கேங்க்ஸ் ஆஃப் வசைபூர் பார்த்தேன். அற்புதமான படம். ஹிந்தி சினிமா இஷ்க், பியார், மொஹப்பத்திலிருந்து வெகு தூரம் வந்து விட்டது. கரண் ஜோஹர், யஷ் சோப்ரா வகையறாக்கள் இருந்தாலும், விஷால் பரத்வாஜ், அனுராக் காஷ்யப், திபாகர், போன்ற இளம் இயக்குனர்கள் கவனம் கவர்கிறார்கள். எந்த வித அசிங்கத்தை காட்சிப்படுத்தவும் இவர்கள் தயங்குவதில்லை. அனுராக் தான் ராம் கோபால் வர்மாவின் சத்யா படத்திற்கு ஸ்க்ரிப்ட் எழுதியவர். பீக்கு மாத்ரேவாக உலா வந்து எல்லோர் கவனத்தையும் ஈர்த்த மனோஜ் பாஜ்பாய்க்கு மறுபடியும் இந்தப் படத்தில் ஒரு லைஃப் டைம் ரோல் கொடுத்திருக்கிறார்.

"க்யூன்க்கி சாஸ் பி கபி பகு தி" என்ற ஸ்டார் ப்ளஸ்ஸில் வந்த பிரபலமான குடும்ப மெகா சீரியல் டைட்டில் கார்டுடன் படம் தொடங்குகிறது! கேமரா மெல்ல ஜூம் அவுட் ஆனதும் அது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பது தெரிகிறது. ஒரு சின்ன கடையில் சுற்றிலும் ஆண்களும், பெண்களும் நின்று அதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது திடீரென்று துப்பாக்கி குண்டுகள் பட படவென்று சுவரெங்கும் தெறித்து விழுகின்றன! இப்படித் தான் ஆரம்பிக்கிறது அனுராக் காஷ்யப்பின் "கேங்க்ஸ் ஆஃப் வசைபூர்" திரைப்படம். ஊர் பெயர் சரியாகத் தான் பொருந்தி இருக்கிறது! படம் எங்கும் ஒரே வசை தான்!

வசைபூர்  என்னும் உண்மையான ஊரில் வம்சாவழியாய் தொடரும் பழி, துரோகம், வன்மம், பகை இவற்றை கொஞ்சம் உண்மை, கொஞ்சம் கற்பனை கலந்து மிக அசிங்கமாய் [அதாவது அப்பட்டமாய்!] படம் பிடித்துக் காட்டி இருக்கிறார் அனுராக். இது முதல் பகுதி தான். இதன் இரண்டாம் பகுதி தயாராகிக் கொண்டிருக்கிறது. முதல் பகுதியே பட்டையை கிளப்பி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அனுராக் எப்படிப்பட்ட படங்களை எடுப்பார் என்று உங்களுக்குத் தெரிய வேண்டும் என்றால் நான் இரு உதாரணம் சொல்கிறேன். சுப்ரமணியபுரம் படம் பார்த்து விட்டு, சசியை கொண்டாடியவர் அவர். நான் கடவுள் பார்த்து விட்டு, இத்தனை காலம் நானும் காசியில் இருந்திருக்கிறேன், எனக்கு இப்படி ஒரு படம் செய்யத் தோன்றவில்லையே என்று அங்கலாய்த்தவர். இப்போது புரிகிறதா? அவர் ஷங்கர், முருகதாஸ் டைப் கிடையாது! பாலா, அமீர் டைப்! இப்போது உங்களுக்கே புரிந்திருக்கும் படம் எப்படி இருந்திருக்கும் என்று!...


வசைபூர் நிலக்கரிச் சுரங்கங்களின் தலைநகரம். நிலச் சுரங்கத்தின் அரசியல், முதலாளி வர்க்கத்தின் சுரண்டல், சந்தர்ப்பவாத மனிதர்கள் என்று இந்த ஊரில் 1941 ல் இருந்து இன்று வரை நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை. என் அம்மாவை கொன்னவனை நான் பழி வாங்காம விட மாட்டேன் என்று அம்மா பிணத்தின் மீது சிவந்த கண்களுடன் சத்தியம் செய்வாரே நம் தமிழ் சினிமா கதாநாயகன், அதே போன்ற கதை தான். ஆனால் இந்தப் படத்தில் அப்படி எல்லாம் எந்த அபத்தமும் செய்யாமல் அமைதியாய் மொட்டை அடித்துக் கொள்கிறான் கதாநாயகன். இப்படி ஒரு சாதாரண கதையில் தான் எத்தனை விதமான முகத்திலறையும் சம்பவங்கள், எத்தனை சுவாரஸ்யமான காட்சிகள்!  தன் தந்தையை கொன்றவனை துப்பாக்கியால் கொல்ல விரும்பவில்லை அவன்! அவனுடனே வளர்ந்து, அவனுக்கு எதிராய் நிமிர்ந்து அவன் இருக்கும் இடத்தில் அவனை விட மிரட்டலாய் ஆட்சி செய்து அவனை அசிங்கப்படுத்த விரும்புகிறான். அது தான் அவன் சபதம்! இது தான் வட்டாரம் படத்தின் கதை என்று இந்தப் படத்தை கேவலப்படுத்தி விடாதீர்கள்!

மனோஜின் மனைவியாய் வருபவர் அசத்தலாய் நடித்திருக்கிறார். ரீமா சென்னை எப்படி இந்தப் படத்தில் போட்டார்கள் என்று தெரியவில்லை. அவருக்கு நிறைய்ய வேலை இல்லை தான். முக்கால் வாசி முதுகு தெரிய வந்து மனோஜின் குழந்தைக்கு தாயாகிறார். ஒரு வேளை அடுத்த பாகத்தில் இவருக்கு வேளை இருக்கிறதோ என்னமோ. கஹானி படத்தில் சிபிஐ அதிகாரியாக வந்து மிரட்டியவர் இந்தப் படத்தில் அப்படியே சாதுவாய் மாறி விட்டார். இவரின் ஆட்டத்தையும் இரண்டாம் பகுதியில் தான் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன். படத்தில் பாடல்கள் ஒவ்வொன்றும் பட்டையை கிளப்புகிறது. "இக் பகல்" என்ற பாடல் பழங்காலத்தில் கிராமஃபோனில் கேட்கும் பாடலை நினைவுபடுத்துகிறது. சத்யமில் பார்த்தது இன்னும் சுகமாய் இருந்தது. இந்தப் படத்தின் அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
சத்யமேவ் ஜெயதே பார்க்கிறீர்களா? இல்லையென்றால் தவறாமல் பாருங்கள். நம் நாட்டில் தான் எத்தனை விதமான பிரச்சனைகள்! அதை பார்க்கும் போது மனது வலித்தாலும், ஒவ்வொரு பிரச்சனையையும் கையில் எடுத்துக் கொண்டு தொடர்ந்து போராடும் ஒரு சிலர் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்களைப் பார்க்கும் போது லேசாய் ஒரு நம்பிக்கை துளிர் விடுகிறது. என்ன ஒன்று, நூறு பேர் தப்பு செய்பவர்களாய் இருந்தால், ஒரே ஒருவர் அதை தவறு என்று சொல்பவராக இருக்கிறார். அரசியல்வாதிகளை சொல்லி புண்ணியமில்லை, மக்களின் மனதில் தான் மாற்றம் வர வேண்டும். நிகழ்ச்சியை பற்றி பல விதமான விமர்சனங்கள் வந்தாலும், என்னை பொருத்தவரை ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு, நன்மை தீமைகளை ஆராய்வது நன்றாய் இருக்கிறது. இறுதியில் இப்படிச் செய்தால் நன்மை விளையும் என்று சில எடுத்துக் காட்டுகளை காட்டுவது நம்பிக்கை விதைக்கிறது. நிகழ்ச்சியை தயவு செய்து பாருங்கள்!
-------------------------------------------------------------------------------------------------------------------------------
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி ஒரு வழியாய் முடிந்து விட்டது. கடைசி எபிசோடில் சிவக்குமார் வந்தார். அவரிடம் ஒருவர், உங்கள் பிள்ளைகளை மிக நன்றாய் வளர்த்திருக்கிறீர்கள் [?] எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்று சொல்லிக் கொடுங்கள் என்றார்! அதற்கு சிவக்குமார் ஒரே வரியில் ஒரு அற்புதமான பதிலை சொன்னார். "நீங்கள் ஒழுக்கமாய் இருங்கள், உங்கள் பிள்ளைகள் தானே வளர்வார்கள்!" மிகச் சரி! நிகழ்ச்சிக்கு வருவோம்; முதல் சீசன் முடிந்தது என்கிறார்கள். சூர்யாவே சொல்வது போல், மாற்றம் ஒன்று தானே மாற்றம் இல்லாதது. அந்த மாற்றத்தில் இவரை தூக்கி விட்டு வேறு யாரையாவது போடுகிறார்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சூர்யா இந்த நிகழ்ச்சியை எடுத்து நடத்தியது ஒரு நல்ல முயற்சி தான். ஒவ்வொரு படமும் வர ஆறு மாதம், ஒரு வருடம் ஆகும் காலத்தில், நான் இன்னும் இங்கு தான் இருக்கிறேன் என்று நம் வீட்டின் வரவேற்பறையில் நடிகர்கள் வந்து உட்கார்ந்து கொள்வது தொலைகாட்சி அவர்களுக்கு அளித்த வரம். அவரே சொல்வது போல், இது ஒரு நல்ல வொர்க் ஷாப் அவருக்கு. ஆனால், நமக்கு எப்படி இருந்தது என்று கேட்டால் அது கேள்வி தான்! நிறுத்தி நிறுத்தி, இழுத்து இழுத்து பேசுவதும், THANK YOU THANK YOU என்று அழுத்தி அழுத்தி உச்சரிப்பதும் எரிச்சலாய் தான் இருந்தது. இந்த மாதிரி நிகழ்ச்சியை நடத்த நல்ல டைமிங் சென்ஸ் மிக அவசியம். கொஞ்சம் விஷயம் தெரிந்திருக்க வேண்டும். அதை சுவாரஸ்யமாய் சொல்லத் தெரிய வேண்டும். பனிரெண்டாம் வகுப்புல எவ்வளவு மார்க் என்று சூர்யா கேட்டதற்கு பின்னால் இருந்த சிவகார்த்திகேயன், "ஏன்பா பனிரெண்டாம் வகுப்பு படிச்சே?" என்பது மாதிரியான நக்கல் மிக அவசியம் :-)! சிவகார்த்திகேயனிடம் அது ஏராளமாய் இருக்கிறது என்பதற்காக அவர் இதை நடத்த முடியாது. இந்த நிகழ்ச்சியை நடத்துபவருக்கு ஒருவித கரிஷ்மாவும் இருக்க வேண்டும்! என்னை பொறுத்தவரை அமிதாப் இதற்கு மிகச்சரியாய் பொருந்தினார். ஷாருக்கும் அமிதாப்பிற்கு இணையானவர் தான் என்றாலும், அமிதாப்பின் நிகழ்ச்சி சோபித்த அளவுக்கு ஷாருக்கின் நிகழ்ச்சி சோபிக்கவில்லை. அது போல் தமிழில் யார் இருக்கிறார்கள் என்று யோசிக்கிறேன்...இன்னும் யோசித்துக் கொண்டு தான் இருக்கிறேன்!
1 Response
  1. Anonymous Says:

    ஆஹா, அருமையான நகைசுவை உணர்வுடன் கூடிய வலைப் பதிவு. அருமை பிரதீப்.மேலும் மேலும் எழுதுங்கள்.