ஒரு பெண்ணின் பின்னால் பைத்தியமாய் திரிபவனை வட இந்தியாவில், அதுவும் குறிப்பாய் பஞ்சாப் மாநிலத்தில் "ராஞ்சானா" என்று அழைப்பதுண்டு. நம் ஊரில் அம்பிகாபதி, அமராவதி போல், அவர்கள் ஊரில் ஹீர், ராஞ்சா! [காலா காலத்துக்கும், ஊருக்கு ஒரு அமர காதல் காவியம் இருந்தும் இன்றும் காதலை எதிர்க்கிறார்கள்!] ராஞ்சா ஹீரின் பின்னால் காதல் பைத்தியம் பிடித்து சுற்றியது போல் இந்தப் படத்தில் தனுஷ் சோனம் கப்பூரை சுற்றுகிறார். "கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டி விட்டால் மண்ணில் இளைஞர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்" என்பது போல்...அவரின் காதலுக்காகவும் அவளின் ஒரு கடைக்கண் பார்வைக்காகவும் தன் வாழ்வையே அர்ப்பணிக்கிறார். அதனால் "ராஞ்சானா"

தனுஷுக்கு இதை விட அற்புதமான என்ட்ரி பாலிவுட்டில் கிடைப்பது அரிது. இந்தப் படம் எப்படி சாத்தியமானது என்றே ஆச்சர்யமாய் இருக்கிறது. "கொலைவெறி" பாடல் என்ன தான் புகழ் பெற்றாலும், தனுஷை கூப்பிட்டு படம் முழுதும் வியாபித்திருக்கும் [படம் விட்ட பிறகு நம் மனமெங்கும் வியாபித்து விடுகிறார்!] ஒரு கதாபாத்திரத்தை கொடுப்பதென்றால் சாதரணமா? அதுவும் செக்கச் செவேல் வட இந்தியர்கள், தனுஷ் மாதிரி ஒரு மாநிற ஒல்லிபிச்சானை எப்படி யோசித்தார்கள்? தனுஷை இந்த அளவு தூக்கி நிறுத்த அபே தியோல் வேறு உப்புக்குச் சப்பாணி போல் வந்து போகிறார். கேட்டால், இந்தக் கதைக்கு தனுஷ் தான் பொருந்துவார் என்று காதில் பூ சுற்றுகிறார்கள். புரியவில்லை. ஒரு வேலை, தேசிய விருது செய்த மாயமோ? இருந்தும், இது ஒரு இனிய ஆச்சர்யம் தான். அதே ஆச்சர்யம் இது வரை தனுஷை பார்க்காத வட இந்தியர்களுக்கும் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. தனுஷ் பட்டையை கிளப்பி இருக்கிறார். [இதற்கு வேறு வார்த்தையே இல்லையா? "ரவுசு விட்டிருக்கிறார்" எப்படி?]

தனுஷ் உடலில் சதை போடாத வரை, இன்னும் பத்து வருடங்களுக்கு பள்ளியில் படிக்கும் பையனாக நடிக்கலாம்! அவர் உடலின் தன்மையை வைத்து மட்டும் சொல்லவில்லை, நடிப்பில் அவரின் உடல் மொழியையும் பார்த்து சொல்கிறேன். அந்த விடலை வயதிற்கே உரிய துருதுருப்பு, குறுகுறுப்பு, சுறுசுறுப்பு என்று எல்லா பருப்புக்களையும் தன் உடல்மொழியில் கொண்டு வந்து விடுகிறார். "3" படத்திலேயே நாம் பார்த்து விட்டாலும், "வட" இந்தியர்கள் "அட!" போட்டிருப்பார்கள் என்பது நிச்சயம்! தனுஷ் பத்து வருடத்துக்கு முன்னால் சேர்ந்தாற்போல் நாலு வார்த்தை இங்கிலீஷ் கூட பேசத் தெரியாதவராய் இருந்தார். இன்று ஹிந்தி, இங்கிலீஷ் என்று சகலத்திலும் செம! ஆங்காங்கே ஹிந்தி உச்சரிப்பு சரியாய் வர வேண்டும் என்று அழுத்தி பேசியது தெரிகிறது, ஆனால் பெரும்பாலான இடங்களில் அசத்தல், அக்மார்க் ஹிந்தி!தனுஷின் உடல்மொழியை பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன் இல்லை? பல இடங்களில் அவரது நடிப்பில், உடல் மொழியில், ரஜினியை பார்க்கிறேன். பல்லைக் கடித்துக் கொண்டே, சிரித்தபடி ஓடும்போதும், இடுப்பில் கை வைத்துக் கொள்ளும்போதும், சில க்ளோசப்புகளில் தெரிகிறது! அவர் தெரிந்து செய்கிறாரா, அல்லது இயல்பாய் அப்படி வந்து விடுகிறதா தெரியவில்லை. நான் எல்லாம் ரஜினி படம் பார்க்கும்போது நானே பாதி ரஜினியாய் தான் இருப்பேன். அவர் பேசப் பேச, நமக்கும் கண்கள் சிறுத்து, மூக்கு புடைத்து விடும்! ரஜினி மாதிரி மாறும் ஃபீல் நமக்கு நல்ல தான் இருக்கும், அப்போது நம்மை பார்ப்பவர்களை அது செம காண்டாக்கிவிடும். அதனால் இதையெல்லாம் தனுஷ் குறைத்துக் கொள்வது நல்லது. அவருக்குத் தான் நல்லா நடிக்க வருதே, அப்புறம் எதுக்கு இதெல்லாம்?படம் முழுதும் தனுஷ், தனுஷ், தனுஷ் தான். சிரிக்கிறார், முறைக்கிறார், அழுகிறார். கதை ஒன்றும் புதுமையான கதை இல்லை. ஒரு பையன், ஒரு பெண்ணை சின்ன வயதில் இருந்தே காதலிக்கிறான். விஷயம் தெரிந்து அந்தப் பெண்ணை ஊர் கடத்தி விடுகிறார்கள். பல வருஷம் கழித்து திரும்பு வரும் அவள் இவனை சுத்தமாய் மறந்து வேறொருவனை காதலிக்கிறாள். அவனை கல்யாணம் பண்ண அவள் இவனின் உதவியையே நாடுகிறாள். தனுஷ் செய்த பிழையால் கல்யாணம் நின்று, அந்தப் பையன் இறந்து விடுகிறான். அந்த குற்ற உணர்வில் அவளுக்காகவே அவன் வாழ முற்படுகிறான். இறுதியில் அவளுக்காகவே உயிர் துறக்கிறான். எண்ட் டைட்டிலுக்கு வெள்ளித் திரையை பார்க்க! [பின்ன? நான் தான் ஃபுல்லா சொல்லிட்டேனே!]

முதல் பாதியில் க்யுட்டாய் ஒரு சிறு நகரில் உலவி வந்த ஒரு சாதாரண பையன் இடைவேளைக்குப் பிறகு சூப்பர் ஹீரோ ரேஞ்சுக்கு ஆகி விடுகிறார். தனுஷ் தொட்டதெல்லாம் துலங்குகிறது, எந்த பிரச்சனை வந்தாலும் தனி ஆளாய் சரி செய்து விடுகிறார். எனக்கு என்னமோ, "திருவிளையாடல் ஆரம்பம்" படம் பார்த்த மாதிரி இருந்தது. தனுஷின் ஹிந்தி மற்றும் நடிப்பு தான் படத்தை தொடர்ந்து பார்க்க வைத்தது.

சோனம் கபூர் தட்டையாய், நெடு நெடுவென்று இருக்கிறார். முதல் பாதியிலும், பின் பாதியிலும் அந்தக் கதாப்பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார். மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லை.

அபே தியோல் சிறிது நேரம் வந்தாலும் அருமையாய் செய்திருக்கிறார். வழக்கமாய் படத்தில் வருவதை போல் காதலியின் காதலன் கெட்டவன் என்று காட்டாதது ஒரு ஆறுதல்!

தனுஷின் நண்பன் கதாப்பாத்திரமும், தனுஷை நினைத்து உருகும் அந்த தெத்துப் பல் பெண்ணும் நல்ல தெரிவு. தனுஷ் சோனமை எவ்வளவு காதலித்தாரோ, அதை விட பல மடங்கு அந்தப் பெண் தனுஷை காதலிக்கிறார். அவரின் கதையை "ஹீரானா" என்று ஒரு படம் எடுக்கலாம்!

ரகுமானின் இசையில் தும் தக், ராஞ்சானா பாடல்கள் அருமை. தனுஷின் ஹிந்திக்காகவும், நடிப்புக்காகவும் பார்க்கலாம்!
2 Responses
  1. Anonymous Says:

    Right after the Kadhal Konden movie, I praised Dhanush but you and Siva riduculed me; now you can see that he is reaching heights and places! His acting is effortless; he can change expressions just like that (even Jothika cannot compete!)

    Venkatesh


  2. Venky,

    I am not sure about Kadhal Konden, but Dhanush is one of the finest actors we have now! He should work in good scripts to reach more places...