சத்திரத்தில் கிடக்க வேண்டும். வானம் இருட்டிக் கொண்டு வருகிறது. சேலை நுனி சிவப்பாய், இல்லை கருஞ் சிவப்பாய் அப்படியே பரப்பிக் கொண்டே ஓடுகிறாள், சினிமாவில் கனவுக் காட்சியில் ஓடுவதை போல...ஒரு நீரோடை ஓடுகிறது. எங்கும் யவ்வனம். அமைதி. சாந்தி. என் கண்களை மூடி ரசிக்கிறேன். காற்று என் முகத்தில் அறைகிறது. தூரத்தில் ஒரு யானை தண்ணீர் குடிக்கிறது. மனதில் தோன்றுவதை நான் அப்படியே எழுதவில்லை, இங்கு எழுதக் கூடியதை மட்டும் எழுதுகிறேன் என்று தெரிகிறது. மீண்டும் மீண்டும் மனதில் முலைகள் தெரிகிறது. நல்ல ஓங்கு தாங்கான முலைகள். முகம் தெரியவில்லை. வானத்தின் நீலம் தண்ணீரில் தெறிக்கிறது. மீன்கள் துள்ளி ஓடுகின்றன. ஓடையின் சத்தம் ரம்மியமாய் இருக்கிறது. நான் ஒரு கட்டில் தான் உட்கார்ந்திருக்கிறேன். கருப்பு சேலை உடுத்திய பெண். சிவந்த பொட்டு நெற்றியில் இட்டு என்னை பார்த்து சிரிக்கிறாள். அவள் ஏனோ சானா கானை போல் இருக்கிறாள். சானாவை ஏன் நினைத்தோம் என்று நினைக்கும்போது வித்யா பாலன் தோன்றி மறைகிறார். ஒரு ஆணின் மனம் என்ன நினைக்கிறது என்று ஆராய்ந்தால் அதில் முக்கால்வாசி பெண்களின் ஞாபகம் தான் இருக்குமோ என்று தோன்றுகிறது.

திடீரென்று மேல் சொன்ன அத்தனையும் ஒரு சினிமா படம் போல் திரைக்குள் போய் விடுகிறது. ஒரு திரையரங்கு தெரிகிறது. மக்கள் மெய் மறந்து இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் எங்கே என்று தேடுகிறேன். யாரோ ஆர்டர் செய்த தின்பண்டங்களை எடுத்துக் கொண்டு ஒருவன் இருட்டுக்குள் தட்டுத் தடுமாறி வருகிறான். திடீரென்று சென்னையின் முக்கியமான சாலை தெரிகிறது. எல்.ஐ.சி. பில்டிங் தானே அது? எத்தனை வாகனங்கள். விர் விர்ரென்று போகின்றன. எதிரில் உள்ள கட்டிடத்தில் வாழை இலை போல் உள்ள ஒன்று மயில் தோகை போல் விரிந்து பரந்திருக்கிறது. மயில் என்றதும் நேற்று செய்தித்தாளில் படித்த மயில்கள் இறந்த செய்தி ஞாபகம் வருகிறது. மூளையின் திறனை நினைத்து வியக்கிறேன். எப்படி முடிச்சுப் போடுகிறது ஒவ்வொரு ஞாபகத்திற்கும். கருப்பு நிறப் பெட்டியும், சைதாப்பேட்டையும் தெரிகிறது. அங்கு ஆட்கள் சாலையை கடக்கிறார்கள். அருகில் ஹெல்மட் அணிந்த ஒருவன் கிளம்பத் தயாராயிருக்கிறான். இவன் எங்கு போய்க் கொண்டிருப்பான்? இவன் கதை என்ன? எத்தனை மனிதர்கள், எத்தனை வாழ்க்கை? எத்தனை கதைகள்? யார் இவர்கள்? இந்தக் கணத்தில் இவர்களுடன் நான் இருக்க எது என்னை விதித்தது? உளறாதே என்கிறது மனம்.

ராஜ்பவன் வரை வந்து விட்டேன். அந்த கேட்டை தாண்டி என்ன ஒரு அமைதி. இரு காவலர்கள் காவல் காத்து நிற்கிறார்கள். ஒரு இலக்கில்லாத பயணம் போல உள் செல்கிறது ஒரு தார் சாலை. ஒரு குப்பை இல்லை. கவர்னர் இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்? கவர்னர் என்றதும் ஏன் தலைப்பாகை போட்ட ராதாகிருஷ்ணன் ஞாபகம் வருகிறார். ரோசைய்யாவை ஞாபகப்படுத்திக் கொண்டேன். வழுக்கை தலை, வயதான ஆள். குர்தா, வேஷ்டியில் மெல்ல படியிறங்குவது போல்! மான்கள் அவரை வழி மறிக்கவில்லை தான், மறித்தால் எப்படி இருக்கும்? மான்கள் விளையாடும் ஒரு பெரிய பங்களாவில் தனக்கு வாழ்க்கை வாய்த்திருப்பதை நினைத்து அவர் என்றாவது மகிழ்ந்திருப்பாரா? அத்தனை ரசனை உள்ளதாய் இருக்குமா அவர் வாழ்க்கை? புள்ளி மான்கள் என்ன அழகு!

"ஒரு டீக்கடையை" நினைத்துப் பார்க்கிறாயா என்று ஒரு கோடு காட்டி விட்டு மேலும் தொடர்கிறது மனம். மாஸ்டர் டீயை உயர உயர அத்துகிறார். ஜனங்கள் சாலையை வெறித்தபடி, வாழ்க்கையை வெறுத்தபடி [இந்த வாக்கியத்தை என்னுள் இருந்த அறிவுஜீவி எழுத்தாளன் கோர்த்துக் கொள்கிறான்!] டீ குடிக்கிறார்கள். வாகங்களின் இரைச்சல், புகை...அப்பப்பா..என்ன நகரம் இது? நரகம்! மனம் மூனாரை கற்பனை செய்கிறது. எத்தனை வேறுபாடு. பச்சை கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கிறது. அந்த அழகை ரசிப்பதற்குள், ஒரு தேயிலை செடியின் கீழ் யாரோ குடித்துப் போட்ட பிளாஸ்டிக் கப் கண்ணில் படுகிறது. முகம் வாடுகிறது. பெரியவர்களை மதிப்பது நல்ல பழக்கம். அப்படி என்றால் இயற்கை எவ்வளவு பெரியவர்? ஏன் அவரை நாம் மதிப்பதே இல்லை? திடீரென்று அங்கிருக்கும் கட்டடங்கள் சரிந்து விழுகிறதை நான் எழுதப் போவதில்லை. உத்தரகண்டில் நடந்ததை பார்த்து விட்டு காப்பி அடித்து விட்டான் என்று சொல்வார்கள்.

அடுத்து நினைப்பதை அடுத்த பாராவிற்குள் எழுத வேண்டும் என்று மனம் கட்டளையிடுகிறது. அதன் கட்டளைப்படி...கட்டளைப்படி நடக்க வேண்டும், தொட்டனைப்பதே எனக்குப் போதும். ஒரு இறைவன் வரைந்த கதை..புதிய கவிதை..புதிய கவிதை..கதை முடிவும் தெரியவில்லை! ஆஅ.........ஒரு கிளியின் தனிமையிலே இரு கிளியின் உறவு, உறவு உறவு உறவு உறவு...ஏசுதாசுடன் சித்ராவின் குரல் மனதில் கேட்கிறது. அந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதம் இப்போது பார்த்தால் சிரிப்பாய் இருக்கிறது. இந்த அளவு கற்பனை வறட்சி உள்ளவர்களுக்கா இளையராஜா அப்படி பாட்டு போட்டுக் கொடுத்தார்? மணிரத்னம் தான் கொஞ்சம் ஜஸ்டிஃபை செய்தார். இதை தமிழில் எப்படி எழுதுவது? ஜஸ்டிஃபை செய்தார் என்பதை? எவ்வளவு யோசித்தும் வரவில்லை. நம் தாய்மொழியில் எழுதுவதற்கு நமக்கு வரமாட்டேன் என்கிறது!

தாய்மொழி என்றதும் பள்ளியில் படித்த நிறைய செய்யுள் உனக்கு இன்னும் மனப்பாடமாய் தெரியுமே, என்று மனம் ஞாபகப்படுத்துகிறது. அன்று அப்படி பீற்றிக் கொண்டு இரண்டு வரி பாடியதும் மறந்திருந்தது தெரிந்தது. பாதகமில்லை. மீண்டும் முயற்சிக்கலாம். அங்கிங்கெனாதபடி ஆனந்த பூர்த்தியாகி, இடையில் ஏதோ வருமே...[கடைசியில் ஞாபகம் வந்தது, எங்கும் பிரகாசமாய்] தன்னருள் வெளிக்குள்ளே அகிலாண்ட கோடியெல்லாம் தங்கும் படிக்கிச்சை...மறந்து விட்டது. இது ஏழாவதில் வந்த செய்யுள். மெய்தான் அரும்பி விதி விதிர்த்து உன் விரையார் கழர்க்கென் கை தான் தலை வைத்து கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் பொய் தான் போற்றி சய சய போற்றி என்னும் உடையாய் என்னை கண்டு கொள்ளே! இல்லை, சொதப்புகிறேன். எட்டாவது பாடமும் மறந்து விட்டது. எல்லாம் மறந்து விட்டது. எப்போது மறந்தது? இந்த செய்யுள்களை ஞாபக அடுக்கிலிருந்து கழட்டி விடலாம் என்று மூளை எப்படி முடிவெடுத்தது? எனக்குத் தேவைப்படாது என்று அதற்கு எப்படித் தெரியும்? புரியவில்லை.

என்னங்க மண்டை காய்ஞ்சுருச்சா? நிறுத்திட்டேன். ஒண்ணுமில்லை. கண்ணை மூடி கொஞ்சம் சிந்திச்ச நம்ம மனம் எவ்வளவு யோசிக்குது? அதை ஆவணப்படுத்தினா எப்படி இருக்கும்னு ஒரு விபரீத ஆசை. மனம் யோசிப்பதை எழுதினேனா, அல்லது இதை எல்லாம் யோசி என்று மறைமுகமா அதை தூண்டினேனா தெரியவில்லை. இன்னும் ராவா வரும்னு தான் நெனைச்சேன். இன்னொரு தடவை இரக்கமேயில்லாமல் கத்தரிக்காமல், வெட்டி ஒட்டாமல் எழுதி பாக்கணும். முதலில் எனக்கு இந்த நினைப்பு 2005ல் வந்தது. பலமுறை எழுதி எழுதி பார்த்தேன். இப்போது தான் ஒரு கோர்வையாய் வந்திருப்பது போல் தோன்றுகிறது. பரவாயில்லை, வெட்டி ஒட்டி எழுதினாலும், என் மனம் அத்தனை அசிங்கமாய் எதையும் யோசிக்கவில்லை. ஒருவேளை எழுதிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிந்து கொஞ்சம் பொறுப்புடன் அது செயல்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. இப்போ என் மனம் என்ன சொல்லுதுன்னா...முன்பு வலையுலகில் மற்றவருக்கு அழைப்பு விடுத்து விளையாடுவது போல் [அப்படி எந்த விளையாட்டும் இப்போது நடப்பதில்லையா?] இதை விளையாடி பார்க்கலாமேன்னுது! என்ன சொல்றீங்க? உங்க மனம் என்ன சொல்லுதுன்னு எழுதி பாருங்களேன்! சுவாரஸ்யமா இருக்காது? இதுக்கு முன்னாடி இந்த மாதிரி யாரவது முயற்சி பண்ணியிருக்காங்களா?
2 Responses
  1. Anonymous Says:

    I did, but I'm not a blogger.... I let my thinking go and tried to follow it..... It was amazing that the speed and memory of our mind....


  2. :-) it was nice is itn't?

    its an interesting subject, even v write it or not, everybody should follow and see :-)