நல்ல தலைப்பு. அந்த தலைப்புக்கும் படத்துக்கும் சம்மந்தம் புரியவில்லை. வழக்கமான ராஜேஷ், /, சந்தானம் [/ = பார்] கூட்டணி. திரும்பி கூட பார்க்காத ஒரு பெண்ணை துரத்தி துரத்தி காதலிக்க வேண்டியது, இல்லை கட்டாயப்படுத்த வேண்டியது. பொண்ணுங்களே இப்படித் தான் என்று சந்தானம், தண்ணி சகிதம் பெண்களை படம் பூரா திட்ட வேண்டியது. பிறகு என்ன திட்டினாலும் நான் அவளை தான் லவ் பண்றேன்னு கல்யாணம் பண்ணி சுபம் போட வேண்டியது. மூன்று படங்களுக்கும் ஒரே ஃபார்முலா.
தமிழ் சினிமாவில் கதாநாயகனாக பிறந்திருக்கலாம். வேலா வேலைக்கு சாப்பாடு. பெயருக்கு ஒரு வேலை என்று சொல்லி விட்டு ஒரு சீனில் அதை செய்து விட்டு, பிறகு வேலைக்கே போகத் தேவையில்லை. அப்படியும் மிக அழகான ஃபிகர் நம்மை காதலிக்கும். ஃபாரின் லொகேஷன் சாங்க்ஸ். கொதிக்கும் சென்னையில் கழுத்து வரை ஒரு டீ ஷர்ட் போட்டு அதன் மேல் ஒரு காட்டன் ஷர்ட் போட்டுக் கொள்ளலாம்.
உதயநிதி சேஃபாய் இறங்கியிருக்கிறார். வளராத மீசையும், தாடியுமாய் நடிகர் ஜீவாவை நினைவுபடுத்துக்கிறார். இயல்பாய் நடிக்க முயற்சித்திருக்கிறார். இதில் நடிக்க என்ன இருக்கிறது, காமெரா பார்க்காமல் வசனத்தை மனப்பாடமாக பேசத் தெரிந்தால் போதும். ஐ ஆஃப் தி ஒய் ஆஃப் டயலாக் சூப்பர்.
சந்தானம். ராஜேஷின் உண்மையான ஹீரோ இவர் தான். இவரை நம்பித் தான் அவர் கதையே எழுதுகிறார் போல. சந்தானம் இல்லாத ஒரு படத்தை எடுத்து ராஜேஷ் வெற்றி பெற்றால் தான் நான் நம்புவேன். பிராமணத் தமிழ், ஆங்கிலம் என்று மயிலாப்பூர் பார்த்தாவாக நல்ல மாடுலேஷன். ஆனால், திடீர் திடீர் என்று அந்த மாடுலேஷனை மறந்து விட்டு சந்தானம் ஆகி விடுகிறார்.
ஹன்சிகா ஒரு சாயலுக்கு குஷ்பு மாதிரி தான் இருக்கிறார். முதல் படத்தை விட பரவாயில்லை. கொஞ்சம் நடித்திருக்கிறார். கடைசி கல்யாண சீனை தவிர படம் முழுதும் பொட்டு வைக்காமல் முஸ்லீம் பெண் போல் வருகிறார். ஆனால் அது உருத்தவேயில்லை. சரண்யாவையும் ஹன்சிகாவையும் பக்கத்தில் பார்த்தால் இந்த வீட்டுக்கு இவர் எப்படி மருமகள் ஆக முடியும் என்று கேள்வி எழுகிறது.
சரண்யா "லூசு அம்மா" காரெக்டரை நிறுத்த வேண்டும். அலுக்க ஆரம்பிக்கிறது. நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் நடிப்புப் பயிற்சி பெற்ற சண்முகராஜன் என்ற அருமையான நடிகரை, கமலஹாசன் விருமாண்டியில் போலீஸ் காரெக்டர் கொடுத்தார் என்பதற்காக இன்று வரை கொஞ்ச நேரம் வரும் போலீஸ் கதாப்பாத்திரம் என்றால் அது சண்முகராஜன் தான்! எந்த படத்தில் பார்த்தாலும் போலீஸ் உடுப்பில் தான் இருக்கிறார். அது போல இது. காமெடி அம்மா சரண்யா, அழுகாச்சி அம்மா கூத்துப்பட்டறை கலாராணி! இது தமிழ் சினிமாவின் சாபக் கேடு.
சினிமா என்பது விஷுவல் மீடியம். காமெடியாய் இருக்கிறது என்பதற்காக படம் முழுவதும் இருவர் பேசிக் கொண்டே இருப்பது சினிமா கிடையாது. ராஜேஷுக்கு அது புரியாமல் இருக்காது. அடுத்த முறையாவது ராஜேஷ் ஒரு சினிமா எடுக்க முயற்சிக்க வேண்டும்.
இவ்வளவையும் சொல்லி விட்டு, ராஜேஷ் அடுத்த படத்தில் எனக்கு ஒரு சான்ஸ் தந்தார் என்றால் உடனே நான் ஒப்புக் கொள்வேன். இதில் எனக்கு வெக்கமே இல்லை. ஏன் என்றால்...
To correct the system, you have to be in the system!