வழக்கமான க்ளிஷேவுக்கு உட்பட்டு நானும் உங்களுக்கு "ஹேப்பி மாட்டு பொங்கல்" தெரிவித்துக் கொள்கிறேன். பொங்கல் விடுமுறையின் பெயரால் சென்னை, ஜனத்தொகையில் ஒரு ஐம்பது வருடத்திற்கு முன் சென்று விட்டதாக படுகிறது! விசாலமான சாலைகள், குறைவான வாகனங்கள். கொட்டும் பனி என்று இன்று வழக்கத்திற்கு மாறாக ஒரு மிக இனிமையான ஒரு அனுபவம். இரவு எட்டு மணிக்கு ஜெமினி பாலத்தின் அடியில் சிக்னல் இல்லை என்றால் நம்புவீர்களா? இரு பக்கமும் பார்த்து மெதுவாய் செல்லுங்கள் என்று மஞ்சள் விளக்கு மட்டும் அணைந்து அணைந்து எரிந்து கொண்டிருந்தது. அண்ணா சாலை ஹோவென இருந்தது. ஆனால், நம் மக்களுக்குத் தான் இதை அனுபவிக்கத் தெரியவில்லை. சாலை காலியாய் இருந்தால் ஏன் அப்படி பறக்கிறார்கள் என்று புரியவில்லை. என்னை போல், இந்த தருணத்தை அனுபவிக்க நினைப்பவர்களையும் பயமுறுத்தி விடுகிறார்கள். சில டாட்டா சுமோக்களும், டொயோட்டா இன்னோவாக்களும் ஏன் ஆம்புலன்ஸ் ரேஞ்சுக்கு போகிறது என்று புரியவில்லை. தண்ணி லாரிக்கு பிறகு எமன் இதில் தான் அதிகம் சவாரி செய்வதாய் படுகிறது. சென்னையில் என்னை போல் விதிமுறைக்கு உட்பட்டு இரு சக்கர வாகனம் ஓட்டுபவன் மகா பரிதாபி! [பரிதாபத்துக்குரியவன்] அதிலும் சிக்னல், பச்சையிலிருந்து மஞ்சளுக்கு மாறும்போது கடந்தால் அதோ கதி தான். சிவப்பு வந்து விடுமே என்று வேகத்தை குறைத்தால், பின்னால் வேகமாய் வருபவன் இடிப்பான், சரி வேகமாய் கடந்து விடலாம் என்று நினைத்தால் இந்தப் புறம் வருபவர்கள் இடித்து விட்டு, "ஏன்டா, சிக்னல் கண்ணுக்குத் தெரியலையா?" என்று ரூல்ஸ் ராமானுஜம் மாதிரி பேசுவார்கள். எனக்கு முன்னதில் அனுபவம் உண்டு! இப்போது சொல்லுங்கள், நான் பரிதாபி தானே?

இன்று மாட்டுப் பொங்கல். நீங்கள் எத்தனை பேர் அலங்காரம் செய்யப்பட ஒரு மாட்டை இன்று பார்த்தீர்கள்? எனக்கு அந்த பாக்கியம் கை கூடியது. மடிப்பாக்கத்தில் அல்ல; சைதாப்பட்டையில்! மடிப்பாக்கத்தில் வழக்கமாய் வழி மறிக்கும் மாடுகள் இன்று கண்களுக்கே படவில்லை. அந்த சைதாபேட்டை பசு மாட்டுக்கு நல்ல அலங்காரம் செய்திருந்தார்கள். கொம்பில் வர்ணம் எல்லாம் பூசவில்லை. பொட்டிட்டு, கண்ணில் மையிட்டு, அந்த பசுவை சுற்றி கலர் ஜிகினா பேப்பரை சுற்றி இருந்தார்கள். அடடா..நாகரிக வளர்ச்சி! அது சிக்னல் விழுந்து கடக்கும் போது, அந்த டாட்டா சுமோ கிரீச்சிட்டு நின்றது!


இன்றும் புத்தக கண்காட்சிக்கு சென்றேன். இன்று திங்கள் கிழமை, மூன்று மணிக்கு திறப்பார்கள் என்று நினைத்து போனேன். இன்று விடுமுறை நாள் என்பதை மறந்து விட்டேன். நாலு மணிக்கு நுழைவு வாயில் கதவை சாத்திக் கொண்டு, ஏதோ சூப்பர் ஸ்டார் படத்திற்கு டிக்கட் வாங்க உள்ளே விடாதது போல் அதகளம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். மக்களுக்கு புத்தகங்கள் மீது ஒரேடியாய் தான் நம்பிக்கை வந்து விட்டது போலும். உள்ளே சென்றால் கூட்டம் ஜே ஜே [ஜே ஜே க்கு பதில் வேறு ஏதாவது எழுதலாம் என்று நினைத்தேன், எதற்கு வம்பு அதிமுக ஆட்சி வேறு நடக்கிறது!] என்று இருந்தது. அமெரிக்காவிலிருந்து ஒரு நண்பர் வந்திருதார். புத்தக கண்காட்சி நடக்கும்போது யார் என்னை சந்திக்க விரும்பினாலும் நான் அவர்களை அங்கு வர சொல்லி விடுகிறேன்! இது எப்படி? அவரின் தலையில் ஒரு மூவாயிரத்துக்கு புத்தகங்களை கட்டி விட்டேன். கண்காட்சி முடிந்ததும்,  அந்த சில பதிப்பகங்களில் இதை சொல்லி கொஞ்சம் கமிஷன் வாங்க வேண்டும்! இத்தகைய ஒரு கண்காட்சியில் மக்கள் கூட்டத்தை பார்த்தால் நன்றாய் இருக்கிறது, ஆனால் ஆண்கள் கழிப்பறை என்று போர்டை பார்த்துக் கொண்டே அங்கு இருக்கும் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பது!? என்னால் அடக்க முடியாமல் [சிறுநீரை அல்ல!] அந்த திறந்த வெளிக்கு முன் நின்று கொண்டேன். ஒருவர் வந்தார்!

சார், பிஸ் அடிக்கனுமா?

[நான் ஏதோ அவரிடம் வழி கேட்கிறேன் என்று நினைத்துக் கொண்டு] அடிங்க, அதோ அங்கே இருக்கே டாய்லெட், இல்லேன்னா இங்கே கூட அடிங்க...

எனக்கு இல்லை சார், உங்களுக்கு அடிக்கனும்னா அதான் அங்கே இருக்கே, அங்கே போங்களேன். 2 அடியில தான் இருக்கு. ஏன் இங்கே அடிக்கிறீங்க?

எனக்கு சொல்லாதீங்க சார். இது தான் நல்லா இருக்கு. அங்கே சுத்தமா இல்லை!

அடப்பாவிகளா...நான் சொல்லச் சொல்ல இன்னும் இரண்டு பேர் என்னை தாண்டி போய் சுகமாய் வெட்டவெளியில் நின்று கொண்டு பிஸ் அடித்தார்கள்.   என்னை ஏதோ சட்டையை கிழித்துக் கொண்டு நிற்கும் பைத்தியம் போல் பார்த்தார்கள். இத்தனைக்கும் முக்கால்வாசி பேர் பதிப்பகங்களை சேர்ந்தவர்கள்! இவர்களிடம் அந்த புத்தகங்கள் என்ன செய்யும்?

நேற்று ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் நிகழ்ந்த ஒரு சம்பாஷனை:

அது பறவை இல்லப்பா, வவ்வால் டா..அது!
ஏன் அது தலை கீழ தொங்குது?
அது அப்படி தான் தொங்கும்.  அதோட அமைப்பு அப்படி!
அப்படி தொங்கினா அதோட கொடல் வெளிய வந்திராதா?

சரியாய் தான் சொல்லி இருக்கிறார்கள் 

"புத்தகங்களே, குழந்தைகளை கிழித்து விடாதீர்கள்!"