதில்லை. அனுராக் தான் ராம் கோபால் வர்மாவின் சத்யா படத்திற்கு ஸ்க்ரிப்ட் எழுதியவர். பீக்கு மாத்ரேவாக உலா வந்து எல்லோர் கவனத்தையும் ஈர்த்த மனோஜ் பாஜ்பாய்க்கு மறுபடியும் இந்தப் படத்தில் ஒரு லைஃப் டைம் ரோல் கொடுத்திருக்கிறார்.

"க்யூன்க்கி சாஸ் பி கபி பகு தி" என்ற ஸ்டார் ப்ளஸ்ஸில் வந்த பிரபலமான குடும்ப மெகா சீரியல் டைட்டில் கார்டுடன் படம் தொடங்குகிறது! கேமரா மெல்ல ஜூம் அவுட் ஆனதும் அது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பது தெரிகிறது. ஒரு சின்ன கடையில் சுற்றிலும் ஆண்களும், பெண்களும் நின்று அதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது திடீரென்று துப்பாக்கி குண்டுகள் பட படவென்று சுவரெங்கும் தெறித்து விழுகின்றன! இப்படித் தான் ஆரம்பிக்கிறது அனுராக் காஷ்யப்பின் "கேங்க்ஸ் ஆஃப் வசைபூர்" திரைப்படம். ஊர் பெயர் சரியாகத் தான் பொருந்தி இருக்கிறது! படம் எங்கும் ஒரே வசை தான்!

வசைபூர்  என்னும் உண்மையான ஊரில் வம்சாவழியாய் தொடரும் பழி, துரோகம், வன்மம், பகை இவற்றை கொஞ்சம் உண்மை, கொஞ்சம் கற்பனை கலந்து மிக அசிங்கமாய் [அதாவது அப்பட்டமாய்!] படம் பிடித்துக் காட்டி இருக்கிறார் அனுராக். இது முதல் பகுதி தான். இதன் இரண்டாம் பகுதி தயாராகிக் கொண்டிருக்கிறது. முதல் பகுதியே பட்டையை கிளப்பி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அனுராக் எப்படிப்பட்ட படங்களை எடுப்பார் என்று உங்களுக்குத் தெரிய வேண்டும் என்றால் நான் இரு உதாரணம் சொல்கிறேன். சுப்ரமணியபுரம் படம் பார்த்து விட்டு, சசியை கொண்டாடியவர் அவர். நான் கடவுள் பார்த்து விட்டு, இத்தனை காலம் நானும் காசியில் இருந்திருக்கிறேன், எனக்கு இப்படி ஒரு படம் செய்யத் தோன்றவில்லையே என்று அங்கலாய்த்தவர். இப்போது புரிகிறதா? அவர் ஷங்கர், முருகதாஸ் டைப் கிடையாது! பாலா, அமீர் டைப்! இப்போது உங்களுக்கே புரிந்திருக்கும் படம் எப்படி இருந்திருக்கும் என்று!...


வசைபூர் நிலக்கரிச் சுரங்கங்களின் தலைநகரம். நிலச் சுரங்கத்தின் அரசியல், முதலாளி வர்க்கத்தின் சுரண்டல், சந்தர்ப்பவாத மனிதர்கள் என்று இந்த ஊரில் 1941 ல் இருந்து இன்று வரை நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை. என் அம்மாவை கொன்னவனை நான் பழி வாங்காம விட மாட்டேன் என்று அம்மா பிணத்தின் மீது சிவந்த கண்களுடன் சத்தியம் செய்வாரே நம் தமிழ் சினிமா கதாநாயகன், அதே போன்ற கதை தான். ஆனால் இந்தப் படத்தில் அப்படி எல்லாம் எந்த அபத்தமும் செய்யாமல் அமைதியாய் மொட்டை அடித்துக் கொள்கிறான் கதாநாயகன். இப்படி ஒரு சாதாரண கதையில் தான் எத்தனை விதமான முகத்திலறையும் சம்பவங்கள், எத்தனை சுவாரஸ்யமான காட்சிகள்!  தன் தந்தையை கொன்றவனை துப்பாக்கியால் கொல்ல விரும்பவில்லை அவன்! அவனுடனே வளர்ந்து, அவனுக்கு எதிராய் நிமிர்ந்து அவன் இருக்கும் இடத்தில் அவனை விட மிரட்டலாய் ஆட்சி செய்து அவனை அசிங்கப்படுத்த விரும்புகிறான். அது தான் அவன் சபதம்! இது தான் வட்டாரம் படத்தின் கதை என்று இந்தப் படத்தை கேவலப்படுத்தி விடாதீர்கள்!

மனோஜின் மனைவியாய் வருபவர் அசத்தலாய் நடித்திருக்கிறார். ரீமா சென்னை எப்படி இந்தப் படத்தில் போட்டார்கள் என்று தெரியவில்லை. அவருக்கு நிறைய்ய வேலை இல்லை தான். முக்கால் வாசி முதுகு தெரிய வந்து மனோஜின் குழந்தைக்கு தாயாகிறார். ஒரு வேளை அடுத்த பாகத்தில் இவருக்கு வேளை இருக்கிறதோ என்னமோ. கஹானி படத்தில் சிபிஐ அதிகாரியாக வந்து மிரட்டியவர் இந்தப் படத்தில் அப்படியே சாதுவாய் மாறி விட்டார். இவரின் ஆட்டத்தையும் இரண்டாம் பகுதியில் தான் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன். படத்தில் பாடல்கள் ஒவ்வொன்றும் பட்டையை கிளப்புகிறது. "இக் பகல்" என்ற பாடல் பழங்காலத்தில் கிராமஃபோனில் கேட்கும் பாடலை நினைவுபடுத்துகிறது. சத்யமில் பார்த்தது இன்னும் சுகமாய் இருந்தது. இந்தப் படத்தின் அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
சத்யமேவ் ஜெயதே பார்க்கிறீர்களா? இல்லையென்றால் தவறாமல் பாருங்கள். நம் நாட்டில் தான் எத்தனை விதமான பிரச்சனைகள்! அதை பார்க்கும் போது மனது வலித்தாலும், ஒவ்வொரு பிரச்சனையையும் கையில் எடுத்துக் கொண்டு தொடர்ந்து போராடும் ஒரு சிலர் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்களைப் பார்க்கும் போது லேசாய் ஒரு நம்பிக்கை துளிர் விடுகிறது. என்ன ஒன்று, நூறு பேர் தப்பு செய்பவர்களாய் இருந்தால், ஒரே ஒருவர் அதை தவறு என்று சொல்பவராக இருக்கிறார். அரசியல்வாதிகளை சொல்லி புண்ணியமில்லை, மக்களின் மனதில் தான் மாற்றம் வர வேண்டும். நிகழ்ச்சியை பற்றி பல விதமான விமர்சனங்கள் வந்தாலும், என்னை பொருத்தவரை ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு, நன்மை தீமைகளை ஆராய்வது நன்றாய் இருக்கிறது. இறுதியில் இப்படிச் செய்தால் நன்மை விளையும் என்று சில எடுத்துக் காட்டுகளை காட்டுவது நம்பிக்கை விதைக்கிறது. நிகழ்ச்சியை தயவு செய்து பாருங்கள்!
-------------------------------------------------------------------------------------------------------------------------------
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி ஒரு வழியாய் முடிந்து விட்டது. கடைசி எபிசோடில் சிவக்குமார் வந்தார். அவரிடம் ஒருவர், உங்கள் பிள்ளைகளை மிக நன்றாய் வளர்த்திருக்கிறீர்கள் [?] எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்று சொல்லிக் கொடுங்கள் என்றார்! அதற்கு சிவக்குமார் ஒரே வரியில் ஒரு அற்புதமான பதிலை சொன்னார். "நீங்கள் ஒழுக்கமாய் இருங்கள், உங்கள் பிள்ளைகள் தானே வளர்வார்கள்!" மிகச் சரி! நிகழ்ச்சிக்கு வருவோம்; முதல் சீசன் முடிந்தது என்கிறார்கள். சூர்யாவே சொல்வது போல், மாற்றம் ஒன்று தானே மாற்றம் இல்லாதது. அந்த மாற்றத்தில் இவரை தூக்கி விட்டு வேறு யாரையாவது போடுகிறார்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சூர்யா இந்த நிகழ்ச்சியை எடுத்து நடத்தியது ஒரு நல்ல முயற்சி தான். ஒவ்வொரு படமும் வர ஆறு மாதம், ஒரு வருடம் ஆகும் காலத்தில், நான் இன்னும் இங்கு தான் இருக்கிறேன் என்று நம் வீட்டின் வரவேற்பறையில் நடிகர்கள் வந்து உட்கார்ந்து கொள்வது தொலைகாட்சி அவர்களுக்கு அளித்த வரம். அவரே சொல்வது போல், இது ஒரு நல்ல வொர்க் ஷாப் அவருக்கு. ஆனால், நமக்கு எப்படி இருந்தது என்று கேட்டால் அது கேள்வி தான்! நிறுத்தி நிறுத்தி, இழுத்து இழுத்து பேசுவதும், THANK YOU THANK YOU என்று அழுத்தி அழுத்தி உச்சரிப்பதும் எரிச்சலாய் தான் இருந்தது. இந்த மாதிரி நிகழ்ச்சியை நடத்த நல்ல டைமிங் சென்ஸ் மிக அவசியம். கொஞ்சம் விஷயம் தெரிந்திருக்க வேண்டும். அதை சுவாரஸ்யமாய் சொல்லத் தெரிய வேண்டும். பனிரெண்டாம் வகுப்புல எவ்வளவு மார்க் என்று சூர்யா கேட்டதற்கு பின்னால் இருந்த சிவகார்த்திகேயன், "ஏன்பா பனிரெண்டாம் வகுப்பு படிச்சே?" என்பது மாதிரியான நக்கல் மிக அவசியம் :-)! சிவகார்த்திகேயனிடம் அது ஏராளமாய் இருக்கிறது என்பதற்காக அவர் இதை நடத்த முடியாது. இந்த நிகழ்ச்சியை நடத்துபவருக்கு ஒருவித கரிஷ்மாவும் இருக்க வேண்டும்! என்னை பொறுத்தவரை அமிதாப் இதற்கு மிகச்சரியாய் பொருந்தினார். ஷாருக்கும் அமிதாப்பிற்கு இணையானவர் தான் என்றாலும், அமிதாப்பின் நிகழ்ச்சி சோபித்த அளவுக்கு ஷாருக்கின் நிகழ்ச்சி சோபிக்கவில்லை. அது போல் தமிழில் யார் இருக்கிறார்கள் என்று யோசிக்கிறேன்...இன்னும் யோசித்துக் கொண்டு தான் இருக்கிறேன்!
வெண்சங்கு
மயிலிறகு
மோனநிலை
திவ்யம்!
------------------------------------------------------------
பச்சைப்புல்
பரந்த வானம்
பசிக்குச் சோறு
போதும்!
------------------------------------------------------------
ஒரே சத்தம்
ஒரே அமைதி
வழக்கமான இரவு
வாசலில் நிலவு
------------------------------------------------------------
தொட முடியாத வானம்
கால் நனைக்காத நீர்
என்ன வேடிக்கை
------------------------------------------------------------
புல்லில் பனி
வயிற்றில் பசி
அவரவர் எண்ணம்
------------------------------------------------------------
இந்தக் காற்று
எந்த நூற்றாண்டை சேர்ந்தது?
------------------------------------------------------------
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை காசு!
 
என் நண்பன் ஒருவனின் தம்பி இரு மாதத்துக்கு முன் தற்கொலை செய்து கொண்டான்! பொறியியல் கல்லூரியில் கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தான். படிப்பு முடிந்ததும் வேலையும் தயார்! இந்த சமயத்தில் இப்படி ஒரு முடிவு! பரிட்சையில் தோல்வி அடைந்திருப்பான் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு! அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. பிறகு காதல் பிரச்சனை தான் என்றால் அதுவும் இல்லை. பிறகு?
 
வகுப்பில் படிக்கும் நண்பனுடன் ஒரு தகராறு! அந்த நண்பன் இவனிடம் பேச மாட்டேன் என்று சொல்லி விட்டானாம். எத்தனையோ முறை இவன் அவனிடம் கெஞ்சி பார்த்திருக்கிறான் போல் இருக்கிறது. அவன் மசியவில்லை. உன் நட்பே வேண்டாம் போ என்று தூக்கி எறிந்து விட்டானாம். நான் இருக்கும்போது தான் என் அருமை உனக்கு தெரியவில்லை, நான் இறந்த போதாவது தெரிந்து கொள் என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்டான்!
 
நான் முதலில் அவன் இறந்து விட்டான் என்று கேள்விப்பட்டதும் வண்டி ஒட்டி விபத்துக்குள்ளாயிருப்பானோ  என்று நினைத்தேன். அத்தனை வேகமாய் வண்டி ஒட்டுவான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அப்படி எதுவும் நிகழவில்லை. தற்கொலை என்றதும் மிகவும் ஆச்சர்யமாய் இருந்தது. நல்ல துரு துறுவென்று இருந்த பையன். வழக்கம் போலவே, அவன் வீட்டின் கடைக்குட்டி. பயங்கர செல்லம். எப்போதும் அவனுக்கு கேட்டது கிடைத்தது.  மரணமும் அப்படியே!
 
இன்றைய இளைஞர்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை. எல்லாவற்றிலும் வேகம் என்பது ஒரு பக்கம் பிரமிக்க வைத்தாலும் அதே வேகத்தில் தப்பான முடிவுகளையும் எடுத்து விடுகிறார்கள். நிதானம் என்பது துளியும் இல்லாமல் போய் விட்டது. இத்தனை சின்ன விஷயங்களுக்கு எத்தனை பெரிய முடிவு! பரிட்சையில் தோற்றதால் இறப்பவர்களை நினைத்தே எனக்கு எரிச்சலாய் வரும்! நம் நாட்டில் இருப்பதெல்லாம் ஒரு கல்வி முறை, அதில் தோல்வி அடைந்ததால் சாவதா என்று!  ஒவ்வொரு முறை பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு ரிசல்ட் வந்த அடுத்த நாள் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற ரிசல்டும் சேர்ந்தே வருகிறது! என் நண்பர் ஒருவர் சொன்னார், யார் முதல் மார்க் வாங்குகிறார்கள் என்பதை விட, அடுத்த நாள் யார் வீட்டில் அழப் போகிறார்கள் என்று தான் எனக்கு பயமாக இருக்கிறது என்று! எத்தனை உண்மை! தேர்வுக்கு முன்னே, மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் சேர்த்து பள்ளியிலே கவுன்சிலிங் வைக்கலாமே? பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளிடம் எந்த மார்க் எடுத்தாலும் பரவாயில்லை, பார்த்துக் கொள்ளலாம் என்று அவர்களை ஆசுவாசப்படுத்தலாமே? இதனால் தற்கொலைகள் குறையலாமே? நல்ல யோசனை, செய்தால் நலம்! இல்லையென்றால் கன் கேட்டா பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன புண்ணியம்? பரிட்சையில் தோற்றதால் நான் சாக முடிவெடுத்திருந்தால் மாசா மாசம், நான் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும்! பாடமா சொல்லிக் கொடுக்கிறீர்கள், என்று சொல்லி, கடைசி வரை நான் தான் வாத்தியார்களை கொலையாய் கொன்றேன்! 

எனக்கு என்னமோ, நம் வீட்டு குழந்தைகள் நம்மை விட்டு வெகு தூரம் சென்று விட்டது போல் தோன்றுகிறது. பெற்றோர்களிடம் பேசும் குழந்தைகள் அருகி வருகிறார்கள். குழந்தையாய் இருக்கும்போது அவர்கள் தொன தொணத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதோடு சரி, பிறகு சற்று வளர்ந்தவுடன் டீவி, ப்ளே ஸ்டேஷன்,  அப்புறம் எப்போதும் கைபேசியில் நோண்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தனியாய் இருக்கும்போதும் தனியாய் இருப்பதில்லை. தன் நண்பர்களுடன் கலந்துரையாடலில் தான் இருக்கிறார்கள். கைபேசியை இழந்தால் அவர்களின் மூச்சு முட்டுகிறது!  கணினியில் வன்முறையான விளையாட்டுக்கள்! அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களின் முகநூலின் வழி தான் நாம் அறிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. பெற்றோர்கள் அவர்களுக்கு தேவையில்லாமல் போய் விடுகிறார்கள்.  பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை ஒரு கட்டத்துக்கு me நண்பர்களாய் பார்க்கத் தவறி விடுகிறார்கள். கால ஓட்டத்தில், அவர்களுக்கு இளைப்பாறவே நேரம் இருப்பதில்லை, இதில் குழந்தைகளுக்கு எங்கு நேரம் ஒதுக்குவது?  அதனால், நண்பர்கள் கிடைக்க ஆரம்பித்தவுடன் வீடு என்பதே அவர்களுக்கு சத்திரமாய் ஆகி விடுகிறது. பெற்றோர்கள் ஏதாவது கேட்டாலும் ஒரு இரண்டு வரிகளில் ஒரு பதில். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், தங்கள் மகன் மாடியில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறான் என்பதை அவன் நண்பன் வீட்டுக்கு வந்து சொன்ன போது தான் பெற்றோர்கள் தெரிந்து கொள்கிறார்கள் என்றால் என்ன ஒரு கொடுமை! அப்படி என்றால் அவன் அவனுடைய பெற்றோர்களை எந்த இடத்தில் வைத்திருந்திருப்பான்! ஐந்து நிமிடத்திற்கு முன் மேலே சென்ற மகன் நிரந்தரமாய் மேலே செல்லும் அளவுக்கு மனம் வெறுத்துப் போயிருக்கிறான் என்பதை கூட அறிய முடியாத நிலையில் பிள்ளைகள் பெற்றோர்களை வைத்திருக்கிறார்களா?

அமெரிக்காவில் இருந்த என் நண்பனால் விசா பிரச்சனையின் காரணமாக ஈமச் சடங்குக்குக் கூட வர முடியவில்லை!

இன்னொரு கொடுமை, மகனை இழந்த சோகத்தில் அந்தத் தாயும் சென்ற மாதம் இயற்கை எய்தினார்! என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்ல?


 

இன்று ஏதாவது எழுதியே தீர்வது என்று கங்கணம் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். இன்று ஏதாவது ஒன்றை படித்தே தீர்வதே என்று நீங்கள் கங்கணம் கட்டி உட்கார்ந்திருந்தால் இதை படிக்கலாம்!

தினமும் ஏதாவது எழுதலாம் என்று தான் மடிக்கணினியை போடுகிறேன். ஆனால், கணினியை போட்டதும், ஜி மெயில், முகப்புத்தகம், அதில் நண்பர்களுடன் அரட்டை  என்று அழிகிறேன். சொல்லப்போனால் அன்புக்கு நான் அடிமை என்று சொல்வதை போல் அரட்டைக்கு நான் அடிமை! இது இன்று நேற்று வந்த பழக்கம் அல்ல. இணையத்தில் என் வலது கால் வைத்ததும் தொடங்கிய பழக்கம். அப்போது யாஹு, இப்போது யார் யாரோ! டெல்லியில் வேலையில் இருந்த போது, எப்படியாவது கோதுமை நிறத்தில் ஒரு பஞ்சாபி பெண்ணை திருத்தி விட [கரெக்ட் பண்ண] நினைத்தேன்! என்னை அரட்டை குருவாக ஏற்றுக் கொண்டு டில்லி பையன் ஒருவன் என் ஆசிகளுடன் ஒரு ஃபிகரை திருத்தி ஊர் சுற்றினான். நான் கடுப்பாகித் தேடியதில், என் கெரகம் வந்து மாட்டியதெல்லாம், நம் தமிழ்நாட்டு பெண்கள் தான். எல்லோரும் என்னை திருத்தி விட்டார்கள் [இது மேல் சொன்ன திருத்தல் அல்ல!]  அவர்களை கூட்டிக் கொண்டு ஊர் சுற்ற முடியவில்லையே தவிர, அவர்களில் சிலருடன் இன்றும் நல்ல நட்பில் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. [நான் நல்ல பையங்க!] (வாய்ப்பு கிடைக்கிற வரை எல்லா பயலும் நல்ல பயங்க தான்!!)

அப்போது யாஹு ஒன்றை வைத்தே அந்த அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன். இப்போது நினைத்தாலும் ஒரே கிளுகிளுப்பாய் இருக்கிறது. நாள் பூராவும் யாஹுவில் அரட்டை அடிப்பேன். எத்தனை பெண் நண்பர்கள் என்று எனக்கே தெரியாது! என் கூடவே வேலை பார்த்த ஒருவன், ஒரு பெண் பேரை வைத்துக் கொண்டு சில நாள் என்னை கலாய்த்தான். அப்போதாவது திருந்துவேன் என்று அவன் நினைத்திருப்பான். அரட்டையில இதெல்லாம் சாதரணமப்பா என்பது போல் துடைத்து போட்டுக் கொண்டு மெயின்டைன் செய்தேன்! யாஹூக்கே அப்படி என்றால்,  இப்போ என்னடா என்றால் ஜி டாக் [நாய் அல்ல!], முகப்புத்தகம், ஸ்கைப், கூகுள் ப்ளஸ் என்று எல்லாவற்றிலும் அரட்டை ஆரம்பமாகிவிட்டது. இன்விசிபில் மோடில் இருந்தாலே எட்டு பேர் பேசுகிறார்கள்! ம்ம்...அது வாலிப வயசு என்பதால் அப்படி அலைந்தேன் [அதுவும் குறிப்பாய் டெல்லியில் அலைந்ததால்...ஹிஹி...]! சில நாட்களில் சி, சி, இந்த பழம் புளிக்கும் கதையாய் ஆன பிறகு அதை எல்லாம் மூட்டை கட்டி வைத்தாயிற்று! இப்போது திடீரென்று அந்தக் கொம்பு முளைத்தது! இந்தக் காலத்து பசங்க [நான் எந்தக் காலம்! அய்யோ, வயசாயிடுச்சே!]  எப்படி அரட்டை அடிக்கிறார்கள், எந்த சைட் ஹிட் என்று பார்க்க நினைத்தேன். கூகுளிடம் குலைந்தேன். சேட் [அரட்டை] என்று நான் போட்டதும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் [மறுபடியும் ஒரு அடைப்புக்குறியா! முருகா..] "chat with strangers" என்று அதுவே சொல்லிக் கொடுத்து இங்கு போ என்றது!  அட இதை இதை தானே நான் எதிர்பார்க்குறேன் என்று அது சொன்ன லிங்கில் க்ளிக்கினேன். அந்த லிங்க் www.omegle.com

வழக்கமாய் பெரும்பான்மையான அரட்டை இணையதளங்கள் எல்லாம் உங்களை தங்களுடைய இணையதளத்தில் சேரச் சொல்வார்கள். அதற்கு உங்கள் ஜாதகம் வரை கேள்வி கேட்பார்கள். அதிலேயே நமக்கு பாதி தாவு தீர்ந்துவிடும். பிறகு தான் உள்ளே விடுவார்கள். இன்னும் சில, ஒரு நிக் நேம் வைத்துக் கொண்டு பேசு என்பார்கள். சரி இது பரவாயில்லையே என்று செட் செய்து உள்ளே நுழைந்தால் எல்லாம் பொது அறைகள் [பப்ளிக் ரூம்ஸ்] தான் இருக்கும். வழக்கமாய் அங்கு வருபவர்கள் அவர்களுக்குள் பேசிக் கொள்வார்கள். நம்மை ஒருத்தன் கூட சீண்ட மாட்டான்! அட சை, என்றும் நாமும் பீலிங்காகி யு ட்யுபில் ஷகீலா படம் பார்த்து விட்டு தூங்கி விடுவோம்! இந்த omegle ல் விசேஷம் என்னவென்றால் உள்ளே போனதும், உனக்கு எந்த மாதிரியான விருப்பங்கள் என்று சொல்லு என்று கேட்கிறார்கள். அதை கூட நீங்கள் கொடுத்தால் கொடுக்கலாம், இல்லையென்றால் அப்படியே அரட்டையை ஆரம்பிக்கலாம். அப்படி நீங்கள் கொடுத்தால் உங்களை போல அதே விஷயத்தில் விருப்பமானவரை உங்களுடன் பேச வைக்கும். அது ஆனாய் இருக்கலாம், உங்கள் முன்னோர் புண்ணியம் செய்திருந்தால் பெண்ணாகவும் இருக்கலாம், உங்கள் முன்னோர் பாவம் செய்திருந்தால் பெண் என்று ஆண் ஒருவன் போய் சொல்லி உங்களை கலாய்க்கலாம்!! ஒரு வேலை பெண்ணே இருந்தால், அப்புறம் அப்படியே மானே, தேனே, பொன்மானே என்று போட்டுக் கொள்ள வேண்டியது தான். இங்கு இன்னொரு விசேஷம் என்னவென்றால் வெறும் பேச்சோடு நிற்காமல் வீடியோ அரட்டை வசதியும் உண்டு.

முதலில் வெறும் அரட்டையில் நுழைந்தால், இந்தத் தளமே தோராயமாய் ஒருவரை உங்களுக்கு அறிமுகம் செய்கிறது. அதாவது, இப்போது உங்களுடன் ஒரு அன்னியர் இருக்கிறார். பேசுங்கள் என்று சொல்கிறது. உங்களுக்கு அவர் அன்னியர், அவருக்கு நீங்கள் அன்னியர். முக்கால் வாசி பேர் முதலில் கேட்பது A S L அதாவது A என்றால் ஏஜ் - வயது, S என்றால் செக்ஸ் - பாலினம், L என்றால் லொக்கேஷன் - இருப்பிடம். இது தான் அரட்டையின் அரிச்சுவடி. பரவாயில்லை, நான் பேசும் நாளிலிருந்து அது வழக்கொழிந்து போகாமல் இன்னமும் இருக்கிறது. மற்ற அரட்டை இணையதளங்களில் யார் இருக்கிறார்கள் என்று நீங்கள் பார்க்க முடியும். நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும். ஆனால், இங்கே அந்த வேலையை இணையதளமே செய்கிறது! அது தான் இந்த இணையதளத்தின் சிறப்பு! இந்த ஐடியா எனக்கு மிகவும் பிடித்தது. உலகின் எந்த மூலையில் இருந்து ஒருவர் பேசப் போகிறார் என்கிற உணர்வே எதிர்பார்ப்பை கூட்டுகிறது ஒரு வேளை பெயர் எதுவும் வராமல் வெறும் அன்னியர் என்று தோன்றுவதால் அத்தகைய எதிர்பார்ப்பு ஏற்படுகிறதோ என்னமோ! இணைய தளத்தின் சிறப்பு, இதை மிக எளிமையாய், அழகாய் வடிவமைத்திருக்கிறார்கள். நீங்கள் பேசிக் கொண்டுருக்கும் நபர் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இரண்டு முறை "எஸ்கேப்" பட்டனை அழுத்தினால் அந்த நபர் உங்கள் வாழ்க்கையிலிருந்தே அவுட்! மீண்டும் அவரை நீங்கள் சந்திக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. அடுத்த நபர், அடுத்த நபர் என்று உங்களுக்கு பிடிக்கும் வரை பேசிக் கொண்டே இருக்கலாம்! நல்ல டைம் பாஸ்! இதில் பேசும்போது தான் உலகம் எத்தனை சுருங்கி விட்டது என்று தோன்றுகிறது! எனக்கு இந்த இனையதளம் மிகவும் பிடித்து விட்டது. இது ஏன் முகப்புதகம் அளவுக்கு பிரபலமாய் இல்லை என்று தோன்றுகிறது. 

இப்போது வீடியோ அரட்டை. 

கவனம், குழந்தைகள், மெல்லிய இதயம் படைத்தவர்கள் முன் முன் இதை திறக்காமல் இருப்பது நல்லது! பயப்படாதீர்கள் வெட்டு குத்து எல்லாம் நடக்கவில்லை!!

மேல் சொன்ன அதே முறை தான் இங்கு அரட்டை அடிப்பதற்கும்! இந்த இணையதளத்தில் தற்சமயம் இணைந்து, வீடியோவில் யார் எல்லாம் இருக்கிறார்களோ அவர்களில் யாரையோ தோராயமாய் உங்களுக்கு காட்டுகிறது. இங்கு தான் காமம் கொப்பழிக்கிறது.  வீடியோவில் இருப்பவர்களில் பாதி ஆண்கள் சுயமைதுனம் செய்த படி அமர்ந்திருக்கிறார்கள்! சிலர் நிர்வாணமாக நின்று கொண்டிருக்கிறார்கள் [பெண்கள் உட்பட!]  சிலர் உறவு கொண்டிருக்கிறார்கள்!! சிலர் தொலைக்காட்சியில் பலான படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!! பலர் வெகு ஜாக்கிரதையாய் தங்கள் முகத்தை காட்டாமல் மறைத்துக் கொள்கிறார்கள். இப்படி பல்வேறு மனிதர்களை பார்க்கையில் பலான படங்களை விட கிக் அதிகமாய் தான் இருக்கிறது :-) அதனால் தான் இணையத்தில் போர்ன் வீடியோவை விட ஸ்காண்டல் வீடியோக்கள் கொடி கட்டிப் பறக்கின்றன! ஆனால் மக்கள் அதைப பற்றி கவலைப்படவேயில்லை. பிடிச்சா பாரு,  பிடிக்கவில்லையா, எஸ்கேப்! 

மனிதன் தன அடையாளத்தை மறைத்துக் கொண்டால் எப்படி எல்லாம் ஆகி விடுகிறான் என்பதற்கு ஒரு உத்தம உதாரணம் இந்த இணையதளம்!  என்னை பொறுத்தவரை உலகில் நடக்கும் வன்முறைகளுக்கும், கொலை, தற்கொலை, கற்பழிப்புகளுக்கும், ஆயுதங்களுக்கு கொடுக்கும் இடத்திற்கு சரிசமமான இடத்தை காமெராவுக்கும் கொடுக்கப் பட வேண்டும்!

தி விருக்ஷா குழுவினர் நடத்திய "சந்திரஹரி" என்னும் நாடகத்தை பார்த்து வந்தேன். கூத்துப்பட்டரையை சேர்ந்த தேவி அவர்களின் நாடகக் குழு நடத்திய நாடகம் இது. இந்த நாடகத்தை 1923 ம் ஆண்டு பம்மல் சம்மந்த முதலியார் எழுதினர். அதை இன்றும் சிறு மாற்றமும் இல்லாமல் கண்டு களிக்க முடிவதில் அவரின் மேதமை தெரிகிறது. ஹரிச்சந்திரன் என்ற அரசன் எத்தனை கஷ்டம் வந்தாலும் பொய் சொல்லாமல் வாழ்ந்தான். ஆனால், இந்த சந்திரஹரியோ அவனுக்கு நேர் எதிர்! எத்தனை கஷ்டம் வந்த போதிலும் உண்மையே பேசாமல் வாழ்ந்தான். அவனை எப்படியாவது உண்மை பேச வைத்து விடுவது என்று சபதம் செய்து விட்டு எமனிடம் வேலை பார்க்கும் சிஷ்டவாசி பூலோகம் வருகிறார். அவர் ஜெயித்தாரா என்பது தான் கதை.

சந்திரஹரி எந்தக் கஷ்டம் வந்த போதிலும் பொய்யே பேசுகிறான். அதனால் அவன் நாடு துறந்து, மனைவி மகனை விற்று சுடுகாட்டில் பிணம் எரிக்க வேண்டி வருகிறது. கடைசியில் அவன் மகனையே அவன் எறிக்கும் நிலைமை வாய்க்கிறது. அத்தகையை தருணத்திலும் அவன் விடாமல் பொய் பேசி எப்படி சமாளித்தான் என்பதை நல்ல நகைச்சுவையுடன் சொல்லப்பட்டிருக்கிறது.

சந்திரஹரி ஆக சுல்தான் என்பவர் நடித்திருக்கிறார். கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற ஒரு தேர்ந்த கலைஞர் இவர்.  ஒரு கலகலப்பான கோமாளித்தனமான அரசனுக்குரிய உடல் மொழியுடன்  நன்றாய் நடித்திருந்தார். நல்ல வாசன் உச்சரிப்பு. அவரின் உடைகளும், அதற்காக அவரின் மெனக்கெடல்களும் அவருக்கு இந்தக் கலையின் மேல் இருக்கும் ஈடுபாட்டை நன்றாய் விளக்குகிறது. கடைசியில்  வெட்டியானை வரும்போது அவரின் தோற்றமும், குரல் மாற்றமும் அமர்க்களமாய் இருந்தது. சில இடங்களில் அடக்கி வாசித்தால் இன்னும் இயல்பாய் இருக்குமோ என்று பட்டது. சில இடங்களில் அவரின் கோமாளித்தனம் இந்த நாடகத்திற்காக எடுத்துக் கொண்ட உடல் மொழி இது என்று காட்டுவது போல் செயற்கையாய் இருக்கிறது. அவர் நகைச்சுவை என்று செய்வது பார்வையாளர்களுக்கு நகைச்சுவையாய் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

சந்திரஹரியின் மந்திரியாக சுபாஷ் நடித்திருந்தார். அவரின் உடலமைப்பு, அங்க அசைவுகள் சந்திரபாபுவை நினைவுபடுத்தின. அவர்களுடன் வந்த பிராமணரை தேடுவதாக சொல்லி விட்டு, அவரின் கால் வழியே நடந்து வந்து, அரசே அவர் எங்குமே காணோமே என்பது நல்ல நகைச்சுவை. கொடுத்த வேடத்தை சிறப்பாய் செய்திருந்தார். வேடத்திற்கு நன்றாய் பொருந்தி இருந்தார். மற்றவர்கள் பேசும்போதும் அவரின் உடல்மொழி நன்றாய் இருந்தது. 

சிஷ்டவாசியாய் ராம். போராளி படத்தில் சசிகுமாரிடம் சரக்கு வாங்கி வரச் சொல்லி விட்டு, பைசா கொடுக்காமல் தகராறு செய்வாரே; அவரே தான்! இவரும் கூத்துப்பட்டரையில் பயிற்சி பெற்ற ஒரு தேர்ந்த நடிகர். நல்ல பாத்திரம் இவருக்கு. நல்ல வசன உச்சரிப்பு! சந்திரஹரியை ஒரு உண்மையாவது பேச வைக்க இவர் படும் பாடு நல்ல ஒரு கதைக் களம். கொடுத்த பாத்திரத்துக்கு இவர் நன்றாய் நடித்திருந்தாலும், இவரை பார்த்து பாவப்பட முடியவில்லை. இவரை பார்த்து பரிதாபம் வரவில்லை. அது ஏனோ தெரியவில்லை!

ஈச நட்சத்திரம் [சிஷ்டவாசியின் சீடர்] வேடத்தில் நீல் ஆனந்த். அசப்பில் ஆர்யாவை போல் இருக்கிறார். இவரும் நன்றாகவே நடித்திருந்தார். இவர் நின்ற விதமும், உடல் மொழியும் ஏதோ ஒரு அரசனுக்கு ஏற்ற உடல்மொழி போல் எனக்குத் தெரிந்தது. அதோடு மட்டுமில்லாமல், இவர் தான் சந்திரஹரியிடம் மாட்டிக் கொண்டு படாத பாடு படுபவர். அப்படி ஒரு படாத பாடு படும் கதாப்பாத்திரம் தோற்றத்தில் கொஞ்சம் பரிதாபமாய் இருந்திருந்தால் சிறப்பாய் இருந்திருக்குமோ என்று படுகிறது!

ஒரு பெண் கதாபாத்திரத்திலும், சந்திரஹரியின் மகன் கதாபாத்திரத்திலும் பிரதீப் [நான் இல்லை!] அசத்தி இருந்தார். பெண் கதாபாத்திரத்தை செய்வதே கஷ்டம், அதோடு ஒரு சிறுவனின் கதாபாத்திரத்தையும் மிக அழகாகச் செய்திருந்தார். இரண்டு கதாபாத்திரத்தின் உடல் மொழியும் அச்சு அசல். சிறுவனாய் வரும்போது அடிக்கடி நாக்கை கடித்துக் கொண்டே இருப்பது அது குழந்தை என்ற நம்பகத்தன்மையை கொடுக்கிறது. மிகச் சிறப்பாக வரக் கூடியவர். 

மற்றொரு பெண் கதாபாத்திரத்தில் வந்த ஜாகீரும் பெண்ணின் உடல் மொழியை பிசகாமல் செய்திருந்தார்.

மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுத்த பாத்திரத்தை செவ்வனே செய்திருந்தார்கள். 

ஆனந்த கண்ணனின் [டீவி புகழ்!]  இயக்கம். ஸ்லோ மோஷன், மைமிங் டெக்னிக்கில் ஞான திருஷ்டி காட்சி என்று நாடகத்தில் சில புதுமையையும் புகுத்தி வடிவமைத்திருந்தார். அது சிறப்பாய் இருந்தது. 

நீங்கள் சென்னையில் இருந்தால், நாளை மாலை வீட்டில் உட்கார்ந்து டீவி பார்த்தே அழியப் போகிறீர்கள் என்றால், சாலிகிராமத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர் ஜானகி பள்ளிக்கு [ஆவிச்சி பள்ளிக்கு எதிரில்] நாளை மாலை ஏழு மணிக்கு வாருங்கள். நாளையும் இதே நாடகம் மீண்டும் அரங்கேறப் போகிறது! நிச்சமாய் இது உங்கள் எல்லோருக்கும் ஒரு புது விதமான அனுபவமாய் இருக்கும் என்பதற்கு நான் கியாரண்டி!

அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான் வரிசையில் அமீர்கானின் தொலைகாட்சி வரவு இன்று இனிதே நடந்தேறி இருக்கிறது! சத்யமேவ ஜெயதே! ஸ்டார் ப்ளஸ்ஸில் இதை இன்றிலிருந்து ஒவ்வொரு ஞாயிறும் ஒளிபரப்ப இருக்கிறார்கள். அதோடு மட்டுமில்லாமல், எல்லா மாநில ஸ்டார் சானல்களிலும் இது அந்த அந்த மொழியில் வர இருக்கிறது. அதோடு, தூர்தர்ஷனிலும் வருகிறது. 

இந்த நிகழ்ச்சியைப் பற்றிய கட்டுரையிலிருந்து சற்று விலகி...

தூர்தர்ஷனில் வருகிறது என்பதை  குறிப்பிட்டு ஏன் சொல்கிறேன் என்றால், அந்த ஒரு சானலுக்குத் தான் டிஆர்பி பற்றி கவலையில்லை. சினிமாவையே கட்டிக் கொண்டு அழ வேண்டியதில்லை. தூர்தர்ஷன் கிராமத்தில் இடிந்து போன ஒரு அரசு பள்ளிக்கூடம் மாதிரி, ஆனால் அதிலிருந்து சில சமயம் நமக்கு ஒரு அப்துல் கலாம் கிடைப்பார்! நான் இப்போதெல்லாம் பொதிகை சானலை அடிக்கடி பார்க்கிறேன். அதில் அவ்வப்போது சில ரத்தினங்கள் எனக்குக் கிடைக்கிறது! அன்று எதேச்சையாய் பார்க்கும் போது, மதுரை சின்னபுள்ளையின் நேர்காணல் பார்த்தேன். நம் ஊர் அப்பத்தாக்கள் கிராமத்து திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்து கதை சொல்வதை போல் அவர்களுடைய "களஞ்சியம்"  வெற்றி பெற்ற கதையை விளக்கிக் கொண்டிருந்தார். ஒரு முறை கூட அவர் தட்டுத் தடுமாறி காமெராவை பார்க்கவில்லை. மிக சாதாரானமாய் பேட்டி எடுப்பவரைப் பார்த்து அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார். எங்கள் குடும்பமே அதை ரசித்துப் பார்த்தோம். இப்படிப் பட்ட உருப்படியான நேர்காணல்கள் ஒருபுறம், கவியரங்கங்கள், நெல்லை ஜெயந்தா குழுவினருடன் கவிஞர் வாலியின் பேட்டி, இசை அரங்கம் என்று வெவ்வேறு தளங்களில் நிகழ்ச்சிகள்! அவர்களின் பரிமாறுதல் பழசாய் இருந்தாலும் பதார்த்தம் சுவையானது தான்! அதே போல், அன்று தூர்தர்ஷனில் அமீர்கானின் பேட்டி பார்த்தேன். அதிலும் அவர், தூர்தர்ஷனில் ஒரு நிகழ்ச்சி வருகிறதென்றால் அது உருப்படியான நிகழ்ச்சியை இருக்கும் என்று தான் நானும் அறிகிறேன் என்று சொன்னார். 

நான் கல்லூரியில் படிக்கும் போது, ஃபேர்வல் பார்டிக்கு வந்த கல்லூரி முதல்வர், கமலஹாசனையும் அவர் செய்யும் வேலைக்கு அவர் காட்டும் அர்ப்பணிப்பையும் பற்றிச் சொன்னார். நீங்கள் எல்லாம் இயற்பியலில் இளங்கலை முடித்து விட்டீர்கள், அதைப் பற்றி உண்மையில் என்ன தெரிந்து கொண்டீர்கள் என்று கேட்டார். கமலஹாசனை உதாரணம் காட்டி கல்லூரி முதல்வர் செய்வதை திருந்தச் செய் என்று பேசியது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு வேளை, நடிகர்களை வைத்து சொன்னால் தான் இதையெல்லாம் கேட்பார்கள் என்று அவர் சொன்னாரோ என்னமோ, ஆனால் அது உண்மை தான். இன்று அப்படி ஒரு விழா நடந்தால், அதில் நான் பேசினால், அமீர்கானை வைத்துத் தான் பேசுவேன். போராளி என்றால் சே குவாரா போல் இருக்க வேண்டும், அரசியல்வாதி என்றால் காந்தியை போல் இருக்க வேண்டும், விளையாட்டு வீரன் என்றால் சச்சின் போல் இருக்க வேண்டும், அதே போல் கலைஞன் என்றால் அது அமீர் கான் போல் இருக்க வேண்டும். இப்படி யார் சொன்னது தெரியுமா? நான் தான்! எனக்கு படறதை சொல்றேன்!!

நிகழ்ச்சிக்கு வருவோம். அவர் தொலைக்காட்சிக்கு வருகிறார் என்று உறுதியானதும் ஒரு பிரஸ் மீட் வைத்தார். அன்றிலிருந்து கவனித்து வருகிறேன். எல்லோரும் செய்வதை போல் ஒரு விளையாட்டை விளையாடி விட்டு, சிரித்துப் பேசி நடிகன் என்ற போர்வையில் அவர் இருக்க மாட்டார் என்று எனக்குத் தெரியும். அந்த ஷோவில் நிச்சயம் நடிகர் அமீர்கான் இருக்க மாட்டார், மனிதன் அமீர்கான் தான் இருப்பார் என்று! அதையே அவரின் ப்ரமோ வீடியோக்களும் உறுதி செய்தன. முதல் வார நிகழ்ச்சி பெண் சிசு வதை பற்றியது. இந்தியாவில் எங்கு பெண் சிசு வதை நடக்கிறது, எப்படி நடக்கிறது, இதற்கு யாரெல்லாம் உடந்தை, இதனால் என்ன என்ன பாதிப்புக்கள், இதற்கு தீர்வு தான் என்ன? இப்படி ஒரு நிகழ்ச்சியை ஒரு நடிகன் ஏன் நடத்தை வேண்டும்? என்ற கேள்விக்கு நிகழ்ச்சியில் அவரே பதில் சொல்கிறார். இத்தகைய ஒரு நிகழ்ச்சியை/கருவை உருவாக்கியதில் பெரும் பங்கு இவருக்கு இருக்கிறது. இதை இவரே தயாரித்தும் இருக்கிறார். 

நிகழ்ச்சி அருமையாய் இருந்தது. ஊர் ஊராய் சுற்றியிருக்கிறார்கள். மிகவும் உணர்வுப்பூர்வமாய் படமாக்கியிருந்தார்கள். நிகழ்ச்சியில் அமீர்கான் என்ற நடிகர் இல்லை, அங்கு வந்தவர்களோ, அமீரிடம் வீடியோவில் பேசியவர்களோ, எங்கள் குடும்பமே உங்கள் ரசிகர்கள், நாங்கள் உங்கள் படங்களை தவறாமல் பார்ப்போம் என்று சொல்லவில்லை. அமீர் கான் என்ற மனிதனை தான் மக்கள் இந்த நிகழ்ச்சியில் சந்திக்க வேண்டும் என்று அவர் உறுதியாய் இருந்திருக்கிறார் என்பது தெரிகிறது. அமீர் நாற்பத்தைந்து வயது கடந்தும்அம்சமாய் இருக்கிறார். ஆங்கில வார்த்தை கலப்பில்லாமல் சுத்தமான ஹிந்தியில் பேசுகிறார். அது என்னை போன்ற அரைகுறை இந்தி படித்தவனுக்கு கஷ்டமாய் இருந்தாலும், மிக நன்றாக இருக்கிறது. ஆடம்பரமாய் பெரிய சுழலும் நாற்காலியில் கோட் சூட் போட்டுக் கொண்டு பேசாமல் சாதரணமாய் இருக்கிறார். எந்த வித போலித்தனமும் இல்லாமல் நிகழ்ச்சியில் ஆத்மார்த்தமாய் இருக்கிறார். 

நிகழ்ச்சி முகத்தில் அறைகிறது. மனிதனின் கொடூரத்தை காண சகிக்கவில்லை. இப்படி ஒரு சமூகத்திலா வாழ்கிறோம் என்று கேள்வி எழுகிறது! ஆறாவது அறிவை விடுங்கள், மற்ற ஐந்து அறிவு கூட எங்கே போனது என்று தோன்றுகிறது! சிசு வதை செய்யும் மருத்துவர்களை பற்றி விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கக் கோரி ராஜஸ்தான் முதல்வருக்கு கடிதம் எழுதி இருக்கிறார், அதில் நம்மையும் கலந்து கொள்ளச் செய்திருக்கிறார். ஏதோ ஒரு தீர்வு கிடைத்தால் சந்தோஷம்!

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கொஞ்சம் அழுகாச்சியாய் இருந்தது வழக்கமான ரியாலிட்டி ஷோக்களை ஞாபகப்படுத்துகிறது! இதற்கு காலப்போக்கில் டிஆர்பி ரேட்டிங் எல்லாம் நிறைய எதிர்பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது. அமீர் அலசும் எத்தனை விஷயங்களில் தீர்வு கிடைக்கிறது என்பதை பொருத்து அது மாறலாம்! 

LET US WAIT AND WATCH, BUT A MUST WATCH!


நல்ல தலைப்பு. அந்த தலைப்புக்கும் படத்துக்கும் சம்மந்தம் புரியவில்லை. வழக்கமான ராஜேஷ், /, சந்தானம் [/ = பார்]  கூட்டணி. திரும்பி கூட பார்க்காத ஒரு பெண்ணை துரத்தி துரத்தி காதலிக்க வேண்டியது, இல்லை கட்டாயப்படுத்த வேண்டியது. பொண்ணுங்களே இப்படித் தான் என்று சந்தானம், தண்ணி சகிதம் பெண்களை படம் பூரா திட்ட வேண்டியது. பிறகு என்ன திட்டினாலும் நான் அவளை தான் லவ் பண்றேன்னு கல்யாணம் பண்ணி சுபம் போட வேண்டியது. மூன்று படங்களுக்கும் ஒரே ஃபார்முலா.
 
தமிழ் சினிமாவில் கதாநாயகனாக பிறந்திருக்கலாம். வேலா வேலைக்கு சாப்பாடு. பெயருக்கு ஒரு வேலை என்று சொல்லி விட்டு ஒரு சீனில் அதை செய்து விட்டு, பிறகு வேலைக்கே போகத் தேவையில்லை. அப்படியும் மிக அழகான ஃபிகர் நம்மை காதலிக்கும். ஃபாரின் லொகேஷன் சாங்க்ஸ். கொதிக்கும் சென்னையில் கழுத்து வரை ஒரு டீ ஷர்ட் போட்டு அதன் மேல் ஒரு காட்டன் ஷர்ட் போட்டுக் கொள்ளலாம்.  
 
உதயநிதி சேஃபாய் இறங்கியிருக்கிறார். வளராத மீசையும், தாடியுமாய் நடிகர் ஜீவாவை நினைவுபடுத்துக்கிறார். இயல்பாய் நடிக்க முயற்சித்திருக்கிறார். இதில் நடிக்க என்ன இருக்கிறது, காமெரா பார்க்காமல் வசனத்தை மனப்பாடமாக பேசத் தெரிந்தால் போதும். ஐ ஆஃப் தி ஒய் ஆஃப் டயலாக் சூப்பர்.
 
சந்தானம். ராஜேஷின் உண்மையான ஹீரோ இவர் தான். இவரை நம்பித் தான் அவர் கதையே எழுதுகிறார் போல. சந்தானம் இல்லாத ஒரு படத்தை எடுத்து ராஜேஷ் வெற்றி பெற்றால் தான் நான் நம்புவேன். பிராமணத் தமிழ், ஆங்கிலம் என்று மயிலாப்பூர் பார்த்தாவாக நல்ல மாடுலேஷன். ஆனால், திடீர் திடீர் என்று அந்த மாடுலேஷனை மறந்து விட்டு சந்தானம் ஆகி விடுகிறார்.
 
ஹன்சிகா ஒரு சாயலுக்கு குஷ்பு மாதிரி தான் இருக்கிறார். முதல் படத்தை விட பரவாயில்லை. கொஞ்சம் நடித்திருக்கிறார். கடைசி கல்யாண சீனை தவிர படம் முழுதும் பொட்டு வைக்காமல் முஸ்லீம் பெண் போல் வருகிறார். ஆனால் அது உருத்தவேயில்லை. சரண்யாவையும் ஹன்சிகாவையும் பக்கத்தில் பார்த்தால் இந்த வீட்டுக்கு இவர் எப்படி மருமகள் ஆக முடியும் என்று கேள்வி எழுகிறது.
 
சரண்யா "லூசு அம்மா" காரெக்டரை நிறுத்த வேண்டும். அலுக்க ஆரம்பிக்கிறது. நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் நடிப்புப் பயிற்சி பெற்ற சண்முகராஜன் என்ற அருமையான நடிகரை, கமலஹாசன் விருமாண்டியில் போலீஸ் காரெக்டர் கொடுத்தார் என்பதற்காக இன்று வரை கொஞ்ச நேரம் வரும் போலீஸ் கதாப்பாத்திரம் என்றால் அது சண்முகராஜன் தான்! எந்த படத்தில் பார்த்தாலும் போலீஸ் உடுப்பில் தான் இருக்கிறார். அது போல இது. காமெடி அம்மா சரண்யா, அழுகாச்சி அம்மா கூத்துப்பட்டறை கலாராணி! இது தமிழ் சினிமாவின் சாபக் கேடு.
 
சினிமா என்பது விஷுவல் மீடியம். காமெடியாய் இருக்கிறது என்பதற்காக படம் முழுவதும் இருவர் பேசிக் கொண்டே இருப்பது சினிமா கிடையாது. ராஜேஷுக்கு அது புரியாமல் இருக்காது. அடுத்த முறையாவது ராஜேஷ் ஒரு சினிமா எடுக்க முயற்சிக்க வேண்டும்.
 
இவ்வளவையும் சொல்லி விட்டு, ராஜேஷ் அடுத்த படத்தில் எனக்கு ஒரு சான்ஸ் தந்தார் என்றால் உடனே நான் ஒப்புக் கொள்வேன். இதில் எனக்கு வெக்கமே இல்லை. ஏன் என்றால்...
 
To correct the system, you have to be in the system!
இன்று சென்னை சில வினாடிகள் அதிர்ந்தது. இந்தோனேசியாவில் நிகழ்ந்த ஒரு பூகம்பத்தின் பக்க விளைவுகள்! மதியம் சாப்பிட்டு விட்டு உண்ட மயக்கத்தில் இருந்த போது, "எல்லாம் எந்திரிங்க என்பது போல் கட்டடங்கள் குலுங்கியது" என்று சொல்கிறார்கள். நான் எதையும் உணரவில்லை. அப்போது தான் நான் மெல்ல வேலை செய்ய ஆரம்பித்திருந்தேன். அலுவலகத்தில் பூகம்பம் என்று எல்லோரும் அல்லோலகல்லோலப் பட்டதும் தான் எனக்குப் புரிந்தது, நான் வேலை செய்தால் இயற்கைக்கு பொறுக்கவில்லை போலும்!

நான் ஒரு பதினோரு மாடி கட்டடத்தில் ஐந்தாவது மாடியில் வேலை பார்க்கிறேன். சரியாய் பூகம்பம் வந்த சமயத்தில் நான் ஒரு கான்ஃபரன்ஸ் ரூமில் ஒரு மீட்டிங்கில் இருந்தேன். வெளியே சத்தம் கேட்கவும், நான் ஏதோ ஃப்ளோர் ஈவென்ட் என்று தான் நினைத்தேன். எப்போதாவது எங்களின் மன அழுத்தத்தை குறைக்க அப்படி ஏதாவது நிகழ்ச்சி நடக்கும். அதுவென்று தான் நினைத்தேன். எல்லாம் போவது போல் தெரிய நானும் வெளியே வந்தேன். அந்த ரூமின் விளக்கை அணைத்து விட்டு தான் வந்தேன்! [எப்படி என் பொறுப்புணர்ச்சி!]

கீழே இறங்கலாம் என்று போனால் ஒரு நாடே படியில் இறங்குகிறது! அதை ஏன் கேட்கிறீர்கள், எங்கள் அலுவலகத்தில் மட்டும் கிட்டத்தட்ட இருபதாயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள். நிஜமாகவே பூகம்பம் வந்தால் கொத்தாய் அள்ளி விடலாம்! இத்தனை பேர் எங்கிருந்து தப்பிப்பது! இருந்த இடத்திலேயே இருந்திருந்தால் கூட தப்பித்திருக்கலாம், இங்கு ஓடக் கூட முடியாதே என்று தோன்றியது! பதினோராவது மாடியில் இருந்து வருபவனை நினைத்து தேற்றிக் கொண்டேன். ஆனால் ஒன்று, படியில் இறங்கும் எல்லோரும் ஒரே குதூகலமாய் இருந்தார்கள். யாருக்கும் ஒரு பயம் இருப்பது போலவே தெரியவில்லை. ஏதோ ஃபயர் ட்ரில் நடப்பது போல், பேசிக் கொண்டும், ஜோக்கடித்துக் கொண்டும் ஒரே குஷி! பெண்கள் வழக்கம் போல் ஃபோன். ஓ, ஆமா, நானும் உயிரோட தான் இருக்கேன்னு வீட்ல பீதிய கெளப்பனுமே என்று நானும் ஃபோன் போட்டேன். நல்ல நாள்லயே நான் பேசுறது எனக்குத் தான் கேக்கும். இன்னைக்கு கேக்கணுமா? இழுத்து மூடிட்டு போயிட்டான் போல இருக்கு. நான் பேசுறது கூட கேக்கலை!

ஒரு வழியாய் கீழே வந்து சேர்ந்தேன். மக்கள் வெள்ளத்தில் அலையென அடித்து வரப்பட்டேன் என்று இலக்கணமாய் எழுதலாம், நாக்கு தள்ற நேரத்துல நான்சென்ஸ் என்ன வேண்டிக்கெடக்கு? கீழே வந்து எல்லோரும் கட்டடத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம். அதுவும் ஆடுவது மாதிரியே தெரிந்தது. அதோ பார் விரிசல் விட்ருக்கு என்று மேலும் பீதியை கிளப்பினார்கள். அங்கு ஒரு தேன் கூடு இருந்தது. இரண்டு புறா நின்று கொண்டிருந்தது. பூகம்பம் வந்தால் பறவைகளுக்குத் தெரியுமே, அது பறக்காம இருக்குன்னா இனிமே ஒண்ணும் பயம் இல்லை என்று என்னுடைய விஞ்ஞான அறிவை கொஞ்சம் வழிய விட்டேன். அந்த பக்கி அதை கேட்டுருச்சோ என்னமோ, உடனே பறந்துருச்சு! எதுக்கும் இருக்கட்டும்னு கொஞ்சம் தள்ளியே நின்னுட்டேன்! கட்டடம் விழுமா என்று பார்த்தால் விழுகுற மாதிரியும் தெரியவில்லை; வீட்டுக்கு போகலாமா என்றும் புரியவில்லை. வெயில் வேறு கொளுத்துகிறது! பலர் கடலை போட மரத்தடியிலும், புல் தரையிலும் ஐக்கியம் ஆகி விட்டார்கள். சிலர் கொண்டு வந்திருந்த டிபன் பாக்சை திறந்து சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். மானேஜர் ஒருவர் எத்தனை பேர் வெளியில் இருக்கிறோம், எத்தனை நேரமாய் இருக்கிறோம், எத்தனை மணி நேர வேலை கெடுகிறது, எவ்வளவு டாலர் நஷ்டம் ஏற்படுகிறது என்று கணக்கு போட ஆரம்பித்து விட்டார். மேனேஜர் ஆனதும் நீ எந்நேரமும் கம்பெனியை பற்றியே சிந்திக்க வேண்டும் என்று ஊசி கீசி போட்டு விடுவார்களோ என்று தோன்றியது! அப்புறம்  சிலர் அப்போதும் கடமையாய் ஐசி ஐசி ஐ ஏடியம்மில் பணம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். "போறப்போ என்ன கொண்டு போகப் போறோம் என்பதை டெஸ்ட் செய்கிறார்களோ" என்று தோன்றியது! ஒரு க்ரூப் சாட் பூட் த்ரீ வேலையாடிக் கொண்டிருந்தார்கள். வேகாத வெயிலில் இப்படி ஆகி விட்டார்களோ என்று நினைத்தேன். அப்புறம் தான் தெரிந்து, டேய், நீ தான் தோத்தே, ஒழுங்க உள்ளே போய் எங்க பை, பைக் சாவி எல்லாம் எடுத்துட்டு வா என்றாரர்களே பார்க்கலாம்! அட பய புள்ளைகளா...

ஒரு வழியாய் இன்று அவ்வளவு தான் என்று நினைத்த நேரத்தில் எல்லாம் சரியாகிவிட்டது, போய் வேலையை பாருங்கள் என்று சொல்லி விட்டார்கள். அடக் கடவுளே, என்று மறுபடியும் நொந்து போய் உட்கார்ந்து வேலை செய்யத் தொடங்கினோம். மறுபடியும் அதே கான்ஃபரன்ஸ் ரூம். மறுபடியும் அதே சத்தம். இந்த முறை பை சகிதம் எல்லோரும் கிளம்பி விட்டார்கள். யுஎஸ் கால் இருக்கிறது என்ன செய்வது என்று என் டீமில் ஒருவர் கேட்டார். எடுத்து பேசு, Your voice is shaking என்று அவர்கள் சொன்னால், Yes, because the whole building is shaking என்று காரணம் சொல்லிவிட்டு வைத்து விடலாம் என்று மொக்கை போட்டேன். 

நான் என்ன நினைக்கிறேன் என்றால், இந்த மாதிரி சமயங்களில் நமக்கு நகைச்சுவை உணர்வு பொங்குகிறது! நான் எதற்கும் பயப்பட மாட்டேன், நான் செம கூல் பார்ட்டியாக்கும் என்று நிரூபிக்க அனைவரும் ஆசைப்படுகிறோம்! அதிலும் அங்கு பெண்கள் இருந்து விட்டால் நம் பசங்க பண்ற அலும்பு இருக்கே...இதெல்லாம் ஒன்னுமேயில்லை, நான் அண்டார்டிகால இருக்கும்போது என்று ஏகத்துக்கு பீலா விடுகிறார்கள்!! இயற்க்கை இன்னும் கொஞ்சம் ஆடினால் நம் டவுசர் கழண்டுரும்டீ..! 

மொத்தத்தில் அந்த மானேஜர் போட்ட கணக்குப் படி பத்தாயிரம் டாலர் ஊஊஊஊ.....

சென்ற வார இறுதியில் நண்பர் ஒருவரின் கல்யாணத்திற்காக மதுரை சென்றிருந்தேன். இப்போதெல்லாம் அடிக்கடி மதுரை செல்ல முடிவதில்லை. அதற்கு அவசியம் ஏற்படுவதில்லை. ஆனால், என்ன தான் மரங்கள் வான் நோக்கி கிளை பரப்பி நின்றாலும், அதன் வேர்கள் மண்ணோடு தான் ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கிறது! அது போல, நாம் பணியின் நிமித்தம் எங்கெங்கோ அலைந்து திரிந்தாலும், மனம் சொந்த ஊரை கட்டிக் கொண்டு தான் கிடக்கிறது! நம் சொந்த ஊரில் காலடி வைத்ததும், அங்கு நம் வாழ்ந்த வாழ்வின் நினைவுகள் ஒரு குளிர்ந்த காற்றை போல் நம் முகத்தில் அறைகிறது!
 
நான் மதுரைக்கு இரயிலில் சென்றாலும், பேருந்தில் சென்றாலும், வண்டி விட்டு இறங்கியதும் வீட்டுக்கு நடக்கத் தான் விரும்புவேன். ஆட்டோவில் செல்வதில்லை. வீடு ரயில் நிலையம், பேருந்து நிலையத்திலிருந்து அருகில் இருப்பதால் இருபது நிமிடத்திற்குள் சென்று சேர்ந்து விடலாம். அதிகாலை மதுரை என்றுமே அழகு தான். மூட்டைகளா மனிதர்களா என்று எந்த வித்தியாசமுமின்றி ரயில்வே நிலைய வாசலில் படுத்துக் கிடக்கும் ஜனக் கூட்டம், சுத்த பத்தமாய் குளித்து முடித்து விட்டு, சூடாய் பால் காய்ச்சி தேநீர் ஆத்தும் டீ கடை நாயர்,  வாசல் தெளித்து அழகழகாய் கோலம் போடும் நைட்டி பெண்கள், ஜரூராய் நடக்கும் பால் வியாபாரம், புட்டுக்கு லைன் கட்டி நிற்கும் சுள்ளான்கள், அதற்கு நேர் எதிராய் சூடாய் அப்பக் கடை, அப்போது தான் வந்திருக்கும் லாரியிலிருந்து சரக்கு இறக்கும் உழைப்பாளர் கூட்டம், "விநாயகனே வினை தீர்ப்பவனே" சீர்காழியின் சீற்றம் என்று வழி நெடுக மதுரை அழகழகாய் வித விதமாய் விழிக்கிறது!

இந்த பயணத்தில் நான் கண்டது, மதுரையில் அடிக்கடி எல்லாம் மின் வெட்டு இல்லை; எப்போதாவது வருகிறது! ஆமாம், அப்படித் தான் சொல்ல வேண்டும்! என் மாமா ஒருவர் மின்சார வாரியத்தில் தான் பனி புரிகிறார். அவர் நல்ல வேடிக்கையான மனிதர்! மின் வெட்டு அதிகப்படுத்தியதிலிருந்து அவருக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு நாள் இரவு, வழக்கம் போல் மின்சாரத்தை நிறுத்தியிருக்கிறார். உடனே ஒரு தொலைபேசி அழைப்பு! எடுத்தால், ஒரு குழந்தை அழும் சத்தம் தான் கேட்கிறது! இவரும்  பல முறை ஹலோ, ஹலோ என்று சொல்லி பார்த்திருக்கிறார். சிறிது நேரம் கழித்து ஒரு பெண் பேசியிருக்கிறார் இப்படி: 

பெண்: என்ன கேக்குதா?
மாமா: கேக்குதும்மா
பெண்: என்ன கேட்டுச்சு?
மாமா: குழந்தை அழுகுற சத்தம் கேட்டுச்சு...
பெண்: நல்லா கேட்டீங்களா?
மாமா: [வேடிக்கையாய்] குழந்தைக்கு பசிக்குது போல, பால் குடும்மா...
பெண்: அதெல்லாம் குடுத்து தான் படுக்க வச்சோம், நீங்க கரண்ட ஆஃப் பண்ணதும் முழிச்சிகிட்டான்!
மாமா: ......

குழந்தைகள் பரீட்சைக்கு படிக்க முடியவில்லை ஏன் இப்படி அநியாயம் பண்றீங்க என்று கேட்பவருக்கு, நீங்க பேசாம ஒரு எமெர்ஜென்சி லைட்டோ, அல்லது இன்வேர்டரோ வாங்கிடுங்க சார். நாங்க என்ன வேணும்னா கட் பண்றோம், கவர்ன்மென்ட் சொல்லுது, நாங்க செய்றோம். இப்போ எல்லாம் எல்லா மிடில் கிளாஸ் மக்களும் இன்வர்டர் வாங்கிடறாங்க சார் என்று வயித்தெரிச்சலில் பேசும் மக்களிடம் இவர் அட்வைஸ் வேறு செய்கிறார். இன்னொரு பெண்மணி ஃபோன் போட்டு சார், உங்க ஆபிஸ்ல கரண்ட இருக்குல்ல, நான் படுக்கையை தூக்கிட்டு அங்கே வந்து தூங்குறேன் என்று சொன்னதற்கு, தாராளமா வாங்கம்மா, இங்கே குத்துமதிப்பா ஒரு ஆயிரம் கொசு இருக்கு, இப்போ அது என்னை மட்டும் கடிச்சுட்டு இருக்கும், நீங்க வந்தீங்கன்னா உங்களுக்கு ஐநூறு, எனக்கு ஐநூறு என்று கலாய்த்திருக்கிறார்!  இது தான் மதுரை நக்கல் போலும்! 

ஒன்றும் சொல்வதற்கில்லை, கொடுமை என்னவென்றால் மக்கள் இதற்கும் பழகிவிட்டார்கள். தங்களின் வேலைகளை அந்த குறைந்த நேர இடைவேளைகளில் வைத்துக் கொள்ள பழகி விட்டார்கள்.  நமக்கு எதுவுமே பழகி விடுவது தான் பிரச்சனையே! கூடங்குளம் அணுமின் நிலையத்தினாலும் இந்த பற்றாக்குறை தீரப்போவதில்லை. அணுமின் நிலையம், விண்ட் மில், ஹைட்ரோ பவர் என்று பலவற்றை நம்புவதை விட, சூரியனை நம்பலாம்! ஒரு வீட்டுக்கு சோலார் பவர் வைக்க கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ஆகிறது! அதற்கு அரசு ஏதாவது மானியம் அளித்து ஆதரிக்கலாம்! அம்மா, போன முறை மழை நீர் சேகரிப்பை நடைமுறை படுத்தியதை போல இந்த முறை இதை செய்யலாம்! பிறகு பிரச்சனையே இருக்காது...

சரி, மின்சாரப் பிரச்சனையை விட்டு மதுரைக்கு வருவோம்; மதுரையில் நான் பிறந்து வளர்ந்த அதே தெருவில் தான் இன்னும் எங்கள் வீடு இருக்கிறது. அன்று ஓடு இருந்த இடத்தில் இன்று மாடி இருக்கிறது. சொந்த வீடு என்பதால் இன்னும் நான் பிறந்து வளர்ந்த தெருவில் வசிக்கும் வசதி வாய்த்திருக்கிறது. சொந்த வீடாகவே இருந்தாலும், சிலர் நல்ல நிலைமையில் வந்ததும் இந்த சிறிய வீடு பத்தாது என்று நகரத்துக்கு வெளியே நல்ல பெரிய வீடாய் கட்டிக் கொள்கிறார்கள். அதில் வசதி இருக்கிறது என்றாலும், ஒரு முறை நம் இடத்தை விட்டு போய் விட்டால், பிறகு அந்த பக்கம் தலை வைத்து படுக்க மாட்டோம்! நமக்கு அதற்கான நேரமே இருக்காது! அதனால் நாம் நாம் வாழ்ந்த இடத்தை, வாழ்ந்த வாழ்க்கையை, சுக துக்கத்தை மறந்து விடுகிறோம். நம் பிள்ளைகளுக்கு நம்முடைய பழைய வாழ்க்கை தெரிவதில்லை. இன்று நீங்கள் கார் வைத்திருந்தாலும், அன்று கஷ்டப்பட்டு ஒரு சைக்கிள் வாங்கி அந்த தெருவில் வலம் வந்ததை நம் பிள்ளைகளுக்கு எப்படிச் சொல்வது? இந்த முறை சென்ற போது, வீட்டு வாசலில் அமர்ந்து தெருவையே பார்த்துக் கொண்டிருந்தேன். நான் வாழ்ந்த அந்தத் தெரு, பல அனுபங்களை சுமந்து கொண்டு இன்றும் இளமையாய் நிற்கிறது. எங்கள் வீட்டின் எதிரே உள்ள குழாயடி, அதைச் சுற்றிய குட்டிச் சுவர், அந்த சுவற்றைச் சுற்றி சுற்றி வந்து நான் படித்த பரிட்சைகள், நான் உட்கார்ந்து மாங்கா விற்ற அந்த எதிர் வீட்டுத் திண்ணை, கருங்கல் வாசற்படிகள், பின்னிப் பிணைந்து கிடக்கும் வீடுகள், ஏதோ ஒன்றை கூவி விற்றுச் செல்லும் வியாபாரிகள், வேட்டியை ஏற்றி  விட்டு கொண்டு பைக்கில் செல்லும் ஆசாரிகள், காம்போசிஷன் நோட்டை நெஞ்சில் நிறுத்திச் செல்லும் இளம் பெண்கள், காலையில் வாசல் தெளித்த தண்ணீரின் மிச்சங்கள், சௌராஷ்டிரா பெண்களின் பார்வைகள், வம்பளப்புகள், விசாரிப்புகள் என்று பலவிதமான அனுபவங்கள்...அன்று குழந்தையாய் சுற்றித் திரிந்த வாண்டுகள் இன்று அரும்பு மீசையுடன் என்னை கடக்கையில் தங்கள் ஞாபக அடுக்குகளில் என்னைத் தேடுகிறார்கள்!

நான் ஐந்தாவது, ஆறாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது எந்த போஸ்ட்மேன் எனக்கு "ப்ரமோடட்" கார்ட் கொடுத்தாரோ, அவரை நான் அன்று பார்த்தேன். லேசாக தலை முடி நரைத்திருந்தது. வேறு எந்த மாற்றமுமில்லை. இந்த இமெயில் யுகத்தில் இன்றும் அவர் "ப்ரமோடட்" கார்ட் கொடுக்கிறாரா என்று தெரியவில்லை. அதே, பால் வண்டிக்காரர், அதே அயர்ன் வண்டிக்காரர் என்று காலம் எண்பதுகளிலேயே ஸ்தம்பித்து நிற்கிறது! இத்தனை வருடம் கழித்தும் அந்தத் தெருவில் பதினோரு மணி வெயில் அப்படியே தான் இருக்கிறது.

மதுரை இன்னும் மாறவில்லை!

எல்லா சிறந்த நகைச்சுவையும் ஒரு கட்டத்தில்
இதற்குத் தானா அப்படிச் சிரித்தோம்
என்று ஆகி விடுகிறது!
 ------------------------------------------------------
ரொம்ப நாட்களாய் என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன். இன்று, உங்களை கேட்கிறேன்.
தனியாய் ஒரு பெண் மட்டும்
ஒரு ஹோட்டலில் அமர்ந்து
உணவருந்துவதை பார்த்திருக்கிறீர்களா?
[KFC, Mc Donalds போன்ற இடங்களைத் தவிர்த்து!] 
 -----------------------------------------------------
பெண்கள் தினத்துக்கு அலுவலகத்தில் ஸ்டால் போட்டு
சேலை, சுடிதார், தோடு, வளையல், செயின் என்று
கொள்ளையடித்தார்கள்.
 
நூற்றி முப்பது ரூபாய்க்கு நான் வாங்கிய தோடுகளும், வளையலும்
வனவாசத்தில் சீதா தேவியார் உபயோகப்படுத்தியது போலிருந்தது!
-------------------------------------------------------------
கணையாழியின் கடைசி பக்கங்கள் படிக்கும்போது
சுஜாதாவின் வாசிப்பு பிரமிக்க வைக்கிறது!
அதே சமயம், அவர் மனைவியிடம் 
எவ்வளவு நேரம் பேசியிருப்பார் 
என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை!!