"ராஞ்சானா" விமர்சனத்தின் போதே எழுத வேண்டும் என்றும் நினைத்தேன். மறந்து விட்டேன். "சிவாஜி", "எந்திரன்" படங்களின் டிரைலர் வந்த போது கூட எப்போது படம் வரும், பார்ப்போம் என்ற ஆவல் அதிகம் வரவில்லை. ஒரு தமிழ் படத்தின்  டிரைலரை பார்த்து எப்போடா இந்த படம் வரும் என்று நான் ஆவல் கொண்டது இந்தப் படத்துக்குத் தான்! [டிரைலரை கட் பண்ணவன் புத்திசாலி, எல்லா நல்ல சீனையும் அதுல வச்சுட்டான்!] அப்போதே அய்யயோ, இவ்வளவு ஆவலா இருக்கோம், டிரைலர் மாதிரி படம் இருக்குமா என்று உள்ளூர ஒரு சந்தேகமும் வந்தது.

- மரியான் என்று உண்மையில் யாருக்காவது பெயர் வைப்பார்களா? கதைக்காக தனுஷின் பெயரை  வேறு ஏதாவது வைத்து விட்டு, ஒரு குறிப்பாய் படத்துக்கு இந்தப் பெயர் வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.


- ஒரு காதல்; ஒரு பிரிவு; இருவரும் இணைந்தார்களா இல்லையா? இது தான் மரியான் கதை. என்ன புதுமையான கதை பாருங்கள்!

- பரத்பாலவுக்கு கதாபாத்திரங்களுக்கு நல்ல பெயர் வைக்கத் தெரிந்திருக்கிறது. மரியானும் சரி, பனிமலரும் சரி. அற்புதமான பெயர்கள் இல்லையா?

- இந்தக் கதையை எடுக்க பரத்பாலாவை எது உந்தியிருக்க வேண்டும் என்று யோசிக்கிறேன்? என்ன புதுசாய் இருக்கிறது இந்தக் கதையில்? தனுஷா? அப்புறம், தமிழ் மக்களுக்கு அப்பிரிக்காவின் சூடான் பிரதேசம் பரிட்சயமிருக்காது, அங்கே ரெண்டு சிறுத்தையை காட்டி மிரட்டிரலாம், அப்புறம்,  எப்படியும் இசையமைக்க ரகுமானை போட்டு விடலாம், ஒரு மினிமம் கியாரண்டி என்று நினைத்திருப்பாரோ?

- அரதப் பழசான கதையையும் நல்ல ஒரு ட்ரீட்மென்ட் மூலம் அழகாகவும், சுவாரஸ்யமாகவும் ஆக்கி விடலாம். அப்படிப்பட்ட சுவாரஸ்யங்களும் படத்தில் கம்மி தான்.

- இந்த படத்தை இரண்டரை மணி நேரம் உட்கார்ந்து மக்கள் பார்க்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் தனுஷும், பார்வதியும் தான். இருவரும் அருமையாய் செய்திருக்கிறார்கள். தனுஷை பற்றி கேட்கவே வேண்டாம். காதல், வெட்கம், கோபம், பயம், என்று முகத்திலேயே ஃபுல் பாடி லாங்குவேஜ் காட்டுகிறார்.

- பார்வதி சில சமயங்களில் தேவதையாய் தெரிகிறார்; சில சமயங்களில் தேவைக்கேற்ப தெரிகிறார். மற்ற கதாநாயகிகளை நினைத்துப் பார்க்கும்போது இவர் நடிக்கத் தான் வந்திருக்கிறார் என்று தோன்றுகிறது!

- ரகுமானின் பெயரை போட்டதும் தியேட்டரே ஆர்ப்பரிக்கிறது. "நெஞ்சே எழு" எனக்குப் பிடித்தது. "கடல் ராசா" பரவாயில்லை. பல்லவியை தவிர மற்ற வரிகள் ரொம்ப சாதாரணம். [பல்லவியை யாரு எழுதினா?]  மற்றபடி எல்லாம் சாதாரண பாடல்கள் தான். ஆனால் இந்தப் படத்திற்கு இத்தனை பாடல்கள் தேவையேயில்லை. அவைகள் கதைக்கு மிகப் பெரிய தொய்வை ஏற்படுத்துவதாய் உணர்ந்தேன்.

- ஒளிப்பதிவுக்காகவும் இந்தப் படத்தை பார்க்க விரும்பினேன். நான் செய்த தவறு, நங்கநல்லூர் வெற்றி தியேட்டருக்கு சென்றது. படத்தின் ஆரம்ப காட்சிகள் அதீத ஒளியுடன் இருந்தது. சரி ஆப்ரிக்க வெயிலை அப்படி படம் பிடித்திருப்பார்கள் என்று நினைத்தேன். கருமம், படம் முடியும் வரை அப்படித் தான் இருந்தது. கடலின் நீலமே கண்ணுக்குத் தெரியவில்லை! ஒளியும் சரியில்லை, ஒலியும் சரியில்லை!

- ஆக மொத்தத்தில் என்னை பொருத்தவரை, படத்தில் நடிகர்கள் நன்றாய் நடிக்கிறார்களோ இல்லையோ, படத்தின் பிரஸ் மீட்டுகளில் "இப்படி ஒரு படத்தை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது!" இந்தப் படத்தை நான் ஒத்துக்கிட்டதே இந்த படத்தோட கதைக்காக தான் என்றெல்லாம் பீலா விட்டு, இமாலய நடிப்பு நடித்து நம் பையில் உள்ள நூறு ரூபாயை புடுங்கிக் கொள்கிறார்கள்.

2 Responses
  1. Ram Says:

    I don't know how you missed the other good songs..apart from nenje elu...
    like enga pona raasa...which I feel is one of the best songs...


  2. தகவல்கள்அறிந்து கொண்டேன் நன்றி