அலுவலகத்தில் ப்ராஜக்டிலிருந்து விடுவித்து விட்டார்கள். புதிதாய் ஒரு ப்ராஜக்ட் தேட வேண்டும். அது வரை பெஞ்சு தேய்க்கலாம். ஐ. டியில் இருப்பது போல் மற்ற நிறுவனங்களில் இந்த பெஞ்சு தேய்க்கும் பழக்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஐ டியில் பெஞ்சு தேய்ப்பது பிரசித்தி பெற்ற செயல்! பெஞ்சு தேய்ப்பது ஆரம்பத்தில் சுவாரஸ்யமாய் இருந்தாலும், போகப் போக போரடித்து விடும். எல்லோரும் ஏதோ ஒரு வேளையில் மும்முரமாய் இருக்க, நீங்கள் மட்டும் தனியாய் விடப்பட்ட தீவில் அலைவதை போல் அலைய வேண்டியது தான். சிறிது நாட்களுக்குப் பிறகு நமக்கே ஒரு பயம் வந்து விடும். அடித்துப் பிடித்து ஏதோ ஒரு மொக்கை ப்ராஜக்ட்டில் சேர்ந்து விடுவோம். படாத பாடு படுத்துவார்கள், என்னை விடுவித்து விடுங்கள் என்று சண்டை போட வேண்டியது [நான் அப்படி சண்டையிட்டு விடுவித்துக் கொள்ளவில்லை!], மறுபடியும் பெஞ்சு, மறுபடியும் இன்னொரு மொக்கை ப்ராஜக்ட்!
இதுவரை பெஞ்சு தேய்த்ததில் எனக்குப் புரிந்தது என்னவென்றால், மிக நல்ல ப்ராஜக்ட் என்று ஒன்று இல்லை. நீங்கள் செய்வதை உங்களுக்குப் பிடித்து செய்தால், அது நல்ல ப்ராஜக்ட்; இல்லையென்றால் எல்லாமே கெட்ட ப்ராஜக்ட் தான்!!
தீபாவளி என்றால் எப்படி தீபாவளி மலர் வருகிறதோ [நன்றி சுஜாதா], அதை போல் ஜனவரி வந்தால் புத்தகக் கண்காட்சி வரும்! இந்த முறை, 0.0000000000000000001% மட்டுமே படிக்கும் நான் 0.00000000000000000001% மட்டுமே படிக்கும் சில பேர்வழிகளை கூட்டி போய் இப்படி எல்லாம் சென்னையில் ஒரு கண்காட்சி நடக்கிறது என்று காட்ட சந்தர்ப்பம் கிடைத்தது மகிழ்ச்சி. சும்மா போய் பார்க்கலாம், ஒன்றும் வாங்க வேண்டாம் என்று வழக்கம் போலவே நினைத்துக் கொண்டு போய், கண்காட்சியில் நான் வாங்கிய, இல்லை... என்னை வாங்கிய புத்தகங்கள்.
கணையாழியின் கடைசி பக்கங்கள் - சுஜாதா - உயிர்மை
தமிழ்செல்வன் சிறுகதைகள் - தமிழ் செல்வன் - பாரதி புத்தகாலயம்
ஆயிஷா - இரா. நடராஜன் - பாரதி புத்தகாலயம்
அறிவியல் களஞ்சியம் - ஆத்மா. கே. ரவி - பாரதி புத்தகாலயம்
ஓவியம் - கூறுகளும் கொள்கைகளும் - புகழேந்தி - அருவி
இவன் தான் பாலா - ரா. கண்ணன் - விகடன்
ஜென் கதைகள் - தமிழில்: சேஷையா ரவி - அகல்
கார்டூன் வரையலாம் - யு. மா. வாசுகி - யுரேகா புக்ஸ்
காவல் கோட்டம் - சு. வெங்கடேசன் - தமிழினி
அன்டன் செகோவ் சிறுகதைகள் - எம். எஸ். - பாதரசம்
கணையாழியின் கடைசி பக்கங்களில் வாத்தியார் மிளிர்கிறார். இரண்டு வரிகளில் இருநூறு விஷயங்களை போகிற போக்கில் தெளித்து விட்டுச் செல்கிறார். இதை வைத்து தான் மழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் என்று ஒரு வகைப்படுத்தலை நான் என் வலைப்பதிவில் ஆரம்பித்தேன்! ஆரம்பித்ததோடு சரி!..
சரி, சித்திரம் வரையத் தெரியாதவர்களுக்காக...ஒரு கருப்பு கட்டம் போட்டு அதை ஒரு ஹாஸ்ய படமாக எப்படி மாற்றுவது என்று கடைசி பக்கங்களில் வாத்தியார் சொல்கிறார். அவர் சொன்னதை போலவே நான் முயற்சித்த போது...
சரி, சித்திரம் வரையத் தெரியாதவர்களுக்காக...ஒரு கருப்பு கட்டம் போட்டு அதை ஒரு ஹாஸ்ய படமாக எப்படி மாற்றுவது என்று கடைசி பக்கங்களில் வாத்தியார் சொல்கிறார். அவர் சொன்னதை போலவே நான் முயற்சித்த போது...
"ஏன்டா, இதுக்குல்லையா அல்வா விக்கிறாங்க?"
"இது தான் நீ சொன்ன ஈ பி ஆபிசா?"
"என்ன தேடுறீங்க?
சுவிட்சை தான்!
ச்சி..."
திருடன்
விட்டுச் சென்று விட்டான்
ஜன்னலில் நிலவை
எஸ். ராமகிருஷ்ணன் ரஷ்ய கலாச்சார மையத்தில் மேற் சொன்ன கவிதையை மிகவும் சிலாகித்து கேட்டேன். அதே கவிதையை பற்றி 1966 ல் எழுதியிருக்கிறார் சுஜாதா. தமிழ் சினிமாவை சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்கிறார், இன்னும் அறுபதுகளில் தான் இருக்கிறேன், 98 வரியின் தொகுப்பு இது! Long way to go...
அன்டன் செகோவ் என்று அடிக்கடி படித்திருக்கிறேன். பார்த்தவுடன் வாங்கிவிட்டேன். முதல் கதையே [பந்தயம்] பிரமாதம்.
"இவன் தான் பாலா" படித்தேன் மறுபடியும்! அவருடைய படங்களின் தன்மையின் காரணங்கள் புரிகிறது. பாலாவும் ரஜினியும் சினிமாவில் வராமல் இருந்திருந்தால், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு இன்று ஜெயிலில் தான் இருந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.
காதலே நமக்கு வராது என்று நம்பிக்கையாய் இருந்த என் நண்பர் ஒருவருக்கு காதல் வந்து விட்டது! அவர் சொன்னதும் நான் சிந்திய பொன்மொழி கீழே!
காதலை நாம் தேர்ந்தெடுப்பதில்லை...
அது நம்மை தேர்ந்தெடுக்கிறது!
என்ன சரி தானே?
nanba un nadai miga arumaiyaga merukeri ullathu vazhthukal thodarattum un kalai pani
nandri nanba!