அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான் வரிசையில் அமீர்கானின் தொலைகாட்சி வரவு இன்று இனிதே நடந்தேறி இருக்கிறது! சத்யமேவ ஜெயதே! ஸ்டார் ப்ளஸ்ஸில் இதை இன்றிலிருந்து ஒவ்வொரு ஞாயிறும் ஒளிபரப்ப இருக்கிறார்கள். அதோடு மட்டுமில்லாமல், எல்லா மாநில ஸ்டார் சானல்களிலும் இது அந்த அந்த மொழியில் வர இருக்கிறது. அதோடு, தூர்தர்ஷனிலும் வருகிறது. 

இந்த நிகழ்ச்சியைப் பற்றிய கட்டுரையிலிருந்து சற்று விலகி...

தூர்தர்ஷனில் வருகிறது என்பதை  குறிப்பிட்டு ஏன் சொல்கிறேன் என்றால், அந்த ஒரு சானலுக்குத் தான் டிஆர்பி பற்றி கவலையில்லை. சினிமாவையே கட்டிக் கொண்டு அழ வேண்டியதில்லை. தூர்தர்ஷன் கிராமத்தில் இடிந்து போன ஒரு அரசு பள்ளிக்கூடம் மாதிரி, ஆனால் அதிலிருந்து சில சமயம் நமக்கு ஒரு அப்துல் கலாம் கிடைப்பார்! நான் இப்போதெல்லாம் பொதிகை சானலை அடிக்கடி பார்க்கிறேன். அதில் அவ்வப்போது சில ரத்தினங்கள் எனக்குக் கிடைக்கிறது! அன்று எதேச்சையாய் பார்க்கும் போது, மதுரை சின்னபுள்ளையின் நேர்காணல் பார்த்தேன். நம் ஊர் அப்பத்தாக்கள் கிராமத்து திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்து கதை சொல்வதை போல் அவர்களுடைய "களஞ்சியம்"  வெற்றி பெற்ற கதையை விளக்கிக் கொண்டிருந்தார். ஒரு முறை கூட அவர் தட்டுத் தடுமாறி காமெராவை பார்க்கவில்லை. மிக சாதாரானமாய் பேட்டி எடுப்பவரைப் பார்த்து அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார். எங்கள் குடும்பமே அதை ரசித்துப் பார்த்தோம். இப்படிப் பட்ட உருப்படியான நேர்காணல்கள் ஒருபுறம், கவியரங்கங்கள், நெல்லை ஜெயந்தா குழுவினருடன் கவிஞர் வாலியின் பேட்டி, இசை அரங்கம் என்று வெவ்வேறு தளங்களில் நிகழ்ச்சிகள்! அவர்களின் பரிமாறுதல் பழசாய் இருந்தாலும் பதார்த்தம் சுவையானது தான்! அதே போல், அன்று தூர்தர்ஷனில் அமீர்கானின் பேட்டி பார்த்தேன். அதிலும் அவர், தூர்தர்ஷனில் ஒரு நிகழ்ச்சி வருகிறதென்றால் அது உருப்படியான நிகழ்ச்சியை இருக்கும் என்று தான் நானும் அறிகிறேன் என்று சொன்னார். 

நான் கல்லூரியில் படிக்கும் போது, ஃபேர்வல் பார்டிக்கு வந்த கல்லூரி முதல்வர், கமலஹாசனையும் அவர் செய்யும் வேலைக்கு அவர் காட்டும் அர்ப்பணிப்பையும் பற்றிச் சொன்னார். நீங்கள் எல்லாம் இயற்பியலில் இளங்கலை முடித்து விட்டீர்கள், அதைப் பற்றி உண்மையில் என்ன தெரிந்து கொண்டீர்கள் என்று கேட்டார். கமலஹாசனை உதாரணம் காட்டி கல்லூரி முதல்வர் செய்வதை திருந்தச் செய் என்று பேசியது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு வேளை, நடிகர்களை வைத்து சொன்னால் தான் இதையெல்லாம் கேட்பார்கள் என்று அவர் சொன்னாரோ என்னமோ, ஆனால் அது உண்மை தான். இன்று அப்படி ஒரு விழா நடந்தால், அதில் நான் பேசினால், அமீர்கானை வைத்துத் தான் பேசுவேன். போராளி என்றால் சே குவாரா போல் இருக்க வேண்டும், அரசியல்வாதி என்றால் காந்தியை போல் இருக்க வேண்டும், விளையாட்டு வீரன் என்றால் சச்சின் போல் இருக்க வேண்டும், அதே போல் கலைஞன் என்றால் அது அமீர் கான் போல் இருக்க வேண்டும். இப்படி யார் சொன்னது தெரியுமா? நான் தான்! எனக்கு படறதை சொல்றேன்!!

நிகழ்ச்சிக்கு வருவோம். அவர் தொலைக்காட்சிக்கு வருகிறார் என்று உறுதியானதும் ஒரு பிரஸ் மீட் வைத்தார். அன்றிலிருந்து கவனித்து வருகிறேன். எல்லோரும் செய்வதை போல் ஒரு விளையாட்டை விளையாடி விட்டு, சிரித்துப் பேசி நடிகன் என்ற போர்வையில் அவர் இருக்க மாட்டார் என்று எனக்குத் தெரியும். அந்த ஷோவில் நிச்சயம் நடிகர் அமீர்கான் இருக்க மாட்டார், மனிதன் அமீர்கான் தான் இருப்பார் என்று! அதையே அவரின் ப்ரமோ வீடியோக்களும் உறுதி செய்தன. முதல் வார நிகழ்ச்சி பெண் சிசு வதை பற்றியது. இந்தியாவில் எங்கு பெண் சிசு வதை நடக்கிறது, எப்படி நடக்கிறது, இதற்கு யாரெல்லாம் உடந்தை, இதனால் என்ன என்ன பாதிப்புக்கள், இதற்கு தீர்வு தான் என்ன? இப்படி ஒரு நிகழ்ச்சியை ஒரு நடிகன் ஏன் நடத்தை வேண்டும்? என்ற கேள்விக்கு நிகழ்ச்சியில் அவரே பதில் சொல்கிறார். இத்தகைய ஒரு நிகழ்ச்சியை/கருவை உருவாக்கியதில் பெரும் பங்கு இவருக்கு இருக்கிறது. இதை இவரே தயாரித்தும் இருக்கிறார். 

நிகழ்ச்சி அருமையாய் இருந்தது. ஊர் ஊராய் சுற்றியிருக்கிறார்கள். மிகவும் உணர்வுப்பூர்வமாய் படமாக்கியிருந்தார்கள். நிகழ்ச்சியில் அமீர்கான் என்ற நடிகர் இல்லை, அங்கு வந்தவர்களோ, அமீரிடம் வீடியோவில் பேசியவர்களோ, எங்கள் குடும்பமே உங்கள் ரசிகர்கள், நாங்கள் உங்கள் படங்களை தவறாமல் பார்ப்போம் என்று சொல்லவில்லை. அமீர் கான் என்ற மனிதனை தான் மக்கள் இந்த நிகழ்ச்சியில் சந்திக்க வேண்டும் என்று அவர் உறுதியாய் இருந்திருக்கிறார் என்பது தெரிகிறது. அமீர் நாற்பத்தைந்து வயது கடந்தும்அம்சமாய் இருக்கிறார். ஆங்கில வார்த்தை கலப்பில்லாமல் சுத்தமான ஹிந்தியில் பேசுகிறார். அது என்னை போன்ற அரைகுறை இந்தி படித்தவனுக்கு கஷ்டமாய் இருந்தாலும், மிக நன்றாக இருக்கிறது. ஆடம்பரமாய் பெரிய சுழலும் நாற்காலியில் கோட் சூட் போட்டுக் கொண்டு பேசாமல் சாதரணமாய் இருக்கிறார். எந்த வித போலித்தனமும் இல்லாமல் நிகழ்ச்சியில் ஆத்மார்த்தமாய் இருக்கிறார். 

நிகழ்ச்சி முகத்தில் அறைகிறது. மனிதனின் கொடூரத்தை காண சகிக்கவில்லை. இப்படி ஒரு சமூகத்திலா வாழ்கிறோம் என்று கேள்வி எழுகிறது! ஆறாவது அறிவை விடுங்கள், மற்ற ஐந்து அறிவு கூட எங்கே போனது என்று தோன்றுகிறது! சிசு வதை செய்யும் மருத்துவர்களை பற்றி விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கக் கோரி ராஜஸ்தான் முதல்வருக்கு கடிதம் எழுதி இருக்கிறார், அதில் நம்மையும் கலந்து கொள்ளச் செய்திருக்கிறார். ஏதோ ஒரு தீர்வு கிடைத்தால் சந்தோஷம்!

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கொஞ்சம் அழுகாச்சியாய் இருந்தது வழக்கமான ரியாலிட்டி ஷோக்களை ஞாபகப்படுத்துகிறது! இதற்கு காலப்போக்கில் டிஆர்பி ரேட்டிங் எல்லாம் நிறைய எதிர்பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது. அமீர் அலசும் எத்தனை விஷயங்களில் தீர்வு கிடைக்கிறது என்பதை பொருத்து அது மாறலாம்! 

LET US WAIT AND WATCH, BUT A MUST WATCH!