என் நண்பன் ஒருவனின் தம்பி இரு மாதத்துக்கு முன் தற்கொலை செய்து கொண்டான்! பொறியியல் கல்லூரியில் கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தான். படிப்பு முடிந்ததும் வேலையும் தயார்! இந்த சமயத்தில் இப்படி ஒரு முடிவு! பரிட்சையில் தோல்வி அடைந்திருப்பான் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு! அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. பிறகு காதல் பிரச்சனை தான் என்றால் அதுவும் இல்லை. பிறகு?
 
வகுப்பில் படிக்கும் நண்பனுடன் ஒரு தகராறு! அந்த நண்பன் இவனிடம் பேச மாட்டேன் என்று சொல்லி விட்டானாம். எத்தனையோ முறை இவன் அவனிடம் கெஞ்சி பார்த்திருக்கிறான் போல் இருக்கிறது. அவன் மசியவில்லை. உன் நட்பே வேண்டாம் போ என்று தூக்கி எறிந்து விட்டானாம். நான் இருக்கும்போது தான் என் அருமை உனக்கு தெரியவில்லை, நான் இறந்த போதாவது தெரிந்து கொள் என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்டான்!
 
நான் முதலில் அவன் இறந்து விட்டான் என்று கேள்விப்பட்டதும் வண்டி ஒட்டி விபத்துக்குள்ளாயிருப்பானோ  என்று நினைத்தேன். அத்தனை வேகமாய் வண்டி ஒட்டுவான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அப்படி எதுவும் நிகழவில்லை. தற்கொலை என்றதும் மிகவும் ஆச்சர்யமாய் இருந்தது. நல்ல துரு துறுவென்று இருந்த பையன். வழக்கம் போலவே, அவன் வீட்டின் கடைக்குட்டி. பயங்கர செல்லம். எப்போதும் அவனுக்கு கேட்டது கிடைத்தது.  மரணமும் அப்படியே!
 
இன்றைய இளைஞர்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை. எல்லாவற்றிலும் வேகம் என்பது ஒரு பக்கம் பிரமிக்க வைத்தாலும் அதே வேகத்தில் தப்பான முடிவுகளையும் எடுத்து விடுகிறார்கள். நிதானம் என்பது துளியும் இல்லாமல் போய் விட்டது. இத்தனை சின்ன விஷயங்களுக்கு எத்தனை பெரிய முடிவு! பரிட்சையில் தோற்றதால் இறப்பவர்களை நினைத்தே எனக்கு எரிச்சலாய் வரும்! நம் நாட்டில் இருப்பதெல்லாம் ஒரு கல்வி முறை, அதில் தோல்வி அடைந்ததால் சாவதா என்று!  ஒவ்வொரு முறை பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு ரிசல்ட் வந்த அடுத்த நாள் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற ரிசல்டும் சேர்ந்தே வருகிறது! என் நண்பர் ஒருவர் சொன்னார், யார் முதல் மார்க் வாங்குகிறார்கள் என்பதை விட, அடுத்த நாள் யார் வீட்டில் அழப் போகிறார்கள் என்று தான் எனக்கு பயமாக இருக்கிறது என்று! எத்தனை உண்மை! தேர்வுக்கு முன்னே, மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் சேர்த்து பள்ளியிலே கவுன்சிலிங் வைக்கலாமே? பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளிடம் எந்த மார்க் எடுத்தாலும் பரவாயில்லை, பார்த்துக் கொள்ளலாம் என்று அவர்களை ஆசுவாசப்படுத்தலாமே? இதனால் தற்கொலைகள் குறையலாமே? நல்ல யோசனை, செய்தால் நலம்! இல்லையென்றால் கன் கேட்டா பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன புண்ணியம்? பரிட்சையில் தோற்றதால் நான் சாக முடிவெடுத்திருந்தால் மாசா மாசம், நான் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும்! பாடமா சொல்லிக் கொடுக்கிறீர்கள், என்று சொல்லி, கடைசி வரை நான் தான் வாத்தியார்களை கொலையாய் கொன்றேன்! 

எனக்கு என்னமோ, நம் வீட்டு குழந்தைகள் நம்மை விட்டு வெகு தூரம் சென்று விட்டது போல் தோன்றுகிறது. பெற்றோர்களிடம் பேசும் குழந்தைகள் அருகி வருகிறார்கள். குழந்தையாய் இருக்கும்போது அவர்கள் தொன தொணத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதோடு சரி, பிறகு சற்று வளர்ந்தவுடன் டீவி, ப்ளே ஸ்டேஷன்,  அப்புறம் எப்போதும் கைபேசியில் நோண்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தனியாய் இருக்கும்போதும் தனியாய் இருப்பதில்லை. தன் நண்பர்களுடன் கலந்துரையாடலில் தான் இருக்கிறார்கள். கைபேசியை இழந்தால் அவர்களின் மூச்சு முட்டுகிறது!  கணினியில் வன்முறையான விளையாட்டுக்கள்! அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களின் முகநூலின் வழி தான் நாம் அறிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. பெற்றோர்கள் அவர்களுக்கு தேவையில்லாமல் போய் விடுகிறார்கள்.  பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை ஒரு கட்டத்துக்கு me நண்பர்களாய் பார்க்கத் தவறி விடுகிறார்கள். கால ஓட்டத்தில், அவர்களுக்கு இளைப்பாறவே நேரம் இருப்பதில்லை, இதில் குழந்தைகளுக்கு எங்கு நேரம் ஒதுக்குவது?  அதனால், நண்பர்கள் கிடைக்க ஆரம்பித்தவுடன் வீடு என்பதே அவர்களுக்கு சத்திரமாய் ஆகி விடுகிறது. பெற்றோர்கள் ஏதாவது கேட்டாலும் ஒரு இரண்டு வரிகளில் ஒரு பதில். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், தங்கள் மகன் மாடியில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறான் என்பதை அவன் நண்பன் வீட்டுக்கு வந்து சொன்ன போது தான் பெற்றோர்கள் தெரிந்து கொள்கிறார்கள் என்றால் என்ன ஒரு கொடுமை! அப்படி என்றால் அவன் அவனுடைய பெற்றோர்களை எந்த இடத்தில் வைத்திருந்திருப்பான்! ஐந்து நிமிடத்திற்கு முன் மேலே சென்ற மகன் நிரந்தரமாய் மேலே செல்லும் அளவுக்கு மனம் வெறுத்துப் போயிருக்கிறான் என்பதை கூட அறிய முடியாத நிலையில் பிள்ளைகள் பெற்றோர்களை வைத்திருக்கிறார்களா?

அமெரிக்காவில் இருந்த என் நண்பனால் விசா பிரச்சனையின் காரணமாக ஈமச் சடங்குக்குக் கூட வர முடியவில்லை!

இன்னொரு கொடுமை, மகனை இழந்த சோகத்தில் அந்தத் தாயும் சென்ற மாதம் இயற்கை எய்தினார்! என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்ல?


 
3 Responses
 1. Sasi Kala Says:

  பெற்றோர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு . வருத்தம் மேலிடுகிறது நிறைய தகவல்களை சொல்லிப் போகும் பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி .


 2. Thanks for your encouraging comments Sasi.


 3. Anonymous Says:

  Pradeep,
  Inda ilaignanin tharkolikku kurippitta kaaranam nizamaaga irukka koodadu enre vendugiren... ivanudaya thavaraana mudivaal avan nanbanukku avandaya vaazhum naazh varai azhiyaada thuyarathai parisaaga koduthuvittu poyirukkiraan...
  ivan irandadai ninaithu varutha padum podu avanudaya nanban vaazh naal muzhudum oru kutra unarchiyudan vaazha vendum enum pozhudu...adu idavida migunda thunbathai tharugiradu...

  --Balaji KRS